வரம்-22

by ஸ்ரீ
0 comments 86 views
A+A-
Reset

நீரும் நிழலும் நிலம்பொதியும் நெற்கட்டும்
பேரும் புகழும் பெருவாழ்வும் – ஊரும்
வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க் கென்றும்
தரும்சிவந்த தாமரையாள் தான்

விளக்கம்
பிறருக்கு துன்பம் செய்யாதவருக்கு, அடுத்தவர் அழிய வேண்டும் என்ற வஞ்சனை இல்லாதவருக்கு நல்ல நீர்வளம், நிழல் தரும் மரங்கள், நெல் வளம், பேரும், புகழும், சிறப்பான வாழ்க்கையும், நல்ல வீடும், தேவையான செல்வமும், நீண்ட ஆயுளும் செந்தாமரையில் அமரும் மஹாலக்ஷ்மி அருளுவாள்.

அன்றைய காலை வழக்கத்தை விட காயத்ரிக்கு நெருக்கடியாய் அமைந்திருந்தது. நடு இரவு இரண்டரை மூன்று மணியளவில் அலறி ஓய்ந்த கைப்பேசியைத் தேடி எடுத்து காதிற்கு வைத்தவளுக்கு தூக்கம் மொத்தமாய் தொலைந்து போயிருந்தது.

“சார் அவனுங்க..”

“…”

“ஓகே சார் நான் பாத்துக்குறேன்.”

“என்னாச்சு கண்மணி?”

“ஒரு சின்ன பிரச்சனை அன்பு..நீ வீட்டு ஜன்னல் கதவெல்லாம் பூட்டிருக்குதானு மட்டும் பாரேன்.”

“என்னடி ஆச்சு?”

“அக்யூஸ்ட் ஒருத்தன் தப்பிச்சுட்டான் அன்பு..பேச நேரமில்ல..நீ என்ன சத்தம் கேட்டாலும் கதவை மட்டும் திறக்காத மத்தவங்களை எழுப்ப வேண்டாம் பாத்துக்கலாம்.போலீஸ் வந்துட்டே இருக்காங்க..போ அன்பு”,என்றவள் அலமாரியின் கதவை சாற்றிவிட்டு திரும்பும் போது அவள் கையில் துப்பாக்கி இருந்தது.

அதிர்ச்சியாய் அவளைப் பார்த்தவன் சூழ்நிலை உணர்ந்தவனாய் கீழே வேகமாய் சென்றான்.அவனைத் தொடர்ந்து கீழே வந்தவள் வெளிக்கதவை பூட்ட அவசரமாய் அன்பு கதவைத் தட்டினான்.

“காயூ என்ன பண்ற கதவை திற”

“அன்பு ரிலாக்ஸ் கொஞ்ச நேரம் தான்..”,என்றவள் வீட்டிற்கு பக்கவாட்டில் ஒளிந்து நிற்க ஐந்து நிமிடத்தில்  இரண்டு மூன்று காவலர்கள் மஃப்டியில் பின்பக்கமாய் வர செய்கை காட்டி அவர்களுக்கான இடத்தை சுட்டிக் காட்டியபடி தேவையான அறிவுரைகளை வழங்கினாள்.

அனைத்தையும் ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்த அன்புவிற்கோ உயிர் அவனிடத்தில் இல்லை.அதற்குள் சலசலப்பு கேட்டு எழுந்து வந்த ராகவனும் ராகினியும் அன்புவிடம் விவரம் கேட்க பயந்தே போயினர்.

கால் மணிநேரம் நிசப்தமாய் கழிந்திருக்க சட்டென இரண்டு மூன்று காலடி தடங்கள் அழுத்தமாய் பதிந்தன.

ஒருவனின் கையில் கூர்மையான கத்தியிருக்க மற்ற இருவரின் கைகளிலும் தடிமனான கம்பிகள் இருந்தன.

மூவரும் உள்ளே வரும் வரை காத்திருந்த காவலர் ஒருவர் அதன்பின் வெளிக் கதவைப் பூட்டிவிட சுதாரித்தவர்கள் ஓடுவதற்குள் இருவரை மற்ற போலீஸ்காரர்கள் பிடிக்க முன்னே வந்தவனை காயத்ரி நெருங்கியிருந்தாள்.

கத்தியோடு இருந்த அவனது கையை மணிக்கட்டில் பிடித்தவள் திருப்ப எத்தனிக்க அவன் கையை இழுத்த வேகத்தில் காயத்ரியின் கையை ஆழமாய் கிழித்திருந்தது.

சட்டென கையை உதறியவள் மறு முழங்கையால் அவன் தாடையில் அடித்திருக்க விழப்போனவன் சுதாரித்து மீண்டுமாய் அவளைத் தாக்குவதற்குத் தயாராகி நின்றான்.

சில நொடிகள் களபரமாய் கடக்க தன் துப்பாக்கியின் பின்புறம் கொண்டு அவனது விழி ஓரத்தில் ஓங்கி அடித்திருந்தாள் காயத்ரி.

அவன் தெளிவடையும் முன் மேலும் சில அடிகளை வைத்தவள் இரு கைகளையும் மடக்கி மண்டியிட வைத்த பின்பே ஓய்ந்திருந்தாள்.

ஒரு வழியாய் அனைத்தும் முடிந்து அவர்களை போலீசோடு அனுப்பி வைத்து வாசல் படியில் அமர்ந்தவளுக்கு அப்போது தான் கையின் வலி நன்றாய் உரைத்தது.

அமர்ந்தபடியே மறு கையால் கதவைத் திறந்து விட்டவளை நொடியில் அணைத்துக் கொண்டான் அன்புச்செல்வன்.

“ஒண்ணுமில்ல அன்பு..”

“பேசாத டி..”,என்றவன் அமைதியாய் பக்கவாட்டில் அணைத்த வண்ணம் இருக்க ஆனந்தன் மருந்துகளோடு வெளியே வந்தான்.

ராகினி அவாளுக்கு குடிப்பதற்கு தண்ணீர் எடுத்து வந்து தர ராகவன் வெளியில் நின்றிருந்த இரண்டு மூன்று அக்கம் பக்கத்தாரிடம் பேசி அனுப்பி வைக்கச் சென்றார்.

“வலிக்கும் அண்ணி..டூ மினிட்ஸ்..”,என்றபடி ஆனந்தன் அடிப்பட்ட இடத்தை சுத்தம் செய்ய முகம் சுழித்து அன்பின் தோளில் சாய்ந்து கொண்டாள்.அதற்குள் அபி ஊசியோடு வெளியே வர,

“இந்த நேரத்துல நீ ஏன் இதெல்லாம் பண்ற அபி..”

“நானும் டாக்டர் தான்னு மறந்துட்டீங்களா..அமைதியா இருங்க கொஞ்ச நேரம்”,என்றவள் அவளது கையில் ஊசியை இறக்கினாள்.

“ஆ எத்தனை நாள் கொலை வெறி உனக்கு..அன்பு வேணும்னே வலிக்குற மாதிரி போடுறா..”,என்றதைக் கேட்டு அபி அவளை முறைக்க அன்பு அப்போதும் எதுவும் பேசவில்லை.

“அண்ணி எதுக்கும் ஹாஸ்பிட்டல் போகலாம் வெட்டு கொஞ்சம் ஆழமா தெரியுது..”

“ம்ம் சரி தம்பி..பார்த்துக்கலாம்..நீங்க அபியை கூட்டிட்டு போங்க..அவ மூஞ்சியை பார்த்தா எனக்கே பயமா இருக்கு..”,என்றவளின் அருகில் அமர்ந்து கொண்டாள் அபி.

“உங்களை என்ன பண்ணலாம்!இவ்வளவு பெரிய விஷயம் நடந்துருக்கு நீங்க என்னனா காமெடி பண்ணிட்டூ இருக்கீங்க?!”

“என்ன டாக்டரம்மா நம்ம தொழில்ல இரத்ததுக்கு எல்லாம் பீல் பண்ண முடியுமா?”

“…”

“அன்பு ஒண்ணுமில்ல நீ ரிலாக்ஸ் ஆகு ப்ளீஸ்..”

“யாரு டா காயூ…என்ன இதெல்லாம்”,என்ற ராகவனோடு ராகினியும் பதட்டமாய் நின்றிருந்தார்.

“அவனுக்கு நாளைக்கு தூக்கு தண்டனைப்பா..எப்படியோ தப்பிச்சுட்டான்.”

“!!!!”

“அல்மோஸ்ட் ஒரு சைகோ பா அவன்.காசு கொடுத்தா யாரை வேணும்னாலும் கொல்லுவான் அந்த ரகம்.ஏகப்பட்ட கேஸ்..ஆனால் அரசியல் தலைங்க சிலர் உதவியினால தப்பிச்சுட்டே இருந்தான்.சென்னையில் நான் இருந்த அப்போ வசமா ஒரு கேஸ்ல சிக்கிட்டான்.

அவனோட அத்தனை கொலைக்கான ஆதாரங்களையும் வைச்சு தூக்கு தண்டனை வாங்கி கொடுத்துட்டேன்.உள்ளே போகும் போது அவனோட ஒரே எண்ணம் என்னை கொல்லணும்ங்கிறது தான்.

நேத்து இவன் தப்பிச்சுட்டான்னு தெரியும் சென்னை போலீஸ் தேடிட்டு இருக்காங்கனும் தெரியும்.ஆனால் இங்க வருவான்னு எதிர்பார்க்கல.

உள்ளே அவனோட நெருக்கமா பழகின கைதிங்ககிட்ட விசரிச்சப்போ தான் அவன் கொஞ்ச நாளாவே ஆட்களை வைச்சு என்னை வேவு பார்த்துருக்கான்னும் என்னை கொல்லணும்னு திட்டம் போட்டுருக்கான்னும் தெரிஞ்சுருக்கு.

உடனே என்னை அலார்ட் பண்ணி போலீஸையும் அனுப்பி வைச்சுருக்காங்க..நிறைய பேருக்கு இந்த மாதிரி வெறி இருக்குறது சகஜம் தான்.ஆனால் சாகும் போதும் இத்தனை வஞ்சத்தோட அமைதியில்லாம சாகுறதெல்லாம் ரொம்ப கொடுமை.

நீங்க எல்லாரும் கொஞ்சம் நிதானமாகுங்க நான் அப்படியே ஹாஸ்பிட்டல் போயிட்டு ஸ்டேஷன் போயிட்டு வந்துரேன்.போலாமா அன்பு?”,என்றவளுக்கு சம்மதமாய் தலையசைத்தவன் தங்களறைக்குச் செல்ல மற்றவர்கள் எதுவும் கூறும் நிலையில் இருந்திருக்கவில்லை.

“அன்பு பேசுடா..கை ரொம்ப வலிக்குது”,என்றவள் அவனைப் பின்னிருந்து கட்டி நின்றாள்.

“நீ இப்படி குழந்தையாவே இருக்கலாம் டி..இவ்வளவு ஆபத்தை சுத்தி வைச்சுட்டு இருக்க..”,என்றவன் அவளை முன்னிழுத்து இறுக்கிக் கொண்டான்.

“வளைஞ்சு கொடுக்காம வேலை பார்த்தா இதெல்லாம் இருக்கும் தான் டா..நம்ம ஹோட்டலை ஒரு நிலைமைக்கு கொண்டு வர்றதுக்குள்ள நீயும் தான் நிறைய ஃபேஸ் பண்ணிருப்ப..”

“கரெக்ட் தான்..ஆனாலும் கண்ணு முன்னாடி பார்த்ததெல்லாம் ஏத்துக்கவே முடியல..கவனமா இரு கண்மணி.”

“நான் தான் சொல்லிருக்கேனே உன்னை டார்ச்சர் பண்றதுக்காக செத்து பொழச்சு வந்துருக்கேன் டா..நூறு வயசு வரை உன்னை டார்ச்சர் பண்ணிட்டே தான் இருப்பேன்.நீ வருத்தப்படாம இருக்கணும் அது மட்டும் தான் என் பலமே..”

“புரியுது டி..கூடவே இருக்கேன்..சரியாகிடுவேன் சீக்கிரமே..நேரமாகுது வா ஹாஸ்பிட்டல் போலாம்.”,என்றவன் அவளுக்கான சிகிச்சை முடித்து சிறைச்சாலைக்கும் அவனே அழைத்துச் சென்றான்.

அந்த சூழல் எல்லாம் வித்தியாசமாய் இருந்தது அவனுக்கு.அதைவிட ஆண்களுக்கு நடுவில் கம்பீரமாய் அவர்களின் வணக்கத்திற்கு தலையசைத்த வண்ணம் பெண் சிங்கமாய் செல்பவளை பார்த்து வியக்காமல் இருக்க முடியவில்லை அன்புச் செல்வனிற்கு.

அவள் வரும் வரை காரிலேயே அமர்ந்திருந்தவனுக்கு மனதின் படபடப்பு மட்டும் குறைந்தபாடில்லை.தன் காயூவிற்கும் டிஎஸ்பி காயத்ரிக்கும் இருக்கும் மலையளவான வித்தியாசத்தை எண்ணி எண்ணி வியந்தான்

அரை மணி நேரத்தில் வந்தவள்,”சாரி டா லேட் ஆகிடுச்சு..போலாமா?”

“காயூ..”

“ம்ம்?”

“ஏன் டி நீ இப்படியிருக்க?”

“நான் என்னடா பண்ணேன்?”

“உண்மையா சிங்கம் மாதிரி கெத்தா இருக்க..ஆனால் என்கிட்ட ஏன் டி இப்படியிருக்க..அதனாலேயே உன்னோட தொழில் ஆபத்து பத்தி எல்லாம் இன்னும் சரியா தெரிஞ்சுக்காம இருக்கேனோனு தோணுது..

நீயே சொல்லு தொழில்ல ஒரு பொசிஷன்ல இருக்குறவங்களோட இயல்பு அவங்க அறியாமயே அப்படியே மாறிடும் தான.”

“நீ சொல்றது புரியுது அன்பு.ஆனால் நான் தான் விசித்திர ப்ராணி ஆச்சே..ஹா ஹா..ஒரு வயசுக்கு மேல என்னைச் சுத்தி இருக்குற எல்லாருக்குமே நான் அம்மா ரோல் பார்க்க வேண்டிய சூழல்தான்.

அம்மா அப்பாக்கு, இந்த மல்லிகா மாதிரி குட்டி குட்டி தங்கச்சிகளுக்குனு..எல்லாரும் அவங்க கஷ்டத்தை என்கிட்ட தான் ஷேர் பண்ணிப்பாங்க.பிரச்சனையைத் தீர்க்குறோமோ இல்லையோ நம்மகிட்ட அவங்களுக்கான ஆறுதல் கிடைக்குறதா நம்புவாங்க.

அதே நேரம் எனக்கு அப்படி ஒரு ஆள் கிடைச்சதில்ல டா.நான் பெருசா வெளிக்காட்டிக்க மாட்டேன்னாலும் மனசு ஒரு மடியை ரொம்பவேத் தேடும்.

உன்னைத் தான் தேடுவேன்னாலும் நீ எப்படியிருப்பனு எனக்கு ஐடியா எல்லாம் இருந்ததில்லையே.ஆனால் நான் எதிர்பார்த்த அந்த மடியா 100 இல்லை 200 சதவிகிதம் நீ இருக்க டா.

முதல் நாள் நீயாவே தோள் சாஞ்சுக்க சொன்னியே அங்க விழுந்தவ தான்..”,என்றவள் சிரிக்க புன்னகையோடு அவளைத் தோள் சாய்த்துக் கொண்டான்.

“சுருக்கமா சொல்லணும்னா You are my Home..நம்ம வீடுங்கிறது ஒரு நாளோட அத்தனை களைப்பு வருத்தம் எல்லாத்தையும் மறக்க வைச்சு ஹப்பாடானு ஒரு உணர்வு தரும் இல்ல..

நாம என்ன தான் வசதியான ஹோட்டல்ல எல்லாம் தங்கினாலும் நம்ம வீட்ல நம்ம பெட்ல படுக்கும் போது கிடைக்குற அந்த சுகம்..

என்னோட வீடு உயிரும் உணர்ச்சிகளும் உள்ள நீயா இருக்கும் போது எனக்கு கிடைக்குற சுகத்தை வார்த்தையால சொல்ல முடியாது டா..அதனால தான் நான் உன்கிட்ட இப்படி இருக்கேன்.

உன்னோட ஈகோ இல்லாத குணம் ரொம்ப ரொம்ப ரேர் அன்பு.உன்னை விட ஒருபடி என்னை மேல் வைச்சு பார்க்குறதுக்கு நீ என்னைக்கும் தயங்கினதில்ல.உன்கிட்ட நான் நானா இருக்கேன்.எனக்கு எந்தவித தயக்கமோ பயமோ எதுவுமே இல்லை.

என்ன மாதிரியான சூழ்நிலையா இருந்தாலும் என் அன்புக்கு என்னைப் பத்தி தெரியும்னு துணிஞ்சு சொல்ற சுதந்திரத்தை கொடுத்துருக்க டா புருஷா.”,என்றவள் அவன் தாடையை அழுந்தப் பிடித்து ஆட்டிச் சிரித்தாள்.

அவள் நெற்றியில் இதழ் பதித்தவனாய் ஒன்றும் கூறத் தோன்றாது அமர்ந்திருந்தான் அன்புச் செல்வன்.

“உன்கிட்ட ஒண்ணு கேட்கவா?”

“ம்ம்..”

“நிஜமாவே குழந்தை விஷயத்தில் உனக்கு வருத்தம் இல்லையா அன்பு?”

“நீ ஆசைப்பட்ட ஒரே விஷயம் அதுதான்.அது இன்னும் நடக்கலையேனு வேணும்னா வருத்தம் இருக்கு காயூம்மா..”

“….”

“எனக்கு இன்னும் உன் காதலையே முழுசா அனுபவிச்சு முடிக்கல..அதுக்குள்ள பங்குக்கு ஆள் எல்லாம் வர வேணாம்.அன்பு அன்புனு சுத்திட்டு இருக்குற நீ உன் புள்ளை வந்தப்பறம் என்னை கண்டுக்கவே மாட்ட இல்ல..அதனால நிதானமா வரட்டும்..அம்மாவை மாதிரி தான் டி புள்ளையும் இருக்கும்.”,என்றவன் சிரிப்பை கட்டுப்படுத்த முயற்சித்துத் தோற்று போனான்.

“ம்ம் நானாவது லேட் ஆனாலும் வந்து பேசினேன்..நீயெல்லாம் அதை விட மோசம்..போடா..என்ன கிண்டல் பண்ண வந்துட்டான்..”

“ஹா ஹா என்னை மாதிரி இருந்தா இன்னும் கஷ்டம் டி”,என்றவன் கூறியதன் அர்த்தம் புரிந்து அடக்க மாட்டாமல் சிரித்தாள் காயத்ரி.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode