ஓரமாய் இருந்த நாற்காலியில் அமர்ந்தவள் புடவையின் நுனியை கைகளுக்குள் சுற்றிக் கொண்டிருந்தாள்.சில நிமிடங்களில் கதவு திறக்கும் ஓசையில் சட்டென எழுந்து நின்றவளை கவனித்தவனாய் கதவை பூட்டிவிட்டு வந்தான்.

என்ன செய்வதென தெரியாமல் ஒரு நொடி நின்றவள் பின் மெதுவாய் அவனை நோக்கி நகார்ந்து அவனது பாதம் பணிந்தாள்.

“ஹே..”,என்றவன் தோள்பற்றி பிடித்து நிமிர்த்தி நிறுத்தினான்.

“தேங்க் யூ பார் எவ்ரிதிங்..”,என்றவள் கண்ணீர் மல்க கைகூப்பி நின்றிருந்தாள்.

இரு கண்களையும் அழுத்தித் துடைத்தவன் ஆதரவாய் தோள் தட்டினான்.

“தூக்கம் வருதா?”

“இ..இல்லை..”

“சரி வா..”,என்றவன் பால்கனியின் கதவைத் திறக்க வெளிக் காற்றில் சற்றே இலகுவாய் உணர்ந்தாள்.

“இங்க உட்..”,என்றவன் வாக்கியத்தை முடிப்பதற்குள் ஊஞ்சல் அருகே சென்றவளை கவனித்தவனாய் ஒரு நாற்காலியை எடுத்து ஊஞ்சலுக்கு எதிர்புறமாய் போட்டு அமர்ந்தான்.

“சாப்டியா?”

“ம்ம்..”

“நான் கொஞ்சம் அந்த மாதிரியே இருந்து பழகிட்டேன்..”

“?!”

“சட்டுனு கோவம் வந்துரும்..கன்ட்ரோல் பண்ண நினைச்சது இல்ல.இனியும் நினைப்பேனானு தெரியல..”

“???”

“நீ பயப்படுறதை முடிஞ்சா கம்மி பண்ணிக்கோ..”,என்றதைக் கேட்டவள் அசடு வழிந்து முழித்தாள்.

“சின்னதுல இருந்தே இப்படி தானா நீ?”

“ம்ம் ஆமா..கொஞ்சம் அம்மா மாதிரி..அவா ரொம்ப சாது.”

“அப்பறம் எப்படி லவ் மேரேஜ்?”

“ஆப்போஸிட் போல்ஸ் அட்ராக்ட் இல்லையா அப்படி தான்”,என்றவள் லேசாய் புன்னகைத்தாள்.

“அப்பறம்..”

“சொல்லுங்கோ?”

“உனக்கும் எனக்கும் வயசு வித்தியாசம் அதிகம்..”

“…”

“உனக்கு உன் கல்யாணத்தைப் பத்தி எதிர்பார்ப்புகள் இருந்திருக்கலாம்..”,என்றவனின் பேச்சை தடை செய்தவளாய்,

“அப்படியெல்லாம் நேக்கு எதுவும் இருந்ததில்ல.இருந்திருந்தாலும் இதுக்கு அப்பறம் அதைப் பத்தி நாம பேச வேண்டாமே.”,என்றதற்கு சம்மதமாய் தலையசைத்தான்.

“ஒண்ணு கேட்கலாமா?”

“ம்ம் கேளு..”

“நீங்க எம் எஸ் படிச்சுருக்கேள் தான?!”,ஆச்சரியமாய் ஒரு பார்வை வீரேந்திரனிடத்தில்.

“அது காவ்யா சொல்லிருக்கா..உங்களைப் பத்தி நிறைய பேசுவா.நான் உங்களைப் பார்த்தது தான் இல்லை.ஆனால் தினமும் உங்க புராணம் தான் பேசுவா.”

“ஓ..சரி ஏன் கேட்ட?”

“அது..இல்ல அப்பறம் ஏன் இப்படி மாறிட்டேள்..”

“ஏன் பிடிக்கலையா?!”

“!!!”

“அடியாள் மாதிரி பிடிக்கலை இல்ல..”

“நான் எப்போ அப்படியெல்லாம் சொன்னேன்..”

“அப்போ??”

“அது..வந்து..”

“என்னைப் பார்த்து பேசு..”,என்றவனின் குரலில் விழி உயர்த்தியவளாய்,

“பிடிக்கலைனு இல்ல..ஆனாலும் ஏன்னு தெரிஞ்சுக்கலாமேனு கேட்டேன்.”,அவளின் மழுப்பலான பதிலில் சற்று சத்தமாகவே சிரித்தவன் காலை நீட்டி பின் சாய்ந்த வண்ணம் கை இரண்டையும் தலைக்கு கொடுத்து அமர்ந்தவாறு அவளைப் பார்த்தான்.

“எப்போ எந்த இடத்தில் ஆரம்பிச்சதுனு நியாபகம் இல்ல..ஆனால் வீரேந்திரனுக்கு அடையாளம் இப்போ இது தான்.நான் போற பாதை தப்பா இருக்கலாம்.ஆனால் நிச்சயமா தப்பான எந்த தொழிலும் பண்ணல.

எனக்கும் என்னை சார்ந்தவங்களுக்கும் இது தான் மிகப் பெரிய பாதுகாப்பு.இதுக்காக தான் நான் கல்யாணத்தைப் பத்தி யோசிக்காமயே விட்டுட்டேன்.தேவைனும் தோணல.

வர்ற பொண்ணுக்கு இதெல்லாம் செட் ஆகுமானு எல்லாம் யோசிச்சுட்டு இருக்க முடியாதே.ஆனால் நம்ம கல்யாணம் ரொம்பவே எதிர்பாராதது.

நேத்தில் இருந்து உன் பயம் தான் எனக்கு பெரிய யோசனையா இருக்கு.நீ கொஞ்சம் கொஞ்சமா இந்த வாழ்க்கைக்கு பழகிகிட்டா குறைந்தபட்சம் தினம் தினம் தேவையில்லாத பயத்தோடேயே வாழறதை அவாய்ட் பண்ணலாம்.”

“…”

“என்ன எதுவும் பேசமாட்ற?!”

“திடீர்னு நடந்த கல்யாணமா இருந்தாலும் எனக்காக ரொம்ப யோசிக்குறேள்.அதுமட்டுமில்லாம நீங்க கொடுத்துருக்குற வாழ்க்கை கனவிலும் நினைச்சு பார்க்காதது.நிச்சயமா நான் இப்படியே இருக்க மாட்டேன்.சூழ்நிலைக்கு ஏத்தா போல என்னை மாத்திப்பேன்னு அம்மா அடிக்கடி சொல்லுவா.

உண்மையா நேத்து இருந்ததை விட இன்னைக்கு நான் உங்களோட இவ்வளவு பேசுற அளவு இருக்கேனே.என்னால உங்க நிலைமையை புரிஞ்சுக்க முடியறது.எந்த நிலைமையிலும் உங்களை நீங்க பத்திரமா பார்த்துக்கோங்கோ அது மட்டும் போதும் நேக்கு.”

“தேங்க்ஸ்..என் கல்யாணத்தை பத்தி அப்பா அம்மாவுக்கு அப்பறம் அதிகமா கவலைப்பட்ட ஆள் உங்க அப்பாதான்.கடைசியில் அவரு பொண்ணு தான் எனக்கு பொண்டாட்டியா வரணும்னு இருந்திருக்கு.”

“…”

“உனக்கு இங்க என்ன தேவைனாலும் என்கிட்ட சொல்லு.இல்லைனாலும் அம்மாகிட்ட கேளு.உன் போன் எங்கே நேத்தில் இருந்து நீ யூஸ் பண்ணின மாதிரியே தெரியலையே?”

“அது என் பேக்ல தான் இருக்கும்.அப்பா மட்டும் தான் போனில் பேசுவார்.அதான் நேத்தில் இருந்து வேலையில்லாமல் இருக்கு.”

தன் போனை எடுத்து அவளிடம் கொடுத்தவன்,”உன் நம்பர் சேவ் பண்ணி கொடு.நான் மெசெஜ் பண்ணி விடுறேன்.மார்னிங் சார்ஜ் போட்டு சேவ் பண்ணிக்கோ.”

“ம்ம் சரி.”

“ரொம்ப நேரமாச்சு தூங்கலாமா?”

“ம்ம்..”,என்றவள் அவனோடு சேர்ந்து அறைக்குள் நுழைந்தாள்.கட்டிலின் ஒரு ஓரத்தில் சென்று அமர்ந்தவள் தயக்கமாய் அவனை ஏறிட அவளின் நிலை உணர்ந்தவனாய்,

“நிம்மதியா தூங்கு..குட் நைட்”,என்றவன் புன்னகைக்க குட் நைட் என்று கூறியவள் அவனுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டாள்.

இரவு விளக்கொளியில் விட்டத்தை வெறித்த வண்ணம் படுத்திருந்தவன் தன்னருகில் உறங்குபவளையே பார்த்திருந்தான்.

பயத்தையும் மீறி தன்னோடு சகஜமாக பழக எண்ணும் அவளின் குணம் பிடித்திருந்தது.இதுதான் இனி தன் வாழ்க்கை என்று ஏற்றுக் கொண்டு அதற்காக அழகாய் அவளெடுக்கும் முயற்சிகளும் பிடித்திருந்தது.

கணபதியின் மகள் என்பதால் ஏற்பட்ட திருமணம் என்பதை இவனுக்குமே கடினப்பட்டு நியாபகம் வைத்துக் கொள்ள வேண்டியதாய் இருந்தது.தனக்கான உறவு என்பது பிரதானமாய் தெரிய மற்ற காரண காரியங்கள் எல்லாம் தேவையில்லாமலே போய்விட்டிருந்தது.

தூக்கத்தில் சற்றே புரண்டு நிமிர்ந்து படுத்தவள் அவன் இன்னும் விழித்திருப்பதைக் கண்டு கண்களைத் திறக்க நினைக்க,

“ஷ்…”,என்றபடி லேசாய் தட்டிக் கொடுத்தவனைப் பார்த்து தூக்கத்திலே புன்னகைத்தவாறே முழுவதுமாய் உறங்கிப் போனாள்.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode