282
“முல்லைக்கு குழல் தந்த பெண்மைக்கு பெண்மை நீ
“இரு பறவைகள் மலை முழுவதும்
“முல்லைக்கு குழல் தந்த பெண்மைக்கு பெண்மை நீ
பிள்ளைக்கு தோள் தந்த அன்னைக்கு அன்னை நீ
அதி காலையில் நான் கேட்பது நீ பாடும் பூபாளம்
என் கண்கள் ரெண்டும் பல்லாண்டு பாடி
செவ்வானமானேன் உனை தேடித் தேடி
திருக்கோவிலே ஓடி வா
நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடி வா”
கிருஷ்ணன் தந்தையுடைய மிதிவண்டியை அவ்வப்போது பள்ளிக்கு எடுத்து வருவான்.கால் எட்டவில்லை எனினும் குரங்குப் பெடல் போட்டுச் செல்ல முயற்சி செய்வான்.
அதைவிட முக்கியமாய் அவனது புத்தகப் பையையும் ராதாவின் புத்தகப் பையையுயும் வைத்து இழுத்துச் செல்வதற்காகவே எடுத்து வருவான்.
வேதா மாமி கொடுத்த உணவை உண்ட பின்பே சற்று பலம் வந்ததைப் போன்று உணர்ந்தான் கிருஷ்ணன்.
அதே உற்சாகத்தோடு இருவரின் பையையும் சைக்கிளில் வைத்துக் கொண்டவன் ராதா வெளியே வந்ததும் அவளோடு நடக்க ஆரம்பித்தான்.
“கண்ணா இன்னையோட பள்ளிக்கூடம் முடிஞ்சது.இன்னும் நாலு நாள் லீவ்.. கணக்கு வாத்தியார்ட்ட இருந்து தப்பிச்சேன்.”
“உனக்கும் கணக்கும் ஏன் தான் ஏழாம் பொருத்தமா இருக்கோ நேக்கு புரியவேயில்ல..”
“அடப் போடா..பரீட்சைக்கு முந்தின நாள் நீ சொல்லித் தர அப்போ கூட எல்லாம் மட மடனு மண்டைக்கு ஏர்றது. ஆனா சார் சொல்லிக் கொடுத்தா மட்டும் கஷ்டமா இருக்கு டா..”
“ம்ம் நன்னா வாய் மட்டும் பேசு..சரி நாளைக்கு லீவ்ல வாடகை சைக்கிள் எடுத்துக் கத்துத் தரேன் ஓட்டுறியா?”
“ஏ..கண்டிப்பா ஓட்டுவேன்..கீழே விழுந்து அடிபட்டா அழுது ஆர்பார்ட்டம் பண்ணவே மாட்டேன்..சத்தியமா!”
“ஒவ்வொரு தடவையும் இதைதான் சொல்றாய்.. பார்ப்போம் நாளைக்காவது ஒழுங்கா கத்துகுறியானு..
சரி முதல் வகுப்பு மணியடிக்கப் போறா.. நீ வேகமா க்ளாஸுக்குப் போ.. நான் சைக்கிளை அங்க நிறுத்திட்டு போறேன்.”
“சரி கண்ணா..சாப்பாட்டு நேரத்துல பார்ப்போம்.. வரேன்..”,என்றவள் தன் பையை எடுத்துக் கொண்டுச் சென்றாள்.
அன்றைய பொழுது வழக்கம் போல் கழிய மாலை இருவருமாய் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த நேரம் கோவில் பஜனை கோஷ்டியில் உள்ள ஒருவர் கிருஷ்ணணை மறுநாள் முதல் நடக்கும் காலை மாலை இரு வேளை பஜனைக்கும் வருமாறு கூறிச் சென்றார்.
இது போன்ற காலங்களில் தான் கிருஷ்ணணுக்கும் அவனது குடும்பத்திற்கும் காலை இரவு வேளை உணவிற்கு பிரச்சனையில்லாமல் கழியும்.
ஆனால் ஏனோ ராதாவிற்கு மட்டும் அவன் செல்வதில் விருப்பமே இருக்காது.
“ஏன் டா கண்ணா உன் வயசு சிநேகிதனெல்லாம் நேரம் காலம் தெரியாம விளையாடுறா நீ ஏன் இப்படி கோவில் குளம்னு சுத்தற..என்னவோ போ..”
“இராதா..எத்தனை தடவை சொல்லிருக்கேன் இப்படி பேசப்படாதுனு..
பெருமாளுக்காக பண்ற விஷயங்களுக்கு கால நேரம் கிடையாது.
என் தோப்பனார் இந்த வயசுல பண்ற கைங்கரியம் நேக்கு இப்போவே கிடைக்குதோன்னோ..
அது மட்டுமில்லாம எங்களுக்கு சாப்பாட்டுக்கு சிரமமில்லாம இருக்குமே..
அம்மா பாவம் பாதி நாள் ஒழுங்காவே சாப்பிட மாட்டா.. கோவில்ல தர்ற உப்புமாவா பொங்கலோ அம்மாக்கு ரொம்ப இஷ்டம்..”
“மன்னிச்சுரு கண்ணா எல்லாம் தெரிஞ்சும் உன்னை கஷ்டப்படுத்திட்டேன்..
இனி இப்படி பேச மாட்டேன்…ஆமா..அப்போ நாளைக்கு சைக்கிள்?”
“நான் காத்தால போய்ட்டு பத்து மணிக்கெல்லாம் வந்துட்டுவேன் ராதா.. அதுக்கப்பறமா அழைச்சுண்டு போறேன்..சரியா?”
“சரி சரி..இப்போ நீ இத்தனை அவசரமா எங்க போற?தெரு முனை டீக்கடைக்கு தான?”
“நாளைக்கு லீவ் அம்மா இன்னைக்குத் தான் எதுவும் சொல்லாம அனுப்புவா..
கொஞ்ச நேரம் போய் ரேடியோ பாட்டு கேட்டுண்டு வந்துடுவேன்.”
“நேக்கும் கூட ஆசை தான் ஆனா அம்மா அப்பாக்கு இதெல்லாம் பிடிக்காது.
இதுக்காகவாவது நான் புள்ளையா பிறந்துருக்கலாம். சரி ரொம்ப நேரம் கடத்தாம நேரத்தோட ஆத்துக்கு போய்டு புரிஞ்சுதா?”
“ம்ம் சரி ஒரு நாலு பாட்டு தான் கேட்டுட்டு ஓடி வந்துருவேன்..”, என்றவன் தன் வீட்டை நோக்கி சைக்கிளை அழுத்திச் சென்றான்.
வேக வேகமாய் சீருடையை மாற்றியவன் தன் தாய் வைத்திருந்த காபியை தண்ணீர் போல் அருந்திவிட்டு அடித்துப் பிடித்து டீக்கடையை நோக்கி ஓடினான்.
“வா டா கிருஷ்ணா..இன்னும் காணலேயேனு பார்த்தேன்..”
“மாமா ஆரம்பிச்சுடுத்தா?”
“இல்லை இல்லை டா கொஞ்சம் மூச்சு வாங்கிக்கோ..இதோ ஆரம்பிக்கப் போறா இப்போ தான்.”, என்றவர் அங்கிருந்த சிறு கூட்டத்திற்காக வானொலியின் சத்தத்தை சற்று அதிகப்படுத்தி வைத்தார்.
இலங்கை ஒலிப்பரப்பு கூட்டுத்தாபனம் தமிழ் சேவை 2 பொங்கும் பூம்புனல்….
இன்றைக்கான முதல் பாடல்,என்ற அறிவிப்பாளரின் குரலைத் தொடர்ந்து இளையராஜாவின் இசையில் ஜென்சியின் குரலில் ஒலிக்க ஆரம்பித்திருந்தது நிறம் மாறா பூக்கள் திரைப்படப் பாடல்,
“இரு பறவைகள் மலை முழுவதும்
இங்கே இங்கே பறந்தன
இலை மறைவினில் இரு கனிகளும்
அங்கே அங்கே கனிந்தன
இது கண்கள் சொல்லும் ரகசியம்
நீ தெய்வம் தந்த அதிசயம்”
கிருஷ்ணணின் கவனம் முழுவதும் அந்தப் பாட்டிலேயே இருந்தது.
எப்படியாவது வரிகளை மனப்பாடம் செய்து மறுநாள் ராதாவிடம் பாடிக் காட்டிவிட வேண்டும்.
அத்தனை வறுமையிலும் கடவுள் அவனுக்கு அளித்த கொடை அவனின் சங்கீத ஞானம்.
இந்த உலகத்தில் ராதாவிற்கு அடுத்ததாய் அவனுக்கு ஒன்று பிடிக்கும் என்றால் அது பாடல்கள் தான்.
எத்துனை முறை தாய் தந்தையிடம் வசவு வாங்கினாலும் இந்த பழக்கத்தை மட்டும் அவனால் மாற்றிக் கொள்ளவே முடியவில்லை.
மேலும் இரண்டு மூன்று பாட்டுகளைக் கேட்டுக் கொண்டு அங்கேயே நின்றவன் நேரமாவதை உணர்ந்து நகர மனமேயில்லாமல் நகர்ந்துச் சென்றான்.
மறுநாள் அதிகாலையிலேயே எழுந்தவன் சுத்தபத்தமாய் குளித்து முடித்து தாய் தந்த அங்கவஸ்திரத்தை இடுப்பில் கட்டிக் கொண்டு கோவிலுக்கு ஓடினான்.
பூஜை ஆரம்பித்து பஜனை தொடங்கிய நேரம் அவனது கணீர் குரல் அத்தனை ரம்மியமாய் அவ்விடத்தை ஆக்கிரமித்திருந்தது.
சிறுபிள்ளைக்கான குளறுபடிகள் இல்லாமல் ஸ்பஷ்டமான உச்சரிப்போடு ஒவ்வொரு பாசுரமும் ஆண்டாளுக்காக அவனால் பாடப்பட்டது.
எட்டு மணியளவில் பஜனை முடிந்து நேராய் மடப்பள்ளியை நோக்கி ஓடியவன் தன் அன்னை கொடுத்து விட்டிருந்த பாத்திரத்தில் அப்போதைய பிரசாதத்தை நிரப்பிக் கொண்டு கிளம்பினான்.
தனக்கிருந்த பசியிலும் அதை அப்படியே தாயிடம் கொண்டு கொடுக்க அவர் தட்டில் வைத்து அவனுக்கான உணவைக் கொடுத்தார்.
உண்டு முடித்தவன் அடுத்த வேளையாய் ராதாவைப் பார்க்க ஓடினான்.
கூறியது போல் அவளை அழைத்துக் கொண்டு வாடகை சைக்கிளைப் பெறுவதற்காகச் சென்றான்.
“இராதா நேத்துப் பாட்டெல்லாம் பிரமாதம் தெரியுமா?நான் கூட வளர்ந்து பெரியவனா போனப்பறம் இதுமாதிரி சினிமால எல்லாம் பாடணும்னு ஆசையா இருக்கு..”
“ஏன் டா இதை மட்டும் மாமி கேட்டா அவ்ளோ தான்.நாம எல்லாம் எப்படி டா சினிமாவுக்குப் போக முடியும்.நடக்குறதையா பேசு..
இருந்தாலும் நீ பாட்டெல்லாம் பாடினா நான் கேட்குற அப்போ எல்லாம் நீ எனக்கே எனக்கு மட்டும் தனியா பாடிக் காட்டுவ இல்ல..”
“ம்ம் ஆமா டீ கண்டிப்பா பாடுவேன்.சரி வந்து சைக்கிள்ல உக்கார்..
நான் சொல்றதைக் கேட்டு ஒழுங்கா ஓட்டணும் புரிஞ்சுதா.. அரை மணி நேரத்துக்கு ஐம்பது பைசா. அதுக்கு மேல ஆச்சு னா வேதா மாமி என்னை தான் திட்டுவா.
நீ சீக்கிரமா ஓட்டிப் பழகிட்டு எனக்கு கூட ஒரே ஒரு தடவை சவாரி செய்ய தா ராதா..”
“கண்டிப்பா தருவேன் கண்ணா..உனக்கு தராம இருப்பேனே..
இப்போ முதல்ல எனக்கு ஒழுங்கா சொல்லிக் கொடு..”,என்றவள் அந்த சிறிய சைக்கிளில் ஏறி அமர்ந்து கொள்ள பின்னால் அவளைப் பிடித்தவாறே அவள் ஓட்டும் வேகத்திற்கு ஈடு கொடுத்து ஓடினான் கிருஷ்ணன்.
அதை முடித்து வீட்டிற்கு வந்தவர்கள் பக்கத்து வீட்டு செங்கமலப் பாட்டியிடம் சென்று அமர்ந்து கொண்டனர்.
“பாட்டி பாட்டி..எங்களுக்கு ராதா கிருஷ்ணர் கதை சொல்லேன்…”
“ஏன் டீ உன் பேர்ல இருக்குறதுக்காக எத்தனை தடவை தான் கேட்பாய்..”
“பாட்டி எனக்கும் ராதா கிருஷ்ணர் கதை தான் வேணும்.. சொல்லுங்கோ பாட்டி..”
“சரி தான் அவள் கேட்குறதை தான நீயும் கேட்பாய் சரி சொல்றேன்..
ஒரு நாள் ராதா கிருஷ்ணரிடம் கேட்டாளாம், கிருஷ்ணா! நீங்கள் ஏன் ராதாவை காதலிக்கிறீர்கள்.
ஆனால் திருமணம் என்று வருகிற போது மட்டும் என்னை விட்டு மற்ற பெண்களைத் திருமணம் செய்து கொள்கிறீர்கள் என்று.
அதற்கு கிருஷ்ணர் மிகவும் சுவாரஸ்யமான ஒரு பதிலை ராதையிடம் சொன்னாராம்.
திருமணம் என்பது இரண்டு நபர்களுக்கு இடையே நடக்கக்கூடிய ஒன்று. அது ஒரு ஒப்பந்தம்.
ஆனால் அது எப்போதுமே இரண்டு உயிராகத்தான் இருக்க முடியும். ஆனால் காதல் என்பது அப்படியல்ல.
அது ஒரே உயிராக மட்டும் தான் இருக்க முடியும். நாம் இருவரும் எப்போதும் ஒரே உயிர் தான்.
இரண்டு நபர்கள் அல்ல என்று சொன்னாராம். நமக்கு இடையே தேவலோக பந்தம் இருக்கிறது.
ஆனால் பூலோக திருமணம் நம் இருவருக்கும் சாத்தியமில்லாத ஒன்று என்று சொன்னாராம் கிருஷ்ணர்.
நம்மால் கணவன் மனைவி ஆக முடியாது என்று கிருஷ்ணர் சொன்னாலும், ராதைக்கு ஒரு சத்தியம் செய்து கொடுத்தாராம்,
இந்த உலகத்தில் யார் ஒருவர் என்னைப் பற்றி நினைத்தாலும் என்னுடைய பெயருக்கு முன்னால் உன்னுடைய பெயர் தான் அவர்களுக்கு நினைவுக்கு வரும்.
ராதைகிருஷ்ணர் என்று உன்னுடைய பெயரைத் தான் சொல்வார்கள்..
ஏனென்றால் உன்னுடைய அளவிட முடியாத, எந்த எதிர்பார்ப்பும் இல்லாத காதலுக்கு முன் மற்ற எதுவும் இவ்வுலகில் பெரியது இல்லைனு சொன்னாராம்.”
“பாட்டி ராதாவுக்கு ஏன் கிருஷ்ணரை அத்தனை பிடித்தமாம்?”
“ம்ம் உனக்கு இந்த கிருஷ்ணன்னா இஷ்டமோல்யோ அது மாதிரி தான்..”
“ஏன் பாட்டி அப்போ நம்ம ஆண்டாளும் பெருமாளைத் தானே கல்யாணம் பண்ணிண்டா?அது என்ன கதை?”
“டேய் கிருஷ்ணா..பெருமாளோட ஒவ்வொரு அவதாரமும் ஒரு காரணத்துக்காக தான் இருக்கும்.
உதாரணமா ஒரு தடவை திதிகளான அஷ்டமியும், நவமியும் திருமாலை தரிசிக்க ஶ்ரீவைகுண்டம் போனார்களாம்.
பெருமாளின் தரிசனத்தைப் பெற்ற அவை தங்களின் மனவருத்தத்தை அவரிடம் கூறி வருத்தப்பட்டுதாம்.
“மக்கள் எந்த ஒரு விசேஷத்தையும் அஷ்டமி, நவமி ஆகிய இரு நாள்களில் செய்வதில்லைனும்,
எங்கள் இருவரையும் எப்போதும் ஒதுக்குகிறார்கள்” என்றும் மிகுந்த வேதனையுடன் திருமாலிடம் முறையிட்டனவாம்.
அவைகளின் மனக்கவலையைப் போக்க நினைத்த எம்பெருமான் அவைகளிடம் ஒரு வாக்குறுதியை அளித்தார்.
அஷ்டமி, நவமியை மக்கள் கொண்டாடும் வகையில் அந்த இரு நாள்களில், தான் அவதாரம் எடுப்பதாகக் கூறினார்.
தனது வாக்குறுதியை நிறைவேற்றவே அஷ்டமி திதியில் கிருஷ்ணனாகவும், நவமி திதியில் ராமனாகவும் அவதரித்தார்.
அந்த இரு தினங்களையே நாம் கோகுலாஷ்டமியாகவும், ராமநவமியாகவும் கொண்டாடிண்டு வரோம்.
அதே போல தான் நம்ம ஊர் ஆண்டாள் பிறந்த கதையும் பன்னிரெண்டு ஆழ்வார்கள்ல இருக்கும் ஒரே பெண் நம்மளோட அழகு கோதை தான்.
ஶ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் என்பவர் வாழ்ந்து வந்தார். அந்தணரான இவர் மலர்களைக் கொய்து மாலையாகக் கட்டி அதை ஶ்ரீவில்லிபுத்தூர் கோயிலுக்கு கொடுப்பதையே தன் முதல் கடமையாகக் கொண்டிருந்தார்.
அவர் இவ்வாறு தினமும் செய்து கொண்டிருக்கும்போது, ஒரு நாள் துளசி மாடத்தின் அருகே ஒரு பெண் குழந்தை இருப்பதைக் கண்டார். அக்குழந்தைக்கு கோதை என்று பெயரிட்டு அவரே வளர்த்தார்.
சிறு வயது முதலே கண்ணன் மீது பக்தியும், காதலும் கொண்டு வளர்ந்தாள்.
பருவ வயதை அடைந்ததும் கிருஷ்ணனையே மணக்க எண்ணினாள்.
அவள், தன் தந்தை பகவானுக்காக தொடுத்த மாலையை யாரும் அறியாதவாறு தன் கழுத்தில் போட்டு அழகு பார்ப்பாள்.
பின்னர், அம்மாலை அவள் தந்தையால் பகவானுக்கு சூட்டப்படும்.
அவள் இவ்வாறு தொடர்ந்து செய்யும்போது ஒருமுறை தன் தந்தையிடம் மாட்டிக்கொண்டாள்.
அவள் மீது கோபம் கொண்டு அவளைக் கடிந்த பெரியாழ்வார் அந்த மாலையைத் தூக்கி எறிந்து, மற்றொரு மாலையை இறைவனுக்கு சாற்றினார்.
அன்றிரவு அவரது கனவில் தோன்றிய இறைவன் கோதை சூடிக் கொடுக்கும் மாலையே தனக்கு உகந்தது என்றும், அதையே தாம் அணிய விரும்புவதாகவும் கூறி மறைந்தார்.
இதனாலேயே கோதை ‘சூடி கொடுத்த சுடர்க்கொடி’ என்று அழைக்கப்படுகிறாள். மேலும், அவள் இறைவனை தன் அன்பினால் ஆண்டதால் ஆண்டாள் எனவும் சிறப்பிக்கப்படுகிறாள்.
கண்ணனை மணப்பதுப் போல் கனவு ஒன்றினைக் கண்ட கோதை அதைப் பின்வரும் பாடலாகத் தன் தோழியிடம் விவரிக்கிறாள்,
மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாம நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான்
திருமண வயது வந்ததும் அவள் தான் திருவரங்கம் இறைவனையே மணக்க விரும்புவதாகக் கூறினாள்.
இதனால் குழப்பமடைந்த பெரியாழ்வாரின் கனவில் தோன்றிய திருவரங்கநாதர் அவளை மணப்பெண் அலங்காரம் செய்து தன் திருக்கோயிலுக்கு அழைத்து வர கட்டளையிட்டார்.
அவ்வாறே பெரியாழ்வாரும் செய்ய மணப்பெண் அலங்காரத்துடன் கோதை திருவரங்க நாதரின் கருவறைக்குச் சென்று இறைவனுடன் இரண்டறக் கலந்துவிட்டாள்.”
“அப்போ நான் பெரியவளானப்பறம் பெருமாளை கல்யாணம் பண்ணிக்கனும்னு வேண்டினா பெருமாள் சம்மதிப்பாரா பாட்டி?”
“அடிப்போடி இந்த கலிகாலத்துல மனசுக்குப் பிடிச்ச மாங்கல்யம் அமையுறதே பெரிய பாக்கியம் தான்.
பெருமாள் தன்னை மாதிரியே நல்லதொரு துணையை நோக்கு அனுப்பி வைப்பார்.
அவன் உன்னை கடைசி வரை கண்கலங்காம பார்த்துப்பான்.
இப்போ போய் விளையாடுங்கோ இரண்டு பேரும் போங்கோ..”என்று விரட்டினார்.
கடவுளின் காதலே திருமண பந்தத்தில் நிறைவடையாத சூழ்நிலை இருக்கும்போது மானிடர்களின் விருப்பங்கள் அனைத்தும் அத்தனை இலகுவாய் கைதேர்ந்திடுமோ?!
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
2 comments
Super💕
Very nice