398
“குறள் 357:
ஓர்த்துள்ளம் உள்ள துணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு
மு.வ விளக்க உரை: ஒருவனுடைய உள்ளம் உண்மைப் பொருளை ஆராய்ந்து உறுதியாக உணர்ந்தால், அவனுக்கு மீண்டும் பிறப்பு உள்ள தென எண்ண வேண்டா.”
மறுநாள் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் கோலாகலாய் நடந்து முடிந்திருக்க மாலை வசந்த் மங்கைக்கு அழைத்திருந்தான்.
“வசந்த் எப்படி டா இருக்க? அங்கே எல்லாம் ஓகே தான?”
“நான் நல்லாயிருக்கேன் மங்கை. நீ எப்படியிருக்க. உனக்கு கேம்ப் எப்போ ஆரம்பிக்குது?”
“தெரியலை டா அடுத்த மாச கடைசியா இருக்கலாம். சரியா தெரியலை. திருமா கல்யாணம் வரைக்கும் எந்த மேட்சும் இல்லாம இருந்துட்டா நல்லாயிருக்கும்.”
“ம்ம் இல்லைனாலும் நடுவில் கேப் இருக்கும் மங்கை. வந்துட்டு போய்க்கோ.”
“அப்படிதான் நினைச்சுருக்கேன் டா. சரி அதெல்லாம் விடு உன்கிட்ட முக்கியமா நான் ஒண்ணு சொல்லணும்.”
“கிரிக்கெட்டை விட முக்கியமா உனக்கு பேசுறதுக்கு இருக்கா என்ன மங்கை?”
“அது.. உன்னி முகுந்தன் பத்தி சொல்லிருந்தேன்ல.”
“ஆமா..”
“அவர் திருவிழாக்கு இங்கே தான் தங்கியிருந்தார். எப்போ எப்படினு எல்லாம் கேட்காத எனக்கு அவரை பிடிச்சுருக்கு வசந்த். அவரும் என்னை விரும்புறார்.”
“ஏய் என்ன டி சொல்லிட்டு இருக்க??!!”
“ஏன் டா கத்துற உன்கிட்ட தான் சொல்லிருக்கேன்.”
“விளையாடாத மங்கை. அத்தை மாமா அதைவிட உன் அப்பத்தாவும் தாத்தாவும் இதுக்கு ஒத்துகிடுவாங்கனு நினைக்குறியா?”
“நீ கேட்குற எதுக்குமே என்கிட்ட பதில் இல்லை வசந்த். ஆனால் அவர் இல்லாத வாழ்க்கையை யோசிச்சு கூட பார்க்க முடியலை.”
“மங்கை வேணாம் டி ஆரம்பத்திலேயே விட்டுடு கொஞ்சம் தான் வலிக்கும். ஆனால் வளர விட்டால்…”
“….”
“முடிவெடுத்துட்டேன் மாத்த முடியாதுனு அமைதியா இருந்தே சொல்றியா நீ?”
“….”
“எனக்கு உன் சந்தோஷம் ரொம்ப முக்கியம் மங்கை. அதனால தான் இவ்வளவு பேசுறேன். சரி இதுக்கு மேல என்ன ஆனாலும் பார்த்துக்கலாம். மாமா ஒத்துக்காத நிலைமை வந்தா நான் உனக்காக முன்னே நிக்குறேன். சந்தோஷமா இரு.”
“வசந்த்!!”
“என் பிள்ளைக்கு நீ அத்தைனு சொல்லும் போது என் உடன்பிறப்புக்கு நான் நிக்காம போவேனா? மச்சான்கிட்ட வாழ்த்துக்கள் சொன்னேன்னு சொல்லு ஒருநாள் பேசுறேன்.”
“தேங்க்ஸ் டா.”, என்றவளுக்கு தொண்டை அடைத்தது. அதை உணர்ந்தவனாய்,
“அழாத. நீ எக்காரணத்துக்காகவும் எப்பவும் அழவே கூடாது. உன் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதா தான் நடக்கும் டி. தைரியமா இரு என்ன வந்தாலும் பார்த்துக்கலாம்.”
“சரி வசந்த். வைச்சுடுறேன்.”, என்று கைப்பேசியை அணைத்தவளுக்கு அவன் கூறியதெல்லாம் சற்று பயத்தை அதிகரித்திருந்தது.
தேவையற்ற சிந்தனைகள் வேண்டாம் என்று கடினப்பட்டு அனைத்தையும் புறந்தள்ளியவளாய் மனதை திசை திருப்பினாள்.
இரண்டு தினங்களில் திருமணத்திற்கான துணிகள் எடுத்து வரலாம் என்று நாள் குறிக்கப்பட்டிருக்க இங்கு குணவதி விஜயலட்சுமி அவரவர் கணவரோடு கிளம்ப மங்கையையும் வருமாறு கூறினர்.
ஏற்கனவே பேசி வைத்திருந்ததைப் போல் அவள் தனது அண்ணனையும் எல்லார் முன்னும் அழைக்க மனமில்லாவிட்டாலும் ஒப்புக் கொண்டனர்.
அவர்களது கடையிலேயே தான் உடைகள் என்பதால் பொறுமையாய் நிதானமாய் பெண்கள் பார்த்து பார்த்து தேர்வு செய்தனர்.
முதலில் முகூர்த்தப் புடவை எடுத்து விடலாம் என்று கூறி பெண்கள் ஆரம்பிக்க தனக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லை எனும் விதமாய் மேடை மீது அமர்ந்து காலையாட்டியபடி வேடிக்கை பார்த்திருந்தாள் மங்கை.
முகூர்த்தப் புடவையில் கன்னிகா ஒரு மயில் கழுத்து நிற புடவையை எடுத்து திருமாவிடம் கண்களால் சம்மதம் கேட்க அவனுக்கும் மிகவும் பிடித்திருந்ததால் சம்மதமாய் தலையசைத்தான்.
இந்த ஊமை காதல் நாடகத்தைப் பார்த்திருந்த மங்கைக்கு புன்னகை அரும்பியது. அந்த நேரம் குணவதி எதார்த்தமாய்,
“ம்மா முகூர்த்த புடவை சிவப்பில் இருந்தா தான் விசேஷம். வேற பார்க்கலாம் மா.”, என்றதில் கன்னிகா முகம் வாடிவிட அவளது அன்னையும் சம்மந்தி பேச்சைக் கேட்கும் பொருட்டு அந்தப் புடவையை வைத்து விடுமாறு கூறினார்.
கன்னிகாவுமே ஒன்றும் பேசாமல் அதை கீழே வைத்துவிட மங்கையால் இதைப் பொறுக்கவே முடியவில்லை.
“ம்மா அவங்க கல்யாண புடவை அவங்களுக்கு பிடிச்ச மாதிரி எடுத்துகிட்டும் மா.”
“இல்ல கண்ணு சம்பிரதாயம்னு ஒண்ணு இருக்குல!”
“யாரோ எதுக்கோ சொன்னதை அப்படியே ஃபாலோ பண்ணணுமா சொல்லு. நாளைக்கு அவங்க முகூர்த்தப் புடவையைப் பார்க்கும் போதெல்லாம் இன்னைக்கு எவ்வளவு சந்தோஷமா அதை வாங்கினாங்கனு தான் நினைவில் இருக்கும். அதைப் போய் கெடுத்துகிட்டு.”
“…”
“பாரு அண்ணி முகமே வாடி போச்சு அதையே எடும்மா..”
“கண்ணு..”
“ப்பா நீ சொல்லு. நான் சொல்றது கரெக்ட்டா இல்லையா?!”
“சரி குணா பிள்ளை சொல்றதும் சரிதான் மருமக பொண்ணுக்கு எது பிடிச்சுருக்கோ அதையே எடுங்க.”, என்று கூற கன்னிகா மங்கையைப் பார்த்து சிரித்தாள்.
திருமாவும் தங்கையைத் தான் பார்த்திருந்தான். அனைவரின் விருப்பத்திற்கும் யாரையும் புண்படுத்தாமல் எப்படி நடக்க முடியும் என்று தங்கையை நினைத்து வியப்பாய் இருந்தது.
மெதுவாய் தாயருகில் சென்றவள், ”உனக்குப் பிடிச்ச மாதிரி கலரில் எனக்கு புடவை எடு அதை தான் கட்டுவேன். ஓகே?”
“சரி கண்ணு.”, என்றவரும் சட்டென முகம் மலர்ந்திருந்தார். பெண்கள் புடவை எடுப்பதில் மூழ்கிவிட யாரோடோ தள்ளி நின்று பேசிக் கொண்டிருந்த முத்துப் பாண்டியைத் தேடி கன்னிகாவின் தந்தை வந்திருந்தார்.
“சொல்லுங்க சம்மந்தி..”
“பொண்ணை ரொம்ப நல்லா வளர்த்துருக்கீங்க. எம்மவ முகம் வாடினா எனக்குத் தாங்காது. நான் பெத்தவன் அப்படி இருக்குறது சகஜம். ஆனால் உங்க மக என் மகளுக்காக பேசினது பெரிய விஷயம்.
நல்ல பொண்ணு இந்த காலத்தில் இப்படியெல்லாம் இருக்குறது ரொம்ப அபூர்வம். நமக்காகவே நாம பேச தயங்குற நேரம் அடுத்தவங்களுக்காக யோசிச்சு பேசுறது. நல்லாயிருப்பா சம்மந்தி.”, என்றவருக்குப் புன்னகைத்தவராய் தன் மகளைத் தான் பார்த்திருந்தார்.
இது இத்தனை பெரிய விஷயமாய் அவருக்குத் தெரியவில்லை. காரணம் பையனைப் பெற்றவர் அல்லவா. அதே நேரம் எதிர்காலத்தில் தன் மகளின் திருமணத்தில் இது போல நடந்திருந்தால் தன் மகளின் முகவாட்டம் அவரை எந்தளவு பாதித்திருக்கும் என்பதை பெண்ணைப் பெற்றவர் உணர்த்தி விட்டுச் சென்றதாய் தோன்றியது.
அடுத்த வாரத்தில் அவளது முதல் மேட்சிற்கான அழைப்பு வந்துவிட்டிருந்தது. மேட்ச் நடப்பது ஹைதராபாதில் என்றதும் முத்துப் பாண்டியும் கிளம்பி நிற்க அவரை உருட்டி மிரட்டி தடுத்தவளாய் தான் மட்டும் கிளம்புவதாகக் கூறினாள்.
“மலரே தனியா சமாளிச்சுடுவியா?”
“நீயும் ஆரம்பிக்காத தங்கமே. வர வர அப்பா மாதிரியே ஆகிட்டு வர நீ.”
“எங்களட பொன்னு மலரை பாதுகாக்க வேண்டி தான்.”
“ம்ம் போதுமே.. சரி சொல்லு திருமா இன்விடேஷன் அனுப்பிட்டதா சொன்னானே வந்துச்சா?”
“ஆங் கிட்டி. மலரை பார்க்க ஆசையாயிட்டுண்டு.”
“எனக்கும் பதினைஞ்சு நாள் எதோ யுகம் மாதிரி இருக்கு.”
“நான் வேணும்னால் ஹைதரபாத் வரட்டே?”
“ஒழுங்கா அமைதியா ஷுட்டிங்கை முடிச்சு கொடுத்துட்டு கல்யாணத்துக்கு வந்து சேரு உன்னியேட்டா..”
“மோகினி, என்னை மடக்குறதுக்கு நல்லா கத்து வைச்சுருக்க.”
“இந்த ஏட்டனில் அப்படி என்ன தான் இருக்கோ?”
“உங்க ஊரில் புருஷனை என்னங்கனு கூப்பிட்டால் எப்படியிருக்குமோ அப்படியிருக்கும்.”
“…”
“எந்தா இப்போ பேசு..”
“என் பர்த்தா (புருஷன்) ரொம்ப மோசம்.”
“எடி மலையாளம் கத்துக்குறியோ?”
“இல்ல சில வார்த்தைகள் மட்டும்..”
“எந்தா அது?”
“அதெல்லாம் உனக்கு எதுக்கு. போய் வேலையைப் பாரு போ”, என்றவளின் சிரிப்பை உணர்ந்தவன்,
“முன்னாடி சொன்னது தான் நிஜம், டேன்ஜரஸ் கேர்ள்.”, என்றவன் புன்னகையோடே அழைப்பைத் துண்டித்தான்.
ஹைதரபாத்தில் ஆட்டத்தை முடித்தவள் ஊர் திரும்பிய போது திருமணத்திற்கு ஐந்து நாட்களே இருந்தது. துபாயில் இருந்து அமுதினி கணவன் குழந்தையோடு ஏற்கனவே வந்திருக்க சகோதரிகள் இருவருமாய் மாதக் கணக்கான கதைகளைப் பேச ஆரம்பித்திருந்தனர்.
வெயில் பயணக் களைப்பு என வந்தவளுக்கு கடலை மாவில் பேஸ் பேக் தொடங்கி வேளா வேளைக்கு இளநீர் ஜுஸ் என ராஜ உபச்சாரம் நடந்தது.
மறுநாள் கார்த்திகேயன் குடும்பம் வரவிருக்க அதன்பின் வீடு நிறைய ஆட்கள் வந்துவிடுவார்கள். பத்திரிக்கை அனுப்பியதோடு முகுந்தனை அலைப்பேசியிலும் திருமா அழைத்து இந்த முறை கட்டாயம் வீட்டில் தான் தங்க வேண்டும் என்றும் கூறிவிட்டான்.
திருமணத்திற்கு முந்தைய நாள் காலை முகுந்தன் வருவதாய் மங்கையிடம் கூறியிருந்தான். கல்யாண களை வீடு முழுவதும் நிரம்பி வழிய தினமும் தாவணி தான் கட்ட வேண்டும் என்று பூங்கோதை கண்டிப்பாய் கூறிவிட்டிருந்தார்.
வசந்துக்கும் அப்போது மேட்ச் எதுவும் இல்லாததால் அவனும் வருவதாகக் கூறிவிட்டான். அமுதினி திருமணத்திற்கெல்லாம் மங்கையைப் பவுடர் போட வைக்கவே தலைகீழாய் தண்ணீர் குடிக்க வேண்டியதாய் இருந்தது.
ஆனால் இப்போதென்னவென்றால் குணவதியும் விஜயலட்சுமியும் கூறும் அனைத்தையும் சருமப் பாதுகாப்பிற்காக செய்து கொண்டவளை விசித்திரமாய் பார்த்து வைத்தாள் அமுதினி.
“என்ன அம்மு?”
“இல்ல ஒரு காலத்தில் பொண்ணுக்கான அடையாளமே இல்லாம இருந்த மங்கை இப்போ பொண்ணுனால் மங்கை மாதிரி இருக்கணும்ங்கிற அளவு மாறிட்டியே என்ன டி விஷயம்?”
“இதென்ன கொடுமையா இருக்கு. பண்ணினாலும் தப்பு பண்ணலைனாலும் தப்புனு சொல்றியே!”
“பேச்சை மாத்தாத என்னவோ ஒரு வித்தியாசம் தெரியுது.”
“ஏன் டி நீ வேற! மேட்ச்க்கு போறப்போ வர்ற ப்ளேயர்செல்லாம் பார்த்தா தங்களை அவ்வளவு நல்லா கவனிச்சுக்குறாங்க, நான் மட்டும் இப்படியிருக்கேனேனு தோணிச்சு. அதான் அம்மு.”
“நிஜமாவா?!”
“அடிப்போடி. வேற என்ன காரணம் இருக்க போகுது. போய் வேலையைப் பாரு போ.”
மறுநாள் கலைச்செல்வி வந்தது முதல் மருமகள்கள் இருவருக்கும் தலைப் பிண்ணி விடுவது மருதாணி வைப்பது என மொத்த நேரமும் அவர்களோடு தான் கழிந்தது.
“எங்களுக்கு இதெல்லாம் பண்றது பெருசில்ல நாளைக்கு உன் மருமகளுக்கு இப்படி பண்ணனும் என்ன அத்தே?”
“எனக்கு இருக்குறதே ஒரே புள்ளை அப்பறம் வர்றவளை பார்த்துக்குறதை விட எனக்கு என்ன வேலை இருக்க போகுது சொல்லு.”
“இப்போ சொல்ற. அதை கடைப் பிடிக்குறது தான் கஷ்டம்.”
“வந்துட்டா நூத்துக் கிழவி. சரி தான் போடி”, என்றதில் பெண்கள் இருவருமாய் சிரித்தனர்.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
5 comments
Lovely
👌👌👌👌👌💞💞💞💞😍😍😍
Super💕
Very nice.
🥰🥰🥰🥰