வரம்-1

by ஸ்ரீ
0 comments 783 views
A+A-
Reset

இக்கதையின் ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும் ஔவையார் எழுதிய “நல்வழி” நூலின் வெண்பாக்கள் இடம்பெறும்.

கடவுள் வாழ்த்து

பாடல்:

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.

விளக்கம்:

பாலையும், தெளிந்த தேனையும், வெல்லப் பாகுவையும், பருப்பையும் கலந்து நான் உனக்கு தருவேன், ஆண் யானை உருவம் உடைய உயிர்களுக்கு நல்லது செய்யும், மாசில்லாத விநாயகப் பெருமானே நீ எனக்கு இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ், என்ற சங்கத் தமிழ் மூன்றும் தா.

நண்பகலின் சூரியன் சுட்டெரித்தாலும் அதையும் கடந்த ஒருவித குளிர்ச்சியோடு பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது கோவை மாநகரம்.

கோவை என்றாலே அழகு,அதிலும் அதன் கிராமங்களைப் பற்றி வர்ணிக்கவும் வேண்டுமோ!

கொஞ்சும் கொங்கு தமிழும்,நாவிற்கு ருசியான கொங்கு நாட்டு விருந்தும் எப்போதுமே கோவைக்கு கூடுதலான மகுடம் தான்.

கோயம்புத்தூரின் மையத்தில் இருந்து சில கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும்  பச்சை பசேலென கண்ணுக்கெட்டும் தூரம் வரை இயற்கை எழில் கொஞ்சும் அழகிய இடம்.அந்த பகுதியின் மதிப்புமிக்க குடும்பம் ராகவனுடையது.

பள்ளி தலைமை ஆசிரியராய் இருந்து ஓய்வு பெற்றவர்.அவரின் மனைவி ராகினி அந்த குடும்பமே அவரின் பிரதானம்.கணவனும் பிள்ளைகளுமே அவரின் உலகம்.

மதிய உணவை முடித்துவிட்டு வீட்டு வாசலில் போடப்பட்டிருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார் ராகவன்.

“ராகவா நல்லாயிருக்கியா?”

“அடடே சுதந்தரமா வா வா..எனக்கென்னப்பா நல்லாயிருக்கேன் நீ எப்படியிருக்க உட்காரு..ராகினி சொம்புத் தண்ணி கொண்டு வாயேன்.”

“எனக்கென்ன இப்படியே அங்கேயும் இங்கேயுமா சுத்தி காலத்தைத் தள்ளிகிட்டு இருக்கேன்.உனக்கு தெரியாததா சாமி என் நிலைமை!”

“சரி விடு சாப்பிட்டியா இல்ல சாப்பிட்டுட்டு அப்பறம் பேசுவோம்.”

“அண்ணே வாங்க எப்படியிருக்கீங்?இந்தாங் தண்ணி குடிங்”

“நல்லது அம்மணி..”,என்று சோர்வாய் தண்ணீரைக் குடித்தவரைப் பார்ப்பதற்கு பாவமாய் இருந்தது.இரண்டு மகன்கள் அவருக்கு இருவருக்கும் திருமணமான பின் சுந்தரத்தின் ஓய்வுகாலம் கொடுமையாகிப் போனது.

பத்து வருடங்களுக்கு முன்பே மனைவியை இழந்தவருக்குப் பிள்ளைகளைத் தவிர யாருமில்லாத நிலை.ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பிள்ளை வீட்டில்.ஒருவன் கோவையிலேயே நகர்புறத்தில் வசித்திருக்க இன்னொருவனோ வேலை நிமித்தமாய் சென்னையில் இருக்கிறான்.

“நேத்து தான் மெட்ராஸிலிருந்து வந்தேன்.வயசாகுதுல்ல..ரெம்ப சோர்வா இருக்கு இப்போ எல்லாம்.”

“பெரியவன்கிட்ட பேசிப் பாக்கலாம் இல்ல.”

“எங்க..நாம பேச்செல்லாம் எடுபடுற காலம் இப்போ இல்லையே.கட்டினவ இருந்தப்போ அருமை தெரியல.மகராசி விட்டுட்டு நிம்மதியா போயிட்டா வேற என்னத்த சொல்ல..”

“வருத்தப்படாதீங்..நாங்கலெல்லாம் இருக்குறோமில்ல..”

“ம்ம்ம்.அப்பறம் புள்ளைக நல்லாருக்காகளா?”

“நல்லாயிருக்காங்க..முதல்ல சாப்பிடுப்பா..ராகினி தட்டு கொண்டு வாம்மா..”

“இதோ வந்துட்டேனுங்க..”,என்றவர் கையில் சாப்பாட்டுத் தட்டோடு வந்து சுந்தரத்திற்கு பரிமாற ஆரம்பித்தார்.

“வயிறு நிறைய சாப்பாடுறதே உண்ற வீட்டுலதேன் அம்மணி..நல்லாயிருக்கோணும்..பிறவு நம்ம மூத்தவன் கல்யாணப் பேச்சு எல்லாம் எப்படி போகுது?”

“அதெங்க சுந்தரம் ஒண்ணும் ஒத்து வரமாடேங்குது.இவனும் எதாவது கோளாறு சொல்லித் திரியுறான்.காலாகாலத்துல கல்யாணத்தை பண்ணா தான அடுத்த மூணுத்துக்கும் ஒரு வழி பார்க்க முடியும்.மனசுல என்ன நினைச்சுருக்குறான்னு தெய்வத்துக்குதேன் வெளிச்சம்.”

“ம்ம் அவன் மனசுல எதுவும் நினைச்சுருக்குறானோ என்னவோ?!”

“அட அதையும் கூட கேட்டுப் பாத்தாச்சுங்..ஒண்ணுமில்லைங்கிறான்.நீயே பார்த்துக்கோ ஆண்டவானு விட்டுப் போட்டாச்சு..”

“விசனப்படாத அம்மணி உங்க ரெண்டு பேரோட நல்ல மனசுக்கு நல்லதாதேன் அமையும்.”

இங்கு இவர்கள் யாரைப் பற்றி புலம்பிக் கொண்டிருக்கிறார்களோ அவனோ அங்கு எந்தக் கவலையுமின்றி தன் உணவகத்தின் கல்லாவில் கம்பீரமாய் அமர்ந்திருந்தான்.

ராகவன் ராகினி தம்பதியினரின் மூத்த புதல்வன் அன்புச்செல்வன். 30 வயது ஆண்மகன்,எம்பிஏ படித்திருந்தும் சொந்தமாய் தொழில் தொடங்குவதே பிடித்தம் என்று படிப்பை முடித்த கையோடு உணவகத்தைத் தொடங்கினான்.அவன் தொழிலின் மிகப்பெரும் பலமே உணவின் தரம் தான்.நியாமான விலையில் தரமான உணவென்பது இப்போதெல்லாம் அரிதாகிவிட்ட ஒன்று.அதிலும் கோவை உணவின் சுவைக்குப் பெயர் பெற்றதாயிற்றே!

அப்படிப்பட்ட ஊரில் தனக்கென தனி முத்திரை பதித்திருப்பது நிச்சயமாய் அசாதாரணமான விஷயமே.ராகவனுக்கு அதை நினைத்து எப்போதுமே ஒருவித பெருமை உண்டு.

அன்புச்செல்வன் தொழில் தொடங்கப் போவதாய் கூறிய போது அதிகம் பயந்தது ராகவனே.அவரது குடும்பத்தில் அத்தனை பேருமே மாதச் சம்பளம் வாங்குபவர்கள் தான்.தொழில் என்பதெல்லாம் எத்தனை பேருக்கு சரியாய் அமையும் என்பதே அவரின் பயத்திற்கு மிக முக்கிய காரணம்.

ஆனால் தைரியமாய் முடிவெடுத்தது மட்டுமல்லாமல் வங்கியில் பெற்ற சிறு கடனை முதலீடாய் வைத்து சிறிய அளவில் ஆரம்பித்த தொழிலை ஆறு வருடத்தில் நல்லதொரு நிலைக்குக் கொண்டு வந்திருந்தான்.

அன்புச் செல்வனுக்கு அடுத்ததாய் ஆனந்தன்.மூத்தவனை விட நான்கு வயது சிறியவன்.எலும்பு மருத்துவராய் பட்டம் பெற்று சிறு கிளினிக் நடத்தி வருவதோடு அரசு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவராக பணிபுரிகிறான்.

அடுத்ததாய் இரட்டையர்கள் இன்பரசனும் தேன்மொழியும் ஆனந்தனை விட நான்கு ஆண்டுகள் சிறியவர்கள்.எதிர்பாராத கர்ப்பம் எனினும் அன்புச்செல்வன் அடம்பிடித்ததால் ராகினி பெற்றெடுக்கத் தயாரானார்.

அவர்களே எதிர்பாராத ஒன்று கருவில் இருந்நது இரட்டையர்கள் என்பது.அன்புச்செல்வனும் ஆனந்தனும் தன் தம்பி தங்கைகளை கண்ணுக்குள் வைத்துப் பார்த்து கொள்ளாத குறை தான்.

சிறு பிள்ளைகள் எனினும் தாயின் உடல்நிலை கருத்தில் கொண்டு அந்த வயதிலேயே அத்தனைப் பொறுப்பாய் இருக்கும் பிள்ளைகளைப் பெற்றவர்கள் பார்த்து பார்த்து பூரித்துப் போவார்கள்.

அதிலும் அன்பு தாயை அதிகமாய் ஒரு வேலை செய்து விடமாட்டான்.இன்றளவும் அப்படியே.கேட்டால், போதும் நிறைய பண்ணிட்டீங்க என்பதோடு முடித்துக் கொள்வான்.

சிறியவர்கள் இருவரும் கடைசி வருடம் பிஈ படித்துக் கொண்டிருக்க நான்கு பிள்ளைகளும் நன்கு படித்து அதிக செலவில்லாமல் அவரவர் பட்டப்படிப்பை முடித்தது ராகவனுக்கு பெரும் நிம்மதி.

ராகினி கணவரின் சம்பாத்தியத்தில் சிறுக சிறுகச் சேர்த்து வைத்து வங்கி கடன் பெற்று தனக்கென ஒரு பூமியையும் ஏற்படுத்தி, வீட்டு விஷயம் வெளியில் தெரியாத வண்ணம் அத்தனை அழகாய் குடும்பத்தைத் தாங்கிப் பிடித்திருந்தார்.

அன்று கல்லூரி விடுமுறை தினமாதலால் சிறியவர்கள் வீட்டில் இருக்க அன்புச்செல்வன் உணவு நேரத்திற்கு வந்த போது,டீவியின் அலறல் சத்தம் வாசல் வரைக் கேட்டது.

உதட்டில் லேசாய் புன்னகை ஒட்டிக்கொள்ள மெதுவாய் உள்ளே வந்தவனை எதிர்பாராதவர்களாய் பரபரத்து ரிமோட்டை எடுத்து சத்தத்தைக் குறைத்தாள் தேன்மொழி.

“ஏன் டி இப்படி அலறவிட்டுட்டு இருக்க டீவியை?!”

“ஹி..ஹி அது பிடிச்ச பாட்டுண்ணே..அதான் கொஞ்சம் மெய் மறந்துட்டேன்.”

“மறப்ப..முதுகுல நாலு போட்டா தெரியும்.எங்க அந்த இன்னொரு வானரம்?”

“அவன் போன்ல யாரோடயாவது கடலை போட்டுட்டு இருப்பான்.”

“ஏதே??!!”

“இல்ல இல்ல பிரெண்ட்டோட பேசிட்டு இருப்பான்ணே..”

“வர வர வாய் ரொம்ப சாஸ்தியா போச்சு உனக்கு..ம்மா பசிக்குது..”

“வரேன் டா தம்பி..பிசைஞ்சு எடுத்துட்டு வர வேண்டாமா..இந்தா சாப்பிடு..”

“எத்தனை தடவை சொல்றேன் ஏன்மா இப்படி பண்ற..நான் என்ன குழந்தையா?”

“அதான வீட்டுக்கு கடைக்குட்டினு பேரு எங்களைக் கூட இப்படி கவனிக்குறது இல்ல..ஆனா இவனுக்கு மட்டும் ரொம்ப பண்ற மா நீ..”

“கண் வைக்காத டீ இவளே..எம் புள்ளைகளுக்கு எப்படி இருக்கணும்னு எனக்குத் தெரியும் நீ ஒண்ணும் சொல்ல வேணாம்..”

“ஐயோ சரி இரண்டு பேரும் ஆரம்பிக்காதீங்க..கடைக்கு போகணும் நானு”,என்றவன் உணவை உண்ண ஆரம்பித்திருந்தான்.

அன்பு அவனது கைப்பேசியை வரவேற்பறையிலேயே  சார்ஜ் போட்டுவிட்டு உள்ளே உணவருந்தச் செல்ல இன்பரசன் கீழே வந்த நேரம் கைப்பேசி சிணுங்கிக் கொண்டிருந்தது.

“அண்ணே போன் உனக்கு..”

“வாடா லீவ்வும் அதுவுமா ஆளேயே காணுமே என்ன?”,என்றவன் கைப்பேசியின் அழைப்பை ஏற்றுப் பேச ஆரம்பித்தான்.

அண்ணணிடம் மாட்டிக் கொள்ளாமல் நழுவிக் கொண்டவன் கட்டாயம் இது யாருடைய வேலையாய் இருக்கும் என்பது உணர்ந்து அவளைத் தேடிச் சென்றான்.

ஆனந்தனும் மதிய உணவிற்காய் வீட்டிற்கு வந்துவிட நாலு பேருமாய் வீட்டைத் தலைகீழாய் மாற்றிக் கொண்டிருந்தனர்.

“ஏன் டா பெரியவனே நீயாவது இதுகளை அடக்கு..ரோதனையா போச்சு..”

“விடுமா..எனக்கும் ஆனந்தனுக்கும் சேர்த்து இவங்க இரண்டு பேரும் உன்னை ஒரு வழி ஆக்குறாங்க..பார்க்குறதுக்கு நல்லாயிருக்கே..”

“இருக்கும் டா இருக்கும்..ஆனந்தா சாய்ந்திரம் எப்போ டியூட்டி போகணும்?”,என்றவர் அயர்வாய் சேரில் அமர்ந்தார்.

“ம்மா அதெல்லாம் நான் பார்த்து போய்ப்பேன் நீங்க போய் தூங்குங்க கொஞ்ச நேரம்.அண்ணணும் நானும் பாத்துக்குவோம் போங்க..”

“ம்ம் ஆமா மா..நீ போ ரெஸ்ட் எடு..”

“சரி நான் கொஞ்சம் நேரம் படுக்குறேன்”,என்றவர் உள்ளே செல்ல டீவீயில் ஓடிக் கொண்டிருந்த பாடலுக்கு ஆடிய படிய தேன்மொழி சமையலறைக்குள் நுழைந்தாள்.அவளைக் கவனித்தவனாய் இன்பாவும் செல்ல இங்கு அன்பு ஆனந்தனைப் பார்த்து அர்த்தமாய் புன்னகைத்தான்.

“சின்னதுக ரெண்டும் அறுந்த வாலு தான் ஆனாலும் அம்மாவுக்கு உதவி பண்ற எண்ணம் நிறையவே இருக்கு இல்லண்ணே..”

“ம்ம் எப்படி அவ பாட்டுக்கு பாத்திரம் தேய்க்க போறா பாரு..அதைவிட இன்பா அவளை எப்பவும் எந்த வேலையும் தனியா செய்ய விடவே மட்டான்.நல்ல பிள்ளைங்க..”

“நீயும் போய் ரெஸ்ட் எடேன்”

“இல்ல டா ஹோட்டல்ல இருந்து அப்போவே போன் வந்தாச்சு..நான் தான் இதுங்க பண்ற சேட்டையில அப்படியே உட்காந்துட்டேன்.நான் கிளம்பட்டுமா..”

“சரிண்ணே அப்பா வர்ற நேரம் தான் அவர் வந்ததும் நான் கிளம்புறேன்.”

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode