மலர்-20

by ஸ்ரீ
3 comments 406 views
A+A-
Reset

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்

நாமங் கெடக்கெடு நோய்

மு.வ விளக்க உரை: விருப்பு, வெறுப்பு, அறியாமை ஆகிய இக் குற்றங்கள் மூன்றனுடைய பெயரும் கெடுமாறு ஒழுகினால் துன்பங்கள் வராமற் கெடும்.

அன்றைய காலை திருமணத்திற்கே உரிய பரபரப்போடு விடிந்திருக்க மண்டபமே மங்கள வாத்திய ஒலியால் நிரம்பியிருந்தது.

தயாராகி முடித்தவள் முதல் அழைப்பாய் முகுந்தனை அழைத்தாள்.

“பரா மலரே..”

“தனியா இருக்கியா தங்கமே?”

“ம்ம் ஆமா”, என்றதும் அழைப்பு துண்டிக்கப்பட முகுந்தன் என்னவென்பதாய் பார்த்த நேரம் வீடியோ காலில் அவனை அழைத்தாள்.

அழகிய தீப்பெட்டி நிற வண்ண பட்டுப்புடவையில் கழுத்தை தங்க நகைகள் நிறைத்திருக்க தலைநிறைய மல்லியோடு தன் முன் நின்றவளை விழியகற்றாமல் பார்த்திருந்தான் முகுந்தன்.

“முதல் தடவை புடவை கட்டியிருக்கேன். எப்படியிருக்கு?”

“திருமாக்கு பதிலா நாம போய் மேடையில் உட்காந்து கல்யாணம் பண்ணிக்கணும் போலேயுண்டு.”

“ஹே..”

“மலர் ஏது இட்டாலும் சுந்தரி பொண்ணல்லே.”

“தங்கத்தோட சந்தனம் மிஸ்ஸிங்?”

“இன்னும் ரெடியாகி முடிக்கலை மலரே.  அஞ்சு மின்ட்டில் வெளியே வராம்.”

“ஓ சரி. வைச்சுடுறேன்.”

“மலரே..”

“ம்ம்.”

“பிராந்து பிடிக்கும் போலுண்டு. பொன்னு மலர் எந்தோ செய்யுனு.”

“…”

“அஞ்சு வருஷமெல்லாம் கஷ்டம் போல..”

“நான் போகணும்..”

“லவ் யூ சக்கரே..”

“லவ் யூ தங்கமே”, என்றவள் கையில் இதழ் பதித்து அதை அவனுக்கு நேராய் நீட்டிய படி அழைப்பைத் துண்டித்திருந்தாள்.

அனைவருமாய் மேடையில் இருக்க முகுந்தனைத் தேடியலைந்தவளின் விழிகள் மணமகனோடு வெளியே வந்தனின் மேல் நிலைத்தது.

அடர் பச்சை நிற சட்டையில் வேஷ்டியோடு அவனது வழக்கமான நெற்றிச் சந்தனமும் கேரளாவிற்கே உரிய வனப்புமாய் வந்தவனை மொத்தமாய் பார்வையால் விழுங்கிக் கொண்டாள்.

தன்னவளது விழிகளின் பாராட்டுதல்கள் ஆணவனை லேசாய் வெட்கம் கொள்ளச் செய்ய அந்த குறுஞ்சிரிப்பு இன்னுமின்னும் அழகு சேர்ப்பதாய் இருந்தது.

குறித்த நேரத்தில் அனைவரின் ஆசீர்வாதத்தோடு திருமாவளவன் கன்னிகாவின் கழுத்தில் மங்கல நாண் பூட்டி மனைவியாக்கியிருந்தான்.

மணமக்களுக்கு பின்னே நடுவில் நின்றவளாய் மங்கை இருவரையும் கட்டிக் கொண்டாள்.

“வாழ்த்துக்கள் இரண்டு பேருக்கும். ரொம்ப வருஷம் சந்தோஷமா இருக்கணும்.”, என்று உற்சாகமாய் கூற போட்டோகிராபர் அப்படியே அவளை நிற்க வைத்து போட்டோ எடுத்துக் கொண்டார்.

ஒவ்வொருவராய் பரிசு கொடுத்து புகைப்படம் எடுத்து என பொழுது கழிய முகுந்தன் திருமாவிற்கு தங்க மோதிரம் அணிவித்தான்.

“எதுக்கு இதெல்லாம் முகுந்தன்? நீங்க வந்ததே எனக்கு போதும்.”

“இருக்கட்டும் திருமா. இந்த இரண்டு நாளும் அவ்வளவு என்ஜாய் பண்ணேன். என் கசின் கல்யாணம் போல இருந்தது.”

அதன் பின் உணவை முடித்து அனைவரிடமும் விடைபெற்று கிளம்பத் தயாரானவன் தனது பையை எடுத்துக் கொள்ள வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று கூறினான்.

கார்த்திகேயன் அவனை அழைத்துச் செல்வதாய் கூற மங்கை தானும் சென்று அப்படியே உடை மாற்றி வருவதாகக் கூறினாள்.

மூவருமாய் காரில் கிளம்பி வீட்டை அடைய கார்த்திக் தானும் உடைமாற்றி வருவதாய் கூறி உள்ளே சென்றான். மாடியில் தனதறைக்கு வந்தவள் வேகமாய் உடை மாற்றிவிட்டு முகுந்தனைத் தேடி ஓடினாள்.

சரியாய் அதே நேரம் முகுந்தனும் அறையிலிருந்து வெளியே வர அவன் மீதே இடித்து நின்றிருந்தாள்.

“அவுச்..”

“சாரி சாரி வலிக்குதா?”

“அதெல்லாம் இல்லை என்னாச்சு ஏன் இவ்வளவு அவசரம்?”, என்றதற்கு ஒன்றும் பேசாமல் அவனது மணிக்கட்டை பிடித்து தன் கையில் வைத்திருந்த சிகப்பு கயிறை அவனுக்குக் கட்டி விட்டாள்.

“எந்தா இது மலரே?”

“அண்ணனுக்கு பத்திரிக்கை வைச்சு கும்பிட போனப்போ சாமிகிட்ட வைச்சு வாங்கின கயிறு. நான் கண்ட நேரம் கண்ட இடமெல்லாம் சுத்துறேன்னு எனக்கு கட்டி விட்டாங்க.

நான் உனக்கு எடுத்து வைச்சேன் தங்கம். பத்திரமா இருக்கணும்.”, என்றவள் கையிலிருந்த திருநீறை அவனுக்கு பூசி விட்டாள்.

“..”

“இதை மண்டபத்துக்கு எடுத்துட்டு வர மறந்துட்டேன். என்னடா பண்றதுனு நினைச்சேன். கடவுளே வழி கொடுத்துட்டார்.”, என்றவள் புன்னகைக்க அவளது கன்னம் பற்றிவனாய் தான் அணிவித்த மோதித்தைச் சுட்டிகாட்டி,

“இதை விட ஆயிரம் மடங்கு அன்பு இருக்குற இந்த கிப்ட் ரொம்ப ஸ்பெஷல். உன்னை மாதிரி அன்பு வைக்க உன்னால மட்டும் தான் முடியும்.

தெய்வத்திண்டே இஷ்டபட்ட கொச்சு(குழந்தை) நீயா மலரே. எந்த சூழ்நிலையிலேயும் எல்லார்கிட்டேயும் இப்படியே இருக்கணும் நீ.”, என்றவனை நோக்கி இரு கை கூப்பி வளைந்து நிமிர்ந்தாள்.

“அடுத்த மாசத்துக்காக காத்துட்டு இருக்கணும். டேட் வந்தவுடனே சொல்லு சரியா?”

“ம்ம் சரி தங்கம்.”, என்ற நேரம் கார்த்தியும் வந்துவிட முகுந்தன் தனக்கான காரில் கிளம்பியிருக்க இவர்கள் இருவருமாய் மண்டபத்திற்கு கிளம்பியிருந்தனர்.

“பாப்பா..”

“சொல்லு கார்த்தி மாமா..”

“முகுந்தனும் நீயும் லவ் பண்றீங்களா?”

“மாமா!!!”

“நீ பொய் சொன்னாலும் அவர் கையில் இருந்த நம்ம சாமி கயிறும் திருநீறும் பொய் சொல்லாது பாப்பா.”

“!!!!!”

“உங்க அப்பா கூட பிறந்தவங்க எத்தனை பேருனு தெரியுமா உனக்கு?”

“என்ன மாமா பேசுற நீ!!”

“கேட்டதுக்கு பதில் சொல்லு”

“சித்தப்பா அப்பறம் உங்க அம்மா..”

“இதைத் தவிர ஒருத்தர் இருக்காங்க. கண்டிப்பா இன்னும் உயிரோட தான். ஆனால் அவங்களைப் பத்தின எதாவது ஒரு தடயம் உன் வீட்டில் இருக்கா? அதுக்கு காரணம் காதல்.”

“மாமா!!!!!”

“அத்தை பொண்ணை லவ் பண்றதுக்கு இவ்வளவு பயமானு என்னைக் கேட்டியே. இங்கே இவங்களுக்கு பிடிக்கலைனால் யாரா இருந்தாலும் ஒண்ணு காதலை விடணும் இல்லை குடும்பத்தை விடணும் அது இரண்டும் முடியாதுனால் உயிரை விடணும்.”

“!!!!”

“இது உனக்கு வேண்டாம் பாப்பா. எதுவும் பிரச்சனை வந்து உனக்காக பேச முடியாத நிலைமையில் என்னை நிக்க விட்டுறாத டி.

ஒரு தடவைக்கு நூறு தடவை யோசிச்சுக்கோ. நீ எனக்கு முக்கியம் டி மங்கை.”, என்றதைக் கேட்டவள் திக் பிரம்மை பிடித்ததைப் போன்று அமர்ந்து விட்டிருந்தாள்.

அன்று முழுவதும் அவள் யாரிடமும் ஒரு வார்த்தை பேசியிருக்கவில்லை. கார்த்திகேயன் அவசரப்பட்டு அவளிடம் எதையும் கூறியிருக்க வேண்டாமோ என ஆயிரம் முறையாய் தன்னைத் தானே திட்டிக் கொண்டான்.

முகுந்தனின் கையில் இருந்த கயிறைப் பார்த்தவனுக்கு பேரதிர்ச்சி தான். அது இந்தக் குடும்பத்து பிள்ளைகளுக்கு என பூஜையில் வைத்து வாங்கி வந்ததாய் அவன் தாய் கூறியதைக் கேட்டவனுக்கு இதை எப்படி சாதாரணமாய் எடுத்துக் கொள்ள இயலும்.

முத்துப் பாண்டியையும் கனியனையும் நினைத்தால் நாவெல்லாம் வறண்டு போனது கார்த்திகேயனுக்கு. அதனால் தான் நினைக்காததை எல்லாம் மங்கையிடம் கொட்டி விட்டிருந்தான்.

இப்போது மங்கையின் முக மாற்றத்தை அனைவரும் கவனித்து விட்டால் தேவையில்லாத பிரச்சனைகள் வருமே என்று நினைக்க நினைக்க தலையே வெடித்துவிடும் போல் இருந்தது.

அமுதினி அவளிடம் எதோ விசாரிப்பதும் நகர்வதுமாய் இருப்பதைக் கவனித்தவன் அவளிடம் மங்கையை அழைத்துக் கொண்டு மாடியறைக்கு வருமாறு கூறினான்.

“மாமா..”

“வா அமுதினி..”, என்றவன் அவளருகில் அமைதியாய் நின்றிருந்தவளை தான் பார்த்திருந்தான்.

“இப்போ ஏன் இப்படியிருக்க பாப்பா?”

“அவ்வளவு பெரிய விஷயத்தை சொல்லிட்டு ஏன்னு கேட்குற?”

“நான் சொன்னது உண்மை தான். அதுக்காக இப்படி எல்லாரும் உன்னை கவனிக்குற அளவு அப்பட்டமா முகத்தை வைச்சுட்டு இருப்பியா நீ?!”

“என்ன நடக்குது இங்கே?”

“…”

“சொல்லுங்க மாமா உங்க இரண்டு பேருக்கும் எதுவும் சண்டையா?”

“அதெல்லாம் ஒண்ணுமில்லை அமுதினி.”

“அம்மு நம்ம அப்பத்தாக்கு எத்தனை பசங்க?”

“!!!”

“உன்னைத் தான் கேட்குறேன் சொல்லு. கார்த்தி மாமா என்னென்னவோ சொல்றான்.”

“என்ன மாமா இது? இவகிட்ட எதுக்கு சொன்னீங்க?!”

“கடைசி வரை நான் பைத்தியகாரியாவே இருக்கணும்னு சொல்றியா?”

“நீ வேற ஏன் டி! என்ன மாமா இது..”

“இவ லவ் பண்றா அமுதினி..”

“…”

“என்னை வேற என்ன செய்ய சொல்ற?”

“எனக்கும் தான் தெரியும். அதுக்காக?!”

“புரிஞ்சு தான் பேசுறியா?”

“மாமா எப்போவோ நடந்தது. என்ன நடந்ததுனு கூட நமக்குத் தெரியாது. நான் காலேஜில் சேர்ந்த நேரம் என்னை பயமுறுத்த தான் எங்கம்மா அந்த விஷயத்தையே சொன்னாங்க. இல்லைனால் நமக்கும் தெரிஞ்சுருக்காது தான?”

“…”

“எனக்கு என் மங்கை சந்தோஷமா இருக்கணும். தெரிஞ்சோ தெரியாமலோ ஒருத்தர் அவ மனசுக்குள்ளே வந்துட்டாங்க.

நல்லவனா கெட்டவனா யாரோ எவனோனு எந்தக் கவலையும் பட முடியாத அளவுக்கு அவர் நல்லவர். இதைத் தாண்டி எனக்கு எதுவும் யோசிக்க முடியலை மாமா.

யார் எதிர்த்தாலும் அவளுக்காக நான் இருப்பேன். அவ ப்ரெண்ட் வசந்த் இருக்கான். முதலில் நாம எல்லாம் அவளுக்குத் தேவைப்படுவோமானே தெரியலை. அந்த அளவு அவரே இவளைப் பார்த்துப்பாருனு நான் அடிச்சு சொல்லுவேன்.”

“…”

“இங்கே பாரு டி நீயும் தேவையில்லாததை மனசில் போட்டுட்டு சுத்தாத. எப்பவோ எங்கேயோ போனவங்க, போனவங்களாவே இருக்கட்டும்.

உனக்கு அப்படி ஒரு நிலைமை வர நான் விட மாட்டேன். நீ கேட்டதை இங்கேயே மறந்துட்டு வெளியே வா புரியுதா?”

“அமுதினி!!”

“போதும் மாமா இவங்களுக்கு எல்லாம் பயந்து பயந்து வாழ்ந்தது என்னோட போட்டும். என் தங்கச்சியாவது அவளுக்குப் பிடிச்ச வாழ்க்கையை வாழட்டும். “

“அம்மு!!!”

“எனக்கும் காலேஜில் ஒருத்தரைப் பிடிச்சது ஆனால் அம்மா சொன்ன விஷயம் தான் பூதமா என் கண்ணை மறைச்சது. காதலை, என்னோட பிடித்தத்தை சொல்லவே இல்லை.

காரணம் இவங்களோட குடும்ப கௌரவம் சாதி மரியாதை எல்லாத்தையும் என் தலையில் இறக்கி வைச்சாங்க. என்னை மாதிரி ஒருத்திக்காக இரண்டு தடவை அவங்க சூசைட் அட்டெம்ட் பண்ணிணாங்க.

காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு வாழ்க்கையை பார்க்க சொல்லிட்டு வந்தேன் டி. அன்னைக்கு என் மனசு பட்டபாடு எனக்கு மட்டும் தான் தெரியும்.

ப்ச் இப்போ எதுக்கு இந்த தேவையில்லாத பேச்செல்லாம் மூஞ்சியை கழுவிட்டு எல்லாத்தையும் மனசில் இருந்து தூக்கிப் போட்டுட்டு வந்து சேரு. மாமா உங்களுக்கும் தான். வாங்க போலாம்.”, என்று முன்னே சென்றவளைப் பார்த்த வண்ணம் சிலையாகி நின்றிருந்தனர் கார்த்திகேயனும் மங்கையும்.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

3 comments

Kavi Natarajan July 25, 2026 - 6:48 am

💞💞💞💞💞💞💞💞

srichitra July 25, 2026 - 3:30 pm

Very nice

suganyavel July 26, 2026 - 10:51 am

Super💕

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode