103
“மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
விளக்கம்
“மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவர்உயர்ச்சி தாளாண்மை – தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்
விளக்கம்
ஒருவனுக்கு பசி தோன்றிய போது அவனிடத்தில் உள்ள சிறந்த குணங்கள் அனைத்தும் போய்விடும். இதை தான் “பசி வந்தால் பத்தும் பறக்கும்” என்பார்கள். அவை மானம், குலப்பெருமை, கல்வி, வலிமை, அறிவு, பிறருக்கு கொடுக்கும் குணம், தவம், பெருந்தன்மை, தளராத முயற்சி, தேன் போல் பேசும் மங்கையர் மேல் உள்ள ஆசை ஆகிய பத்தும் பறந்து போகும்.
ஆதர்ஷினிக்கு ஒன்பது மாதங்கள் முடிந்திருக்க அபிநயாவும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்திருந்தாள்.அன்று காயத்ரி அலுவலகத்திலிருந்து வந்த நேரம் சுவற்றைப் பிடித்துக் கொண்டு நடந்து கொண்டிருந்த ஆது பாப்பா தான் அவளை வரவேற்றாள்.
“ஹே ஆதுகுட்டி நடக்குறாளா..வாங்க வாங்க..”,என்றபடி அவளை கட்டித்தூக்கி தட்டாமாலைச் சுற்றினாள்.
“என்னால முடியல காயூமா..எங்க இரண்டு பேரையும் ஒரு நிமிஷம் உட்கார விடமாட்றா..”
“அச்சோ ஆது பாப்பா சமத்தாச்சே..பாட்டி தாத்தா பாவம் இல்லையா..சொன்ன பேச்சு கேட்கணும் தான..”,என்றவள் யூனிபார்மோடு அப்படியே உட்கார்ந்து விட்டாள்.
“காயூ போய் ட்ரஸை மாத்திட்டு வா..அப்பறம் அவ விடவே மாட்டா..”
“தோ போறேன் பா..அப்பறம் உங்களுக்கு இயர்லி செக்கப்க்கு அப்பாயிண்மெண்ட் போட்டாச்சுனு அபி சொன்னா பா..நாளைக்கு போகலாம்.ம்மா நாளான்னைக்கு உங்களுக்கு.
நானே கொண்டு போய் விட்டுறேன்.முடிச்சுட்டு வெயிட் பண்ணுங்க அன்பு இல்லைனா தம்பி வந்து கூப்பிட்டுப்பாங்க..”,என்றபடி குழந்தையோடு சில நிமிடங்கள் விளையாடியவள் மாடிக்குச் செல்ல இன்பா சோர்வாய் அமர்ந்திருந்தான்.
“என்ன டா அதுக்குள்ளே வந்துட்ட?”
“ம்ம் சும்மா தான் அண்ணி..”
“என்னாச்சு இன்பா?!”,என்றவள் எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.
“அண்ணி..கிருத்தி வீட்டில் விஷயம் தெரிஞ்சு பிரச்சனை ஆகிடுச்சு போல..”
“ஓ?!என்னவாம்?”
“வழக்கம் போல எதெல்லாம் பிச்சனையோ அதெல்லாம் தான் அண்ணி..இவ போன் பண்ணி ஒரே அழுகை.இப்போவே சென்னை கிளம்பி வாங்கிறா..எனக்கு என்ன பண்றதுனே புரில அண்ணி..”
“திடீர்னா எப்படி டா?”
“அதையே தான் நானும் சொல்றேன்.அட்லீஸ்ட் ஒரு இரண்டு நாள் டைம் கொடு எதாவது சொல்லிட்டு கிளம்புறேன்னு சொன்னேன்.அதுக்கும் ஒத்துக்க மாட்றா..”
“அவங்க வீட்டுக்கு நான் உன் அண்ணினு தெரியுமா?”
“!!!”
“சொல்லு இன்பா..”
“தெரியும் அண்ணி..”
“அதனால தான் கல்யாணத்துக்கு ஒத்துக்கலையா?”
“…”
“அப்போ அதான் காரணம்..”
“விடுங்க அண்ணி..நான் பார்த்துக்குறேன்..”
“கவலைப்படாத..நாளைக்கு நாம வரோம்னு சொல்லு..”
“அண்ணி?!!!!”
“அவளோட பெரியப்பா ஒரு மென்டல் டா..என்ன வேணும்னாலும் செய்வார்.வரேன்னு சொல்லு அவகிட்ட.. நான் அன்புகிட்ட பேசிட்டு சொல்றேன்”
“எதுவும் பிரச்சனை ஆகிட போது அண்ணி..”
“பார்த்துக்கலாம் விடு..”,என்றவள் எப்படி சூழ்நிலையை சமாளிப்பது என்று யோசிக்க ஆரம்பித்திருந்தாள்.
இரவு வீட்டிற்கு வந்த அன்புவிடம் இன்பாவின் காதல் விஷத்தைக் கூற அத்தனை ஆச்சரியம் இல்லை அவனிடத்தில்.
“ரொம்ப நாளாவே டவுட் டி அவன் மேல..”,என்றவன் சிரிக்க காயத்ரி தற்போதைய பிரச்சனையைக் கூறினாள்.
“உனக்கும் அவருக்கும் என்ன டி பிரச்சனை?ஊர் மொத்தம் ஒரண்டை இழுக்குறது தான் உன் வேலையா?”,என்றவன் முறைக்க காயத்ரி அதைவிட கோவமாய் அவனைப் பார்த்தாள்.
“என்ன பிரச்சனைனு சொல்லு..”
காயத்ரி சென்னையில் பணிபுரிந்த நேரம் ஒரு நாள் பணி முடிந்து நள்ளிரவைத் தாண்டி இரவு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது ஆள் நடமாட்டம் கம்மியான பகுதி ஒன்றில் சாலையோரமாய் இருசக்கர வாகனமொன்று விழுந்து கிடந்தது.
அதைப் பார்த்தவள் டிரைவரை வண்டியை நிறுத்துமாறு கூறிவிட்டு அருகில் சென்று பார்க்க வண்டியின் மறுபக்கம் சாலையில் இருந்து பார்த்தால் தெரியாதவாறு பின் நாற்பதுகளில் ஒருவர் இரத்தம் சொட்ட கிடந்தார்.
பதறிப் போனவளாய் நொடியும் தாமதிக்காது அவரை தன் காரில் ஏற்றி அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு மருத்துவரின் பதிலுக்காக காத்திருந்தாள்.
சிறிதுநேரத்தில் வெளியே வந்த மருத்துவர் காயத்ரியிடம் விஷயத்தைக் கூறினார்.
“ஹிட் அண்ட் ரன் மேம்.நல்ல ஸ்பீட்ல வந்துருக்காங்க கன்ட்ரோல் இல்லாம..வேகமா விழுந்ததில் அவருக்கு தலையில் நல்ல அடி கால் ப்ராக்சர்.இது இல்லாம மைனியூட் ப்ராக்ர்ஸ் இருக்கவும் வாய்ப்பு இருக்கு.எப்படியும் நார்மல் ஆகுறதுக்கு ஆறு மாசம் ஆகலாம்.”
“ஓ..சரி அவருக்கு வீட்டுக்கு இன்ஃபார்ம் பண்ணிடுங்க..மத்த ஃபார்மாலிட்டிஸ் எதுனாலும் எனக்கு சொல்லுங்க நான் பார்த்துக்குறேன் டாக்டர்..கிளம்புறேன்.”
“மேம் அவரு உங்களைப் பார்க்கணும்னு சொல்லுறாரு..”,யோசனையாய் உள்ளே சென்றவள் அவர் எதிரில் நின்றபடி அவரைப் பார்த்து தலையசைத்தாள்.
“ரொம்ப நன்றிங்க மேடம்..”
“பரவால்ல..உடம்பை பாத்துக்கோங்க..வேற எதுவும் உதவி வேணும்னாலும் சொல்லுங்க..”
“மேடம் நான் ஒரு ப்ரைவேட் கம்பெனியில் செக்கியூரிட்டியா வேலை பார்க்குறேன்.மாசம் பதினைஞ்சாயிரம் சம்பளம்.என்னை நம்பி தான் என் குடும்பமே இருக்கு டாக்டர் என்னென்னவோ சொல்றாரு..”
“உங்க கஷ்டம் எனக்கு புரியுது.என்னால முடியுற உதவியை கண்டிப்பா செய்யுறேன்.இடிச்சவங்க யாரு என்னனு எதுவும் தெரியுமா?”
“இல்ல மேடம் ஆனால் இடிச்சு நான் விழுந்த அப்பறம் மூணு பசங்க வந்து பார்த்தாங்க..நான் அரை மயக்கத்துல உதவி பண்ண சொல்லி கேட்டேன்.ஆனால் அப்படியே விட்டுட்டு போயிட்டாங்க மேடம்.பெரிய இடத்து பசங்க மாதிரி இருந்தது.”
“எல்லாம் அப்பன் காசுல ஆட்டம் போடுற கூட்டமா தான் இருக்கும்.சரி நான் பார்த்துக்குறேன்.நீங்க உடம்பை பார்த்துக்கோங்க.”,என்றவள் மறுநாள் விபத்து நடந்த இடத்திற்குச் சென்றாள்.
சீசீடிவி காட்சிகள் ஏதேனும் கிடைக்குமா என்று நோட்டம்விட எதுவும் இருந்திருக்கவில்லை.சற்று தூரம் தள்ளி ஒரு கடையிலிருந்து கிடைத்த சீசீடிவி காட்சியில் அவர் கூறிய நேரத்தை வைத்துத் தேடி எடுத்தபோது நான்கு கார்கள் சந்தேக வட்டத்திற்குள் வந்தன.
அதன்பின் அதன் உரிமையாளர்கள் விவரத்தை சேகரித்தவளுக்கு விபத்திற்கு காரணமானவர்களை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது.
கே எப் இன்டஸ்ட்ரீஸோட வாரிசு அஷ்வின் தான் குற்றவாளி என்று முடிவெடுத்தவள் அவனை கைது செய்ய சென்ற போது தான் அருணாச்சலத்தை முதன்முதலில் சந்தித்தாள்.
பணச்செருக்கு அளவுக்கு அதிகமாகவே தெரிந்தது அவரிடத்தில்.கண்களில் ஒரு ஏளனம் நீயெல்லாம் எனக்கு நிகரா என்பதான பார்வை காயத்ரியின் கோபத்தை இன்னும் அதிகரித்திருந்தது.
தன் பணத்திற்கும் அந்தஸ்திற்கும் வளைந்து கொடுக்கும் போலீஸையே பார்த்து பழகிய அவருக்கு காயத்ரியை சமாளிப்பது கடினமாய் இருந்தது.
அனைத்தையும் மீறி அஷ்வினை பிடித்து எப்ஐஆர் பதிவு செய்துவிட்டாள்.தன்னை கோர்ட் வாசலை மிதிக்கும்படி செய்து விட்டாளே என்று தீராத கோபம் அவருக்கு.
அதன்பின் எத்தனை வழிகளில் முயன்றும் மகனுக்கான தண்டனையையும் அடிபட்டவருக்கு நஷ்டஈடையும் கொடுக்காமல் இருக்க முடியவில்லை.
அன்றிலிருந்து காயத்ரிக்கு அவர் கொடுக்காத தொல்லைகளே இல்லை.பல வழிகளில் அவளுக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருந்தார்.
காயத்ரிக்கு அவர் தான் என்று தெரிந்தாலும் பெரிதாய் அலட்டிக் கொள்ளாமல் தன் வேலையைப் பார்க்க அந்த சூழ்நிலையில் நடந்தது தான் காயத்ரி தலைமையிலான என்கௌண்டர்.
இறந்தவன் அருணாச்சலத்தின் நெருங்கிய நண்பனின் மகன்.அத்தனை நாள் கண்ணாமூச்சி ஆடியவர் கொதித்தெழுந்து காயத்ரியைப் பார்ப்பதற்கு நேரிலேயே வந்துவிட்டிருந்தார்.
“டி எஸ் பி நீ கை வைச்சுருக்குறது எவ்வளவு பெரிய இடம்னு தெரியுமா?”
“ஓ நல்லா தெரியுமே சின்ன பொண்ணுனு கூட பார்க்காம அவளை நாசம் பண்ணின ஒரு கேடு கெட்டவனுக்கு வக்காலத்து வாங்குற மிகப் பெரிய இடம்னு நல்லாவே தெரியுமே..”
“வேணாம் காயத்ரி…”
“சும்மா கத்தாதீங்க..கொலைவெறியில் இருக்கேன் உங்க மேல..இப்போ என்ன வேணும்?”
“என் நண்பனோட புள்ளை சாவுக்கு நீ பதில் சொல்லியே ஆகணும்..”
“பெரிய தியாகி செத்துருக்கான் அதுக்கு நீங்க நியாயம் தேடி வந்தீங்களா?!கிளம்புங்க முதல்ல..இல்ல உங்க பையன் அந்த கேஸில் இரண்டாவது முக்கிய குற்றவாளினு சொல்லி உள்ளே தூக்கி வைச்சுருவேன்.கெட் அவுட்..”,என்று கர்ஜித்தவளை நிச்சயம் எதாவது செய்ய வேண்டும் என்ற வெறியில் நண்பனோடு சேர்ந்து அவளை கொலை செய்ய ஆட்களை ஏற்பாடு செய்து விட்டிருந்தார்.
“என்னடி சொல்ற??!”
“ஆமா அன்பு என்னை போட்டு தள்ள ப்ளான் பண்ணதுல கிருத்திகாவோட பெரியப்பாவும் ஒருத்தர்.”
“!!”
“இது உடனேவே எனக்குத் தெரியும் இருந்தாலும் அப்போ நான் அதை பெருசாக்க விரும்பல..அதுமட்டுமில்லாம நான் கோவை வர்றதுலேயே முழு கவனத்தோட இருந்ததுல அதைப் பத்தி யோசிக்கவும் தோணல.பட் இப்படி எல்லாம் லிங்க் ஆகும்னு நினைக்கலையே டா..”
“சரி விடு போய் பேசிப் பார்ப்போம்.ஆனால் ஒண்ணு உன் வாயை வைச்சுட்டு சும்மா இருக்கணும்..அட்லீஸ்ட் இன்பாக்காக..”
“கண்டிப்பா அன்பு..வீட்ல வேற எதாவது காரணம் சொல்லிட்டு கிளம்பலாம்.நீ நான் இன்பா..என்ன சொல்ற?”
“சரி டி நாளைக்கு எர்லி மார்னிங் கிளம்பிடுவோம்.நான் இன்பாகிட்ட பேசிக்குறேன்.”
அதன்பின் ஆளுக்கொரு விஷயத்தைக் கூறி மறுநாள் அதிகாலையிலேயே சென்னைக்கு கிளம்பியிருந்தனர்.
மதிய வேளையில் சென்னையை அடைந்தவர்கள் ஒரு ஹோட்டலில் உணவை முடித்துவிட்டு நேரே கிருத்திகாவின் வீட்டிற்குச் செல்ல கதவைத் திறந்த பெண்மணி அவர்களைக் கேள்வியாய் நோக்கினார்.
“ஹாய் ஆன்ட்டி..நான் இன்பரசன்.”,என்றதும் புரிந்து கொண்டவராய் தலையசைத்து அவர்களை உள்ளே அழைத்து அமரச் செய்தார்.
சத்தம் கேட்டு ஓடி வந்த கிருத்திகா அன்னையின் அருகில் நின்றுகொள்ள அழுதழுது வீங்கிய முகத்தை பார்க்கவே பாவமாய் இருந்தது காயத்ரிக்கும் அன்புச் செல்வனிற்கும்.
கிருத்திகாவின் தந்தை அவர்களுக்கு வணக்கம் தெரிவித்து எதிர் இருக்கையில் அமர காயத்ரிக்கு இந்த திருமணத்தின் மீதான அவர்களின் விருப்பம் கண்கூடாகவே தெரிந்தது.
ஆக பிரச்சனைக்கு காரணம் அருணாச்சலம் தான் என்பதை புரிந்து கொண்டவள் அமைதியாய் அமர்ந்திருந்தாள்.
“என்ன சாப்பிடுறீங்க?”,என்று ஆரம்பித்த கிருத்திகாவின் தாயின் கேள்வி படிகளில் இறங்கி வந்த அருணாச்சலத்தின் தொண்டை செருமலில் அப்படியே நின்றுவிட்டிருந்தது.
“அடடே தி கிரேட் டிஎஸ்பி காயத்ரி மேடம் எங்க வீட்டைத் தேடி வந்துருக்காங்களா..என்ன ஒரு அதிசயம்.”,அன்பு அழுத்தமாய் அவள் கரம் பற்றி அமர்ந்திருக்க இன்பா கடுப்பாய் அமர்ந்திருந்தான்.
அதற்குள் அங்கு வந்த அஷ்வின் இன்பாவை முறைத்துக் கொண்டு நிற்க கிருத்திகாவிற்கோ ஒரு ஒரு நொடியும் நெருப்பில் நிற்பதாய் இருந்தது.
“வணக்கம் சார் நான் இன்பாவோட அண்ணன் அன்புச்செல்வன்”,என்றவன் கிருத்திகாவின் தந்தையிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.
“ஹலோ அன்புச்செல்வன் உங்களைப் பத்தி கேள்விட்டுருக்கேன்.சொல்ல போனால் கோவை வந்தாலே உங்க ஹோட்டல் சாப்பாடு தான் எனக்கு.”
“ஓ நல்லது சார்..இவங்க காயத்ரி.”
“டி எஸ்பி மேடத்தைப் பத்தி தெரியாம இருக்குமா..”,என்றபடி அருணாச்சலம் கால் மேல் கால் போட்டு அமர காயத்ரிக்கோ எப்போது எரிமலை வெடிக்கும் என்ற நிலை தான்.
“என் தம்பியும் உங்க பொண்ணும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறாங்க.எங்க குடும்பத்தில் யாரும் காதலுக்கு எதிரி கிடையாது.நாலு அஞ்சு வருஷம் போகட்டும் நானே வீட்ல பேசுறேன்.உங்களுக்கு விருப்பம் இருந்தா..”
“அது வந்து..”
“என்ன டா தம்பி சுத்தி வளைச்சுகிட்டு..பட்டுனு சொல்லு இந்தம்மா இருக்குற வீட்ல எம்மகளை கல்யாணம் பண்ணி கொடுக்க சம்மதம் இல்லைனு..”
“….”
“இங்க பாருங்க தம்பி எனக்கு ஒளிவு மறைவா பேசி பழக்கமில்ல..எனக்கும் உங்க பொண்டாட்டிக்கும் சில மோதல்கள் இருக்கு.
அப்படியிருக்கும் போது எங்க வீட்டு பொண்ணை எப்படி உங்க வீட்டுக்கு மருமகளா அனுப்ப முடியும்.என் மேலேயோ என் பையன் மேலேயோ இருக்குற கோவத்துல எங்க வீட்டு பொண்ணு வாழ்க்கையை கெடுத்துட்டா..
அதனால இதெல்லாம் சரிப்பட்டு வராது.எங்க செல்ல பொண்ணு கிருத்திகா அவளுக்கு ஒரு கஷ்டம் வந்தா எங்களால தாங்கிக்க முடியாது.படிச்சவங்க புரிஞ்சுப்பீங்கனு நினைக்குறேன்.”
“எல்லாரோட வாழ்க்கையையும் நீங்களே முடிவு பண்ணிட்டா அவங்க என்ன தான் பண்ணுவாங்க?”,என்று சுள்ளென்று வந்தது காயத்ரியின் வார்த்தைகள்.
“பார்த்தீங்களா..இவ்வளவு தான் இவங்க பொறுமை.இதில் எப்படிங்க..”,என்ற அருணாச்சலத்தை பொருட்படுத்தாது கிருத்திகாவின் தந்தையை ஏறிட்டவளாய்,
“இங்க பாருங்க உங்க அண்ணன் என்னை கொலை பண்ணவே பார்த்தவரு.நியாயப்படி இந்தக் குடும்பத்தில் இருந்து பொண்ணு எடுக்குறதைப் பத்தி நாங்க தான் யோசிக்கணும்.
இவரு சொல்ற மாதிரியே வருவோம்.நாளைக்கே இவரு மறுபடியும் என்னை கொல்ல நினைக்க மாட்டாருனு என்னங்க நிச்சயம்?”,என்றவள் அன்புவின் கை அழுத்தத்தில் சற்று நிதானித்தாள்.
“சாரி..அவங்க இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறாங்க.அதைவிட வேற என்ன காரணம் வேணும் உங்களுக்கு.இந்த வீட்டு மருமகளா நான் சொல்றேன் இதைவிட நல்ல இடமா உங்க பொண்ணுக்கு கண்டிப்பா கிடைக்காது.
கொஞ்ச நாளுக்கு இந்த விஷயத்தை இப்படியே ஆற விடுங்க.பொறுமையா யோசிச்சு நல்ல முடிவா சொல்லுங்க.அதுக்குள்ள யார் யார் பேச்சையோ கேட்டுகிட்டு தேவையில்லாத வேலை பண்ணி உங்க பொண்ணு வாழ்க்கையை கெடுத்துக்காதீங்க..”,என்றவள் அருணாச்சலத்தை காட்டமாய் பார்த்து வைத்தாள்.
“என்ன அஷ்வின் டிஎஸ்பி மேடம் இவ்வளவு பொறுமையா எல்லாம் கூட பேசுவாங்களா..ஆச்சரியமா இருக்கே டா..”,மீண்டும் மீண்டும் அவர் நக்கலாகவே பேசிக் கொண்டிருக்க இன்பரசன் இடத்தை விட்டு எழுந்திருந்தான்.
“அண்ணா அண்ணி போலாம் வாங்க..”
“என்ன இன்பா?”
“பின்ன என்ன ணா..இவங்க பிரச்சனையை முடிக்க கூப்பிட்ட மாதிரி தெரியல..சும்மா எகத்தாளம் பேசிட்டு இருக்காங்க..நியாயமா கோவப்பட வேண்டிய அண்ணியே தணிஞ்சு போறாங்க..அது எனக்காக மட்டும் தான்.அது எனக்கு வேண்டாம்.
கிருத்தி வர சொன்னா அவளுக்காக வந்தோம் நம்ம பக்கத்தில் என்ன பேசனுமோ பேசிட்டோம் இதுக்கு மேல என்ன பண்ண முடியும்.என்னைக்கு இருந்தாலும் கிருத்திக்காக நான் காத்திருப்பேன்.இவங்க எப்போ மனசு மாறாங்களோ மாறட்டும்.
ஆனால் என்னைக்கா இருந்தலும் அவ அங்க அந்த வீட்ல உங்க எல்லார் கூடவும் தான் வாழணும்.அதில் எந்த மாற்றமும் இல்ல..போலாம் ணா..அண்ணி வாங்க..”,என்றவன் நிற்காமல் வாசல் வரை சென்றுவிட்டான்.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!