மலர்-23

by ஸ்ரீ
3 comments 390 views
A+A-
Reset

குணனும் குடிமையும் குற்றமும் குன்றா

இனனும் அறிந்தியாக்க நட்பு

மு.வ விளக்க உரை: ஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பையும் குற்றத்தையும் குறையாத இனத்தாரின் இயல்பையும் அறிந்து அவனேடு நட்புக் கொள்ள வேண்டும்.

முந்தைய நாளின் அலுப்பில் தூங்கியிருந்தளுக்கு எங்கோ எதோ ஓசை கேட்டது போல் இருக்க லேசாய் அசைந்து படுத்தாள்.

அதன் பின் தான் இருக்கும் இடம் சில நொடிகளில் நினைவுக்கு வர கதவு தட்டும் ஓசையில் சென்று கதவைத் திறந்தாள். அவளுக்கான காபியோடு முகுந்தன் தான் நின்றிருந்தான்..

“குட் மார்னிங் மலரே..”

“மார்னிங் தங்கம்.”, என்றவள் கண்ணைக் கசக்கிய படி கட்டிலில் சென்று அமர அவளருகில் அமர்ந்தவனாய் மலரைத் தன் தோளில் சாய்த்துக் கொண்டான்.

“நல்ல உறக்கமோ சக்கரே?”

“ம்ம் மேட்ச் முடிச்ச டயர்ட் தங்கம். நீ ஏன் சீக்கிரம் எழுந்துட்ட?”

“என்ட பொன்னு மலரோட இருக்கலாம்னு தான்.”, என்றவனை நிமிர்ந்து பார்த்துச் சிரித்தவளாய்,

“அஞ்சு நிமிஷத்தில் ரெடியாகிடுறேன்.”

“ம்ம் அதுக்கு முன்னே உனக்கு ஒரு இடம் காட்டணும்னு சொன்னேனே நேத்து. அங்கே போலாம் வா”

“ஐய்யே இப்படியே வா?!”

“ம்ம் இப்படியே தான். போய் ப்ரஷ் பண்ணிட்டு வா. நான் வெளியில் இருக்கேன்.”, என்றவன் நெற்றியில் இதழ் பதித்துச் சென்றான்.

இரண்டு நிமிடத்தில் வெளியே வந்தவளோடு கீழே இறங்கியவன் வீட்டின் பின்பக்கம் அழைத்துச் செல்ல அவர்களைக் கடந்து சென்ற கிருஷ்ணன் அண்ணனின் தோளில் துண்டைப் போட்டுவிட்டு அண்ணியிடம் குட்மார்னிங் என செய்கை செய்து நகர்ந்தான்.

“மலர் ரெடியோ?!”

“எதுக்கு?”

“இதுக்கு..”, என்றவன் கதவைத் திறக்க வீட்டின் பின் நீச்சல் குளம் போல் அழகான குளம். பார்த்தவள் அதிர்ச்சியில் வாய் பிளந்து தன்னவனைத் தான் பார்த்திருந்தாள்.

“மலருக்கு இஷ்டமல்லே?”

“வந்து சொல்றேன்”, என்றவள் யோசிக்காமல் நீரினுள் குதித்திருந்தாள்.

“ஏய் பார்த்து…”

“நான் முடிவு பண்ணிட்டேன். கல்யாணத்துக்கு அப்பறம் நானும் இங்கே தான் இருக்க போறேன். நீ கொச்சி போய்க்கோ தங்கம்.”

“அடிப்பாவி..”

“இந்த வீட்டை விட்டு போக எனக்கெல்லாம் மனசு வராது.”, என்றவள் மீன் போல் நீந்திக் கொண்டிருக்க புன்னகைத்த வண்ணம் படித்தரையில் அமர்ந்தான் முகுந்தன்.

“இதெல்லாம் கனவு மாதிரி இருக்கு. இப்படி ஒரு காதலன். அவனோட அழகான ஊரும் வீடும். அதை விட அழகான இந்த குளம். எல்லாத்தையும் விட அழகான அவனோட அம்மா அப்பா. இதைவிட என்ன வேணும் தங்கமே.”

“நீ சொன்ன எல்லத்தையும் விட ஒரு பாடு ஒரு பாடு அழகான என்ட மலர். லைஃப் கம்ளீட் சக்கரே..”

“சரி வா ஊனு கழிக்க போவாம்..”

“இன்னும் டூ மினிட்ஸ் தங்கம்.”

“அர்ஜுனனைப் பார்க்க வேண்டாமா??!”

“ஹையோ போகணும் போகணும் வா போலாம்.”, என்றவள் மனமில்லை எனினும் நீரில் இருந்து வெளியே வந்திருந்தாள்.

அடுத்ததாய் யானையோடு விளையாடி நின்றவள் வரும் அறிகுறியே தெரியாமல் போக முகுந்தனோ,

“அம்மே வந்து என்னை உதைக்கும். வா போவாம்.”, என்றதில் அரை மனதாய் அர்ஜுனனிடம் இருந்து விடைபெற்று வந்திருந்தாள் மங்கை.

காலை உணவு ஐவருமாய் களைகட்ட அதைத் தொடர்ந்து அனைவருமாய் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

“ஆனாலும் ஆன்ட்டி என் போட்டோ மட்டும் பார்த்து எப்படி ஓகே சொன்னீங்க?”

“உன் போட்டோவை நான் சரியா கூட பார்க்கலையே..”

“அப்பறம்?”

“நீ கிரிக்கெட்டர்னு சொன்னான் எனக்கு வேற எந்த கேள்வியுமே கேட்கத் தோணலை அவ்வளவு தான்.”

“அம்மே நானே கேட்க நினைச்சுருந்தேன். உங்ககிட்டே இருந்து கொஞ்சம் நிறையவே கேள்வி எதிர்பார்த்தேன். நீங்க ஏன் ஒண்ணுமே கேட்கலை.”

“இப்போ இருக்குற பசங்களுக்கு ஒரு விஷயத்தை ஆசைப்பட தெரிஞ்ச அளவுக்கு அதை அடைய உறுதியாக இருக்கணும்னு தெரியுறதில்ல முகுந்தா.

மங்கை கிரிக்கெட்டர்னு தெரிஞ்சப்போ அவ ஒரு பெண்ணா நிறைய சவால்களை எதிர்ப்புகளைக் கடந்து தான் இன்னைக்கு வர தன்னோட விருப்பதை நடைமுறைபடுத்திட்டு இருக்கா.

வாழ்க்கையில் பசங்களுக்கு லட்சியம் இருக்குறது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை. ஆனால் ஒரு பொண்ணு தன்னோட லட்சியத்தில் நிலைச்சு நிக்க இந்த சமூகம் அத்தனை சீக்கிரம் விடுறதில்லை.

அதையெல்லாம் தாண்டி இன்னைக்கு இந்த இடத்தில் இருக்குற அவளை விட உறுதியா உன்னோட வாழ்க்கை முழுசும் யாராலேயும் வாழ முடியாது. கிரிக்கெட்டுக்கு அப்பறம் அவ நேசிக்குற ஒருத்தன் நீயா இருக்கும் போது உன்னோட வேல்யூ ரொம்ப அதிகம் மோனே.

என்ன மங்கை நான் சொல்றது சரி தான? அதனால தான் என் மகனுக்கு நீ தான் சரினு எனக்குத் தோணிச்சு.”, என்றவரை வியந்து பார்த்திருந்தாள் மங்கை.

“நீங்க வேற லெவல்ல யோசிக்குறீங்க அத்தை. நீங்க காதல் கல்யாணம்னு சொன்னப்போவே இதை நான் யோசிச்சுருக்கணும். நீங்க ரொம்ப ரொம்ப இன்ஸ்ப்ரேஷனலான ஒரு ஆளு போங்க.”

“சரி என்னை பாராட்டுறது இருக்கட்டும். உங்க குடும்பத்தில் எப்படி இதுக்கெல்லாம் ஒத்துப்பாங்களா?”, என்றதில் இருந்த உற்சாகமெல்லாம் வடிந்து போனவளாய் தலையை இடவலமாய் அசைத்தாள்.

முகுந்தன் ஆதரவாய் அவள் கரம் பற்றிக் கொள்ள பெரியவர்களுக்கு அவர்களது உறுதி புரிந்தாலும் நிதர்சனத்தை ஏற்றுக் கொள்ள வைத்து தான் ஆக வேண்டும் என்று தோன்றியது.

“ம்ம் அதுக்கு இன்னும் நாள் இருக்கு தான் இருந்தாலும் நமக்கு இப்படி பேச வாய்ப்பு கிடைக்குமா தெரிலையே.. உன் ஊர் எது மங்கை. கூட பிறந்தவங்க?”

“நான் மதுரை பொண்ணு அத்தை. நானும் அண்ணணும். அண்ணனுக்கு இப்போ தான் கல்யாணம் ஆச்சு.”

“ஓ..”

“அம்மே…”

“ம்ம்?”

“ஒண்ணு சொல்லுவேன் ஆனால் கோபப்பட கூடாது.”

“எந்தா?”

“நான் மலரோட அண்ணன் கல்யாணத்துக்கு போயிருந்தேன்.”

“மதுரைக்கா??!”

“ம்ம் அந்த இரண்டு நாளும் எவ்வளவு ஹேப்பியா இருந்தது தெரியுமா. இப்படி ஒரு வெட்டிங் எல்லாம் பார்த்ததே இல்லை.

எல்லாரும் அவ்வளவு நல்லா பழகினாங்க. உங்ககிட்ட சொன்னா விட மாட்டனு தான் சொல்லலை ஐ அம் சாரி.”, என்றவன் தன் இரு காதுகளையும் பிடித்துக் கொள்ள பெரு மூச்சு எழுந்தது பார்வதிக்கு.

பேச்சை மாற்ற நினைத்தவளாய் மங்கை அவரிடம், “போட்டோஸ் பார்க்குறீங்களா அத்தை.”, என்றபடி தனது மொபைலில் திருமாவின் கல்யாணத்தில் முகுந்தன் கார்த்தி மாறனோடு அவளும் இருக்கும் புகைப்படத்தைக் காட்டினாள்.

“அப்பறம் இது தான் என் பேமிலி.”, என்றவள் தனது குடும்பப் புகைப்பத்தை அவரிடம் காட்டிவிட்டு பலராமிடமும் காட்டினாள்.

பெயர்களையும் புகைப்படத்தையும் பார்த்த பலராம் இருக்கையிலிருந்து எழுந்தே விட்டிருந்தார். அப்போது தான் மனைவியின் முகத்தை கவனிக்க கண்கள் கலங்கி எங்கோ வெறித்து அமர்ந்திருந்தார்.

“என்னாச்சு மாமா?!”

“அச்சா எந்தாயி?”, என்று முகுந்தனும் கிருஷ்ணனும் அவரருகில் வர பார்வதி பேச ஆரம்பித்திருந்தார்.

“உன் அப்பாவோட கூட பிறந்தவங்க இவங்க மட்டும் தானா மங்கை?!”

“அத்தை?!?!!”

“சொல்லு…”

“இன்னொருத்தங்க இருக்காங்களாம். ஆனால் யாரு எங்கே இருக்காங்க எதுவுமே யாருக்கும் தெரியாது போல. எனக்கே போன வாரம் தான் இந்த விஷயம் தெரியும். உங்களுக்கு அவங்களைத் தெரியுமா அத்தை?!”

“என்னோட முழுப்பெயர் பார்வதி கனியன். என் அம்மா பேரு பூங்கோதை.”, என்றவருக்கு இரு துளி கண்ணீர் கீழே விழ அவசரமாய் கண்ணீரை உள்ளிழுத்தவராய் மங்கையைப் பார்த்தார்.

அவளோ உலகம் சுற்றுவது நின்று விட்டதை போன்ற நிலையில் இருந்தாள். யாரோ ஒருவராய் நினைத்ததற்கே அத்தனை கோபப்பட்டவள் இன்று, அது தான் உயிராய் நேசிக்கும் ஒருவனின் தாய் என்று அறிந்த போது என்ன சொல்வதென்றே தெரியாத நிலையில் உறைந்து போனாள்.

முகுந்தனுக்கும் கிருஷ்ணணுக்கும் நடப்பது ஒன்றுமே புரியாத நிலை தான். முகுந்தன் மங்கையின் அருகில் வந்து அவளை உலுக்க நினைவு வரப் பெற்றவளாய் பார்வதியைப் பார்த்தவள் மெதுவாய் அவரருகில் சென்று லேசாய் அவரது கன்னத்தை நோக்கி கையைத் தயக்கமாய் உயர்த்தினாள்.

பார்வதியோ தன் மருகளின் முகத்தை இரு கைகளிலும் ஏந்தியவராய் நெற்றியில் அழுந்த இதழ் பதித்து இறுக்கமாய் கட்டிக் கொண்டார்.

“அ..த்..தை..”

“உன் அத்தை தான் டி. இந்த மடியில் போட்டு உன்னை சீராட்ட முடியாத உன் அத்தை தான்.”, என்றவரைப் பார்த்த பலராமிற்கு கண்கள் அதுவாய் கலங்கியது.

எத்தனை வருடத்து கலக்கம் மனைவியை அத்தனை வகையிலும் மகிழ்வாய் பார்த்துக் கொண்டவருக்கு நிறைவேற்ற முடியாத ஒரே விஷயம் அவரது பிறந்த வீட்டு சொந்தத்தை திருப்பித் தர முடியாதது  மட்டுமே.

இந்த சிறு பெண்ணை பார்த்தவரே இத்தனை உணர்ச்சிப் பெருக்கில் இருக்கிறாள் எனில் அவளது மொத்தக் குடும்பத்தையும் பார்க்க வேண்டும் என எத்தனை ஏங்கியிருப்பாள் என்று நினைத்து மனம் வருந்தியது அவருக்கு.

“அத்தை நீ..”

“உன் அப்பாவோட தங்கச்சி உன் கலைச்செல்வி அத்தைக்கு  அக்கா.”, என்றதும் மகிழ்ச்சியும் கண்ணீருமாய் அவரது இரு கைகளையும் இறுகப் பற்றிக் கொண்டாள்.

பலராம் அவர்கள் அருகில் வந்து ஆதுரமாய் மருமகளின் தலையை வருடினார்.

“மா..மா..”

“முப்பது வருஷத்துக்கு அப்பறம் என் பார்வதியோட மனசு பாரத்தை இறக்கி வைக்க வந்த என் செல்ல மருமக டா நீ.”

“அம்மே எந்தா ?”

“முகுந்தா நீ போய் பார்த்துட்டு வந்தது எல்லாமே உன் குடும்பம் டா. உன்னோட பாட்டி தாத்தா மாமா சித்தி. என் குடும்பம் அது.”, என்றவருக்கு அத்தனை மகிழ்ச்சியாய் இருந்தது.

“உன்னை எல்லாருக்கும் பிடிச்சுதா மோனே? நீ எல்லாரோடேயும் பேசினியா? உன் தாத்தா பாட்டி எல்லாரும் நல்லாயிருக்காங்களா?”

“ம்ம்..”

“அதனால தான் எல்லாருக்குமே இவரைப் பார்த்தப்போ எங்கேயோ பார்த்த முகமா இருக்குனு தோணிச்சு போல அத்தை. அப்பத்தா அத்தை எல்லாருமே சொன்னாங்க.”, என்றவள் மகிழ்வாய் அவர் தோள் சாய்ந்து கொள்ள முகுந்தன் அமைதியாய்,

“பெத்த பொண்ணையும் சொந்த அக்காவோட முகத்தையுமே கூட மறக்குற அளவு தன்னே அவங்களோட ப்ரியம். அல்லே?”, என்றதில் மங்கையின் முகம் வாடிவிட மகனின் கேள்வியில் பார்வதியுமே சற்றுத் தெளிந்திருந்தார்.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

3 comments

Fathima.ar July 27, 2026 - 2:13 am

Athai maganeyy

Kavi Natarajan July 27, 2026 - 3:04 am

😍😍😍😍😍😍

srichitra July 27, 2026 - 8:54 am

Nice

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode