ராதை-13

by ஸ்ரீ
0 comments 1 views
A+A-
Reset

“உறக்கமில்லாமல் அன்பே நான் ஏங்கும் ஏக்கம் போதும்
இரக்கமில்லாமல் என்னை நீ வாட்டலாமோ நாளும்?
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே!
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே மனமே!”

கிருஷ்ணன் பேசிச் சென்ற பின் ராதா நிறையவே மாறியிருந்தாள்.

ஒருவித அமைதி அவளிடத்தில் குடிக் கொண்டிருந்தது.யாரும் எதுவும் கேட்டால் கேட்டதற்கு பதில் அவ்வளவே.

இராமனுக்கு மகளிடம் வித்தியாசம் தெரிந்தாலும் அவரைப் பெரிதாய் யோசிக்க விடாமல் வேதவல்லி ஏதோ ஒன்றைக் கூறி சமாளித்தார்.

நிச்சயமே முடிந்திருந்தாலும் ஏனோ வேதவல்லியால் அமைதி காக்க முடியாமல் கணவரிடம் கேட்டே விட்டிருந்தார்.

“ஏன் னா ஒரு வேளை பத்து வந்து பெண் கேட்கலைனா நம்ம கண்ணனுக்கும் ராதாக்கும் கூட பொருத்தம் பார்த்துருக்கலாமோ?”

“என்ன பேசுறாய் நீ!!நம்ம கண்ணன் அவளை விட ஆறு மாசம் சின்னவன் இல்லையா..

அது மட்டுமில்லாம என்ன தான் நம்ம பிள்ளையாய் வளர்த்தாலும் நாளைக்கு கல்யாணம் பண்ணி அனுப்பினா ராதா எத்தனை கஷ்டப்படணும்..

வசதி வாய்ப்பில்லைனு குத்தி காட்டலை ஆனா அதே நேரம் என் பொண்ணு ராணி மாதிரி வாழணும்னு தான் நான் நினைப்பேன்.”

“அட நம்ம கண்ணன் நீங்க சொன்னா வீட்டோட மாப்பிள்ளையா இருந்துண்டு போறான்.!?”

“அட எதுக்கு இப்போ தேவையில்லாத பேச்சு..இப்படியெல்லாம் உன்னால தான் யோசிக்க முடியும்.

போ போய் வேலையைப் பார்..”,என்றவர் அத்தோடு பேச்சை நிறுத்திவிட்டார்.

சாதாரண வாய் வார்த்தையாய் கூட கிருஷ்னை அவர் மருமகனாய் பார்க்கத் தயாராய் இல்லை என்பதை அறிந்தவருக்கு மனம் சோர்ந்து போனது.

இதற்குமேலும் பேசி ப்ரோயஜனமில்லை என்று உணர்ந்தவர் அதன் பிறகு இதைப் பற்றி பேசவேயில்லை.

ஆனாலும் மகளின் நடவடிக்கைகளில் பயந்தவர் அவளை அழைத்துப் பேசினார்.

“கிருஷ்ணா மா அழணும்னு தோணித்துனா அழுதுறு டா.. அம்மா இருக்கேன்.”

பதிலுக்கு அழகாய் சிரித்தவள்,”நான் ஏன் மா அழப் போறேன்..

நான் நன்னா தான் இருக்கேன். என் மேல என்ன மா தப்பிருக்கு.. நான் யாருக்கும் எந்த பாவமும் பண்ணலை. யாரையும் வருத்தனும்னு நினைச்சதில்லை.

ஆனா அந்தப் பெருமாள் என்னை சோதிச்சுப் பாக்குறார்.என் கண்ணனை என் முன்னாடி அழ வச்சுட்டாரே மா..

இதுக்கு மேலயும் வாழ்க்கையில் எனக்கு என்ன கஷ்டம் வரப்போறது..

அவன் சின்ன வயசிலிருந்து எத்தனையோ கஷ்டப்பட்டுருக்கான் ஆனா ஒருதடவை கூட அழுததில்லை.

அப்படிபட்டவன் அன்னைக்கு எப்படி அழுதான்னு நீயும் தானே மா பார்த்தாய்..

கடவுள் நல்லவாளைத் தான் சோதிக்குறார் மா..அவன் பண்ணாத கைங்கரியமா அவன் சொல்லாத ஸ்லோகமா பஜனையா எதுக்குமே பலன் இல்லாம ஆக்கிட்டாரே…அந்த கடவுள் தான் அழணும்..

அவரையே நினைச்சு வளர்ந்த இரண்டு குழந்தேளை அழ வச்சு துடிக்க வச்சு பாக்குறாரே அந்தப் பெருமாள் தான் அழணும்..

போ மா நான் நன்னா இருக்கேன்.போ…”,என்று தாயை அனுப்பி வைத்தளின் உதட்டில் இருந்த புன்னகை மட்டும் மாறவே இல்லை.

வேதவல்லிக்கோ பயம் பிடித்து ஆட்டியது.மகளின் எதிர்காலம் என்னவாய் இருக்கப் போகிறது என்று யோசிக்க யோசிக்க உயிர் வலி எடுத்தது.

நாட்கள் தன் கடமையை செவ்வனே செய்ய ராமன் எத்தனையோ கூறியும் ஏதேதோ காரணம் கூறி பரிட்சைக்குச் செல்வதை மறுத்து விட்டிருந்தாள் ராதா. கண்ணனை அதன் பின் சந்திக்கவே இல்லை.

கிருஷ்ணனும் இயந்திர கதியில் பரிட்சைக்குச் சென்று வந்தான்.வகுப்பு மாணவர்கள் அனைவரும் ராதாவைப் பற்றியே விசாரித்துக் கொண்டிருந்தனர்.

வாய்க்கு வந்ததைக் கூறிவிட்டு நகர்ந்தவன் தன் மனதில் மொத்தமாய் அன்னையின் முகத்தை பதிய வைத்துக் கொண்டான்.

அந்த ஒரு ஜீவனுக்காகவாவது ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடே அத்தனைப் பரிட்சையையும் எழுதினான்.

கையாலாகாத காதலனாய் போய்விட்டதைப் போன்று பொறுப்பற்ற பிள்ளையாய் ஆக விரும்வில்லை அவன்.

இந்த நொடி வரையுமே தன்னிடம் ஒன்றையும் எதிர்பாராத கஷ்டங்களை மட்டுமே அனுபவித்த தாய்க்கு தன் உயிருள்ளவரை முடிந்த அனைத்தையும் செய்வதே இந்த பிறவிக்கான கடமை என்று தனக்குத் தானே பல ஆயிரம் முறை கூறிக் கொண்டான்.

பரிட்சையை முடித்த கையோடு தாயையும் அழைத்துக் கொண்டு ஊரைவிட்டுக் கிளம்புவதாய் முடிவெடுத்திருந்தான்.

ராமனிடம் விஷயத்தைக் கூறியபோது வெகுவாய் கோபப்பட்டார்.

“என்ன டா கண்ணா இன்னும் ஒரு வாரத்தில் நம்ம ஆத்துக் கல்யாணம் இருக்கு..

நீ தான் முன்ன நின்னு எல்லாத்தையும் பார்த்துக்கணும்.

நீ என்னடா னா கிளம்புறேன்னு சொல்றாய். பெரிய மனுஷனானதும் எங்களை எல்லாம் மறந்துட்டாய் இல்ல?”

“மாமா நீங்களும் இந்தக் குடும்பமும் இல்லைனா கிருஷ்ணன்னு ஒருத்தன் இல்லவே இல்லை.

என் அம்மா அப்பாவுக்கு நிகர உங்களையும் மாமியையும் நான் மதிக்குறேன்.

ஆனா இப்போ நான் போகலைனா இந்த வாய்ப்பு மறுபடியும் கிடைக்காமயே கூட போய்டலாம் மாமா..

சினிமாவில் பாடுறதெல்லாம் எல்லாருக்கும் நடக்குற விஷயமா சொல்லுங்கோ..

இது என் ஆசை கனவுங்கிறதைத் தாண்டி என்னோட லட்சியம் மாமா.. ராதாவோட விருப்பமும் அது தான்.. புரிஞ்சுக்கோங்கோ மாமா..”

“சரி சரி டா..தப்பா எடுத்துக்காதே ஏதோ மனக்குறையை கொட்டிட்டேன்.

உன் மனசுக்கு நீ எங்க இருந்தாலும் நன்னா இருப்பாய்.அந்த பெருமாளோட அனுக்கிரகம் நோக்கு எப்பவும் உண்டு..

எந்த சூழ்நிலையிலேயும் அம்மாவை மட்டும் நன்னா பர்த்துக்கோ… அடிக்கடி எங்களையெல்லாம் வந்து பார்த்துக் கோடா..”

“உங்களோட நினைவுகளும் அம்மாவும் தான் வாழ்க்கைக்கான பிடிமானமே மாமா..

எப்படி மறப்பேன்.. வரேன்..”,என்றவனுக்கு ஒரே ஒரு முறை தன்னவளைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது.

எப்படி உணர்ந்தாளோ அடுத்த நொடி அறையை விட்டு வெளியே வந்தவள் முகம் நிறைந்த புன்னகையோடு அவனை வழியனுப்பி வைத்தாள்.

“நல்லபடியா போய்ட்டு  வா கண்ணா..நிறைய நிறைய நீ பாடணும் நான் இனி கேட்குறதெல்லாம் உன் பாட்டாகத் தான் இருக்கணும்.

போய்ட்டு வா..”,என்றவளின் புன்னகை மட்டும் அப்படியே அவன் மனதில் நிறைந்து விட்டிருந்தது.

“காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்
உனக்கே உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே
நீ இல்லாமல் எது நிம்மதி நீதானே என் சன்னிதி”

கூடத்தில் கேட்டுக் கொண்டிருந்த பாடல் நின்றதும் உயிர்பெற்றவளாய் அதிர்ந்து விழித்தாள் ராதா.

இருக்கும் இடம் உணர்ந்து தலையைத் திருப்ப கைகளைக் கட்டியவாறு சமையலறை வாசலில் நின்றிருந்தான் அவளின் கணவன் அபிமன்யூ.

ஆம் திருமணம் முடிந்த மூன்றாம் நாள் மகளை புக்காத்திற்கு அனுப்பிவிட்டு அனைவருமாய் கிளம்பியிருந்தனர்.

என்ன செய்வதென அறியாமல் சமையலறையிலேயே முடங்கிக் கிடந்தாள்.

திருமணம் முடிந்த இரு தினங்களே அத்தனை கொடுமையாய் இருந்தது.

திருமணத்தன்று இரவு அவளை அறைக்குள் அனுப்பிய போது வாசலில் நின்ற கால்கள் அப்படியே இந்த நொடியே இறந்துவிடு என்று கெஞ்சியது.

நெஞ்சை அடைத்ததொரு பாரம் விழி வழியே வெளிவரக் காத்திருந்தது.

அனைத்தையும் அடக்கியவளாய் உள்ளே சென்றவளுக்கு எதிரே கால் மேல் கால் போட்டு கட்டிலில் அமர்ந்திருந்தான் அபிமன்யூ.

அவள் வீடு அவளது அறையே இப்போது நரகத்தின் வாயில் போல் காட்சியளித்தது ராதாவிற்கு.

“வாங்கோ ராதா அவர்களே!!அப்படியே நின்னுட்டேள்னா எப்படி…

உங்களுக்கான அழகான வாழ்க்கை தங்களை வரவேற்க காத்திருக்கிறதே!”,அப்பட்டமான ஏளனம் அவனது குரலில் இருந்தும் மௌனமே பதிலாய் அவளிடத்தில்.

அப்படியே நின்றிருந்தவளைப் பார்த்தனுக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது.சட்டென எழுந்தவன்,

“ஆம்படையான் காலில் விழுந்து சேவிக்கணும்னு உன் ஆத்துல சொல்லித் தரலையா”,

பல்லைக் கடித்துக் கொண்டு அவன் கத்திய விதத்தில் நடுங்கிப் போனவளாய் கையிலிருந்த பால் சொம்பைத் தவறவிடப் போக வேகமாய் அழுத்திப் பிடித்துக் கொண்டாள்.

தன்னிடம் இத்தனை கோபமாய் யாரும் இதுவரைப் பேசியதில்லை என்றுணர்ந்தவளுக்கு மனம் அதுவாய் கண்ணணின் குரலோடு ஒப்பிட்டுப் பார்த்தது.

“இந்த நெஞ்சழுத்தம் தான் டீ உன் மேலான கோபத்தை அதிகப்படுத்திண்டே இருக்கு..

காலில் விழுனு சொன்னேன்.”, என்று மீண்டும் அவன் கர்ஜிக்க அவசரமாய் அவன் பாதம் பணிந்தாள் ராதா.

“என்ன இந்த சினிமாவிலெல்லாம் வர்றாப் போல உன்னை பொன் போல தூக்கி விடுவேன்னு நினைச்சாயா..

எழுந்துரு எழுந்துரு..”,என்றவன் அவன் போக்கில் சென்று கட்டிலின் மறுபுறம் அமர்ந்து கொண்டான்.

“ம்ம் அப்பறம் உன் ஆசை காதலன் ஊரைவிட்டே போய்ட்டானா ஒரு வழியா..ஆனா அவனும் இங்க இருந்துருக்கணும்..

நிதம் நிதம் நீ விடுற கண்ணீரைப் பார்த்து கொஞ்சம் கொஞ்சமா அவனும் சாகணும்னு எதிர்பார்த்தேன் நடக்கமா போய்டுத்து.

என்னை ஏளனப்படுத்தினதுக்காக தான் இந்த தண்டனை நோக்கு…என் முகத்தை கூட உன்னால ஒழுங்கா பார்த்து பேச முடியாது..

ஆனால் அந்த கண்ணணோட சிரிச்சு சிரிச்சு பேசுவாய் இல்ல..

என் தகுதிக்கு உன்னை விட உசத்தியா ஆயிரம் பெண் நேக்கு கிடைக்கும்.

இப்பவும் அதுக்கான வாய்ப்பு இருக்கத் தான் இருக்கு..என்ன புரியலையா..

ஊருக்கு மட்டும் தான் நாம கணவன் மனைவி இந்த அறைக்குள்ளே நீ என் வேலைக்காரி.

என் சுண்டு விரல் கூட உன் மேல படாது.ஆனா எதுவுமே நீயோ நானோ சொன்னா தானே வெளியே தெரியும். நான் சொல்ல மாட்டேன்..நீயும்..ஹா ஹா …

என் ஆத்திரம் தீர உன்னை பழிவாங்கி எதானும் ஒரு காரணம் சொல்லி உன்னை உன் பொறந்தாத்துக்கு அனுப்பிட்டு நேக்குப் பிடிச்சா மாதிரியான ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணின்டு சந்தோஷமா வாழுவேன்.

இது நடக்கறதா இல்லையானு மட்டும் பார்.”,என்றவன் விளக்கை அணைத்துவிட்டு கட்டிலில் படுத்துக் கொண்டு அவளுக்கான தலையணையை அவள் மீது தூக்கியெறிந்திருந்தான்.

அவனின் அத்தனை வார்த்தைகளிலும் அவளுக்கு நிம்மதியளித்த ஒரு விடயம் ஊருக்காகவே இந்த திருமணம் என்று அவன் கூறியது தான்.

தன் பெண்மை பாதுகப்பாகவே இருக்கப் போகிறது என்ற எண்ணமே உயிர் வரை இதம் பரப்பியது.

அனைத்தையும் நினைத்து நின்றவளின் முன் சொடுக்கிட்டு அவளை உணர்வு பெறச் செய்தவனாய்,

“என்ன மகாராணிக்கு கனவெல்லாம் பலமோ?!!போ..

போய் நகையெல்லாம் கழட்டி வைசச்சுட்டு வந்து நேக்கு சாப்பிட ஏதானும் செய்..போ..

முதலில் இந்தப் பட்டிகாடாட்டம் கை நிறைய போட்டிருக்குற கண்ணாடி வளையலை கழட்டி வை..

சத்தத்தைக் கேட்டாலே எரிச்சலா இருக்கு..”,என்று அவளைத் துரத்தினான்.

பத்மினி எத்தனை தடுத்தும் அவள் தான் தளிகை செய்ய வேண்டும் என்று கட்டாயமாய் கூறிய மகனைப் புரியாமல் பார்த்திருந்தார்.

அடுத்த இரண்டு நாட்களிலேயே தான் அவளோடு தனிக்குடித்தனம் போகப் போவதாய் கூற பத்மினிக்கும் கோவிந்தனுக்கும் ஒன்றும் புரியவில்லை.

“என்னடா இப்படி சொல்றாய் கல்யாணம் ஆன இரண்டே நாளில் தனியா போற அளவு என்னடா நடந்தது?”

“ஐயோ எல்லாருமா என்னைப் போட்டு ஏன் சித்ரவதை பண்றேள்.அவ என்னடா னா உன் அம்மா அப்போவோட எல்லாம் இருக்க முடியாதுனு கண்ணீர் வடிக்குறா..

நீங்களாவது புரிஞ்சுக்கப்டாதா!!”,என்று கூறுபவனை உணர்ச்சியற்ற பார்வை மட்டுமே பார்த்திருந்தாள் ராதா.

பத்மினி ஒரு புறம் கத்த ஆரம்பிக்க ராதாவின் வீட்டிற்கு விஷயம் தெரிய வர ராமனும் வேவல்லியும் வந்து பேசிப் பார்க்க தன் மீது தவறே இல்லாத போது என்னவென பதில் கூறுவாள்!!

அடுத்த இரண்டு நாட்களில் அதே ஊரிலேயே அவர்கள் வீட்டிலிருந்து சற்றுத் தொலைவில் ஒரு வீட்டை ஏற்கனவே பார்த்து வைத்திருந்தவன் அவளோடு குடி பெயர்ந்திருந்தான்.

விதியை மதியால் வெல்லலாம்!அப்படியா எல்லா நேரங்களிலும் அது நடந்திடுமா?!!

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode