வரம்-24

by ஸ்ரீ
0 comments 104 views
A+A-
Reset

வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே – மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை

விளக்கம்
வழக்காடு மன்றத்தில் (கோர்ட்) பொய் சாட்சி சொல்பவர் வீடு ஒருவருக்கும் பயன் படாமல் போகும், அந்த வீட்டில் வேதாளம் குடிபுகும், வெள்ளை எருக்கம் பூ பூக்கும் , பாதாள மூலி என்னும் கொடிய விஷம் உள்ள கொடி வளரும், மூதேவி போய் வாழ்வாள், பாம்பு குடியேறும்.

ஆதலால் நியாய அநியாயங்களை அலசி ஒருவரின் பிரச்சனையை தீர்க்க உதவும் வழக்காடு மன்றத்தில் நாம் பொய் சாட்சி சொல்லக்கூடாது.

ஒன்பதாம் மாதம் வளைகாப்பு அத்தனை அழகாய் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அபிநயாவிற்கு.சிறிய ஹால் புக் செய்து அதன் அலங்காரம் புகைப்படம் சாப்பாடு என ஆளுக்கொரு வேலையாய் பார்த்து பார்த்து செய்திருந்தனர்.

காயத்ரி தன் வேலைகளில் அத்தனை பிஸியாய் இருந்தாலும் அவளால் முடிந்த அனைத்தையும் செய்து கொடுத்தாள்.விசேஷத்திற்கு முந்தைய நாள் காயத்ரியோடு அமர்ந்திருந்தவளுக்கு கண்ணெல்லாம் கலங்கியிருந்தது.

“என்ன அபி..சந்தோஷமா இருக்க வேண்டிய நேரத்துல..”

“எனக்கு இன்னும் அஞ்சு மாசம் இங்க வரமாட்டேன்னு நினைச்சாலே இரிடேட்டிங்கா இருக்கு கா..”

“அபி…”

“அம்மா அப்பா ரொம்பவே நல்லா பார்த்துப்பாங்க தான்..ஆனால் நம்மளோட மனசு சந்தோஷம்னு ஒண்ணு இருக்கு இல்ல..சந்தோஷத்தை விட நிம்மதியா இருக்கேன் கா இங்க..”

“இங்க பாரு நீயும் குட்டி பாப்பாவும் உடம்பை தேத்திட்டு ஓடி வந்துருங்க அப்புறம் நாம ஜாலியா இருக்கலாம்.அதுகுள்ள அங்க யாராவது குடைச்சல் கொடுத்தா சொல்லு முட்டிக்கு முட்டி தட்டிருவோம்..என்ன சொல்ற..”

“ம்ம் கா..”

மறுநாளின் விழா நாயகியாய் அபிநயா நிறை மாத வயிறும் முகம் கொள்ளா பூரிப்புமாய் ஜொலித்திருந்தாள்.

நிகழ்ச்சி விமர்சையாய் ஆரம்பித்திருக்க அடுத்தவர்களை நோகடிப்பதே ஒரு தொழில் என இருக்கும் சிலர் காயத்ரியிடம் விசேஷம் ஏதும் உண்டா எனக் கேட்கத் தவறவில்லை.

அனைத்தையும் ஒருவித புன்னகையோடே கடந்திருந்தாள் காயத்ரி.தன் தங்கையாகவே தன்னைப் பாவித்து சிரித்த முகமாய் ஓடி ஓடி வேலை செய்பவளை பார்த்துக் கொண்டு தான் இருந்தாள் அபிநயா.

அனைவருமாய் வளையல் போட்டுவிட ஆரம்பிக்க ராகினி வளையல் அணிவித்து முடித்தவுடன் காயத்ரியை அழைக்க,அபிநயா வழியில் சிலர் கடைசியாய் காயத்ரி போட்டு விடட்டும் என மெதுவாய் ராகினியிடம கூறினர்.

காயத்ரி சூழ்நிலையை உணர்ந்து கொண்டவளாய் அங்கிருந்து நகரப்போக அபிநயாவின் குரல் அவளை நிறுத்தியது.

“அக்கா வளையலைப் போட்டு விடுங்க..நம்ம வீட்டு ஆளுங்க போட்டு முடிச்சா தான மத்தவங்க போட முடியும்.”,காயத்ரி அவளை வேண்டாம் என்பதாய் தலையசைத்து பாவமாய் ராகினியைப் பார்த்தாள்.

“இல்ல அபி பெரியவங்க பர்ஸ்ட் போடட்டும்..”

“எல்லாரும் கண்டிப்பா வளையல் போடத்தான் போறாங்க..முதல்ல நீங்க வாங்க..”

“என்ன அபி அத்தை பெரியம்மா எல்லாம் உன்னை தா. பாக்குறாங்க ஏன் குரலை உசத்தி பேசுற..அவங்க சொன்னா கண்டிப்பா உன் நல்லதுக்காக தான் இருக்கும்.”

“அக்காவை விட எனக்கு யாரும் எந்த நல்லதும் நினைக்க மாட்டாங்க மா..நீங்க கொஞ்சம் பொறுங்க…”

“என்ன அபி இது பெரியவங்க சின்னவங்க மரியாதை இல்லாம..”

“ப்பா..நான் தப்பா எதுவும் பேசல எங்க வீட்டு மனுஷங்க வளையல் போட்ட அப்பறம் மத்தவங்க போடட்டும்னு சொல்றேன்..அக்காவும் தேனுவும் மட்டும் தான..

இரண்டு நிமிஷம் ஆகுமா..காயத்ரி கா வரீங்களா இல்லையா..”,என்றவளின் அதட்டலில் கண்கள் கண்ணீரைச் சிந்த தயாராக முகம் நிறைத்த புன்னகையோடு நலுங்கு வைத்து வளையல் அணிவித்தாள் காயத்ரி.

“மாமாக்கு மட்டும் இல்ல எனக்கும் எங்க அக்காவை எப்பவும் கம்பீரமா பார்க்குறதுக்கு மட்டும் தான் பிடிக்கும்.யார் யார்னு சொல்றேன் முட்டிக்கு முட்டி தட்டணும் சரியா?”,என்ற அபிநயாவின் கன்னத்தில் அழுந்த இதழ் பதித்துச் சிரித்தவள் ராகவன் ராகினியைப் பார்க்க அப்படி ஒரு மகிழ்ச்சி அவர்களின் முகத்தில்.

அன்பு ஆனந்தனின் கையை அழுத்தமாய் பற்றிக் கொண்டிருந்தான்.தேனு அபிநயாவைப் பக்கவாட்டில் கட்டிக் கொள்ள இன்பா மூவருமாய் இருந்த அந்த இனிய தருணத்தை தன் கைப்பேசியில் புகைப்படமாய் எடுத்துக் கொண்டான்.

யாருக்கும் எதுவும் பேசத் தோன்றவில்லை.அதன்பின் அங்கு நிற்காமல் காயத்ரி அபிநயாவின் அறைக்குள் புகுந்து கொள்ள அன்பு அவள் பின் சென்றான்.

“கண்மணி..”,எத்தனை இறுக கட்டிக் கொள்ள முடியுமோ அப்படியாய் கட்டிக் கொண்டாள்.

“இந்த புள்ளைபூச்சி எவ்வளவு பேசிட்டா பாரேன்.அதுவும் எனக்காக..உன்னால தான் இந்த உறவெல்லாம்…தேங்க்ஸ் அன்பு..”,என்றவள் உணர்ச்சி மிகுதியில் இருப்பது நன்றாகவே புரிந்தது.

அன்புவிற்கே ஆச்சரியம் தான்.அபிநா தனக்காக எதையும் கேட்பதற்கே தயங்கும் ஒரு பெண்.அதிர்ந்து கூட பேசாதவளின் குரலில் இன்று இருந்த திடம் வியப்பாய் இருந்தது.அதைவிட காயத்ரியின் மீது அவளுக்கு இருக்கும் பாசத்தை நினைத்து அத்தனை மகிழ்ச்சியாய் இருந்தது.

“ரிலாக்ஸ்..யாரும் வரப் போறாங்க டி..போலாமா..”

“ம்ம்”,என்றவளின் புன்னகை நிறைந்த முகம் அன்புவிற்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.

வளைகாப்பு நல்லடியாய் முடிந்து அனைவரும் சாப்பிடச் செல்ல அபிநயா அமர்ந்திருந்த அறைக்குள் அவளது தாய் தந்தையோடு சித்தி சித்தப்பாவும் நின்று கோபமாய் பேசிக் கொண்டிருந்தனர்.

“என்ன அபி பேச்செல்லாம் புதுசா இருக்கு..கல்யாணம் ஆன பெரிய மனுஷி ஆகிட்டியோ?”

“….”

“நல்லா கேளுங்க கா..நம்ம வீட்ல இருந்த வரை எவ்வளவு சாதுவா இருக்கும் நம்ம புள்ளை..இப்போ பார்த்தீங்களா..”

“….”

“அப்பாவுக்கு ரொம்ப நல்ல பேர் வாங்கி கொடுத்துட்ட அபி..உன் அத்தை கோவிச்சுட்டு சாப்பிடாமயே போயிட்டா..என்னடா புள்ளை வளர்த்துருக்கனு கேட்டுட்டு போறா.”

“ப்பா..”

“ஒண்ணும் பேச வேண்டாம்..கல்யாணம் ஆகிப் போனாலும் நம்ம வீட்டு பழக்க வழக்கத்தை மறக்காம இருக்குறது தான் பொண்ணுக்கு அழகு..”

“இப்போ எதுக்கு எல்லாரும் அவளைப் போட்டு படுத்திட்டு இருக்கீங்க?”,என்ற காயத்ரியின் குரலில் அவர்களின் பேச்சு அப்படியே நின்றது.

அபிநயாவிற்கு சாப்பாடு கொண்டு வந்தவள் இவர்களின் பேச்சில் உச்சகட்ட கடுப்பாகி நின்றிருந்தாள்.

ஆண்கள் ஒன்றும் பேசாமல் நகர எத்தனிக்க அவர்களைத் தடுத்தவளாய் அபிநயாவிடம் உணவைக் கொடுத்து சாப்பிடுமாறு கூறிவிட்டு அவர்களிடம் வந்தாள்.

“ஏன் அவளை எதாவது சொல்ட்டே இருக்கீங்க..அவ என் மேல இருக்குற பாசத்தில் பேசினா அது தப்பா..”

“எங்க வீட்ல பொண்ணுங்க எல்லாம் தேவையில்லாம பேச மாட்டாங்க மா..”

“மனசில் இருக்கிறதை வேற எங்க தான் சொல்லுவாங்க?”

“..”

“ஓ ஒரு வேளை அவங்களுக்கு மனசுனு ஒண்ணே இருக்க கூடாதுனு சொல்றீங்களா சித்தப்பா?”

“என்ன மா நீ..”

“உங்களை தான் முதல்ல சொல்லணும் சித்தி..உங்க கூட இருக்கும் போது அவ அவளாவே இல்ல..அதுகூட உங்களுக்குப் புரியலையா..

இத்தனை வருஷம் உங்க விருப்பப்படி தான இருந்தா?இனியும் கண்டிப்பா அப்படி தான் இருப்பா..ஆனாலும் அவ வீட்டில் இல்ல ஜெயில்ல இருக்கிற மாதிரி இருக்கா..

இதுவரை எப்படியோ இப்போ அவளுக்கு மனசு முழுக்க சந்தோஷம் மட்டும் தான் வேணும்.தேவையில்லாம அவளை நோகடிக்காதீங்க..”

“…”

“நீ இப்படியே கல்லை முழுங்கினா மாதிரி உட்காந்து எல்லாத்தையும் கேட்டுட்டே இரு..”,என்றவளைப் பார்த்து சிரித்தாள் அபிநயா.

அனைவரும் அங்கிருந்து கிளம்பிய நேரம் அபிநயாவின் அழுகையில் ஆனந்தன் பயந்து போய்விட்டான்.

ராகினியும் காயத்ரியும் கூறும் எந்த சமாதாதனங்களும் அவளிடம் எடுபடவில்லை.அபிநயாவின் பெற்றோருக்கே அத்தனை ஆச்சரியம் புகுந்த வீட்டை பிரிவதற்கு இப்படியெல்லம் ஆர்பாட்டம் நடக்குமாவென.

ராகவன் அபிநயாவின் தந்தையிடம் பேசிய விதத்தில் அனைவருக்கும் தலை சுற்றாத குறை தான்.

“சம்மந்தி பாவம் அபி நல்லா பார்த்துக்கோங்க..எந்த நேரமானாலும் எங்களுக்கு போன் போடுங்க நாங்க உடனே வந்துருவோம்.ஆனந்தன் தினமும் வந்துட்டு போவான்.பத்திரம்..”,என்றவர் ஏதோ மகளை புகுந்த வீட்டிற்கு அனுப்புவது போல் பேசிக் கொண்டிருந்தார்.

“ஐய்யயே இப்போ நீ நிறுத்த போறியா இல்லையா..என் புள்ளையும் உன்னை மாதிரியே அழுமூஞ்சியா வரப்போகுது அபி..”

“அக்கா..”

“பின்ன பாப்பா பயப்பட போகுது..சமத்து இல்ல நான் அம்மாவை கூட்டிட்டு அப்பப்போ வரேன்..டெய்லி போன் பேசுவோம்.சரியா?”

“ம்ம் சரி கா..அத்தை போன் பண்ணுங்க..”

“நினைச்சா அரைமணி நேரத்துல வரப்போறோம் அபிம்மா..நீ சந்தோஷமா இருக்கணும்.நல்லா வாக்கிங் போ என்ன..”

அப்படி இப்படியாய் அனைவரும் அங்கிருந்து கிளம்பி காரில் அமர்வதற்குள் ஒரு வழியாகி விட்டிருக்க காரில் ஏறியவுடன் தேன்மொழி அழ ஆரம்பித்திருந்தாள்..

“உனக்கு என்ன டி ஆச்சு..ஷப்பா டேய் என்னால முடியல..”,என்ற காயத்ரியை கையிலே அடித்தாள் தேன்மொழி.

“என்னாச்சு தேனு ஏன் அழற??”

“நீங்க எல்லாம் மட்டும் இப்படியே ஜாலியா இருப்பீங்க என்னை மட்டும் கல்யாணம் பண்ணி வேற வீட்டுக்கு அனுப்பிருவீங்க தான..நான் கல்யாணமே பண்ணிக்க போறதில்ல..”,என்ற மகளைப் பார்த்து ராகவனும் ராகினியும் சிரித்தனர்.

“ப்பா..என்னப்பா சிரிக்குறீங்க?”

“தேனும்மா எப்போவோ நடக்க போறதுக்கு இப்போ அழுவியா?”

“எப்போவோனாலும் நடக்கத்தான போகுது..போங்க நான் எங்கேயும் போக மாட்டேன்.”

“இதெல்லாம் வாக்குமூலம் தேனு..நாளைக்கே உன் புருஷனைப் பார்த்தவுடனே எங்களை டீல்ல விட்டுட்டு போவியே அப்போ இந்த பாயிண்டெல்லாம் சொல்லுவேன் நான்..”

“அண்ணா பாருண்ணா அண்ணியை..”

“ஹா ஹா சரி இதுக்கெல்லாம் அழுவாங்களா எங்களை மாதிரியே உனக்கும் உள்ளூர் பார்ட்னரா பார்த்துடலாம் ஓகே தான..”

“அண்ணே நல்லா கடல் கடந்து மாப்பிள்ளை பார்த்து அனுப்பிவிடுவியா அதை விட்டுட்டு..”,என்று இன்பா முடிப்பதற்குள் அடிக்கத் துவங்கியிருந்தாள்.

வீட்டிற்கு வந்ததும் இன்பா தான் எடுத்த அண்ணிகளின் புகைப்படத்தை கிருத்திகாவிற்கு அனுப்பிவிட்டு சில நிமிடங்களில் பேசுவதற்காக அழைத்திருந்தான்.

“இன்பா செம பிக்..ப்ரேம் பண்ணிப் போடுங்க அவ்வளவு அழகாயிருக்கு..”

“ம்ம் ஆமா கிருத்தி..”,என்றவன் நடந்ததை எல்லாம் கூறி முடிக்க கிருத்திகாவிற்கு அவர்களை எல்லாம் பார்க்க வேண்டும் போல் இருந்தது.

“என்ன இன்பா சொல்ற..இப்படியெல்லாம் கூடவா குடும்பங்கள் இருக்கு..”

“ஹா ஹா ஏன் இல்லாம..அதான் நாங்க இருக்கோமே..”

“கண்ணை மூடி திறக்குதுக்குள்ள அஞ்சு வருஷம் ஓடிட்டா நல்லாயிருக்கும் போல இருக்கு எனக்கு..”

“நான் கூட அங்க உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன் டி..அதுமட்டுமா தேனு ஒரே அழுகை கல்யாணம் பண்ணிக்க மாட்டாளாம்.”,என்றவன் சிரிக்க கிருத்திகாவால் அவளின் மனவோட்டத்தை நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது.

காயத்ரி கீழே எதோ வேலையாய் இருக்க மாடி பால்கனியில் நின்றிருந்த ஆனந்தனின் தோள் பற்றி நின்றான் அன்புச் செல்வன்.

“என்னாச்சு டா அபியை மிஸ் பண்றியா?”

“ம்ம் அவங்க வீட்ல யாரும் எதுவும் சொல்லுவாங்களோனு இருக்குண்ணே..”

“அதான் உங்க அண்ணி மண்டபத்துல வைச்சே ஒரு காட்டு காட்டிடாளாமே..”,என்றதும் ஆனந்தன் விழி விரித்துப் பார்த்தான்.

அன்பு அவனிடம் நடந்ததைக் கூற ஆனந்தன் முகம் சற்றே தெளிவடைந்திருந்தது.

“எனக்கு ஆச்சரியமா இருக்குண்ணே..இவங்க இரண்டு பேரும் எப்படி இப்படி இருக்காங்க!!”

“உண்மை தான் ஆனந்தா..காயத்ரி ஒரு விஷயம் சொல்லுவா,People never forget how you make them feel..அது ரொம்ப சரினு தோணுது.அபிக்கு நாம பெருசா எதுவும் பண்ணிடல ஆனால் அவளுக்கு நாம ஒரு கம்போர்ட் பீல் கொடுத்துருக்கோம்.அதுவும் காயத்ரி அவளோட வம்பு பண்ணிட்டே இருப்பா இல்ல..”

“ரொம்ப கரெக்ட் அண்ணா..இன்னைக்கு அவ அழுததைப் பார்த்து எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு..பேசாம டெலிவரியை நாமளே பார்த்துருக்கலாமோனு கூட யோசிச்சுட்டேன்.”

“ம்ம் இருந்தாலும் அம்மா பார்த்துக்குறா மாதிரி வராது இல்ல டா..நீ தினமும் அவளைப் போய் பார்த்துக்கோ..காயத்ரி முடியும் போதெல்லாம் போறேன்னு சொல்லிருக்கா..”

“சரிண்ணே..”,என்றவனுக்கு தன் குடும்பத்தையும் உடன் பிறப்புகளையும் நினைத்து அத்தனை நிறைவாய் இருந்தது.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode