வரம்-14

by ஸ்ரீ
0 comments 96 views
A+A-
Reset

ஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றிச்
சாவாரை யாரே தவிர்ப்பவர்- ஓவாமல்
ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்
மெய்அம் புவியதன் மேல்

விளக்கம்
வாழ வேண்டும் என்று விதி உடையவரை, என்ன முயற்சி செய்தாலும் எவரும் கொல்ல முடியாது. அது போல் இறக்க வேண்டும் என்ற விதி உடையவரை யார் தடுத்தாலும் வாழ வைக்க முடியாது, எத்தனை முயற்சி செய்தாலும் முன்னேற்றம் அடையாமல் பிச்சை எடுக்க வேண்டும் என்ற விதி உடையவரை யார் காப்பாற்ற முடியும். இது தான் இந்த பூமியில் கண் கண்ட உண்மை.

நாட்கள் அதன் போக்கில் நகர அன்று காலையில் ஸ்டேஷனில் இருந்த காயத்ரிக்கு கமிஷ்னரிடம் இருந்து அழைப்பு வந்தது.

“குட்மார்னிங் சார்.”

“காயத்ரி ** இன்ஜினியரிங் காலேஜில் பசங்களுக்குள்ள ஏதோ தகராறு போல பொண்ணு சம்மந்தப்பட்ட விஷயம் நீங்க கொஞ்சம் போய் என்னனு பாருங்க”

“ஷுவர் சார்.”,என்றவள் இன்பாவையும் தேன்மொழியையும் பற்றி சிந்தித்தவாறே கல்லூரிக்குக் கிளம்பியிருந்தாள்.

உள்ளே நுழைந்த போதே சற்று பரபரப்பாய் இருக்க காரை விட்டு இறங்கியவள் கூட்டம் கூடியிருந்த இடத்தை நோக்கி செல்ல அவளை கவனித்த கல்லூரி முதல்வர் அவளருகில் ஓடி வந்தார்.

“மேம்..”

“என்ன பிரச்சனை?”

“பெரிய இடத்து பையன் ரௌடிங்களை வைச்சு ஒரு பொண்ணை டீஸ் பண்ணிருக்கான்.அது தெரிஞ்சு பொண்ணோட ப்ரதர் அடிச்சதுல இரண்டு தரப்புக்கும் பிரச்சனை ஆகிடுச்சு மேம்..”

“காலேஜ்குள்ள ரௌடிஸ் எப்படி வந்தாங்க?”

“அது..”

“என்ன சார்..உங்களை எல்லாம் நம்பி தான படிக்க அனுப்புறாங்க இப்படி பொறுப்பில்லாம இருந்தா என்ன அர்த்தம்.

இன்னைக்கு அடி தடியோட போச்சு..நாளைக்கே வேற எதுவும் பிரச்சனை வந்தா என்ன பண்ணுவீங்க?”,என்றபடி கூட்டத்தை விலக்கி நுழைந்தவளுக்கு ஒரு ஓரத்தில் இரு ரவுடிகள் கை கட்டப்பட்டவாறு அமர்ந்திருக்க மறுபுறம் திரும்பியவளுக்கு அதிர்ச்சியாய் இருந்தது.

தேன்மொழி அழுது கொண்டிருக்க இன்பா வாய் ஓரத்தில் ரத்தத்துடன் சட்டை கிழிந்து நின்றிருந்தான்.அவனைவிட்டு சற்று தள்ளி இன்னொரு மாணவனும் இரத்தம் வடிந்தபடி நின்றிருந்தான்.

தற்செயலாய் தலை நிமிர்ந்த தேன்மொழி காயத்ரியை எதிர்பார்க்காதவளாய் ஒரு நொடி அதிர்ந்து பின் அதிகரித்த அழுகையோடு வேகமாய் ஓடி வந்து அவளைக் கட்டிக் கொண்டாள்.

“அண்ணி…”

“தேனு..”,அவளை கைவளைவில் வைத்த வண்ணம் இன்பாவைப் பார்க்க அவன் இன்னுமாய் தலை குனிந்து கொண்டான்.

“என்னாச்சு சொல்லு..”

“….”

“அழறதை நிறுத்து என்னனு சொல்லு தேனு..”

“….”

“இப்போ வாயைத் திறக்க போறியா இல்லையா..என்னடி ஆச்சு?”,என்று காயத்ரி கத்தியதில் பயந்தவளாய் கடகடவென நடந்ததை விவரிக்க ஆரம்பித்தாள்.

காலையில் பேரூந்திலிருந்து இறங்கிய பின் இன்பா கிருத்திகாவைப் பார்த்து வருவதாய் கூறிவிட்டுச் செல்ல தேன்மொழி அங்கிருந்த பென்ஞ்சில் அமர்ந்த வண்ணம் தன் தோழிகளுக்காக காத்திருந்தாள்.

“ஹாய் தேன்..”,என்றபடி அவள் பின் வந்து நின்றான் இறுதி வருட மற்றொரு பிரிவைச் சேர்ந்த சந்துரு.

அவன் குரலில் எரிச்சலுற்றவளாய் திட்டுவதற்காக தலையைத் திருப்பியவள் அவனருகில் இருந்த இருவரைப் பார்த்து பயந்து எழுந்து நின்றாள்.

“என்ன கண்ணு..நம்ம சந்துரு தம்பி என்ன சொன்னாலும் புரிஞ்சுக்காம ரொம்ப அலைய விடுறியாமே..”

“!!!”

“அவரு தான் உன்னை பிடிச்சுருக்குனு சொல்லுறார்ல..கொஞ்சம் லவ் பண்ணா குறைஞ்சா போயிடுவ..”

“….”

“ஒரு வேளை இந்த காதல் கன்றாவியெல்லாம் பிடிக்காதோ என்னவோ..தம்பி பேசாம ஊர் சுத்தி கொஞ்சம் அப்படி இப்படி இருந்துட்டு முடிச்சுக்கிடலாம்னு நினைப்பாங்களோ?”,என்றவன் அசட்டையாய் சந்துருவைப் பார்த்து சிரிக்க பார்வை மொத்தமும் கேவலமாய் தேன்மொழியின் மீது படிந்தது.

பயத்திலும் ஆத்திரத்திலும் தேன்மொழிக்கு கண்கள் கலங்க சரியாய் இன்பா அந்த நேரம் அவளருகில் வந்திருந்தான்.

“தேனு..”

“இன்பா..”,என்றவள் அவன் கையை இறுகப் பற்றிக் கொண்டு அவன் தோள் சாய்ந்து கொண்டாள்.

“தோடா…என்ன சந்துரு தம்பி..நம்மளை பார்த்து பம்மிட்டு இப்போ இவனோட போய் ஒட்டிக்குது..”,என்றதைக் கேட்ட இன்பாவிற்கு கோபம் தலைக்கேறியது.

“இன்பா,இந்த சந்துரு ரொம்ப நாளா லவ் பண்றேன்னு பின்னாடி சுத்தினான் நான் முடியாதுனு சொல்லிட்டேன்.இன்னைக்கு இவங்க…நாம போலாம் இன்பா..”,என்றவள் கண்கள் கண்ணீரை நிறுத்தாமல் கொட்டிக் கொண்டிருந்தன.

“ஏ சந்துரு..என்ன இதெல்லாம் யாரு இவங்க?பிரின்சிபல் கிட்ட சொன்னா என்னாகும் தெரியும்ல?”

“என்ன தம்பி..ரொம்ப மிரட்டுறீங்க..பொண்ணு வேற நல்லாயிருக்கே..சீன் போட்டு மடக்கிடலாம்னு..”,எனும்போதே அவன் சட்டையைப் பற்றி சண்டையை இழுத்திருந்தான் இன்பா.

ஒரு கட்டத்தில் கூட்டம் சேர சந்துருவும் இன்பாவும் கட்டி உருளாத குறையாக மைதானத்தில் அடித்துக் கொள்ள ரவுடிகளை சில மாணவர்கள் சேர்ந்து மடக்கிப் பிடித்திருந்தனர்.

அனைத்தையும் கூறி முடித்த தேன்மொழி இன்னமும் அழுது கொண்டிருக்க அவள் தாடையைப் பற்றி நிமிர்த்தியவளாய்,

“இதில் உன் தப்பு எதாவது இருக்கா?”,இல்லை என்பதாய் தலையசைத்தவள் பாவமாய் அண்ணியைப் பார்த்திருந்தாள்.

“அப்போ ஏன் அழற..கண்ணைத் துடை முதல்ல..இன்பா இங்க வா..”

“சாரி அண்ணி…”

“எதுக்கு?”

“….”

“அவ்வளவு விளக்கமே கொடுத்துருக்க கூடாது டா..இன்னும் நாலு அடி சேர்த்து அடிச்சுருக்க வேணாம்..”,என்றவளை அதிர்ந்து பார்த்திருந்தான்.

தேன்மொழியை அழுத்தி பிடித்துக் கொண்டு ரவுடிகளின் அருகில் சென்றவள்,

“இப்போ பேசு பார்ப்போம்..”

“….”

“பேசு டா..”,என்றவள் இருவர் கன்னத்திலும் அடித்த அடியில் மாணவர்கள் எல்லாம் பயந்து நிற்க கல்லூரி முதல்வரே அதிர்ந்து போனார்.

அடுத்ததாய் காயத்ரி சந்துருவின் அருகில் செல்வதை பார்த்து பதறியவறாய்,

“மேம்…ப்ளீஸ்..”

“என்ன?அவங்க பணத்துக்கு நீங்க சலாம் போடுங்க..எனக்கு அந்த அவசியம் இல்ல..”,என்றவள் சந்துருவின் கன்னத்தில் அறைந்திருந்தாள்.

“படிக்குற வயசில் இந்த ரவுடித்தனமெல்லாம் தேவையா உனக்கு?இதுக்கு பேரு தான் லவ்வா?ஒரு பொண்ணுகிட்ட எப்படி பிகேவ் பண்றதுனு முதல்ல கத்துகிட்டு அப்பறம் மத்த கருமத்தையெல்லாம் பண்ணலாம்.படிக்க அனுப்பினா…”,என்றபடி மீண்டும் அவள் கையை ஓங்க கண்களை மூடிக் கொண்டான் சந்துரு.

அனைவரையும் முறைத்த வண்ணம் அந்த ஏரியா போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து ஜீப்பை எடுத்து வருமாறு இன்ஸ்பெக்டரிடம் கூறிவிட்டு கல்லூரி முதல்வரிடம் வந்தவள்,

“ரொம்ப நல்ல காலேஜ் மெயிண்டெயின் பண்றீங்க சார்.காலேஜ்குள்ள யாரு வர்றதுனு கூட தெரியாத அளவுக்கு.இன்னொரு தடவை இப்படி எதாவது கம்ப்ளைண்ட் வந்தது மீடியாவுக்கு நானே விஷயத்தை லீக் பண்ணிடுவேன்.

இவங்க ரெண்டு பேரையும் நான் கூட்டிட்டு போறேன்.வீட்டில் எதுவும் சொல்ல வேண்டாம் நானே பார்த்துக்குறேன்.இன்ஸ்பெக்டர் வந்தவுடனே பார்மாலிட்டிஸ் முடிச்சுட்டு இவனுங்களை ஹேண்ட் ஓவர் பண்ணிட்டு போறேன்.”

“ஓகே மேம் ஷுவர்..ரூம்ல வந்து வெயிட் பண்ணுங்க மேம்..”

“இட்ஸ் ஓகே..”,என்றபடி அங்கிருந்த திண்டில் அமர்ந்தவளுக்கு கமிஷ்னரிடம் இருந்து மீண்டும் அழைப்பு வந்தது.

“சார் ஸ்பாட்ல தான் இருக்கேன்.ஆல் அன்டர் கன்ட்ரோல்..இன்ஸ்பெக்டர் ரகு வந்ததும் ஹேண்ட்வோவர் பண்ணிட்டு கிளம்பிடுவேன்”

“குட் காயத்ரி ஓகே தென் பார்த்துக்கோங்க..”,அவரிடம் பேசிவிட்டு அதற்குள் வந்திருந்த இன்ஸ்பெக்டரிடம் அவ்விருவரையும் ஒப்படைத்து விட்டு வந்த போது மாணவர்கள் கூட்டம் மொத்தம் கலைந்திருந்தது.

“கேன்டீன் போலாமா?தேனு போய் பர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் வாங்கிட்டு வா..நாங்க போறோம்.”,என்றபடி காயத்ரி இன்பாவை கேன்டீனிற்கு அழைத்துச் சென்றாள்.

மூவருக்குமாய் டீ காபி வாங்கி வந்தவள் இன்பாவிடம் கொடுக்க அவன் அவளை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.

“என்னடா இன்னுமா கோபமா இருக்க?”,என்றவளை விசித்திரமாய் பார்த்து வைத்தான்.

“என்ன???”

“இந்நேரம் அப்பா வந்துருந்தாரு எனக்கு இரண்டு அடியே கூட கிடைச்சுருக்கும்.நீங்க என்னனா கோபமா இருக்கேனானு கேட்குறீங்க அண்ணி?!”

“அவங்க பெரியவங்க பசங்க படிப்பை பத்தி தான் கவலைப்படுவாங்க..நாமளா பிரச்சனையைத் தேடி போனா தான் தப்பு..இதெல்லாம் நம்ம கையில் இல்ல டா இன்பா..தேனு அழுதுட்டு நின்னதை பார்த்தவுடனே எனக்கே கோபம் தலைகேறிச்சு..உனக்கு இருக்காதா..சரி காபி சாப்பிடு..”

இருவரும் அமைதியாய் காபியை அருந்திக் கொண்டிருக்க தேன்மொழி முதலுதவிப் பெட்டியோடு வந்தமர்ந்தாள்.

“இந்தா தேனு”,என்ற அண்ணியைப் பார்த்தவள் மீண்டுமாய் தோள் சாய்ந்து அழத் தொடங்கினாள்.

“அய்யய்யே என்ன இப்படி வாட்டர் டேங் வைச்சுருக்க..சும்மா சும்மா அழக் கூடாது.முதல்ல யாரைப் பார்த்தும் பயப்படாத..நம்ம மேல தப்பு இல்லாதப்போ எந்த பிரச்சனையானாலும் நிமிர்ந்து நிக்கணும் தேனு.

நீ அழுதுட்டே இருந்ததைப் பார்த்து தான் கடுப்பு இன்னும் ஏறிடுச்சு எனக்கு.என்னைப் பார்த்தவுடனே அண்ணி இப்படி பண்ணிட்டான்னு அவனை கை காமிச்சுருந்தேனு வை..அப்படியே உன்னை கட்டிப்பிடிச்சு கிஸ் பண்ணிருப்பே..நீ என்னனா..”,என்றவள் குறும்பாய் சிரிக்க இன்பாவுமே லேசாய் சிரித்திருந்தான்.

முதலுதவிப் பெட்டியை எடுத்து அவனது காயத்திற்கு மருந்திட்டவளைப் பார்த்தபடியே தேன்மொழி அமர்ந்திருந்தாள்.

“நானும் உங்களை மாதிரியே ஆகணும் அண்ணி..”

“எது போலீஸாவா??!”

“இல்ல..இப்படி தைரியமா துணிச்சலா..அந்த மாதிரி..”

“ம்ம் குட்..மத்தபடி இன்னைக்கு நடந்ததெல்லாம் பெரிய விஷயமே இல்ல..இதெல்லாம் மனசில் போட்டு குழப்பிக்க கூடாது.ஜாலியா காலேஜ் வா..ப்ரெண்ட்ஸோட ஆட்டம் போடு..நல்லா படி அம்மா அப்பாகிட்ட நான் பேசிக்குறேன்.வீட்டுக்கும் வந்து அழுதுட்டு நின்னனு வை?!”

“ம்கும்…”,என்று வேகமாய் தலையாட்டியவளைத் தன்னோடு சேர்த்துக் கொண்டாள் காயத்ரி.

வீட்டிற்கு வந்தப் பிள்ளைகளைப் பார்த்த ராகினியும் ராகவனும் பதறிவிட்டனர்.காயத்ரி பொறுமையாய் விஷயத்தைக் கூற இன்னுமாய் பயம் கூடி விட்டிருந்தது அவர்களுக்கு.

“ம்மா…ஒண்ணுமில்ல..தேவையில்லாம பயந்து அவளையும் பயமுறுத்தாதீங்க..”

“என்ன காயூ மா இப்படி சாதாரணமா சொல்லிட்ட..இவனைப் பாரு இப்படி ரத்தம் வர்ற அளவுக்கு சண்டை எல்லாம் போட்டுருக்கான்..”

“ஆமாப்பா நானும் அதான் சொன்னேன்..என்ன டா இன்பா அடி எதிரில் இருக்குறவனுக்குத் தான் விழணும்னு..பயிற்சி பத்தலை நான் சொல்லி கொடுக்குறேன் பா..”,என்று சீரியஸாய் கூறியவளைப் பார்த்து ராகவன் அதிர்ந்து போனார்.

மாமியார் தன்னை முறைப்பதை உணர்ந்தவளாய்,”ம்மா..உங்க பெரிய பசங்ககிட்ட சொன்னா அவங்களும் இதை தான் பண்ணிருப்பாங்க…இன்பா வேணும்னு எதுவும் பண்ணலை தான..அவன் உங்க வளர்ப்பு ஏன் இப்படி பயப்படுறீங்க..கவலைப்படாதீங்க..”,என்றவளை ராகவன் பாசமாய் பார்த்திருக்க ராகினி முகம் இன்னும் தெளிவில்லாமல் தான் இருந்தது.

“சொல்லுங்கப்பா…”

“இதெல்லாம் புதுசா இருக்கா…அதான் அவ பயந்துட்டா..கொஞ்ச நேரத்தில் சரி ஆகிடுவா மருமகளே..நீ கிளம்பு நான் பார்த்துக்குறேன்..”,என்றதும் சற்றே தெளிந்தவள் வேலைக்கு கிளம்ப தேன்மொழி மீண்டுமாய் அவளைக் கட்டிக் கொண்டாள்.

மாலை வீடு வந்த அன்புச் செல்வனும் ஆனந்தனும் விஷயத்தைக் கேள்விபட்டு அதிர்ந்தனர்.

“எனக்கு கால் பண்ணிருக்கலாம் தானே இன்பா?”

“இல்ல அண்ணே அதுக்குள்ள டீச்சர்ஸ் எல்லாம் வந்து போலீஸ் வரை போயிடுச்சு..நாங்க ஆனாலும் அண்ணியை அங்க எதிர் பார்க்கவேயில்ல..”

“ம்ம்..யாரு அந்த பையன் காயூ வந்தா நான் என்னனு விசாரிக்குறேன்.”

“அவங்க அப்பா பெரிய பிஸினஸ் பண்றாரு ணா..அதனால காலேஜ்ல அவனுக்கு ஓவர் இடம் கொடுத்துட்டாங்க.ஆனால் அண்ணி இன்னைக்கு எங்க பிரின்ஸிபாலை வைச்சு செஞ்சுட்டாங்க..”,என்று சந்தோஷத்தில் உதடு விரித்து சிரித்த இன்பா வலியில் முனகினான்.

“ஆவுச்..”

“பார்த்துடா..”

“இதெல்லாம் ஒண்ணுமில்ல..அவனுக்கு அண்ணி விட்டாங்க பாரு ஒரு அறை..நிறைய பேர் கை அதுவாகவே அவங்க கன்னத்தைப் பிடிச்சுகிச்சுனா பார்த்துக்கோண்ணே..”,என்றதைக் கேட்டு ஆனந்தனும் அன்புவும் சிரித்தனர்.

“அண்ணே..”

“சொல்லு தேனு..”

“அண்ணிக்கு நம்ம மேல எல்லாம் ரொம்ப பாசம்..நீ ரொம்ப லக்கி..”,என்றவளின் முன் நெற்றி பிடித்து கலைத்துச் சிரித்தான் அன்பு.

வேலை முடிந்து காயத்ரி வந்த நேரம் வீட்டு வாசலில் இந்த மாநாடு நடந்து கொண்டிருக்க அவளைப் பார்த்ததும் அன்பு ஏகத்துக்கும் முறைத்தான்

“ஐயோ என்ன டா சொல்லி வைச்சீங்க.என் புருஷன் என்னை முறைக்குறான்..”,என்றபடி ஷுவைக் கழட்ட சிறியவர்களோ,

“உண்மையைச் சொன்னோம்”,என்று சிரித்தனர்.

“உனக்கு கால் பண்ணி சொல்லணும்னு தான் நினைச்சேன் அன்பு..மீட்டிங்ல மாட்டிக்கிட்டேன்..சாரி.”,எனும்போதே வாசலில் கார் சத்தம் கேட்க அனைவருமாய் வெளியே எட்டிப் பார்த்தனர்.

அந்த சந்துரு அவன் தந்தையோடு இன்னும் மூவர் காரில் இருந்து இறங்கி வந்தனர்.காயத்ரி அன்பு ஆனந்தன் மூவருமாய் முன் வந்து நிற்க பெரியவர்களோடு இன்பாவும் தேன்மொழியும் சற்று உள்ளே நின்றனர்.

“வணக்கம் டிஎஸ்பி மேடம்..”

“என்ன விஷயம்?”

“என் பையனை அத்தனை பேர் முன்னாடி வைச்சு அடிச்சுட்டு என்ன விஷயம்னு வேற கேட்குறீங்களா?”

“ஏன் எதுக்காக அடிச்சேன்னு உங்க பையன் சொல்லலையா?”

“என்ன வேணாலும் இருக்கட்டும்..நீங்க எப்படி என் பையன் மேல கை வைக்கலாம்..நானே அவனை இதுவரை அடிச்சதில்ல.”

“அதனால தான் என்கிட்ட அடி வாங்கிருக்கான்.பையன் என்ன பண்றான் எங்க போறான் யாரோட பழகுறான் இப்படி எதையும் கவனிக்காம என்ன சார் பண்றீங்க..அவன் பிரச்சனை பண்ணது எங்க வீட்டு பொண்ணுகிட்ட..அடிச்சதோட விட்டனேனு சந்தோஷப்படுங்க..”

“என்னம்மா இப்படி பேசுற?”

“வேற எப்படி பேச சொல்றீங்க?உங்க பையன் கூட்டிட்டு வந்த இரண்டு பேரும் கடைஞ்செடுத்த பொறுக்கிங்க..ஏகப்பட்ட கேஸ் இருக்கு அவனுங்க மேல..நாளைக்கே உங்க பணத்து மேல ஆசைப்பட்டு உங்க பையனையே கூட எதுவும் பண்ணத் தயங்க மாட்டாங்க..அவனுங்க வந்து எங்க வீட்டு பொண்ணைத் தப்பா பேசினா வேற என்ன பண்ணணும்?”,என்றவள் சந்துருவை முறைத்து நின்றாள்.

அவள் கோபத்தை உணர்ந்தவனாய் அன்பு அவள் கையை இறுகப் பற்றிய வண்ணம்,

“இங்க பாருங்க சார்.உங்க பையன் மேல தான் முழு தப்பும் இருக்கு..சின்ன பொண்ணு சார்.எவ்வளவு பயந்து போயிருப்பானு யோசிச்சு பாருங்க..நாங்க பிரச்சனையை பெரிசு பண்ண விரும்பலை.பேசுறதுக்கு ஒண்ணுமில்ல கிளம்புங்க முதல்ல..”

“என்ன அன்பு உட்காந்து கொஞ்சிட்டு இருக்க..இரண்டு நிமிஷத்துல இடத்தை காலி பண்ணல நானே நியூசென்ஸ் கேஸ்ல உள்ளே தூக்கி வைச்சுருவேன்.கிளம்புங்க எல்லாரும் ரைட் நவ்..”,என்றவளின் குரலில் அந்த இடமே அமைதியாகிவிட அத்தனை பேரும் கிளம்பிச் சென்றனர்.

அறைக்குள் நுழைந்தவள் உடை கூட மாற்றாமல் அப்படியே கட்டிலில் விழ அவள் புறமாய் திரும்பி தலைக்கு கை வைத்த வண்ணம் அவளது பெல்ட்டை தளர்த்தியவாறு நெற்றி முடிகளை ஒதுக்கி விட்டான் அன்பு.

“ரொம்ப லாங் டே அன்பு..”,என்றவள் அவனைப் பார்க்க அழுத்தமாய் நெற்றியில் இதழ் பதித்தவன்,

“போய் ப்ரெஷ் ஆகிட்டு வா காயூ நான் போய் சாப்பாடு எடுத்துட்டு வரேன்.சாப்பிட்டு தூங்கு..”

“காலையில் நடந்ததைப் பத்தி ஒண்ணும் கேட்க மாட்டியா?”

“அதான் தேனு சொல்லிட்டாளே..”

“என்னனு?!”

“அண்ணிக்கு நம்ம மேல எல்லாம் ரொம்ப பாசம் நான் ரொம்ப லக்கினு..”,என்றவனின் இதழ்களுக்குள் கலந்து கொண்டாள் அவன் காதலின் காதலி.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode