522
ஷியாமா கூறிய ஒவ்வொன்றையும் யோசிக்க யோசிக்க தலை வலி எடுத்தது மகிழனிற்கு.
“இன்னும் ஏன் தாமதிக்கணும் வா இப்போவே போய் அவங்களை விசாரிக்கலாம்..”
“இதுக்காக தான் உங்ககிட்ட எல்லாத்தையும் சொல்றதுக்கு நான் யோசிச்சேன்…
கொஞ்சம் பொறுமையா இருங்க அல்மோஸ்ட் கண்டுபிடிச்சுட்டேன்.. ஆனாலும்..”
“கண்டுபிடிச்சுட்டியா??”
“ம்ம் எனக்கு என்னவோ உங்க பெரியம்மாதான் குற்றவாளினு தோணுது..”
“!!!”
“இது இப்போ இல்ல..நான் வந்த கொஞ்ச நாள்லயே தோணிண விஷயம் தான்..
ஆனா அதை உறுதிப்படுத்த என்கிட்ட எந்த ஆதாரமும் இல்லை.. இன்னும் கொஞ்சம் நேரம் கொடுங்க..”
“ஆனா அவங்க தனியா??”
“ம்ம் தனியா இல்ல யாரோ துணையோட தான் பண்றாங்க..
அதுவும் உங்க வீட்டுக்குள்ள இருக்குறவங்க தான்..எனக்கு மொத்தமா சந்தேகங்களுக்கு விடைதெரியுற வரை நேரம் கொடுங்க மகிழன் ப்ளீஸ்.”
“சரி ஷியாமா..ஆனா அடுத்து யாருக்கும் எந்த பிரச்சனையும் நடக்குறதுக்கு முன்னாடி…”
“புரியுது கண்டிப்பா அதுகுள்ள எல்லாத்தையும் முடிவுக்கு கொண்டு வந்துரலாம்..”,என்றவள் மேலும் பேசிவிட்டு வீட்டுக்கு கிளம்புவதாய் கூறிக் கிளம்பினாள்.
அவள் உள்ளே நுழைந்த நேரம் பக்கவாட்டுப் பகுதியில் ஏதோ அரவம் கேட்க,”யாரது??”,என்று சத்தமாய் குரல் கொடுத்தாள்.
“மேடம் நான் தான்..”,என்றவாறு மெதுவாய் எட்டிப் பார்த்தான் கல்யாணியின் தம்பி..
“நீங்க இந்த நேரத்துல இங்க என்ன பண்றீங்க?”
“மேடம் ப்ளீஸ் இந்தப்பக்கம் தள்ளி வந்து பேசுங்களேன்..இந்த இடம் மட்டும் தான் வீட்ல எங்கிருந்து பார்த்தாலும் வெளியே தெரியாது.. என்னை நம்புங்க.. ஒரு இரண்டு நிமிஷம்..”
அக்கம்பக்கம் பார்த்தவாறு அவனருகில் வந்தவள் என்னவென்பதாய் அவனைப் பார்த்து நிற்க குரலைத் தாழ்த்தியவனாய்,
“நீங்க ஐயாவோட ப்ரெண்ட் இல்லனு எனக்குத் தெரியும்..”
“வாட்??”
“ஆமா..நீங்க இல்ல சின்னையாக்கு ப்ரெண்ட்னு யாருமே கிடையாது..
அது மட்டுமில்லாம நீங்க அவரு காலேஜ் கூட கிடையாது..”
“இதெல்லாம்??”
“நான் சின்னையாக்கு காவலா அவருக்குத் தெரியாம அவங்களையே தான் பாதுகாத்துட்டு இருந்தேன்.”
“ஓ.. அப்பறம் ஏன் என்னைப் பத்தி யார்கிட்டேயும் சொல்லல?”
“உங்களைக் கவனிச்சதுல நீங்க ஏதோ நோக்கத்தோட தான் வந்துருக்கீங்கனு தெரிஞ்சுது அதே நேரம் யாருக்கும் ஆபத்து விளைவிக்குற நோக்கம் இருந்த மாதிரியும் தெரில.
அதுக்கும் மேல சின்னையாவே உங்களோட நம்பி அவ்ளோ பேசுறார்னா கண்டிப்பா அவர் சொல்லி தான் நீங்க வந்துருக்கீங்கனு புரிஞ்சுது..”
“ம்ம்.. சரி இதுக்காக தான் கூப்ட்டீங்களா?”
“அது வந்து..என்றவன் சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்துவிட்டு பின் அவளிடம்,
“அன்னைக்கு சின்னையாவோட அம்மா என்னை அடிச்சது தெரியாம நடந்த விஷயம் இல்ல..”
“அப்படினா?என்ன சொல்ல வர்றீங்க?”
“அவங்க..”
“என்ன மா இங்க என்ன பண்ற!”,என்றவாறு அந்த பக்கமாய் வந்த முத்து அவர்களை நோக்கி வந்தார்.
“ம்ம் சும்மா இவரை இங்க பார்த்தேன்.. அதான் அடி பட்டது சரியா போச்சா உடம்பு எப்படியிருக்குனு கேட்டுட்டு இருந்தேன்..”
“ஓ நல்லது..”
“நீங்க ஹாஸ்பிட்டலுக்கு வந்த மாதிரியே தெரியலேயே?”
“விஷயத்தை கேட்டு இரத்தக் கொதிப்பு ஆயிடுச்சு மா.. அதுமட்டுமில்லாம அந்த நிலைமைல அவங்களை பாக்குற சக்தி எனக்கில்ல மா..”
“நீங்க டென்ஷன் ஆகாதீங்க ணா.. நம்ம கையில என்ன இருக்கு…போய் ரெஸ்ட் எடுங்க போங்க..”
“வாம்மா நீயும் சோர்வா தெரியுறியே வந்து ஒரு வாய் சாப்பிடு முதல்ல..”,என்றவர் அவளுக்காக காத்திருக்க அதற்கு மேல் ஒன்றும் பேசத் தோன்றாமல் அவனையே பார்த்தவாறு அங்கிருந்து நகர்ந்தாள்.
ஒரு வார காலம் கடந்திருந்த நிலையில் சர்வேஷும் ராகேஷும் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அழைத்து வரப் பட்டிருந்தனர்.
சாந்திதேவி அவரது அறையிலேயே முடங்கிக் கிடந்தார்.
மகிழனின் பொறுப்பு இப்போது இன்னும் அதிகமாகி இருந்தது.
கார்மெண்ட்ஸையும் சேர்த்துப் பார்க்க வேண்டியநிலை என்பதால் வீட்டிற்கு வருவதே அரிதாகிப் போயிருந்தது.
ஷியாமாவும் எப்படி என்ன வழி கிடைக்கும் என பிறர் கண்களை உறுத்தாவண்ணம் பல விதத்தில் ஆதாரங்களைத் தேட முயற்சி செய்து கொண்டிருந்தாள்.
சர்வேஷிற்கு அழைப்பு வந்த எண்ணைப் பற்றி விசாரித்த போது அந்த எண்ணின் சொந்தகாரருக்கும் அவர்களுக்கும் எவ்வித தொடர்பும் இருந்திருக்கவில்லை.
அவரிடம் விசாரித்த போது பணி முடிந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த நேரம் மிகவும் அவசரமாய் ஒரு போன் செய்ய வேண்டும் என்று கூறி ஒருவர் வாங்கியதாகவும் பேசிவிட்டு கொடுத்துச் சென்றார் என்றும் கூறினார்.
அதைக் கடந்து எந்தவித தகவலையும் அவரிடம் பெற முடியாமல் போனது.
அதை தவிர்த்து வர்மாவின் மரணத்தைப் பற்றி யோசித்தால் மேலுமே குழப்பம்.
யாரேனும் அவரைக் கொன்றிருந்தால் கதவு எப்படி உள்புறமாய் தாழிடப்பட்டிருக்கும்.
மகிழன் கூறியதை வைத்துப் பார்க்கும் போது அதற்கு மற்ற சாவியோ அல்லது வேறு எந்த யுத்தியும் பயன்படுத்தியிருக்க முடியாது என்பது தெளிவாய் தெரிகிறது.
தனக்குள் ஏதேதோ இப்படி யோசித்துக் கொண்டிருந்தவளைத் தேடி ஆஷிக்கும் மோனிஷாவும் வந்திருந்தனர்.
“ஹே கைஸ்..”
“ஹா…….ய்ய்ய்ய்…..”
“என்ன இப்படி அழுது வடியுறீங்க இரண்டு பேரும்…”
“வர வர வீட்டுல இருக்கவே பிடிக்கல ஷியாம்ஸ்..”
“ம்ம் நிலைமை சரியில்ல வாட் டு டூ.. சீக்கிரமே எல்லாம் நார்மல் ஆகும் ஆஷிக்..”
“ம்ம் நம்பிக்கிட்டு இருக்க வேண்டியது தான்.. ஒண்ணும் நடக்கப் போறது இல்ல..”
“அட என்ன மோனி நீ கூட இப்படி ஆய்ட்ட..”
“ரொம்ப கஷ்டமா இருக்கு கா..பாவம் தியா தீப்தி எல்லாம்…ரொம்ப வருத்தப்பட்டா என்கிட்ட..
இந்த புக்கெல்லாம் படிக்கும் போது அப்படியே வேற உலகத்துக்குள்ள போற மாதிரி இருக்குமே.. அது மாதிரி எங்கேயாவது போய்டணும் போல இருக்கு..”
“அப்போ எதாவது புக் படிக்க வேண்டியதுதான..”
“என்கிட்ட இருக்குற எல்லாமே நான் படிச்சுட்டேன்..இதுக்கு மேல படிக்கனும்னா தாத்தாவோட புக்ஸை தான் படிக்கனும்..”, என்றவள் சலிப்பாய் கூற சட்டென ஷியாமாவுக்குள் ஒரு யோசனை தோன்றியது.
“அப்போ அதையே பண்ணிடுவோம்.. வாயேன் எதாவது நல்ல புக் இருக்கானு பார்ப்போம்.”
“அப்படியா சொல்றீங்க?”
“ம்ம் எனக்குமே எதாவது படிக்கலாம்னு தோணுது.. நீயும் வாயேன் ஆஷிக்”
“அம்மாடி தாய் குலங்களா ஆளை விடுங்க..நீங்க போய் என்னவோ பண்ணுங்க..”, என்றவாறு அவன் நகர்ந்துவிட பெண்கள் இருவருமாய் அந்த புத்தக அறையை நோக்கிச் சென்றனர்.
சில நிமிடங்களில் மோனிஷா ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொள்ள ஷியாமா ஒவ்வொரு புத்தகத்தையாய் நோட்டமிட ஆரம்பித்தாள்.
இல்லாத புத்தகங்களே இல்லை எனுமளவிற்கு அத்தனைப் பிரிவிலும் குறைந்தது ஒரு புத்தகமாவது இருந்தது.
ஒரு அலமாரியைத் தொடர்ந்து அடுத்த பகுதியை பார்த்தவளுக்குச் சற்றே ஆச்சரியம் எழுந்திருந்தது.
ஜோதிடம் ஜாதகம் பற்றிய புத்தகங்களே பாதிக்கு மேல் ஆக்கிரமித்திருந்தன.
“உங்க தாத்தாவுக்கு ஜோசியம் ஜாதகம் மேல எல்லாம் ரொம்ப நம்பிக்கையோ?
“ஆமா எங்களுக்கு குடும்ப ஜோசியர்னு ஒரு நம்பூதிரி இருந்தாராம்.அவரு என்ன சொல்றாரோ அதைக் கேட்டு தான் தாத்தா நடப்பாறாம்.
யாரும் வீட்டை விட்டு வெளில போணும்னா கூட நல்ல நேரம் சகுணம் பார்த்து தான் அனுப்புவாராம்…
எங்க பெரியப்பா இறந்த அப்பறமே இந்த நம்பிக்கையெல்லாம் தாத்தாவுக்கு விட்டுப் போச்சுனு சொல்லுவாங்க..”
“ஓ அந்த நம்பூதிரியை நீ பார்த்துருக்கியா? ஏன்னா நான் இதெல்லாம் முதல் தடவை கேள்விப்படுறேன்..”
“இல்லை நான் பார்த்தமாதிரி நியாபகம் இல்ல..பொதுவா அவருக்கும் தாத்தாக்குமான மீட்டிங் தான் அதிகம்னு சொல்லுவாங்க பாட்டி கூட தலையிட மாட்டாங்கனு தான் நினைக்குறேன்..
சரி அதை விடுங்க கா இங்க பாருங்க ஜெய்ப்பூரோட கட்டிட கலை பத்தின புக்..
நம்ம ஆம்பர் ஃபோர்ட் பத்தியெல்லாம் கூட இருக்கு பாருங்க..அந்த காலத்துலயே எவ்ளோ யோசிச்சு கட்டிருக்காங்க இல்ல ஆச்சரியமா இருக்கு..
இந்த சுரங்க பாதை… எதிரிகள்கிட்ட இருந்து தப்பிக்குற ரகசிய அறைனு.. டெக்னாலஜியே இல்லாம எவ்ளோ பண்ணிருக்காங்க பாருங்க”,என அவள் போக்கில் பேசிக் கொண்டிருக்க ஷியாமாவிற்கு சட்டென ஒரு விஷயம் தோன்றியது.
“ஏன் மோனி..இந்த வீடு முதல்ல இருந்தே இப்படி தான் இருக்கா அதாவது உங்க தாத்தா காலத்துக்கு முன்னாடி?”
“இல்லக்கா தாத்தா தான் இதை மொத்தமா மாத்திக் கட்டினார்னு கேள்வி பட்டுருக்கேன்..”
“ஓ..இந்த வீட்டோட ப்ளான் இல்ல..மாடல் எதாவது கிடைக்குமா?”
“ம்ம்.. இருக்கும் கா.. கிட்டதட்ட இராஜாக்களுக்கு அடுத்தபடியா இருக்குறதுனால அப்போவே இது அரண்மணை மாதிரி தான் இருக்கும்னு சொல்லுவாங்க..
இந்த புக்லயே கூட இருக்க வாய்ப்பு இருக்கு..இருங்க பார்க்கலாம்..”,என்றவாறு புத்தகத்தின் பக்கங்களைத் திருப்ப ஆரம்பித்திருந்தாள்.
அதற்குள் ஷியாமா முதன் முதலாய் வர்மாவின் அறைக்குச் சென்று தான் கண்ட அனைத்தையும் நினைவுப்படுத்த முயன்று கொண்டிருந்தாள்.
“கட்டில்..அந்தபக்கம் பாத்ரூம்..இன்னொரு பக்கம் சின்ன பால்கனி..
சோபா..அப்பறம் அப்பறம்.. ஆங்.. அந்த அலமாரி!!!!”, அன்று பார்த்தபோதே சிறு வித்தியாசம் தோன்றியது இப்போது நியாபகத்திற்கு வந்தது.
புத்தகங்களுக்கே இத்தனை முனைப்போடு ஒழுங்கு படுத்தியவரின் அறையின் அலமாரியில் கலைப் பொருட்கள் என்று பெரிதாய் எதுவும் இருக்கவில்லை.
இப்போது எதோ ஒன்று புரிவதைப் போல் இருந்த நேரம் மோனிஷா அவளை அழைத்து அந்த புத்தகத்தைக் காட்டினாள்.
“அக்கா இது இருக்கு பாருங்க”,என்று அவள் காட்டிய படத்தை கவனமாய் கவனித்தவள் தன் கற்பனையில் அதற்கு உருவம் கொடுக்க முயல ஒருவழியாய் அவளின் யூகம் சரி என்றானது.
அங்கிருந்து தனது அறைக்கு வந்தவள் முதல் வேலையாய் மகிழனிற்கு அழைத்தாள்.
ஓரளவு விவரத்தைக் கூறி இரவு அவன் தாத்தாவின் அறைக்குச் சென்றே ஆக வேண்டும் என்று கூற அவனும் சீக்கிரமே வீட்டிற்கு வருவதாய் கூறி அழைப்பைத் துண்டித்தான்.
பின்னிரவுகளில் வீட்டிற்கு வந்தவன் ஷியாமாவிற்கு அழைக்க முதல் அழைப்பிலேயே ஏற்று காதில் வைத்தவள்,
“வந்துட்டீங்களா?”
“தூங்கிருப்பனு நினைச்சேன்.. யா என் ஆபீஸ் ரூம்ல தான் இருக்கேன்.. கம்..”, பதில் கூட கூறாமல் அழைப்பைத் துண்டித்து விட்டு கீழே விரைந்தாள்.
“போலாமா?”
“”ஏன் இவ்ளோ டென்ஷன்.. வா போலாம்..”, என்றவன் வேறெதுவும் கூறாது முன்னே செல்ல அவனைப் பின் தொடர்ந்தாள் ஷியாமா.
உள்ளே சென்று கதவைத் தாழிட்ட பின் மகிழன் விளக்குகளை ஒளிர விடமுதல் வேலையாய் அலமாரியின் அருகில் சென்றவள் அதைத் தள்ள முயற்சிக்க அவள் செய்கையை விசித்திரமாய் பார்த்திருந்தான் மகிழன்.
“ஷியாமா இது எந்தளவு பாசிபில்னு நினைக்குற..மேபி முன்னாடி அந்த இடத்துல டனல் இருந்துருக்கலாம்..
ஆனா..இப்போ..”, எனும்போதே சற்று தள்ளி நின்று அவனை நோக்கி அந்த இடத்தைப் பார்க்குமாறு கூற.. மூன்று புத்தகங்கள் இருந்த இடத்தில் ஒன்று புத்தகம் போல் இருந்த மரப்பெட்டகம்.
இருவருக்குமே காண்பதெல்லாம் அதிசயம் போல் தோன்றினாலும் நிஜம் என்பது மனதை உரைக்க ஷியாமா அந்த பெட்டகத்தைத் திறக்க அதனுள் கதவைத் திறக்கும் வட்டமான தாழ்ப்பாள் இருந்தது.
அதைக் கைககள் நடுங்க தொட்டவன் வலப்பக்கமாய் திருப்ப சிறு சத்தத்துடன் அந்த அலமாரி உள்ளே திறப்பதற்கு ஏதுவாக திறந்துகொண்டது.
தன் மொபைலில் டார்ச்சை ஆன் செய்தவன் உள்ளே செல்ல அவனைப் பின் தொடர்ந்தாள்.
ஒருவர் மட்டுமே நடக்கும் அவளவிற்கான பாதை.சரிவாய் சற்று கீழ் நோக்கி சென்ற பாதை ஒரு இடத்தில் முடிவுக்கு வர சுற்றில் தேடியவனின் கண்களில் பட்டது அந்த நட்சத்திர வடிவ திறக்கும் கருவி.
பழைய காலத்தின் லாக்கர்களில் எல்லாம் இருப்பதைப் போன்று இருந்தது அது.
வலதுபுறம் சுற்றியவுடன் கதவு வெளிப்புறமாய் திறக்க வெளியே வந்தவர்கள் வீட்டின் பக்கவாட்டு இடத்தில் நின்றிருந்தனர்.
அதாவது சற்றே உயரமான அந்த வீட்டின் தரைத் தளத்தின் அறையிலிருந்து பூமிக்கு உள் வழியாக ஓரமாய் இருந்த மகிழனின் அலுவலக அறையை கடந்து வெளிப்புறம் வந்ததைப் போன்ற அமைப்பு..
கதவை ஆராய்ந்தவளுக்கு வெளியிலிருந்து திறப்பதற்கான எந்த அடையாளமூம் இல்லாததால் கதவை மூடிய பின் அது சுவர் போலவே தோன்றுமே அன்றி இப்படி ஒரு கதவு இருப்பது யாருக்கும் நிச்சயம் தெரியாது என்பது புரிந்தது.
“ஷியாமா!!”
“இங்க எதுவும் பேச வேண்டாம் நான் இது வழியா மறுபடியும் ரூம்க்கே போறேன் நீங்க இதை பூட்டிட்டு அப்படி வாங்க.. அங்க பேசிக்கலாம்..”
ஆமோதிப்பாய் தலையசைத்தவன் அவள் சற்று உள்ளே செல்லும் வரை பொறுத்திருந்து பின் கதவைப் பூட்ட அங்கு கதவு இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் போயிருந்தது.
அதிர்ச்சியில் இருந்து மீளாதவனாய் ஷியாமாவைத் தேடி தாத்தாவின் அறைக்குள் நுழைந்தான் மகிழன்.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
2 comments
Interesting🤔
Very nice