“நிலத்துக்கு அணி என்ப, நெல்லும் கரும்பும்; குளத்துக்கு அணி என்ப தாமரை; பெண்மை நலத்துக்கு அணி என்ப, நாணம்; தனக்கு அணி தான் செல் உலகத்து அறம்.
நெல்லும், கரும்பும், வயலுக்கு அழகு சேர்க்கும். தாமரை மலர்கள் குளத்துக்கு அழகு சேர்க்கும். நாணம் பெண்ணுக்கு அழகு. மறுபிறவியில் வீடுபேறு அடைய செய்யப்படும் அறம் ஒருவனுக்கு அழகாகும்.”
மறுநாள் காலை ப்ரஜீஷ் கூறியிருந்தது போல் கிளம்பித் தயாராகி ஏழு மணிக்கு தனதறையை விட்டு வெளியே வந்துக் காத்திருந்தாள் அபூர்வா.சில நொடிகளில் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தவனைப் பார்த்தவளுக்கு முன்தின நினைவுகள் மேலெழும்ப சட்டென நிற்கும் இடம் உணர்ந்து தன்னைச் சரிப்படுத்திக் கொண்டாள்.
அவள் ஒன்றும் கூறாமல் தன்னையேப் பார்த்திருப்பதைக் கண்டவன்,
”குட் மார்னிங்..போலாமா இல்ல இங்க இப்படியே நான் உட்காருறேன்..நின்னு பார்த்துட்டே இருக்கியா?”
“அது..சா..சாரி…குட்மார்னிங்…போலாம்…”,என்றவள் அவனுக்கு வழிவிட்டு நிற்க கம்பீரமாய் முன்னே நடந்தவனைப் பார்த்தவளுக்கு ஆச்சரியமாய் இருந்தது.இத்தனை நாட்களில் அவளிடம் தேவையற்ற ஒரு பார்வையோ தவறான பேச்சுகளுளோ எதுவுமே இருந்ததில்லை அவனிடத்தில்.
அப்படியிருக்க இதெல்லாம் ஏன் என்ற கேள்வி எழாமலில்லை.இருந்தும் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவனோடுச் சென்று காரில் அமர்ந்தவளை நோக்காது வெளியே பார்வையைத் திருப்பியபடியே,
“என்ன இன்னைக்கும் திட்டணும் போல இருக்கு…ஆனா திட்ட முடியலையேனு நினைக்குறியா?”
“என்ன??”
“ம்ம் நீ தான் யாரு தப்பு பண்ணிணாலும் தைரியமா வாதாடுவியே இப்போ என்னாச்சு?”
“!!!”
“அட என்ன இவ்வளவு அமைதி…”
“இதெல்லாம் தேவை தானா சார்…சாரி ப்ரஜீஷ்…”,அவளின் இந்தக் கேள்விக்கு கேள்வியாய் ஒரு பார்வை அவனிடத்தில்.
“இல்ல..நீங்களா இதைப் பத்தின பேச்சை ஆரம்பிச்சுட்டீங்களேனு தான் கேட்டேன்..இதெல்லாம் உங்க பேரைக் கெடுக்குற விஷயம் தான…”
“அடுத்தவங்க என்ன நினைப்பாங்கனு நினைச்சு என் வாழ்க்கையை வீணாக்க சொல்றியா?”
“அது அப்படியில்ல..அடுத்தவங்க நம்மளை பத்தி நினைக்குறது மட்டும் இல்ல..ஒருத்தர் மூலமா மத்தவங்க கிட்ட உங்களைப் பத்தித் தேவையில்லாத பேச்சு…இதுக்கெல்லாம் நாமளே ஏன் காரணமா இருக்கணும்..”
“சீ..இந்த உலகத்துல நீ என்ன பண்ணிணாலும் உன்னைப் பத்தி காசிப் பேசுறவங்க பேசிட்டே தான் இருப்பாங்க..அவ்ளோ ஏன் உன்னைப் பத்தி யாரும் எதுவும் பேச மாட்டாங்கனு நினைக்குறியா?
அதுக்கெல்லாம் கவலைப்பட்டா லைஃபை சந்தோஷமா வாழவே முடியாது..இப்போ தான வெளி உலகத்தைப் பார்க்க ஆரம்பிச்சுருக்க போகப் போக எல்லாம் உனக்கும் புரியும்..”
“……”
“ஆனாலும் இந்த சின்ன அறிவை வச்சு நிறைய யோசிக்குற நீ…குறிப்பா என் விஷயத்துல…தேவையில்லாம உன்னை நீயே குழப்பிக்காம வேலையை பாக்குறது தான் உனக்கும் நல்லது…அதை விட எனக்கு நல்லது..”என்றபடி மீண்டும் வெளியேப் பார்வையைத் திருப்பிக் கொண்டான் ப்ரஜீஷ்.
அவர்கள் செல்ல வேண்டிய அலுவலகத்தை அடைந்து அங்கு அவர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த காலை உணவை முடித்துவிட்டு மீட்டிங்கிற்குச் சென்றனர்.அடுத்த இரண்டு மணி நேரமும் காரசாரமான விவாதங்கள் ஆலோசனைகள் என நேரம் நகர அங்கிருந்து இருவரும் கிளம்பி தங்களது ஹோட்டலுக்குத் திரும்பும் நேரம் யாரும் எதிர்பாரா வண்ணம் அந்த விபத்து நடந்தது.
ப்ரஜீஷின் கார் சென்றுக் கொண்டிருந்த நேஷனல் ஹைவேயில் பின் வந்த லாரி அவர்களது காரை அத்தனை வேகமாய் இடித்து தள்ளிய நொடி கார் தலைகீழாய் சரிந்திருந்தது.
ப்ரஜீஷ் தன் பக்கக் கதவைத் திறக்க முயற்ச்சிக்க கால் எதிலோ வகையாய் மாட்டிக் கொண்டிருந்தது.வலியின் வீரியத்தில் முகம் சுழித்தவன் தனது மறுபுறம் பார்க்க அபூர்வாவோ பேச்சு மூச்சின்றி இருந்தாள்.டிரைவரிடமும் எந்தவித அசைவும் இருந்ததாய் தெரியாமலிருக்கச் சிறிது நிமிடங்களில் அங்கு கூடிய கூட்டத்தில் இருந்த மக்கள் சேர்ந்து அவர்கள் மூவரையும் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றனர்.
ஆம்புலன்ஸில் ஏற்றிய பின்னும் அபூர்வா கண் திறக்காமலே இருக்க ப்ரஜீஷோ வலியின் தாக்கத்தில் மயக்கத்திற்குச் சென்றிருந்தான்.
அங்கு அவனுக்கும் அபூர்வாவிற்கும் சிகிச்சை ஒரு புறம் தொடங்கியிருக்க, அவனின் அடையாள அட்டைகளையும் மீட்டிங்கிற்கு எடுத்து வந்தக் கோப்புகளையும் கொண்டு அந்தக் கம்பெனியில் தொடர்பு கொண்டு சம்மந்தப்பட்டவர்களிடம் தகவல் தெரிவிப்பதற்கான வேலைகள் ஒரு புறம் நடந்துக் கொண்டிருந்தது.
ப்ரஜீஷிற்குக் காலில் ஏதோ குத்திக் கிழித்திருக்க உடனடியாய் சர்ஜரி செய்ய வேண்டிய நிலையில் ஆபரேஷன் அறைக்கு மாற்றப் பட்டிருந்தான்.அபூர்வாவிற்கு நெற்றியில் சிராய்ப்புகளும் கையில் ப்ராக்ச்சர் ஏற்பட்டிருக்க அதிர்ச்சியில் மயக்கம் ஏற்பட்டிருந்தது.
இரண்டு மணி நேரம் கழித்து மயக்கம் தெளிந்தவளுக்கு எதுவுமே புரியாத நிலை..தலை பாரமாய் இருக்க ஒரு கையில் ட்ரிப்ஸ் ஏறுவதும் மறு கையையும் அசைக்க முடியாத நிலையில் இருப்பதாய் உணர்ந்தவள் வலியில் முகம் சுளித்தாள்.
“அபூர்வா…”
“ராஜீவ் ணா…நீங்க..”
“எதுவும் ஸ்ட்ரெயின் பண்ணிக்காத டா..நத்திங் டு வொரி…”
“ப்ரஜீஷ்???!!”
“அவனும் நல்லாயிருக்கான்..ஒரு சின்ன சர்ஜரி நடந்துருக்கு இன்னும் அனஸ்தீஷியா தெளியல…”
“……”
“நீ எதுவும் போட்டுக் குழப்பிக்காத…உன் ரூம் மேட்க்கு இன்பார்ம் பண்ணிட்டேன்..அவங்க உன் அப்பா அம்மாகிட்ட பேசிக்குறேன்னு சொல்லிருக்காங்க…சரியா…”
அவன் பேசியதற்குப் பதில் சொல்லும் நிலையில் கூட இல்லாதவளாய் மருந்தின் வீரியத்தில் மீண்டும் கண்ணயர்ந்திருந்தாள்.ப்ரஜீஷ் கண் விழிக்கும் வரை அங்கிருந்தவன் அவன் வீட்டிலும் யாருக்கும் எதுவும் சொல்லவில்லை..மீடியாவிற்குத் தெரிந்தால் பிரச்சனையாகிவிடும் என்பதால் அப்படியே அமைதி காப்பதாகக் கூறினான்.
மறுநாள் வரை அங்கு இருந்தவனை ப்ரஜீஷ் இதன் பின்னனியில் இருப்பவர்களைப் பற்றித் தெரிந்தே ஆக வேண்டும் என்றுக் கூறி ஊருக்கு கிளம்ப வைக்க மருத்துவர்களோ மூன்று நாட்களாவது ப்ரஜீஷ் இங்கு இருந்து ஆக வேண்டும் என்று கூறினர்.அது மட்டுமன்றி குறைந்தது பத்து நாட்களுக்காவது பயணம் மேற்கொள்ளக் கூடாது என்றும் கூறியிருந்தனர்.
என்ன செய்வதெனப் புரியாமல் அங்கிருந்த ப்ரஜீஷின் நண்பன் ஒருவனின் கெஸ்ட் ஹவுஸில் அவனைத் தங்க வைக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.அதுவும் இருக்கும் நிலையில் அவனை இங்குத் தனிமையிலும் விட முடியாது.அபூர்வாவின் உடலுமே மிகவும் சோர்வாய் இருப்பதால் இருவரையும் பிரச்சனைகள் முடியும் வரை அங்கேயேத் தங்க வைக்கலாம் என்று நினைத்தான் ராஜீவ்.
இருந்த குறுகிய நேரத்தில் அத்தனை வேலைகளையும் முடித்துவிட்டு அவர்களுக்கென ஒரு அட்டெண்டரை நியமித்துவிட்டு இருவரிடமும் சொல்லாமலேக் கிளம்பியிருந்தான்.
மறுநாள் சற்றே அமரும் அளவிற்குத் தெளிவாகியிருந்தவள் ப்ரஜீஷைப் பார்த்து வருவதாய் கூறி அவனது அறையை விசாரித்து மெதுவாய் நடந்துச் சென்றாள். அவனது அறையில் கண்மூடி அவன் படுத்திருக்க தூங்குகிறான் என்று எண்ணியவளாய் சத்தம் எழுப்பாமல் திரும்பி விடலாம் என்று மெதுவாய் திரும்பிய நேரம்,
“எப்படியிருக்க?”, என்றவன் தன் கையிலிருந்த ரிமோர்ட் கொண்டு கட்டிலை லேசாய் உயர்த்தி சாய்ந்தவாறு அமர்ந்தான்.
“நீங்க ஏன் சாரி எல்லாம் சொல்றீங்க…இது ஒரு விபத்து இதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க?”
“இல்ல..இது எனக்காக வைக்கப்பட்ட குறி..”
“என்ன??!”
“ம்ம்ம்..யாருனு நாளைக்குள்ளத் தெரிஞ்சுரும்..கொஞ்சம் கேர்லெஸா இருந்துட்டேன்..ஆனா என் விஷயத்துக்குள்ள உன்னை இப்படித் தேவையில்லாம…ஐ மீன் இட் ஐ அம் சாரி..”
அத்தனை பொறுமையாய் பொறுப்பாய் ப்ரஜீஷ் பேசி அபூர்வா இப்போது தான் பார்க்கிறாள்.அதுவே அவளை மேற்கொண்டு எதுவும் பேச விடாமல் செய்திருந்தது.
“கை வலி இருக்கா?”
“இல்ல…அட்ஜெஸ்ட் பண்ற அளவு தான்…ஒண்ணும் பிரச்சனையில்ல…எப்போ டிஸ்ஜார்ஜ்?”
“நாளைக்குள்ள பண்ண சொல்லிக் கேட்டுருக்கேன்..ஆனாலும் ட்ராவல் பண்ணக் கூடாதுனு சொல்லிட்டாங்க…சோ இங்கேயே ராஜீவ் ஏதோ அரேன்ஜ்மெண்ட் பண்ணிருக்கான்…பத்து நாள்ல நம்ம அடுத்த செக் அப் முடிச்சுட்டு கிளம்பிரலாம்…”
“பத்து நாளா??அதுவரை வீட்ல என்ன சொல்றது?போன் வேற…”
“டோண்ட் வொரி நாளைக்கு இங்க இருந்து கிளம்பும் போது உன்னோட பழைய நம்பரோட புது போன் உன் கையில இருக்கும்…”
“உங்க வீட்டுக்கும் இது பத்தி தெரியாதா?”
“இல்ல..சொன்னா தேவையில்லாம எல்லாருக்கும் விஷயம் போகும்..முக்கியமா இந்த மீடியா…ஐ ஹேட் தட்…”
“ம்ம்…சரி நீங்க ரெஸ்ட் எடுத்துக்கோங்க…நான் அப்பறமா வரேன்..சும்மா பாக்கலாம்னு தான் வந்தேன்..”
“ஓகே…தேங்க் யூ…”,என்றவள் சிநேகமாய் சிரித்து நகர்ந்திருந்தாள்.மறுநாள் காலையிலேயே அத்தனை பார்மாலிடீஸையும் முடித்துவிட்டு இருவரையும் டிஸ்சார்ஜ் செய்திருந்தனர்.ப்ரஜீஷால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாத நிலையில் வீல் சேரில் தான் அழைத்துச் சென்றனர்.
தினமும் பிஸியோதெரபிஸ்ட் வந்து கவனித்துக் கொள்வார் என்று ராஜீவ் கூறியிருந்தான்.தனதறையிலிருந்து வெளியில் வந்ததிலிருந்தே கடுகடு முகத்தோடே இருந்தான் ப்ரஜீஷ்.அபூர்வா அதைக் கவனித்தாலும் ஒன்றும் கேட்டுக் கொள்ளவில்லை.
அவர்களுக்கென ஏற்பாடு செய்திருந்த ப்ரஜீஷின் நண்பனின் கெஸ்ட் ஹவுஸ் ப்ரம்மாண்டமாய் அவர்களை வரவேற்றது.அங்கு உள்ளே வந்து அவனறையில் கட்டிலில் ப்ரஜீஷை அமர்ந்திவிட்டு நர்ஸ் கிளம்பிச் செல்ல ஆத்திரமாய் அங்கு இருந்த ஜாடியைத் தூக்கி எறிந்திருந்தான்.
திடீரென கேட்டச் சத்தத்தில் ஹாலில் அமர்ந்திருந்தவள் பதட்டமாய் அங்கு சென்று எட்டிப் பார்க்க தலையில் கை வைத்த வண்ணம் சோர்வாய் அமர்ந்திருந்திருவனைப் பார்ப்பதற்கு அவளுக்கே ஒரு நொடி கஷ்டமாகி விட்டிருந்தது.