ராதை-5

by ஸ்ரீ
5 comments 193 views
A+A-
Reset

“கண்ணன் ஒரு கைக்குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை
கன்னம் சிந்தும் தேன் அமுதை
கொண்டு செல்லும் என் மனதை
கையிரண்டில் நான் எடுத்து
பாடுகின்றேன் ஆராரோ
மைவிழியே தாலேலோ
மாதவனே தாலேலோ”

காலை வேளையில் கல்லூரிக்குத் தயாராகியவாறே இந்தப் பாடலை முணுமுணுத்துக் கொண்டவளுக்கு அவளறியாமல் இதழ்கள் புன்னகையை மலரச் செய்திருந்தன.

வீட்டின் கூடத்தில் இருந்த கிணற்றின்மேல் ஏறி அமர்ந்தவாறே தன் நீள் கூந்தலை காய வைத்துக் கொண்டிருந்தவளை வாசலில் நின்றிருந்தவன் விழியகற்றாமல் பார்த்திருந்தான்.

சில நொடிகளுக்குப் பின்னே அவனைக் கவனித்தவள் சட்டென குதித்தெழ முயற்சிக்க தடுமாறி உட்புறம் சாய்ந்த நொடி எத்தனை வேகமாய் வந்து நின்றானோ இரு கைகளாலும் அவளது கரங்களை இறுகப் பற்றியிருந்தான்.

அந்த நேரமாய் அங்கு வந்த ராதாவின் பாட்டி அவர்களைக் கவனித்துவிட சூழ்நிலை உணர்ந்து கையை விட்டவன்

“பார்த்து பத்திரமா உட்கார்”,என்று மட்டும் எச்சரிக்கையாய் கூறிவிட்டு நகர்ந்து விட்டான்.

அவள் வரும் வரை வீட்டின் வெளித் திண்ணையிலேயே அமர்ந்திருந்தவன் அவள் வந்ததும் அவளோடு பேரூந்து நிலையம் நோக்கி நடக்கத் தொடங்கினான்.

அன்று முழுவதுமாய் ஒரு நூறு முறை அவளிடம் கவனமாய் இரு என்று கூறியிருப்பான்.

ராதாவும் புன்னகையோடே ஒவ்வொரு முறையும் தலையசைத்துக் கொண்டிருந்தாள்.

ஆனால் மாலை வீட்டிற்குச் சென்றவளுக்கு நிலைமை தலைகீழாய் இருந்தது.பாட்டி ராமனிடமும் வேதவல்லியிடமும் ஏதோ வாக்குவாதம் செய்து கொண்டிருக்க இருவருமாய் அவரை சமாதானம் செய்து கொண்டிருந்தனர்.

முதலில் ஒன்றும் புரியாமல் இருந்தவளுக்கு அவர்கள் பேசுவது புரிந்த நொடி கண்கள் அதுவாய் கண்ணீரை வெளிக் கொணர்ந்தது. அவளையும் கிருஷ்ணனையும் வைத்து ஏதேதோ பேசினார் பாட்டி.

பெற்றோர்களோ தன் மகளுக்கும் கிருஷ்ணணுக்கும் ஆதரவாய் பேசிக் கொண்டிருந்தனர்.

இறுதியாய் ராமன் கூறியதைக் கேட்டவளுக்கு மேலும் அழுகை முட்டிக் கொண்டு வந்தது.

“இங்கே பாருங்கோ மா..எந்த ஒரு கட்டத்திலேயும் என் பொண்ணை நான் நம்பாமல் இருக்க மாட்டேன்.

அப்படி அவளை சந்தேகிக்குற சூழ்நிலை வந்தாலும் நம்ம கண்ணனை நான் குறை சொல்லவே மாட்டேன். அவனும் இந்தாத்து பிள்ளை தான்.

அதனால இனி தேவையில்லாத எதையும் பேசிப் பிரச்சனையை பெருசாக்காதீங்கோ..

அதுதான் எல்லாருக்கும் நல்லது.”,என்றவர் அங்கிருந்து நகர்ந்து விட ராதாவிற்கோ தன் மனநிலையே புரியாத ஒரு நொடி.

எதற்காக கண்ணீர் வருகிறது என்றே தெரியவில்லை.அதே நேரம் ஏதோ தவறு செய்துவிட்டதைப் போன்ற உணர்வு.

அதையும் கடந்து தன்னால் கிருஷ்ணனின் பெயருக்குக் கலங்கம் வந்துவிடுமோ என்ற பயம்.

எல்லாமாய் சேர்ந்து அவளை அழுத்த அப்படியே மூர்ச்சையாகி விட்டிருந்தாள்.

மீண்டும் கண்விழித்த நேரம் தாய் தந்தையோடு அவளின் கண்ணணும் நின்று கொண்டிருந்தான்.

“என்னாச்சு கிருஷ்ணா?நாங்க எல்லாம் பயந்து போய்ட்டோம்.. தினசரி பஸ்ஸில் பிரயாணம் பண்ணிண்ட்டு வர்றது கஷ்டமா இருக்கா?’

“அப்பா அதெல்லாம் ஒண்ணுமில்லை. எதோ திடீர்னு இப்படி ஆய்டுத்து.. இப்போ நன்னா இருக்கேன் பா..”

“சரி நீ சத்த நேரம் ஓய்வெடுத்துக்கோ…

அம்மா போய் உனக்கு சூடா காபி எடுத்துண்டு வரேன்.”,என்றபடி பெரியவர்கள் அங்கிருந்து நகர அவளையே பார்த்த வண்ணம் கிருஷ்ணன் நின்றிருந்தான்.

“என்னாச்சு ராதா..என்ன விஷயம் உன் மனசைப் போட்டு அழுத்திண்டு இருக்கு?”

“!!”

“சொல்லு ராதா..”,அந்தக் குரலின் மென்மை ஒன்று போதுமே..

கடகடவென அனைத்தையும் அவனிடத்தில் ஒப்பித்திருந்தாள். விழியின் ஓரம் கண்ணீர் வழிந்து காது மடல்களை தொட்டிருக்க சட்டென துடைத்துவிட்டாள்.

“இதுவரையும் வெளிப்படையா உன்னன்ட பேசாத விஷயத்தை இப்போ பேசுறது நல்லதோனு தோன்றது.. பேசலமா?”

“??!!”

“நீ எனக்கும் நான் உனக்கும் என்ன உறவாய் இருக்கப் போறோம்னு பெருமாள் முடிவு பண்ணிருக்கார்னு நேக்குத் தெரியாது.

ஆனால் நம்முடைய ஆசைங்கிறது ஒரு விஷயத்தின் மேல இருக்கு. அது ஈடேறினா தான் நாம வாழ்க்கை மொத்தமும் ஒண்ணா இருக்க முடியும்ங்கிறது மனுஷாளா நம்மளோட எண்ணம் அப்படித்தான?”

“கண்ணா இதெல்லாம் பேச வேண்டாம்.. நேக்கு எதோ பயம் வர்றது. நீயில்லாத ஒரு நிலைமையை என்னால யோசிக்கக் கூட முடியல.”

“இராதா.. இப்போ இந்த நிமிஷம் நான் இந்த லோகத்துல இல்லைனு வச்சுக்கோ..நீ..”

“கண்ணா ஏன் என்னென்னவோ பேசுற?”

“தீனு சொல்றதால சுட்டுற போறதில்ல ராதா..முழுசா பேசுறதை கேளு..

அப்படி நான் இந்த லோகத்துல இல்லைனு சொன்னா நீ என்னை மறந்துடுவியா?”

“நான் உயிரோட இருக்குற வரை அது நடக்காது கண்ணா..”

“ஒருத்தரோட நினைவு நம்மை பாதிச்சுட்டு இருக்குற வரை அவா நம்மளோட தான் இருப்பா.

அந்த உறவை யாராலேயும் நிச்சயமா பிரிக்க முடியாது.இந்த சரீரத்திற்கு தான் அழிவுண்டே தவிர நம் ஆத்மாக்கு கிடையாது.

இதையெல்லாம் இப்போ நான் உன்கிட்ட சொல்றதுக்கான காரணம் வாழ்க்கை நமக்காக என்ன வச்சுண்டு இருக்குனு நம்மால் கணிக்க முடியாது.

அதே போல நாம் எதிர்பார்க்காதது நடந்தாலும் அதை எதிர்த்து நிக்குற துணிவு நமக்கு எப்போதும் வேணும்..

எத்தனை வயசானாலும் உன்னோட உன் பக்கத்திலேயே இந்த உயிர் போகணும்ங்கிறது தான் என் ஆசை.

ஆனால் உனக்காக உன் அப்பாவை எதிர்த்து பேசுற துணிவு எந்த காலத்திலேயும் நேக்கு வராது. இந்த வாழ்க்கை அவர் போட்ட பிச்சை.

நான் உன் கூடவே இருக்கணும்ங்கிறதையும் தாண்டி என்னால நோக்கும் உன் தோப்பனாருக்கும் ஒரு தலைகுனிவோ தர்ம சங்கடமோ வந்துடப்படாதுங்கிறது தான் நேக்கு ரொம்ப முக்கியம்.

இன்னொரு தடவை தேவையில்லாத எதையும் யோசிச்சு உன் உடம்பை கெடுத்துக்காதே.. இந்த கிருஷ்ணணுக்கு உன்னைத் தாண்டி உலகமே கிடையாது ராதா..

எப்போதும் நீ நன்னா இருக்கணும்..இருப்பாய்”,என்று வேகமாய் எழுந்து கொண்டவனின் விழிகளில் ஈரத்தின் பளபளப்பு அதை தன்னவளிடத்தில் மறைக்கப் பெரும்பாடுபட்டு அங்கிருந்து சென்று விட்டிருந்தான்.

இராதாவிற்கு அவன் மனநிலை நன்றாகவேப் புரிந்தது.

எப்போதுமே உதவி பெறும் நிலையில் இருப்பவர்களின் வாழ்க்கை கொடுமையானது.

தான் பெற்ற உதவிக்காக எத்தனை ஆண்டுகளானாலும் அதற்கான நன்றியோடு நடந்து கொள்ள வேண்டும்.

அதிலும் இளமையில் வறுமையில் போராடும் ஒருவனால் நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒரு விஷயத்தை சாத்தியமாக்கிக் கொடுத்திருக்கும் போது அவருக்கான நன்றிக்கடனை இறுதி மூச்சு வரை காட்ட நினைப்பவனே அவளின் கண்ணன்.

இனி மறந்தும் தன் நிலை தவற எண்ணமாட்டான்.காதலி ராதாவாய் தன்னைப் பார்ப்பதைக் காட்டிலும் தனக்கு வாழ்வு கொடுத்த ஒருவரின் மகளாய் தான் தன்னை மனதில் நிறுத்திக் கொள்வான் என்பதில் அவளுக்குத் துளியும் மாற்றுக் கருத்தில்லாமல் போயிருந்தது.

மறுநாளின் விடியல் ஒருவித சோர்வோடே விடிந்தது இராதாவிற்கு.

கண்ணனை எதிர்கொள்ளும் தைரியம் சுத்தமாய் அவளிடத்தில் இல்லை.என்ன செய்வதெனத் தெரியாமல் எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்தவளை தாயின் குரல் நடப்பிற்குக் கொண்டு வந்தது.

“காலேஜுக்குப் போகலையா டீ கிருஷ்ணா..கண்ணணுக்கு யாரையோ பார்க்கப் போணுமாம் அதனால நேரத்தோடே கிளம்பிட்டான்.

உன்னை அப்பாவே வண்டியில் கொண்டுபோய் விடுறதா சொல்லிருக்கார்.

எழுந்து தயாராகு போ..”,என்று அவர் செல்ல ராதாவிற்கோ அழுகை முட்டிக் கொண்டு வந்தது.

கண்ணன் தன்னை தவிர்க்கிறான் என்ற எண்ணமே அவளை மிகவும் பாதித்தது.

ஒரு நொடியில் உலகமே இருண்டுபோனதாய் ஒரு மாயை.கண்ணன் கூறியது எத்தனை உண்மை.

ஒரு நொடியில் இந்த வாழ்க்கை தான் எவ்வளவு மாறிவிடுகிறது. தாய் தந்தை முன் அழவும் முடியாது.

ஏன் எதற்கு என ஆயிரம் கேள்விகள் எழும்.அனைத்தையும் அடக்கியவளாய் இயந்திர கதியில் தயாராகிக் கல்லூரியை அடைந்தவளின் பார்வை கண்ணணுக்காக அலைப் பாய்ந்தன.

வகுப்பிற்குள் சென்றுப் பார்த்தவளுக்கு அங்கும் அவனைக் காணாது பித்து பிடிக்கும் நிலைபோல் ஆனது.

யாரிடமும் ஒன்றும் பேசத் தோன்றாமல் மீண்டும் கல்லூரி வளாகத்தைச் சுற்றி வந்தவளின் கண்களில் ஓர் மரத்தடியில் சோர்வாய் அமர்ந்திருந்த கிருஷ்ணன் தெரிந்த போது தான் பாதி உயிர் மீண்டு வந்திருந்தது.

“கண்ணா…”

குனிந்திருந்தவன் வேகமாய் கண்களைத் துடைத்துவிட்டுத் தன்னை சீர்படுத்தி அவளுக்கு முதுகுகாட்டி எழுந்து நின்றான்.

“என்னை நாலு அடி கூட அடிச்சுக்கோ ஆனா இப்படி பார்க்காம பேசாம மட்டும் இருக்காதே டா..”,என்றவளின் குரல் நடுங்க ஆரம்பித்திருக்க சட்டென அவளைப் பார்த்து திரும்பி நின்றான்.

“ஏன் கண்ணா இப்படி பண்றாய்..ரொம்ப கஷ்டமா இருக்குத் தெரியுமா..

நேத்து நோக்குத் தோணிணதெல்லாம் பேசிட்டு நீ பாட்டுக்கு போய்ட்டாய்… என் மனசுல என்ன இருக்குனு ஒரு வார்த்தை கேட்டியா?

இப்போ சொல்றேன் நீயில்லாத ஒரு வாழ்க்கையில் இந்த ராதா வெறும் பிணமா தான் இருப்பா..”

“இராதா!!”

“நீ நிறையவே பேசிட்டாய்..நான் பேசுறதை கொஞ்சம் கேளு..

நினைவு தெரிஞ்ச நாளிலிருந்து நேக்குத் தெரிஞ்ச முகம் உன்னோடது.

ஒண்ணா கைப்பிடிச்சு ஸ்கூலுக்குப் போக ஆரம்பிச்சது தொடங்கி நான் சைக்கிள் கத்துகிட்டது,

பாடம் படிச்சது வரை எல்லாமே உன்னன்ட தான்.நேக்கு என்ன வேணும்னு என்னை விட நோக்குத் தான் நன்னா தெரியும்.

இப்படி என் வாழ்க்கையாவே இருக்குற உன்னை என்னால எப்படி கண்ணா விட முடியும்.

உன்னைத் தாண்டி எந்த ஒரு ஆணையும் என் வாழ்க்கையில் என்னால் ஏத்துக்க முடியாது கண்ணா..

ஒரு வேளை அப்படி ஒண்ணு நடக்கணும்னு விதி இருந்தா இந்த ராதா இந்த லோகத்தைவிட்டுப் போற நாள் அதுவா தான் இருக்கும்.

என் நண்பனா இருந்த உன்னை அதைக் கடந்த உறவா எப்போ பார்க்க ஆரம்பிச்சேன்னு தெரியலை.

ஆனா இனி மறுபடியும் உன்னை நண்பனா மட்டும் என்னால பார்க்க முடியலை கண்ணா..இதில் என் தப்பு என்ன இருக்குனு நீயே சொல்லு.

நோக்கு உன் நன்றியுணர்வு முக்கியம்னா நேக்கு என் காதல் தான் முக்கியமா பட்றது.

என்னால் இதுக்கு மேலயும் இலைமறைக் காயா வச்சுக்க முடியும்னு தோணலை.

நான் உன்னை மனசார காதலிக்கிறேன் டா.. மனசளவுல எப்பவோ உன்னோட வாழ ஆரம்பிச்சுட்டேன்.

நீ சொன்னியே நம் நினைவுகளை யாராலும் அழிக்க முடியாதுனு அப்போ என் நினைவில் நான் உன் மனைவியா இருக்கறதை மட்டும் எப்படி அழிக்க முடியும்..

சொல்லு கண்ணா..நீயே சொல்லு..”, என்றவள் அப்படியே அமர்ந்து முகத்தை கைகளுக்குள் அழுத்திக் கொண்டு அழ ஆரம்பித்திருந்தாள்.

அவள் பேசிய ஒவ்வொரு வார்த்தையையும் கேட்டவனோ நின்ற இடத்திலேயே வேரூன்றிப் போய் நின்றிருந்தான்.

காதல் எப்போது யாரை ஆட்கொள்ளும் என்பதை அறிந்தவர் யார் இங்கு?ஏழை பணக்காரன் நிறம் குணம் எதையும் பார்த்திடா இந்த காதல் அதற்கான விலையாய் கேட்பது இரு மனங்களின் சங்கமத்தை மட்டுமல்ல இரு உயிர்களின் ரணங்களையுமே..

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

5 comments

suganyavel November 18, 2026 - 1:33 pm

Very emotional💕

srichitra November 18, 2026 - 3:21 pm

Emotional ud

Padmasubramanian November 18, 2026 - 7:06 pm

💞💞 ஆழ் காதலை பிரிச்சி வச்சி விளையாடதிங்க ஸ்ரீமா. சீக்கிரம் சேர்த்து வைங்க. பையன் அழுகிறான்

😶😶

ஸ்ரீ November 18, 2026 - 7:08 pm

How do i dell u…😑😑😑

Padmasubramanian November 18, 2026 - 7:59 pm

ரைட்டரா இருக்குறது எவ்ளோ கஷ்டம்ன்னு தெரியும்.. ரைட்… ரைட்… விடுங்கோ 🤣🤣🤣🤣

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode