மலர்-21

by ஸ்ரீ
3 comments 363 views
A+A-
Reset

குறள் 791:

நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்

வீடில்லை நட்பாள் பவர்க்கு

மு.வ விளக்க உரை: நட்புச் செய்தபிறகு நட்பை உடையவர்க்கு அதிலிருந்து விடுதலை இல்லை, ஆகையால் ஆராயாமல் நட்புச் செய்வது போல் கெடுதியானது வேறு இல்லை.

அமுதினி சென்று சில நிமிடங்கள் அங்கு கனத்த மௌனமே ஆட்சி செய்தது. இருவருக்குமே பேசுவதற்கு தெம்பு இருப்பதாய் தோன்றவில்லை. மங்கையே முதலில் மௌனத்தைக் கலைத்தாள்.

“மாமா…”

“சாரி பாப்பா நான் உன்கிட்ட ரொம்ப அதிகமா பேசிட்டேன்.”

“என் மேல இருக்குற பாசத்தில் தான பேசின அதெல்லாம் பரவாயில்லை. நீ நினைச்சதையும் தப்புனு சொல்ல முடியாது. நீ மட்டும் இல்லை அம்மு வசந்த் எல்லாருமே சொன்னாங்க.

ஆரம்பத்திலேயே வெட்டி எறிஞ்சுட்டா வலி கம்மி தான்னு சொன்னாங்க. உன்னை மாதிரி வருஷ கணக்கில் காதலிச்சா தான் கஷ்டமா மாமா?

இந்த ஒரு மாசமும் அவரை தான் என் புருஷனா நான் நினைச்சுருக்கேன். சொல்லப் போனால் அது நடக்காம போயிடுமோங்கிற பயத்தில் தான் என் மனசையே அவர்கிட்ட சொன்னேன்.

அப்படியிருக்கும் போது எப்படி மாமா மனசை மாத்திக்க முடியும். பார்த்த இல்ல அம்முவோட சொல்லாத காதல் கூட இன்னும் அவ மனசில் பதிஞ்சு தான் இருக்கு. சாகுற வரை இருக்கத் தான் செய்யும்.

நீ விஷயத்தை சொன்னதில் இருந்து எனக்கு என் வாழ்க்கையை நினைச்சு பயம் எல்லாம் வரலை. இந்தக் குடும்பத்து மேல கோபம் கோபமா வருது. முகுந்தன் வார்த்தைக்கு வார்த்தை உன் குடும்பம் எவ்வளவு அழகுனு சொல்லிட்டே இருப்பாங்க.

ஆனால் இப்போ அந்த அழகு மொத்தமும் அழுக்கா தெரியுது மாமா. நான் உயிரையே வைச்சுருந்தவங்க எல்லாரும் இப்படிட்டவங்களானு யோசிக்க வைச்சுட்டாங்க.

இவங்களைப் பார்க்கும் போதெல்லாம் இனி இதுதானே மாமா எனக்குத் தோணும். அதுவும் என் அப்பா எப்படி இப்படி ஒரு விஷயத்தை பண்ணினார். கூட பிறந்தவங்களை இப்படி ஒதுக்கி வைச்சு எப்படி வாழ முடியும்.”

“பாப்பா.. இந்த விஷயத்தை இத்தோட மறந்துரு டி ப்ளீஸ். நமக்கும் அப்போ நடந்ததுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. சம்மந்தபடுத்திக்கவும் தேவையில்லை. சாதாரணமா இரேன் எனக்காக.. உன்னை கெஞ்சி கேட்குறேன்.”

“விடு மாமா நான் யார்கிட்டேயும் எதுவும் கேட்க போறதில்லை. ஆனால் என் விஷயத்தை வீட்டில் சொல்லும் போது கண்டிப்பா இதைப் பத்தி பேசுவேன் மாமா. நீ நிம்மதியா இரு. அடுத்து உன் கல்யாணம் தான்.”, என்றவள் புன்னகைத்து நகர்ந்தாள்.

ஒரு வாரமாய் ஆடித் திறந்த மகள் தற்போது சோர்வாய் இருப்பது தகப்பனின் கண்ணில் படாமல் போகுமா? முத்துப் பாண்டி மகளைத் தேடி வந்துவிட்டார்.

“ஏலே ஏன் சோர்வா இருக்கே? எதுவும் வேணுமா?”

“நல்லா தான் இருக்கேன் பா ஒண்ணும் வேண்டாம்.”

“முகமே சரியில்லைலே..”

“ப்பா நல்லாயிருக்கேன்னு சொல்றேன்ல சும்மா முகம் சரியில்லை அது சரியில்லைனு போப்பா..”, என்றவள் கடுகடுத்ததில் முத்துப் பாண்டி சற்று நிதானித்தார்.

“…”

“லேசாய் தலைவலி பா தூங்கி எழுந்தா சரியா போகும். நீ போ.”

“சரிலே நீ படுத்துக்கோ.”, என்றவர் அமைதியாய் வெளியே சென்றுவிட மங்கைக்கு நிஜமாகவே தலைவலித்தது.

தந்தையிடம் அப்படி பேசியது குற்றவுணர்ச்சியாய் இருக்க யோசிக்காமல் அவரைத் தேடி அவரறைக்குச் சென்றாள்.

“ப்பா..”

“வாலே..”

“சாரி பா ஏதோ யோசனை நிஜமாவே தலை வலி அதான் நீ ஒண்ணும் தப்பா எடுத்துக்காதே.”

“என்னலே புதுசா. நீ பேசாம வேற யாரு பேசுவா என்னை. அதெல்லாம் ஒண்ணுமில்ல போய் தூங்கு போ.”, என்றவருக்கு சமாதனமாய் மென்னகைத்தவள் தனதறைக்கு வந்து கண்களின் ஓரம் துளிர்த்திருந்த கண்ணீரைத் துடைத்துவிட்டு படுத்து விட்டாள்.

முகுந்தன் அங்கு போய் விட்டதாய் அனுப்பிய குறுஞ்செய்திக்கு கூட பதில் அனுப்பாமல் தூக்கத்தில் தன்னை அழுத்திக் கொண்டாள். மறுநாள் காலை எழுந்தவளுக்கு முகுந்தனிடயம் இருந்து குறுஞ்செய்தி காத்திருந்தது.

வெள்ளி நிலவே வெள்ளி நிலவே
வீண் சோகம் ஏனடி மானே
ஏனடி முல்லை மலரே
முல்லை மலரே உன் பாரம்
தீர்ப்பவர் யாரு கூறடி

அவனது குரலில் அந்த வரிகளைக் கேட்டவளுக்கு மீண்டுமாய் தொண்டை அடைத்தது. அதைவிட அத்தனை தொலைவில் இருந்து அவன் தன்னைக் கண்டுகொண்டதில் அவன் மீதான காதல் இன்னுமின்னும் அதிகரித்தது.

“தங்கமே..”, என்று அழுத்தியவளுக்கு அதற்கு மேல் தட்டச்சு செய்ய முடியாமல் தவித்தாள். அதே நேரம் முகுந்தனே அவளை அழைத்திருந்தான்.

“மலரே…”

“தங்கமே.. நைட் சீக்கிரமே தூங்கிட்டேன் அதான் மெசெஜ் பண்ண முடியலை.”

“இருக்கட்டும். வேறேதும் குழப்போயில்லல்லோ?”

“..”

“சக்கரே எந்தா?”

“அதெல்லாம் இல்லை தங்கம். கொஞ்சம் டயர்ட் அவ்வளவு தான்.”

“சரி. எதோ குழப்பம் மலருக்கு அல்லே? என்கிட்டே சொல்ல வேண்டாம். ஆனால் அதையே நினைச்சு இருக்குறதில் ஒரு பயனும் இல்லை.

உன்னைப் படுத்துற விஷயத்தை கொஞ்சம் தள்ளி வைச்சுட்டு எப்போதும் போல் இரு. முடிவில் எல்லாம் சரியாகாம். சரியாகலை அங்கில் அது முடிவல்லா. சரியா?”

“உன்னியேட்டா..”, என்றவளுக்கு மீண்டுமாய் அழுகை தான் வந்தது.

“பொன்னு மோளுக்கு எந்தாயி?”

“எனக்கு உன்னைப் பார்க்கணும் தங்கமே..”

“கிளம்பி வரட்டே?”

“!!!”

“பரா மலரே.. வரட்டே?”

“வேண்டாம் நான் பார்த்துக்குறேன். அடுத்த மாசம்னு இருந்தது அநேகமாக பத்து நாளா இருக்கும்னு நினைக்குறேன். நெக்ஸ்ட் மேட்ச்சே கேரளாவில் தான். அப்போ பார்க்கலாம்.”

“எவ்வளவு பெரிய விஷயம்!! வென்யூ விவரமெல்லாம் அனுப்பு நான் வந்து உன்னை அழைச்சுப் போறேன் சரியா?”

“ம்ம்..”

“எல்லாம் சரியாகாம் மலரே.. ரிலாக்ஸ்.”

“தேங்க்ஸ் தங்கம். இப்போ பெட்டர் தான். நீ போய் வேலையை கவனி. லவ் யூ,”

“லவ் யூ மலரே.பை.”, என்றவனுக்கு என்ன பிரச்சனை என்று புரியாமல் தவிப்பாய் இருந்தது. ஆயிரம் தயக்கம் இருந்தாலும் அவற்றை ஒதுக்கிவிட்டு கார்த்திகேயனுக்கு அழைத்திருந்தான்.

“ஹலோ கார்த்தி..”

“ஹாய் முகுந்தன் சொல்லுங்க ட்ராவல் எல்லாம் ஓகே தான?”

“ம்ம் அதெல்லாம் ஓகே தான்.”

“என்னாச்சு?!”

“இல்லை.. அது..”

“என்ன முகுந்தன்?”

“அங்கே எல்லாம் ஓகே தான?”

“!!!”

“அது மலர்கிட்டே இருந்து நேத்து ஃபுல்லா மெசெஜ் இல்லை. இப்போதான் பேசினேன் குரலும் சரியில்லை அதான். உடம்பு சரியில்லையோனு..”, என்றதைக் கேட்ட கார்த்திகேயனுக்கு அத்தனை ஆச்சரியம்.

அவள் ஒன்றுமே கூறாமல் எப்படி இவ்வளவு தூரம் அறிந்து கொண்டான். அமுதினி கூறிய வார்த்தைகள் எத்தனை உண்மை நாம யாருமே அவளுக்கு தேவைப்பட மாட்டோம். அவரே அப்படி பார்த்துப்பார்.

பெண்கள் பல நேரங்களில் ஒரு பார்வையில் மனிதனை அளந்து விடுகிறவர்கள் என்பதை ஆழமாய் நம்பினான்.

“கார்த்தி?!!”

“வாழ்த்துகள் மாப்பிள்ளை..”

“எந்தா???”

“உங்க விஷயம் எனக்குத் தெரியும் அதை பத்தி அவகிட்ட கொஞ்சம் பேசினேன். ஒரு வேளை அந்த டென்ஷனில் இருக்கானு நினைக்குறேன். நீங்க கவலைப் படாதீங்க. நான் பார்த்துக்குறேன்.”

“….”

“முகுந்தன்?”

“இதுக்கு எப்படி ரியாக்ட் பண்ணணும்னு எனக்கே தெரியலை கார்த்தி. இப்போ புரியுது மலரிண்ட டென்ஷன். என்னை நீங்க நம்பலாம். வீட்டில் கூட எங்களைப் பத்தி தெரியும். கண்டிப்பா வேற எந்த இன்டென்ஷனோடயும் நான்..”

“ஹே முகுந்தன். ரிலாக்ஸ். நீங்க எப்படினு எனக்குத் தெரியாதா. இது தெரிஞ்சப்போ லேசான ஷாக் அவ்வளவு தான். டோண்ட் வொரி எல்லாம் நல்லபடியா நடக்கும்.”

“தேங்க்ஸ் கார்த்தி..”

“சொந்தமாக போறோம் இன்னும் என்ன ஃபார்மாலிட்டீஸ். நீங்க எனக்கு ப்ரதர் இனிமே.”, எனும்போதே முகுந்தனை அங்கு யாரோ அழைக்கும் குரல் கேட்டது.

“நீங்க போய் வேலையை கவனிங்க முகுந்தன் அவ சரியாய்டுவா.”

“சரி கார்த்தி பை சீ யூ சூன்.”, என்றவனுக்கு மங்கையின் கலக்கம் எதனால் என்று அறிந்து கொண்ட நிம்மதியில் வேலையைக் கவனிக்கச் சென்றான்.

மங்கையோ கடினப்பட்டு அனைத்தையும் மறந்துவிட்டு மற்றவர்களோடு பேச ஆரம்பித்தாள். அதிலும் புதுமணத் தம்பதிகளுக்கான சடங்குகள் சில வேறு இருந்ததால் அதில் அன்றைய பொழுது கழிந்தது.

மாலையில் கார்த்திகேயன் குடும்பம் உட்பட அனைவருமே கிளம்பியிருக்க வீட்டு மனிதர்கள் மட்டுமே இருந்தனர்.

குணவதி கொடுத்த காபியை எடுத்துக் கொண்டு மங்கை தனது அண்ணனின் அறைக்கு கன்னிகாவைத் தேடிச் சென்றாள்.

“அண்ணி..”

“வா மங்கை..”

“இந்தாங்க காபி அம்மா குடுத்தாங்க.”

“நானே வந்துருப்பேனே. இந்த துணியெல்லாம் அடுக்கி வைச்சுட்டு இருந்ததில் நேரமாகிடுச்சு.”

“இதில் என்ன இருக்கு அண்ணி. சரி நீங்க வேலையை கவனிங்க. நான் வரேன்.”

“மங்கை ஒரு நிமிஷம்..”

“சொல்லுக அண்ணி..”

“இந்தா இது உனக்கு என்னோட சின்ன கிப்ட்..”

“எனக்கா எதுக்கு?”

“காரணமெல்லாம் இல்லை. சும்மா தான். உண்மையைச் சொல்லணும்னால் நாத்தனார் தான் இப்போ எல்லாம் மாமியார்னு எல்லாரும் ரொம்ப பயமுறுத்துனாங்க.

ஆனால் நீ ரொம்ப ஸ்வீட். அதிலும் புடவை எடுக்கப் போன அன்னைக்கு நீ பண்ணது நான் எதிர்பார்க்கவே இல்லை. நிஜமாவே இங்கே மத்தவங்களை விட உன் கூட தான் ஃப்ரீயா மூவ் பண்ண முடியுது என்னால.”

“என்ன அண்ணி இப்படி சொல்லிட்டீங்க. இனி எதுனாலும் என்கிட்ட சொல்லுங்க யாரா இருந்தாலும் உண்டு இல்லைனு ஆக்கிடலாம். இனி நீங்க தான் இந்த வீட்டு பொண்ணு அதனால சுதந்திரமா சந்தோஷமா இருங்க.”

“என்ன மங்கை ஒரு நிமிஷத்தில் இந்தக் குடும்பத்தையே தூக்கி என்கிட்ட கொடுத்துட்ட என் வீடுனு சண்டைக்கு வருவனு இல்ல பார்த்தேன்.”, என்று சிரித்தவளோடு மங்கையும் சேர்ந்து சிரித்தாள்.

“அண்ணி இருபது இருபத்தி அஞ்சு வருஷம் வாழ்ந்த வீட்டை குடும்பத்தை விட்டுட்டு வந்து அடுத்து நாம இருக்க போற ஆயுசு மொத்தத்துக்கும் வாக்கப்பட்டு வந்த குடும்பத்தோட நல்லது கெட்டதுனு அத்தனையிலும் நாம இருக்கப் போறோம்.

அப்படியிருக்கும் போது இது உங்க வீடு. நான் போகப்போற வீடு தான் என் வீடு. அதே நேரம் இன்னும் நாப்பது அம்பது வருஷத்துக்கு அப்பறம் நான் இங்கே வந்தா என் அப்பாவா அண்ணனும் அம்மாவா நீங்களும் என்னை சிரிச்ச முகத்தோட வரவேற்கணும்.

அதுக்கான ஸ்பேஸை நான் கொடுத்தா தான் தேவையான உரிமையை நான் எதிர்பார்க்கலாம். சோ உங்க வீட்டு பொண்ணா என்னை நீங்க நினைச்சா அதுவே போதும்.”, என்றவள் கண்சிமிட்டிச் சிரிக்க அந்தச் சிறியவளின் மனமுதிர்ச்சியை எண்ணி கன்னிகா வியந்து நின்றாள்.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

3 comments

Kavi Natarajan July 26, 2026 - 3:59 am

😍😍😍😍😍😍

srichitra July 26, 2026 - 5:22 am

Very nice.

suganyavel July 26, 2026 - 11:48 am

Super💕

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode