பறை பட வாழா, அசுணமா; உள்ளம்
குறை பட வாழார், உரவோர்; நிறை வனத்து
நெல் பட்டகண்ணே வெதிர் சாம்; தனக்கு ஒவ்வாச்
சொல் பட்டால், சாவதாம் சால்பு.

 

கேகயப் பறவைகள் பறையோசையைக் கேட்டால் இறந்துவிடும். சான்றோர்கள் தன்மானக் குறைவு ஏற்பட்டால் உயிர் வாழ மாட்டார்கள். நெல்லுண்டான முதிர்ந்த மூங்கில் உடனே பட்டுப் போவது போல சான்றோர் தன் மீது பழி ஏற்பட்டால் உயிர் வாழ மாட்டார்கள்.

திருச்சியை ஒட்டிய அந்தக் கிராமத்தின் மையத்தில் இருந்த அந்தச் சிறு வீடு பரபரப்பிற்குக் குறைவில்லாமல் இருந்தது.குமரேசன் சரண்யா தம்பதியர் ஒருபுறமும் அவர்களது இளைய மகளான ராஜலெட்சுமி ஒரு புறமுமென சுழன்றுக் கொண்டிருக்க அப்போது தான் தூக்கத்தில் இருந்து எழுந்து அமர்ந்தாள் அபூர்வா.

“மா…நைட் தான பஸ் அதுக்குள்ள ஏன்மா இப்படி பரபரத்துட்டு இருக்கீங்க..”

“கண்ணு எழுந்துட்டியா…எதையும் மறக்காம எடுத்து வைக்கணும்ல அதான்…அப்பாவை இப்போத்தான் கடைக்கு அனுப்பினேன் உனக்கு வேறெதுவும் வேணுமா…”

“மா…இங்க இருக்க கேரளாக்கு தான வேலைக்குப் போறேன்..ஏதோ வெளிநாட்டுக்குப் போகுற மாதிரி பண்றீங்க நீங்க எல்லாம்..”

“என்ன இப்படி சொல்லிப்புட்ட…நம்ம குடும்பத்துலேயே இம்புட்டு படிச்சு இம்புட்டு சம்மாதிச்ச பொண்ணுகளே கிடையாது..உங்க ஐயனுக்கு அதுவே பெரிய பெருமை தெரியுமா…கண்ணுல படுறவங்க கிட்ட எல்லாம் சொல்லிட்டு கிடக்கார்..எம்மவ வேலைக்குப் போறா போறானு..”

அழகாய் சிரித்தப்படி அவரது மடியில் படுத்துக் கொண்டவளாய்,”உனக்கும் அப்பாவுக்கும் நிறைய செய்யணும் மா…அப்பறம் நம்ம ராஜியை நல்லா படிக்க வைக்கணும்…”

“நீ உன் வாழ்க்கையைப் பாரும்மா…நீ நல்லாயிருந்தாலே போதும் எங்களுக்கு..தனியா அங்க இருந்துக்கிடுவியா டீ?”

“தனியா எங்க இருக்கப் போறேன்…எங்க காலேஜ்ல படிச்ச அக்காவோட தானே தங்கப் போறேன்..அதுவுமில்லாம ஆபிஸுக்கும் வீட்டுக்கும் ரொம்பத் தூரமெல்லம் இல்ல மா…நான் பத்திரமா இருந்துப்பேன்..”

“சின்னது தான் கொஞ்சம் வெகுளி…நீ எந்த இடத்துக்கும் உன்னை மாத்திப்ப…அதுவரை எனக்கு நிம்மதி தான்..சரி நீ எழுந்து வா..நா காபி தண்ணிப் போட்டுக் கொண்டு வரேன்..”

அபர்ணா கிராமத்துப் பிண்ணனியில் பிறந்து வளர்ந்த நடுத்தர வர்க்கத்துப் பெண்.தாய் தந்தையின் கஷ்டங்கள் உணர்ந்து சிறு வயது முதலே நன்றாகப் படித்து வந்தவள் இளங்கலை முடித்து திருச்சியிலேயே நல்ல கல்லூரியில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றிருந்தாள்.

இப்போதுதான் வேலை நிமித்தமாய் முதல் முறையாக வீட்டை விட்டு வெளியேச் செல்கிறாள்.எர்ணாகுளத்தின் A&M க்ரூப் ஆப் கம்பெனியில் ஹெச்ஆர் பணிக்காகச் செல்லவிருக்கிறாள்.தன் சீனியர் ஒருவர் மூலம் இந்த வேலைப் பற்றியச் செய்தி கிடைத்து  அதற்கான நேர்காணலிலும் தேர்ச்சிப் பெற்றிருந்தாள்.

ஐந்து அடி ஒல்லியான உடல்தேகம் பார்த்தவுடன் பள்ளிப் படிப்பு முடித்திருக்கலாம் என்று கூறும் வகையைச் சேர்ந்தவள் தான் நம் நாயகி.அம்மா அப்பா தங்கை இவர்களே அவளின் உலகம்.அதிலும் தனக்குக் கிடைக்காததெல்லாம் தன் தங்கைக்கு கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் நிறையவே உண்டு அவளிடத்தில்.

அபூர்வாவை விட ஆறு வயது சிறியவள் அவள்.இப்போது தான் கல்லூரி வாழ்க்கையில் அடியெடுத்து வைத்திருக்கிறாள்.அதுமட்டுமன்றி டாக்ட்ரேட் படிக்க வேண்டும் என்பது அவளின் கனவு.அவள் தமக்கையின் லட்சியமும் கூட.

கைக் கொள்ளா பைகளோடு தந்தையும் மகளுமாய் இரவுப் பேரூந்தில் எர்ணாகுளத்தை நோக்கியத் தங்களின் பயணத்தைத் தொடங்கினர்.ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தவளுக்கு ஒருவித பயம் பதட்டம் அத்தனையும் மனதை ஆக்கிரமித்திருந்தது.

புது இடம் புது மனிதர்கள்..சமாளித்து விடலாம் எனினும் எதோ ஒருவித வெறுமை தனித்து விடப்பட்டதாய் ஓர் உணர்வு எல்லாமுமாய் சேர்ந்து அவளைத் தூக்கத்தைத் தொலைக்கச் செய்திருந்தன.

மறுநாள் காலையில் அவள் தங்க வேண்டிய இடத்தில் அவளை விட்டுவிட்டு மகளோடு சேர்ந்து காலை உணவை முடித்துவிட்டு அப்போதே அவளது தந்தை கிளம்பியிருந்தார்.அப்பா கிளம்பும் வரை அடக்கி வைத்திருந்த அழுகை அத்தனையும் கண்களைக் குளமாக்க அவளது அறைத் தோழியான தீபா தான் அவளைச் சமாதானப்படுத்தினாள்.

அது ஒரு இரு அறைகள் கொண்ட சிறு வீடு.கீழ் பகுதியில் ஒரு குடும்பம் வாடகைக்கு இருக்க இது சிறு பகுதி என்பதால் இப்படி படிக்கும், வேலைக்குச் செல்லும் பெண்களுக்காக வாடகைக்கு விட்டிருந்தனர்.குடும்பங்கள் நிறைந்தப் பகுதி ஆதலால் பாதுகாப்பானதும் கூட.தீபா கடந்த ஒரு வருடமாய் அங்குத் தனித்து தான் தங்கியிருந்தாள்.

அபூர்வாவைப் பற்றி நன்குத் தெரிந்தவளாதலால் அவளைத் தன்னோடு தங்குமாறு கூறியிருந்தாள்.

“அபூர்வா…அழாதே நான் தான் இருக்கேனே…முதல்ல கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும்..போகப் போகப் பழகிடும்…உனக்காவது தெரிஞ்சவனு நான் இருக்கேன்…

நான் எல்லாம் வரும்போது ஒருத்தரையும் தெரியாது…இருக்குற நல்லதை மட்டும் பாரு தானா தைரியம் வந்துரும் சரியா?”

“ம்ம் சரி தீபாக்கா…போகப் போகப் பழகிடுவேன்.நாளைக்கு ஆபீஸ் வேற நினைச்சா இன்னும் பயம் அதிகம் தான் ஆகுது.உங்க ஆபீஸ் எங்க இருக்கு கா?”

“உன் பில்டிங்க்கு எதிர்த்த பில்டிங் தான் என்னோடது.அதனால நாம சேர்ந்துப் போய்ட்டு சேர்ந்தே வரலாம்…சரி வா மதியானத்துக்கு எதாவது சமைக்கலாம்..”,என்றுப் பேசியபடியே அடுத்த வேலைகளைக் கவனிக்கச் சென்றிருந்தனர் பெண்கள் இருவரும்.

மறுநாளின் விடியல் உச்சகட்ட படபடப்போடே தொடங்கியிருந்தது அபூர்வாவிற்கு.எளிமையான அதே நேரம் நேர்த்தியான காட்டன் சுடிதாரும் லேசான ஒப்பனையுமாய் கிளம்பியவள் கண்ணாடியில் ஒரு முறைத் தன்னைச் சரிப்பார்த்து தேவையானவற்றை எடுத்துக் கொண்டு கிளம்பியிருந்தாள்.

நேர்காணலுக்கு ஏற்கனவே வந்திருந்ததால் கம்பெனியைப் பார்த்தபோது பயமோ பதட்டமோ அதிகரித்திருக்கவில்லை.மூன்றாவது தளத்தில் இருந்த தங்களது அலுவலகத்திற்குச் செல்வதற்காக மின்தூக்கியில் பட்டனை அழுத்திவிட்டு நிற்க கதவு முழுவதுமாய் மூடப்போகும் நேரம் நீண்டதொரு கரம் கதவுகளுக்கு இடையில் கை நீட்டித் தடுத்திருந்தது.

ஏற்கனவே இருந்தப் பதட்டத்தில் சட்டென உள் நுழைந்தக் கரத்தைக் கண்டு ஒரு நொடி தூக்கி வாரிப் போட்டது அபூர்வாவிற்கு.வந்தவனின் உயரத்தில் பாதி தான் இருக்கிறோமோ எனுமளவிற்கு ஆஜானபாகுவாய் ப்ரஜீஷ் நிற்க மேலும் சுவரோடு ஒன்றிக் கொண்டாள் பெண்ணவள்.

உள்நுழையும் போதே அவளை லேசாய் பார்த்திருந்தவன் லட்சியம் செய்யாமல் தன்போக்கில் கையைப் பாக்கெட்டிற்குள் வைத்து நின்று கொண்டான்.தனது தளம் வந்ததும் வேகமாய் வெளியேச் சென்றவளைப் பார்த்து இடவலமாய் தலையசைத்து தோள் குலுக்கிக் கொண்டான் ப்ரஜீஷ்.

ராஜீவைச் சந்தித்து முதல் நாள் செய்ய வேண்டிய அலுவலகக் கடைமைகளை முடித்தவள் தனக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டாள்.முற்றிலும் குளிரூட்டப்பட்ட மிகப் பெரிய அறையில் ஒவ்வொருவருக்கும் தடுப்புகளோடு கூடிய இடம்.

அவளுக்கென ஒரு இருக்கை..அவளுக்கென ஒரு கணிணி.அந்தச் சூழல் நாற்காலியில் அமர்ந்த போது அப்படியாய் ஒரு மகிழ்ச்சி அவளிடத்தில்.ஏதோ பெரியதாய் சாதித்து விட்டத்தைப் போன்றதொரு திருப்தி.தன் கைப்பையை மேசைமேல் வைத்தவள் யாரும் பார்க்கிறார்களா என்று கவனித்துவிட்டு தன் இடத்தோடுச் சேர்த்துப் புகைப்படம் எடுத்து முதல் வேலையாய் தன் தங்கைக்கு அதை அனுப்பியிருந்தாள்.

ப்ரஜீஷ் இருந்தது நான்காவது தளம்.அபூர்வாவிற்கு அங்கு எவ்வித வேலையும் இல்லை என்பதால் அவனைச் சந்திக்கும் வாய்ப்புகளும் இல்லாமல் போனது.கம்பெனியின் இணைய தளத்திலும் மோகனுடையப் புகைப்படமே இருக்கும் காரணத்தால் ப்ரஜீஷின் பெயரைத் தவிர அவனைப் பற்றிய விவரங்கள் அவளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லாமல் போனது.

இப்படியாய் இருதினங்கள் அவளது வேலையைப் பற்றிய பயிற்சியில் நல்ல விதமாகச் சென்றது அபூர்வாவிற்கு.இன்னும் சொல்லப் போனால் அவள் மனதுக்கும் பிடித்ததாய் இருந்தது.மூன்றாம் நாள் காலை எழுந்திருக்க சற்றேத் தாமதமாகிவிட காலை உணவையும் கையில் எடுத்துக் கொண்டு கிளம்பியிருந்தாள்.

அவளது அலுவலகத்தில் ஐந்தாவது தளத்தில் அனைவருக்கும் பொதுவாய் கபேடேரியா இருந்தது.பொதுவாய் அனைவருக்குமான மதிய உணவு வேளை அங்கு தான்.ப்ரஜீஷ் உட்பட.ஆனாலும் அவனுக்கு அங்குத் தனி அறை இருப்பதால் அதைப் பயன்படுத்திக் கொள்வான்.அரிதிலும் அரிதாய் காபியோ டீயோ குடிக்க வேண்டும் போல் தோன்றினால் அங்கு எதோ ஓர் மூலையில் அமர்ந்துக் குடித்துச் செல்வான்.

ராஜீவ் மட்டுமே அனைவரோடும் நேரடித் தொடர்பில் இருப்பதால் அவனை அத்தனை எளிதில் யாரும் கவனிக்கவும் மாட்டார்கள்.அவனது அடையாளத்தை மறைத்து வைப்பதற்கு அதுவே மிக முக்கிய காரணம்…அவனது உலகில் அவன் மட்டுமே..

அன்று அபூர்வா தன் பக்கத்து இருக்கையில் இருப்பவரிடம் கூறிவிட்டுக் காலை உணவை முடிப்பதற்க்காக அங்கு வர அந்த ஆறு பேர் அமரும் இருக்கையில் ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்த ப்ரஜீஷைக் கவனியாது மறு ஓரத்தில் அமர்ந்து தனது உணவை உண்ண ஆரம்பித்தாள்.

அந்நேரம் அவளது தங்கை அவளை அழைத்திருக்க எடுத்து பேசியவாறே வேக வேகமாய் உணவை உள்ளேத் தள்ளிக் கொண்டிருந்தாள்.

“சொல்லு டீ இன்னும் காலேஜ் போகாம என்ன பண்ற?”

“…….”

“ஓ மறந்துட்டேன் டி…பிரின்சிபல் கிட்டப் பேசி ஒரு பதினைஞ்சு நாள் டைம் வாங்கு…அதுகுள்ள எனக்கு சம்பளம் வந்துரும்…பாதி சம்பளம் தான்னாலும் அந்த மாசத்தை ஓட்டிரலாம்..ஒண்ணும் பிரச்சனை இருக்காது..சரியா?”

“……”

“ம்ம் நான் நல்லா தான் இருக்கேன்…வந்து ரெண்டு நாள் தான ஆகுது…கொஞ்சம் கொஞ்சமா பழகிக்குறேன்…மத்தபடி பிரச்சனை எல்லாம் ஒண்ணும் இல்ல..எல்லாரும் நல்லா பழகுறாங்க…”

“……..”

“ம்ம் தமிழ் கொஞ்சம் புரிஞ்சுக்குறாங்க…நான் எனக்குத் தெரிஞ்ச இங்க்லீஷ் வச்சு சமாளிக்குறேன்..பிறக்கும் போதே எல்லாம் தெரிஞ்சுகிட்டா வரோம்…அப்படிதான் இதுவும் போகப் போக எல்லாம் கத்துப்பேன்..”

“……”

“சரி டீ நேரமாச்சு..என்னைக் காணுமேனு யாரும் தேடும் முன்ன நான் இடத்துக்குப் போறேன்..இல்லனா நல்லாயிருக்காது..வச்சுடுறேன்…”

அப்போது தான் அவனைக் கவனித்தவள் லிப்டில் வந்தவன் என்பதைக் கண்டுகொண்டாள்.இடம் பொருள் அறியாமல் தன்போக்கில் பேசிவிட்டோமே என்றுத் தன்னையே நொந்துக் கொண்டவளாய் அவனை ஓரப்பார்வை பார்த்த வண்ணம் எழுந்து கொள்ள எத்தனிக்க,

“எந்த டீம்?”

“ஆங்??!!”

“எந்த டீம்னு கேட்டேன்?”

“ஹெச் ஆர்…”

ஆமோதிப்பாய் தலையசைத்தவன் அவன்போக்கில் காபியைப் பருக ஆரம்பிக்க ஒன்றும் கூறாமல் அவளும் அங்கிருந்துக் கிளம்பியிருந்தாள்.

ப்ரஜீஷிற்கோ அவளது சம்பளம் எவ்வளவு எதை வைத்து அவள் அடுத்த மாதத்திற்கான கணக்கிடுகிறாள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றவே அவளிடம் அக்கேள்வியைக் கேட்டிருந்தான்.அதன்பின் எப்போதும் போல் அந்த நிகழ்வை மறந்தும் போயிருந்தான்.

நாட்கள் அதன்போக்கில் நகர்ந்து கொண்டிருந்தன.அபூர்வா புது இடத்திற்கும் வேலைக்கும் நன்றாகவேப் பழகிக் கொண்டாள்.வேலைக்குப் புதிது என்பதே மறக்கும் அளவிற்கான வேலைகள் ஒரு நாளில் முடிப்பதற்கே இருந்தன.

பொதுவாக ஹெச்ஆர் பிரிவு ராஜீவின் நேரடிக் கண்காணிப்பில் இருப்பதால் அவனுக்கு அந்தப் பிரிவின் அனைவரைப் பற்றியுமே தெரிந்துக் கொள்ள முடியும்.அந்த விதத்தில் அபூர்வாவின் வேலைத்திறன் மீது நல்லதொரு அபிப்ராயம் இருந்தது அவனுக்கு.அத்தனையும் தெரிந்தவள் என்று கூற முடியாவிடினும் எதையும் சட்டென க் கற்றுக் கொள்வாள் என்பது புரிந்தது.

ஒரு மாதகாலம் கடந்திருந்த நிலையில் அன்று மாலை வேலை முடியச் சற்று தாமதமாகும் என்பதால் தீபாவை முன்னரேக் கிளம்பச் சொல்லியிருந்தாள் அபூர்வா.என்ன தான் பழகிவிட்ட இடம் ஆனபோதிலும் இத்தனை நாட்களில் அவள் தனியே எங்கும் சென்றிருக்கவில்லை.

இரவு எட்டு மணியளவில் தன் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தவளுக்கு அலுவலகப் பகுதியைக் கடக்கும் வரையிலும் கூட ஓரளவு தைரியமாகத்தான் இருந்தது.ஆனால் அதன் பின் பத்து நிமிட நடைப் பகுதி சற்று ஆள்நடமாட்டம் குறைந்ததாக இருந்தது.

எதைப்பற்றியும் யோசிக்காமல் வேக நடைகளை மேற்கொண்டவளாய் முன்னேறிச் செல்ல சாலையோரம் நின்றிருந்த காரின் கதவு சட்டென திறந்ததில் ஒரு நொடி உயிரே போய்விட்டிருந்தது அவளுக்கு.

பின் இருக்கையின் உள்ளிருந்து ஒரு பெண் தன் உடைகளைச் சரி செய்தபடி வெளியே வர மறுபுறக் கதவைத் திறந்து வந்தவனைப் பார்த்து விழி விரித்தாள் அபூர்வா.

ப்ரஜீஷோ வழக்கமானத் தன் அலட்சியப் பார்வையோடு ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்துக் கொள்ள அந்தப் பெண்ணுமே எதைப் பற்றியும் கவலைக் கொள்ளாதவளாய் முன்னிருக்கையில் அமர்ந்து கதவைச் சாற்றிக் கொண்டாள்.ஆனால் நடப்பதைப் நம்ப முடியாதவளாய் பேய் முழி முழித்து நின்ற அபூர்வா பின் நிற்கும் இடமுணர்ந்து அங்கிருந்து நகர்ந்து விட்டிருந்தாள்.

ஆனாலும் அதை அவளால் அத்தனை சாதாரணமாய் எடுத்துக் கொள்ள முடியவில்லை.படங்களிலும் செய்திகளிலும் கேட்பது போன்றதொரு நிகழ்வைக் கண்முன்னே கண்டது அவள் நினைவிலிருந்து அகல மறுத்தது.ஏனோ அவன் மீது கோவம் கூட வந்தது.இனி அவனை அலுவலகத்தில் பார்க்க நேர்ந்தாலும் பேசும் வாய்ப்பைக் கொடுக்கக் கூடாது என்று கோடி முறையாய் மனதில் நினைத்துக் கொண்டாள் அபூர்வா.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode