225
“உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானும்
“மலர்களில் ஆடும் இளமை புதுமையே
“காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
“உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானும்
சுமைதாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம் எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம் வெறும்பனி விலகலாம்
வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம்
உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை”
நாட்கள் அதன்போக்கில் விரைந்து கொண்டிருக்க கண்ணணும் ராதாவும் ஒன்பதாம் வகுப்பில் நுழைந்திருந்தனர்.
“கண்ணா என்னவோ பயமாவே இருக்கு டா காத்தால முதல் வகுப்பே கணக்கு வாத்தியார் பேப்பரோட வருவார்.
நானும் தான் எவ்வளவோ முயற்சி பண்றேன்.இந்த கணக்குப் பாடம் மட்டும் ஏன் தான் இப்படி படுத்துதோ தெரியல..”
“சரி பயப்படாம போ..அதெல்லாம் நல்ல மார்க் தான் வாங்குவ..”
“ம்ம் என்னவோ போ..நான் வரேன்..”,என்றவள் சோர்வாய் வகுப்பை நோக்கி நடந்துச் சென்றாள்.
முதல் வகுப்பு முடிந்து அடுத்ததாய் வாத்தியார் வரவில்லை என்று அறிந்தவன் ஏதோ ஒரு உந்துதலில் பக்கத்து வகுப்பில் இருந்த ராதாவைப் பார்த்து வரலாம் என்று வெளியே சென்றான்.
வெளிலிருந்து மெதுவாய் எட்டிப் பார்க்க முகம் சோர்ந்து போய் அமர்ந்திருந்தவளைப் பார்த்தவனுக்கு பயமாகி விட்டது.
என்ன ஏதென புரியாமல் அவன் அங்கு நின்றிருக்க அதற்குள் அங்கிருந்த ஆசிரியை அவளிடம் ஏதோ பேச ஆரம்பித்திருந்தார்.
கிருஷ்ணணுக்கு என்ன செய்வதென புரியவில்லை எனினும் ஏதோ ஒன்று சரியில்லை என்றே தோன்றியது.
சரி எதுவாயினும் மதிய உணவு நேரத்தில் கேட்டுக் கொள்ளலாம் என்று எண்ணியவனாய் நேரத்தை கடத்தினான்.
மணி அடித்தவுடன் அவளைத் தேடி ஓடியவன் அங்கு அவளில்லாததை கண்டு குழம்பிப் போய் அவள் பக்கத்து இருக்கை மாணவியிடம் விசாரிக்க அவளோ ராதா கிளம்பிச் சென்றுவிட்டதாய் கூறினாள்.
“என்னன்ட சொல்லாம போக மாட்டாளே என்னாச்சு?தனியாவா போனா?”
“டேய் கிருஷ்ணா அவளுக்கு உடம்பு சரியில்ல..கிளம்பி போய்ட்டா..
டீச்சர் கூட தான் போய்ருக்கா.. சும்மா எதாவது கேட்டுட்டே இருக்காத.. போ..”,என்று அவனைத் துரத்துவதிலேயே குறியாய் இருந்தவளைப் பார்த்தவனுக்கு கோபமும் அழுகையும் முட்டிக் கொண்டு வந்தது.
மாலை வரைக் காத்திருந்தவன் பள்ளி முடித்து நேராய் ராதாவின் வீட்டை நோக்கி வேகமாய் சைக்கிளில் சென்றான்.
வாசலில் நிறைய பெரியவர்கள் நின்றிருக்க வேகமாய் உள்ளே நுழைய நினைத்தவனை ஒரு பாட்டி தடுத்து நிறுத்தியிருந்தார்.
“டேய் டேய் படவா..எங்க வேகமாய் உள்ளே போறாய்?”
“பாட்டி ராதாவைப் பார்க்கனும். அவளுக்கு உடம்பு சரியில்லையாமே?”
“சரிதான்..அவளுக்கு ஒண்ணுமில்லை இன்னும் ஒரு வாரம் அவ வெளியில் எல்லாம் வர மாட்டா..
விசேஷம் வைக்குறப்போ சொல்லி அனுப்புவா..அப்போ வந்து பார்த்துக்கோ போ..”
“ஏன் ஏன் இப்போ பார்க்க கூடாது.??நான் பார்க்கணும்..”, எனும்போதே அவனது அன்னை உள்ளிருந்து வர அவனை கையோடு அழைத்துச் சென்றார்.
“ம்மா நீயாவது சொல்லப்டாதா?நான் ஏன் அவளை பார்க்கக் கூடாது?”
“டேய் கண்ணா.. ராதா பெரிய மனுஷியாய்ட்டா.. இனியும் குழந்தை மாதிரி எல்லாம் அவ உன்னோட சுத்தப்டாது.. புரிஞ்சுதா?”
“அப்படியா அப்போ நான் எப்போ பெரிய மனுஷன் ஆவேன்?!”
“அடி படவா..என்ன பேச்சு பேசுற..போடா..அப்பா உன்னை கோவிலுக்கு வரச் சொன்னார்.
போய் கோஷ்டி மனுஷாளோட பஜனையை முடிச்சுட்டு வா..”
“போம்மா…வர வர நான் எது கேட்டாலும் ஒழுங்கா பதில் சொல்ல மாட்ற..”, என்றவாறே கோவிலுக்கு கிளம்பியவன் அப்போதும் ராதாவின் வீட்டையே திரும்பி திரும்பி பார்த்தவாறுச் சென்றான்.
அந்த ஒரு வார காலம் கிருஷ்ணணுக்கு அத்துனை கடினமாய் இருந்தது.
பள்ளியிலும் அவன் நண்பர்களெல்லாம் கேலி பேச அவனுள் சொல்ல முடியா ஒருவித உணர்வு.
ஒருவாரம் கழித்து பள்ளிக்குத் தயாரானவள் வாசலில் காத்திருக்க கிருஷ்ணண் அவன்போக்கில் சைக்கிளை அழுத்திச் சென்றவன் இவளைக் கண்டதும் உற்சாகத்தோடு அப்படியே நின்றுவிட்டிருந்தான்.
“இராதா இன்னைக்கு நீ ஸ்கூலுக்கு வர்றதா சொல்லவேயில்லையே!”
“ம்ம் நீ தான் என்னைப் பார்க்க வரவேயில்லையே..”
“நான் வந்தப்போ எல்லாம் யாரும் என்னை உள்ளேயே விடல தெரியுமா!
நேத்து உங்காத்துல ஏதோ விசேஷமாமே.. நான் அப்பாவோட பக்கத்து ஊர் கோவிலுக்கு போய்ட்டேன்..”
“ம்ம்..”,என்றவள் அமைதியாய் அவனோடு நடக்க ஆரம்பித்தாள்.
“என்ன ராதா அமைதியா வர்ற?ஏன் குனிஞ்சுண்டே நடக்குற என்னாச்சு?”
“ம்ம் அம்மா தான் இப்படி இருக்கணும்னு சொன்னா.
தேவையில்லாம பேசக் கூடாதாம்..சிரிக்க கூடாதாம்..
தெருவில நடக்குற அப்போ குனிஞ்சு தான் நடக்கணுமாம்.
பசங்களோட எல்லாம் வம்பு வளர்க்க கூடாதாம்.. நேக்கு ஒண்ணும் புரியல டா கண்ணா..”
“அப்போ என்னோடயும் பேச மாட்டியா?”
“அசடாட்டம் பேசாத…நீயும் மத்தவாளும் ஒண்ணா..அம்மா உன்னோட தான் பத்திரமா ஸ்கூலுக்குப் போய்ட்டு வர சொன்னா..”
“ம்ம் ஆனாலும் இதெல்லாம் ஒண்ணும் புரியவேயில்ல..சரி நீ கவலைப்படாதே நான் தான் இருக்கேனோல்யோ..
நான் பார்த்துப்பேன் உன்னை.. யாராவது வம்பு பண்ணிணா சொல்லு உண்டு இல்லைனு ஆக்கிட்றேன்..”
“ம்ம் தேங்க்ஸ் கண்ணா..”என்று புன்னகைத்தவளுக்குப் பதில் புன்னகை அளித்தவன் அவளோடு நடக்க ஆரம்பித்தான்.
பள்ளி நட்புகளின் கேலி கிண்டல்கள் தொடர்ந்தாலும் ராதாவின் மீதான அன்பில் எவ்வித மாற்றமுமின்றி நடந்து கொண்டான் கிருஷ்ணன்.
அதிலும் இப்போதெல்லாம் அவன் தான் பள்ளியின் மிகச் சிறந்த பாடகன்.
முறையான சங்கீதம் கற்றுக் கொள்ளவில்லை எனினும் அத்தனை வசீகரமான குரலில் அவன் பாடும் போது குறை என்ற ஒன்று யாருக்கும் தெரியவில்லை என்று தான் கூற வேண்டும்.
தினமும் காலை பள்ளியின் கடவுள் வாழ்த்து அவன் குரலில் தான் ஒலிக்கும்.
அவனது ஈடுபாடை உணர்ந்து கொண்ட ஆசிரியர் ஒருவர் அவருக்குத் தெரிந்த கர்நாடக சங்கீத ஆசிரியர் ஒருவரிடம் அவனைச் சேர்த்துவிட்டிருந்தார்.
ஒருநாள் காலையில் அவன் வீட்டிற்கு ஓடி வந்த ராதா அவனை கையோடு அழைத்துக் கொண்டு தன் வீட்டிற்கு வந்தாள்.
“கொஞ்சமாவது மூச்சு வாங்கிக்கோயேன்..என்னாச்சு எதுக்கு இத்தனை அவசரமாய் என்னை அழைச்சுண்டு வந்த?”
“நான் ஒண்ணு காட்டப் போறேன். அதைப் பார்த்தா நீ எவ்வளவு சந்தோஷப்படுவனு நேக்கு நன்னா தெரியும்..”
“அப்படியா அப்படி என்ன காட்ட போற ராதா?”
“இங்கே வா..”,என்றவள் உள்ளே அழைத்துச் சென்று மேசையின் மீதிருந்த துணியை விலக்க புத்தம் புது டிரான்சிஸ்டர் இருந்தது.
“ஹே ரேடியோ வா!!!”
“சொன்னேனோல்யோ..உனக்காகவே அப்பாவாண்ட அடம்பிடிச்சு வாங்கினேன்.. வா வந்து நீயே பாட்டு வச்சுக் கொடு..”
ஆசையும் வேகமுமாய் அதன் அருகில் சென்றவனுக்கு ஏதோ ஒரு அதிசயத்தைக் கைகளால் தழுவது போன்ற உணர்வு.
ஆசை தீர மென்மையாய் வருடிக் கொடுத்தான்.
“என்னால நம்பவே முடியல.. ரொம்ப நன்னாயிருக்கு இராதா..”
“ஏன் டா கண்ணா எவ்வளவு நாழி தான் அதை ரசிச்சுண்டே இருப்ப..பாட்டு போடு டா..
நாங்க எல்லாம் எத்தனை நேரமா காத்துண்டு இருக்குறது..”,என்ற ராமனின் குரலில் உயிர்ப் பெற்றவனாய் அவனின் உயிர் மூச்சான இலங்கை வானொலியை ஒலிக்க விட்டான்.
வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டி அருகில் காத்திருக்கும் லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு எமது..
வணக்கம்
வணக்கம்
வணக்கம்..
நான் உங்கள் கே எஸ் ராஜா.நீங்கள் கேட்டவை நிகழ்ச்சியில் இன்றைக்கான முதல் பாடல் கல்யாண ராமன் திரைப்படத்தில் இருந்து,
“மலர்களில் ஆடும் இளமை புதுமையே
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய்
மலர்களில் ஆடும் இளமை புதுமையே
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய்
பருவம் சுகமே பூங்காற்றே நீ பாடு
மலர்களில் ஆடும் இளமை புதுமையே
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய்”
நீங்கள் கேட்டது நீங்கள் கேட்டவை..நீங்கள் கேட்டவை நிகழ்ச்சியை மீண்டும் நாளை கேட்கலாம். அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுவது கே.எஸ் ராஜா.
அவன் அந்த பாட்டுக்களோடு ஒன்றிவிட்டான் என்பது அனைவருக்குமே தெரிந்தது.
அதிலும் சில பாடல்களை மனப்பாடமாய் அவன் பாடும் போது ராதா அவனை ஆச்சரியமாய் பார்த்திருந்தாள்.
நேரமாகி விட்டதென ராமன் அவனை கிளம்பச் சொல்ல அப்போது தான் அங்கிருந்த அனைத்தையுமே உணர்ந்திருந்தான் கிருஷ்ணன்.
டீக்கடையிலும் ராதாவின் வீட்டிலும் என அவனது விடுமுறை நாட்கள் பாடல்களோடே கலந்துவிட்ட ஒன்றாய் மாறிப்போனது.
ஆனால் ராதாவிற்கோ அவனின் மீதான அன்பு அதை கடந்த ஒரு நேசமாய் மாற ஆரம்பித்திருந்த தருணம் அது.
எப்போதுமே அவனன்றி அவளுக்கு ஒன்றுமில்லை எனினும் இப்போதெல்லாம் கிருஷ்ணணும் அவன் பாடல்களுமே அவளுக்கு எல்லாமுமாய் மாறிப் போயிருந்தது.
பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களாய் இருவருக்குமே ஒருவர் மீதான மற்றவரின் அன்பு சற்று அதிகம் என்ற வரையில் புரியத் தொடங்கியிருந்தது.
பொதுவெளியிலோ பெற்றவர்களின் முன்னிலோ அவர்களின் உரையாடல் வார்த்தைகளைக் கடந்த பார்வை பரிமாற்றமாக மாற ஆரம்பித்திருந்தது.
இருந்தும் கபடமற்ற ஒரு அன்பு நிலை என்ற ஒன்று தான் அங்கு ஆட்சி செய்யத் தொடங்கியிருந்தது.
கிருஷ்ணணைப் பொறுத்த வரையில் அவனின் ராதா அவள்.
அவனுக்காகவே இறைவனால் அனுப்பப்பட்ட தேவதை அவள்.
இராதாவிற்கோ அவளின் கண்ணன் தான் அனைத்துமாய் இருந்தான்.
தன் தந்தைக்குப் பிறகு அவள் நம்பும் அன்பு வைத்திருக்கும் ஒரே ஆடவன் அவளின் கண்ணன் மட்டும் தான்.
சிறுபிள்ளைத்தனங்களைக் கடந்து பெண்பிள்ளைக்கே உரிய சில பொறுப்புணர்வுகள் சற்று அதிகமாகவே வந்திருந்தது இராதாவினிடத்தில்.
அவனுக்குப் பிடித்த உணவில் தொடங்கி அவனின் பிரியத்திற்குரிய பாடல் வரை அத்தனையும் அவளுக்கும் பிடித்தம்.
அதில் மிக முக்கியமான ஒன்று அவனின் அழகிய குரலில் அற்புதமாய் ஒலிக்கும் பாடல் அதிக சந்தோஷம் அதிக துக்கம் எந்த மனநிலையாயினும் அவனின் அந்த நான்கு வரி அந்த நேரத்தின் மிகப் பெரும் அடைக்கலமாய் இருக்கும் அவளிடத்தில்.
அவளின் அழைப்புத் தொனியிலேயே அதன் அர்த்தத்தை உணர்ந்து கொள்பவன் எந்த எதிர் பேச்சும் இன்றி அந்த வரிகளைப் பாடத் தொடங்கி விடுவான்.
ஒரு நாள் அந்தி மாலை நேரம் மேக நங்கைகளின் அழகில் தன்னைத் தொலைத்திருந்த கதிரவன்.
அந்த ஆதவனையே தாங்கள் வெற்றி கண்ட களிப்பில் மின்னலும் காற்றும் போட்டி போட்டுக் கொண்டு அவ்விடத்தை குளுமையாக்க,
அந்த ரம்மியத்தை வார்த்தைகளால் வர்ணிக்கவும் முடியுமோ!
ராமனும் வேதவல்லியும் பக்கத்து ஊருக்கு வேலையாய் சென்றிருக்க ராதாவிற்குத் துணையாய் அவளது பாட்டியையும் கிருஷ்ணணை அவ்வப்போது வந்து பார்த்துக் கொள்ளுமாறு கூறிச் சென்றிருந்தனர்.
அவளைப் பார்க்க வந்தவன் வெளி வாசல் திண்ணையில் அமர்ந்து கொள்ள உள்ளிருந்து அவனுக்கான காபியோடு வந்தவள் அவனிடத்தில் கொடுத்துவிட்டு பெயரைக் கூறி அழைத்தது தான் தாமதம்,
“கண்ணா…”
அடுத்த நொடி சிறிதாய் ஒரு மென்னகை அவனிடத்தில் காபியை ஒரே மிடறில் விழுங்கியிருந்தவன் சற்றே மறைவாய் நின்றிருந்த அவளையே பார்த்தவாறு பாட ஆரம்பித்திருந்தான்.
“காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்
உனக்கே உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே
நீ இல்லாமல் எது நிம்மதி நீதானே என் சன்னிதி”
உலகின் மிகப்பெரும் வரம் இயற்கையும் இசையும்.மனித வாழ்வின் வரமும் சாபமும் இந்த சங்கீத ஞானம்.
மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குவது மட்டுமன்றி மனதின் வேதனையை நொடியில் கண்ணீராய் வெளிவர வைத்து கதறச் செய்து அடுத்த சில நிமிடங்களில் அதுவே மருந்தாகவும் மாறிவிடுகிறது.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
3 comments
💞💞இதம் தரும் பாடல் இதயத்தையும் கொள்ளை கொள்ளும்
Super💕
Nice