வரம்-25

by ஸ்ரீ
0 comments 102 views
A+A-
Reset

நீறில்லா நெற்றிபாழ்(;) நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக் (கு) அழகுபாழ் – மாறில்
உடன்பிறப் பில்லா உடம்புபாழ் (;) பாழே
மடக்கொடி இல்லா மனை

விளக்கம்
திருநீரோ, திருமண்ணோ இடாத நெற்றி வீணானதாகும்,
நெய்யில்லாமல் உண்ணும் உணவு வீணானதாகும்,
நீர் வளம் தரும் ஆறு இல்லாத ஊர் வீணானதாகும்,
ஒத்த கருத்து உடைய உடன்பிறப்பு இல்லாத உடம்பு வீணானதாகும், நல்ல குணங்கள் உள்ள மனைவி இல்லாத வீடு வீணானதாகும்,

அன்று மாலை காயத்ரி வீடு வரும் போது அன்பு ஹோட்டலின் கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்ன டா சீக்கிரமே வந்துட்டியாம்?”

“சும்மா தான் கண்மணி கணக்கு வழக்கு பார்க்க வேண்டியது இருந்தது சரினு அப்படியே கிளம்பிட்டேன்.”

“ஏன் அன்பு தேனு கல்யாணத்துக்கு எல்லாம் சேர்த்து வைச்சுருக்கியா?”

“என்ன டி திடீர்னு?”

“சொல்லேன்..”

“ம்ம் இருக்கு காயூ.அப்பாவோட ரிடையர்மெண்ட் பணத்துல அவளுக்குனு ஒரு சேமிப்பு போட்டு வைச்சுருக்காரு.நகை அப்பப்போ அம்மா வாங்கி வைச்சது எல்லாமே பேங்க் லாக்கர்ல இருக்கு.

ஆனந்தன் வேலைக்கு போக ஆரம்பிச்ச அப்பறம் நாங்க இரண்டு பேருமா சேர்ந்து சின்ன தொகையில் ஆரம்பிச்சு ஆர்டி போட்டு அது எப்டி யா இருக்கு டி.சரி சொல்லு ஏன்?”

“இல்ல சமாளிக்க முடியும்னா பேசாம நம்ம இன்னொரு ப்ரான்ச் ஆரம்பிக்கலாமேனு தோணுச்சு அதான் கேட்டேன்..”

“என்ன டி எவ்வளவு பெரிய விஷயத்தை இப்படி அசால்டா சொல்ற..”

“ஏன் அன்பு?என் சம்பளம் எல்லாம் அப்படியே தான் இருக்கு.சேமிப்பை மொத்தமா எடுக்காம பாதிக்கு லோன் கூட வாங்கிப்போம்.”

“அதெல்லாம் வேணாம் காயூ.உனக்கு நகை எதுவும் வாங்கிக்கோ இல்லையா பெரிய இடமா வாங்கி நல்லதா வீடு கட்டி எல்லாருமா அங்க போலாம்.அதை விட்டுட்டு..”

“இதெல்லாமும் வருங்காலத்துல கண்டிப்பா பண்ணுவோம்.ஆனால் இந்த வயசில் தான் தொழில்ல சாதிக்க முடியும்.வயசானா நம்மை அறியாமேயே பயம் வந்துரும் டா.

இருக்குறது போதும்னு திருப்தி பட்டுருவோம்.நம்பிக்கையோட ஆரம்பி டா நான் இருக்கேன்.”,என்றவள் அன்புச்செல்வனின் கைகளை அழுந்தப் பிடித்து தட்டிக் கொடுத்தாள்.

அவளையே பார்த்திருந்தவனின் முகத்தை கைகளில் ஏந்திக் கொண்டவளாய்,”ரொம்ப எல்லாம் யோசிக்காம கடகடனு நம்ம கல்யாணத்தை முடிச்ச பாரு அதே மாதிரி இதையும் பண்ணிடு கண்டிப்பா வேற லெவல்ல வருவ..என்ன சொல்ற?”

“நீ இருக்க பாரு..”,என்றவன் அவளை அருகில் அமர்த்தி தோள் சாய்ந்து கொண்டான்.

“ஒரு இரண்டு மாசம் முன்னாடி தெரிஞ்சவரு ஒருத்தர் கூட கேட்டாரு டி பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல ஒரு இடம் காலியாகுதுனு.நான் தான் வேண்டாம்னு சொல்லிட்டேன்.”

“பொறுப்பான புள்ளையா புருஷனா நிறைய பண்ற டா..உனக்காகவும் கொஞ்சம் யோசி.இந்த வேலை உனக்கு எவ்வளவு பிடித்தம்னு எனக்கு நல்லாவே தெரியும்.

அகல கால் வைக்க வேண்டாம்னு தோணிச்சுனா இப்போதைக்கு அந்த இடத்தை வாடகைக்கு கேளு..இல்ல லீஸுக்கு முடிச்சுகலாம்.அப்பறம் இன்ட்டீரியர்க்கு எல்லாம் லோன் போட்டுப்போம்.நம்மளால முடியும் டா..நானும் என் புருஷன் இரண்டு ஹோட்டலூக்கு ஓனர்னு கெத்தா சொல்லுவேன்ல..”,என்றவளைப் பார்த்துச் சிரித்தான்.

“சரி என்னவோ பேசி என்னை மயக்கிரு..இரு அவர்கிட்ட இப்போவே பேசுறேன்”,என்றவன் சம்மந்தப்பட்டவரை அழைத்து விஷயத்தை கேட்க அதிர்ஷ்ட வசமாய் இன்னமும் அந்த இடம் காலியாகவே இருந்தது.

அதுவும் அன்பு வாங்குவதாக இருந்தால் அசல் விலைக்கே கொடுப்பதாகக் கூற அவனது சந்தோஷம் முகத்தில் அப்படியே பிரதிபலித்தது.இருந்தாலும் ஐந்து வருடத்திற்கு லீஸுக்கு கொடுக்கும் படியாய் கூற அவரும் சம்மதம் என்று கூறினார்.

அழைப்பைத் துண்டித்தவன் அருகிலிருந்தவளை கழுத்தோடு கட்டிக் கொண்டான்.

“வாழ்த்துக்கள் முதலாளி அவர்களே..”

“லவ் யூ டி பொண்டாட்டி..இந்த தொழில் காசு சம்பாதிக்குறதுங்கிறதை தாண்டி மனசுக்கு ரொம்ப பிடிச்சு ஆரம்பிச்சேன் கண்மணி.மனுஷங்க போதும்னு சொல்ற ஒரே விஷயம் சாப்பாடு தான்.அதே மாதிரி எதுக்காகவும் நம்ம மனம் திருப்தி அடையுறதை முகம் காட்டவே காட்டாது.

ஆனால் அந்த சாப்பாடு நல்லாயிருக்குனா அடுத்த நொடி முகம் காட்டி கொடுக்கும்.இப்படி நிறைய விஷயங்கள் தான் இந்த தொழில் தொடங்க காரணம்.அதே மாதிரி உனக்கு தான் தெரியுமே நம்ம கடைக்கு பக்கத்துல ராத்திரி நேரம் எப்பவும் பத்து பேராவது இருப்பாங்க.

சாப்பாட்டுக்கு வழியில்லாதவங்க..அன்னைக்கு தொழில் முடிஞ்சு இருக்குற அத்தனையையும் அவங்களுக்கு கொடுத்துருவோம்.என்னைக்குமே நம்ம கடையில் புதுசா சமைக்குற உணவு மட்டும் தான் சாப்பிட வர்றவங்களுக்கு போகும்.

இப்படி பார்த்து பார்த்து ஒண்ணு ஒண்ணும் செய்வேன்.ஆனாலும் பல பேருக்கு இது ஒரு வேலையாகவே தெரிஞ்சது இல்ல.அப்பாகிட்ட நிறைய பேர் கேட்ட ஒரே விஷயம்,

“எதுக்கு ஹோட்டல் திறக்கணும்னு சொல்றான்.பிஸினஸ் பண்ணட்டும் வேற எதாவது பண்றதுதான..சமையல்காரன் மாதிரி இதெதுக்கு..அப்படி இப்படினு.”

பாதிக்கு மேல வயித்தெரிச்சல் தான்னு வைச்சுக்கோ..இருந்தாலும் கேட்குறவங்களுக்கு கஷ்டமா இருக்குமேனு யோசிக்கவே மாட்டாங்க.

அதை விட கல்யாண பேச்சு வந்த அப்பறம் அப்பா அம்மா நிறைய பேச்சு வாங்க வேண்டியதா இருந்தது.என்கிட்ட காட்டிக்க மாட்டாங்கனாலும் அப்பப்போ அவங்க பேசிக்குறது காதில் விழும்.

நீ முதல் நாள் என்னைப் பார்க்கும் போதே என்கிட்ட ஒண்ணு சொன்ன நியாபகம் இருக்கா?உனக்கு இந்த தொழில் பிடிச்சுருக்குற மாதிரி எனக்கு போலீஸ் வேலை பிடிச்சுருக்குனு.

என்ன தொழில் எவ்வளவு லாபம் எல்லாம் தாண்டி எனக்கு பிடிச்சுருக்குங்குற அந்த விஷயத்தை நீ சொல்லி கேட்டப்போ இன்னமும் பிடிச்சது.

இந்த ஒன்றரை வருஷத்துல நீ ஒரு நாள் கூட என் தொழிலைப் பத்தி விளையாட்டா கூட எதுவும் சொன்னதில்ல.ஜஸ்ட் லைக் தட்னு கிண்டல் பண்ணிட்டு போக ஒரு நிமிஷம் ஆகாது.அது தப்பும் இல்லை தான் ஆனால் அப்படி கூட நீ எதுவும் சொன்னதில்ல டி.

என்ன இருந்தாலும் நீ ஒரு க்ரேட்ல இருக்குற ஆபீசர் உனக்கு சரிசமமா ஒரு வேலைனு இல்லை தான.இப்போ ஆனந்தனையே எடுத்துக்கோ அவன் டாக்டர் அபியும் டாக்டர்..நாளைக்கே இன்பாக்கு பொண்ணு பார்த்தா இன்ஜினியரா தான் பார்ப்போம்.அதே தான் தேனுக்கும்..ஆனால் இந்த எண்ணமெல்லாம் ஒரு இரண்டு மூணு நாள் தான்.

இதையெல்லாத்தையும் கடந்த அன்புங்கிற ஒருத்தனை மட்டும் தான் நீ நேசிச்ச..அதை தவிர எதைப் பத்தியும் நீ யோசிக்கல..அதனாலேயே நானும் எல்லாத்தையும் ஒதுக்கி வைச்சுட்டு உன்னோட வாழ தயாராய்ட்டேன் டி.

நான் இத்தனை நாள் இதையெல்லாம் உன்கிட்ட சொன்னது கூட இல்லை.ஆனால் இப்போ நீ சத்தமே இல்லாம என்னை இன்னொரு ஹோட்டலுக்கு முதலாளியாக்க நினைக்குறியே..

எத்தனை வருஷம் ஆனாலும் உன் காதலுக்கு ஒரு படி கீழே தான் என் காதல் இருக்கும் கண்மணி..லவ் யூ டு த கோர்”,என்றவனின் கண்களில் சந்தோஷ பளபளப்பு.

அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு அவனுள் எத்தனை விஷயங்கள் அழுந்தக் கிடந்து இருந்திருக்கிறது என்று நினைத்து கவலையாய் போனது.

“என்ன அன்பு நீ..இவ்வளவு விஷயத்தை மனசுக்குள்ள வைச்சுட்டு சுத்திட்டு இருந்துருக்க..உனக்குத் தெரியுமா நாம காலேஜ் முடிச்சு ஒரு இரண்டு வருஷத்துக்கு அப்பறம் தான் உன்னைப் பத்தி விசாரிக்க ஆரம்பிச்சேன்.

அப்போ நீ ஹோட்டல் பிஸினஸ் பண்றனு தெரிஞ்சவுடனே எனக்கு ஆச்சரியமா இருந்தது.எல்லாத்துலேயும் மாதிரி இதுலேயும் நீ தனித்துவமா தெரிஞ்சியே தவர வேற எதுவும் யோசிக்கல.

ஹே இன்னொன்னு தெரியுமா நான் ஒருதடவை உன் ஹோட்டல்ல சாப்பிடணும்ங்கிறதுக்காகவே சென்னையில் இருந்து வந்தேன்.”

“அடிப்பாவி இது எப்போ?!”

“ஹா ஹா ஆமா டா அப்போ நீ கடையில் இல்ல.சாப்ட்டு பார்த்துட்டு டேஸ்ட் ரொம்ப நல்லாயிருக்கேனு நினைச்சுகிட்டேன்.எப்படியோ இதை சொல்ல மறந்துருக்கேன் டா..”

“அதனால சந்தோஷமா இரண்டாவது ப்ரான்ஞ்ச் வேலையை தொடங்குறோம்.சூர்ய வம்சம் மாதிரி அடுத்தடுத்த வருஷம் புதுசு புதுசா ப்ரண்ஞ்ச் ஆரம்பிச்சுட்டே போறோம்.”

“என் கண்மணி சொன்னால் அதை எல்லாம் கண்டிப்பா நடத்தி முடிப்பேன்.”,என்றவன் நெற்றியில் அழுந்த இதழ் பதித்தான்.

இருவருமாய் பெரியவர்களிடம் விஷயத்தைக் கூற அவர்களுக்கும் மகிழ்ச்சியாய் இருந்தது.காயத்ரி என்ற மிகப் பெரிய பலம் தன் மகனிற்கு போதும் என்று தான் தோன்றியது.

மறுநாள் வேலைக்கு கிளம்பியவள் அன்பு கூறிய இடத்தை ஒரு தடவைப் பார்த்து விசாரித்து விட்டே அலுவலகத்திற்குச் சென்றாள்.

நேரம் என்ற ஒன்று நமக்கு சாதகமாக இருந்துவிட்டால் நமக்கான இலக்கை நோக்கிய பயணம் அதுவாகவே தொடங்கிவிடும் என்பதற்கேற்ப அடுத்த ஒரு வாரத்தில் அத்தனை வேலைகளும் முடித்து கடையின் சாவி அன்புச் செல்வனின் கரங்களுக்கு வந்திருந்தது.

மற்ற வேலைகளை அன்பு கவனிக்கத் தொடங்க அவனறியாமல் அவனுள் எழுந்த உற்சாகத்தைப் பார்த்த காயத்ரிக்கு மகிழ்ச்சியாய் இருந்தது.

இதற்கிடையில் அபிநயாவிற்கு வலி வந்துவிட பின் மதிய வேளையில் அழைப்பு வந்த அடுத்த நொடி மொத்த குடும்பமும் மருத்துவமனைக்கு விரைந்தது.

மாலை வேலையிலிருந்து காயத்ரி நேராய் வந்துவிட ஆனந்தனிடம் என்னவென விசாரித்தாள்.

“பெயின் விட்டு விட்டு வருது அண்ணி..நாளைக்கு மார்னிங் ஆகிடும்னு சொல்றாங்க..அவ தான் ரொம்ப டயர்டா இருக்கா கஷ்டமா இருக்கு..”

“என்ன தம்பி டாக்டர் நீங்களே இப்படி சொன்னா எப்படி..எதாவது சாப்டீங்களா?”

“அதெல்லாம் வேண்டாம் அண்ணி..”,என்றவனை அன்புவிடம் சுட்டிக்காட்ட அவனை அழைத்துக் கொண்டு கேன்டீனிற்குச் சென்றான்.

“ப்பா..நேரமாகும்னு சொல்றாங்களாமே நீங்க எல்லாம் வீட்டுக்கு போயிட்டு காலையிலே வாங்க..நானும் அன்பும் இங்க இருக்கோம்.”

“இல்ல டா காயூ பரவால்ல..”

“ம்மா..மாத்திரை எல்லாம் எதுவும் கொண்டு வந்துருக்க மாட்டீங்க தான?போய் கொஞ்சம் தூங்கி எழுந்து வாங்க.நாளைக்கு பேரப் பிள்ளை வந்தப்பறம் தான் உங்களுக்கு வேலையே.போயிட்டு வாங்கம்மா..”

“சரி காயூ.”

“இன்பா அண்ணனுங்க வந்தவுடனே சொல்லிட்டு நீ இவங்களை கூட்டிட்டு கிளம்பு டா.காலையிலே வந்துரு.”

“சரி அண்ணி..நான் போய் காரை எடுக்குறேன்..அதுக்கே ரொம்ப தூரம் நடக்கணும்.ப்பா நீங்க வாசலுக்கு வந்துடுங்க.”,என்றபடி அவன் கிளம்பினான்.

“நீ யூனிபார்ம் கூட மாத்தலையே காயூ!”

“பரவால்ல ம்மா எனக்கு பழக்கம் தான்.ஒண்ணும் பிரச்சனையில்ல.”

“சரி மா பார்த்துக்கோ”,என்றவர்கள் சம்மந்தி வீட்டாரிடம் கூறிவிட்டு கிளம்பியிருந்தனர்.

ஆனந்தனோடு அங்கு வந்தவன் காயத்ரிக்கான டீயைக் கொடுக்க அதை வாங்கிக் கொண்டு அங்கிருந்த இருக்கையில் மூவருமாய் அமர்ந்தனர்.

அனைத்தையும் பார்த்திருந்த அபிநயாவின் தாய் காயத்ரிக்கு அருகில் வந்து அமர்ந்தார்.

“டென்ஷன் ஆகாதீங்க சித்தி..அபி அதெல்லாம் சமாளிச்சுடுவா..”

“ம்ம்”என்றவர் அவளைப் பார்த்து புன்னைகைத்தார்.

“நீ எதாவது சாப்ட்டு வா மா..”

“இல்ல சித்தி இப்போதைக்கு வேண்டாம் கொஞ்சம் நேரம் ஆகட்டும்.”,என்றவள் தனக்கு வந்த அழைப்பை ஏற்று பேச ஆரம்பித்திருந்தாள்.

அன்புவைப் பார்த்தபடி வந்த அபிநயாவின் தந்தை அவனுக்கு எதாவது வாங்கி வரவா என்று மரியாதை நிமித்தமாய் விசரிக்க,

“இல்ல மாமா அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்.நீங்க தான் ரொம்ப சோர்வா தெரியுறீங்க உட்காருங்க..”

“…”

அதற்குள் அழைப்பை முடித்து வந்தவள் இயல்பாய் அவரருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

“இந்த அபி பொண்ணு ரொம்ப டென்ஷன் பண்றா..பாப்பா சீக்கிரம் வந்துட்டா நல்லாயிருக்கும்..”,என்றவள் டென்ஷனாய் காலை ஆட்டியபடி அமர்ந்திருக்க ஆனந்தன் லேசாய் புன்னகைத்தான்.

“வந்தவுடனே என்னவோ எனக்கு ஆறுதல் சொன்னீங்க..”

“இப்படி இங்கேயே உட்கார்ந்தா தான தம்பி தெரியுது டென்ஷன்..”

“ஏன் காயூ அவனை இன்னும் டென்ஷன் ஆக்குற..”

“சரி சரி நான் பேசல..”,என்றவள் தன்னைப் பார்த்திருந்த அபிநயாவின் தந்தையைப் பார்த்து புன்னகைத்தாள்.

“உன்னைப் பத்தி தான் நிறைய பேசிட்டே இருப்பா அபி..”

“ஹா ஹா அவளுக்கு சிக்கின அடிமை நான்.எனக்கு சிக்கின அடிமை அவ சித்தப்பா..”,என்றதைக் கேட்டு லேசாய் சிரித்திருந்தார்.

“குழந்தைக்கு மூணு மாசம் ஆனவுடனே அவளை உங்க வீட்டுக்கு அனுப்பிடனுமாம்.”,அபிநயாவின் அன்னை வருத்தமாய் கூற காயத்ரியோ,

“அவ எங்க எல்லார் தூக்கத்தையும் கெடுக்க ப்ளான் பண்றா விட்றாதீங்க சித்தி..அப்பறம் தம்பி தான் ஃபுல் டைம் கேர் டேக்கர் ஆகிடுடாவாங்க.”

அதற்குள் வேகமாய் வெளியே வந்த செவிலிப்பெண் ஆனந்தனை உள்ளே அழைக்க அனைவருக்கும் சிறிதுநேரம் விட்டுச் சென்ற பதட்டம் மீண்டுமாய் தொற்றிக் கொண்டது.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode