காலையிலேயே அலறிய செல்போனின் அழைப்பை ஏற்று காதில் வைத்த வீரேந்திரன் கேட்ட விஷயத்தில் புருவங்கள் முடிச்சிட்டன.

“சரி நான் பார்த்துக்குறேன்”,என்றவன் யோசனையாகவே படுத்திருக்க ஏழிசை இன்னுமாய் அவனருகில் படுத்து தூக்கத்தைத் தொடர்ந்தாள்.

அலுவலகத்திற்கு வந்தவன் ஷ்யாமிடம் மேலும் விவரங்களைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

“அவனுக்கு இங்க என்ன வேலை ஷ்யாம்?”

“அதான் சார் புரியல..இன்னும் ஆறு மாசத்துல ஒரு பெரிய கவர்மெண்ட் டென்டர் வரப் போறதா பேச்சு இருக்கு.அதை எடுக்கணும்னு நினைக்குறானோனு தோணுது.”

“அவனால இந்தியாகுள்ள எங்கேயுமே தொழில் பண்ண முடியாம பண்ணிட்டோமே எந்த தைரியத்தில் வரான்.அவன் மேல ஒரு கண்ணு இருக்கட்டும் ஷ்யாம்.”

“ஷுவர் சார்.”,என்றவன் ராஜுவை நோக்கிச் சென்றான்.

“சொல்லுங்க ஷ்யாம் சார் யார் அவன் ஜான் என்ன பெரிய இவனா?அவனை எல்லாம் அண்ணையா எதிரியா வளர விடலாமா?ம்ம் சொல்லுங்க அறுத்துப் போட்டு வந்துருவோம்.”

“ராஜு..இதுக்காக தான் உன்னைக் கூப்பிட்டதே..தேவையில்லாத எந்த வேலையும் பண்ணி வைக்காதீங்க.அவனை சார் பார்த்துப்பார்.”

“யாரு சார் அவன்?!ரொம்ப வருசமா குடைச்சல் கொடுத்துட்டு இருக்கான்..நீங்க ஒரு தடவை அண்ணையாவோட மும்பை போனதுக்கு அப்பறம் தான இவன் பிரச்சனை”

“ம்ம்..அமெரிக்காவை சேர்ந்தவன் இந்த ஜான்.பத்து வருஷம் முன்னாடி மும்பையில் அவனோட தொழிலை ஆரம்பிச்சவன் கொஞ்ச நாள்லேயே மிகப் பெரிய புள்ளியா மாறிட்டான்.அத்தனையும் இல்லீகல் பிஸினஸ்.

அப்போ நம்மளோட பிஸினஸ் விஷயமா சார் மும்பை போயிருந்த நேரத்துல அவர் தங்கின ஹோட்டல்ல தான் அவனும் இருந்தான்.

அன்னைக்கு நைட் நம்ம சாரோட ரூம் கதவு வேகமா தட்டுற சத்தம் கேட்டு கதவைத் திறந்தா ஒரு பொண்ணு பயத்தோட அழுதுகிட்டே நின்னுட்டு இருந்தா.நானும் பக்கத்து ரூம்ல இருந்ததுனால சத்தம் கேட்டு வெளியே வந்தேன்.

அந்த பொண்ணு ஒரே அழுகை என்னை காப்பாத்துங்கனு எனக்கும் சார்க்கும் என்ன பண்றதுனே புரியல.என்ன பிரச்சனைனு தெரியாம என்ன பண்ண முடியும்னு நிக்கும் போது தான் அந்த ஜானை பார்த்தோம்.

நடமாடும் மலை மாதிரி இருந்தான்.கழுத்து வரை போதை எதிரில் யார் வந்தாலும் கொன்னுட்டு போயிட்டே இருப்பேன்ங்கிற மாதிரியான பார்வை.

அந்த பொண்ணு இன்னுமாய் பயந்து போய் நின்னுது.வந்தவன் எங்களை எல்லாம் ஒரு மனுஷனா கூட மதிக்காம அந்த பொண்ணு தலை முடியைப் பிடிச்சு இழுத்துட்டு போக நம்ம சார் தான் அவனைத் தடுத்தார்.

பேசுறதை கேட்குற நிலைமைல அவன் இல்லைனு புரிஞ்சு மூக்கிலேயே ஒரு குத்து விட்டார்.இருந்த போதைக்கு அவன் அப்படியே மயங்கிட்டான்.நாங்க அந்த பொண்ணை கூட்டிட்டு ரூம்குள்ள வந்துட்டோம்.

“ரொம்ப ரொம்ப நன்றி சார்.”

“யார் நீங்க?இங்க எப்படி வந்தீங்க..”,என்றபடி தண்ணீர் பாட்டிலை அவள் முன் நீட்டினான் வீரேந்திரன்.

“சார் நான் ஜனலிஸ்ட் ஸ்மிர்தி..”

“வாட்?”

“யெஸ் சார்.நீங்க இப்போ அடிச்சீங்களே அவன் பண்ணாத தப்பே இங்க கிடையாது.கவர்மெணேட்ல சிலரும் அதுக்கு உடந்தை.

ட்ரக்ஸ் சிலை கடத்தல் ஆர்கன் திருட்டு மட்டுமில்லாம ஹுயூமன் டிராபிக்கிங் வரை பண்றான் சார்.அத்தனையும் சின்ன சின்ன குழந்தைங்க.

அவன் என்ஆர்ஐ ங்கிறதால இங்க அனாதை ஆசிரமங்களைத் ததத்தெடுக்குறதா சொல்லி அங்க இருக்குற ஆண் பிள்ளைகள்கிட்ட ஆர்கன் திருடுறதும் பெண் பிள்ளைங்களை நாடு கடத்துறான் சார்.

இங்க இருந்து போற பொண்ணுங்க எந்த நாட்டுல என்னென்ன தொழில்ல எந்த நிலைமையில் இருக்காங்க,இருக்காங்களா இல்லையானு கூட தெரியாது சார்.”

“இதெல்லாம் உங்களுக்கு எப்படி?”

“அவன் அநியாயம் ஆசிரமத்துல இருக்குறவங்களுக்கே தெரியாது சார்.குழந்தைங்களைத் தத்தெடுக்குறேன்னு போலியா ப்ரேண்ட்ஸை தயார் பண்ணி வெளியே எடுத்துடுறான்.அதுக்கப்பறம் அவங்க ஆட்கள் மத்த வேலையெல்லாம் பாத்துக்குறாங்க.

எனக்கு தெரிஞ்ச ஒரு அக்கா ரொம்ப வருஷமா ஆசிரமத்துல சமையல் வேலை பண்றாங்க.கொஞ்ச நாளாக நிறைய பசங்களைத் தத்தெடுத்துட்டு போறாங்க இப்படியெல்லாம் இதுவரை நடந்ததே இல்லைனு என்கிட்ட சொன்னப்போ தான் எனக்கும் எதோ தப்பா பட்டுது..

விஷயம் வெளியே தெரியாம எல்லா விவரத்தையும்  கலெக்குட் பண்ணேன்.அந்த உண்மையெல்லாம் போலீஸ்கிட்ட சொல்லலாம்னு கமிஷ்னர்கிட்ட போனப்போ தான் தெரிஞ்சுது அந்த ஆளே இவனுக்கு கையாள்னு.

என்னை இவன்கிட்ட மாட்டிவிட்டான் சார்.மூணு நாளா இவனோட தான் இருக்கேன்.சித்திரவதை சார்.”,என்றவள் முகத்தை மூடி கதறி அழுதாள்.தேற்றுவதற்கு கூட தோன்றாமல் வீரேந்திரனும் ஷ்யாமும் விழித்திருந்தனர்.

“இன்னைக்கு அளவுக்கு அதிகமாவே குடிச்சுட்டான்.அந்த சந்தர்பத்தை யூஸ் பண்ணி தான் வெளில வந்துட்டேன்.எனக்கு எதுவும் ஆனால் கூட பரவாயில்ல அவனோட முகத்திரையை கிழிக்கணும் சார்.சார் பேப்ப…”,என்றவள் சுற்றும் முற்றும் பார்வையைச் சுழற்ற ஷ்யாம் வேகமாய் பேப்பர் பேனாவை அவளிடம் கொடுத்தான்.

அதில் ஒரு முகவரியை எழுதியவள்,”இது அந்த ஆசிரமத்துல வேலை செய்யுறவங்க வீடு சார் மொத்த விவரங்களோட காப்பியும் ஒரு பென்ட்ரைவ்ல போட்டு அவங்ககிட்ட கொடுத்துருந்தேன்.

இந்நேரம் அவங்களுக்கும் என்ன வேணும்னாலும் நடந்துருக்கலாம்.அவங்க வீட்டு டீவிக்கு பின்னாடி அந்த பென்ட்ரைவ் இருக்கும்.

ஒரு வேளை அது உங்க கைக்கு கிடைச்சதுனா அதை எப்படியாவது சீஎம்கிட்ட சேர்த்துருங்க அவர் பிஏ முதற்கொண்டு இவனுக்கு கையாளா இருக்க வாய்ப்பு இருக்கு சார்.பார்த்து பத்திரம் சார்.”

“கவலைப்படாதீங்க கண்டிப்பா நான் என்னால முடியுறதை பண்றேன்.நீங்க மொதல்ல வாங்க ஹாஸ்பிட்டல் போலாம்.”

“வேணாம் சார்.எப்படியும் என்னை உயிரோட விட மட்டான்..”

“என்னை நம்பி வந்துட்டீங்க தைரியமா இருங்க..ஷ்யாம்..”

“சார்..”

“நாம இங்க இருக்குறது நல்லதில்ல கிளம்பலாம்..நீ இவங்களை கூட்டிகிட்டு மைசூருக்கு கிளம்பு.கணக்குகிட்ட சொல்லி பசங்க கொஞ்ச பேரை வர சொல்லு.நான் பென்ட்ரைவை எடுத்துட்டு வரேன்.”,என்றவன் அங்கிருந்து கிளம்பி வெளியே வந்த நேரம் கேரிடரில் ஜான் இல்லை.”

தலைவனைக் காணாமல் தேடி வந்த அவனது ஆட்கள் மயங்கியிருந்தவனைக் கண்டு பதறிப்போய் மேல் தளத்தின் அவனது அறைக்கு அழைத்துச் சென்றனர்.

மயக்கம் தெளிந்தவனின் பார்வைக்குக் கட்டுபட்டு சீசீடிவி காட்சிகளை அவன் ஆட்களில் ஒருவன் காட்டிட அதில் தெரிந்த வீரேந்திரனைக் கொல்லும் வெறி எழுந்தது.

இரவோடு இரவாக அந்த ஜனலிஸ்ட் கூறிய வீட்டிற்குச் சென்று பென்ட்ரைவை எடுத்துக் கொண்டு மைசூருக்கு கிளம்பியிருந்தான்.

ஜானின் ஆட்கள் இங்கு மும்பையே அலசிக் கொண்டிருக்க வீரேந்திரனோ அடுத்தகட்ட நடவடிக்கையில் சிந்தனையை தொலைத்திருந்தான்.

இந்தப் பிரச்சனையின் பிறகே வீரேந்தரனின் பலம் பன்மடங்காய் அதிகரித்திருந்தது.ஆள் பணம் அரசியல் என அனைத்து வகையிலும் ஜானை எதிரிக்கத் துணிந்திருந்தான்.

மும்பையே அலறவிட்டான் என்று தான் கூறவேண்டும்.ஜான் அவனுக்கு எதிராக ஒரு அடி எடுத்து வைப்பதற்குள் வீரேந்திரனோ ஜானின் அஸ்திவாரத்தையே ஆட்டம் காண வைத்திருந்தான்.

ஜானின் தொழில்களை மொத்தமாய் முடக்கி ஆதாரங்களை வைத்து அவனை கைது செய்யவே திட்டமிட்டிருக்க அதற்குள் விஷயமறிந்த ஜான் இந்தியாவை விட்டுப் பறந்திருந்தான்.

பல மில்லியன்கள் நஷ்டம் என்பதைக் கடந்து தன்னை எதிர்த்தவனை அடியோடு வெறுத்தான் ஜான்.அவனை எப்படியாவது பழி தீர்க்க வேண்டி அவன் எடுத்த முயற்சிகள் எல்லாம் விழலுக்கு இரைத்த நீராய் போனது.

அத்தனையையும் எதிர்கொண்டு சிறு பாதிப்பு கூட இல்லாமல் இன்னும் இன்னும் நிமிர்ந்து நின்றான் வீரேந்திரன்.இந்திய அளவில் அவன் பெயர் பேசப்பட்டதற்கு முக்கிய காரணமே இந்த ஜான் தான் என்பது மறுக்க முடியாத உண்மை.

அனைத்தையும் கூறி முடித்த ஷ்யாமின் முகம் இன்னுமும் தெளிவில்லாமல் தான் இருந்தது.

“ஷ்யாம் சார் இவனெல்லாம் ஒரு ஆளா..கவலைப்படாதீங்க..”

“இல்ல ராஜு இத்தனை வருஷம் கழிச்சு அவன் இந்தியாக்கு வந்துருக்கான் அதுவும் பெங்களூரில் தங்கியிருக்கான்னா..ஏதோ சரியா படல..இன்னும் அதிக கவனமா இரு ராஜு..”

“கண்டிப்பா சார்..”,என்றவனுக்குமே சிறிது கலக்கம் தோன்றிவிட்டிருந்தது.

மாலை வீட்டிற்கு வந்த வீரேந்திரனின் முகமே சரியில்லாமல் இருக்க ஏழிசை பயந்து போனாள்.

“என்னாச்சு ஏதும் பிரச்சனையா உங்களை இப்படியெல்லம் பார்த்ததே இல்லையே..”

“ஒண்ணுமில்ல இசை..ஏதோ யோசனை..நான் அதெல்லாம் பார்த்துப்பேன்..”,என்றவன் நொடியில் முகத்தை மாற்றிக் கொண்டு தன்னவளோடு கதை பேச ஆரம்பித்திருந்தான்.

நாட்கள் எந்த யோசனையுமின்றி இறக்கைக் கட்டிக் கொண்டு பறந்தன.திவ்யா விஷாலின் நிச்சயதார்த்ம் முடிந்து ஒரு மாதம் கடந்திருக்க குழந்தை பிறந்து மூன்றாவது மாதத்தில் திருமண தேதி குறிக்கப்பட்டிருந்தது.நிறைமாத வயிற்றோடு தோட்டத்தில் கணவனின் கரம் பற்றி நடந்துக் கொண்டிருந்தாள் ஏழிசை.

“மாமி நாள் நெருங்க நெருங்க டென்ஷனா இருக்கு டி..”

“நீங்களே இப்படி சொன்னா நான் என்ன பண்ணுவேன்”,என்றவளின் முகமுமே தெளிவில்லாமல் தான் இருந்தது.

“இசை பயப்படுறியா?!”

“தெரியலை வீரா எதோ ஒரு மாதிரி இருக்கு நேக்கு.இன்னைக்கு ஒரு நாள் என்னோடவே இருக்கேளா?”

“இதெல்லாம் நீ கேட்கணுமா இசை..பேசாம வா ஹாஸ்பிட்டல் போயிடலாம் எப்படியும் இரண்டு நாள்ல டேட் சொல்லிருக்காங்கல..”

“அதெல்லாம் வேண்டாம் நீங்க என் கூடவே இருங்கோ போதும்.”

ராகவிற்கு படிப்பு முடிந்திருக்க கடைசி பரீட்சையை முடித்த கையோடு நாளை கிளம்பி வருவதாகக் கூறியிருந்தான்.திவ்யாவும் டெலிவரி தேதியன்று வந்து விடுவதாக கூறியிருக்க உமையாளும் ரவியும் பெங்களூருவில் அவளது வீட்டிற்குச் சென்றிருந்தனர்.

கோட்டையே வெறித்திருக்க ஏழிசையை தனியாய் விட மனமில்லாமல் அவளோட இருந்தான் வீரேந்திரன்.காலை பத்து மணியளவில் தனதறைக்குச் செல்வதற்காக படியில் காலை வைத்தவளுக்கு இடுப்பில் சுரீரென வலியெடுக்க ஒரு நொடி கைப்பிடியை அழுந்தப் பிடித்துக் கொண்டாள்.

வீரேந்திரன் அருகில் மறுபுறம் திரும்பி அழைப்பை ஏற்று பேசிக் கொண்டிருக்க அடுத்த அடி கூட எடுத்து வைக்க முடியும் என்று தோன்றாமல் தன்னவைனை அழைத்து விட்டிருந்தாள்.

“வீரா..”,பல்லைக் கடித்து வெளிவந்த அவளது அழைப்பில் அப்படியே ஓடியவன் தன் கைவளைவிற்குள் அவளை தாங்கிக் கொள்ள ஏழிசையோ அவனது சட்டையை இறுகப் பற்றிக் கொண்டாள்.

“இசை என்ன டி பண்ணுது?”

“பிரசவ வலி மாதிரி தான் தோன்றது..அம்மாவை கூப்பிடுங்கோ”,என்றவள் வயிற்றை பிடித்துக் கொள்ள பர்வதத்தை அவன் அழைத்த கர்ஜனையில் வேலைகாரர்கள் அத்தனை பேரும் கூடிவிட்டிருந்தனர்.