எண்ணம்-16(Final)

by ஸ்ரீ
7 comments 701 views
A+A-
Reset

“வாழ்க்கை அத்தனை நிம்மதியா இருந்தது..அன்பான கணவர் அழகான குழந்தைனு இருந்த சமயத்துல தான் என் அக்காவை நான் இங்க பார்த்தேன்.

நானும் அவரும் மட்டும் மாசம் ஒரு முறை  லட்சுமி நாரயணன் கோவிலுக்குப் போவோம்.

அப்படி ஒரு நாள் கோவிலில் இருந்து வெளியே வந்த நேரம் எங்க கார் பக்கத்துல அழுக்கு ட்ரெஸும் பாதியான உடம்புமா நின்னவளைப் பார்த்து பாதி செத்துட்டேன்.

காலில் விழுந்து கதறி அழுதேன்.அவ ஆத்திரம் தீர என்னை அடிச்சா..

என் புருஷன் தான் அவளை சமாதானப்படுத்தி இங்க நடக்குறதைப் பத்தி அவளுக்குப் புரிய வச்சார்.

அப்போ தான் என் அப்பா அம்மா இறந்த செய்தியும் எனக்குத் தெரிய வந்தது.

என்னைத் தேடி வந்த இவபட்ட கஷ்டத்தையெல்லாம் கேட்டு ஒரு பக்கம் என் மேலேயே எனக்கு கோபம் வந்தது.. அப்போவே செத்துப் போணும்னு நினைச்சேன்.

எங்களைச் சமாதனப்படுத்தி அவளுக்கு தங்குறதுக்கு நம்பிக்கையான ஒரு இடம் பார்த்துக் கொடுத்து ஒரு வேலைக்கும் ஏற்பாடு பண்ணிக் கொடுத்தார்.

ஆனா இது எதுவுமே அந்த வர்மாக்குத் தெரியாது.இவ என்னைத் தேடி வீட்டுக்கு வந்தப்போ என் பெயரைச் சொல்லி பாக்கணும்னு சொன்னதுக்கு அப்படி யாருமே இங்க இல்லனு சொல்லி திருப்பி அனுப்பிருக்காங்க காவல்காரங்க..

இதெல்லாம் தெரிய வந்தா இவளை ஊரை விட்டே அனுப்பிருவாரோனு பயந்து போய் சொல்லாமயே இருந்தோம்.

மாசத்துல ஒரு தடவை நான் அவளைப் போய் பாத்துக்குவேன்.

இப்படி மனசு கொஞ்சம் கொஞ்சமா இயல்பான நேரத்துல தான் இந்த கடன்காரனுங்க என் வாழ்க்கையில பெரிய இடியை இறக்கினாங்க..”, என்றவர் இருந்த ஆத்திரத்தில் தன்னருகில் இருந்த ராகேஷின் சக்கர நாற்காலியை ஓங்கி காலால் எட்டி உதைத்திருந்தார்.

இதை யாரும் எதிர்பார்க்காத காரணத்தால் வண்டி பின்நோக்கி வேகமாய் நகர மகிழனும் ஆஷிக்கும் சேர்ந்து ஓடிச் சென்று நிறுத்தியிருந்தனர்.

“ம்மா..”

“எத்தனை வருஷம் கழிச்சு இந்த வார்த்தையை கேட்குற மாதிரி இருக்கு தெரியுமா..

பெத்த புள்ளைகிட்டேயே பைத்தியமா நடிக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளிட்டானுங்க..

இவங்க ரெண்டு பேரும் பிஸினஸைப் பார்க்க ஆரம்பிச்சதுல இருந்து நிறையவே மோசடி பண்ணிருந்தாங்க..

அப்பப்போ  பணத்தை எடுக்குறது தரமில்லாத பொருளை சப்ளைப் பண்றதுனு எதாவது ஒரு பிரச்சனை பண்ணிணாங்க..

வர்மாகிட்ட சொல்ல பயந்த வியாபாரிங்க உன் அப்பாவைத் தேடி வந்தாங்க..

அவங்க சொன்னதையெல்லாம் கேட்ட உங்க அப்பா இவங்க ரெண்டு பேரையும் கூப்பிட்டு எச்சரிச்சு அனுப்பினார்.

வர்மாக்கு தெரியாம பாத்துகிட்டார்.ஒரு முறை இரண்டு முறை னா பரவால்ல ஆனா இவனுங்க திருந்துற மாதிரி தெரில.

ஒரு கட்டத்தில் பொறுக்க மாட்டாதவராய் உங்க அப்பா இவங்ககிட்ட கறாராய் பேசிட்டார்.

இதோட எல்லா தப்பையும் நிறுத்திக்கலனு சொன்னா வர்மாகிட்ட எல்லாத்தையும் சொல்லிடுவேன்.

இந்த பொறுப்பு எல்லாத்தையும் என் தம்பிங்களையே பார்த்துக்க சொல்லிடுவேன்னு சொல்லிட்டார்.

அவர்கிட்ட மன்னிப்பு கேக்குற மாதிரி கேட்டு நாடகமாடிட்டு அடுத்த ஒரு வாரத்துல அவரை கொல்லவே துணிஞ்சுட்டாங்க இந்த பாவிங்க..

குடோன்ல நெருப்பு வச்சு அதை காரணமா காட்டி இவரை அங்க வர வைக்க சதி பண்ணிணாங்க..

அந்த போன் வந்தவுடனே எதைப் பத்தியும் யோசிக்காம ட்ரைவர் வர்ற வர கூட வெயிட் பண்ணாம கிளம்பிப் போனவர் திரும்ப வந்த கோலம்..

வாழ்க்கையே இருண்டு போச்சு..எதுவுமே நிரந்தரம் இல்லைனு வாழ்க்கை இன்னொரு தடவை புரிய வச்ச நாள் அது.

ஒரே நாள்ல அத்தனையும் முடிஞ்சு போச்சு..பிள்ளையை இழந்த உன் பாட்டியும் புருஷனை இழந்த நானும் நடபிணமா தான் வாழ்க்கையை வாழ்ந்தோம்.. உன் பாட்டி பாதிக்கு மேல பூஜையறையே கதினு இருந்தாங்க…

ஆனா அந்த வர்மா உன்னை அத்தனை பாதுகாப்பா பாத்துகிட்டார்.

நான் கூட என் மாமனார் யாருக்கு எப்படி இருந்தாலும் தன்னோட பேரனை நல்லபடியா பார்த்துக்குறார்னு நினைச்சேன்..

உன் அப்பா இறந்து ஒரு வாரம் இருக்கும் எனக்கு மனசு என்னவோ போல இருந்தது.

எப்பவுமே நானும் உங்க அப்பாவும் மனசுவிட்டு பேசனும்னா மொட்டை மாடிக்குத் தான் போவோம்.

அவர் நியாபகம் அதிகமா இருந்ததுனாலயோ என்னவோ அங்க போகணும்னு தோணிச்சு..

அங்க போனப்போ உன் தாத்தா ஏதோ கத்தி பேசிட்டு இருந்தார் அதைத் தொடர்ந்து அடிக்குற சத்தமும் கேட்டுது.

ஏதோ பிரச்சனை போலனு கீழே இறங்கிடலாம்னு நினைச்சப்போ அந்த சர்வேஷ் கதறி அழுது மன்னிப்புக் கேட்ட சத்ததுல அப்படியே நின்னுட்டேன்.

அக்ஸிடெண்ட் பண்ண ட்ரைவரைப் பிடிச்சு விசாரிச்சதுல இவங்க தான் பண்ண சொன்னாங்கங்கிற விஷயம் வர்மாக்குத் தெரிய வந்துருக்கு ஆனா வீட்டுல யார்கிட்டேயும் ஒரு வார்த்தை சொல்லல..

தன் பொண்ணுங்களோட வாழ்க்கை பாதிக்கப்பட்டுரும்னு இரண்டு பேர் மேல இருந்த தப்பை மறைச்சு அந்த ட்ரைவரை மாத்தி வாக்குமூலம் கொடுக்க வச்சு கேஸ் பைலை க்ளோஸ் பண்ணிட்டார்.

அந்த அதிர்ச்சியில் இருந்தே நான் மீளாம இருக்க கீழே இருந்து யாரோ வந்த சத்தம் கேட்டு வேகமாய் போய் சுவத்துக்கு அந்தபக்கம் ஒளிஞ்சுகிட்டேன். அப்போ தான் அந்த நம்பூதிரி வந்தான்.

இவங்களை கீழே அனுப்பிட்டு அவங்க ரெண்டு பேரும் பேசின விஷயம்..

அது மட்டும் தான் என்னோட இத்தனை வருஷ வெறிக்கு காரணம்.

“வாங்க நம்பூதிரி..”

“வர்மா..விஷயம் கேள்விப்பட்டேன்.. ஏற்கனவே தெரிஞ்சது தான..தைரியமா இருங்க..”

“அவன் இறப்பு எப்போ வேணாலும் நடக்கும்னு தெரிஞ்சுருந்தாலும்…

அது  இப்போ நடக்கும் போது ஏத்துக்க முடீல..என்ன இருந்தாலும் அவன் என் இரத்தம் இல்லயா…

அது மட்டுமில்லாம என் மருமகன்களே இதுக்குக் காரணமா இருப்பாங்கனு தெரிஞ்சு என்னால தாங்கவே முடில..”

“ம்ம் அவங்க உன் மகனோட இறப்புக்காக கடவுள் விதைத்த கருவி அவ்வளவு தான்.உங்களை மாதிரியே இந்த வர்மா சாம்ராஜ்ஜியத்தைக் கட்டி காப்பாத்த போற உங்க பேரன் மகிழனைப் பெறனும்னா இது நடந்து தான் ஆகணும்னு சொன்னப்போ சரினு ஒத்துகிட்டு தான அந்த பொண்ணோட ராசி நட்சத்திரம்படி மாங்கல்ய பாக்கியம் சரியில்லனு தெரிஞ்சும் அவளை இந்த வீட்டுக்கு மருமகளா ஆக்கினீங்க.!?”

இது தெரிஞ்ச போது என் மனநிலைமை எப்படியிருந்ததுனு இப்போ வரை கணிக்க முடில பித்து பிடிச்ச மாதிரி ஆய்ட்டேன்.

அங்கிருந்து கீழே வந்தவ பூஜை ரூம்ல போய் உக்காந்துட்டேன். அத்தனை கடவுளையும் மனசுகுள்ள திட்டித் தீர்த்தேன்.

நான் யாருக்கு என்ன பாவம் பண்ணிணேன்னு இத்தனை கஷ்டம் வாழ்க்கையில..

இவரோட தொழிலைக் கட்டி காப்பாத்த என் வாழ்க்கையை பணயம் வச்சுட்டார்னு நொந்து போக தான் முடிஞ்சுது.

ஒரு கட்டத்தில் தாங்க மாட்டாம கதறி அழுதேன்.உன் பாட்டி என்னை அவங்க அறைக்குக் கூட்டிட்டு போய் அன்னைக்கு மொத்தம் என்னைப் பாத்துகிட்டாங்க..

என்னை மாதிரியே இந்த வீட்ல நடக்குற எதுவும் புரியாத இன்னொரு ஜீவன் அவங்க..

அவங்களுக்கும் இது எதுவுமே தெரியாதுங்கிறதால வர்மாகிட்ட நான் எதுவுமே இதைப்பத்தி கேட்காம அமைதியாவே இருந்தேன்.

கொஞ்சம் கொஞ்சமா உன் பாட்டிக்கு உடம்பு சரியில்லாம போய்ட்டே இருந்தது.படுத்த படுக்கையா ஆனாங்க..

நீயும்  காலேஜ் படிக்க போய்ட்ட அப்போ ஒரு நாள் உன் தாத்தாவோட அறைக்கு நான் போனேன்.

என் அக்காவை இங்க கூட்டிட்டு வரணும்னு சொன்னேன் முடியாதுனு சொன்னார்.

ஏன் உன் புள்ளையை கொலைப் பண்ணிண மாதிரி என்னையும் எதாவது பண்ணலாம்னு இருக்கியானு கேட்டேன்.

இதை அந்த வர்மா எதிர்பார்க்கல.. எல்லாம் எனக்குத் தெரியும் என் புருஷன் என்னை விட்டுப் போன ஒரே வாரத்துலயே தெரியும் ஆனாலும் இத்தனை வருஷம் ஏன் அமைதியா இருக்கேன்னு தான யோசிக்குற..

உன் மனைவி இந்த பெரிய மனுஷிக்காக தான் எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டேன்.

ஆனாலும் உன் மருமகன்கள் முகத்தில முழிக்க விருப்பம் இல்ல..ஒரு வேளை அவனுங்க என் கண்ணுல பட்டா அன்னைக்கே கொன்னுட்டு ஜெயிலுக்குப் போய்ருவேன்னு தான் அமைதியா இருக்கேன்.

இனியும் அப்படியே இருக்கணும்னா எனக்கு என் அக்கா இங்க வரணும்னு சொல்லிட்டு நான் போய்ட்டேன்..

மறுநாளே என் அக்கா இங்க வந்தா ஆனா சரண்யாவா இல்ல..அமுதாவா..

எனக்கு உண்மைத் தெரிஞ்சுடுச்சுங்கிற பயத்துல நான் வெளில வராம இருந்தாலே நல்லதுனு எங்களுக்குத் தேவையான எல்லா வசதியும் மாடி அறையிலேயே பண்ணிக் கொடுத்தார்.

எங்களுக்குத் தேவையான எந்த ஒரு விஷயமும் என் அக்கா மூலமா அவருக்குப் போகும் கொண்டு வந்து வெளியிலேயே வச்சுட்டு போய்டுவாங்க..

இந்த வீட்ல இருக்குறவங்களைப் பொறுத்த வரை நான் ஒரு பைத்தியம்.அதை எனக்கு சாதகமா மாத்திக்கணும்னு முடிவு பண்ணிணேன்.

என் அக்கா அதுக்கு முழு உதவியும் பண்றேன்னு சொன்னா..

இருந்தும் அதையும் செய்யுறதுக்கு முன்னாடி நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்க வேண்டியிருந்தது.

அதுக்கான நேரம் தான் என் மாமியாரின் இறப்பு..அவங்க இருக்குற வரை மேலும் அவங்களை கஷ்டப்படுத்த கூடாதுனு நினைச்சு தான் நான் அமைதியா இருந்தேன்.

அடுத்த இரண்டு வருஷத்துக்குள்ள நான் மொத்தமா பைத்தியம்னு எல்லாருக்கும் பதிவு பண்ணிட்டே இருந்தேன்.

கத்துறது அங்க இங்கனு ராத்திரியில் நடமாடுறதுனு எல்லாமே..

அப்படி ஒரு நாள் நான் கண்டுபிடிச்சது தான் வர்மாவோட அறையில் இருக்குற ரகசிய வழி…

இந்த வீட்டோட ஒவ்வொரு துரும்பையும் அலசி ஆராய்ஞ்சேன்..

அப்படி தான் அந்த புத்தக அறையில் இருந்த பழைய அரண்மனைப் பத்திய வரைபடம் இருந்தது.

அடுத்தடுத்து எல்லாத்தையும் திட்டம் போட்டோம்.நான் இராத்திரியில் இப்படி நடந்துட்டு இருந்ததால வாசல் கதவோட சாவி மாதிரியே ஒண்ணு செஞ்சு நாங்க வச்சுக்குற மாதிரி ஏற்பாடு பண்ணிக்கிட்டோம்.

எல்லாம் சரியா கணிச்சு வச்ச பிறகு எங்களோட முதல் பலி அந்த வர்மாவா இருக்கணும்னு முடிவு பண்ணோம்.

வெறும் பேர் புகழ் பணத்துக்காக மாந்திரீகம் ஜோசியம்னு மூட நம்பிக்கையை வளர்த்து பெத்த புள்ளையையே பலி கொடுக்கத் துணிஞ்ச அந்த அரக்கனைத் தான் முதல்ல கொல்லணும்னு நினைச்சேன்.

அதன்படி அன்னைக்கு ராத்திரி நான் எப்பவும் போல வீட்டை சுத்தி வர மாதிரி வந்து யாரும் இருக்காங்களானு உறுதிப் பண்ணிக்கலாம்னு பார்த்தப்போ இந்த கல்யாணியோட தம்பி வாசல்ல தூங்கிட்டு இருந்தான்.

அக்கா அவனைப் பார்த்துக்குறதா சொல்லி வெளியே போக நான் அந்த வர்மாவோட கதவைத் தட்டினேன்.

நாங்க நினைச்சா மாதிரியே சரியா அந்த நேரத்துல கண்முழிச்ச இவனை அக்கா தான் கைல வச்சுருந்த மயக்க மருந்தை அடிச்சு மயங்க வச்சுருந்தா.

இங்க கதவைத் திறந்த வர்மாவோ என்னை எதிர்பார்க்காம அதிர்ந்து நின்னுட்டார்.

அவரை உள்ளே தள்ளி கதவைப் பூட்டினப்போ அவன் கண்ல தெரிஞ்ச அந்த மரண பயம் அது அத்தனை நிம்மதியைக் கொடுத்தது எனக்கு..

கெஞ்சினான் கதறினான் ஆனா அவனைக் கொல்லணும்ங்கிறதை தாண்டி எனக்கு எந்த நினைப்பும் இல்ல.

என் கையில் இருந்த  தலையணையை எடுத்து அவன் முகத்துல வச்சு மூச்சு மூட்டுற அளவக்கு அழுத்தி துடிக்கத் துடிக்க கொலைப் பண்ணிணேன்.

அவனோட அசைவு நின்னுப்போன அப்போ என் அம்மா அப்பா புருஷன்னு அத்தனை பேரும் சந்தோஷப்படுவாங்கனு ஒரு நிம்மதி எனக்குள்ள..

அந்த ரகசிய வழி வழியா வெளியே போய் எதுவுமே நடக்காத மாதிரி என் அறைக்குப் போய்ட்டேன்.

அந்த இரவு எத்தனையோ வருஷத்துக்கு அப்பறம் நான் நிம்மதியா தூங்கின இரவு.

அந்த வர்மாவைக் கொல்லுறதுக்கு முன்னாடி சொன்னேன் உன்னை அத்தனை நிம்மதியா சாகடிக்க மாட்டேன்.

எந்த வர்மா குடும்ப சாம்ராஜ்யத்தை காப்பத்தணும்னு நீ இத்தனை தப்பு பண்ணிணியோ அந்த சாம்ராஜ்யத்தோட அத்தனை ஆண்களையும் அழிப்பேன்..

உன் காலத்துக்கு அப்பறம் இந்த வர்மா குடும்பம் ஒண்ணுமே இல்லாம மண்ணோட மண்ணா போறதைப் பார்த்துட்டு தான் என் உயிர் போகும்னு சொன்னேன்.

எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஒரு ஒருத்தரையா கொல்லணும்னு காத்திருந்தேன்.

அப்போ உள்ளே வந்தவள் தான் இந்த ஷியாமா.. ஏனோ முதல்ல இவளைப் பார்த்தப்போவே சந்தேகம் வந்தது.

ஏதோ ஒரு விதத்துல எனக்கு இடைஞ்சல் கொடுக்கப் போறானு தோணிச்சு..

அப்போ தான் அதுல் வர்மாவைப் படியில் இருந்து தள்ளிவிடுற வாய்ப்பு எங்களுக்குக் கிடைச்சது நான் தான் தள்ளிவிட்டேன்.

அந்த நேரம் உள்ளே வந்த முத்து அண்ணா என்னைப் பார்த்துட்டார்.

அவர் கொடுத்த சத்ததுல மத்தவங்க வர்றதுக்குள்ள நான் மாடிக்குப் போய்ட்டேன்.

எனக்குத் தெரியும் எப்படியும் அவர் என்னை காட்டிக் கொடுக்க மாட்டார்.அதே மாதிரியான பதில் தான் எல்லாருக்கும் அவர் கொடுத்தார்.

யாருக்கும் தெரியாம என்னைப் பார்க்குறதுக்கு வந்தார்.ஏன்ம்மா இப்படி பண்றீங்க இதெல்லாம் தப்பு வேண்டாம்னு கதறி அழுதார்.

நான் பதில் எதுவுமே பேசலை.அதுக்குப் பிறகு தான் இந்த ஷியாமா எல்லார்கிட்டேயும் நடந்ததைப் பத்தி விசாரிச்சது தெரிய வந்தது.

இங்க நடக்குறதுல அவள் தலையிடக் கூடாதுனு எழுதி மொட்டை கடிதமா போட்டேன்.

ஒரு வேளை அவ மகிழனோட சிநேகிதியா இருந்தா கண்டிப்பா அதைப் பார்த்து பயந்து மகிழன்கிட்ட சொல்லி அவனும் இங்க அதை வச்சு ஒரு பிரச்சனை பண்ணிருப்பான்.

ஆனா அப்படி எதுவுமே நடக்கல..அதனால தான் அவள் கண்ணு முன்னாடியே இதோ இவன் தலையைப் பதம்பார்த்தேன்.

தேவையில்லாத விஷயத்தில் தலையிட்டா இதான் உனக்கும் நடக்கும்னு அவளுக்குப் புரிய வைக்கணும்னு நினைச்சேன்..

ஆனா போலீஸ் இல்லையா அதுகுள்ள எல்லாத்தையும் கண்டு பிடிச்சுட்டா..

இந்த விஷயம் நடந்த அப்பறம் முத்து அண்ணா என்னைப் பார்த்து பேசினார்.ஏன் இப்படி எல்லாம் பண்றீங்க சொல்லுங்கனு கெஞ்சினார்.

சொன்னேன் இந்த வீட்டு பெரிய மனுஷன் என் புருஷனைக் கொன்னவங்களை இந்த வீட்டிலேயே வச்சு பாதுகாத்துட்டு இருந்தார்.

என்னையும் பைத்தியமா அலைய வச்சுருக்கார் என்னை வேற என்ன செய்ய சொல்றீங்கனு கேட்டேன்.

அவர் எதிர்த்து ஒரு வார்த்தையும் பேசல..ஒண்ணே ஒண்ணு தான் கேட்டார்.

அடுத்து என்ன பண்ண போறீங்கனு சொல்லுங்க மா நான் உங்களுக்கு உதவி பண்றேன்.

அப்படி நடத்தினதுதான் இந்த விபத்து..அந்த கடைசி நொடில என் புருஷன் எத்தனை பதறியிருப்பார் பயந்துருப்பார்..

குடும்பம் குழந்தை பத்தி எல்லாம் எவ்ளோ கனவு கண்டுருப்பார்னு எல்லாமே இவனுங்களுக்கும் தெரியணும்னு நினைச்சேன்.

ஆனா இறப்பையும் விட கொடுமையை இவங்க அனுபவிக்கணும்ங்கிறது தான் விதி.இவங்க செத்துருந்தா கூட இத்தனை நிம்மதி எனக்குக் கிடைச்சுருக்காது..

ஆனா இப்போ இந்த உலகத்துலேயே சந்தோஷமானவ நான் தான்.”,என்றவர் அப்படி ஒரு சத்தமாய் சிரித்திருந்தார்.

“ம்மா..ஏன் மா..என்னைப் பத்தி நீ யோசிக்கமயே போய்ட்ட..அப்பாவும் இழந்து உன் அன்பும் இல்லாம அநாதை மாதிரி இருந்த என்னை பத்தி யோசிச்சுருக்கலாமே மா..”

“மகிழா..இந்த ஒரு பாவத்துக்கு மட்டும் கண்டிப்பா எனக்கு மன்னிப்பு கிடைக்காது டா அது எனக்கே தெரியும்.

காரணமே இல்லாம உன்னைத் தவிக்க விட்டுடேன்.ஆனா உண்மையை சொல்லணும்னா உன் தாத்தாவோட பாதுகாப்புல நீ இருந்தப்போது உன்னையும் இந்த வர்மா குடும்ப வாரிசா தான் டா பார்க்க தோணுது..

என் அப்பா அம்மாகிட்ட இருந்து என்னைப் பிரிச்சு எங்க குடும்பத்தையே அழிச்சதது மட்டுமில்லாம உன் அப்பா என்மேலயும் நான் அவர் மேலயும் வச்சுருந்த அன்பு கள்ளம் கபடம் இல்லாதது

அதையும் என்னை முழுசா அனுபவிக்க முடியாம பண்ணி எல்லாத்துக்கும் மேல இத்தனை வருஷமா என்னை வீட்டிலேயே கைதி மாதிரி ஆக்கின இந்த நிலைமை எல்லாத்துக்கும் காரணம் அந்த வர்மாவோட கேவலமான மூடநம்பிக்கை.

நம்ம கடவுள் மேல வைக்குற நம்பிக்கையே ஒரு எல்லையை தாண்டினா அதுபக்தியா இருக்காது அப்படி இருக்கும் போது யாரோ எதோ சொல்றான்னு இந்த சொத்தையும் புகழையும் காப்பாத்த ஒரு உயிரையே அழிக்குறதுனா என்ன மாதிரியான பிறவி அதெல்லாம்.

ஒரு வேளை என்னை கல்யாணம் பண்ணாம இருந்திருந்தா கூட  உங்க அப்பா உயிரோட இல்லாம போய்ருக்கலாம் ஆனால் அது நடக்கல இப்போ இந்த இடத்துல நான் தான் இருக்கேன்.

ஒண்ணே ஒண்ணு மட்டும் உன்னோட அம்மாவா நான் சொல்றேன் மகிழா எக்காரணம் கொண்டும் பணத்தாசை பிடிச்ச மிருகமா மட்டும் வாழ்க்கையில மாறிடாத..பணத்தைப் பார்த்து எப்பவும் மயங்காத..

மண் பொன் பெண் இந்த மூணுமே மதிக்க வேண்டிய விஷயங்களா இருக்குற அதே நேரம் அனுமதியில்லாத இடத்தில் ஆசை வச்சா நம்மையே அழிச்சுரும் ஒரு விஷயமும் தான்.

அதுக்கு மிகப் பெரிய உதாரணம் உன் தாத்தாவும் இந்த இரண்டு ஜடங்களும் தான்.

உன்னால முடிஞ்சா நாலு பேருக்கு நல்லது பண்ணு இல்லையா குறைந்தபட்சம் யாருக்கும் எந்த கெட்டதையும் பண்ணாம இருந்தா அதுவே போதும்.

சக உயிரை அழிச்சு தான் வாழ்க்கையில் முன்னுக்கு வரணும்னு இருந்தாஅப்படி ஒரு முன்னேற்றத்தை எப்பவுமே ஏத்துக்காத.

எப்படி வேணும்னாலும் வாழலாம் ,இப்படி தான் வாழணும்னும் வாழலாம். ஆனா இரண்டுக்கும் ரொம்பவே வித்தியாசம் இருக்கு பா..

அதே மாதிரி யாரையும் கண்மூடித்தனமா  நம்பாத..

உனக்கான முதல் துணை நீ மட்டும் தான்.உன் மனசு சொல்றதை விட சரியான நல்லது கெட்டதை யாரும் உனக்கு சொல்ல முடியாது.

எப்பவும் உனக்கான மனுஷங்களைத் தேர்ந்தெடுக்கும் போது ரொம்பவே கவனமா இரு.

எந்த குழந்தையும் பிறக்கும் போது நல்ல உயிர் தான்.ஆனா அது நல்லவனா வளர்றதும் கெட்டவனா மாறுறதும் அப்பா அம்மாவைத் தாண்டி சுற்றத்து மக்களாலேயும் தான் நிர்ணயிக்கப்படுது.

ஒரு அம்மாவா உனக்கு சொல்ல வேண்டிய விஷயம் இது தான் டா.

எப்போவாவது இந்த அம்மாவை மன்னிக்கனும்னு தோணினா மன்னிச்சுடு மகிழா..

என் இழப்புக்கான ஈடுகளைப் பெறணும்னு உன் வாழ்க்கையை மொத்தமா பணயம் வச்சுட்டேன்.”

ஒன்றுமே கூறாமல் மகிழன் தலையில் கை வைத்து அமர்ந்துவிட முத்து தான் கண்ணீர் விட்டு கதறினார்.

மற்ற யாருக்கும் எதுவும் பேச வேண்டும் என்று கூடத் தோன்றாமல் அப்படியே அமர்ந்திருந்தனர்.

அங்கு நிலவிய மௌனத்தை ஷியாமாவே கலைத்தாள்,”சோ எல்லா கேள்விகளுக்குமான விடை கிடைச்சுருச்சுனு நம்புறேன்.

மகிழன் நீங்க ஓகேனு சொன்னா அடுத்த ப்ரொசீஜரை ஸ்டார்ட் பண்ணலாம்.

என் ஹெட்கிட்ட இன்ஃபார்ம் பண்ணிட்டேன்னா போலீஸ் வர சொல்றதுக்கு வசதியா இருக்கும்.”

“அதுக்கு பதில் சொல்ல வேண்டியது அவன் இல்ல நான்..

என் வாழ்க்கையில் என்ன நடக்கணும்னு முடிவு எடுக்குற உரிமை எனக்கு மட்டுமே சொந்தமானது.அது பைத்தியமா இருக்குறதுக்கும் பொருந்தும் பிணமா இருக்குறதுக்கும் பொருந்தும்”,என்றவர் தன் கையிலிருந்த சிறு கத்தியைக் கொண்டு தன் கையில் ஆழமாய் அறுத்திருந்தார்.

நொடிப் பொழுதில் நடந்துவிட்ட விஷயத்தை யாரும் எதிர்பார்க்காமல் சிலையென நிற்க மகிழன் ஓடிச் சென்று அவரை மடியில் ஏந்திக் கொள்ள ஷியாமா முதலுதவி செய்வதற்காக ஓடினாள்.

அப்போதும் அந்த வலியிலும் கம்பீரமாய் அவளை அழைத்தார் சந்தியா.

“ஏய் ஷியாமா அங்கேயே நில்லு..என்னை காப்பாத்தனும்னு நினைச்ச கொஞ்சமும் யோசிக்காம என் மகன்னு கூட பார்க்காம இவனை கொன்னுடுவேன்.”

அவரின் திடம் அறிந்தவளோ அப்படியே நின்றிருந்தாள்.இங்கு மகிழனுக்கோ கண்கள் கலங்கியிருந்தன.

“ம்மா..ஹாஸ்பிட்டல் போலாம் மா..அப்பறம் எதுவா இருந்தாலும் பேசிப்போம்.”

“மகிழா என்னை காப்பாத்தி கைதியா மாத்தி உன் பெயரைக் கெடுத்துக்க போறியா?

எந்த வர்மா குடும்பத்தை அழிக்க நினைச்சேனோ இப்போ என் பிள்ளைக்கு நான் பண்ற கடைசி உதவியா அந்த வர்மா குடும்பத்தோட பெயரைக் காப்பத்தணும்னு தான் இந்த முடிவு எடுத்துருக்கேன்.

கொலைகாரியோட மகனா நீ இந்த உலகத்தை எதிர்கொள்ள வேணாம் டா..

பைத்தியமா இருந்து பைத்தியமாவே செத்துபோனவங்கிற பேரே எனக்கு இருந்துட்டு போகட்டும்.

உன் தம்பி தங்கைனு எல்லாரையும் நல்லபடியா பார்த்துக்கோ அதைவிட முக்கியமா உனக்குனு ஒரு வாழ்க்கையை அமைச்சுக்கோ மகிழா..

நூறு வருஷம் உன் குடும்பத்தோட நல்லபடியா நீ வாழணும். எனக்காக நீ எதாவது பண்ணணும்னு நினைச்சனா என் அக்கா உன் பெரியம்மாவை நல்லபடியா பார்த்துக்கோ..”

“சந்தியா ஏன் டீ இப்படி பண்ற..இதுக்காகவா இத்தனை கஷ்டம் பட்டோம்..”

“போதும் கா..என்னால நீ பட்டதெல்லாம் போதும்..

இனியாவது நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழு.உன் புள்ள இந்த மகிழன் உன்னை பார்த்துப்பான்.”

“கஷ்டமோ நஷ்டமோ நாம சேர்ந்தே தான் அனுபவிச்சோம்.. சாகும் போதும் அப்படியே போயிருவோம் சந்தியா..”

“இப்போ தானே கா சொன்னேன் நம்ம சுயநலத்துக்காக ஒரு உயிரை அழிக்குறது பெரும் பாவம்..

அப்பறம் எனக்கும் அந்த வர்மாக்கும் என்ன வித்தியாசம் சொல்லு..மகிழா..”

“ம்மா நான் பெரியம்மாவை நல்லபடியா பார்த்துப்பேன்.நீ வாம்மா ஹாஸ்பிட்டல் போலாம்.ப்ளீஸ் மா..”

அவன் கன்னத்தை வாஞ்சையாய் தடவியவர்,”உனக்கு அப்படியே உன் அப்பா குணம் மகிழா.எந்த குறையும் இல்லாம நல்லா இருக்கணும் நீ..”,என்றவரின் உயிர் பிரிந்துவிட்டிருந்தது.

சந்தியாவும் முத்துவும் கதறியதைப் பார்க்க அவர்களின் பாசமும் விசுவாமும் மற்றவர்களை வியக்க வைத்தது.

மகிழனின் நிலைமை தான் உண்மையில் ஷியாமாவிற்கு பாவமாய் இருந்தது.

பைத்தியமாய் இருந்தாலும் தாய் என்றொருவர் இருந்தார் இப்போது அந்த உறவும் இல்லாமல் போய்விட்டது.

அவன் முன்பே கூறியது போல் இருந்தும் இல்லாத நிலைமை இப்போது நிஜமாவே இல்லாமல் போய்விட்டிருந்தது.

அவனைப் பற்றி எண்ணிவளுக்கு பெருமூச்சே பதிலாய் எழுந்தது.

இரு தினங்களில் அங்கு இயல்பு நிலை திரும்பியிருக்க மகிழனைப் பார்ப்பதற்கு ஷியாமா வந்திருந்தாள்.

“எப்படியிருக்கீங்க மகிழன்?”,என்ற அவளின் கேள்விக்கு வெறும் புன்னகையே பதிலாய் வந்தது அவனிடத்தில்.

“வாழ்க்கை ரொம்பவே வித்தியாசனமானது.. இல்ல ஷியாமா!”

“ம்ம் உண்மை தான்.இனி தான் நீங்க ரொம்பவே திடமா இருக்கணும்..”

“அது ஒண்ணும் கஷ்டமான விஷயம் இல்ல..இத்தனை வருஷம் போட்ட அதே வேஷத்தை தொடர வேண்டியது தான்.

ஆனா ஒரே வித்தியாசம் அப்போ யாரையும் புரிஞ்சுக்காம சுத்தி நடக்குறது தெரியாம இருந்தேன்.

இனி அப்படி இருக்கப் போறது இல்ல..அவ்வளவு தான் வித்தியாசம்.”

“வாழ்க்கை வித்தியாசமானது தான் அதையும் தாண்டி மனிதமனம் ரொம்பவே வித்தியாசமானது.

இருக்கப் போற கொஞ்ச காலத்துக்குள்ள கோபம் வன்மம் ஆசை அகங்காரம் பேர் புகழ்னு எதையெதையோ தேடி ஓடுறோம்.

எல்லாத்துக்கும் மேல அன்பு பாசம் நம்பிக்கை இந்த விஷயங்கள் எல்லாம் இருக்குறதை மறந்துறோம்.

பணத்தோட அருமை புரியுற அளவுக்கு வாழ்க்கையோட அருமை புரியுறதே இல்லை.சரி விடுங்க..

தைரியமா இருக்கனும்.. உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்ல இருந்தாலும் ஒரு ப்ரெண்டா என் கடமை இது.

எப்போ எந்த நிலைமைலயும் என்னால முடிஞ்ச உதவியை உங்களுக்கு கண்டிப்பா பண்ணுவேன்..”

“தேங்க்ஸ் அ லாட் ஷியாமா..உனக்குத் தெரியாது உன்னோட இந்த வார்த்தைகள் எனக்கு எவ்வளவு தேவையான ஒண்ணுனு.

தேங்க்ஸ் அகெயின்.உன்னால தான் இத்தனை சீக்கிரம் பிரச்சனைகளுக்கு எல்லாம் முடிவு வந்திருக்கு..”, சிநேகமாய் சிரித்தவள் மேலும் சில நிமிடங்கள் அவனோடு பேசிவிட்டு வெளியே வர ஆஷிக்கும் மோனியும் வாசலில் நின்றிருந்தனர்.

“ஹே ஹாய்..”

“சாரி நீங்க ஆஃபீசர்னு தெரியாம ரொம்ப அட்வாண்டேஜ் எடுத்துகிட்டோம்..”,என்ற ஆஷிக்கை ஆச்சரியமாய் பார்த்தாள் ஷியாமா.

“என்ன இதெல்லாம்!”

“இல்ல நிஜமாவே சொல்லணும்னு தோணிச்சு.. கேஷ்வலா பேசுறேன்னு உங்களை எதாவது ஹர்ட் பண்ணிருந்தா ரியலி சாரி..”

“கமான் கைஸ்..உங்களோட துறுதுறுப்பு தான் இப்போ இந்த வீட்ல எல்லாருக்கும் தேவை.

முக்கியமா உங்க அண்ணணுக்கு.அண்ட்..நீங்க நிஜமாவே என்னை ஹர்ட் பண்ணிருந்தாலும் நான் தப்பா எடுத்துருக்க மாட்டேன்.

பிகாஸ் நீங்க எனக்கும் சிப்ளிங்க்ஸ் தான்..பை பார்க்கலாம்.”,என்றவள் மோனியின் கன்னம் தட்டிச் சென்றாள்.

மூன்று மாதத்திற்குப் பிறகு,

தன் அலுவலகத்தில் கணிணியை வெறித்திருந்த ஷியாமாவின் மொபைல் அலறியது.பெயரைப் பார்த்தவள் முகத்தில் தோன்றிய புன்னகையோடு அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.

“சொல்லுங்க மகிழன் ஜி..”

“…”

“வாட்!!!!!”

“…”

“சரி சீஃப்கிட்ட சொல்லிட்டு நான் வரேன்”.என்றவள் தன் உயர் அதிகாரியை சந்திகக்கச் சென்றாள்.

“சார் ஜஸ்ட் காட் கால் ப்ரம் மிஸ்டர் மகிழன்..”

“இப்போ என்ன பிரச்சனை?”

“அவங்க பெரியம்மா அதாவது சரண்யா தேவி கோவிலுக்குப் போய்ட்டு வரும்போது யாரோ முகம் தெரியாத கும்பல் பயங்கரமா தாக்கிருக்காங்க..

அவங்களை உயிருக்கு ஆபத்தான நிலைமைல ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணிருக்காங்களாம்.”

“ஹா..பணக்காரங்களா இருக்குறது அத்தனை சுலபம் இல்ல போலேயே..எத்தனை பிரச்சனைகள்.

சரி நீங்க போய் பார்த்துட்டு வாங்க.நம்ம ஹெல்ப் தேவைப்பட்டா கண்டிப்பா பண்ணலாம்.”

“ஷுவர் சார்.”,என்றவள் அங்கிருந்து வெளியே வந்து தன் கண்ணாடியை அணிந்தவாறே காரை உயிர்பிக்க இந்த மனித மனங்களைப் பற்றி வியக்காமல் இருக்க முடியவில்லை.

“எத்தனை விதமான மனிதர்களும் அவர்களின் எண்ணங்களும்.கடவுள் பெயரைச் சொல்லி ஏமாற்றும் ஒரு கூட்டம்.

அவர்களை கடவுளாய் பாவிக்கும் மக்கள் ஒரு கூட்டம்.அரசியல் மற்றும் திரைப்படங்களை வைத்து முன்னெறும் ஒரு கூட்டம்,

அந்த அரசியல்வாதிகளையும் நடிகர்களையும் தங்கள் நாயகனாய் பார்க்கும் ரசிகர்கள் ஒரு கூட்டம்.

நாடு இந்த நிலைமையெனில் ஒரு வீட்டிற்குள்ளேயே சக உறவுகள் மீதான பொறாமை வன்மம் பேராசை கொண்ட ஒரு கூட்டம்.

உண்மையான பாசத்தை தனக்கு சாதகமாய் பயன்படுத்தி அதிலிருந்து ஆதாயம் பெரும் ஒரு கூட்டம்,

யாரிடம் அன்பைக் கொட்ட வேண்டும் யாரைத் தள்ளி நிறுத்த வேண்டும் என்பதே புரியாத அறியாமை கொண்ட ஒரு கூட்டம்.

வாழ்க்கை எப்போதுமே அழகானதாக இருப்பதில்லை தான் அதிலும் இப்படி வண்ணங்களில்லா எண்ணங்களுக்குச் சொந்தகாரர்கள் தாங்களும் வாழாமல் அடுத்தவரையும் வாழ விடாமல் அத்தனை அழகையும் கெடுத்து விடுகின்றனர்.

எந்த ஒரு மாற்றமும் ஒவ்வொரு தனி மனிதனிடமிருந்து தொடங்காத வரை மாற்றம் என்ற ஒன்று மட்டும் தான் மாறாமல் இருக்கும்.”

                                                                    ********முற்றும்********

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

7 comments

Nice story

Jemila Paul November 13, 2026 - 8:06 am

Pls sri ma இதோட second part update pannunga pls
Lovely and romantic series
Pls

😥

ஸ்ரீ November 13, 2026 - 11:11 am

Book vandha aporam than podanum ka..😑

srichitra November 13, 2026 - 10:05 am

Very nice story. முன்பே படித்ததுதான். வாழ்த்துக்கள் மா.

😍😍

ஸ்ரீ November 13, 2026 - 11:12 am

Oh thank you ka..😍😍

suganyavel November 13, 2026 - 1:12 pm

Very emotional💕

😍😍

ஸ்ரீ November 13, 2026 - 5:36 pm

Thank you ka..😍😍

Padmasubramanian November 14, 2026 - 9:56 am

♥️♥️ரெண்டு பேரையும் சேர்த்து வைத்து முடித்திருக்கலாம். செகண்ட் பார்ட் இருக்கா? அதையும் முடிஞ்சா சீக்கிரம் கொடுங்க

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode