163
“தேடி தேடி பார்க்கிறேன் என் கால்கள் ஓய்ந்ததே
“காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
“தேடி தேடி பார்க்கிறேன் என் கால்கள் ஓய்ந்ததே
காணாமலே இவ்வேளையில் என் ஆவல் தீருமோ
பிரிந்தோம் இணைவோம்
இனி நீயும் நானும் வாழ வேண்டும் வாசல் தேடி வா
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
சொன்ன வார்த்தை காற்றில் போகுமோ
வெறும் மாயமாகுமோ”
ஏனோ இருவரின் இந்த உணர்வைப் பற்றி தவறாக எண்ணத் தோன்றவில்லை அவருக்கு.
எந்த ஒரு சூழலிலும் கண்ணன் தன் மகளிடம் வரம்பு மீறியிருக்க மாட்டான் என்பது அவரின் அழுத்தமான நம்பிக்கையாய் இருந்தது.
அவருக்கோ இவர்கள் சேர்வதில் விருப்பமெனினும் ஊரும் சொந்தமும் பந்தமும் என்ன பேசுவார்கள் அதையெல்லாம் தன் கணவர் எப்படித் தாங்கிக் கொள்வார் என்ற கவலையே மகளின் மனதை மாற்றிவிடலாம் என்று எண்ண வைத்திருந்தது.
“இங்கே வா.. அம்மா மடியில் படுத்துக்கோ நான் சொல்றதை கொஞ்சம் கேளு…
கிருஷ்ணர் ராதை கதையை சின்ன வயசுலே விரும்பிக் கேட்பியே அவா கூட கடைசியில் சேராம தான் போனா.அது நோக்குத் தெரியுமோ!
யாருக்கு யார் என்ன உறவாய் வரணும்ண்டறது பெருமாளின் கணக்கு கிருஷ்ணா. அதை நம்மால் எப்போதும் மாத்த முடியாது.
தன்னோட ஒரு பிறவியில் கடும் தவம் புரிஞ்ச ஒருவன் பெருமாளிடம் அந்த லட்சுமியே தன் மனைவியாக வேணும்னு கேட்டானாம்.
அதுக்குப் பெருமாள் லட்சுமி என்னுள் இரண்டற கலந்தவள் அதனால் உன் விருப்பம் ஈடேறாதுனு சொல்லிட்டாராம்.
ஆனா அப்படியும் விடாமல் அவன் தன்னை வருத்தி கடும்தவம் செய்து மீண்டும் அதே வரத்தை கேட்க..
பெருமாளும் சரி நான் கிருஷ்ணணாக அவதாரம் எடுக்கும் யுகத்தில் ராதையை உன் மனைவியாகப் பெறுவாய்னு சொன்னாராம்.
அதனால் தான் கிருஷ்ணரும் ராதையும் திருமண பந்ததில் இணைய முடியலனு சொல்லுவா.
இதில் கண்ணணோட ராதாவோட தப்பு என்ன இருக்கு சொல்லு!
ஒவ்வொரு பிறவிக்குமான நன்மை தீமைகளை நாம் அனுபவிச்சு தான் ஆகணும்.
இப்போ இந்த கல்யாணம் நடக்குறதுக்கும் இதுபோல காரணம் நிச்சயமா இருக்கும்.
கருட புராணத்துப் படி தப்பு செய்யுறவாளுக்கு எல்லாம் தண்டனை உண்டுனு நம்புறோமோ இல்லையோ அந்த தண்டனைகளை அனுபவிச்சும் நாம செய்த பாவம் தீராம தான் இந்த மனுஷப் பிறப்பெடுக்குறோம்.
நம் வாழ்க்கையோட ஒவ்வொரு நல்லது கெட்டதும் அந்த பாவ புண்ணியங்களைப் பொறுத்து தான் அமையுது கிருஷ்ணா.
நம்ம கண்ணன் பாவம் சின்ன வயசிலிருந்து எத்தனையோ கஷ்டங்களைப் பட்டுட்டான்.
இதுக்கப்பறமாவது அவனும் அவன் அம்மாவும் நிம்மதியா இருக்கட்டும்.
நம்ம மனுஷாவோட நாக்கு நரம்பில்லாதது இந்த ஊர் முன்னாடி அவா அவமானப்பட வேண்டாம் கிருஷ்ணா..
அவன் உத்யோகத்தைப் பார்த்துண்டு குறைந்தபட்சம் அவன் அம்மாவாவது நிம்மதியா இருப்பாளோல்யோ…”
“ம்மா…அப்போ நானும் நிறைய பாவம் பண்ணிருக்கேனா ம்மா.. அதனால தான் பெருமாள் என்னை என் கண்ணனோட சேர விடாம பண்ணிட்டாரா!!”
“வேண்டாம் கிருஷ்ணா மா..திரும்பத் திரும்ப அதை யோசிக்காதே கனவாய் நினைச்சு மறந்துரு…
இனி நடக்கப் போறது தான் நிஜம். அம்மாவுக்கு நீ வேணும் டா.. எல்லாத்தையும் கடந்து வா..நம்ம கண்ணனும் நிச்சயம் நன்னா இருப்பான்.”
“உண்மையா வா மா??!”
“என்னது உண்மையானு கேட்குறாய்?”
“இந்த கல்யாணம் நடந்தா என் கண்ணன் நன்னாயிருப்பானா?சந்தோஷமா இருப்பானா?
அப்பா அவனன்ட எப்போதும் போல பேசுவார் தானே?அவனுக்கு எதாவது உதவி வேணும்னா செய்வார் தானே!!”
குழந்தையாய் ஏதேதோ கேட்கும் மகளைப் பார்த்து பார்த்து மனம் பாரமாய் அழுத்த கண்களில் வழிந்த கண்ணீரோடு ஆமோதிப்பாய் தலையசைத்தார் வேதல்லி.
“என் கண்ணணுக்காக நான் எல்லாத்தையும் ஏத்துக்குறேன் மா..இப்போ நான் உயிரை விட்டுருந்தா கூட அவன் என்னை நினைச்சு வாழ்க்கையே கெடுத்துண்டு இருப்பான்.
ஆனா இப்போ என்னை அவனுக்குத் துரோகியா தான் நினைப்பான்..
கொஞ்சம் கொஞ்சமா என்னை வெறுத்து ஒரு கட்டத்தில் மறந்துருவான்.
நேக்கு அவனோட இருக்கணும்கிறதை விட அவன் நன்னாயிருக்கணும் அதான் வேணும்.
நான் நித்தம் நித்தம் பெருமாளான்ட அவனுக்காக தான் வேண்டிப்பேன். அவனுக்காக எதையும் தாங்கிப்பேன்.
ஆனா மா எனக்காக ஒண்ணே ஒண்ணு மட்டும் பண்றியா..
எக்காரணம் கொண்டும் அவன் முகத்திலே மட்டும் என்னை முழிக்க வச்சுறாதே மா..
அவன் பாவம் தாங்க மாட்டான் மா.. என்னை எங்கேயாவது அனுப்பிடேன்.. இதை மட்டும் பண்ணு மா..ப்ளீஸ்..”
“என் செல்லமே!!!”,என்றவர் அவளை இறுக அணைத்துக் கொண்டார்.
தன் மகளின் இப்படி ஒருபரிமாணத்தை அவர் நிச்சயம் எதிர்பார்த்திருக்கவில்லை.
பித்து நிலை என்போமே அப்படியான ஒருநிலை அவளுடையது அவள் கண்ணணின் மீதான பித்து.
இந்த அன்பை என்னவென்று சொல்வது.. இந்த இளஞ்சிட்டுகளை வானில் பறக்கவிடாமல் சிறகுகளை ஒடித்துக் கூட்டிற்குள் அடைக்கும் விதியை நொந்து கொள்வதையன்றி வேறென்ன செய்ய முடியும் தெரியவில்லை அவருக்கு.
அடுத்த நான்கு நாட்கள் புரவி வேகத்தில் நகர்ந்திருக்க இன்று வெள்ளிக்கிழமை காலையிலேயே ராதாவின் வீடு விசேஷக் களை கட்டியிருந்தது.
ராதாவும் வேதவல்லியும் மட்டும் அனைத்தையும் இயந்திரக்கதியில் செய்து கொண்டிருந்தனர்.
நான்கு நாட்களில் வருவதாய் சொன்ன கிருஷ்ணணும் வரவில்லை.
இப்போதும் கூட ராதாவின் மனதின் ஓரத்தில் ஏதேனும் அதிசயம் நடந்து விடாதா என்ற எண்ணம் எழாமலில்லை.
அபிமன்யூ குடும்பத்தோடு சில உறவுகளும் வந்திருக்க ராமன் தன் ஒரே மகளின் நிச்சயதார்த்தத்திற்கு ஓடி ஓடி வந்தவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தார்.
நிச்சதார்த்தப் பத்திரிக்கை வாசித்து தாம்பூலத் தட்டு மாற்றப்பட்டிருக்க ராதா அழைத்துவரப்பட்டு அனைவருக்கும் நடுவில் அமர வைக்கப்பட்டாள்.
வந்தவர்கள் அவளுக்கு அட்சதை தூவி ஆசீர்வாதம் செய்து நகர அனைருக்குமான உணவு பரிமாறப்பட்டது.
அனைத்தும் நல்லபடியாய் முடிந்து மாப்பிள்ளை வீட்டார் கிளம்பும் நேரம் தன் கைக்குட்டையை உள்ளே வைத்து விட்டதாய் கூறி எடுக்க வந்தவன் ராதாவைப் பார்க்கச் சென்றான்.
அந்த நேரத்தில் அவனை எதிர்பாராதவளாய் மிரண்டு முழிக்க அவன் கூறியதைக் கேட்டவளுக்கு மனம் மொத்தமாய் கலங்கிப் போனது.
“என்ன உன் கண்ணன் வருவான் வந்து இந்த நிச்சயத்தை நிறுத்துவான்னு கனவு கண்டுண்டு இருந்தியா..
ப்ச்ச் பாவம்.. அவனோட சேர்ந்துண்டு என்னை எத்தனை அவமானப்படுத்தினாய்.. இனி உன் வாழ்க்கையில் நிம்மதினு ஒண்ணு இருக்கவே போறதில்லை.
அதுவும் அன்னைக்கு வெட்கமே இல்லாம அவனைக் கட்டிண்டு நின்னாயே இப்போ நினைச்சாலும் உடம்பெல்லாம் எரியறது நேக்கு..
எல்லாம் நியாபகம் இருக்கு…அத்தனைக்கும் அனுபவிப்பாய்.. தயாரா இரு..”,என்றவனின் கண்களில் அப்படியாய் ஒரு குரோதம் எரிந்தது.
அவன் நகர்ந்தவுடன் ராதா சோர்வாய் அமர்ந்துவிட்டிருந்தாள்.
அவன் கூறியதை நினைத்து பயமெல்லாம் எழவில்லை.
ஆனால் தான் கண்ணனை விரும்புவது தெரிந்தும் ஒருவன் தங்களைப் பிரிப்பதற்காக திட்டம் தீட்டியிருக்கிறான் என்றால் தன் அம்மா கூறியதைப் போல் முன் ஜென்மத்தில் அவனுக்கு தன்னால் நிச்சயம் ஏதோ தீங்கு நிகழ்ந்திருக்கிறது போலும் என்று எண்ணி கசந்த புன்னகையை உதிர்த்தாள்.
அடுத்தடுத்த அதிர்ச்சிகளையே இன்னும் தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்திருந்த நிலையில் கடவுள் அடுத்த பிரம்மாஸ்திரத்தையும் ராதாவின் மேல் எறிவதற்கு தயாராகி விட்டிருந்தார்.
அனைவரும் கிளம்பிய பின் வீடு வழக்கமான அமைதிக்குத் திரும்பியிருக்க வாசலில் வந்து நின்றிருந்தான் கிருஷ்ணன்!!!
முற்றத்தின் பெரிய கோலமும் அதன் நடுவில் கொட்டியிருந்த ஆராத்தியையும் பார்த்தவன் அதைக் கடந்து உள்ளே சென்றான்.
“மாமா…வேதா மாமி..நான் இல்லாம ஆத்துல என்ன விசேஷம் ஆரத்தியெல்லாம் கரைச்சுருக்கேள்..”, என்று குரல் கொடுத்தவாறே கூடத்திற்குள் நுழைய காதில் கேட்ட தன்னவனின் குரலில் மொத்தமாய் நொறுங்கிப் போய் தனதறை ஓரத்தில் ஒடுங்கிப் போயிருந்தாள் ராதா.
ராமன் உள்ளிருந்து வெளியே வர வேதவல்லியோ பரபரப்பாய் சமையலறையிலிருந்து ஓடி வந்திருந்தார்.
“டேய் கண்ணா வாடா..உன்னை தான் ஆயிரம் தடவை நினைச்சுண்டு இருக்கேன்.
இப்போவாவது வந்தியே..நம்ம ராதாவுக்கு நிச்சயதார்த்தம் நல்லபடியா முடிஞ்சுது நம்ம அபிமன்யூ தான் மாப்பிள்ளை..
நீ இல்லாதது மட்டும் தான் டா கண்ணா குறை.ராதா கூட உன்னைத் தான் தேடினாளோ என்னவோ சரியா சிரிக்கக் கூட இல்லை.
போ போய் மாமி பட்சணம் தருவா சாப்பிடு போ..நோக்குப் பிடிச்ச அக்காரவடைசல்(பாயாசம்) இருக்கு எடுத்துக்கோ டா மறக்காம…”, என்றவர் வெளியில் யாரோ அழைக்கும் சத்தத்தில் அங்குச் சென்றார்.
முதல் வரியைத் தவிர அடுத்துப் பேசிய எதுவும் காதில் ஏறாதவனாய் சிலையென நின்றிருந்தான் கிருஷ்ணன்.
அவன் நிலையறிந்த வேதவல்லியோ அவசரமாய் அவனருகில் வந்து அவன் கரம் பற்ற உணர்வுப் பெற்றவனின் கண்களிலிருந்து இரு துளி கண்ணீர் அவர் கரம் தொட்டது.
“கண்ணா உடைஞ்சு போகாதே டா..என் குழந்தைளே இப்படி பார்க்க மனசு ரணமா அறுக்கறது.
கண்ணா எதாவது பேசு டா..”,உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாதவராய் அவனை இழுத்துக் கொண்டு சமையலறைக்குச் சென்றார்.
“கண்ணா!!”
“ராதா ஏதும் தப்பான முடிவு எடுக்க நினைக்கலையே?எப்போதும் அவளை பத்திரமா பார்த்துக்கோங்கோ மாமி..”
“டேய் கண்ணா..ஹய்யோ இந்த சின்ன குழந்தைகளை ஏன் இப்படி படுத்துறாய் பெருமாளே!!நோக்கு இரக்கமே இல்லையா..”
“மாமி..இப்பவும் என் குரல் கேட்டு அவ உடைஞ்சு போய்ருப்பாள்.. போய் அவளைப் பாருங்கோ நான் ஆத்துக்குப் போய்ட்டு அப்பறமா வரேன்.
இன்னும் அம்மாவுக்கு நான் வந்ததே தெரியாது வரேன்..”, என்றவன் உயிரிலா உடல் போல் அங்கிருந்து செல்ல வேதவல்லி அவன் கூறிய படி தன் மகளைப் பார்க்க ஓடினார்.
“ம்மா.அவன் வந்துட்டானா..இங்க நடந்ததெல்லாம் கேட்டு என்னம்மா சொன்னான்..
ரொம்ப அழுதானா..என்னை ஒரு தடவை பார்க்கணும்னு கூட சொல்லலியா மா.
என் கண்ணன் என்னை வெறுத்துட்டானா மா…”, கடந்த ஒரு வாரத்தில் கண்ணனைப் பற்றிய பேச்சு வரும்போதெல்லாம் இப்படி தான் நடந்து கொள்கிறாள் ராதா.
அவளை எப்போதும் போல் இறுக அணைத்து தனக்குள் புதைத்துக் கொண்டார் வேதவல்லி.
இதற்கு ஒரே தீர்வு இவர்கள் இருவரும் ஒரு முறையாவது வெளிப்படையாய் பேசிக் கொள்வதே என்று உணர்ந்தவராய் அதற்குத் தான் என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்கத் தொடங்கினார்.
அதன்படி அடுத்த இரு தினங்களில் தன் மாமியார் அவர் தங்கை ஊருக்குச் செல்லும் நேரமாய் பார்த்து ராமன் அலுவலகத்திற்கு கிளம்பும் நேரம் கிருஷ்ணனை வீட்டிற்கு வரச் சொல்லுமாறு கூறி அனுப்பினார்.
அவனுக்குப் போக விருப்பமில்லை எனினும் வேதவல்லி அழைத்து, போகாமல் இருந்தால் நன்றாக இராது எனத் தோன்ற மறுப்பேதும் கூறாமல் சென்றான்.
கூடத்திலேயே அவனுக்காக காத்திருந்தவர் அவனை அங்கிருந்த நாற்காலியில் அமரச் செய்துவிட்டு ஒன்றும் கூறாமல் தன் மகளை வெளியே அழைத்து வந்தார்.
இருவரின் விழிகளும் சில நொடிகள் அங்கிங்கு நகராமல் அப்படியே நிலைத்திருந்தன.
ஏக்கம் துக்கம் பிரிவு வலி என அத்தனை உணர்வுகளும் அதிலிருக்க வேதவல்லி அவளை அழைத்துச் சென்று கிருஷ்ணணுக்கு எதிரில் அமர்த்தினார்.
“இதோ பாருங்கோ டா..எந்த அம்மாவும் இதைப் பண்ணுவாளானு நேக்குத் தெரியாது.
உன் இடத்தில் வேற ஒரு புள்ளையாண்டான் இருந்திருந்தா நானே கூட இதைப் பண்ண மாட்டேன்.
ஆனால் உங்களோட இந்த தவிப்பை என்னால பார்க்க முடியலை.
இராதாவையும் உன்னையும் நான் எப்போதுமே வேற வேறா நினைச்சதில்லை.
நடந்து முடிஞ்ச நடக்கப் போற எதையுமே நம்மால் மாத்த முடியாது.
ராதாவோட அப்பாவன்ட விஷயத்தை சொல்லி எதுவும் தப்பா நடந்தா அதையும் என்னால் தாங்கிக்க முடியாது.
அவமானங்களை சந்திச்சு நீங்க இரண்டு பேரும் சேர்ந்து கஷ்டப்படுறதை விட வலிகளோடு பிரிஞ்சு நிம்மதியா இருக்க முயற்சி பண்றது தான் எல்லாருக்குமே நல்லதுனு தோன்றது.
தயவு செய்து இரண்டு பேரும் மனசுல உள்ளதைக் கொட்டித் தீர்த்துருங்கோ..
பேசு ராதா..பாறத்தை எல்லாம் கொட்டிடு..என்னால் சுயமா உங்களுக்காக இதை மட்டும் தான் பண்ண முடியும்..”,
என்றவர் கண்ணீரோடு அங்கிருந்து எழுந்து சென்று சமையலறையில் நின்று கொள்ள இங்கு இருவருக்கும் இடையில் பெருத்த அமைதியே நிலவியது.
சில நிமிடங்கள் அமைதியிலேயே கரைய அத்தனை நேரம் குனிந்து தரையையே வெறித்திருந்தவர்கள் ஒரு சேர மற்றவரை நோக்க ராதா உதடு துடிக்க விழுந்து அவனது கால்களைப் பற்றிக் கொண்டாள்.
“கண்ணா!!!என்னை மன்னிப்பியானு கூட நேக்குத் தெரியாது டா..
உன் கையால் என்னை கொன்னு போட்டா கூட சந்தோஷமா போய் சேர்ந்துடுவேன்.
சாகக் கூட முயற்சி பண்ணேன் அம்மா வந்து காப்பாத்திட்டா..
இந்த உலகத்துல என் உயிர் கூட அம்மா நேக்குக் கொடுத்தது தானே. அதைப் பறிக்குற உரிமை நேக்கு ஏது!
அதே போல தான் கடவுளாய் கொடுத்த உன்னை அவரே பிரிச்சுட்டார் போல.கண்ணா ஏதானும் பேசு..
உன்னோட இந்த மௌனம் இந்த நாலு நாள் நான் பட்ட ரணத்தைவிட கொடுமையா இருக்கு கண்ணா…”, என்று பிதற்றியவளின் அரற்றலில் தெளிந்தவனனாய் தன் முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டு அவள் தோள் பற்றி எழுப்பி இருக்கையில் அமர்த்தினான்.
“ராதா என்னைப் பார்.. பாருனு சொல்றேனோல்யோ..”
“…”
“இந்த நிலைமை நமக்கு வந்துருக்க வேண்டாம்..என் ராதா இப்படிகதறி அழறதைப் பார்க்குற கொடுமை நேக்கு ஏற்பட்டு இருக்கவே வேண்டாம்.
ஆனால் எல்லாமே கண்முன்னே நடக்கறது. அதையெல்லாம் தாங்கித் தான் ஆகணும்.
ஆனால் அதைவிட முக்கியமாய் என் ராதா தைரியமாய் இருக்கணும்.
எந்த நிலையிலும் என்னை நினைச்சு எனக்காக ஒரு துளிக் கண்ணீர் இனி உன் கண்ணில் வரப்டாது.
அதுக்கும் மேல் உன் நினைவுகளிலாவது வாழும் என்னை உன் உயிரை அழிச்சு மொத்தமாய் அழிச்சுடாதே ராதா..
எங்கிருந்தாலும் இந்த கண்ணணோட நினைவு உன்னைச் சுத்தி தான் வரும்.உனக்காக மட்டும் தான் இந்த மூச்சு இந்த உடலில் இருக்கும்.
நீ நன்னாயிருப்பாய் ராதா..”,என்றவனுக்கு அதற்கு மேல் வார்த்தை வராமல் தொண்டையை அடைத்துக் கொண்டு வந்தது.
அவளுக்காகத் தன்னை திடப்படுத்திக் கொண்டவன்,
”உன் கல்யாணப் பேச்சு வரும்போது நம் விஷயத்தை மாமாவன்ட சொல்லி அவர் என்னை கீழ்த்தரமா நினைச்சாக்கூட பரவாயில்லைனு அவருக்குப் புரிய வச்சு உன்னை என் மனைவியா ஆக்கிண்டரலாம்னு நினைச்சுருந்தேன்.
ஆனா அந்த பெருமாளோட எண்ணம் வேறா இருந்துருக்கு.
இரண்டு நாள் முன்னாடியே வர வேண்டிய எனக்கு மேலும் இரண்டு நாள் இங்க வரமுடியாத சூழ்நிலையை அமைச்சு ஊரறிய உனக்கு நிச்சயத்தை முடிச்சப்பறம் வர வச்சுருக்கார்னா..
உன்னை வாழ்க்கை முழுசும் பத்திரமா பார்த்துக்குற தகுதி நேக்கு இல்லைனு தான் இப்படி பண்ணிட்டாரோனு தோன்ட்றது.
உன் குணத்துக்கு நீ எங்கேயிருந்தாலும் நன்னாயிருப்பாய் ராதா.ஊரை எதிர்த்து உன்னை கல்யாணம் பண்ணும் நிலையில் இல்லாத இந்த கண்ணனை வாழ்க்கையில் என்னைக்கேனும் மன்னிக்கனும்னு தோணினா மன்னிச்சுரு மா..”,என்றவன் இரு கரம் கூப்பி முதுகு குலுங்க அழுதுவிட்டிருந்தான்.
“கண்ணா அழாதே..என்னைக்கும் நான் உன் ராதா தான்.இதனால் இந்த உலகம் என்னைப் பழிச்சா பராவாயில்லை..
நேக்கு கவலையும் இல்லை. என் மனசு எப்போதும் உன்னன்ட தான் பத்திரமா இருக்கும்.
வருங்காலத்துல நீ பாடப் போற ஒவ்வொரு பாட்டு வரியிலேயும் இந்த ராதா உன் காதலியா வாழ்ந்துண்டே தான் இருப்பா.. அதனால் கவலைப்படாம போ கண்ணா..
இதுக்குப் பிறகு நான் உன் கண்ணில் படமாட்டேன்.உன்னைக் கஷ்டப்படுத்த மாட்டேன்.
பரிட்சையை நல்ல படியா முடிச்சு டிகிரி சர்டிபிகேட் வாங்கணும் கண்ணா நீ..
இனி நேக்கு படிப்பெல்லாம் எதுக்கு… எனக்காக இப்போ ஒரே ஒரு விஷயம் மட்டும் பண்ணிட்டு இங்கிருந்து கிளம்பிடு..
நீ அழறதைப் பார்க்குற சக்தி நேக்கு இல்லை.”,என்றவள் வந்த கண்ணீரை அடக்கி லேசாய் ஒட்டவைத்த புன்னகையோடு அவனை ஏறிட பொங்கி வந்த கண்ணீரை உள் வாங்கியவனாய் ஆழ்மூச்செடுத்துக் கொண்டு விழி மூடி பாட ஆரம்பித்திருந்தான்.
“காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்
உனக்கே உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே
நீ இல்லாமல் எது நிம்மதி நீதானே என் சன்னிதி”
என்று முடித்த அடுத்த நொடி அப்படியே எழுந்து விறுவிறுவென வெளியே சென்றிருந்தான் கண்ணன்.
காதலர்கள் கூடும்போது எழும் மகிழ்ச்சியை விட பல மடங்கான வலி அவர்களின் பிரிவில் இருக்கும்.அதுவும் எந்தத் தவறுமே செய்யாது தன் குடும்பங்களுக்காக காதலை விட்டுக்கொடுக்கும் இளமனங்களின் கண்ணீருக்கான விடை அந்த இறைவனே அளிக்க முடியும்.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
1 comment
So sad.