417
“அழச்சொல்லி அல்ல திடித்து வழக்கறிய
வல்லார்நட் பாய்ந்து கொளல்
மு.வ விளக்க உரை: நன்மை இல்லாதச் சொற்களைக் கண்டபோது வருந்தும்படியாக இடிந்துச் சொல்லி, உலகநடையை அறிய வல்லவரின் நட்பை ஆராய்ப்து கொள்ள வேண்டும்.”
மாடியில் தனது உடைகளை எடுத்து வைத்தவளுக்கு கண்கள் கண்ணீரால் நிறைந்தன. குடும்பத்தின் மீதான கோபமும் தன்னவனின் வார்த்தைகளுமாய் மனப் போராட்டத்தில் சிக்கித் தவித்தாள் மங்கை.
“மலரே..”
“…”
“ஞான் அப்படி சொல்லலை சக்கரே..”
“…”
“உன்னை ஹர்ட் பண்ணனும்ங்கிறது என் நோக்கம் இல்லா மலரே. ப்ளீஸ் போகாதே..”
“இல்லை தங்கமே. வீட்டில் இதைப் பத்தி பேசணும். அதுவுமில்லாம நான் இன்னும் அந்த வீட்டு பொண்ணு தான்.
அப்படியிருக்கும் போது இங்கே இருக்குறது சரி கிடையாது. எல்லாம் சீக்கிரமே சரியாகும் தங்கம். டேக் கேர்.”, என்றவளின் விரக்தி புன்னகை முகுந்தனை வாட்டியது.
“மங்கை அத்தையோட ஒரு நாள் இருந்துட்டு போ டி. “
“அத்தை உனக்காகவும் தான் நான் அங்கே போறது. கோபம் பயம் எல்லாம் தாண்டி உன் வீட்டு மனுஷங்களைப் பார்க்கணும்னு உனக்கு ஆசையிருக்கு தான அத்தை?”
“…”
“சொல்லு இருக்கு தான?”
“ம்ம்..”
“நீ அங்கே வருவ எல்லாரையும் பார்ப்ப அதுக்கு நான் பொறுப்பு. சந்தோஷமா வழியனுப்பு”, என்றவள் பார்வதியின் கன்னம் கிள்ளிச் சிரித்தாள்.
“மாமா உங்க மாமனாரை பார்க்க தயாரா இருங்க. நான் போய் சொல்லுவேன். உன் மருமகன் ராஜா மாதிரி இருக்காரு தாத்தா.
இத்தனை வருஷமா பார்க்காம எப்படியிருந்தனு கேட்பேன்.”, என்றதும் பலராம் மென்னகைத்தவராய் மங்கையின் தலையை கலைத்துச் சிரித்தார்.
“கிச்சு மாமா போலாமா?”
“மாமாவோ?!”
“இனி உனக்கு மரியாதை தர வேண்டியது இல்ல. அத்தை பையனுக்கு எல்லாம் மரியாதை கொடுத்தா ச்ச ச்ச நாராசமா இருக்கு. வா போலாம்.”, என்றதில் முகம் மலர அவளோடு வாசலுக்கு கிளம்பினான் கிருஷ்ணன்.
காரில் ஏறியவள் புன்னகையோடு ஒரு கையசைப்பு மட்டும் முகுந்தனிடம். அப்படியே இருக்கையில் பின் சாய்ந்து விழி மூடிக் கொண்டாள். முகுந்தனைப் பார்த்த பெரியவர்களுக்கு வருத்தமாய் இருந்தது.
“முகுந்தா..”
“நான் அப்படி பேசிருக்கக் கூடாது ச்சா.. ஆனால் அதை நான் சாதாரணமா தான் சொன்னேன்.”
“விடு மோனே. சின்ன பொண்ணு அவ வயசுக்கு மீறின நிறைய விஷயங்களை சுமந்துட்டு இருக்கா. அவளே நிச்சயமாய் சரியாகிடுவா டா. வருத்தப்படாத.”
“என்னை ஏர்போர்ட்டுக்கு கூட கூப்பிடலை அம்மே..”
“முகுந்தா அவ அழுகையைக் கட்டுப்படுத்துறா. உன்னோட பேசினால் மொத்தமாய் ப்ரேக் ஆகிடுவாளோனு நினைச்சுருப்பா. கொஞ்சம் டைம் கொடு கண்ணா.”
“ம்ம் சரி நானும் அப்போ கிளம்புறேன் அச்சா.”
“இசமயத்திலோ? அதெல்லாம் வேண்டாம். மார்னிங் கிளம்பினால் மதி. போ போய் ரெஸ்ட் எடு.”
இன்னும் ஒரு நாள் கழித்து தான் வருவதாய் கூறிய மகள் சொல்லாமல் கொள்ளாமல் வந்து நிற்பதைப் பார்த்த குடும்பத்தினர் பதறிவிட்டனர்.
“கண்ணு என்ன சொல்லாம கொள்ளாம வந்துட்ட? நல்லாயிருக்க தான?”
“பாப்பா என்ன டி முகமே வாடிப் போய் இருக்கு என்னாச்சு?”, என குணவதியும் விஜயலட்சுமியும் கேட்டிருக்க சரியாய் ஆண்கள் அனைவரும் கடையில் இருந்து வந்திருந்தனர்.
“ஏலே என்ன அதுக்குள்ளே வந்துட்ட ட்ரெயின் நாளைக்கு நைட்டுனு தான சொன்ன?! ப்ளைட்டிலேயா வந்த?”
“அதான் வந்துட்டேன்ல எல்லாரும் கேட்டதையே எத்தனை தடவை கேட்பீங்க.”
“!!!!”
“நான் பேசணும் எல்லாரும் இங்க உட்காருங்க..”
“என்னடி பேசணும் உனக்கு வந்ததும் வராததுமா அதிகாரம் பண்ணிகிட்டு கிடக்குறவ..”
“முதல்ல நீயும் உன் வீட்டுக்காரரும் இங்கே வந்து உட்காருங்க அப்பத்தா.”, என்றதில் யாருக்கும் எதுவுமே புரியவில்லை. கன்னிகா திருமாவோடு, மாறனும் தந்தைக்கு பின்னால் நின்றிருந்தான்.
“பாப்பா என்னாச்சு தாத்தாகிட்ட சொல்லு..”
“உனக்கு எத்தனை பசங்க தாத்தா?”
“!!!!!”, அத்தனை பேரின் அதிர்ச்சி முகத்தையும் தனக்குள் கிரகித்துக் கொண்டவளாய் தாத்தாவிடம் மறுபடியுமாய் அந்தக் கேள்வியைக் கேட்டாள்.
“கேட்க வேண்டியதைக் கேட்டுட்டேன். பதில் சொல்லு. எத்தனை பசங்க?”, என்றதில் இனியன் மனைவியை முறைக்க அதை கவனித்து விட்டவளாய்,
“இப்போ எதுக்கு சித்தப்பா சித்தியை முறைக்குற?”
“…”
“அப்போ யாருக்குமே இதுக்கு பதில் சொல்ல விருப்பமில்ல?! நான் சொல்லட்டுமா?”
“!!!!”
“ஏலே மங்கை..”
“நீ பேசாதப்பா. எல்லாரையும் விட உன் மேல தான் ரொம்ப கோவத்தில் இருக்கேன்.”
“நீ சொல்லு தாத்தா உன் மக பார்வதிக்கு என்னாச்சு?”, என்றதில் பூங்கோதை சட்டென அழுதிருந்தார்.
“கிழவி எதுக்கு அழற? உன் மக இருக்காளோ போய் சேர்ந்தாளோனு நினைச்சு அழறியா? அதான் அப்போவே தலை முழுகியாச்சுல அப்பறம் என்ன?”
“….”
“பாப்பா எதுவாயிருந்தாலும் நிதானமா பேசு. என்ன நடந்ததுனு தெரியாம வார்த்தையை விடாத டி”, என்ற அண்ணனைப் பார்த்தவள்,
“எல்லாமே தெரிஞ்சு தான் பேசுறேன் அண்னே. அப்போ நடந்தது எல்லாம் தப்பாவே இருக்கட்டும். அதை எதையுமே நான் பேச விரும்பலை.
ஆனால் அதுக்காக அப்படி ஒருத்தர் இருந்ததையே மறந்து எல்லாரும் இத்தனை வருசம் நிம்மதியா சந்தோஷமா குடும்மா சிரிச்சு எப்படி வாழுறீங்க?”
“…”
“எனக்குத் தெரிஞ்ச தாத்தா அப்பா சித்தப்பா இவங்களோட குணத்துக்கும் பார்வதியோட அப்பா அண்ணனுங்க குணத்துக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருக்கே. இதில் எது நிஜம்?”
“என்கிட்ட காட்டுற பாசம் எல்லாம் நடிப்பா இல்லை ஊருக்காக சாதிக்காக பார்வதிகிட்ட காட்டின கொடுர முகம் நடிப்பா?”
“…”
“இங்கேரு மங்கை அந்த ஓடுகாளியைப் பத்தி பேசுறதுக்கு ஒண்ணுமில்லை. இப்போ எதுக்கு நீ தேவையில்லாததைப் பத்தி பேசிட்டு இருக்க?”, என்ற கனியனின் கர்ஜனையில் அந்த இடமே அமைதியாகிது.
“எனக்கு ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு தாத்தா.”
“!?”
“இப்போ உனக்கு வயசாகிடுச்சு. எப்போ வேணாலும் உடம்புக்கு வரலாம். படுத்த படுக்கையா ஆகலாம். அப்படி ஒரு நிலைமை வந்தா உன்னைப் பார்த்துக்க போறது உன்னோட பிள்ளைங்களா இல்ல உன் சாதியா?”
“…”
“நாளைக்கு கிடையில் விழுந்துட்டனு வை படுக்கையிலேயே தான் எல்லாமேனு ஆச்சுனு வைச்சுக்கோ உனக்கு அசிங்கம் பார்க்காமல் ஒண்ணு ஒண்ணும் பண்ணுறதுக்கு உன் பொண்டாட்டி பொண்ணு மருமக மகன்னு இத்தனை பேரு தேவைப்படுவாகளா இல்லை சாதிக்காரன் நாலு பேரு வந்து உன்னைப் பார்ப்பானா?”
“மங்கை…”
“கத்ததாத சித்தப்பா இந்த கேள்வி உனக்கும் தான். அப்படி என்ன உன் தங்கைச்சியை விட சாதி பெருசா போச்சு உனக்கு? இப்படி இருக்குற நீங்க எல்லாம் எதுக்கு பிள்ளையை பெத்துக்கிடுதீங்க. கல்யாணமே பண்ணாம சாதிக்காக உழைச்சு ஓஞ்சு போக வேண்டியது தான?!”
“ஏலே..”
“நீ சொல்லுப்பா இப்போ நானோ அண்ணனோ அப்படி மனசுக்கு பிடிச்சவங்களை கல்யாணம் பண்ண நினைச்சா நீயும் உன் அப்பாவை மாதிரி தான பண்ணிருப்ப?!”
“என்னலே இப்படியெல்லாம் பேசுற?”
“உண்மையை தான பேசுறேன். எனக்கு யாரையாவது பிடிச்சுருந்தா உன் அப்பா தான் கொன்னு போட கூட தயாரா இருப்பாரே நீயும் உன் அப்பாக்காக அதை தான பண்ணுவ?”
“ஆமா டி அதைத் தான் பண்ணுவானுங்க..”, என்ற பூங்கோதையின் சத்தத்தில் அவர்புறம் திரும்பினாள் மங்கை.
“என்ன பார்க்குற? இந்தக் கூட்டம் அப்படி தான். பிறந்ததில் இருந்து ஈ எறும்பு அண்டாம பொத்திப் பொத்தி வளப்பாங்க.
நீ தான் ஆத்தா என் குலசாமினு சொல்லுவாங்க. ஆனால் அந்த பிள்ளைக்கு ஒருத்தனைப் பிடிச்சதுனு வைச்சுக்கோ கழுத்தறுத்து போட கூட தயங்க மாட்டாங்க.”
“….”
“நீ எல்லார்கிட்டேயும் கேட்பியே இந்தக் கிழவிக்கு ஏன் என்னை கண்டாலே ஆக மாட்டேங்குது. திட்டிகிட்டே இருக்குனு. அதுக்கு பதிலை இப்போ நான் சொல்லுதேன்.”
“!!!”
“அமுதினியோட அப்பன் கொஞ்சம் முரடன் அவனுக்கு பாசம் மனசில் இருந்தாலும் பெருசா வெளியில் எல்லாம் காட்டிகிட மாட்டான்.
ஆனா நீ பொறந்த நாள் தொடங்கி உன் அப்பன் உன்னை சீராட்டின மாதிரி நான் கூட என் பிள்ளைகளை வளர்த்தது இல்லை.
ஊருக்குள்ளே கம்பீரமா திரிஞ்ச பய இங்க வீட்டுல உன் கால் தரையில படாம பாத்துக்கிட்ட அழகுல தான் எல்லாருக்குமே அவுக அறியாம உன்மேல பாசம் அதிகமாச்சு.
அத்தனை பேருக்கும் செல்ல பிள்ளையா சுத்தித் திரிஞ்ச. எம்மவளுகளுக்கு கூட இம்புட்டுச் செல்லம் எல்லாம் இருந்ததில்ல. அப்பானால் ஒரு பயம் தான் அதுகளுக்கு இருக்கும்.
அப்படி இருந்த எம்மவளுக்கே ஒருத்தனை பிடிச்சதுனு சொல்லும் போது இவங்க பண்ணின அநியாயம்..
இப்படி குடும்பமே தாங்குற உனக்கு ஒருத்தனை பிடிச்சா இந்த மொத்தக் குடும்பமும் காட்டப் போற கோர முகத்தை நீ எப்படி தாங்குவனு எனக்கு பயம்.
அதனால தான் உன்னை குத்திகிட்டே இருப்பேன். இந்தக் கிழவிக்கு வேற வேலையே இல்லைனு நீ நினைச்சாலும் எதோ ஒரு விஷயத்துக்காவது, இந்த அப்பத்தாக்கு தெரிஞ்சுது என்னை கொன்னே போட்டுடும்னு பயந்துருப்ப இல்ல?
அந்த பயம் உனக்கு இந்தக் குடும்பத்தில் யாரு மேலேயும் கிடையாது. ஊரே பயப்படுற உன் தாத்தனே உனக்கு விளையாட்டு பொருள் போல தான்.
கலையோட மாப்பிள்ளை, வீட்டோட மருமகன்னு நாங்க எல்லாம் அத்தனை மரியாதை வைச்சுருக்கோம். ஆனால் அவருக்கு கூட நீ பாப்பா தான்.
ஆனால் இப்போ சொல்றேன் கேட்டுக்கோ உனக்கு எவனையாவது பிடிச்சுதுனால் இந்தக் குடும்பத்தில் உனக்காக பேசப் போற ஒரே ஆளு நான்தேன்.
மனசில் நினைச்சவனோட வாழாத வாழ்க்கையை உனக்கு கொடுக்க நான் விட மாட்டேன் டி. இவங்க எல்லாம் சாதியையும் கௌரவத்தையும் பொம்பளைங்க தலையில் தான் வைச்சுருப்பாங்க.
சாதிக்காகவும் கௌரவத்துக்காகவும் விலையா நம்ம உசுரை கூட கொடுப்பாங்க. ஆனால் இப்போ நீ கேட்ட பாரு, கடைசி காலத்தில் யாரு பார்ப்பானு அப்போ அது அறிவுக்கு உரைச்சா என்ன உரைக்காட்டி என்ன?
இவங்களை எல்லாம் யாரும் திருத்த முடியாது இப்போ நீ என்னத்துக்கு உயிரை விட்டுட்டு கிடக்குற சொல்லு?”, என்றவர் சேலை தலைப்பைத் தூக்கி மூக்கை உறிஞ்சிக் கொண்டு சோபாவில் அமர கனியன் உட்பட அத்தனை பேரும் வாயடைத்துப் போய் இருந்தனர்.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
4 comments
Mangai velaya poo simple aakiduche
👌👌👌👌👌👌👌👌
Very nice
Poo gethu