நான்கு மாதங்கள் கடந்து விட்டிருந்தது.வீரேந்திரனின் உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை பின்னடைவும் இருக்கவில்லை.

திக்கித் திணறி தொழில் விஷயங்களை கையாண்டாள் ஏழிசை.படித்த படிப்பும் ஷ்யாமின் வழிகாட்டுதலும் பெரும் உதவியாய் இருந்தது.

ரவி வாரம் ஒரு முறை வந்து அனைவரையும் பார்த்துவிட்டு சென்றான்.தாரகை ஆறு மாதம் முடிவடைந்து மற்ற உணவுகளும் உட்கொள்ள ஆரம்பித்திருந்தாள்.பர்வதமும் ராஜராஜனும் மொத்தமாய் பேத்தியோடு தான் ஒவ்வொரு நாளையும் செலவிட்டனர்.

தாயின் அன்பும் தந்தையின் அரவணைப்பும் இல்லாத பேத்தியைப் பார்க்க பார்க்க மனம் வலித்தது பெரியவர்களுக்கு.ஏழிசைக்கு மகளைப் பார்க்கும் போதெல்லாம் இன்னுமின்னும் அவளது வீரா தான் நினைவில் வந்தான்.

உடல் மெலிந்து கண்கள் ஒளியிழந்து நடமாடுபவளைப் பார்க்கும் திறன் தான் யாருக்கும் இல்லாமல் போயிருந்தது.பல கால தாமதத்திற்குப் பின் அந்த டென்டருக்கான முடிவுகள் அன்று அறிவிக்கப்படுவதாய் கூறியிருக்க காலையிலேயே பூஜையை முடித்தவள் வீரேந்திரனிடம் பேசிவிட்டு கிளம்பினாள்.

அது தனக்கு கிடைக்குமோ கிடைக்காதோ நிச்சயமாய் அந்த ஜானிற்கு கிடைக்கக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்தாள்.

அதே உறுதியுடன் தான் கொடேஷனையும் ப்ளானையும் போட்டுக் கொடுத்திருக்க இருந்தாலும் ஒருவித கலக்கம் இருந்து கொண்டு தான் இருரந்தது.

ஜானின் அகம்பாவ பார்வையோ இன்னுமின்னும் அவளை பயமுறுத்தியது.

“தேவையில்லாத வேலை..நீ இங்க வந்துருக்குறது..எப்படியும் என்கிட்ட தோத்து தான் போக போற ப்யூட்டிபூல்..”,என்றவனை முறைத்தாள் ஏழிசை.

“இத்தனை மாசமா நான் ஏன் அமைதியாவே இருக்கேன்னு உனக்கு தோணலையா..உன் புருஷனையே ஒரு செகண்ட்ல சாய்ச்சவனுக்கு உங்க குடும்பத்தை அழிக்க முடியாதா என்ன?”

“…”

“முதல்ல எனக்கு நஷ்டமான பணத்துக்கான பதிலடி தான் இந்த டென்டர்.அடுத்ததா தான் என்னை அவமான படுத்தினவனை பழி வாங்குறது.இப்போ இங்க ரிசல்ட் தெரிஞ்சவுடனே என்னோட அடுத்த ப்ளான் என்னனு கேட்குறியா?”

“…”

“நீயும் நானும் மட்டுமா என்னோட க்ரூஸ்(Cruise)ல ஒரு வாரம்..வெற்றியை கொண்டாடுறது ரொம்ப முக்கியம் இல்ல..”,என்றவனின் பார்வையில் கொதித்துக் கொண்டிருந்தனர் ஷ்யாமும் ராஜுவும்.

“அடுத்ததா உன்னை கொண்டு வந்து உன் புருஷன் முன்னாடி போடும்போது அவன்கிட்ட நிறைய பேசணும்.எழுந்து வந்து உன்னை காப்பாத்த முடியாம போனதுக்காக அவன் உள்ளுக்குள்ளே கதறித் துடிப்பான் இல்ல..அதை பார்க்கணும்.”

“இதுக்கெல்லாம் முதல் நீ உயிரோட இருக்கணும்”,என்றவளைப் பார்த்து சத்தமாய் சிரித்தான் ஜான்.

“My husbund will kill you for me just count your days good luck”,என்றவளின் கர்வப் பார்வையில் எரிமலையென எழுந்த கோவத்தோடு டென்டர் முடிவுகளை எதிர்நோக்கி அடங்கி அமர்ந்திருந்தான்.

மனதிற்குள் கைக் கூப்பி கடவுளை ஒவ்வொரு நொடியும் வேண்டிக் கொண்டிருந்தாள்.தனக்கு கிடைக்க வேண்டும் என்றல்ல ஜானிற்கு கிடைத்து விடக் கூடாது என்று.

ஆனால் ஷ்யாமோ நிச்சயமாய் தங்களுக்குத் தான் டென்டர் கிடைக்கும் என்பதில் உறுதியாய் இருந்தான்.வீரேந்திரனின் சிஷ்யனாயிற்றே அவனது கணிப்பு நிச்சயமாய் தவறாய் போகாது என்று மலை போல் நம்பிக்கை கொண்டிருந்தான்.

அதைவிட ஏழிசையின் இந்த நான்கு மாத உழைப்பும் அவளின் வேதனையும் நிச்சயம் கடவுளின் மனதையும் கரைக்கும் என்றே தோன்றியது.

“இந்த டென்டரை கைப்பற்றி இருப்பவர்கள் சேதுபதி க்ரூப் ஆப் கம்பனீஸ்”,என்றதும் அங்கிருந்த அத்தனை பேரின் முகமும் ஆச்சரியத்தில் இருக்க ஜானோ அடிபட்ட மிருகமாய் முஷ்டியிருக அமர்ந்திருந்தான்.

ஏழிசைக்கு வெற்றியெல்லாம் பொருட்டாக இருக்கவில்லை.நீ தோற்றுவிட்டாய் அது போதும் எனக்கு என ஜானைப் பார்த்தவள் கம்பீரமாய் எழுந்து வெளியே செல்ல அவளைப் பின் தொடர்ந்தவனாய் ராஜுவையும் ஷ்யாமையும் தள்ளி விட்டு அவளது முடியைக் கொத்தாய் பிடித்திருந்தான்.

அவனது ஆட்கள் ராஜுவையும் ஷ்யாமையும் பிடித்துக் கொள்ள அங்கிருந்த யாருக்கும் ஜானை நெருங்கவே பயமாகி விட்டிருந்தது.

“உன்னை என்ன பண்ணினா அவனுக்கு வலிக்குமோ அதை விட ஆயிரம் மடங்கு வலியை உனக்கு காட்டுறேன்..”,என்றவன் அவளை முன்னிழுக்க,

“உனக்கெல்லாம் அவ்வளவு தான் தைரியம்னு நேக்கு நல்லாவே தெரியும்.உன் பலத்துக்கு நிகரா சண்டை போடத் தெரியல..பலமே இல்லாத என்னை பழிவாங்கி உன் வெறி தீர்த்துப்பியா..”,என்றவள் அவனது பிடியிலிருந்து திமிறிக் கொண்டிருந்தாள்.

“ஹவ் டேர் யூ..”

“ஐ அம் டேர் டு டெல் த ட்ரூத் யு ஆர் அ கவர்ட்(Coward)”,என்றவளின் கண்கள் அவனுக்கு மிச்சமாய் கனன்று கொண்டிருந்தன.

“யூ..”

“அவ்வளவு திமிர் இருந்தா இப்போ என்னை விடு நான் எங்கேயும் போக மாட்டேன்.வீரேந்திரனை தோற்கடிச்சுட்டு வந்து என் மேல கை வை..புரியுதா?”,என்றவளைப் பார்த்து பயங்கரமாய் சிரித்தான்.

“அவன் வரப் போறதுமில்ல என்னை எதிர்க்க போறதும் இல்லை”

“பார்க்கலாம்..அவர் உன் முன்னாடி பழைய மாதிரி வந்து நிக்குற அன்னைக்கு அவரை வீழ்த்திட்டு வந்து அவர் பொண்டாட்டி மேல கை வை.”,என்றவள் அவன் கையைத் தட்டிவிட்டு விட்டு வேகமாய் காருக்குச் சென்று விட்டிருந்தாள்.

தலைமுடி கலைந்து கோபத்தில் எரிந்து கொண்டிருந்தவளைப் பார்க்கவே சற்று பயமாய் தான் இருந்தது ஷ்யாமிற்கு.அதை விட அவள் ஜானிடம் கூறியிருக்கும் விஷயம் இதெல்லாம் சாத்தியமா!கடவுளுக்கே வெளிச்சம்.

நேராய் வீட்டுக்குச் சென்றவள் வீரேந்திரனின் அறைக்குள் சென்று கதவைச் சாற்றிக் கொண்டாள்.மகளைக் கூட பாராமல் சென்றவளின் வேகத்தில் பயந்தவர்களாய் பெரியவர்கள் அவளுக்காக வாசலில் காத்திருந்தனர்.

“வீரா..”,என்றவளுக்கு அத்தனை நேரம் அடக்கி வைத்த கண்ணீரும் அருவியாய் கொட்டத் தொடங்கியது.குழந்தையென துடைக்கத் துடைக்க கண்ணீர் வழிந்து கொண்டு இருக்க வீரா வீரா என்று அரற்றிவளின் குரல் அப்பெயரின் சொந்தக்காரனை சற்றும் அசைத்ததாய் தெரியவில்லை.

“எனக்காக வந்து நீங்க அவனை கேள்வி கேட்காமல் போனால்…”,அதற்கு மேல் எதையும் கூற விரும்பாதவளாய் வாயை மூடி நின்றாள்.

“ஷ்யாம் சார்..அவன் இன்னையோட ஒழிஞ்சான்..இதுக்கு மேல பொறுக்க மட்டும் சொல்லாதீங்க..”,என்ற ராஜு ஷ்யாமின் பதிலைக் கூட கேட்காமல் அழைப்பைத் துண்டித்திருந்தான்.

ஷ்யாமிற்கோ என்ன செய்வதென்றே தெரியாத நிலை.ராஜு ஏதேனும் செய்யப் போக அது ஏழிசைக்கு பிரச்சனையாய் வந்து விடுமோ என்ற கவலை மட்டும் தான் தலை தூக்கியிருந்தது.

அன்று கோட்டையின் பாதுகாப்பு இரட்டிப்பாய் பலப்படுத்த பட்டது.உறுப்பினர்கள் அனைவரையும் கண்கொத்தி பாம்பாய் பாதுகாவலர்கள் சூழ்ந்து இருந்தனர்.

அடிப்பட்ட பாம்பு எப்போது பழி தீர்க்கும் என்று தெரியாமல் நிமிடங்கள் எல்லாம் நரகமாய் இருந்தது ஏழிசைக்கு.

எதுவானாலும் குடும்பம் மொத்தமும் அவளது பொறுப்பு என்பதை உணர்ந்தவள் அதை செயலிலும் காட்டினாள்.

உறக்கம் வராமல் உறங்க பிடிக்காமல் வாசலில் நின்று இருளை வெறித்துக் கொண்டிருந்தவளுக்கு எதோ ஒன்று சரியில்லை எனத் தோன்றியது.

ராஜுவிற்கு அழைத்தால் அழைப்பு ஏற்கப்படவேயில்லை.வெளி வாசலுக்கு அழைத்து விசாரித்தவள் ராஜுவுக்கு அடுத்த நிலையில் இருந்தவனிடம் பேச முயற்சித்த படியே வீரேந்திரன் இருந்த அறைக்குள் நுழைந்தாள்.

அறையின் பாதியை திரை மறைத்திருக்க திரைக்கு பின் மொத்த கோட்டையையும் சுற்றி பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களுக்கான மானிடர்களை நோட்டம் விட ஆரம்பித்திருந்தாள்.

வீரேந்திரன் கோமாவிற்கு சென்ற பின் இவையனைத்தும் ஏழிசையின் ஏற்பாடு.அதே போன்று குழந்தையோடு உறங்கச் செல்லும் பெரியவர்கள் இரவில் என்ன நடந்தாலும் என்ன சத்தம் கேட்டாலும் கதவைத் திறக்கக் கூடாது என்பதை உறுதியாய் கூறியிருந்தாள்.

வேணியும் கற்பகமும் அவர்களின் அறை வாயிலிலேயே படுத்துக் கொள்வர்.ராகவ் வீரேந்திரனின் பக்கத்து அறையில் தங்கியிருந்தான்.

எப்போதும் போல் அன்றைய இரவு சாதாரணமாய் இருக்கப் போவதில்லை என்று மனம் அடித்துக் கொண்டது.கையிலிருந்த சிறு கத்தியை இன்னுமாய் தன்னோடு இறுக்கிக் கொண்டவள் ராகவின் அறைக் கதவை வெளியிலிருந்து பூட்டியிருந்தாள்.

தோட்டத்திருக்குள் ஏதோ சலசலப்பு இருப்பதாகத் தோன்றியது.வாயிற் கதவை பூட்டிய வண்ணம் தாமதிக்காது ஷ்யாமிற்கு அழைத்திருந்தாள்.

“அண்ணா ராஜு எங்க?”

“நானும் அவனுக்கு தான் ட்ரை பண்ணிட்டு இருக்கேன் எடுக்க மாட்றான் மா..எதுவும் பிரச்சனையா?”

“தெரியல அண்ணா ஆனால் ஏதோ தப்பா படுறது.முடிஞ்சளவு சமாளிச்சுருவேன்.எதுக்கும் போலீஸுக்கு விஷயத்தை சொல்லி நீங்களும் கிளம்பி வரேளா?!”,எனும்போதே கண்ணாடி உடையும் சத்தம் தெளிவாய் கேட்டது.

காவலுக்கு இருக்குறவா சத்தமே இல்லை ணா..லேட் ஆக்காமல் வாங்கோ ப்ளீஸ்.”,என்றவள் போனை வைத்துவிட்டு வீரேந்திரனின் அறையை பூட்டி சாவியை தன் கையில் எடுத்துக் கொண்டவள் வேணியையும் கற்பகத்தையும் எழுப்பினாள்.

பெரியவர்களின் அறையையும் பூட்டிவிட்டு மலங்க மலங்க விழித்திருந்த வேணியையும் கற்பகத்தையும் பார்த்து விஷயத்தைக் கூற வேணி கொதித்து விட்டாள்.

“எந்த எடுபட்ட பய வரான்னு பாக்குறேன்.நாங்க இருக்கோம் மா..நீங்க பதட்டப்படாதீங்க”,என்றவள் தலையை கொண்டையிட்டு முடிந்தவாறு கற்பகத்தோடு சமையலறைக்குள் சென்றாள்.

சில நொடிகளில் வெளியே வந்தவர்களின் கைகளில் அரிவாள்மனையும் மிளகாய்த் தூளும் சமைப்பதற்கு வைத்திருந்த கத்திகளும் இருந்தது.

“இரண்டு பேரும் கவனமா கேளுங்கோ கொஞ்ச நேரத்துக்கு சமாளிச்சுட்டா போதும் எப்படியும் போலீஸ் வந்துடுவா.

அதுவரைக்கும் உங்களுக்கும் எதுவும் ஆகாம பாக்குறது தான் இன்னமும் முக்கியம்”,எனும்போதே சமையல்கட்டின் பக்கவாட்டு கதவு உடையும் அளவு சத்தம் கேட்டது.

மூவருமாய் கதவின் மறுபக்கம் சென்று அழுத்திப் பிடித்து நிற்க அதற்குள் மாடிப் படியின் பக்கத்தில் இருந்து காலடிச் சத்தம் கேட்டது.

கற்பகம் வேகமாய் சமையலறைக் கதவை தாளிட்டுக் கொள்ள மூவருக்குமே என்ன நடக்கப் போகிறது என்பதை யூகிக்க முடியவில்லை.

“அம்மா ஐயா..”

“எல்லா கதவையும் பூட்டிட்டேன் கற்பகம்”,என்றவள் சாவியைக் கையோடு இறுக்கிப் பிடித்திருந்தாள்.

அதற்குள் மீண்டுமாய் கதவை உடைக்கும் முயற்சி பெண்களுக்கோ உடலெல்லாம் அதிர்ந்தது.சரியாய் அந்நேரம் ஏழிசையின் கைப்பேசி அழைக்க அந்த சத்தத்தில் உடைக்கும் முயற்சி இன்னும் அதிகமாகியது.

அத்தனையும் நொடி நேரத்தில் நடந்து கொண்டிருக்க ஏழிசை மூவரின் கையிலும் மிளகாய் பொடியை எடுத்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு முன் வாசலை யோசனையாய் பார்த்தாள்.

“வேணி கேஸை திறந்து விடு..சமையல்கட்டு வாசல்ல சத்தம் கம்மியா தான் இருக்குறது.நாம அந்த கதவை திறந்து வர்றவாளா சமாளிப்போம்.எல்லாரும் உள்ளே வந்துட்டா கஷ்டம்.”,என்றவள் ஆழ்மூச்செடுத்துக் கொண்டு கதவைத் திறக்க நினைத்தது போல் மூன்று பேர் இருந்தனர்.

மிளகாய் பொடியை அவர்கள் மேல் தூவியவர்கள் கத்தியைக் கொண்டு கண்பட்ட இடடெல்லாம் தாக்கி அவர்களை இழுத்து உள்ளே தள்ளிவிட்டு வெளியே நகர்ந்து கதவை மூடினர்.

ஏழிசைக் கையிலிருந்த தீப்பெட்டியை கொழுத்தி உள்ளே எறிந்துவிட்டு இருவரையும் இழுத்துக் கொண்டு தள்ளி ஓடினாள்.

பெரும் சத்தத்தில் பெரியவர்களும் ராகவும் விழித்துக் கொள்ள கதவை உள்ளிருந்து திறக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தனர்.

மாடியில் சில குரல்கள் கேட்க அதற்குள் எழுந்த பெரும் சத்தத்தில் அனைவருமாய் கீழ் தளத்தை நோக்கி திடுதிடுவென ஓடி வரும் சத்தம் கேட்டது.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode