ராதை-1

by ஸ்ரீ
3 comments 517 views
A+A-
Reset

80களின் வாழ்க்கை என்பது வரம் அந்தக்கால கட்டத்தின் காதல் என்பது தெய்வீகம்.இது இரண்டையும் கடந்த தமிழ் திரைப்பட உலகம் என்பது..என்ன வார்த்தை கூறினால் சரியாய் இருக்கும்?நிச்சயம் தெரியவில்லை.

நான் அந்த காலத்தில் வாழவில்லை ஆனால் இளையராஜா எஸ்பிபி ஜேசுதாஸ் என்ற கலைஞர்கள்… இல்லை இல்லை இசை அசுரர்களால் கோடிமுறை வாழ்ந்து பார்த்தாயிற்று அந்த உலகில்.

இப்போது என் கற்பனையில் என்னோடு சேர்ந்து வாகர்களாகிய உங்களையும் 80களுக்கு அழைத்துச் செல்லலாம் என்று எண்ணுகிறேன்…நம் கண்ணனையும் இராதையையும் பார்த்து வருவதற்காக…

அக்காலகட்டத்தின் மிகப்பெரும் வரம் பாடல்களே.அதனால் ஒவ்வொரு அத்தியாயத்திலும் அநேக மக்களின் மனம் கவர்ந்த பாடல்களைக் குறிப்பிட்டு இருக்கிறேன்.

அத்தியாயம்-1

“பூவில் தோன்றும் வாசம் அதுதான் ராகமோ
இளம் பூவை நெஞ்சில் தோன்றும் அதுதான் தாளமோ
மனதின் ஆசைகள் மலரின் கோலங்கள்
குயிலோசையின் பரிபாஷைகள் அதிகாலையின் வரவேற்புகள்
புத்தம் புது காலை பொன்னிற வேளை”

அழகிய காலை வேளையில் அந்த அஹ்ரகாரமே அத்துனை அம்சமாய் காட்சியளித்தது.

அத்தனை வீடுகளிலும் வாசல் தெளித்து பெரிய பெரிய கோலங்கள் போடப்பட்டிருக்க கோவிலின் சுப்ரபாதத்தைக் கேட்டவாறே ஆண்கள் அவரவர் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து அன்றைய நாளிதழைப் புரட்டிக் கொண்டிருந்தனர்.

பின் எழுபதுகளுக்கே உரிய அந்த பெல்பாட்டம் முழுக்கால் சட்டையும் விசிறி போன்ற பெரிய காலர் வைத்த சட்டையுமாய் முகத்தில் பாதியை மறைத்ததைப் போன்றதான மூக்குக் கண்ணாடியைய சரி செய்தவாறே தன் ஸ்கூட்டரை உயிர்பித்து உள்ளே குரல் கொடுத்தார் ராமன்.

“வேதா நான் ஆபீஸ்க்கு சீக்கிரம் போணும்னு சொன்னேனோ இல்லையோ.. டைம் ஆறது பார்..”

“ஏன் ணா கத்துறேள் வந்துண்டு தானே இருக்கேன்..இந்தாங்கோ மதியத்துக்கு சாம்பார் சாதமும் கத்திரிக்காய் பிரட்டலும் வச்சுருக்கேன்..

சாப்பிட நேரமில்லனு வச்சுறாதேள்..எந்த வேலையா இருந்தாலும் சாப்ட்டு  பாருங்கோ..”

“சரி சரி டீ ஏதோ ஒருநாள் அப்படி ஆய்டுத்து..அதுக்காக தினமும் பாசுரம் பாடாதே..

ஆமா கிருஷ்ணா இன்னும் எழுந்துக்கலையா சத்ததையே காணுமே?”

“ம்ம் உங்க அருமை குழந்தை எப்போ இத்தனை சீக்கிரம் எழுந்துருக்கா?

இனி தான் போய் என் தொண்டை தண்ணி வத்துறஅளவு கத்தி எழுப்பணும்..”

“குழந்தையை ஏதாச்சும் சொல்லிண்டே இருக்காதே டீ..சரி நான் கிளம்புறேன்.

சாய்ந்திரம் வரும்போது உங்களுக்குப் பிடிச்ச நம்ம ஐயர் மாமா கடையில் சூடா பால்கோவா வாங்கிண்டு வரேன்..”,என்றவர் தன் ஸ்கூட்டரை கிளப்பிச் சென்றார்.

ரங்கனின் ஆத்மார்த்த காதலியான ஆண்டாள் அருள்பாலிக்கும் ஸ்ரீவில்லிபுத்தூரின் அஹ்ரகாரத்தில் அமைந்துள்ளது ராமன் வேதவல்லி தம்பதியரின் இல்லம்.

ராமன் வட்டாட்சியர் அலுவலகத்தில் முக்கிய பணியில் இருந்து வருகிறார். இந்த தம்பதியரின் ஒரே வாரிசு அவர்களின் செல்லக் கிருஷ்ணா.

“கிருஷ்ணா எழுந்துரு…காத்தால ஆனாலே இதே போராட்டமா போய்டுது..மணி என்ன ஆகுது பார்..”

“ம்மா எத்தனை தடவை உன்னண்ட்ட சொல்றேன்.. கிருஷ்ணா கிருஷ்ணானு கூப்டாதேனு..என் ப்ரெண்ட்ஸ் எல்லாம் கேலி பேசறா மா..”

“ஆமாம் டீ யாரு யாருக்காகவோ நாங்க வழக்கத்தை மாத்திண்டு போகணுமா..

எங்க பொண்ணை எங்களுக்கு பிடிச்சா மாதிரி தான் கூப்பிட முடியும்..”

“போம்மா..”

சலிப்போடே தன் படுக்கையை விட்டு எழுந்து பள்ளிக்குத் தயாராகச் சென்றாள் கிருஷ்ணா என்று பெற்றவர்களால் செல்லமாய் அழைக்கப்படும் ராதா.

பெயருக்கு ஏற்றாற் போன்றே சிறு வயது முதலே கடவுள் மீது பக்தி கடந்த காதல் அவளுக்கு உண்டு.

ஆனாலும் அந்த கிருஷ்ணா என்ற ஆண் பெயரைக் கூறித் தன்னை அழைப்பதை மட்டும் அவளால் ஏற்றுக் கொள்ளவே முடிந்ததில்லை.

ஒரு முறை தன் தகப்பனாரிடம் பெரிய வாதமே செய்தாள்.

ஆனாலும் அவரோ தன் பெண்ணின் வாதத்தைக் கண்டு சிலாகித்தவராய் அவளைத் தன் மடியில் அமர்த்தி,

“இதோ பாரு கிருஷ்ணா மா..கிருஷ்ணா அவதாரத்தை பத்தி எவ்ளோ தான் பேசினாலும் நமக்கு சட்டுனு தோணுறது என்னவோ இராதாவைப் பற்றி தானே..

அவாளோட அன்பு இன்னும் எத்தனை எத்தனை யுகம் கடந்தாலும் இந்த உலகத்துக்கு எடுத்துக்காட்டாகத் தான் இருக்கும்.

அப்பேற்பட்ட தூய்மையான அன்பு காரணமாவே அந்த கள்ளன் கிருஷ்ணனை நேக்கு ரொம்பப் பிடிக்கும்.

புள்ளை குழந்தை பிறந்தா கண்ணானு தான் பேர் வைக்கணும்னு நானும் உங்க அம்மாவும் முடிவு பண்ணிருந்தோம்.

ஆனால் பிறந்தது என் செல்லம் இராதாவோல்யோ அதான் அந்த கடவுள் கிருஷ்ணணோடா ஆத்மாவின் பாதியான ராதாவோட பெயரை உனக்கு வச்சுட்டோம்.

இருந்தாலும் எனக்கு என் கண்ணன் மேலுண்டான பித்து குறையவே மாட்டேன்றது.

அதனாலதான் அவன் பேரைச் சொல்லியே உன்னை கூப்பிடுறேன்..”,என்று நீண்டதொரு விளக்கத்தை அவளிடத்தில் வைக்க பாதி புரிந்தும் புரியாததுமாய் தலையாட்டிச் சென்றுவிட்டாள் இராதா.

இராதாவின் பெற்றோருக்கு மகள் தங்களின் இளவரசி என்பதே முதன்மையான எண்ணம்.

அப்படியே அவளை வளர்த்தனர்.இராமன் இதுவரை மகளை ஒருமுறைக் கூட அடித்தது இல்லை.வேதவல்லியையும் அடிக்க விட்டதில்லை.

ஆனால் பெற்றோரை மிஞ்சும் அளவிற்கு ராதாவும் அன்பை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் பெண் பிள்ளை அல்ல.

பெற்றோரின் நிலையறிந்து படிப்பிலும் சுட்டியாய் யாரையும் கவர்ந்து இழுத்துவிடும் பெண்ணாகவே வளர்ந்தாள்.

நேரமாவதை உணர்ந்து வேகமாய் குளித்து தன் சீருடை அணிந்து தன் தாயிடம் தலை வாருவதற்காக இரு ரிப்பன்களோடு வந்து அமர்ந்தாள்.

“ம்மா..மதியத்துக்கு என்ன சாப்பாடு வச்சுருக்க?”

“சாம்பார் சாதமும் கத்திரிக்காயும்.கண்ணன் விரும்பி சாப்பாடுவான் அவனுக்கும் ஒரு டப்பா தனியா  வச்சுருக்கேன்..மறக்காம கொடுத்துரு..”

“ம்ம்..கிருஷ்ணன்னு பெயர் இருக்குறவனை கண்ணானு கூப்பிடுறேள். என்னை கிருஷ்ணானு கூப்பிடுறேள்..ஏன் மா இப்படி..”

“அடிப் போடி..பெரிய கிழவியாட்டம் வாய் பேசாத.. ஸ்கூலுக்கு நேரமாகுதோல்யோ கிளம்பு போ.. கண்ணா இப்போ வந்துடுவான்..”

அதைக் கேட்டவளாய் அடித்துப் பிடித்து எழுந்தவள்,”ஆமா மா அவன் வரதுக்குள்ள வாசலில் போய் நிக்குறேன்னு சவால் விட்டுருக்கேன்..

இல்லைனா என்னை கிண்டல் பண்ணியே அவமானப்படுத்துவான்.” என்று வேக வேகமாய் தாய் வைத்திருந்த பொங்கலையும் கொத்சுவையும் உண்டு முடித்துவிட்டு அவசரமாய் போய் வாசலில் நிற்க அங்கு ஏற்கனவே சைக்கிளோடு நின்றிருந்தான் கிருஷ்ணன்.

கிருஷ்ணன் ஒரு வகையில் ராதாவின் தந்தைக்கு தூரத்து சொந்தம்.அவள் வீட்டை கடந்து இரு வீடு தள்ளியே அவன் அகம்.

ராதாவை விட ஆறுமாதம் சிறியவன்.சிறுவயது முதலே அருகருகே வளர்ந்ததாலேயே இருவருக்கும் நல்ல நட்பு இருந்தது.

இராதாவுக்கு அவனன்றி ஒன்றும் தெரியாது அதே போல் கிருஷ்ணணுக்கும் எதுவாயினும் முதலில் பகிர்ந்து கொள்ள அவள் தான் வேண்டும்.

பத்து வயது குழந்தைகள் தான் எனினும் அவர்களின் நட்பு பார்ப்பதற்கு அத்தனை ரம்மியமாய் இருக்கும்.

வேதவல்லியும் அவனைத் தன் பிள்ளை போலவே பாவித்து வளர்த்து வந்தார்.

கிருஷ்ணணின் குடும்பம் இராதையோடது போன்று சற்று வசதியானது அல்ல.அவனின் தந்தை கோவிலில் பட்டாச்சாரியாக பணிபுரிந்து வந்தார்.

அதில் வரும் வருமானமே குடும்பத்தை கவனித்துக் கொள்ள உதவியது.

ராமன் தன் மகளை சற்று நல்ல பள்ளியில் சேர்க்கலாம் என்று விரும்பிய போதும் கண்ணணோடு தான் பள்ளிக்குச் செல்வேன் என்று கதறி அழும் மகளை சமாதானப்படுத்தும் வழியறியாமல் அவனோடு அரசுப் பள்ளியிலேயே படிக்க வைத்தார்.

இதுவரை அத்தனை வகுப்பிலும் இருவரும் ஒரே பிரிவிலேயே படித்து வந்த நிலையில் இந்த வருடம் தனித்தனி வகுப்புகளுக்கு மாற்றப்பட்டிருந்தனர்.

முதல் நாள் பள்ளிக்குச் சென்று விட்டு வந்து ராதா படுத்திய பாட்டில் ராமன் பள்ளிக்குச் சென்று இருவரையும் ஒரே வகுப்பில் போடுமாறு கேட்க ஆசிரியையோ வேண்டுமென்று தான் இருவரையும் பிரித்துப் போட்டதாகவும் ஒன்றாக இருந்தால் இருவரும் வேறு யாருடனும் பழகுவதில்லை என்றும் கூறிவிட்டார்.

இரவு சாப்பிடாமல் உண்ணாவிரதம் எல்லாம் இருந்தவளை சமாதனப்படுத்தும் வழியறியாது பெற்றோர் விழித்து நிற்க விஷயம் அறிந்து கிருஷ்ணன் அவளை சந்திக்க வந்தான்.

“ராதா…”

“….”

“இங்க பாரேன் டீ..நான் சொல்றதை கேட்பியா மாட்டியா?”,என்னவென்பதாய் அவனை ஏறிட்டாள் ராதா.

“இப்போ ஏன் ஆத்துல எல்லாரையும் இப்படி பாடாபடுத்தற?”

“நோக்கு என் மேல அன்பே இல்ல டா கண்ணா..அதான் இப்படி கேட்குற..எனக்கு நீ தான பெஸ்ட் ப்ரெண்ட்..

நீ இல்லாம நான் எதோ தனியா இருக்குற மாதிரி இருக்கு தெரியுமா!

அழுகை அழுகையா வந்தது.. எனக்கு பிடிக்கவே இல்லை.. இனி நான் ஸ்கூலுக்குப் போக மாட்டேன்..”

“அசடாட்டம் பேசுறாய் ராதா..நான் சொல்றதை கொஞ்சம் கவனமா கேட்குறியா?”

“என்ன?”

“இந்த பூலோகத்துல இருக்குற ஒவ்வொரு ஜீவனும் அந்த கிருஷ்ண பரமாத்மாவை அவாளோட பரம்பொருளா பார்த்து சேவிச்சு அனுஷ்டானம் செய்து வழிபடுற அதே நேரம் மீரா அந்த கண்ணனை எப்படி பாவிச்சானு நம்ம செங்கமலப் பாட்டி சொன்ன கதை நீ கேட்ருக்கேதான?”

“ம்ம்..”

“ம்ம் அப்படி தான் நீயும் எனக்கு …நாம பக்கத்துல இருந்தாலும் இல்லைனாலும் எனக்கு எதுவும் வேணும்னா உன்னன்ட தான் வந்து நிப்பேன்..

அதே மாதிரி உனக்கு எதுவா இருந்தாலும் நான் தான் முதல் ஆளா வருவேன்..புரிஞ்சுதா?”

“நிஜமா?”

“நிஜமா..”

“சத்தியமா?”

“சத்தியமா..”

“என்னை விட்டுட்டு அந்த அம்புஜத்தோட சிநேகிதம் வளர்த்துண்டு வந்து நிக்கப்டாது சொல்லிட்டேன்..

ஒரு நாள் அவளோட சிகப்பு ரிப்பன் நன்னாயிருக்குனு பார்த்துட்டு தரேன்னு நான் கேட்டதுக்கு மாட்டேன்னு சொல்லிட்டா..உன்கிட்ட கூட சொன்னேனே?!”

“எப்படி மறப்பேன்..அவளே வந்து பேசினாக் கூட நான் பேச மாட்டேன்..மதியம் சாப்பாடு நேரம் கூட உன்கூட உக்காந்து தான் சாப்பிடுவேன்.

எப்பவும் போல நீயும் நானும் சேர்ந்து தான் ஸ்கூலுக்குப் போவோம்..போதுமா??இனி அழமாட்டேன்னு சொல்லு!”

அவனுக்காக வேகமாய் தன் கண்களைத் துடைத்தவள் சிரித்த முகத்தோடு,”இனி அழமாட்டேன் டா கண்ணா..”,என்றாள்.

இப்படியான இந்த நட்பு தான் இருவருக்கும் உலகம்.இருவரும் ஒருவருக்கொருவர் எத்தனை கேலி பேசிக் கொண்டாலும் தப்பி தவறிக் கூட மற்றவரிடம் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்கமாட்டார்கள்.

“என்னவோ பெருசா பேசினாய்..பார்த்தியா இன்னைக்கும் நான் தான் பர்ஸ்ட்..”

“போதும் போதும் உன் பெருமை..கையை நீட்டு..”

“எதுக்கு??”

“நீட்டு டா..”

உள்ளங்கையை முகர்ந்து பார்த்தவள் அவளது கையை அவன் மூக்கின் அருகில் வைத்து என்ன வாசனை வருகிறது எனக் கேட்க ஒன்றும் புரியாதவனாய்,

“மாமி பண்ண பொங்கல் வாசம் மூக்கைத் துளைக்குது..ஏன் கேட்குற?”

“ம்ம் சாப்டுருந்தா இதே மாதிரி உன் கையும் மணந்துருக்கும்..”

“அது..நான் பயத்தம்பருப்பு கஞ்சி சாப்ட்டேன் டீ..அப்பறம் எப்படி வாசனை வரும்?”

“என்னன்ட பொய் பேசாதே..முதல்ல வா வந்து சாப்பிடு..”

“அதெல்லாம் வேண்டாம் ராதா..வா போகலாம்..நாழி ஆய்டுத்து..”

“ம்மா..ம்மா இங்க வாயேன்..”

“ஏன் டீ இன்னும் நீ கிளம்பலையா?”

“ம்மா இவனுக்கு சாப்பிட எதாவது கொண்டு வந்து கொடு..நீ தான சொல்லுவ படிக்கப் போகும் போது வெறும் வயித்தோட போனா வாத்தியார் சொல்ற ஒண்ணும் மண்டையில ஏறாதுனு..

இவன் முகத்தை பார்த்தாலே தெரியுது பாரு சாப்டாம வந்துருக்கான்னு..இதுல பொய் வேற சொல்றான்..”

“ஏன்டா கண்ணா இதுவும் உன் ஆம் தான் டா..என்னன்ட கேக்க என்ன தயக்கம் நோக்கு..

இரண்டே நிமிஷத்துல எடுத்துண்டு வரேன்..அப்படி உக்கார் என்றவர் உள்ளே செல்ல கிருஷ்ணணோ அவளையே பார்த்திருந்தான்.

“என்ன?”

“எப்படி உனக்குத் தெரியும்?”

“நீ என் ப்ரெண்ட் டா உன்னைப் பார்த்தாலே நான் கண்டு பிடிச்சுருவேன்..”,பெருமை பீற்றினாள்.

ஆனால் ஒரு பத்து வயது குழந்தைக்கு இது சாத்தியமா என்றால் ஆச்சரியமே!

இருந்தும் அத்துனை ஆராய்ச்சி பண்ணும் பக்குவம் இல்லாததால் அவளைப் பார்த்தவாறே அவனுக்கு வைத்திருந்த உணவை இருந்த பசியில் நாலே வாயில் போட்டு அடைத்துக் கொண்டான்.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

3 comments

srichitra November 14, 2026 - 8:50 am

Very nice start.

suganyavel November 14, 2026 - 12:10 pm

Super💕

Padmasubramanian November 14, 2026 - 6:59 pm

♥️♥️ ராதே மனதில் நட்பு விருட்சமாய் வளர்ந்து உள்ளது. 🥰🥰

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode