“கன்றாமை வேண்டும், கடிய; பிறர் செய்த நன்றியை நன்றாக் கொளல் வேண்டும் – என்றும் விடல்வேண்டும், தன்கண் வெகுளி; அடல்வேண்டும், ஆக்கம் சிதைக்கும் வினை.
ஒருவர் செய்த தீமைகளுக்காக அவரைக் கறுவாமை வேண்டும். ஆனால் அவர் செய்த நன்மைகளை மறவாமை வேண்டும். நம்மிடம் தோன்றும் கோபத்தை விட வேண்டும். பிறரது முன்னேற்றத்தைத் தடுக்கும் தவறான செயல்களை ஒழித்தல் வேண்டும்”
அவன் மேலும் சில நிமிடங்கள் கைப்பேசியில் ஏதோ பேசிக் கொண்டிருக்க ஒன்றும் கூறாமல் அபூர்வா அப்படியே தனதறைக்குச் சென்றிருந்தாள்.எத்தனை முயன்றும் அவனின் வார்த்தைகள் காதுக்குள் ஒலித்துக் கொண்டேயிருந்ததை அவளால் தடுக்க முடியவில்லை.மதியமும் தனதறைக்கே உணவைக் கொண்டு வரச் செய்து சாப்பிட்டவள் மறந்தும் வெளியே செல்லவில்லை.
மாலை காபி கொடுப்பதற்காக வந்தப் பணிப்பெண் ப்ரஜீஷ் அவளை அழைப்பதாய் கூற மறுப்பதற்குத் தோன்றாமல் அவனறைக்குச் சென்றாள்.
“என்னாச்சு?பூல் கிட்ட பார்த்த அப்பறம் உன்னை காணவே காணும்..கை வலி எதுவும் இல்லையே?”
“இல்ல இல்ல அதெல்லாம் நல்லா தான் இருக்கேன்..”
“என்னாச்சு?”
“நத்திங்…கொஞ்சம் டயர்டா இருந்துது..அதான்..”
“என் கணிப்பு சரி னா…நான் ராஜீவோட பேசினது தான் உன்னை டிஸ்டர்ப் பண்ணிருச்சுனு நினைக்குறேன்..உண்மையா?”
“…….”
“அப்போ அது தான் விஷயம்…”
“நானும் அதைப் பத்தி பேக் கூடாதுனு தான் நினைக்குறேன்…ஆனாலும்…”
“என்னைக் கொல்றதுக்குத் துணை போனவனுக்குத் தேவையான தண்டனையை நான் கொடுத்தேன்..”
“யாரையும் தண்டிக்குற உரிமை நமக்கு இருக்கா?அதுவும் உயிரை எடுக்குற அளவு?”
“அப்போ என் உயிரை எடுக்குற உரிமையை அவங்களுக்கு யார் கொடுத்தது??”
“பழிக்குப் பழி வாங்க ஆரம்பிச்சா வாழ்க்கை முழுசும் அதுகுள்ளேயேத் தொலைஞ்சு போய்டுவோம்…”
“ஐ டோண்ட் கேர்..என் வழியில் குறுக்கே வராத வரை நானும் யாரையும் எதுவும் தொந்தரவு செய்ய மாட்டேன்..”
“….”
“….”
“சரி விடுங்க நான் எதாவது தேவையில்லாம பேசியிருந்தா மனசுல வச்சுக்காதீங்க..இதெல்லாமே எனக்குப் புதுசா இருக்கு…அதைவிட பயமா இருக்கு…வேற ஒண்ணுமில்ல..நான் கொஞ்ச நேரம் தூங்கிட்டு வரேன்…”,என்றவள் பதிலுக்குக் கூட காத்திராமல் அங்கிருந்துக் கிளம்பியிருந்தாள்.
அன்றைய நாளில் அதன்பின் பெரிதாய் எந்தவித பேச்சு வார்த்தைகளும் அவர்களுக்குள் இடம் பெற வாய்ப்பில்லாமல் போயிருந்தது.அடுத்த நாள் அதிகாலையிலேயே விழிப்பு வந்திருக்க அபூர்வா என்ன செய்வதெனத் தெரியாமல் சமையலறைக்குள் சென்று பணிப்பெண்ணுடன் தனக்குத் தெரிந்த ஹிந்தியைக் கொண்டு பேச்சை வளர்த்துக் கொண்டிருந்தாள்.
ஓரளவிற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் வெளியேச் சென்று வருவதாய் கூறிவிட்டு முந்தைய தினம் போலவே புல்வெளியில் நடந்த வண்ணம் சிறிது நேரம் நீச்சல் குளத்தில் சில நேரமெனச் சுற்றியவளைத் தனதறையில் இருந்துப் பார்த்துக் கொண்டிருந்தான் ப்ரஜீஷ்.
சிறு குழந்தையென இருந்தவளைப் பார்பதற்குச் சில நேரத்தில் உண்மையில் பொறாமையாய் இருந்தது அவனுக்கு.அந்த வயதில் அவளுக்கு இருக்கும் நிதானமும் சின்ன சின்ன சந்தோஷங்களும் அவனுக்குக் கிடைத்திருக்கவில்லை.
அதைவிட அவளது முகத்தில் இருக்கும் அந்த இலகுத் தன்மை அவனிடம் இருந்ததே இல்லை.தேவையற்ற சிந்தனைகளால் தேவையற்ற வெறுப்புகளால் அவனது வாழ்க்கையை அவனே மாற்றியிருந்தான்.
இப்போது அவனே நினைத்தாலும் அப்படிப்பட்ட சாதாரண வாழ்க்கைக்குத் திரும்புவது என்பது முடியாத காரியமாகி விட்டிருந்தது.தன் சிந்தனைகளிலிருந்து தெளிந்தவனின் எதிரிலிருந்தவள் அவனை நோக்கி கையசைத்துப் புன்னகைக்கப் பதிலுக்குத் தலையசைத்தவன் அப்படியே அமர்ந்திருந்தான்.
முந்தைய நாளின் சிந்தனைகளிலிருந்து தெளிந்திருக்கிறாள் என்பது அவளைப் பார்த்தவுடனேயே புரிந்தது.அவனுக்குத் தான் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு விதமாய் உணர்ந்தான்.கோபம் வெறுப்பு வருத்தமென அவனைப் போட்டு ஆட்டிப் படைத்தது ஒரு ஒரு நாளும்.
காலை நேர உணவிற்காக அவனை அழைக்க வந்தவள் அவனது வாடிய முகத்தைப் பார்த்து ஒன்றும் கூறாமல் வெளியேறியிருந்தாள்.சில நிமிடங்களில் பணியாள் அவனுக்கான உணவை வைத்து விட்டுச் செல்ல அதைக் கேள்வியாய் நோக்கியவனைப் பார்த்து புன்னகைத்தபடி உள்ளே வந்தாள் அபூர்வா.
“குட்மார்னிங்…”
“குட் மார்னிங்…”
“கால் வலி குறைஞ்சுருக்கா?”
“ம்ம்..மச் பெட்டர் இன்னைக்கு டாக்டர் வருவாங்க…”
“ஓ…சரி அப்போ சாப்ட்டு ரெடியா இருக்கலாமே…”,என்றவள் தட்டை அவனிடம் நீட்ட அதை வாங்கிக் கொண்டு அவளை அமருமாறு செய்கை செய்தான்.
“ஒண்ணு கேட்கலாமா?”
“சாப்பிடணுமா?இல்ல உனக்கு பதில் சொல்லணுமா??”
“ஐயோ…இல்ல இல்ல..சாப்டுங்க…”
“..”,இரண்டு நிமிடத்தில் வேகமாய் உணவை முடித்திருந்தவனை ஆச்சரியமாய் அவள் பார்த்திருக்க என்னவென புருவத்தை ஏற்றி இறக்கினான் ப்ரஜீஷ்.
“இல்ல இவ்வளவு வேகமா சாப்டீங்களே!”
“பொதுவா இதுக்கெல்லாம் நிறைய நேரம் ஒதுக்குறது இல்ல..”
“பொறுமையா ருசிச்சு சாப்பிடலனாலும் மென்னு முழுங்கணும்..அப்போ தான் உடம்புக்கு நல்லது..”
“நல்லா பாட்டி மாதிரி பேச எங்க இருந்துக் கத்துகிட்ட..”
அசடுச் சிரிப்பை உதிர்த்தவளாய்,”எல்லாம் அனுபவத்தில் கத்துக்கிட்டது தான்..அது மட்டும் இல்லாம கஷ்டப்பட்டு உழைக்குறது இந்தச் சாப்பாட்டுக்காகத் தான…அதையே நிதானமா சாப்பிடலனா எப்படி?”
“ஓ…இப்படி உயிருக்கு ஆபத்து வர்ற அளவு கஷ்டப்பட்டு வேலைப் பாக்குறது சாப்பிடுறதுக்காகவா?”
“ஆமா பின்ன வேற எதுக்கு?நினைச்ச நேரம் நினைச்ச சாப்பாடு கிடைக்குது…களைப்பா வேலையை முடிச்சு வந்தா தங்குறதுக்கு வீடு இருக்கு…வித விதமா போட்டுக்குறதுக்கு ட்ரெஸ் இருக்கு…இதுக்கு மேல என்ன வேணும்?”
“இப்படி நினைச்சுட்டா வாழ்க்கையில எப்படி முன்னேற முடியும்..நமக்கானத் தேவைகளை அதிகப்படுத்தும் போது தான் அதை லட்சியமா வச்சு நம்மளால சாதிக்க முடியும்…”
“இல்ல நான் சொன்னது எல்லாம் அடிப்படை…அதை மனசுல வச்சுக்கும் போது நமக்கான சாப்பாடை நாம ரசிச்சு சாப்பிடுவோம்..நமக்கு வீடுனு ஒண்ணு இருக்கேனு கடவுளுக்கு நன்றி சொல்வோம்..
இதுக்கு அடுத்தபடி தான் நம்மளோட தரத்தை உயர்த்திக்குறது.யாருமே அவங்க இருக்குற அதே நிலைமையில் எப்பவும் இருக்க நினைக்க மாட்டாங்க..ஏன் நானே அப்படி தான்..”
“ஏதோ சொல்ற ஒண்ணும் புரியல..”
“அதாவது இப்போ நீங்க எனக்கு ஒரு டேபிள் நிறைய வித விதமன சாப்பாடு எல்லாம் வச்சுட்டுப் பக்கத்துலேயே ஒரு பெட்டி நிறைய பணத்தையும் வச்சா என் கண்ணும் மனசும் சாப்பாடு பின்னாடி தான் போகும்…”,என்றவள் தன்னையும் மீறிச் சிரித்திருந்தாள்.
“எப்போ பார்த்தாலும் சாப்பாடு தானா?”
“ஹா ஹா எனக்கு அதைத் தவிர யோசிக்கப் பெருசா எதுவும் இல்லையே..எப்போவாவது சின்ன வயசுல சாப்பிடாம இல்லனா..யாரோ ஒருத்தர் சாப்பிடுறதை ஏக்கமா பார்த்துருக்கீங்களா?”
“ஆனா நான் அப்படி ஒரு நிலைமையில இருந்துருக்கேன்..அப்பாவும் அம்மாவும் பாதி சாப்பிட்டும் சாப்பிடாமயுமா எனக்கும் தங்கச்சிக்கும் சாப்பாடு கொடுத்துருக்காங்க..
அவங்க நிலைமைத் தெரிஞ்சு நாங்களும் எதுவும் பெருசா கேட்க மாட்டோம்..ஆனா ஸ்கூல்ல கூடப் படிக்குறவங்க யாராவது என்னைக்காவது பூரி கொண்டு வந்தா அதை ஒரு நொடியாவது வெறிச்சுப் பார்த்துருப்பேன்..
அப்பறம் வீட்டுக்கு வந்து நானும் என் தங்கச்சியும் அதைப் பத்தி பேசிப்போம்..ஆனா அம்மா அப்பாகிட்ட எதுவுமே சொல்லிக்க மாட்டோம்…இப்போ இங்க எனக்கு சாப்பிட கிடைக்குறதெல்லாம் பார்த்தா கூட அந்த பூரி தான் நினைவுக்கு வருது.
அடுத்ததா என் தங்கச்சிக்கு இதெல்லாம் வாங்கிக் கொடுக்கணும்னு தோணுது…போன மாசம் என் முதல் சம்பளத்தை அனுப்பிட்டு அம்மாகிட்ட முதல்ல சொன்னது இது தான்..அவ என்ன கேட்குறாளோ ஹோட்டல்ல வாங்கிக் குடுங்க…நல்லா சமைச்சுப் போடுங்கனு தான் சொன்னேன்..”,என்று அவள் போக்கில் பேசிக் கொண்டிருந்தவள் இப்போது குழந்தை உருவில் இருக்கும் மிகப் பெரிய மனம் கொண்ட மனிதியாய் தெரிந்தாள் ப்ரஜீஷிற்கு.
தான் அறியாத வாழ்வின் ஒரு பக்கம் இருக்கிறது என்பதை அந்த நொடியில் உணார்ந்தான்.இப்போது யோசித்துப் பார்த்தால் அவனுக்கு பசி என்ற ஒரு உணர்வைப் பெரிதாய் உணர்ந்ததாய் நினைவில் கூட இல்லை.நேரத்திற்கு அவன் கேட்கும் எதுவாயினும் அவன் முன் இருக்கும்.
அதிலும் பல நேரங்களில் ஒரு பங்கை மட்டும் உண்டுவிட்டு அப்படியேத் தூக்கிப் போட்ட உணவுகளும் உண்டு.அது இல்லாத,கிடைக்காத அல்லது தேவைப்படுகிற எத்தனையோ பேர் இருக்கிறார்கள் என்று ஏன் தனக்குத் தோன்றியதே இல்லை என்று எத்தனை எண்ணிப் பார்த்தாலும் விடை மட்டும் கிடைக்கவில்லை.
“ம்ம்..இப்போதைக்குத் தங்கச்சியை நல்ல படிக்க வைக்கணும்..அப்பா அம்மாக்கு நல்ல ட்ரெஸ் எடுத்துக் கொடுக்கணும்..இது சில்லியா கூட இருக்கலாம்..ஆனா ஏன் சொல்றேன்னா,எப்படி நமக்கு சோறு போடுற விவசாயி பட்டினில இருப்பாங்களோ..அப்படி தான் எங்க அப்பாவும்…
சின்னத் துணிக்கடை வச்சுருக்காரு ஆனாலும் நல்ல காஸ்ட்லியா ஒரு சட்டைப் போட்டு நான் பார்த்ததே இல்ல…
அப்பறம் எதிர்காலம் பத்தினு சொன்னா எனக்குக் கிடைக்காத எல்லாமும் என் குழந்தைக்குக் கிடைக்கனும்..அதைப் பூர்த்தி பண்றது தான் இப்போதைக்கு இருக்குறக் குறிக்கோள்.”
“லைஃப்ல நிறைய விஷயங்கள் நான் தெரிஞ்சுக்காமயே இருக்கேன்னு தோணுது..”
“அது அப்படியில்ல..நம்மளோட சூழ்நிலையும் கஷ்ட நஷ்டங்களும் தான் நமக்கு எந்த ஒரு விஷயத்தையும் புரிய வைக்கும்..நான் வளர்ந்த சூழல்ல இதெல்லாம் எனக்குத் தெரிஞ்ச விஷயம்…இப்போ உங்களை மாதிரி பெரிய பெரியத் தொழில்களைக் கவனிக்குறவங்களுக்குத் தெரிஞ்ச விஷயங்களில் ஒரு சதவிகிதம் கூட எனக்குத் தெரியாது அவ்வளவு தான். “
“ம்..நல்லா பேசுற…”
“நம்ம நிலைமை இப்படி பிக்பாஸ் வீடு மாதிரி ஆய்டுச்சே..வேற வழியில்ல அதான் உங்களைப் போட்டு இப்படி படுத்துறேன்..திரும்பவும் உங்களைக் கோவப்படுத்தாம இருக்கணும்னு நினைச்சுட்டே தான் பேசுறேன்..”
“என்னைப் பார்த்தா எப்பவுமே கோபபட்டுகிட்டு இருக்கிறவன் மாதிரி இருக்கா?”
“ஐயோ அப்படி சொல்லல..எப்போ கோபப்படுவீங்களோனு ஒரு சின்ன பயம்..”
“இதுக்கும் அதுக்கும் பெரிய வித்தியாசம் இருக்குற மாதிரி தெரியலையே…”
“அது…”
“லீவ் இட்…ஜஸ்ட் கிட்டிங்..”,எனும்போதே டாக்டர் வந்திருப்பதாய் பணிப்பெண் வந்து அழைக்க அபூர்வா எழுந்து வெளியேச் சென்றாள்.