“மலைப்பினும், வாரணம் தாங்கும்; குழவி, அலைப்பினும், ‘அன்னே!’ என்று ஓடும்; சிலைப்பினும், நட்டார் நடுங்கும் வினை செய்யார்; ஒட்டார் உடன் உறையும் காலமும் இல்
பாகன் தன்னைப் பொருதாலும் யானை அவனைச் சுமந்து செல்லும். தாய் தன்னை அடித்தாலும் குழந்தை அன்னையை நாடிச் செல்லும். தவறு கண்டு நண்பர் கடிந்துரைத்தாலும் நண்பர் நடுங்கும்படியான செயலைச் செய்யமாட்டார். ஆனால் பகைவரோ எப்போதும் ஒன்று பொருந்தி வாழ்வதில்லை.”
அபூர்வாவிற்கு உள்ளுக்குள் அத்தனை பயம் இருந்தாலும் அவனை நேரில் சென்று சந்தித்திடச் சென்றாள்.வீட்டின் பிரம்மாண்டமும் அங்கிருந்த கார்களின் அணிவகுப்பும் அவளது பயத்தை பல மடங்கு அதிகரித்திருந்தது.
வரவேற்பறையில் அமர்ந்திருந்த மோகனும் சௌமியாவும் ராஜீவோடு வந்தவளைக் கேள்வியாய் நோக்க அவர்கள் பார்வையின் அர்த்தம் உணர்ந்தவனாய் ராஜீவ் அவனாகவே பேச்சைத் தொடங்கினான்.
“ப்பா..ப்ரஜியைப் பார்த்துட்டு போலாம்னு வந்தேன்..அப்படியே இவங்க ப்ரஜியோட செகெரட்டிரி சில சைன் வாங்கணும் அதான் அப்படியே கூட்டிட்டு வந்தேன்..”
“ஓ..சரி மாடில அவன் ரூம்ல தான் இருக்கான் போங்க..”,என்றவரின் பார்வை அபூர்வாவையேத் தொடர்ந்தது.
“ஏங்க இந்தப் பொண்ணு அன்னைக்கு ஹாஸ்பிட்டல்லேயும் இருந்தா தான?”
“ம்ம் ஆமா சௌமி…நானும் அதான் யோசிச்சேன்…எவ்வளவு முக்கிய வேலைனாலும் ராஜீவைத் தவிர யரையும் வீட்டுக்கு கூப்பிட மட்டானே…பார்க்கலாம்..”,என்று அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.
அங்கு ப்ரஜீஷோ அவளைப் பார்த்ததில் கண்களிலேயே கோபம் தெரிக்க அமர்ந்திருந்தான்.ராஜீவ் அவனைச் சமாதானப்படுத்தும் நோக்கத்தில் ஏதோ கூற வர அப்படியே கைக் காட்டி நிறுத்தியவனாய் அவனை வெளியே காத்திருக்குமாறு கூறினான்.
“ப்ரஜி டேய்…”
“ப்ளீஸ் ராஜீவ்..இப்போ நான் நினைச்சா கூட உன் தங்கச்சியை எதுவும் பண்ற அளவு தெம்பு இல்ல..சோ தைரியமா போய் வெளியே வெயிட் பண்ணு…”
அதற்கு மேல் அவனை கோபப்படுத்த விரும்பாதவனாய் ராஜீவ் வெளியே சென்று கதவை சாற்றிய அடுத்த நொடி கிட்டதட்ட உறும ஆரம்பித்திருந்தான் ப்ரஜீஷ்.
“என்ன நினைச்சுட்டு இருக்க நீ..பெரிய தியாகி மாதிரி எனக்கு வாழ்க்கைப் பிச்சை போடுறியா?இவனையெல்லாம் எவளும் கல்யாணம் பண்ணிக்க மாட்டானு முடிவே பண்ணிட்டியா..”
“ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க…”
“வேற எப்படி பேசச் சொல்ற ..நல்ல வேளை நா இந்த நிலைமையில இருக்கேன்னு நினைச்சுக்கோ…நல்லா இருந்தேன்னா யோசிக்காம கொலைப் பண்ணிடுவேன் உன்னை..”
“ப்ரஜீஷ்…”
“பேசாத அபூர்வா..இதை உன்கிட்ட இருந்து எதிர்பார்க்கல..நிஜமாவே என்ன நினைச்சுட்டு இருக்க என்னைப் பத்தி..”
“என்னைக் கொஞ்சம் பேச விடுறீங்களா….”,ஒருவித பிடிவாதம் அந்தக் குரலில்.கண்களில் எவ்வித கலக்கமுமின்றி அவனை ஏறிட்டவள் புதிதாய் தெரிந்தாள் அவனுக்கு.
“நான் அவசரத்துலேயோ இல்ல எந்தவித உள் நோக்கத்தோடயோ இதை சொல்லல..அப்பறம் நீங்க சொன்ன மாதிரி உங்களுக்கு பொண்ணே கிடைக்காதுனு வாழ்க்கையும் கொடுக்கல..
இதெல்லாம் யோசிக்காம நான் உங்ககிட்ட வந்து பேசிருப்பேனு உங்களுக்குத் தோணுதா..முதல்ல ஒரு விஷயத்தைப் புரிஞ்சுக்கோங்க…உங்களுக்கு வாழ்க்கைத் தர்ற அளவுக்கான இடத்துல நான் இல்லை..ஆனா இது எல்லாம் எனக்குப் பெருசா தெரியல.
ஏன் தெரியுமா உங்களை ஹாஸ்பிட்டல்ல அப்படி ஒரு நிலைமைல என்னால பார்க்க முடில..அன்னைக்கு உங்களை ஹாஸ்பிட்டல்ல சேர்த்துருக்காங்கனு தெரிஞ்சு ஹாஸ்பிட்டல்க்கு வர்றதுக்கு ஒரு பத்து நிமிஷம் ஆயிருக்கும் அதுகுள்ள எத்தனை முறை நான் செத்துப் பொழைச்சேன்னு எனக்குத் தான் தெரியும்..
ஒரு பிரண்டா அப்படி ஒரு உணர்வு வர்றது கூட சாதாரண விஷயம்னு வச்சுக்கலாம்..ஆனா கல்யாணம்ங்கிற விஷயத்தைச் சும்மா எல்லாம் யார்கிட்டேயும் பேசிட முடியாது..
கடைசி வரை வாழ்க்கையை ஒருத்தங்ககிட்ட ஒப்படைக்குறது ஒண்ணும் விளையாட்டு விஷயம் இல்ல..அதுவும் என்ன மாதிரி நடுத்தர குடும்பத்து பொண்ணுக்கு….
அவ்வளவு ஏன் உங்களுக்குப் பார்த்த பொண்ணுகிட்டே இந்த பீல் உங்களுக்குத் தோணிச்சா இல்லையே..அதனால கண்டதையும் போட்டுக் குழப்பிக்காம உங்களுக்கு இஷ்டமா இல்லையா னு மட்டும் சொல்லுங்க…
ஒரே நாள்ல பூத்த காதல்னு எல்லாம் பொய் சொல்ல மாட்டேன்..ஆனா கண்டிப்பா ஒருநாள் அந்தக் காதல் நமக்குள்ள வரும்..அப்படி இல்லனாலும் எப்பவுமே என் லைப் உங்ககிட்ட பாதுகாப்பா இருக்கும்..
இதே நம்பிக்கையை நானும் உங்களுக்குக் கொடுக்கணும்னு நினைக்குறேன்..அழகு பணம் வசதி இதெல்லாத்துலேயும் வேணா நான் உங்களை விட பலமடங்கு கம்மியா இருக்கலாம்..ஆனா உங்களுக்குக் கிடைக்க வேண்டிய அன்பும் பாசமும் என்கிட்ட கண்டிப்பா நிறையவே இருக்கு…
அவ்வளவு தான் நான் சொல்ல நினைச்சதை எல்லாம் சொல்லிட்டேன்..இன்னமும் உங்களுக்கு எதாவது தப்பா தெரிஞ்சா அதுக்கு நான் பொறுப்பாக முடியாது..வேற எதுவும் பேசுறதுக்கு இல்லைனா நான் கிளம்பலாமா?”
இத்தனை திடத்தோடு அபூர்வாவை அவன் பார்த்ததேயில்லை.வார்த்தையில் உண்மையும் தன் நோக்கத்தில் தெளிவும் இருக்கும்போது வரும் ஒருவிதமான திடம் அது.
உண்மையில் ப்ரஜீஷால் அவள் பேசியதற்கெல்லாம் பதில் பேச முடியவில்லை. பேசத் தோன்றவில்லை. எத்தனையோ பெண்களை உடலளவில் தெரிந்து வைத்திருந்தவனுக்கு வாழ்க்கையில் முதல் முறையாய் ஒரு பெண்ணின் அன்பு எப்படியிருக்கும் என்று தெரியத் தொடங்கியிருந்தது.
அவன் அமைதியாகவே இருப்பதைக் கண்டவள், ”உடம்பைப் பார்த்துக்கோங்க.. இப்பவும் எப்பவும் என் முடிவுல எந்த மாற்றமும் இல்லை.. இதனால யாரு என்னை எப்படி நினைச்சாலும் பரவால்ல.. அந்த யாரும்… அதுல நீங்களும்தான் அடக்கம்..உடம்பு சரியானதுக்கு அப்பறம் இதுக்கான முடிவைச் சொல்லுங்க..வரேன்..”,என்றபடி வெளியே சென்றவள் ராஜீவிடம் கூறிவிட்டுக் கிளம்பியிருந்தாள்.
ராஜீவ் என்ன நடந்ததோ என்றப் பதட்டத்தோடு ப்ரஜீஷைப் பார்க்க அவனோ தலையில் கை வைத்து அமர்ந்திருந்தான்.
“ப்ரஜி…”
“ஏன் இப்போ எல்லாம் எனக்கு புதுசு புதுசா இத்தனை விஷயங்கள் என்னைச் சுத்தி நடக்குதுனு தெரில ராஜீவ்..”
“….”
“அபூர்வா அவ முடிவுல ரொம்பவே உறுதியா இருக்கா…ஆனா எந்த விதத்துலேயுமே நான் அவளுக்குப் பொருத்தமேயில்லாதவன் டா…”
“டேய்…”
“ஆமா ராஜீவ் அவ மத்தவங்களுக்காக அன்பும் அக்கறையும் மட்டுமே காட்டப் பொறந்தவ…அந்த தூய்மையான அன்பு மொத்தத்தையும் எனக்குத் தரேன்னு சொல்லும் போது சுயநலமா சரினு சொல்லி ஏத்துக்க முடில..
அந்த எண்ணம்தான் கோவமா மாறிடுச்சு… சரி அப்படி பேசினாவாவது அவ எண்ணத்தை மாத்திப்பானு நினைச்சா… இவ்வளவு நேரமும் என்கிட்ட பேசும் போது ஒரு சின்ன நடுக்கம் கூட இல்லை அவளோட குரல்ல…அவளைப் பத்தி எதுவுமே யோசிக்காம என்கிட்ட வந்து நிக்குறா…இதெல்லாம் புதுசா இருக்கு ராஜீவ்…”
“ப்ரஜி டேய் இவ்வளவு எமோஷனல் ஆகக் கூடாது நீ..ரிலாக்ஸா இரு…பொறுமையா யோசிக்கலாம் என்ன பண்றதுனு.. எனக்குத் தோணுறதை சொல்லவா?”
“இல்ல இது ஒரு விதத்துல உன் ப்ரெண்டா என்னோட சுயநலம்னு கூட வச்சுக்கலாம்..பட் உண்மையா அவ கூட இருந்தா உன் வாழ்க்கை நிச்சயமா கலர்புல்லா இருக்கும்..நான் கூட உன்னை எப்படி சமாளிக்குறதுனு தெரியாம சில நேரத்துல முழிச்சுருக்கேன்..
ஆனா அவளை அறியாமலே அவ உன்னை மாத்துறா ப்ரஜி…அது தான் உண்மை…இப்போ நல்லா ரெஸ்ட் எடு…பொறுமையா யோசி..ஆனா நல்ல முடிவா எடு..வரேன் டா..”,என்றவன் ஆதரவாய் தோள் தட்டிச் சென்றான்.
மொத்தத்தில் இப்போது ப்ரஜீஷின் மனம் குழம்பிய குட்டையாய் இருந்தது.பணத்தையோ அழகையோ எதைப் பற்றியும் அவன் யோசிக்கவில்லை.சொல்லப் போனால் தனக்கு அவள் சரி வருவாளா என்று ஒரு தடவையும் யோசித்திருக்கவில்லை.
அவளுக்கு ஏற்றத் துணையாய் தான் இருப்போமா என்ற எண்ணமே அவனுக்குள் பிரதானமாய் இருந்தது.இருந்தும் எந்த ஒரு முடிவிற்கும் அவனால் உடனே வர முடிந்திருக்கவில்லை.
ஒரு மாத காலம் இப்படியே கடந்திருந்தது.அவரவர் வேலைகள் அதன் போக்கில் நடந்து கொண்டிருக்க அபூர்வாவோ எதுவுமே நடக்காதது போன்று வேலை சம்மந்தமாய் மட்டும் அவ்வப்போது அவனிடம் பேசினாள்.
இதற்கிடையில் மோகனும் சௌமியாவும் ஏதோ ஒன்று சரியில்லை என்று கணித்திருந்தனர்.இருந்தும் ப்ரஜீஷின் உடல்நிலைக் கருதி அவனிடம் எதையும் கேட்காமல் அமைதி காத்தனர்.
அப்படி இப்படியாய் ஒரு மாதத்திற்குப் பிறகு அலுவலகத்துக்குச் செல்லத் தயாராகியிருந்தான் ப்ரஜீஷ்.இத்தனை வருடத்தில் முதல்முறையாய் தயக்கம் என்ற ஒன்றை உணர்ந்தான்.
அபூர்வாவை எப்படி எதிர் கொள்வது எனத் தெரியாமல் குழம்பித் தவித்திருந்தான்.எது எப்படியாயினும் நடப்பதை எதிர் கொண்டு தான் ஆக வேண்டும் என்ற முடிவிற்கு வந்தவனாய் அலுவலகத்தை அடைந்தவன் தனதறைக்குச் செல்ல அழகிய பூங்கொத்து அவனது மேஜையிலிருந்து அவனை வரவேற்றது.
அதைக் கையில் எடுத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே பின்னால் கேட்ட அரவத்தில் திரும்பிப் பார்க்க புன்னகை முகமாய் நின்றிருந்தாள் அபூர்வா.
“குட்மார்னிங்…”,அந்த வாழ்த்தோடுச் சேர்த்து விழிகள் ஒரு முறை அவனது நலத்தைப் பரிசோதித்துச் சென்றிருந்தன.
“ம்ம்..”
“எப்படியிருக்கீங்க..”
“நல்லாயிருக்கேன்..நீ எப்படியிருக்க..”
“பைன்…”
“ம்ம் ராஜீவ் இன்னைக்கு லீவ்னு சொல்லிருந்தான்..”
“ஆமா..சொன்னார்.”
“….”
“….”
“இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே நிக்குறதா இருக்க…வேலைப் பாக்குற ஐடியா இருக்கா இல்லையா?”
“கண்டிப்பா இருக்கு..பட் அதுக்கு முன்னாடி எனக்கான பதில் இன்னும் சொல்லலையே..”
“என்ன பதில் வேணும் உனக்கு..எப்போ இருந்தாலும் ஒரே பதில் தான் முடியாது முடியாது..”
“இப்பவும் முடியாதுனு தான் சொல்றீங்களே தவிர பிடிக்காதுனு சொல்ல மாட்றீங்களே..”
சோர்வாய் தனது இருக்கையில் அமர்ந்தவன் வெளியே வெறித்தவாறு சில நொடிகள் மௌனமாகவே இருக்க அவனே பேசட்டும் என்று அவளும் அமைதி காத்தாள்.
“இது சரிப்பட்டு வராது அபூர்வா..புரிஞ்சுக்கோ…ஒருவேளை இது நடந்தா வாழ்க்கை முழுசும் நான் குற்றவுணர்ச்சியோடேயே வாழணும்.. அது தான் உனக்குத் தேவையா?”
“நீங்க எதையும் மறைச்சு இந்தக் கல்யாணத்தைப் பண்ணிணா தான் நீங்க சொல்ற குற்றவுணர்ச்சி இருக்கணும்..நான் எல்லாம் தெரிஞ்சு தானே கல்யாணத்தைப் பத்தி பேசுறேன்..”
“அது தான் பிரச்சனையே…என்னைப் பத்தி எல்லாமே தெரியும் உனக்கு அப்படியிருக்க சாதாரணமா ப்ரெண்டா பழகுறதுல வேணா பிரச்சனை இல்லாம இருக்குமே தவிர ஒரு மனைவியா முழு மனசோட வாழ்க்கை முழுசும் வாழ முடியாது..
எதோ ஒரு கட்டத்துல இப்படியெல்லாம் இருந்தவன் தானே நீனு உனக்குத் தோணிடுச்சுனா அதுக்கு மேல நான் வாழறதுக்கே அர்த்தம் இல்லாம போய்டும்..”
“நீங்க பண்ணத் தப்பை எல்லாம் மன்னிச்சு உங்களை ஏத்துக்குற அளவு மனப்பக்குவம் கண்டிப்பா எனக்குக் கிடையாது.அதுமட்டுமில்லாம நீங்க பண்ணதெல்லாம் தப்பே இல்ல..இந்த காலத்துல இதெல்லாம் சகஜம்னு என்னால சாதாரணமா எடுத்துக்கவும் முடியாது.
உங்ககிட்ட என் விருப்பத்தைச் சொல்லணும்னு நினைச்சப்போவே நான் முடிவு பண்ணது ஒரே விஷயம் தான்,என்னை உங்க வாழ்க்கைக்குள்ள ஏத்துகிட்ட அடுத்த நிமிஷத்துல இருந்து உங்களோட கடந்தகாலம் எதுவும் உள்ளே வரக் கூடாது.
ஒரு விஷயம் எப்பவும் நான் நினைக்குறது ஒண்ணு தான் யாரையும் ஜட்ஜ்மெண்டலா பாக்கக் கூடாது.அதுக்கும் மேலே அவங்களோட கடந்தகாலத்தை வச்சு ஒருத்தரைத் தீர்மானிக்கவே கூடாது.
நாம எல்லாருமே சாதாரண மனுஷங்க தான்..தப்பு பண்ணுவோம்..அந்த தப்பிலிருந்து ஒரு பாடம் கத்துப்போம்… வாழ்க்கையை மாத்திப்போம்..
ஒரு மாசத்துக்கு முன்னாடி உங்ககிட்ட பேசினப்போ மனசுல பெருசா எந்த எண்ணமும் எனக்கு இல்ல…ஆனா இப்போ மனசு மொத்தமும் நீங்க மட்டும் தான் இருக்கீங்க…
முதல் காதல் நிராகரிக்கப்படுற வேதனை உங்களுக்கு நல்லாவேத் தெரியும் சோ முடிஞ்சவரை அதை எனக்குக் கொடுக்காம பாத்துக்கோங்க.. இட்ஸ் மை ரெக்வெஸ்ட்…”, என்று அபூர்வா பேசி முடித்த நொடி ப்ரஜீஷின் இறுகிய அணைப்பிற்குள் இருந்தாள். அத்தனை இறுக்கமான அணைப்பில் ஒருநொடி திணறித்தான் போனாள்.
அவனது உயரத்திற்கு அவள் அவனது கைகளுக்குள் சிக்கிய சிறு பொம்மை போன்று இருந்தாள். பிடிமானத்திற்காக கைகள் நடுங்க என்ன செய்வதென தெரியாமல் லேசாய் அவனது முதுகில் கை வைத்த நேரம் அவளது நடுக்கத்தை உணர்ந்தவனாய் தன்னிடமிருந்து விடுவித்திருந்தான் ப்ரஜீஷ்.