ராதை-7

by ஸ்ரீ
3 comments 180 views
A+A-
Reset

மாலை நான்கு மணியளவில் கல்லூரியின் கலையரங்கமே ஆர்பரிப்போடு காட்சியளித்தது.

ராதாவோ தன் கண்ணன் நல்லபடியாய் பாடி முடிக்க வேண்டுமென அத்தனை கடவுள்களையும் வேண்டிக் கொண்டிருந்தாள்.

அதற்கு மிக முக்கிய காரணம் இன்றைய விழாவிற்கான சிறப்பு விருந்தினர் திரைத்துறையைச் சார்ந்த இசைக் கருவிக் கலைஞர்.

கிருஷ்ணணுமே அந்த ஒரு காரணத்திற்காகவே நன்றாகப் பயிற்சி செய்திருந்தான்.

விருந்தனர் உரை முடிந்து கலை நிகழ்ச்சிகள் ஆரம்பமாக மாணவர்களின் கரகோஷத்தில் அரங்கம் அதிர்ந்து கொண்டிருந்தது.

கிருஷ்ணன் கையில் மைக்கோடு மேடையேறிட ஒருவித மௌனம் அரங்கத்தில்.

முதலாம் ஆண்டு மாணவன் என்பதால் பெரிதாய் அவனை யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

சட்டென ஏற்ப்பட்ட அந்த அமைதி அவனுக்கு சிறிது பதட்டத்தைக் கொடுக்க கண்கள் அதுவாய் ராதாவைத் தேடியது.

தன்னை அவன் தேடுகிறான் என்ற அடுத்த நொடி அத்தனை ஆண்களையும் பொருட்படுத்தாது முகம் நிறைந்த புன்னகையோடு சட்டென எழுந்து நின்றிருந்தாள் ராதா.

அடுத்த நொடி மனம் அதுவாய் அமைதி அடைந்திருந்தது கிருஷ்ணணுக்கு.

ஆழ்மூச்செடுத்தவன் விழி மூடி மைக்கை இறுகப் பற்றியவாறு பாடலை பாட ஆரம்பித்திருந்தான்.

“நெஞ்சில் உள்ளாடும் ராகம் இது தானா கண்மணி ராதா
உன் புன்னகை சொல்லாத அதிசயமா அழகே இளமை ரதமே
அந்த மாயனின் லீலையில் மயங்குது உலகம்
சின்ன கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி”

பாடி முடித்த பின்பும் அரங்கத்தின் அமைதி மட்டும் கலையவே இல்லை.

அங்கு ராதாவோ குங்குமமென சிவந்த முகத்தோடு யாரையும் நிமிர்ந்து கூட பார்க்கத் தோன்றாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.

அவள் எத்தனைக் கேட்டும் என்ன பாடல் பாடப் போகிறான் என்பதை மட்டும் கிருஷ்ணன் கூறவேயில்லை.

அவனின் ராதையை பூங்கோதையை என்ற வரியிலே தன்னைத் தொலைத்தவள் தான் அவன் முகம் கூட நோக்காமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.

சில நொடிகளில் அரங்கத்தின் அமைதி கலைந்து கைத்தட்டல்களின் சத்தத்தில் முங்கித் திளைத்திருந்தது.

எல்லாரும் இன்னொரு முறை அவனைப் பாடுமாறு கத்திக் கூச்சலிட கிருஷ்ணனின் மகிழ்ச்சிக்கோ அளவில்லாமல் போனது.

கல்லூரி முதல்வரும் விருந்தினரும் அனுமதியளிக்க மீண்டுமாய் சின்னக் கண்ணன் அவன் குரல் வழி மேடையில் தவழத் தொடங்கியிருந்தான்.

மேடையிலிருந்து இறங்கிய நேரம் அவனை அப்படியே தோளில் தூக்கியிருந்தனர் மாணவர்கள் சிலர்.

ஆர்பாட்டங்கள் அனைத்தும் அடங்கியபின் விருந்தனர் அவனை அருகில் அழைத்து மனமாரப் பாராட்டினார்.

கண்ணணுக்கோ மட்டட்ற்ற மகிழ்ச்சி.. நிச்சயம் ஒரு நாள் தன் எண்ணம் ஈடேறும் என்ற நம்பிக்கை வந்திருந்தது அவனிடத்தில்.

அனைத்து நிகழ்ச்சிகளும் முடிந்து வீட்டிற்குக் கிளம்ப ஏழு மணியாகிவிட்டிருந்தது.

அனைவரிடமும் விடைபெற்று கிருஷ்ணன் வந்த நேரம் அவனுக்காக காத்திருந்தாள் ராதா.

ஊரே பாராட்டியிருந்தாலும் தன் மனம் கவர்ந்தவளின் வாயால் அவள் கூறக் கேட்கக் காத்திருந்தான் கிருஷ்ணன்.

“எல்லாரும் என்னைப் பாராட்டினா.. நீ ஒண்ணும் சொல்லவேயில்லையே ராதா..நோக்குப் பிடிக்கலையா?”

“…”

“ஏன் அமைதியா இருக்காய்.. சொல்லு ராதா?”

“ஊரே பாராட்டின குரலும் குரலுக்கு சொந்தகாரனும் என் கருத்தைக் கேட்க காத்திருக்குற பெருமையில் வாயடைச்சு போய்ருக்கேன் கண்ணா..”

“!!”

“உன் குரலில் அந்த பாட்டு.. அதிலும் ஒவ்வொரு தடவை நீ ராதானு சொல்லும் போதும் எப்படியிருந்தது தெரியுமா..

பார் இப்போ அதை நினைச்சா கூட சிலிர்க்குறது. நீ ஏன் என்னன்ட சொல்லவேயில்ல இந்தப் பாட்டு தான் பாடப் போறேன்னு?”

“என்னால உனக்கு கொடுக்க முடியுற பரிசு இதுதான்.அதனால தான் சொல்லலை..

இப்போ உன் முகத்துல தெரியுற இந்த உணர்ச்சி பார்க்க பார்க்க அத்தனை சந்தோஷமா இருக்கு நேக்கு.

முன்னாடியே சொல்லிருந்தேன்னா இது கிடைச்சுருக்காதோண்ணோ..”

“ம்ம்..”,என்றவள் அதற்குமேல் பேசவில்லை.அவனும் அவளை ஏதும் கேட்கவில்லை.

உணர்ச்சிக் கலவைகளால் நிரம்பியிருந்தனர் இருவருமே. பேரூந்தில் அவ்வளவாய் கூட்டமில்லாமல் இருக்க இருவருமே அந்த பெரிய இருக்கையின் ஒரு ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்தனர்.

ஜன்னலிருக்கையில் அமர்ந்திருந்த ராதா வெளியே வெறித்திருக்க கிருஷ்ணணோ ஏதோ சிந்தனையில் இருந்தான்.

இருவருமே கையிலிருந்த புத்தகத்தை நடுவில் வைக்க எத்தனித்த நேரம் இருவரின் கரங்களும் உரசிக் கொள்ள கிருஷ்ணன் வேகமாய் தன் கையை நகர்த்திக் கொள்ள ராதாவோ அப்படியே வைத்திருந்தாள்.

அதை கவனித்தவன் அவள் முகம் நோக்க ஒருவித பதட்டமும் படபடப்பும் அவள் முகத்தில் குவிந்திருக்க அத்தனை குளுமையிலும் அவளுக்கு முகத்தில் வேர்த்திருந்தது.

தன்னவளின் நிலையுணர்ந்தவன் அதற்கு மேல் அவளைத் தவிக்க வைக்காமல் தன் கரத்தை மீண்டும் இருக்கையின் நடுவிலிருந்த அவள் கரத்தோடு அழுத்தமாய் கோர்த்துக் கொண்டான். அவளது கண்களோ சட்டென கலங்கியிருந்தது.

“ப்ச்ச் ராதா!!”

“இல்லை நான் அழலை..”

“..”

“கண்ணா…”

“சொல்லு மா..”

“இப்போ எல்லாம் நான் ரொம்ப மாறிட்டேனா..எதுவும் தப்பா நடந்துக்குறேனா..

நேக்குத் தெரியலை.ஆனா இந்த நொடி உன்னோட கையை இப்படி அழுந்தப் பிடிச்சுக்கணும்னு தோன்றது..

சரி தப்பு இதெல்லாம் எனக்குத் தோணலை. எங்க உன்னைத் தொலைச்சுடுவேனோனு ஒரு பயம் இருந்துண்டே இருக்கு கண்ணா..

நீ கூட இப்போ என்னைப் பத்தி தப்பா நினைச்சுருப்பாய் தான?”

“ராதா.. அசடாட்டம் பேசிண்டு இருக்காய்.. என் கையைப் பிடிக்குறதில் நோக்கு எதுக்கு இத்தனை குழப்பமும் தயக்கமும்.

அதுமட்டுமில்லாம அதுக்கு நான் ஏன் உன்னைத் தப்பா நினைக்கணும்.

உன்னைத் தவிர இத்தனை உரிமையாய் என் கைப்பிடிக்க யாருக்கும் உரிமை கிடையாது. அப்படியிருக்க நீ ஏன் இப்படியெல்லாம் யோசிக்குறாய்?”

“இல்லை கண்ணா..எந்நேரமும் உன் நினைப்போடவே இருக்கேன்.

உன்னோடவே இருக்கணும் உன் கூடவே நடக்கணும்..நிறைய நிறைய பேசணும்..

இப்படி எத்தனையோ நினைப்பு எனக்குள்ள இருந்துண்டே இருக்கு..”

“இப்போ எல்லாம் நீ தேவையில்லாம நிறைய யோசிக்கிறியோனு தோணுறது நேக்கு!”

“இருக்கலாம்..ஆனா…”

“என்ன ஆனா?”

“அதற்குக் காரணம் நாம கேட்டு வளர்ந்த கிருஷ்ணர் ராதை கதை தான்.

எங்கே அந்த பகவான் கிருஷ்ணர் மாதிரி நம்ம காதலும் கல்யாணத்தில் கைகூடாம போய்டுமோனு பயமா இருக்கு கண்ணா…”

“!!!”

“போன வாரத்தில் அப்பாவைப் பார்க்க ஒரு மாமா வந்திருந்தார்.வந்தவர் அவருக்குத் தெரிஞ்சவாளோட பையனுக்கு என்னை பெண் கேட்டு வந்திருந்தார்.

அப்பா படிப்பு முடியட்டும் அப்பறமா பார்க்கலாம்னு சொல்லி அனுப்பிட்டார்..

இருந்தாலும் அப்படி ஒரு சூழ்நிலையை என்னால நினைச்சுக் கூட பார்க்க முடியாது…

அப்படி மட்டும் எதாவது நடந்தா நான் உயிரோடேயே இருக்க மாட்டேன்..”,என்றவள் அவன் மார்பில் புதைந்து கொண்டாள்.

அவளின் இந்த செயலைச் சற்றும் எதிர்பாராதவனோ ஒரு நொடி என்ன செய்வதென விழித்து பின் அவளை ஆதரவாய் தன்னோடு சாய்த்துக் கொண்டான்.

“ராதா முதல்ல கண்ணைத் துடைச்சுண்டு நிமிர்ந்து உட்கார்..

யாராவது பார்த்தா தப்பா நினைப்பா..”,என்றவன் அவளை சகஜமாக்குவதிலேயே முனைப்பாய் இருந்தான்.

ராமனுக்குத் தெரிந்தவர்கள் யாரேனும் பார்த்து எதுவும் தவறான செய்தி அவர் காதுகளுக்குப் போய்விட்டால் ராதாவிற்கு தான் தேவையில்லாத பிரச்சனை என்றுணர்ந்தவனாய் அவளை நொடிப் பொழுதில் சீர்படுத்தினான்.

அவள் தன்னை நிதானப்படுத்திக் கொள்ள அதற்குள் அவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டிருந்தது.

அவன் முன்னே செல்ல அவனைத் தொடர்ந்து இறங்கியவள் அவனோடு நடக்க ஆரம்பித்தாள்.

“இராதா இத்தனை நாழி ஆய்டுத்து ஆனா பார் உன்னை அழைச்சுண்டு போக கூட உன் அப்பா வரலை.

என் மேல எவ்வளவு நம்பிக்கை இருந்திருந்தா இப்படி என்னோட உன்னை அனுப்புவார்.

இந்த ஒரு நம்பிக்கை போதும் உன்னை வாழ்க்கை முழுசும் என் கையில் கொடுக்குறதுக்கு..

நல்லதையே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்.அந்த பெருமாள் மேலே பாரத்தைப் போட்டு தினசரி வாழ்க்கையை ஓட்டணும் மா..

எதிர்காலத்தை நினைச்சு நினைச்சு நிகழ்காலத்தை இழந்துடப்டாது.புரியுதா?”

அப்போதும் அவளிடத்தில் எவ்வித தெளிவும் ஏற்பட்டிருக்கவில்லை.

ஒரு நொடி தன் நடையை நிறுத்தி நின்றவனை கேள்வியாய் அவள் திரும்பி நோக்க லேசான புன்னகையோடு,

“இப்போ இந்த நொடி உன் முகத்தில் புன்னகை வர வைக்கக் கூட பெருமாள் நேக்கு ஒரு வழிக் கொடுத்துருக்கார் தெரியுமா?”

அவன் என்ன செய்வான் என்பது புரிந்தவளுக்கு இதழ் தானாக மலர ஆரம்பித்தது.

“சொன்னேனோல்யோ!”

“அதுக்காக அப்படியே போக வேணாம்..”,என்றவள் குழந்தையாய் சிணுங்க அவள் முன்னந்தலையை சிநேகமாய் அழுத்தியவனாய்,

“காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்
உனக்கே உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே
நீ இல்லாமல் எது நிம்மதி நீதானே என் சன்னிதி”

என்று மெதுவாய் பாடி முடித்திருக்க அவனையே பார்த்திருந்தவளின் மனம் சொல்ல முடியா ஒருவித அமைதியைத் தழுவியிருந்தது.

“இவ்வளவு தான் வாழ்க்கை ராதா..எல்லா கேள்விகளுக்கும் விடை இருக்கும்.எல்லா துன்பங்களுக்கும் முடிவு இருக்கும்.

அதுவரை நாம நம் கடமையை சரியா செய்துட்டா போதும். சந்தோஷமா இரு..போலாமா?!”,என்றவன் அவளோடு இணைந்து கொண்டான்.

எந்த ஒரு வருத்ததின் ஆயுளும்  சில துளி கண்ணீரோடு சாய்ந்து அழ நினைக்கும் நேரம் நமக்காக நம் அன்பானவரின் தோள் கிடைக்கும் வரை தான்.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

3 comments

Fathima.ar November 20, 2026 - 1:49 pm

Saanju azha oru thol irunthaa varutham poidumaaa.

Nadakkumaaa

srichitra November 20, 2026 - 3:55 pm

Very nice.

suganyavel November 20, 2026 - 6:21 pm

Super💕

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode