மண்ணி அறிப, மணி நலம்; பண் அமைத்து
ஏறியபின் அறிப, மா நலம்; மாசு அறச்
சுட்டு அறிப, பொன்னின் நலம் காண்பார்; கெட்டு அறிப
கேளிரான் ஆய பயன்.

மாணிக்கம் முதலான உயர் மணிகளின் நல்லியல்பை அதைக் கழுவிய பின் அறிவார்கள். குதிரையின் நல்லியல்பை அதன் மேற் சேணமமைத்து ஏறிய பின் அறிவார்கள். பொன்னின் தரத்தை அதனை உருக்கிப் பார்த்து அறிவார்கள். உறவினர்களின் இயல்பைத் தன் செல்வத்தை எல்லாம் இழந்து வறுமையுற்ற போது அறிவார்கள்.

நள்ளிரவின்  ஆழ் அமைதியைக் கெடுக்கும் விதமாய் ப்ரஜீஷின் கைப்பேசி அலறியது.நல்ல உறக்கத்தில் இருந்தவன் சிறு எரிச்சலோடு கையில் எடுத்துப் பார்க்க ப்ரைவேட் நம்பர் எனும் பெயர் திரையில் ஒளிர்ந்ததைக் கண்டு அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தான்.

“ம்ம் சொல்லு…”

“…..”

“எங்க இருக்கான்??”

“…..”

“சரி நீ அவனைத் தூக்கிடு…நான் இன்னும் அரைமணி நேரத்துல அங்க இருப்பேன்…”,என்றவனின் கண்களில் தூக்கம் துளியும் இல்லாமல் போயிருந்தது.

கூறியபடியே அடுத்த அரைமணி நேரத்தில் அந்தக் தோப்பு வீட்டில் இருந்தான் ப்ரஜீஷ்.அவன் சென்ற அடுத்த பத்து பதினைந்து நிமிடத்தில் தடிமனும் உயரமுமாய் நான்கு பேர் கையில் ஒரு மூட்டையோடு உள்ளே நுழைந்தனர்.

“வணக்கம் சேட்டா…”

“ம்ம்..நானே இவனை மறந்துட்டேன்..நீ எங்கடா பிடிச்ச இவனை?”

“ஹி..ஹி…இவனால நமக்கு எத்தனை இம்சை…எப்படி சேட்டா மறக்க முடியும்..அங்க பார்ல இருந்து கிளம்பும் போது தான் பாத்தேன்..பாதி வழியிலேயே தூக்கிட்டோம்..”

“சரி சரி மூட்டையை அவுத்து விடு செத்து கித்துத் தொலைஞ்சுறப் போறான்…”

அவசரமாய் மூட்டையை ஒருவன் அவிழ்த்து விட கைகளும் வாயும் கட்டப்பட்ட நிலையில் ஒருவன் திமிறிக் கொண்டு வெளிப்பட்டான்.ப்ரஜீஷின் கண்ணசைவில் ஒருவன் அவனது வாய் கட்டை அவிழ்த்து விட்டான்.

“வேணாம் சார்…தேவையில்லாத வம்புல நீங்களே மாட்டிக்குறீங்க…”

தான் அமர்ந்திருந்த நாற்காலியில் முன் வந்து கைகளைத் தனக்கு முன்னாகக் கோர்த்தவனாய் அவனைப் பார்த்து,

“வம்பு பண்ண வைக்குறது நீ…நானா பொதுவா யார் வம்புக்கும் போக மாட்டேன்..”

“….”

“உன்கிட்ட சமாதானம் பேச எத்தனையோ தடவை முயற்சி பண்ணேன்…நீ பத்திரிக்கைகாரன் தான் கடவுள் இல்ல என் தலையெழுத்தை மாத்துறதுக்கு…உன்னால எனக்கான நஷ்டம் எவ்வளவு லட்சம்னு தெரியுமா?

நான் எந்த இடத்தை எத்தனை விலை கொடுத்து வாங்கினா உனக்கு என்ன சொல்லு?உன் அப்பன் வீட்டு காசை எடுத்தா செலவு பண்றேன்..இல்லல…அப்பறம் ஏன் தேவையில்லாத வேலையைப் பார்த்த…”

“அரசாங்க நிலத்தை அபகரிச்சது மட்டுமில்லாம அதைத் தட்டிக் கேட்க வந்த ஆளையும் அடிச்சு மிரட்டிருக்கீங்க…அவருக்காகத் தான் நான் கேஸ் போட்டேன்..மீடியா ஆள்னு தெரிஞ்சவுடனே அடக்கி வாசிச்சீங்கல..”

“ஹா…ஹா…குட் ஜோக்..அப்போ உன்னை ஒண்ணும் பண்ணாததுக்கு காரணம் என் பக்கத் தப்பை அதிகப்படுத்த வேண்டாமேனு தான்..இதோ இத்தனை மாசம் கழிச்சு கூட உன்னைப் பார்த்தவுடனே நியாபகம் வச்சு தூக்கிட்டு வந்துருக்காங்கனா…

அப்போ உன் மேல எவ்வளவு கொலைவெறில இருந்துருப்பாங்க சொல்லு?சரி விடு…இப்போ உன்னைத் தூக்கினதுக்கு காரணம்..அந்தக் கேஸை நீ வாபஸ் வாங்கணும்…இன்னும் பல வருஷத்துக்கு இழுத்தடிச்சு என்னால சமாளிச்சுக்க முடியும்..ஆனா ஒருத்தனுக்குப் பயந்து என் காசை செலவு பண்ணிணதா இருக்கக் கூடாது..

இப்போ உன்னை இங்க இருந்து உயிரோட விடப் போறதுக்குக் காரணம் நாளைக்கு நீ போய் கொடுத்தக் கேஸை வாபஸ் வாங்குறதுக்காகத் தான்..எதாவது புத்திசாலித்தனமா பண்றதா நினைச்சு சொதப்பின அடுத்த செகெண்ட் உன் உயிர் உன்கிட்ட இருக்காது.

இத்தனை மாசத்துல கண்டிப்பா என்னைப் பத்தி நிறையவேத் தெரிஞ்சு வச்சுருப்ப…நான் சும்மா பூச்சாண்டி காட்டுறவன் கிடையாது.சொன்னதுபடி நடக்கல கொன்னு புதைச்சுட்டுப் போய்ட்டே இருப்பேன்…புரியுதா???”

“…..”

“உனக்கான டைம் முடிஞ்சுது…திரும்பவும் இப்படி பொறுமையாப் பேசுற வாய்ப்பு நிச்சயமா கிடைக்காது..சோ….மீடியாகாரன்ல புரிஞ்சுக்குவ…”,என்றவன் அவனது கன்னம் தட்டி எழுந்துச் செல்ல அவனது பார்வையின் அர்த்தம் அறிந்தவனாய் சம்மதமாய் தலையசைத்தான் ப்ரஜீஷின் அடியாள்.

இது உலகிற்குத் தெரியாத ஏன் அவனது குடும்பத்திற்கேத் தெரியாத அவனின் மறுபக்கம்.தொழிலதிபர் என்பதைக் கடந்த சில வேலைகள் பணத்திற்காக மட்டுமே செய்யத் துணிந்தவனிய் இருந்தான்.

தொழில் சாம்ராஜ்ஜியத்தில் அவனுக்கெனத் தனி இடம் பிடித்ததற்கு இது மிகப் பெரும் காரணம் என்றே கூறலாம்.அரசியல்வாதிகள் பெரும்புள்ளிகள் என அவனுக்கு இல்லாத பெரிய தொடர்புகளே இல்லை எனுமளவிற்கான இருண்ட சாம்ராஜ்ஜியத்தை தனக்குள் புதைத்து வைத்திருந்தான் ப்ரஜீஷ்.

அதிகாலையில் வீட்டிற்குள் நுழைந்த அவனது காரை தனதறையிலிருந்துப் பார்த்துவிட்டு அவனிடம் பேசுவதற்க்காக சௌமியா கூடத்திற்கு வந்தார்.

“குட் மார்னிங் மா..ஏன் சீக்கிரம் எழுந்துட்டீங்க?”

“பேச்சை மாத்தாத ப்ரஜி..எங்க போற என்ன பண்ற ஒண்ணும் தெரியுறது இல்ல…கேட்டாலும் எதையாவது சொல்லி என் வாயை அடைச்சுடுற…என்ன தான் நினைச்சுட்டு இருக்க உன் மனசுல?”

“ம்மா…ரியலி சோ டயர்ட்…ஏன் வந்ததும் வராததுமா ஆரம்பிக்குறீங்க?”

“நான் எப்போ பேசினாலும் இதை தான் சொல்ற…பேசாம எல்லாருக்கும் மாதிரி எனக்கும் அப்பாயிண்மென்ட் கொடுத்துரு…அப்போ மட்டும் பேசிக்குறேன்…”என்றபடி கண்களில் வழிந்தக் கண்ணீரைத் துடைத்தபடி அவர் சென்றுவிட ப்ரஜீஷிற்கோ எரிச்சலாய் இருந்தது.

“ப்ச்….”

மாடியில் தனதறைக்கு வந்தவனுக்குத் தூக்கம் கண்களை இறுக்க இருந்தும் தூங்கத் தோன்றாமல் ஷவரைத் திறந்துவிட்டு தலை நனைத்து நின்றிருந்தான்.

தான் ஏன் இப்படி மாறினோம் என்று அவனுக்கேத் தெரியாத போது எப்படி மற்றவர்களுக்கு அவனால் விளக்க இயலும்.கல்லூரிக்கால காதல் நிராகரிப்பெல்லாம் ஒரு சதவிகிதக் காரணம் தான்..வெளிநாட்டு வாழ்க்கை,தனிமை,தேவையற்ற சகவாசம் என எல்லாம் சேர்ந்து அடியோடு மாற்றி விட்டிருந்தது அவனை.

படிப்பு முடித்து இங்கு வந்த பின்பும் தாத்தாவின் செல்லத்தில் யாரும் அவனை எதுவும் கேட்கவில்லை.அதுமட்டுமல்லாது தொழிலைக் கையில் எடுத்தபின் அவனது ஒரு ஒரு வெற்றியும் அவனுக்கு ஒருவித கர்வத்தைக் கொடுத்தது.மரியாதை ஆள்பலம் பணபலம் என நினைத்தால் அதை நடத்திக் காட்டிட முடியும் என்பதான தலைக்கணம்.

அதற்கும் மேல் தானாகவே அவனை நெருங்க நினைத்தப் பெண்கள்.பப் டிஸ்கோ என்று போகும் இடமெல்லாம் தானாகவே வந்து அறிமுகமாகி பழகி படுக்கையையும் பகிர்ந்துக் கொள்ளத் தயாராக இருந்த மேல்தட்டு வர்க்க நவீன யுவதிகள்.

அத்தனைக்கும் மேல் ஒரு முறை சாதாரணமாய் ஒருத்தருக்குச் செய்த உதவியின் மூலம் கிடைத்த அரசியல் செல்வாக்கு.அது மிகப் பெரும் போதையாகி விட்டிருந்தது அவனுக்கு.சிலரின் பினாமியாகவும், யாருக்கு என்ன உதவி என்றாலும் நல்லது கெட்டது பாராமல் பணம் மட்டுமே பிரதானமாய் கணகச்சிதமாய் செய்து கொடுக்க ஆரம்பித்திருந்தான்.

அதற்கேற்றாற் போல் அவனுக்கு அமைந்த கையாட்கள்..உயிரே போனாலும் அவனது பெயர் வெளிவராத வண்ணம் அத்தனை விசுவாசமாய்.இப்படியே வருடங்கள் ஓடிவிட காதல் திருமணம் குழந்தை இதையெல்லாம் பற்றி யோசிக்கும் எண்ணம் கூட இல்லாமல் போயிருந்தது அவனுக்கு. சுய சிந்தனைகளில் உழன்றவன் நேரமாவதை உணர்ந்து வேகமாய் தலையை உலுக்கிக் கொண்டு அலுவலகத்திற்குக் கிளம்பத் தயாரானான்.

நான்கு தினங்கள் ஆகியும் அபூர்வாவால் தான் கண்டதை சகித்துக் கொள்ளவோ மறக்கவோ முடியாமல் போனது.அதே நேரம் அதைப் பற்றி தீபாவிடமும் பேச மனமில்லை.ஒரு வேளை யாரோ ஒருவனாய் இருந்திருந்தால் கூட இத்தனை யோசனை இருந்திருக்காது போலும்

இரு முறை சந்தித்தவன்,தன்னைப் போலவே அந்த அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவன் இப்படி என்றால்??அதன் பின் அவள் அங்கு சந்திக்கும் ஒவ்வொருவரையுமே அந்தக் கண்ணோட்டத்தில் தான் பார்க்கத் தோன்றியது அவளுக்கு.

இருநாட்களாய் அவளிடம் ஏதோ ஒரு கவனச் சிதறல் இருப்பதை உணர்ந்தவனாய் அன்று நேராகவே அவளிடம் கேட்டிருந்தான் ராஜீவ்.

“அபூர்வா…நானும் கவனிக்குறேன்..இரண்டு நாளா ஏதோ டிஸ்ட்ராக்ஷன் இருக்குதே உங்ககிட்ட…எதுவும் பிச்சனையா?”

“ஆங்…அதெல்லாம் இல்ல ணா….”

“!!!!”

“ஆ…சாரி..இல்ல ராஜீவ்….”

லேசாய் புன்னகைத்தவன்,”பரவால்ல அப்படியே கூப்பிடுங்க..ஆனால் மத்தவங்க முன்னாடி ராஜீவ் தான்..”

சற்றே நிம்மதியுற்றவளாய்,”தேங்க்ஸ் ணா..இல்ல ப்ராப்ளம் எல்லாம் இல்ல..சிலதெல்லாம் எனக்குப் புதுசா இருக்கு..இதுதான் முதல் தடவை வீட்டை விட்டு வந்து இப்படி தங்கிருக்குறது..அதான்..வேற ஒண்ணும் இல்ல..”

“ம்ம்…போகப் போக பழகிடும் டோண்ட் வொரி..நாங்க எல்லாம் இருக்கோமே அப்பறம் என்ன…”

“ஆமா ஹாஸ்ட்டல்லயா தங்கிருக்கீங்க?”

“இல்ல ணா…பீஜி..நானும் என் காலேஜ் சீனியர் அக்கா ஒருத்தங்களும்..”

“ஓ…ஆனாலும் உங்களை…”

“பரவால்ல..நீ வானு சொல்லுங்க…”

“ஹா ஹா..உண்மையா உன்னை மரியாதையாக் கூப்பிட ரொம்பக் கஷ்டப்படுவேன்..குட்டியா ஸ்கூல் பொண்ணு மாதிரி இருக்கியா..”

“ண்ணா..”

“சரி சரி..உண்மையாவே நான் மட்டும் இல்ல டீம்ல ரெண்டு மூணு பேர் என்கிட்டேயே கேட்டுருக்காங்க..அந்தப் பொண்ணு நிஜமாவே காலேஜ் முடிச்சுருக்காங்களா…சைல்ட் லேபர்னு சொல்லி உங்களை உள்ளேத் தூககி வைச்சுற போறாங்கனு…ஹா ஹா..”

“இதெல்லாம் வேற நடக்குதா இங்க…”

“ம்ம்..ஹெச் ஆர் டிபார்மெண்ட் பொறுத்த வரைக்கும் எல்லாருமே ரொம்ப நல்ல டைப்…நல்லா பழகுவாங்க…நீ புதுசுங்கிறதுனால ஒரு வேளை அடக்கி வாசிக்குறாங்களோ என்னவோ தெரில..மத்தபடி பசங்க கூட ரொம்பவே ஜெனியூன் தான்..”

“ம்ம்…”

“இனி எந்த டென்ஷனும் வேண்டாம்..பீல் ப்ரீ டு டாக் வித் மீ…ஓகே?”

“தேங்க்யூ சோ மச் ணா..”,என்றவளுக்கு உண்மையாகவே சற்று பாரம் குறைந்ததைப் போன்று தான் இருந்தது.

“குட் இப்படி இருந்தா தான் நல்லாயிருக்கு..வா போய் ஒரு காஃபி சாப்ட்டு வந்து தெம்பா வேலையைப் பார்க்கலாம்..”,என்றவனோடு கபிடேரியாவிற்குச் சென்றவள் தனக்கான காபியை வாங்கிக் கொண்டு அவனுக்கு எதிரில் அமர்ந்தாள்.

“அப்பா அம்மா எல்லாரும் எங்க இருக்காங்க?”

“தமிழ்நாடு..திருச்சி பக்கம் ஒரு சின்ன கிராமம் ணா..அப்பா ஒரு சின்ன துணிக்கடை வச்சுருக்கார்..தங்கச்சி இப்போதான் பர்ஸ்ட் இயர் காலேஜ்…அம்மா ஹவுஸ் வைப்..”

“ஓ குட்…”

“உங்க பேமிலி?”

“நான் வைஃப்..ஒரு பொண்ணு…த்ர்ட் ஸ்டேண்டட் படிக்குறா…எங்களது லவ் மேரேஜ் வீட்ல ஒத்துக்கல…அதனால அப்பா அம்மா யாரும் பேசுறது இல்ல..அவங்க கொச்சின்ல இருக்காங்க..”

“ஓ…சூப்பர்..ஆனா இந்தக் காலத்துலேயும் லவ் மேரேஜ் ஒத்துக்காதவங்க எல்லாம் இருக்காங்களா!”

“ம்ம் சிலருக்கு மனசை விட கௌரவம் தான் பெருசு என்ன பண்றது…”

“வருத்தப்பட்டுக்காதீங்க ணா…சீக்கிரமே உங்களைப் புரிஞ்சு ஏத்துப்பாங்க..”

“ஏத்துக்குறாங்களோ இல்லையோ நீ சொல்றதைக் கேட்க நல்லாயிருக்கு..தேங்க்ஸ் டா…”

என்று இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது ப்ரஜீஷ் வந்து ராஜீவின் அருகில் அமர அத்தனை நேரம் இருந்த இலகுத்தன்மை மறைந்து சட்டென எழுந்து விட்டிருந்தாள் அபூர்வா…

“ஹே என்னாச்சு?உனக்குத் தெரியுமா இவர்…”

“இல்ல இருக்கட்டும் ணா…நீங்க பேசிட்டு இருங்க..ஒரு வேலையைப் பாதியிலேயே விட்டுட்டு வந்தேன்..முடிக்கணும்…சாரி…வரேன் ணா…பாக்கலாம்…”என்றவள் பதிலுக்குக் காத்திராமல் வேகமாய் சென்றுவிட்டாள்.

“ஏற்கனவே தெரியுமா மச்சி?உன்னைப் பார்த்து இப்படி தெரிச்சு ஓடுறா?”

அசட்டையாய் தோள் குலுக்கியவனாய்,”பாத்துருக்கேன்…ஆனா என்னைப் பத்தி தெரியுற அளவெல்லாம் ஒண்ணும் இல்ல…ஆமா என்ன அண்ணானு சொன்ன மாதிரி இருந்தது??இது எப்போ இருந்து?”

“இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் தங்கச்சியா தத்தெடுத்துருக்கேன்..”,என்றவன் சிரிக்க ப்ரஜீஷுமே லேசாய் சிரித்திருந்தான்.

“உன் முக ராசியோ என்னவோ…இங்க பாதிக்கு மேல உனக்குத் தங்கச்சிங்களா தான் சுத்துறாங்க…இந்தப் பொண்ணு தமிழ் தான?”

“ம்ம் ஆமா…நல்ல புத்திசாலி…ஒரு மாசம் தான் இருக்கும் வேலைக்குச் சேர்ந்து அதுக்குள்ளேயே நல்ல கத்துக்கிட்டா…”

“குட்…”

“சொல்லணும்னு நினைச்சேன் டா..இரண்டு நாள் லீவ் வேணும் ஏஞ்சல்க்கு ஹாஸ்பிட்டல் அப்பாய்ண்மெண்ட் இருக்கு…”

“இதெல்லாம் சொல்லணுமா…எடுத்துக்கோ…நான் பாத்துப்பேன்..பிரச்சனையில்ல….”

“டேய் தப்பி தவறி கூட இரண்டு நாளும்…”

“குடிக்க மாட்டேன் டா…நம்பலாம்…”

“என்னவோ சொல்ற…இரண்டே நாள் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ..”,என்று மீண்டும் மீண்டும் எச்சரித்தவனை பார்த்து மெல்லிதாய் புன்னகைத்தான் ப்ரஜீஷ்.