எண்ணம்-8

by ஸ்ரீ
2 comments 294 views
A+A-
Reset

முத்து கூறியதனைத்தையும் கேட்டவளுக்கு ஒரு இறப்பைப் பற்றி கண்டறிய வந்தால் இங்கு வேறு என்னவெல்லாமோ கண்டுபிடிக்கப் பட வேண்டிய உண்மைகள் இருக்கின்றதே என்றே தோன்றியது.

சில நிமிடங்கள் அப்படியே அமர்ந்திருந்தவளுக்கு கோபமாய் கிளம்பிச் சென்ற மகிழனின் நினைவு வர அவனிடம் அப்படி பேசியிருக்கக் கூடாது என்ற எண்ணம் எழுந்தது.

இருக்கும் கஷ்டத்தில் அவனை மேலும் கடுப்பேற்றியிருக்க வேண்டாம் என்ற எண்ணம் வரவே யோசிக்காமல் அவனது எண்ணிற்கு அழைத்தாள்.

முழு அழைப்பும் அழைத்து ஓய்ந்ததே அன்றி அவனிடமிருந்து பதில் இல்லாமல் போனது.

சரி நேரில் பார்த்து விஷயத்தை புரிய வைத்து வரலாம் என்று எண்ணியவளாய் முத்துவிடம் வெளியே சென்று வருவதாய் கூறிவிட்டு அவர் எத்தனை கூறியும் கேட்காமல் ஆஷிக்கின் இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு மகிழனின் அலுவலகத்தை நோக்கி கிளம்பியிருந்தாள் ஷியாமா.

அவள் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்று வரவேற்பாளினியிடம் தன் பெயரைக் கூறி மகிழனை சந்திக்க வேண்டும் என்று கூறிவிட்டு காத்திருக்க அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அவளை உள்ளே செல்லுமாறு பவ்யமாய் கூறி அனுப்பினாள்.

“மே ஐ கம் இன்?”

“வா..”,என்றவனின் குரலும் முகமும் இன்னுமே கடுப்போடு தான் இருந்தது ஷியாமாவிற்கு நன்றாகவே தெரிந்தது.

“சாரி மிஸ்டர் மகிழன். ஐ டின்ட் மீன் இட்..”

“…”

“சாதாரணமா இந்த மாதிரியான விளக்கம் எல்லாம் யாருக்கும் நான் தரதில்ல ஆனா நேத்து நீங்க பேசின அப்பறம் உங்களுக்கு ஒரு ப்ரெண்டா ஹர்ட் பண்ணிருக்க வேணாமோனு தோணிச்சு..

அதனால தான் வந்தேன்..மத்தபடி எனக்கு இந்த கன்வின்ஸ் பண்றதெல்லாம் ஒழுங்கா வராத விஷயம்  முடிஞ்சா நீங்களே நார்மல் ஆகுங்க..”, என்று அவள் கூறிய விதத்தில் சட்டென உதட்டோரத்தில் மென்னகை வந்திருந்தது மகிழனிடம்.

அதைப் பார்த்தவளோ பெருமூச்சுடன், ”தேங்க் காட்.. ரொம்ப பேசணுமோனு நினைச்சேன் பரவால்ல..

மத்த விஷயங்கள்னா நானும் பெருசா எடுத்துக்க மாட்டேன் பட் உங்க அப்பாவைப் பத்தி பேசிருக்க கூடாதுனு தோணிச்சு என்ன தான் அடாவடியா இருந்தாலும் ஒரு சாதாரண குடும்பத்து பொண்ணா சில சென்ட்டிமென்ட்ஸ் இருக்க தான் இருக்கு.. ஓகே வந்த வேலை முடிஞ்சுது..நான் கிளம்புறேன்..”

“தேங்க்ஸ்”

“ஃபார் வாட்?”

“ப்ரெண்ட்னு சொன்னதுக்கு..”

“கமான்..”

“இல்ல ஐ அம் நாட் ஓவர் ரியாக்டிங்.. நேத்தே சொன்ன மாதிரி நடக்குற பல விஷயங்கள் என்னை கொஞ்சம் வீக் ஆக்குது..

அப்படிபட்ட நிலைமைல இது ரொம்பவே தேவையான ஒரு விஷயமா இருக்கு.. அதனால தான் சொன்னேன்..”

“எனிவே இனியாவது நான் எதாவது சாதரணமா சொன்னா கூட தப்பா எடுத்துக்காம டென்ஷன் ஆகாம இருப்பீங்கனு நம்புறேன்..”

“வில் ட்ரை மை பெஸ்ட்..”,என்றவன் தோள் குலுக்கி புன்னகைக்க இடவலமாய் தலையசைத்தவள் குடிப்பதற்காக தண்ணீர் கேட்டு காத்திருந்தாள்.

பணியாள் அதை எடுத்து வரும் நேரத்திற்குள் அறையை ஒரு முறை பார்வையால் அளவெடுத்தவள்,

“ரொம்ப ப்ளசான்டா இருக்கு உங்க ஆபீஸ்.. இன்ட்டீரியர்ஸ் கூட..”, என்றவாறே அங்கிருந்த புகைப்படங்களைப் பார்வையிட்டாள்.

வர்மா குரூப் ஆப் கம்பனிகள் வாங்கிய விருதுகளும் சான்றிதழ்களும் அது சார்ந்த புகைப்படங்களும் இருந்தன.

மகிழனின் தாத்தா சந்திர வர்மாவைத் தொடர்ந்து இன்னொரு புகைப்படத்தில் மற்றொருவர் பரிசு வாங்குவதைப் போல் இருந்த புகைப்படத்தை கைநீட்டி மகிழனை அவள் ஏறிட,

“என் அப்பா அமித் வர்மா..”

“ஓ…”,என்றவாறே தொடர்ந்தவளுக்கு அடுத்து இருந்த புகைப்டத்தில் பார்வை பதிந்தது.ஏதோ விருது விழாவாக இருக்க வேண்டும் சற்றே வயது முதிர்ந்த ஒருவரின் வலது புறம் மகிழன் நின்றிருக்க மறுபுறம் இன்னொரு இளைஞன் நின்றிருந்தான்.

அதைப் பார்த்தவளுக்கு ஏதோ ஒரு யோசனை ஓட ஆரம்பித்திருந்தது.

“இது..”,என்று அவள் கேட்கத் தொடங்கிய நேரம் பணியாள் அவளுக்கான தண்ணீரையும் பழரசத்தையும் வைத்துவிட்டுச் செல்ல அந்த புகைப்படத்தை நோக்கி வந்து நின்றான் மகிழன்.

“என்னாச்சு?”

“இல்ல இது..இவரை…யாரு இது?”

“எங்க மார்பிள் பிஸினஸோட டஃப் காம்படீடர்.. சூரஜ் மார்பிள்ஸோட எம் டீ சூரஜ். என்னைவிட இரண்டு வயசு சின்னவன் தான் ஆனா தொழில்ல பயங்கர சின்சியர்.

இது இந்த இயர்க்கான பிஸினஸ் அவார்ட்ஸ்ல எடுத்த போட்டோ.நாங்க நம்பர் ஒன்னு சொன்னா அவங்க நம்பர் டூ..

எனக்கு பெருசா தனிப்பட்ட முறைல அவனைத் தெரியாது ஆனா மாமா இரண்டு பேருக்கும் அவனை அவ்வளவா பிடிக்காது.

கான்ட்ராக்ட் விஷயத்தில் எல்லாம் அடிக்கடி முட்டிக்கும் இரண்டு பேருக்கும். ஆமா ஏன் கேட்குற?இவனைத் தெரியுமா??”

“இல்லை.. ஆனா எதோ ஒரு நியாபகம் சட்டுனு மைண்ட்ல வர மாட்டேங்குது..

இந்த பார்வை எங்கேயோ பாத்துருக்கேன். ம்ம்ம்..”, என்றவள் யோசனையாய் நெற்றியைத் தேய்த்துக் கொண்டிருக்க மகிழன் அவளை விசித்திரமாய் பார்த்திருந்தான்.

“மே பி டீவி இன்டர்வீயூஸ் இல்லை வேற எங்கேயாவது கூட பார்த்துருப்ப..”

“நோ அப்படி எதுவும் இல்லை..பட் வேற எங்கேயோ ..அது..ஹான்…உங்க வீட்ல இரண்டு நாள் முன்னாடி மார்னிங் பார்த்தனே!!”

“வாட்???”

“எஸ் மகிழன் ஐ அம் ஷுவர்.. இந்த ஐஸ் பாடிலேங்குவேஜ் எல்லாமே.. எனக்கு நியாபகம் இருக்கு..”

“நோ வே..அவனுக்கு எங்க வீட்டுக்கு வர வேண்டிய அவசியம் என்ன?

அது மட்டுமில்லாம தொழில் பகைனு பார்த்தா கூட அவனே நேரா வந்து செய்யுற அளவு முட்டாள் இல்ல..”

“கரெக்ட் தான்..பட் இத்தனை சந்தேகம் வரும் போது அதை தெளிவு படுத்திக்கிறது நல்லதுனு தோணுது. டூ டேஸ் டைம் கொடுங்க.. விசாரிச்சுரலாம்.”

“பட் ஷியாமா இதுல ரொம்பவே ரிஸ்க்.. எதாவது தப்பாச்சுனா தொழில் அளவுல பெரிய பிரச்சனை வந்துரும்..பீ கேர்புல் பிஃபோர் யூ டூ எனிதிங்.”

“கண்டிப்பா அது என் கடமையும் கூட..ஒரு லீடும் கிடைக்காம இருந்ததுக்கு இது பரவால்ல இல்லையா அதை விடுறதுக்கு நான் யாரா இல்லை..

ஓகே வில் அப்டேட் யூ சூன் மகிழன்.”,என்றவள் சூரஜின் விவரங்களை அவனிடம் கேட்டு வாங்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்.

தன் டிபார்ட்மென்டின் உதவியுடன் அவனைப் பற்றிய விவரங்கள் அனைத்தையும் அடுத்த ஒரு மணி நேரத்தில் பெற்றிருந்தவளுக்கு எதோ ஒரு விதத்தில் ஒரு சிறு சந்தேகம் எழுந்திருந்தது.

அதை உறுதி செய்து கொள்ள எண்ணியவளாய் தனதறை விட்டு வெளியே வந்தவள் மோனிஷாவைத் தேடி அவளறைக்குச் சென்றாள்.

“ஹாய் மோனி..”

“ஹாய் கா வாங்க..பைக் எல்லாம் செமயா ஓட்டுறீங்களே!”

“ஹா..இந்த வீட்ல யாரு எப்போ எங்கிருந்து நோட் பண்ணுவீங்கனே புரிய மாட்டேங்குது..”

“ஹா ஹா இங்க என் ரூம் விண்டோல இருந்து பார்த்தா பின்னாடி ஷெட் தெரியும்.. அப்படிதான் தற்செயலா பார்த்தேன்…”

“ம்ம் எல்லாரும் ரூம்குள்ள இருந்தே ஸ்பை வேலை பார்க்கலாம்னு சொல்ற அப்போ..”

“ம்ம் அப்படியும் சொல்லிக்கலாம் ஆனா நான் எல்லாம் எப்போவாவது தான் இப்படி எதையாவது நோட் பண்ணுவேன்..

இந்த தியா தீப்தி தான் முழுநேர  வேலையா இதை பண்ணுவாங்க..

அதுவும் பால்கனில உக்காந்து அரட்டையை ஆரம்பிச்சா நேரம் காலம் தெரியாம பேசுவாங்க..

பத்தாததுக்கு போன் ஒண்ணு வேற.. கேட்கவே வேணாம்..”

“ஓ..அப்போ இந்த ப்ளோர் பால்கனியோட எண்ட்ல இருக்குறது யார் ரூம் தீப்தி ஆர் தியா?”

“அது தியாவோடது தான்…நீங்க பார்த்ததில்லயா பாதி நேரம் போனும் கையுமா அங்கேயே தான் சுத்திட்டு இருப்பா..”

“ம்ம் உன்னை விடபெரியவ தான அவ..படிச்சு முடிச்சு எப்படி வீட்லயே இருக்க ஒதுக்கிட்டா..நீயாவது தமிழ் படிக்குற அது இதுனு எதாவது பண்ற..”

“எங்க குடும்ப படிப்பு எம்பிஏ..அதிலிருந்து தப்பிச்சது நான் மட்டும் தான்..

நீங்க நினைக்குறது மதிரி நானும் நினைச்சுருக்கேன்.. எம்பிஏ முடிச்சுட்டு எப்படி இவ இப்படி வீட்டுகுள்ளேயே இருக்கானு தோணும்.

ஒரு தடவை கேட்கவே கேட்டேன்.. அவ சொன்ன பதில் நினைச்சு இப்பவும் சிரிப்பு தான் வருது.

எனக்குப் பிடிச்சா, இந்த படிப்பை படிக்க வச்சாங்க அவங்களுக்குத் தேவை டிகிரி அதை வாங்கிட்டேன்.

அதுக்கு மேல யாரும் எதுவும் என்னை சொல்லக் கூடாது.எனக்கு இப்படி இருக்கத் தான் பிடிச்சுருக்கு..

மே பி ப்யூச்ர்ல என் புருஷனுக்கு தொழில்ல ஹெல்ப் பண்றதுனா பண்ணுவேன்.

இங்க இருக்குற வரை ராணி மாதிரி வாழ்க்கையை என்ஜாய் பண்ணுவேன்னு சொன்னா.”

“பரவால்ல பக்கா ப்ளான்ல தான் இருக்கா.. ஆமா எம்பிஏ அவ எந்த காலேஜ்?”

“டெல்லில இருக்குறதுலயே காஸ்ட்லியஸ்ட் காலேஜ் அங்க தான் படிச்சா.. ஆமா நீங்க ஏன் அவளைப் பத்தி இவ்ளோ கேட்குறீங்க?”

“ஹே எங்கேயோ ஆரம்பிச்சு பேச்சு எங்கேயோ போய்டுச்சு மத்தபடி இன்டென்ஷனோட எல்லாம் எதுவும் கேட்கல..”, எனும்போதே அவளது அலைப்பேசி அலற ஆரம்பித்திருக்க மோனிஷாவிடம் விடைபெற்று வெளியே வந்தவளுக்குத் தேவையான தகவலை அலைப்பேசி கொடுத்திருந்தது.

அடுத்தநாள் காலை சூரஜை பார்ப்பதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு அங்கேயே நின்று தோட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்.

கீழே கல்யாணியின் தம்பி மட்டும் அவளுக்கு முதுகுகாட்டி நின்றிருந்தபடி செடிகளை சீரமைத்துக் கொண்டிருந்தான்.

சட்டென எங்கிருந்தோ வந்த கல் ஒன்று அவனின் பின் தலையை சரியாய் பதம் பார்த்திருந்தது.

அதைப் பார்த்தவள் பதறிப் போய் கீழே ஓடிச் சென்று அவனை கையில் ஏந்தி ரத்தம் வெளியேறாத வண்ணம் பின்னந்தலையைத் தன் கைகுட்டையைக் கொண்டு அழுத்திப் பிடித்தவறே முத்துவிற்கும் மற்றர்களுக்கும் குரல் கொடுத்தாள்.

அவரை அழைத்தவாறே லையைத் திருப்பியவள் மாடியைப் பார்க்க ஐம்பதுகளை எட்டிய பெண் ஒருவர் கையைத் தட்டியவாறே அவனை காண்பித்து சிரித்துக் கொண்டிருந்தார்.

மகிழனின் தாயாக இருக்க வேண்டும் என்று தோன்றியது சட்டென மூளை அதுவாய் அந்த பார்வையை ஆராய முனைந்தது.

அதற்குள் அவரை உள்ளிருந்து யாரோ இழுத்துச் செல்வது தெரிந்தது.

அதற்குள் இங்கு வேலையாட்கள் சூழ்ந்துவிட அவனை ஓரமாய் அமர வைத்து முதலுதவி செய்யத் தொடங்கினர்.

இரத்தம் நிற்காமல் இருப்பதைக் கண்டு உடனடியாய் கல்யாணியோடு மற்றொருவரும் சேர்ந்து அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

முத்துவின் அருகில் வந்தவள், ”மாடியில் ஒரு லேடி.. அவங்க தான் இதைப் பண்ணிணாங்கனு நினைக்குறேன்..”

“தியாம்மா தான் அது..என்ன ஆச்சுனே தெரில அப்பப்போ இந்த மாதிரி நடந்துக்குறாங்க இப்போ எல்லாம்.

பெரியய்யா இறந்த அப்பறம் ரொம்பவே அதிகமாகுது இது.சில நேரங்கள்ல ராத்திரி எல்லாம் தோட்டத்துல சுத்துறாங்களாம்.

சில நேரம் கண்மன் தெரியாம வீட்டுக்குள்ளேயே ஓடுறாங்களாம்..

இன்னைக்கு என்னனா இப்படி ஆய்டுச்சு..அந்த கடவுள் என்ன நினைச்சுட்டு இருக்காரோ ஒண்ணும் புரில.

நான் போய் மகிழன் தம்பிக்கு விஷயத்தை சொல்றேன்.”

என்றவர் உள்ளே செல்ல ஷியாமா மீண்டுமாய் மாடியையே பார்த்திருந்தாள்.

சில நொடிகளில் உணர்வு பெற்றவளாய் அங்கிருந்து உள்ளே செல்ல அங்கு சாந்தி தேவியும் ரமா தேவியும் வழக்கம் போல் பிரச்சனையை ஆரம்பித்திருந்தனர்.

“இதெல்லாம் வீடா எப்போ என்ன நடக்கும்னு தெரியாம உயிரை கையில பிடிச்சுட்டு இருக்க வேண்டியதா இருக்கு..

இந்த பைத்தியம் எப்போ என்ன பண்ணும்னு வேற தெரில.. எல்லாம் தலையெழுத்து..”

என்று வாய்க்கு வந்தபடி கத்திக் கொண்டிருக்க மோனிஷாவும் ஆஷிக்கும் அவளுக்கு செய்கை செய்தபடியே மெதுவாய் உள்ளே இருந்த அறைக்குச் சென்றுவிட அவர்களைத் தொடர்ந்தவாறு ஷியாமாவும் சென்றாள்.

“நீங்க பெரியம்மாவை பார்த்தீங்களா?”

“ம்ம்..”

“எப்படி இருக்காங்க இப்போ.. எங்களுக்கு அவஙங்க முகமே மறந்துடும் போல இருக்கு..பழைய போட்டோல தான் பார்த்துக்குறோம்..”

“நீங்க அவங்களோட அறைக்குப் போனதே இல்லையா?”

“ஐய்யோ தாத்தா எங்களை விடவே மாட்டார்.அதுக்கப்பறம் அண்ணாகிட்ட கேட்க கூட மாட்டோம்.

சின்ன வயசுல சில நேரம் திருட்டுத் தனமா பார்க்க ட்ரைப் பண்ணிருக்கோம்..”

“பழைய போட்டோ எதாவது உங்ககிட்ட இருக்கா?நான் பார்க்கலாமா?”

“ஓ நீங்க அந்த ரூம்க்கு போய்ருக்க மாட்டீங்கல..வாங்க கூட்டிட்டு போறோம்..”,என்றபடி ஆஷிக் பெண்கள் இருவரையும் அழைத்துச் சென்றான்.

பூஜையறைக்கு அருகிலேயே இருந்த பெரிய கதவை திறந்தவன் அங்கிருந்த விளக்குகளை ஒளிர விட அறை மொத்தமும் புகைப்படங்கள் மட்டுமே இருந்தன.

சுவர்கள் முழுவதும் வர்மா பரம்பரையின் நிழற்படங்கள் பெரிது பெரிதாய் ப்ரேம் செய்யப்பட்டு மாட்டிப்பட்டிருந்தன.

“வாங்க இந்த ரூம் தான் தாத்தாவோட பொக்கிஷம்.

அவரோட புக்ஸ் எல்லாம் அதோ அந்த அலமாரி மொத்தமும் இருக்கு.

அவரைத் தவிர படிக்குற பழக்கம் வீட்ல யாருக்கும் கிடையாது சோ யாரும் தேவையில்லாம இங்க வர மாட்டோம்.”, என்று ஆஷிக் கூறிய அலமாரியை ஏறிட்டவள் அடுத்ததாய் புகைப்படங்களை ஏறிட்டாள்.

சந்திர வர்மாவின் தாத்தா கால புகைப்படங்கள் தொடங்கி தற்போதைய வாரிசுகளோடு அவர் எடுத்திருந்த புகைப்படம் வரை அத்தனையும் இருந்தது.

மோனிஷா மகிழனின் தாய் தந்தை புகைப்படத்தை அவளிடம் காட்டினாள்.

“இவங்க தான் பெரியம்மா பெரியப்பா..எவ்ளோ அழகா இருக்காங்க இல்ல..”

உண்மையாகவே இருவருமே அத்தனை பொருத்தமான ஜோடியாக இருந்தனர்.

அதிலும் மகிழனின் தாயார் அத்தனை லட்சணமான முகம். அதே நேரம் ஆடம்பரமற்றவராய் இருந்தார்.

“இந்த படத்துல இருக்குறவங்களை தான் நான் பார்த்தேனாங்கிற அளவு மாறிட்டாங்க…

ரொம்ப அழகா இருக்காங்க இதுல ஆனா ரொம்பவே எளிமையா இருக்குற மாதிரி இருக்கே..”

“ஆமா அவங்க எப்பவுமே அப்படிதானாம் அம்மா சொல்லிருக்காங்க..

அம்மா சித்தி எல்லாரும் பிறந்த இடத்துலயே கொஞ்சம் வசதி படைச்சவங்க தான்.

ஆனா பெரியம்மா ரொம்பவே கஷ்டப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவங்காளாம்.

பாட்டியும் தாத்தாவும் இவங்க தான் மூத்த மருமகளா வரணும்னு தமிழ்நாட்டுக்குப் போய் அங்கேயே கல்யாணமும் பண்ணி கூட்டிட்டு வந்தாங்களாம்.”

“என்ன??”

“ஆமா எங்க பெரியப்பா கல்யாணத்துக்கு யாருமே போகலையாம்.தாத்தாவும் பாட்டியும் மட்டும் தான்.”

“இது எப்படி சாத்தியம் ஜமீன்தார் குடும்பத்தோட மூத்த வாரிசின் கல்யாணம் அப்படி நடக்க வாய்ப்பு இருக்கா?”

“என்ன காரணம்னு எல்லாம் தெரியல..ஆனா அப்படி நடந்ததா தான் அம்மா அப்பா சொல்லி கேள்வி பட்டுருக்கேன்.”

“ஓ..”

“சரி வாங்க போலாம் அடுத்து ஹால்ல எதாவது சுவாரஸ்யமா சண்டை போகும் நமக்கும் பொழுதும் போகும் வாங்க வாங்க.”, என்றவாறு ஆஷிக் இருவரையும் வெளியே அழைத்துச் செல்ல மீண்டும் ஒரு முறை அந்த அறையை கண்களால் அளந்தவாறே இருவரையும் தொடர்ந்தாள் ஷியாமா.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

2 comments

srichitra November 5, 2026 - 11:34 am

Nice

Padmasubramanian November 5, 2026 - 2:59 pm

ஒருவேளை தியா தான் பழி வாங்க அனைத்தும் செய்கிறாரோ?

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode