அடுத்த இரண்டு நாட்களிலேயே ஊர் பெரியவர்களிடம் திருமண விஷயமாய் பேச எதிர்பார்த்ததைப் போன்றே எதிர்ப்பு வலுக்க கார்த்திகேயன் தன் முடிவில் உறுதியாய் நிற்க அவனையும் சாமியையும் மனதில் வைத்து அனைவரும் அரைமனதாய் ஒப்புக் கொண்டனர்..

வழக்கமான தங்கள் சந்திப்பில் தேவிகாவிடம் விஷயத்தைக் கூற சந்தோஷத்தில் திக்குமுக்காடி போனாள்..

பயந்துட்டேயிருந்தேன் மாமா..எனக்கு இந்த ஊரும் சிவனும்தான் எல்லாமே இதைவிட்டுட்டு போக வேண்டியிருக்குமோநு கவலை இருந்துட்டேயிருந்தது..

எனக்காக இப்படி பாத்து பாத்து பண்றீகளே உங்களுக்கு நா என்ன கைமாறு பண்ண போறேன்னு தெரில மாமா..

என்ன தேவிம்மா நீ பெரிய பெரிய பேச்செல்லாம் பேசுற..

நாம நமக்காக பண்றோம் இதுல நீ பிரிச்சு பேசாத..

ஆனாலும் இதுக்கு பதிலா நீ ஒண்ணு பண்ணணுமே..

என்னனு சொல்லுங்க மாமா உங்களுக்காக உசுரயே கூட தாரேன்..

ஏய் அதெல்லாம் இல்ல ம்ம் நீ இனி என்னையும் சாமியை கூப்பிடுற மாறி நீ வா போநு தான் கூப்டனும்..

அய்யோ தப்பு தப்பு உங்கள எப்படி அதெல்லாம் முடியாது..

முடியும் தேவிம்மா கண்டிப்பா நீ என்ன அப்படி கூப்பிடுவ.. நீ சாமிய அப்படி கூப்பிடும் போதெல்லாம் கொஞ்சம் பொறாமையா இருக்கும்..

ரொம்ப உரிமையோட பேசுறமாறி தோணும் அதே நேரம் என்கிட்ட அந்த உரிமையில்லையோநு தோணுது..

அதனாலதான் பரவால்ல நீயா கூப்பிடுற வர நா காத்திருப்பேன்..

சரி சரி நாளைக்கு நாம பாபநாசம் போய்ட்டு வரலாம் வரியா??

என்ன மாமா திடீர்நு சாமி ஒத்துப்பாரா தெரிலயே??

ம்ம் சரி போ பரவால்ல இன்னொரு நாள் பாத்துக்கலாம் என்றவன் மறுபுறம் திரும்பி நமட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டான்..

அன் று இரவு வீட்டிற்கு வந்ததும் சாமி அவளிடம்,தேவி நாளைக்கு காலைல விரைசா எழுந்து தயாராய்டு பாபநாசம் வரை போய்ட்டு வந்துருவோம் கோவில் விஷயமா ஒருத்தர பாக்க போனும் நானும் நேரமே போய் டுத்துக்குறேன் என்றவாறு நகர,

தேவிகாவிற்கோ ஐய்யோவென்று இருந்தது..

அட கடவுளே அவசரப்பட்டு வரலநு சொல்லிட்டோமே மாமாகிட்ட இப்போ என்ன பண்றது??

ச்ச எதுக்கெடுத்தாலும் அவசரம் எனக்கு.. என தன்னைத் தானே நொந்து கொண்டாள்.

மறுநாள் சாமியோடு காலையிலேயே தயாராகி சென்றவள் பாபநாசநாதரை மனமாற வேண்டி கண்திறக்கும் போது தூரத்தில் கார்த்திகேயன் அவளைப் பார்த்து கையசைத்தான்..

ஒரு நொடி முகம் மலர கையை தூக்க நினைத்தவள் அருகில் சாமியிருப்பதை உணர்ந்து தலை தாழ்த்திக் கொண்டாள்..

சாமி வந்த வேலை விஷயமாய் ஒருவரிடம் பேசிவிட்டு நகர தேவிம்மா வந்த வேலை நினைச்சா மாறி முடியாது போலயிருக்கும்மா இப்போ என்ன பண்ணலாம்..

சாயந்திரம் ஆய்டும் போலயிருக்கே சீக்கிரமே கல்யாணம் ஆகப்போற பொண்ணு உன்னையும் கூட்டிட்டு வந்துருக்க கூடாதோநு இப்போதான் தோணுது..

என்றவாறு கண்களை நகர்த்தியவர்க்கு கார்த்திகேயன் கண்களில் பட்டான்..

மாப்ள நீங்க எங்க இங்க???

ம்ம் சின்ன வேலையிருந்தது மாமா முடிஞ்சுது ஊருக்குதான் கிளம்புறேன்..

உங்க வேலை முடிஞ்சுதா வாங்களேன் சேர்ந்நநே போவோம்..

இல்ல மாப்ள இன்னும் தாமதமாகும் போல தெரியுது நீங்க தேவிகாவ கூட்டிட்டு போய்டுறீங்களா..

நா சீக்கிரம் வேலையை முடிச்சுட்டு வந்துரேன்..

சரி மாமா அதுக்கென்ன நா கூட்டிட்டு போறேன் நீங்க பாத்து வேலையை முடிச்சுட்டு வாங்க.. என்று அவரிடம் விடைப்பெற்று நகர்ந்தான்..

கோவிலைவிட்டு வெளியே வர யாரோ வரமாட்டேன் சொன்னதா நியாபகம்??என்றான் நமட்டுச் சிரிப்போடு..

மாமா நேத்தே உங்களுக்குத் தெரியும்னா சொல்லிருக்கலாம்ல..

சும்மா உன்னை சீண்டி பாக்கலாமேநு தான் சொல்லல தேவிம்மா..

சரி வா இங்க வந்துட்டு அருவில தலை நனைக்காம போனா எப்படி??

அய்யோ வேணாம் மாமா எனக்கு அருவினாலே பயம்..நீங்க போய்ட்டு வாங்க நா படித்தரைலேயே இருக்கேன்..

அவன் எவ்வளவோ கூறியும் அவள் மறுத்துவிட அவன் மட்டும் சென்று வந்தான்..

சற்றுநேரம் ஆடையை காய வைப்பதற்காக அங்கிருந்த பாறையில் அமர கார்த்திகேயன் தன் பையிலிருந்து ஒரு பெட்டியை எடுத்து அவளிடம் நீட்டினான்..

பிரித்துப் பார்த்தவளுக்கு கண்கள் விரிந்தன அழகான வைலட்நிற பட்டுப்புடவை..மாமா..

எப்படியிருக்கு தேவி??நம்ம நிச்சதார்த்தத்துக்கு வாங்கினேன்..

இந்த கலர் உனக்கு ரொம்ப எடுப்பாயிருக்கும்நு பட்டுச்சு அதான் கையோட வாங்கிட்டேன்..

சீக்கிரம் நம்ம வீட்டுக்கு வந்துரு தேவிம்மா எப்போடா அந்த நாள் வரும்நு காத்து கிடக்குறேன்..

ஏன் மாமா என்ன உனக்கு இவ்வளவு பிடிச்சுருக்கு ..நா உனக்காக எதுவுமே பண்ணதில்லையே??

தேவிம்மா ஏன் எதுக்கு பிடிச்சதுநு தெரிஞ்சு வர்றது கண்டிப்பா உண்மையான அன்பாயிருக்காது..

எனக்கு நீ நீயா இயல்பா வெகுளியா அந்த சிவனை உயிரா நினைச்சு வாழற விதம் இல்ல சாமிக்கு சொந்த பொண்ணு இருந்துருந்தாகூட இந்தளவு இருப்பாளாநு நினைக்குற அளவுக்கு அவர் மேல பாசம் வச்சுருக்கியே அதுவாகூட இருக்கலாம்..

ஆனா இப்போ இந்த நொடி என் வாழ்க்கை மொத்தமும் நீ மட்டும்தான் இருக்க..என் று அவள் கையை ஆதரவாய் பற்ற..

மாமா என கண்கலங்க கைப்பற்றியவள் அவனின் அதட்டல் பார்வையில் கண்ணீரை அடக்கியபடி சட்டென ஏதோ தோன்ற தன் கழுத்தில் இருந்த டாலரை கழற்றி அவனின் செயினில் கோர்த்து அணிவித்தாள்..

ஏ தேவி என்ன இதெல்லாம் ஒழுங்கா உன் கழுத்துல போட்டுக்கோ..

மாமா இனி இது உன்னோடது..நா உன்கூட இருக்கேனோ இல்லையோ இது உன்கூடவே தான் இருக்கனும்..

இப்போ நீ என்ன எப்படி கூப்ட பாத்தியா நா சொன்னேன்ல சாமிய மாறி என்னையும் ஒருநாள் உரிமையோட கூப்பிடுவநு சொன்னேன்ல..

இப்போதான் உண்மையாவே நீ என்ன மனசார ஏத்துகிட்டமாறி இருக்கு..

என்றவனை பார்க்க முடியாமல் விழிகளை தாழ்த்தியவள் அவன் தோள்களில் சாய்ந்து கொண்டாள்…

அன்றைய பொழுது தான் தன் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத சந்தோஷமான நாளாக இருப்பதாய் உணர்ந்தாள்..

மதியத்திற்குமேல் அங்கிருந்து அவர்கள் கிளம்ப கிளம்பும் நேரத்தில் கார்த்திகேயன் அவளிடம்,தேவி ஒரு வேலையா மதுரை வரை போறேன்..

வர்றதுக்கு ஒரு வாரம் ஆகும் தேவி..

என்ன மாமா தீடீர்நு சொல்ற??

இல்ல தேவி ஏற்கனவே முடிவு பண்ணதுதான் மதுரை பக்கத்துல நமக்கு கொஞ்சம் தோப்பு தொரவு இருக்கு அதோட பொறுப்பை அங்க ஒருத்தர்கிட்ட குடுத்து அவரு பாத்துட்டு வராரு..

வருஷத்துல ஒருதடவை இந்தமாறி அங்க போய் கணக்கு வழக்கு பாத்துட்டு வருவேன்..

அதுவும் இந்த மாசத்துலதான் விளைச்சல்அதிகம் இருக்கும் அதனால எப்பவுமே நா அங்க போய் கொஞ்சம் கவனிச்சுப்பேன்..

சீக்கிரம் வந்துருவேன் தேவி வந்தவுடனே நாள் பாத்து கல்யாண தேதி குறிச்சுடுவோம் சரியா??

என்றவாறு சோர்ந்திருந்த அவள் முகத்தை நிமிர்த்த அரைகுறை மனதோடு சம்மதித்து தலையசைத்தாள்..

கார்த்திகேயன் ஊருக்குச்சென்று இருதினங்கள் ஆகியிருந்தது.

தேவிகாவிற்கு அவனை மறுபடியும் எப்போது பார்ப்போம் என்றிருந்தது…

அவன் நினைவிலேயே களைத்து மெலிந்து காணப்பட்டாள்அன்றும் அவ்வாறு இரவு தூக்கத்தை தொலைத்தவள் காலையில் தாமதமாய் எழுந்து வர சாமி பூஜையறையின் முன் படுத்திருந்தார்..

பதறிப் போய் அவர் அருகில் சென்று அவரை எழுப்ப சோர்வாய் எழுந்து அமர்ந்தார்..

என்ன சாமி என்னாச்சு உடம்பு எதுவும் முடிலயா??நா பயந்தே போய்ட்டேன் என்னனு சொல்லு சாமி??

தேவிகா காலைலயிருந்து மனசே சரியில்லம்மா..ஏதேதோ கனவு என்னப்பன் சிவன் என்கிட்ட சொல்றான் இந்த பாவிக்கு அது புரியமாட்டேங்குதும்மா..

மனசெல்லாம் படபடப்பாவே இருக்கு. இப்படி இருந்ததேயில்ல தேவிகா.. ஏதோ தப்பா படுதும்மா..

சாமி இந்தா முதல்ல தண்ணி குடி ஒண்ணுமில்ல சாமி எதையாவது நினைச்சுட்டே படுத்திருப்ப அதான் எதாவது கனவா வந்திருக்கும்..

வீணா போட்டு குழப்பிக்காம போ கோவிலுக்கு கிளம்பு என்றவள் விபூதியை அவர் நெற்றியில் இட்டு அனுப்பி வைத்தாள்..

அவரும் ஏதோ நினைவோடு அங்கிருந்து நகர்ந்தார்..

என்னதான் அவருக்கு சமாதானம் கூறி அனுப்பினாலும் தேவிகாவே உள்ளுக்குள் பயந்துதான் போனாள்..

சாமிக்கு இதுவரை இதுபோன்று தோன்றியதில்லை என்னவாக இருக்கும் எதுவாயிருந்தாலும் சரி கடவுளே நீதான் துணையிருந்து காப்பாற்ற வேண்டும் என்று மனமாற வேண்டினாள்..

அடுத்து வந்த மூன்று தினங்களுமே நரகமாயிருந்தது தேவிகாவிற்கு..

சாமி பேசுவதையே விட்டுவிட்டார் கோவிலிலேயே அதிக நேரத்தை செலவிட்டார்..

அவளும் எப்படி எப்படியோ சமாதானம் கூறியும் அவர் மனம் எதையும் ஏற்றுக் கொள்வதாயில்லை..

சரி அவரே புரிந்து கொள்வார் என அவளும் விட்டுவிட தனிமை கொடுமையாய் இருந்தது..

மனம் வெகுவாய் கார்த்திகேயனைத் தேடியது…ஒரு வழியாய் நாளை அவன் வந்து விடுவான் அவன் கூறினாலாவது சாமி மனம் தேறுவார் என்று நம்பினாள்..

தன்னவனின் வருகையை எண்ணியே அன்றைய இரவு தூக்கமின்றி கரைய மறுநாள் அதிகாலையிலேயே எழுந்து தயாராகி கோவிலுக்குச் சென்று வந்து சாமிக்கு காலை உணைவு தயார் செய்து கொடுத்துவிட்டு கார்த்திகேயனை பார்க்கத் தயாரானாள்..

சாமி அவுக இன்னைக்கு ஊர்ல இருந்து வராக நா போய் பாத்துட்டு விரசா வந்துரேன் சரியா??

கண்களை ஓரிடத்திலேயே நிறுத்தியிருந்தவர் அவளை ஏறிட்டும் பாராமல் சரிம்மா பாத்து பத்திரமா போய்ட்டு வந்துரு என்றதோடு நிறுத்திக் கொண்டார்..

தங்களின் வழக்கமான சந்திக்கும் இடமான ஆற்றங்கரையில் கீழ் படிகளில் இறங்கி அமர்ந்திருந்தாள்..

கார்த்திகேயன் தன்னை பார்க்கும் போது எப்படி உணர்வான் என்பதை எண்ணி எண்ணி நிமிடங்களை கடத்தினாள்..

சற்று நேரத்தில் அருகே காலடி சத்தம் கேட்க மனம் கொள்ளா மகிழ்ச்சியோடு வந்துட்டீகளா என சந்தோஷமாய் திரும்பியவளுக்கு கண்ட காட்சியில் ஒரு நொடி இதயம் நின்றேவிட்டிருந்தது..

அருணாச்சலம் கண்ணில் கொலைவெறியோடு அவளை வெறித்துக் கொண்டிருந்தான்..

பதறிப் போனவளாய் அங்கிருந்து அவள் நகரப் போக வழிமறித்து அருகில் நின்றான்..

எங்கடீ ஓடுற???செயில்ல இருந்து வந்ததும் வராததுமா உன்னத் தேடிதான் ஓடி வந்துருக்கேன் நீ எங்க போற என அவள் கைப்பற்ற வர அவசரமாய் பின் நகர்ந்தவள் கால் இடறி தடுமாறி விழ அருகிலிருந்த பெரிய கல்லில் தலைமுட்டி ரத்தம் வர ஆரம்பித்தது..

என்ன ஒண்ணும் பண்ணிடாத யாராவது பாத்தாக உன்ன கொல்லாம விடமாட்டாங்க என வலியோடு அவள் அரற்ற,

யாரு பாக்கபோறா யாரும் வரமாட்டாகநு தான நீயே அந்த கார்த்திகேயன இங்க வந்து பாக்குற..

எவ்வளவு திமிர் இருந்தா என்னையே போலீஸ்ல பிடிச்சு குடுத்துருப்பான் அவன் இதுல நீ எனக்கு எதிரா சாட்சி சொல்ற???

இம்புட்டு தைரியத்த யார் குடுத்தது உனக்கு ம்ம்ம் என கர்ஜித்தான்..

எல்லா அந்த கார்த்திகேயன் தான் தெரியும்..செயில்ல இருந்து வந்தவுடனே அவன போட்டுதள்ளனும்ங்கிற வெறியோட தான் வந்தேன்..

ஆனா அவனுக்கு முன்னாடி நீ வந்து சிக்கிட்ட இப்போ யோசிச்சா இதுகூட நல்லதுக்குதான் அவன கொன்னா உடனே செத்துருவான் அது எனக்கு வேண்டாம் நா செயிலுக்கு போகும்போது பட்ட வலியும் வேதனையும் அவனுக்கு புரியனும் அதுக்கு நீ சாகனும்..

என்றவன் அவள் கழுத்தை இறுக்கிப் பிடித்தான்..நா ஊருக்குள்ள வந்ததே யாருக்கும் இன்னும் தெரியாது அதனால நீ செத்தாகூட அதுக்கு நா தான் காரணம்னு யாரும் சொல்லப் போறதில்ல என்றவனின் பிடி இன்னும் இறுக,

இங்கு சஹானாவோ தன் கைகளை கழுத்தில் வைத்தவாறு மூச்சடைத்தபடி திணற கார்த்திக் பதறி அவளை பிடிக்கப் போக காயத்ரி வேகாமாய் அவனைத் தடுத்துவிட்டு சாஹானாவை சமாதானப்படுத்தும் வேலையில் இறங்கினாள்..

கார்த்திக்கிற்கோ கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டேயிருக்க சட்டென உள்ளே வந்த ஷரவன் அவனை தாங்கிக் கொண்டான்..

அவனுக்குமே கண்கள் கலங்கியிருக்க ஒரு வழியாய் அண்ணனை சமாதானப்படுத்தி அமர வைத்தான்..

அதற்குள் அங்கு கார்த்திகேயன் தேவிகாவை பார்ப்பதற்காக அவள் வீட்டிற்குச் செல்ல அவனைக் கண்ட சாமியோ பதறியவறாய் மாப்ள தேவிய எங்க உங்கள பாக்க போறேன்னு தான சொல்லுட்டு போனாஇப்போ நீச்க மட்டும் வரீங்க??

என்ன சொல்றீங்க நான் ஊர்லயிருந்து வந்து இங்கதான் நேரா வரேன் எப்போ போனா அவ???

அய்யோ அவ போய் ஒரு மணி நேரம் இருக்குமே கடவுளே சிவ சிவா இதென்ன சோதானை கடவுளே என் பொண்ணு?????

பதட்டபடாதீங்க அவ ஆத்தங்கரைக்குத் தான் போய்ருப்பா வாங்க போலாம் என்று இருவரும் கிளம்பினர்..

அங்கு தேவிகா அவனிடம் போராடி தன் முழு பலம் கொண்டு அவனை தள்ளி விட்டு நகர முற்பட்ட அவனோ அவளின் முடியை கொத்தாய் பிடித்திருந்தான்..

கழுத என்னையே தள்ளி விடுறியா என்றவன் வெறியின் உச்சத்தில் அவளை முன்னோக்கித் தள்ள அங்கிருந்த பாறையில் மறுடியும் பலமாய் இடித்து அதிகமாய் ரத்தம் வெளியேற தொடங்கியிருந்தது..

அருகிலிருந்த மண்ணை கையில் எடுத்திருந்தவள் மறுபடியும் அவன் அவளை பற்றுவதற்குள் அவன் கண்களில் மண்ணை எறிந்தாள்..

தட்டுதடுமாறி படிக்கரையைத் தாண்டி மேலே வர தண்டவாளத்தின் அருகில் வரும் போது மறுபுறத்தில் கார்த்திகேயனையும் சாமியையும் பார்த்துவிட்டாள்..

மாமா என்றவள் அடுத்த அடி வைப்பதற்குள் மின்னலாய் அவளை கடந்தது ரயில்வண்டி..

அந்த சத்ததில் அரைமயக்கத்தில் அப்படியே அவள் தரையில் விழ பின்வந்த அருணாச்சலம் அவர்கள் இருவரையும் பார்த்துவிட்டதால் அப்படியே பதுங்கி மறைந்துவிட்டான்..

கார்த்திகேயனோ தன்னவளை அந்த கோலத்தில் கண்டு நொறுங்கிவிட்டான்..

தான் நிச்சயத்திற்காய் வாங்கியிருந்த வைலட் நிறப் புடவையில் ரத்தம் கொட்ட சரிந்தவளைப் பார்த்தவனுக்கு பூமி காலின் கீழ் நழுவுவதாய் தோன்றியது..

சாமியோ பித்துபிடித்தவராய் கண்கள் அவளையே பார்த்திருக்க ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்..

அவளருகில் சென்று அவளை அள்ளி தன் மடியில் கிடத்தியவன் கன்னத்தை தட்டி அவளை எழுப்ப அரைகுறையாய் கண்களைத் திறந்தவள்..

மாமா என அவன் சட்டையை கையில் பிடித்துக் கொண்டாள்..மாமா நா யாருக்கும் எந்த தீமையும் நினைச்சதில்ல எனக்கு ஏன் மாமா இப்படி நடந்துச்சு..

என்ன நீ எவ்ளோ காதலிக்குறநு எனக்கு தெரியும் உன்கூட வாழ எனக்கு குடுத்து வைக்கல மாமா..

என்ன மன்னிச்சுரு மாமா..என்று திக்கி திணறி முடிப்பதற்குள் மூச்சிழுக்க மறு கையால் சாமியை பற்றியவள்,அப்பா!!!!!

என்றழைக்க சாமியோ கதறிவிட்டிருந்தார்..என்ன பெத்தவங்ககூட இந்தளவு பாத்திருந்திருப்பாங்களாநு தெரில அந்தளவு உன் வாழ்க்கையே எனக்காக கொடுத்துட்டீயேப்பா..

என்னைக்குமே நா ஒரு அனாதைநு நினைச்சதேயில்ல அந்தளவு நீ என்ன பாத்துகிட்ட ஆனா உன் கடைசி காலத்துல உன்ன பாத்துக்காம நா போகபோறேன் என்னை மனிச்சுருப்பா என்றவள் கண்களில் நீர் வர,

சாமியோ அய்யோ என் பிள்ளைக்கு இந்த நிலைமையா இததான் அந்த கடவுள் எனக்கு சொல்ல நினைச்சானா இது தெரிஞ்சுருந்தா என் உயிர எடுத்துக்கோநு சொல்லிருப்பேனே..

தாயீ  தேவி என்ன விட்டுறாதம்மா என்னை அனாதை ஆக்கிராதம்மா என் பேரன் பேத்தியோட என் மக சந்தோஷமா வாழறத பாக்கனும்னு ஆசைப்பட்டேனே இந்த கோலத்தை பாக்கவா வேண்டினேன் என தலையில் அடித்துக் கொண்டார்..

தேவிம்மா என்ன நடந்ததுநு சொல்லும்மா??யாரு உனக்கு இந்த கொடுமையை பண்ணாநு சொல்லு என கார்த்திகேயன் கேட்க அவளின் கண்களோ ரத்தச் சிவப்பாய் மாறியிருந்தது..

வேண்டாம் மாமா நா சொல்லமாட்டேன்..நா உன்கூட சேரக்கூடாதுநு தான் இப்படி பண்ணிணான் நா இத்தனை வருஷமும் அந்த சிவனை வழிபட்டது உண்மைனா உன் மேல வச்சுருக்க அன்பு உண்மையானதுனா நானே திரும்ப வருவேன் மாமா உன் கல்யாணம் பண்ணி உன் பொண்டாட்டியா அந்த கேடுகெட்டவனை அழிப்பேன்..

அதுவரை அவன் யாருநு உனக்கு தெரியகூடாது..இந்தப் பிறவில எப்படி நீ என்னை எனக்காக ஏத்துகிட்டியோ அதே மாதிரி அடுத்தபிறவியிலும் நீ என்ன ஏத்துப்ப அதுக்கப்பறம் நான் உன்ன தேவிகாவா சந்திப்பேன் இது நா கும்பிடுற சிவன் மேல சத்தியம் என அவன் கழுத்து டாலரில் கைவைத்த அடுத்த நொடி கண்மூடினாள்..

முடிந்துவிட்டது கார்த்திகேயனின் காதல் வாழ்க்கை சில மாதங்களிலேயே முடிவிற்கு வந்து தன்னவளையும் எமனிடம் கொடுத்தாகி விட்டது..

சாமியோ சர்வமும் அடங்கிப் போனார் போய்ட்டா அந்த மகராசி இந்த கிறுக்கன தனியா விட்டுட்டு நிம்மதியா போய்டா..

மாப்ள அவளுக்கு பயந்த சுபாவம்நு நினைச்சோமே இப்போ பாத்தீங்களா தைரியமா தனியா நாமள இங்க விட்டுட்டு எப்படி போய்ட்டாநு என பிதற்றியபடியே அந்த இடத்தை சுற்றிவர கார்த்திக்கோ பித்துபிடித்தவனாய் தன்னவளை மார்போடு சேர்த்து கண்ணீர் வற்றும் வரை அழுது தீர்த்தான்..

சில மணி நேரத்தில் எத்தேச்சையாய் அந்தப்பக்கம் வந்த இருவர் இவர்களைப் பார்த்து அருகில் வர கண்ட காட்சியில் அதிர்ந்துபோய் ஒருவர் ஊருக்குள் சென்று மேலும் இருவரை அழைத்து வந்தார்..

ஊர் மக்கள் அனைவருமே அதிர்ச்சியில் உறைந்துபோய் இருக்க சாமியோ நடப்பது எதையுமே கண்டுகொள்ளாமல் தனியுலகில் தேவிகாவோடு வாழ ஆரம்பித்திருந்தார்..

கார்த்திகேயனே தன்னவளுக்கான இறுதிச் சடங்குகள் அனைத்தையும் நடத்தினான்..

அழுதழுது ஓய்ந்தாயிற்று பத்து நாட்களை கடந்திருந்த நிலையில் இதற்குமேல் நடந்ததை நினைத்து வருந்துவதைவிட தேவிகா இடத்தில் இருந்து செய்ய வேண்டிய கடமையை நிறைவேற்ற கோவிலை நோக்கிச் சென்றான்..

சாமி ஒரு மூலையில் படுத்திருந்தார்.. சாமி சாமி நா கார்த்திகேயன் வந்துருக்கேன்..

வாங்க வாங்க என்றவர் எழுந்து அமர அவர் கையைப் பற்றிக் கொண்டான்..

சாமி என்கூட வந்துருங்க நாம எங்கேயாவது போய்டலாம்..

என்னை உங்க பையனா நினைச்சு என்கூட வாங்க என முடிப்பதற்குள் கண்கள் கலங்க அவரோ,மாப்ள  ஏன் கண்கலங்குறீங்க நீங்க அழறத தேவி விரும்ப மாட்டா..

தேவி எங்கேயும் போகல அதோ அங்க பாருங்க வாசல்ல தான் இருக்கா அவளுக்கு வெளியூர்லா ஒத்துவராதுப்பா நா அவள இங்கேயே பத்திரமா பாத்துக்குறேன்..

நீங்க நல்லாயிருக்கனும் மாப்ள..உங்களுக்குனு வாழ்க்கைய அமைச்சு சந்தோஷமாயிருங்க பத்து நாளா தேவியும் அதையேதான் சொல்லிட்டு இருக்கா..

என்னம்மா பசிக்குதா???இதோ வந்துட்டேன்..மாப்ள தேவிக்கு பசிக்குதாம் நா போய் அவளுக்கு சாப்ட எதாவது குடுத்துட்டு வரேன் நீங்க தைரியமா இருங்க..

என்றவாறு வாசலை நோக்கி சென்றவரை ஆற்றாமையாய் பார்த்தான்..

அதன்பின் அங்கிருந்த சொத்தையெல்லாம் விற்றுவிட்டு காஞ்சிபுரத்தில் குடியேறினான்..

மூன்று குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்தான்..

அவர்களையே வாழ்க்கையாய் எண்ணி அவர்களுக்காக உழைத்தான்..

தன் இறுதிக்காலத்தில் தன் கழுத்திலிருந்த அந்த டாலரை தன் மூத்த மகனிடம் ஒப்படைத்து கண்மூடினான்..

கார்த்திக் விறுவிறுவென வெளியே வந்துவிட்டான் மூச்சடைப்பதாய் தோன்றியது அத்தனையையும் நினைக்க நினைக்க இதயத்தின் படபடப்பு அடங்க மறுத்தது..

ஷரவன் அவனிடம் தண்ணீர் பாட்டிலை நீட்ட அதை குடித்து தன் படபடப்பை அடக்க முயற்ச்சித்தான்..சில நிமிடங்களில் காயத்ரி வெளியே வர அவள் கண்களுமே நீர் படர்ந்திருந்ததாய் தோன்றியது..

ரொம்ப தேங்க்ஸ் காயத்ரி என்றவனுக்கு வார்த்தை வெளிளிவர மறுத்தது..

ரிலாக்ஸ் அண்ணா..கம் டவுண் நாம எல்லாத்தையும் நாளைக்கு டீடெய்லா பேசுவோம்..டேக் கேர்..

அவங்க ரெஸ்ட்ல இருக்காங்க ஒன் ஆர் டூ அவர்ஸ்ல எழுந்துருவாங்க..

நா வரேன் எனேறவள் பதிலுக்கு காத்திராமல் சென்றுவிட்டாள்..

அடுத்த சில நிமிடங்களில் சிவா ஷரவந்தியோடு உள்நுழைய மூவரின் முகத்தை பார்த்தே விஷயம் சற்று விபரீதம் எனத் தோன்ற கௌரியிடம் நடந்ததை பற்றி வினவினான்..

அவள் மொபைலில் பதிவு செய்ததை காட்டினாள்..பார்த்த இருவருக்குமே என்ன பேசவென தெரியவில்லை ஷரவந்தி அழ ஆரம்பிக்க ஷரவனும் கௌரியும் அவளை சமாதானப்படுத்தினர்..

சிவாவோ கார்த்திக்கின் கையை இறுகப் பற்றிக் கொண்டான்..

அவன் கைகளில் கார்த்திக்கின் கண்ணீர் இருதுளி பட பதறியவனாய் அவனை தேற்றினான்..

கார்த்திக் உங்களுக்கு எந்த சமாதானமும் சொல்ல முடியும்நு தோணல ஆனா ஒண்ணு சொல்றேன் அந்த அருணாச்சலம் இந்த பிறவில யாரா வேணா இருக்கட்டும்

அவனுக்கு அழிவு நம்மளால தான் இருக்கப் போகுது அவன் எந்த மூலைல இருந்தாலும் சரி அவனை ஒரு வழி பண்ணாம விடபோறதில்ல..

கண்ணீரை துடைத்தவாறு கார்த்திக் அவனிடம் சிவா அவன் இங்க இதே ஊர்லதான் இருக்கனும் நாம இங்க வந்ததே அவன் நம்ம கண்ணுல படணும்ங்கிற காரணத்துக்காகதான் இருக்கும் அதுவும் போக பெயரை வச்சு எனக்கு ஒரு கெஸ் இருக்கு என அமைதியாக, நால்வரும் அவனை அப்பட்ட அதிர்ச்சியோடு பார்க்க,ஆமா என் கெஸ் கரெக்ட்னா நாம தேடுற ஆள் நேத்து நீங்க இன்ட்ரோ குடுத்தீங்களே அந்த அருண் அவனாதான் இருக்கனும் என அதற்கான காரணத்தையும் கூறினான்..

கார்த்திக் அவனா மட்டும் இருக்கட்டும் ஊர்ல இருக்குற அத்தனை கேஸையும் போட்டு அவன உள்ள தள்ரதுதான் என் முதல் வேலை..

ம்ம் கண்டிப்பா சிவா நாளைக்கு எதுக்கும் அவன் வீட்டுக்குள்ள போக முடிஞ்சா போய் செக் பண்ணிருவோம் என கார்த்திக் சிந்தனையில் ஆழ்ந்த அதே நேரம் அங்கு அந்த அருண் தலைக்கேறிய போதையில் தன் பார்ட்னரோடு உளறிக் கொண்டிருந்தான்..

அவ பேரு என்ன ஏதோ சொன்னானே ஆங் சஹானா அவளுக்கு அழகாயிருக்கோம்நு திமிரு..

சென்னைல பாத்தப்போவே அவ முகம் ஏனோ அப்படியே பதிஞ்சு போச்சு..தீடீர்நு பாத்தா நம்ம ஊர்லயே வந்து நிக்குறா..

ஆனா என்னை பாத்தாலே ஏதோ பாக்ககூடாதவன பாக்குறமாறி மூஞ்சிய திருப்பிக்குறா நா அவள முன்னபின்ன பாத்ததுகூட இல்ல..

அப்படியிருக்கும் போது என்ன ஏன் வெறுக்குறாநு தெரில இதே வேற பொண்ணா இருந்திருந்தா அடுத்த செகண்ட் நம்ம பசங்கள விட்டு தூக்கிட்டு வர சொல்லிருப்பேன் அந்த வக்கீலோட தங்கச்சியா போய்ட்டா..

இதுல இன்னொருத்தன் அவன் பேருகூட கார்த்திக் ம்ம் அவள கல்யாணம் பண்ணிக்க போறானாம் பெரிய ஹீரோநு நினைப்பு..

சிலர காரணமேயீல்லாம பிடிக்காதுநு சொல்லுவாங்க தெரியுமா இதுங்க ரெண்டும் அந்த கேட்டகிரி தான்..

இல்லனா பாத்து ரெண்டு நாள் ஆனப்பறமும் இப்படி பொலம்பிட்டு இருப்பேனா..

என்று பிதற்றிவாறே கையிலிருந்த கோப்பையை விட்டேறிய அது சுவரிலிருந்த வயதானவரின் போட்டோ மேல் விழுந்து அதன் கண்ணாடி உடைந்து விழுந்தது..

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

3 comments

Padmasubramanian October 22, 2026 - 8:10 pm

முன் ஜென்ம காதல் மட்டுமல்ல, பழி வாங்கும் படலமும் மீண்டும் தொடரட்டும்.

suganyavel October 23, 2026 - 7:56 pm

Interesting🙄

srichitra October 23, 2026 - 8:52 pm

Very nice

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode