177
“நெஞ்சில் என்னை நாளும் வைத்து
“நெஞ்சத்தில் பேர் எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்
“நெஞ்சில் என்னை நாளும் வைத்து
கொஞ்சும் வண்ணத் தோகை ஒன்று
மஞ்சள் மாலை மேளம் யாவும்
கண்ணில் காணும் காலம் உண்டு
பூவைச் சூடி பொட்டும் வைக்க
மாமன் உண்டு மானே மானே
உள்ளம் தன்னை கொள்ளை கொண்ட
கள்வன் இங்கு நானே நானே”
தன் ராதா இப்படி அழுது பார்த்திராதவனோ அவளை சமாதானப்படுத்தக் கூடத் தோன்றாமல் அப்படியே நின்றிருந்தான்.
எங்கிருந்தோ வந்த குயிலின் ஓசையில் சிந்தனை கலைந்தவன் தன் கண்ணின் நீரைத் துடைத்துவிட்டு அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தான்.
“என் ராதா இப்படி அழுவானு இன்னைக்குத் தான் நேக்குத் தெரியுறது.
அந்த அழுகைக்கும் காரணம் நானா இருந்துருக்கேன்னு நினைக்கும் போது…”
என்றவனின் பேச்சின் பிற்பாதியைக் கேட்டுத் தெளிந்தவளாய் நிமிர்ந்து அமர்ந்து முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டாள்.
“நீ அழறதை பார்க்குற சக்தி நேக்கில்லை மா..நீ என் மனக்கோயிலில் இருக்குற அம்பாள்.
உன்னை நிதம் நிதம் ஆராதிக்குற சாதாரண சேவகன் தான் நான்.
அந்த அம்பாளின் காலுக்கடியிலேயே இருந்து காலத்தை ஓட்டிரணும்ங்கிறது தான் இந்த பக்தனோட அதிகபட்ச ஆசை.
ஆனால் இப்போ அந்த அம்பாளோ அவளுக்குத் துணையா என்னை அவள் பக்கத்துலேயே இருக்க சொல்றா..
எனக்கும் அந்த பேராசை மனசின் ஓரமா கண்டிப்பா இருக்கு.. ஆனால்..”
“ஆனால்..என்ன??சொல்லு கண்ணா?”
“என் ஆசை நிறைவேறாம போனா நான் அடையுற ஏமாற்றத்தை விட என் அம்பாள் தவிச்சுப் போறதைப் பார்க்குற தைரியம் நேக்குத் துளி கூட இல்லையே…
அப்படியிருக்கும் போது அவள் சொல்றதை எப்படி முழு சந்தோஷத்தோடு என்னால் ஏத்துக்க முடியும்?”
“…”
“எப்பவும் போல இப்பவும் நான் சொல்றதைக் கொஞ்சம் பொறுமையாக் கேளு ராதா..
இப்போ உனக்குத் தேவை படிப்பு.. அதில் நல்லபடியா கவனம் செலுத்து. இந்த கண்ணன் எப்போதும் போல் உன் கூடவே தான் இருப்பான்.
நானும் உனக்காகவே நன்னா படிப்பேன்.இந்த காலேஜ் வாழ்க்கை முடிஞ்சு வெளியே போறதுக்குள்ள எனக்கான ஒரு உத்யோகத்தைத் தேடிக்குறேன்.
அதைவிட முக்கியமா உனக்கு நிகரா நான் நேசிக்குற இந்த இசை மூலமா இந்த உலகத்துக்கு என்னை நான் அடையாளப் படுத்திக்குறேன்.
இது நடந்து முடியுற நேரம் நானே உன் தோப்பனார்கிட்ட வந்து பெண் கேட்பேன்.
எத்தனை எதிர்த்தாலும் உனக்காக பொறுமையா காத்திருந்து உன்னை என்னவளா ஆக்கின்டுருவேன்.
இப்போதைக்கு எல்லாமே நம்பிக்கையாய் மட்டுமே என் கையில் இருக்கு.இதெல்லாம் நடக்கும் காலம் கண்டிப்பா நல்ல காலமாகவே இருக்கும்னு நம்புறேன்.
ஆனா அதுவரை எத்தனைப் பெரிய துன்பம் வந்தாலும் உன் கண்ணில் இருந்து கண்ணீர் மட்டும் வரவேப்டாது அதை மட்டும் நீ எனக்காக பண்ணிணா போதும்.செய்வியா?”
“கண்ணா!!”,என்றவளின் முகத்தில் குழப்ப ரேகைகள் விரவிக் கிடந்தன.அதைப் பார்த்தவன் ஒன்றும் கூறாமல் அவளது வலக்கையை எடுத்து தன் முன் நீட்டி அதன் மேல் தன் கையை வைத்துவிட்டு அவள் விழி நோக்கினான்.
“இந்த ஜென்மத்தில் கிருஷ்ணணோட வாழ்க்கையில மனைவினு ஒருத்தி வருவானு இருந்தா அது இந்த ராதா மட்டும் தான். இது நான் நேசிக்குற இசை மேல சத்தியம் போதுமா?”
ஒளியிழந்த அவள் கண்கள் பெற்ற பிரகாசமே கூறியது அவளின் மகிழ்ச்சியின் அளவை.
அவள் கையிலிருந்து தன் கையைப் பிரிக்க முயன்ற நேரம் மீண்டுமாய் அழுந்தப் பிடித்தவள்,
“இந்த ஜென்மத்தில் ராதாவோட கடைசி மூச்சு நிச்சயம் உன் கையில் தான் போகும் கண்ணா.. அத்தனை வருஷமும் உன்னோட சந்தோஷமா வாழணும்.”
“கண்டிப்பா வாழ்வோம் ராதா.. இனி எதுக்காகவும் கண்ணீர் மட்டும் சிந்தக் கூடாது. புரிஞ்சுதா?”
ஆமோதிப்பாய் தலையசைத்தவள் அங்கிருந்து சிறு தலையசைப்போடு விடைப்பெற்றுச் சென்றாள்..
என்னதான் கடமை முக்கியம் காதல் எல்லாம் இப்போது தேவையில்லை என்று கூறினாலும் தன் விரும்பும் மனது தன்னை விரும்புகிறது என்ற உண்மை தெரிந்த பின் அதை அலைபாய விடாமல் இருக்கும் அளவிற்கு பக்குவப்பட்ட வயதில் இருவருமே இருந்திருக்க வில்லை.
ஒவ்வொரு நாளின் விடியலும் அவள் முகத்தை பார்க்கபோகும் மகிழ்ச்சியிலேயே விடிந்தது கிருஷ்ணணுக்கு.
ஒவ்வொரு நாளின் முடிவும் அவனுடனான அழகிய தருணங்களின் திருப்தியோடே முடிந்தது ராதாவிற்கு.
வகுப்பு,பேரூந்து என ஒரு நாளின் அதிகபட்ச நேரங்கள் இருவரும் ஒன்றாகவே கழிக்கும் நிலைமை ஆதலால் அவர்களின் புரிதல் இன்னுமின்னும் அதிகரித்திருந்தது.
ஆனால் பார்ப்பவர் கண்கள் உறுத்தும் வகையில் ஒரு விழித் தீண்டல் கூட அவர்களிடத்தில் இருக்கவில்லை.
கண்ணணுக்கு எப்போதும் போல் அரிய பெரும் தேவதை தான் அவள். அவனின் பிரத்தியேக உலகத்தின் ராணியவள்.
அன்றைய நாள் கல்லூரியின் ஆண்டுவிழா கிருஷ்ணண் பாட்டுப் பாடப் போகிறான்.
அவனுக்கான முதல் மேடை நிச்சயமாய் நல்லதொரு அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு மகிழ்ச்சியாய் தயாராகிக் கொண்டிருந்தாள் ராதா.
கிருஷ்ணணின் சைக்கிள் மணிச் சத்தம் வாசலில் கேட்க வேகமாய் வாசலுக்கு வந்து நின்றவளைப் பார்த்தவன் மூச்சு விடவும் மறந்து நின்றான்.
அழகான இளஞ்சிவப்பும் மஞ்சளும் கலந்த சிறிய கட்டங்கள் நிறைந்த பட்டுப்புடவை அதற்கு பொருத்தமாய் இளஞ்சிவப்பு வண்ண முக்கால் கை ரவிக்கை.
நீளமான கழுத்துச் சங்கிலியின் நடுவில் பெரிய தாமரை டாலர்.
அழகாய் பின்னித் தொங்கவிட்ட குஞ்சத்தோடு காதில் குடை ஜிமிக்கியும் கண்ணுக்குத் தீட்டிய நீள் மையும் நெற்றியின் நடுவில் நடுநாயகமாய் வீற்றிருந்த அவளின் அடையாளமான மிகப் பெரிய பொட்டுமாய் வந்து நின்றவளைப் பார்த்து உலகம் மறந்து தான் போனான்.
முதல் முறையாய் அவளைக் காண்பதைப் போன்ற பிரம்மை.
இப்போது தான் ஒரு ஆணாய் அவன் பார்வை அழகிய பெண்ணவள் மீது பதிகிறது என்பதை உணர்ந்தான்.
அழகிய ஐந்து அடி பதுமை..சற்றே பூசியதைப் போன்ற உடல்வாகு.
சந்தன நிறம்.அழகாய் செதுக்கி வைத்தார் போன்ற கன்னம் குண்டு குண்டு விழிகள். இந்த நொடி உலகிலேயே பேரழகி என்றால் அவள் தான் என்று தோன்றியது அவனுக்கு.
அதிலும் முதல் முறை அவளைப் புடவையில் பார்த்தவனுக்கு பேசுவதற்கு வார்த்தைகளே வரவில்லை.
காலையிலிருந்து பார்த்துப் பார்த்து தயாரானவளுக்கு மனதில் இருந்த ஒரே கேள்வி கண்ணன் என்ன கூறுவான் என்பதே.
ஒரு வார்த்தையும் பேசாத அவனின் விழிப்பார்வை கூறியது ஆயிரம் பதில்களை.
வீட்டு வாசலில் நிற்கும் உணர்வு கூட மறந்து நிற்பவனை சூழ்நிலை உணர்ந்து மெதுவாய் அழைத்தாள்.
“கண்ணா!!”
“ஆங்ங்..அது..வந்து..போலாமா ராதா..”
“ம்ம்”,என்றவள் இறங்கி அவனோடு நடக்க ஆரம்பித்தாள்.
“முதல் தடவை உன்னை புடவையில் பார்க்குறேன். ரொம்ப ரொம்ப அழகாயிருக்காய்..”
“…”
“இந்தப் புடவை நோக்கு நன்னா பொருந்திருக்கு..”
“…”
“ஏன் அமைதியா வர்ற ராதா..”
“ஒண்ணுமில்லை.. சும்மா தான்..”,என்று அவள் வாய் வார்த்தை உதிர்த்தாலும் அதையும் கடந்த அவள் கன்னக் கதுப்புகளின் சிவப்பு ஆயிரம் விஷயங்கள் உள்ளன என்று சொல்லாமல் சொல்லியது கிருஷ்ணணுக்கு.
பேரூந்தில் ஏறி வழக்கம்போல் அவள் அமர்ந்து கொள்ள அவன் அவளுக்கு எதிராய் நின்று கொண்டான்.
அழகான அந்தப் பொழுதை இன்னும் அழகாக்குவதாய் இளையராஜாவின் பாடல் ஒலிக்க ஆரம்பித்திருந்தது.
“நெஞ்சத்தில் பேர் எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்
கர்ப்பனைகளில் சுகம் சுகம் கண்டதென்னவோ நிதம் நிதம்
மழை நீ நிலம் நான் தயக்கமென்ன
ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது”
என்ன மாதிரியான உணர்வுகள் என்றே விவரிக்க முடியா ஒருவித பரவசம் இருவரிடத்திலும்.
விழித் தீண்டல்களும் ஒரே ரசனைக்கான பாடல்களுமே இத்தனை மதிமயக்கத்தை அளிக்குமா?
அளிக்கிறது இருவரையுமே தனக்குள் கரைத்துக் கொண்டிருக்கிறது.
அந்த மோன நிலையின் சுகம் அதை உணர்பவர்கள் மட்டுமே புரிந்து கொள்ளக் கூடிய ஒன்று.
கல்லுரிக்குள் நுழைந்தவர்கள் ஒருவரை விட்டு ஒருவர் நகரத் தோன்றாமல் மனமேயின்றி அவரவர்க்கான வேலைகளைக் கவனிக்கச் சென்றனர்.
காதல் எனும் மாயை கண்கள் வழி இதயம் தொடும் நேரம் பிரபஞ்சமே அழகாகிடும் அற்புதம் கடவுளின் படைப்பில் ஆகச் சிறந்த ஓர் உணர்வு.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
2 comments
Super💕
Very nice