397
மறுநாளின் பொழுது சற்று சிந்தனையோடே தொடங்கியிருந்தது ஷியாமாவிற்கு.
முந்தைய இரவின் நிகழ்வைப் பற்றிய எண்ணங்களே மனதை அரித்துக் கொண்டிருந்தது.
கட்டிலில் அப்படியே படுத்திருந்தவள் பின் நேரமாவதை உணர்ந்து எழுந்து குளிக்கச் சென்றாள்.
தன் வழக்கமான உடையான ஜீன் டீஷர்டில் உயர்த்திப் போட்ட போனிடெயிலோடு கீழே வந்தவள் என்ன செய்வது என்று சுற்றும் முற்றும் பார்க்க பின் முப்பதுகளில் பெண் ஒருவர் ஓடி வந்தார்.
“வாங்கம்மா பெரியய்யா நீங்க வந்தா சாப்ட்டு வெயிட் பண்ண சொன்னாங்க.”
“ஓ..”,என்றவள் நிதானமாய் சாப்பாட்டு மேஜையை அடைந்து தனக்கான தட்டை எடுத்து வைத்து அமர்ந்தாள்.
பின்னே வந்தவராய் அந்த பெண்மணி அவளுக்குத் தேவையான உணவைக் கேட்டு பரிமாறினார்.
“நீங்க?”
“என் பேரு கல்யாணி இங்க சமையல் வேலை பாக்குறேன்.
எங்கம்மா காலத்துல இருந்தே இங்கேயே இருக்கேன்.”
“ஓ..”
அவர் ஏதோ கேட்க நினைத்து அமைதி காத்து நிற்பதைக் கண்டவளாய்,”என்ன ஏதோ கேட்க நினைக்குறீங்க?கேளுங்க..”
“ஐயோ இல்லம்மா அதெல்லாம் ஒண்ணுமில்ல.. ஐயாகிட்ட எதுவும் சொல்லிராதீங்க..”
“அக்கா..நீங்க உங்க ஐயாவுக்கு மரியாதை கொடுத்தா போதும்.
நான் இங்க விருந்தாளி தான் அதனால தயங்காம கேளுங்க”
அவள் பேச்சில் சற்றே தைரியம் பெற்றவராய்,”இல்ல நீங்க ஐயாவோட ப்ரெண்ட்னு சொன்னாங்க.
நான் இங்க இருக்குற இத்தனை வருசத்துல அவருக்கு ப்ரெண்ட்னு யாரையும் பார்த்தது கிடையாது. இதுல நீங்க வீட்டுக்கே வந்துருக்கீங்களே..அதான்..”
“ஒரு ப்ரெண்ட் கூட கிடையாதா!!”
“என்னம்மா அவங்க ப்ரெண்ட்னு சொல்றீங்க உங்களுக்குத் தெரியாதா”,என்றவர் அவள் பதிலுக்குக் காத்திருக்க சற்றே தன்னை சீர்படுத்தியவளாய்,
“நானும் அவரும் யூஜில ஒண்ணா படிச்சோம் அதுக்கப்பறம் டச்ல இல்ல அதனால எனக்கு தெரில.”
என்று எழுந்தவளுக்கு இந்த வீட்டின் வேலையாள் கூட இத்தனை யோசிக்கிறாள் என்றால் மற்றவர்களை சமாளிப்பது கஷ்டம் தான் போல என்ற சிந்தனை எழாமலில்லை..
ஹாலில் போடப்பட்டிருந்த அந்த மிகப் பெரிய சோபாவில் அமர்ந்தவள் அன்றைய நாளிதழைப் புரட்டிக் கொண்டிருக்க சிறிது நேரத்தில் கோட் சூட்டில் அழுத்தமான நடையோடு அவளருகில் வந்து நின்றவனுக்கு முந்தைய இரவு பார்த்ததை விட முகம் இன்னும் கடுமையேறியிருப்பதாய் தோன்றியது ஷியாமாவிற்கு.
“குட் மார்னிங் மிஸ்டர் மகிழன்.”
“குட் மார்னிங் ஷியாமா..இங்க பேச வேண்டாம் வா..”,என்றவன் அவளுக்கு முன்னதாய் சாப்பாட்டு மேஜைக்கு எதிர்த் திசை நோக்கிச் சென்றான்.
கிட்டத்தட்ட அரண்மனையின் கோடியில் இருந்த தனக்கான அலுவலக அறைக்குள் சென்றவன் அவள் கதவை மூடும் வரை அமைதி காத்து நின்று அடுத்த நொடி,
“லுக் ஒரு விஷயத்தை கையிலெடுத்தா அதை ஒழுங்கா பாஃலோ பண்ணணும்.”, என்னவென புரியாமல் முழித்தவளைப் பார்த்து கடுப்பானவனாய்,
“ப்ரெண்ட்னு சொல்லிட்டு மிஸ்டர்னு சொன்னா சந்தேகம் வராதா.”
“ஓ ஐ அம் சாரி..பட் நான் உங்ககிட்ட பேசும் போது வேற யாரும் தான் இல்லையே!”
“லிசன் ஷியாமா..இந்த வீட்டுல சுவத்துக்கு கூட காது இருக்கும்.நீ எங்க நின்னு என்ன பேசினாலும் அது யார் காதுக்கு வேணா போகும்.
முக்கியமா வேலை செய்யுறவங்க இருக்கும் போது பீ கேர்புல்.
அவங்க வேலைகாரங்க மட்டுமில்லாம இந்த குடும்பத்துல யாராவது ஒருத்தருக்கு விசுவாசியாவும் இருப்பாங்க.
அதுமட்டுமில்லாம இங்க நடைக்குறதை பத்தி வெளியிலே போய் தேவையில்லாம பேச வேண்டிய அவசியத்தை அவங்களுக்கு கொடுக்காம இருக்குறது நமக்கு நல்லது. அண்டர்ஸ்டாண்ட்?”
“ஹா..சொந்த வீட்லேயே இத்தனை கவனம்.. ம்ம் சரி தட்ஸ் நாட் மை இஷு.. இனி கேர்புல்லா இருந்துக்குறேன்.”
“தேங்க்ஸ் அண்ட் இது என்னோட பர்செல் நம்பர்.எப்போ எது பேசனும்னாலும் இதுக்கு கால் பண்ணுங்க.
இப்படி ஒரு நம்பர் இருக்குறது யாருக்கும் தெரியாது சோ ரொம்வே சேஃப்.
அண்ட் கேஸ் விஷயமா என்ன பேச வேண்டியதா இருந்தாலும் இந்த ரூம்ல வச்சு மட்டும் பேசலாம். இட்ஸ் ஃபுல்லி சவுண்ட்ப்ரூப்..”
“யா பைன். அண்ட் திஸ் இஸ் மை நம்பர். இப்போ மிஸ்டர் வர்மா சார் ரூமை பார்க்க போலாமா ஆர்?”
“போலாம் வித் அவுட் மை ஆர்டர் இங்க யாரும் வர மாட்டாங்க.கம்..”,
என்றவன் தன் சட்டையிலிருந்த சாவியைக் கொண்டு பக்கத்து அறையை திறந்து அவளுக்கு வழிவிட்டு நிற்க அவள் உள்ளே நுழைந்ததும் கதவை சாத்திவிட்டு அவள் பின் நடந்தான்.
விருந்தாளியான தன் அறையே அத்தனை பிரம்மாண்டமாய் இருக்கும் போது ஜமீன்தாரின் அறையை பற்றிக் கேட்கவா வேண்டும்.
ஜெய்ப்பூருக்கே உரிய மார்பிள் கற்களின் வேலைப்பாடுகளால் அறை மிளிர்ந்தது.
இருந்தும் சிறிது நாட்கள் சுத்தம் செய்யாததற்கான அறிகுறியாய் அங்கங்கு சற்று தூசி படிந்திருந்தது.
“இன்ஸிண்ட் நடந்த அப்பறம் யாரும் இங்க வர்றதில்லையா?”
“நோ இன்வெஸ்டிகேஷன் நடந்துட்டு இருந்ததால யாரையும் வர வேண்டாம்னு சொல்லி வச்சுருக்கோம்.”
“ஓ..பட் எனி சான்ஸ் வித் அவுட் யுவர் நாலெட்ஜ்?”
“நோ வே இந்த ரூம்க்கு டூப்லிகேட் கீ கிடையாது. ஆல்சோ சாவி இல்லாம இதை திறக்க வேற ஆப்ஷனே இல்ல.கதவை உடைக்குறதை தவிர.”
“கூல்..”,என்றவள் ஒவ்வொரு இடமாய் ஆராய ஆரம்பித்தாள்.
மேஜை மீதிருந்த புத்தகங்கள் அலமாரியினுள் இருந்த அவரது உடைமைகள் என ஒவ்வொன்றாய் பார்த்து வந்தவள் அனைத்தையும் தனக்குள் பதிய வைத்துக் கொண்டாள்.
இருந்தும் பெரிதாய் விசாரனைக்கு உதவும்படி இருந்ததாய் தோன்றாமல் போக கட்டிலை ஒரு முறை ஆராய்ந்தவள் அவனருகில் வந்து நின்றாள்.
ஒருவித நமட்டுச் சிரிப்போடு அவளை ஏறிட்டவன்,
“போலீஸ் இன்வெஸ்டிகேஷன்னு எத்தனையோ முயற்சிப் பண்ணி பார்த்து கிடைக்காத விஷயம் உன்னோட இந்த ரோபோடிக் ஸ்கேன்ல தெரிஞ்சுடும்னு நினைக்குறியா?”
கைகளை பின்னால் கட்டியவாறே அவனுக்கு சற்றும் சளைத்தவளில்லை எனும்படியாய்,
”சொல்ல முடியாது மகிழன்..சில நேரங்கள்ல சின்ன சின்ன விஷயங்களை வச்சு தான் பெரிய பெரிய தவறுகளை கண்டுபிடிக்க வேண்டியதா இருக்கும்.
அது என்னோட பலமான நம்பிக்கை கூட.எந்த ஒரு குற்றவாளியும் தன்னை அறியாம தனக்கெதிரான ஒரு ஆதாரத்தை நிச்சயமா விட்டுட்டு போய்ருப்பான்.
அது எங்க கைக்கு கிடைக்குற வரை தான் அவனோட ஆட்டம் எல்லாம்..
என்னோட ஸ்ட்ராங் ப்லீஃப் எப்போவுமே தப்பா போனதில்ல. அதை வச்சு இன்னொரு விஷயம் சொல்லட்டுமா?”
ஆர்வமாய் ஒரு நொடிப் பார்வை அவனிடத்தில், ”உங்க தாத்தாவோட மரணம் இயற்கையானதா இல்லாத பட்சத்தில் அதற்கான காரணம் ஐ மீன் அந்த கொலைலைகாரன் உங்கள்ல ஒருத்தன் தான்.”
“வாட் நான்சென்ஸ்..”
“கமான்..இது இங்க நடக்குற நிகழ்வுகளெல்லாம் வச்சு என்னோட கணிப்பு.
மே பீ அது அப்படி இல்லாம கூட போகலாம்.பட்..”
“!!”
“அதற்கான வாய்ப்புகள் ரொம்வே கம்மி தான்.எனிவே ஒரு வேலையை முடிக்காம தற்பெருமை பேசுறது எனக்கு சுத்தமா பிடிக்காது.
என்னை நீங்க குறைச்சு மதிப்பிட்டதுனால இந்த விளக்கம் கொடுக்க தோணிச்சு கொடுத்தேன்.
சோ டோண்ட் இன்டர்பியர் இன் மை ஜாப்.அதுதான் நம்ம ரெண்டு பேருக்குமே நல்லது.”, என்றவள் வெளியே போகலாம் என்பதாய் கையை நீட்ட சற்றே கடுப்பானவனாய் வெளியே வந்தான்.
கதவைப் பூட்டிவிட்டு சற்று தள்ளி நின்றவளின் அருகில் வந்தவன்,
”மதியானத்துக்கு மேல எல்லாரும் வந்துருவாங்க. கல்யாணி அக்கா எல்லாரையும் உனக்கு அறிமுகப்படுத்திருவாங்க.
யார்கிட்டேயும் தேவையில்லாத எந்த பேச்சும் வச்சுக்காத.ஓகே?”
“யா பைன்..அண்ட் இந்த கீயை நான் வச்சுக்கலாமா?”
“எப்போ உனக்கு இந்த ரூம் பார்க்கணும்னு தோணிணாலும் எனக்கு கால் பண்ணு நான் வந்து அழைச்சுட்டு போறேன்.”
கொடுக்க முடியாது என்பதை நாசூக்காக அவன் கூறிவிட அவளும் பெரிதாய் அலட்டிக் கொள்ளாமல் தோள் குலுக்கி அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.
அதன் பிறகு அவனன் கிளம்பி காரில் ஏறி சென்றுவிட அங்கிருந்தே அவன் செல்வதைப் பார்த்திருந்தாள்.
பின் மீண்டுமாய் சமீன்தாரின் அறையின் அருகில் வந்தவளாய் அந்த கதவை கைகளால் வருடியவாறே தன் மொபைலில் படம் பிடித்துக் கொண்டாள்.
அப்போது தன்னருகில் அரவம் உணர்ந்து திரும்பிப் பார்க்க சற்றே கடுமையான முகத்துடன் முறுக்கேறிய உடம்போடு ஒருவன் அவளை முறைத்து நின்றிருந்தான்.
“என்ன?”
“இங்கெல்லாம் நிக்க கூடாது.என்ன பண்ற? போ…”
மரியாதையின்றி விழித்ததே சற்று கடுப்பேத்தியிருக்க அவனுக்கு பதில் கூற வாய் திறந்த நேரம் கல்யாணி அவசரமாய் ஓடி வந்து நின்றார்.
“ம்மா..அவன் என் தம்பி தான்..தப்பா எடுத்துக்காதீங்க.
பெரியய்யானா அவனுக்கு உசுரு. அவரும் இவனை தன் பேரன் மாதிரி தான் பார்த்துக்கிட்டார்.
அவரோட இழப்பை இவனால தாங்கிக்கவே முடில. அதான் அவரு போனதுக்கப்பறம் ரொம்ப மனசளவுல பாதிக்கப்பட்டுட்டான்.
நீங்க ஐயா ரூம் பக்கம் நிக்குறதை பார்த்தவுடனே கோபத்துல ஏதோ பேசிட்டான். மன்னிச்சுக்கோங்கம்மா..”
“இட்ஸ் ஓ.கே”,என்றவளின் பார்வை அவனிடத்திலேயே நிலைத்திருக்க கல்யாணி அவனை வேகமாய் அங்கிருந்து துரத்தினார்.
“போடா போய் தோட்டத்து வேலையை பாரு..போ..”, என்றவர் அவன் அங்கிருந்து நகர்ந்த பின்னே இவளைப் பார்த்து சிரித்தவாறே அங்கிருந்து நகர முற்ப்பட்டார்.
“அக்கா ஒரு நிமிஷம்”
“சொல்லுங்கம்மா..”
“இவர் இங்க என்ன பண்றாரு?”
“பெரியய்யா இருந்த வரை அவருக்கு எல்லாமே இவன் தான்.
இவனில்லாம அவருக்கு ஒரு வேலையும் ஓடாது.ஆனா நம்ம சின்னையாக்கு இவனை கண்டாலே பிடிக்காது.
அதனாலேயே வீட்டுக்குள்ள அவ்வளவா வரமாட்டான்.
தோட்ட வேலை எல்லாம் பாத்துக்குறான்.சின்னய்யா கிளம்பி போனப்பறம் வந்து சாப்பிட்டுட்டு போய்டுவான்.”
“ஓ!!உங்க. வீடு?”
“எனக்கு இங்க இருந்து பக்கத்துல தான் மா..அஞ்சு நிமிஷம் ஆகும்.
இவன் இங்க தான் பின்னாடி இருக்குற கெஸ்ட் கவுஸ்ல இருக்கான்.”
“இங்கயா??”
“ஆமா மா.. இவனும் இன்னொரு தோட்டகாரரும் மட்டும் இருக்காங்க.. ஏன் என்னாச்சு?”
“இல்ல ஒண்ணுமில்ல.இன்னும் வீட்டை முழுசா பார்க்கல இல்லையா அதனால கேட்டேன்.
நான் கொஞ்சம் சுத்தி பார்த்துட்டு வரேன்.”, என்றவள் அத்தோடு பேச்சை முடித்துக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்.
வெளியே வந்தவள் தோட்டத்தைப் பார்த்துவிட்டு வரலாம் என்று எண்ணி அங்கிருந்த புல்தரையில் கால் பதித்தாள்.
பரந்து விரிந்த மைதானம் போன்று அத்தனை பெரிய புல்வெளி அதில் அங்கங்கு போடப்பட்டிருந்த மார்ப்பிள் பென்ஞ்சுகள் ஓர் ஓரமாய் வட்ட வடிவ மேஜையும் அதைச் சுற்றி நான்கு நாற்காலிகளும் போடப்பட்டிருந்தன.
அதைத் தொடர்ந்த இடது புறத்தில் ஆர்ச் வடிவ கம்பிகள் முழுவதுமாய் செடியும் பூக்களும் படர விடப்பட்டிருக்க அதைக் கடந்து உள்ளே சென்றால் அப்படி ஒரு இயற்கை மணம் நாசியைத் துளைத்தது.
அந்த இடம் முழுவதும் வெயிலில் செடிகள் பாதிக்கப்படாமல் இருக்க பச்சை நிற ஷெட் போடப்பட்டிருந்தது.
ஒரு புறமென்கும் வண்ண வண்ண மலர்கள் கண்ணுக்கும் நாசிக்கும் குளிர்ச்சி அளிக்க மறுபுறம் முழுவதும் போன்சாய் வகை மரங்கள் எலுமிச்சை ஆப்பிள் ஆரஞ்சு என கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருந்தது.
அனைத்து செடிகளும் மரங்களும் சீராய் பராமரிக்கப் பட்டிருந்தன.
பார்வையை சுழற்றியபடியே வந்தவளின் பார்வையில் மீண்டும் அவன் தென்பட்டான்.
செடிகளுக்கு நீர் பாய்ச்சியடியே நின்றிருந்தவனின் விழி மட்டும் மொத்தமாய் இவளிடத்திலேயே நின்றிருந்தது.
அதை கண்டும் காணாதவளாய் அந்த இடத்தை கடந்து வீட்டின் பின்புறம் வந்திருந்தாள்.
வீட்டைச் சுற்றிய அத்தனை இடங்களும் பச்சைப் பசேலென செடிகளால் நிரம்பியிருந்தது.
பின்புறத்தில் சற்று தூரத்தில் சிறு வீடு போன்று இருந்த அந்த கெஸ்ட் ஹவுஸின் அருகில் சென்றாள்.
அதன் அருகிலேயே கார் கேரேஜ் இருந்தது ஐந்து ஆறு கார்கள் நிறுத்துமளவிற்கான இடம்.
இப்போது அனைத்தும் காலியாய் இருக்க சுற்றும் முற்றும் பார்த்தவளை நோக்கி ஐம்பது வயது மதிக்க தக்க ஒருவர் தளர்ந்த நடைபோட்டு வந்தார்.
“சொல்லுங்கம்மா எதாவது வேணும்ங்களா?”
“இல்ல அதெல்லாம் ஒண்ணுமில்ல.நான்?”
“கல்யாணி சொல்லிச்சு மா..ஐயாவோட சிநேகிதி வந்துருக்காங்கனு.”
“ஓ..”
“நீங்க இங்க தான் தங்கிருக்கீங்களா?”
“ஆமா மாமா..நானும் கல்யாணி தம்பியும்..ரெண்டு பேருமே ஒண்டிகட்ட அதனால பெரியய்யா இங்கேயே இடம் கொடுத்துட்டார்.”
“ஓ..வேற யாரும் இங்க வரமாட்டாங்களா?”
“இல்ல மா..சொல்லப் போனா நீங்க தான் இங்க வந்துருக்கீங்க.. வீட்ல யாரும் போர்டிகோ தாண்டி வர மாட்டாங்க..”
“யாருமே வராததுக்கா இவ்ளோ பெரிய தோட்டம்!?”
“சின்ன முதலாளிங்களோட புள்ளைங்க வேணா எப்போவாவது வருவாங்க விளையாடுறதுக்கு.
மத்தபடி யாரும் வரமாட்டாங்க மா. ஏன் மா இதெல்லாம் கேட்குறீங்க?”
“ம் ஒண்ணுமில்ல சும்மா தான்.சரிங்க நான் வரேன்..”,என்றவள் மறுபுறமாய் சென்று வீட்டின் போர்டிகோவை அடைந்திருந்தாள்.
உள்ளே நுழைய எத்தனித்தவளுக்கு ஏதோ ஓர் பார்வை தன்னை தொடர்ந்து கொண்டே இருப்பதைப் போன்ற உணர்வு.
ஒரு நொடி நின்று சுற்றும் முற்றும் பார்த்தவளுக்கு யாரும் அங்கிருப்பதாய் தோன்றவில்லை.
மீண்டுமாய் சில அடிகள் எடுத்து வைத்தவள் சட்டென நிமிர்ந்து மேலே பார்க்க யாரோ அங்கிருந்து நகர்ந்து ஒளிந்தது நன்றாகவே தெரிந்தது.
ஒரு நொடி தான் எனினும் அந்த பார்வை மனதை விட்டு நீங்காமல் அப்படியே பதிந்து விட்டிருந்தது ஷியாமாவிற்கு.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
2 comments
Nice
Nice👍😊