எண்ணம்-7

by ஸ்ரீ
2 comments 299 views
A+A-
Reset

காலை எழுந்தவள் உணவு நேரத்துக்கு முன்பாகவே அறையை விட்டு வெளியே வந்தாள்.

சிறு தயக்கம் இருந்தாலும் ஆஷிக்கிற்காகவும் பாயல்காகவும் அதுல் வர்மாவை பார்த்து வரலாம் என்று முடிவு செய்தவள் நேராக அவர்கள் அறைக்குச் சென்றாள்.

அறைக்கதவு பூட்டியிருக்க லேசாய் தட்டிவிட்டு காத்திருந்தாள்.

“திறந்துதான் இருக்கு வாங்க..”,என்று பாயல் உள்ளிருந்து குரல் கொடுக்கக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றாள்.

அதுல் வர்மா அயர்வாய் கட்டிலில் சாய்ந்தவாறு அமர்ந்திருக்க பாயல் அவருக்கான உணவை கொடுத்துக் கொண்டிருந்தார்.

“வாம்மா.. ஏன் அங்கேயே நின்னுட்ட..”

“குட் மார்னிங் ஆன்டி.. அங்கிள் இப்போ எப்படி இருக்கீங்க?”

“ம்ம் பரவால்லம்மா.. காயம் தான் அப்பப்போ வலியிருக்கு. மத்தபடி ஒண்ணுமில்ல..”

“ஓ..நேத்து சாய்ந்திரம் வரலாம்னு இருந்தேன் சரி நீங்க ரெஸ்ட் எடுப்பீங்களேனு தான் டிஸ்டர்ப் பண்ணல.. நல்லா ரெஸ்ட் எடுங்க சீக்கிரமே சரியாய்டும்..”

“என்னவோ டா நேரமே சரியில்லையோனு தோணுது.. மனசே சஞ்சலமா இருக்கு.. சாய்ந்திரம் முடிஞ்சா கோவில் போய்ட்டு வரணும்.”

“கவலைபடாதீங்க ஆன்டி..நானும் கூட வரேன்..போய்ட்டு வரலாம்.ஏன் அங்கிள் எப்படி திடீர்னு விழுந்தீங்க..

எல்லாரும் இதை  தான் கேட்டுருப்பாங்க ஆனாலும் எதாவது உங்களுக்குத் தோணிச்சுனா சொல்லுங்க..”

“ம்ம் சரியா சொல்லத் தெரில டா..இன்னும் அந்த நொடியை நினைச்சா ஒருவித நடுக்கம் வந்துருது.

நான் சாதாரணமா தான் நடந்து வந்தேன். ஏதோ ஒரு உள்ளுணர்வுல ஒரு செகண்ட் நின்னு பின்னாடி திரும்பப் போனேன் அதுக்கப்பறம் எப்படி விழுந்தேன்னு இப்போ வர புரிய மாட்டேங்குது.”

“உள்ளுணர்வா?”

“ஆமா மா எதோ யாரோ நம்மளை கவனிக்குற மாதிரி பின் தொடர்ற மாதிரி..அப்படி தான் உணர்ந்தேன்.

ஆனா முத்து அந்த நேரத்துல யாருமே அங்க இல்லனு அடிச்சு சொல்றான்.

ஒண்ணுமே புரில..”,என்றவர் தலையை கைகளால் தாங்கிக் கொள்ள அதற்கு மேல் அவரை குழப்ப விரும்பாதவளாய்,

“சரி விடுங்க அங்கிள் எல்லாம் சரியாய்டும்..நீங்க ரெஸ்ட் எடுங்க..

நான் அப்பறமா வந்து உங்களைப் பார்க்குறேன்.. வரேன் ஆன்ட்டி..”, என்று கூறி வெளியே வந்தவளின் முகம் தீவிர யோசனையில் இருந்தது.

எதிரில் வந்தவரைக் கூட கவனியாது தன் போக்கில் அவளிருக்க அங்கு வந்த முத்து அவளை சிந்தனையிலிருந்து மீட்டிருந்தார்.

“என்ன மா எதோ ரொம்ப யோசனையில இருக்குற மாதிரி இருக்கு என்னாச்சு?”

“ஹாங்..சாரி நீங்க வந்ததையே பார்க்கல.. ஒண்ணும் பெருசா இல்ல அங்கிளை இப்போதான் பார்த்துட்டு வரேன். அவரு பேசினதையே நினைச்சுட்டு வந்ததுல…”

“ம்ம் அவரும் நேத்துல இருந்து அதையே தான் சொல்லிட்டு இருக்கார்..

ஆனா நான் பார்த்தப்போ அங்க யாருமே இல்ல.. வர வர இந்த வீட்ல நடக்குறதெல்லாம் ஒண்ணும் புரிய மாட்டேங்குது.”

“அதெப்படி நீங்க அவ்ளோ உறுதியா சொல்றீங்க ணா யாரும் இல்லனு?”

“என்னம்மா நீ ஐயா படியில உருள ஆரம்பிச்சப்போ நான் உள்ளே நுழைஞ்சேன் ஒரு வேளை யாராவது நின்னுருந்தா நான் பார்த்துருப்பேன் இல்ல கீழே இறங்கி தான் வெளில ஓடிருக்கனும்..

அதுவும் இல்லையா மாடிக்குப் போறதுக்காக மேல் படியில ஓடிருக்கணும்..

இது எதுவுமே இல்லையே மா.. தள்ளிவிட்டுட்டு மறைஞ்சு போறதுக்கு ஒண்ணு கடவுளோ இல்ல பேய் பிசாசோவா தான் இருக்கணும்..

ஆனா எனக்கு அதுல எல்லாம் நம்பிக்கை கிடையாது பாப்பா..”

“ம்ம் நீங்க சத்தம் கொடுத்த அப்பறம் யாரெல்லாம்ணா வந்தாங்க.. அதாவது யாரெல்லாம் வீட்ல இருந்தாங்க?”

“கல்யாணியும் இன்னும் ரெண்டு பேரும் சமையல்கட்டுல இருந்து ஓடி வந்தாங்க..

கல்யாணி தம்பி தோட்டத்துல இருந்து ஓடிவந்தான். ஐயாவை தூக்கி இதோ இங்க சோபா தான் படுக்க வச்சோம்.

சின்னம்மா இரண்டு பேரும் அங்க உள்ளே பூஜை ரூம்ல இருந்து வந்தாங்க..ஏன் மா கேட்குற?”

“இல்ல சும்மா தான்..அப்போ மாடியில இருந்து யாருமே வரல இல்லையா?”

“இல்ல மா..”,என்றவரின் பார்வை அவள் முகத்தை ஆராய்வதாய் தோன்ற சட்டென பேச்சை மாற்ற எண்ணியவளாய் சற்றே தாழ்ந்த குரலில் அவரிடம்.

“அண்ணா நான் ஒண்ணு கேட்பேன் தப்பா எடுத்துக்க மாட்டீங்களே?”

“என்ன மா இப்படியெல்லாம் கேட்குற சொல்லு..”

“இல்ல நேத்து ஆன்ட்டி பேய் அது இதுனு சொன்னாங்க அதுவும் மகிழனோட அப்பா..”

“அப்படியெல்லாம் சொல்லாத பாப்பா.. அவனை மாதிரி தங்கமான மனசு இந்த குடும்பத்துல யாருக்கும் வராது..”

“சாரி ணா தப்பா நினைக்காதீங்க..நான் அப்படி எதுவும் நினைக்கல ஆனா அவங்க ஏன் அப்படி சொன்னாங்க..

அவரோட இறப்பு யாரும் எதிர் பார்க்காததுனு சொன்னாங்களே..”

“ம்ம் இந்த குடும்பத்தோட கருப்பு நாள் அது.. அந்த செய்தியை கேட்டு பெரிய்யயாவும் அம்மாவும் இருந்த கோலம் இன்னும் என் கண்ணுக்குள்ளேயே இருக்கு..

அதைவிட மகிழன் தம்பியோட அம்மா..அந்த பொண்ணு முகத்தை பாக்குற தைரியம் கூட எனக்கு இல்ல..

என்னதான் அவன் வர்மா குடும்பத்தோட மூத்த வாரிசா இருந்தாலும் என்னோட நல்ல சிநேகிதன்.. வேலைக்காரனா ஒரு நாளும் என்னை பார்த்ததில்ல அவன்.

அவன் இழப்பு என்னையே அத்தனை பாதிச்சுது னா மத்தவங்களை பத்தி கேட்கவா வேணும்..

மகிழன் தம்பிக்கு 15 வயசு அப்போ.. இரண்டும் கெட்டான் பருவம்.. பெரியய்யா தான் தம்பியை முழுசா மீட்டெடுத்தார்.

ம்ம் கடவுளுக்கு இரக்கமே இல்லையோனு முதல் முதலா அன்னைக்குத் தான் தோணிச்சு.”

“எனக்கு அவங்களைப் பத்தி சொல்றீங்களா?மகிழன் கிட்ட கேட்டா எனக்கே நியாபகம் இல்லாத விஷயத்தை கேட்டா நான் என்ன சொல்றதுனு சொல்றான்.”

அதற்குள் அவரை யாரோ அழைக்கும் சத்தம் கேட்க ஷியாமாவை தோட்டத்தில் காத்திருக்குமாறு கூறிவிட்டு பத்து நிமிடத்தில் வருவதாய் சொல்லிச் சென்றார்.

தோட்டத்தில் இருந்த பென்ஞ்சில் அமர்ந்தவள் ஏதேனும் விவரம் கிடைக்குமா என்ற சிந்தனையிலேயே இருக்க அருகில் கேட்ட காலடி சத்ததில் நிமிர்ந்து பார்த்தாள்.

அங்கு மகிழனை கண்டவள் சிநேகப் புன்னகையோடு எழுந்து நின்றாள்.

“ஹாய் குட் மார்னிங்..”

“குட் மார்னிங் ஷியாமா.. என்ன காலையிலேயே இங்க வந்துட்டீங்க.. சாப்பிட கூட இல்ல போல..”

“ம்ம் உங்க சித்தப்பாவை பார்த்துட்டு வந்தேன் அப்படியே ஏதேதோ யோசனை அதுமட்டுமில்லாம பெருசா பசி எதுவும் இல்ல..அதான்.”

“ம்ம்..முத்து அண்ணா என்ன சொல்றார்?”

“உங்க சித்தப்பா இன்னமும் யாரோ அங்க அந்த சமயத்துல இருந்த மாதிரி தான் சொல்றார். ஆனா முத்து அண்ணா யாருமே இல்லனு சொல்றார்.”

“மே பி முத்து அண்ணா சொல்றது தான் உண்மையா இருக்கலாம் இல்லையா?”

“வாய்ப்பு இருக்கு..ஆனா எனக்கு எப்பவுமே செல்ப் இன்ஸ்டிங்கிட் மேல ரொம்ப நம்பிக்கை உண்டு மகிழன்.

நம்ம மனசு எப்பவுமே நமக்கு சரியான அறிகுறிகளைத் தான் காட்டும்னு நம்புவேன்.”

“சோ?”

“சோ உங்க சித்தப்பாவோட உள்ளுணார்வுப் படி நிச்சயம் அங்க யாரோ இருந்துருக்காங்க.

அவர் என்கிட்ட சொல்லும் போது குழப்பத்துல சொன்ன மாதிரியே இல்ல.. ரொம்பவே தெளிவா அவர் பீல் பண்ணதை அப்படியே சொன்னார்.

நம்மளை ஒருத்தங்க பார்வையால பின் தொடர்ந்தாலே அதை உணர்ற சக்தி நமக்கு இருக்கும் போது… இது பொய்யாகுறதுக்கு வாய்ப்பு இல்ல மகிழன்.”

“எல்லாம் சரி தான் ஆனா அத்தனை சீசீடிவியும் செக் பண்ணி பார்த்தாச்சு யாரும் வந்து போனதற்கான அறிகுறி இல்ல.

அன்னைக்கு முழு நாளும் எல்லா காட்சிகளும் பதிவாய்ருக்கு.அப்படி இருக்கும் போது..ஹவ்??!!”

“நீங்க வீட்டுக்கு வெளியே சொல்றீங்க.. நான் வீட்டுக்குள்ள சொல்லிட்டு இருக்கேன்..”

“என்ன சொல்ல வர?!”

“ஒரு வேளை உங்க அத்தை சொன்ன மாதிரி அமானுஷ்யம் எதாவது??”,

“ஜஸ்ட் ஷட் அப் ஷியாமா படிச்ச பொண்ணு மாதிரி பேசு..அவங்க தான் ஏதேதோ உளர்றாங்க னா..

இந்தகாலத்துல நீ கூட இதெல்லாம் நம்புறியா?அதுவும் ஒரு அதிகாரியா இருந்துட்டு எப்படி உன்னால இவ்ளோ சில்லியா யோசிக்க முடீயுது..

ரியலி டின்ட் எக்ஸ்பெக்ட் திஸ் ப்ரம் யூ..”, என்றவன் அவள் அழைப்பைக் கூட காதில் வாங்காமல் அங்கிருந்து நகர்ந்திருந்தான்.

அவன் அங்கிருந்து செல்வதற்கும் முத்து அவளை நோக்கி வருவதற்கும் சரியாக இருந்தது.

“என்னாச்சு பாப்பா தம்பி கோவமா போற மாதிரி இருக்கு?”

“ஆங்ங் அதெல்லாம் ஒண்ணுமில்லணா சின்ன வாக்குவாதம்.. வேற ஒண்ணும் இல்ல.. சரி நீங்க உக்காருங்க..”

அங்கிருந்த பௌன்ஞ்சில் அவர் அமர்ந்த பின் எதிர் இருக்கையில் அமர்ந்தாள் ஷியாமா.

“உன்னை பார்க்கும் போதெல்லாம் எனக்கு ஒண்ணு தோணுது பாப்பா..”

“என்ன ணா?”

“இல்ல உன் நடை பழகுற விதம் எல்லாம் அப்படியே போலீஸ் மாதிரி இருக்கு.. ஒரு தனி கம்பீரம் இருக்கு மா உன்கிட்ட..”

“ஹா ஹா நான் வீட்டுக்கு ஒரே பொண்ணு அதனால கொஞ்சம் பையன் மாதிரி வளர்த்துட்டாங்க..

என் ப்ரெண்ட்ஸ் கூட இப்படிதான் சொல்லுவாங்க”,என்றவள் இயல்பாய் முடித்துக் கொள்ள பதிலுக்கு புன்னகைத்தவர் அமைதியாய் இருந்தார்.

“சொல்லுங்க ணா மகிழன் அப்பாவை பத்தி கேட்டேனே..”

“ம்ம் என்னத்தை சொல்றது..நான் இந்த வீட்டுக்கு வந்த அப்போ 27 வயசு அப்போ அவனுக்கு கல்யாணம் முடிஞ்சு பத்து பதினைஞ்சு நாள் இருக்கும்.

சிலரை பார்த்தவுடனேயே நமக்கு ஒவ்வொரு விதமான உணர்வு வந்துரும்ல அப்படிதான் எனக்கும் அவனைப் பார்த்தவுடனே ஒரு நட்புணர்வு இருந்தது.

ஆச்சரியம் என்னனா அவனுக்கும் அப்படியே தோணிணது தான்.

இதோ இந்த தோட்டத்துல தான் செடிக்குத் தண்ணி விட்டுட்டு இருந்தேன்.

அவன் முகமே அவ்ளோ சோகமா இருந்தது.நான் கூட நினைச்சேன் என்னடா இது கல்யாணம் ஆகி பத்து நாள் தான் ஆகுதுனு சொன்னாங்க முகத்துல ஒரு பூரிப்பு கூட இல்லையேனு.

யோசனையோடேயே அவனைப் பார்த்துட்டு இருந்தேன் என்னை கவனிச்சவன் முகம் உடனே அப்படி ஒரு சிரிப்புக்கு மாறிடுச்சு.

ரொம்ப இயல்பா பக்கத்துல வந்தவன் என்னைப் பத்தின விவரம் எல்லாம் கேட்டுட்டு தோள் தட்டிட்டு போனான்.

எனக்கு ஆச்சரியம் தாங்கல என்னடா இது ஜமீன் குடும்பத்து வாரிசு நம்மகிட்ட இப்படி பேசுறாரேனு நினைச்சேன்.

அப்பறம் என்கூட வேலை செஞ்சவங்க எல்லாம் அவனைப் பத்தி அவ்ளோ உயர்வா சொன்னாங்க.

எல்லாம் நேத்து நடந்த மாதிரி அப்படியே மனசுல இருக்கு..அதுக்கப்பறம் பெரியய்யா அவனையும் தியாம்மாவையும் ஒரு மாசத்துக்கு வெளிநாடுக்கு அனுப்பி வச்சுட்டார்.

என்ன இருந்தாலும் புதுசா கல்யாணம் ஆனவங்களுக்கான தனிப்பட்ட நேரம்னு வேணும் இல்லையா..

சரியா ஒரு மாசம் கழிச்சு வந்தவங்களைப் பார்த்தப்போ பெரியய்யாக்கும் அம்மாக்கும் அப்படி ஒரு சந்தோஷம் ஏன்னா இரண்டு பேரோட முகமும் அவ்ளோ சந்தோஷமா மனமொத்த தம்பதியா இருந்தாங்க.

சொன்னா நம்ப மாட்ட வீட்ல வேலை செய்யுற எல்லாருக்கும் எதோ ஒரு பொருள் வாங்கிட்டு வந்துருந்தார்.

சாந்திதேவி அம்மா கூட அவன்கிட்ட சண்டை போட்டாங்க எதுக்கு அண்ணா வேலைகாரங்களுக்கு எல்லாம் வாங்கிட்டு வந்தனு தியாம்மா தான் ஆசைப்பட்டதாகவும் அது மட்டுமில்லாம இவங்க எல்லாருமே நம்மளில் ஒருத்தங்க தான்னு சொல்லி எல்லாத்தையும் அத்தனை சந்தோஷமா கொடுத்தான்.

அதுனாலேயே அவங்க ரெண்டு பேரையும் எனக்கு ரொம்ப பிடிச்சு போக அவங்களுக்கு எது வேணும்னாலும் நான் தான் முதல் ஆளா போய் நின்னு செய்வேன்.அப்படியே வளர்ந்தது தான் எங்க நட்பு.

தியாம்மாவும் என்னை அவங்க கூடப் பிறக்காத அண்ணணாதான் பார்த்தாங்க..

இப்படி எல்லாமே நல்லா போய்ட்டு இருந்நது.வீட்ல ஒரு ஒருத்தருக்கா கல்யாணம் ஆச்சு மகிழன் தம்பி பிறந்தான்.

அவனை முழுக்க முழுக்க என் கையில போட்டு நான் தான் வளர்த்தேன்.

பெரியய்யாக்கு அவ்ளோ சந்தோஷம் அதை இரட்டிப்பாக்குற மாதிரி வீட்டோட மாப்பிள்ளைங்களே கிடைச்சாங்க..

பொண்ணுங்க வாழ்க்கையில எந்த பிரச்சனையும் வராம இருக்கணும்னு பிஸினஸை பிர்ச்சு கொடுக்க முடிவு பண்ணார்.

அதுபடி தன் இரண்டு பசங்களும் கார்மென்ட்ஸ் பிஸினஸையும் மருமகன்கள் மார்பிள் பிஸினஸையும் பார்த்துக்குற மாதிரி பண்ணிட்டு மூத்த பிள்ளையான அமித் வர்மாவை வர்மா க்ரூப்க்கு எம் டி ஆகினார்.

இரண்டு மூணு வருஷம் பெருசா எந்த பிரச்சனையும் இல்ல அதுக்கப்பறம் சின்ன சின்ன சண்டைகள் வர ஆரம்பிச்சுது.

இருந்தாலும் பெரியவங்க இருந்ததுனால எல்லாமே பேசி தீர்த்துகிட்டாங்க.

பொதுவா எந்த விஷயமுமே வீட்டு ஆட்களைத் தாண்டி வெளில வராது.அமித் சிநேகிதன்ங்கிற முறையில சில நேரம் என்கிட்ட மனசுவிட்டு பேசுவான்.

அவன் சாகுறதுக்கு முந்தின நாள் கூட இராத்திரி ரொம்ப நேரம் என்கிட்ட பேசினான்.

மனசே ஒரு மாதிரி இருக்கு டா முத்து.எதோ ஒண்ணு தப்பா நடக்கப் போகுதுனு தோணுது.

தியா பாவம் டா ரொம்பவே கஷ்டப்பட்டுட்டா இனியாவது அவளும் மகிழனும் சந்தோஷமா இருக்கணும்.

அது மட்டும் தான் இந்த ஜென்மத்தில் எனக்கான ஒரே ஆசை.. அது இதுனு என்னவோ பேசினான்.

ஒரு கட்டத்துக்கு மேல அவனைத் திட்டி தான் தூங்கவே அனுப்பினேன்.

மறுநாள் காலையிலேயே கார்மென்ட்ஸ் குடோன்ல தீ பீடிச்சுருச்சுனு போன் வரவே அடிச்சு பிடிச்சு காரை எடுத்துட்டு ஓடினான்.

டிரைவர் எப்பவுமே ஒன்பது மணிக்குத் தான் வருவான்..

விஷயம் அவசரம்ங்கிறதுனால நானே பார்த்துக்குறேன்னு சொல்லிட்டு போய்ட்டான்.

குடோன் அப்போ கொஞ்சம் ஊருக்கு வெளியே தான் இருந்தது.அப்படி இவன் வேகமா போனப்போ எதிரில வந்த லாரி…

ஒரு மணி நேரத்துல வந்த அந்த போன் குடும்பத்தையே புரட்டி போட்டுருச்சு..

பெரியய்யாவை கூட்டிகிட்டு நானும் சின்னவங்க ரெண்டுபேரும் ஓடினோம்.நாங்க போறதுக்குள்ளயே எல்லாம் முடிஞ்சுருந்தது.

ஆஸ்பத்திரில வச்சு பெரியய்யா அழுத அழுகை என் ஜென்மத்துக்கும் நான் மறக்க மாட்டேன்.

லாரி ட்ரைவரைப் பிடிச்சு விசாரிச்சதுல நல்ல தண்ணியடிச்சுட்டு வண்டி ஓட்டிருக்கான்.

ஆத்திரம் தீர அடிச்சேன் அவனை..கொன்னுட்டு ஜெயிலுக்கு போற அளவுக்கு ஆத்திரம் எனக்கு..

எல்லாருமா சேர்ந்து பிரிச்சு விட்டாங்க.. கண்ணை மூடித் திறக்குறதுக்குள்ள வீட்ல போட்டோவா தொங்கினான் என் சிநேகிதன்.

அந்த விஷயத்தை கேட்டு அப்படியே உக்காந்தவங்க தான் தியாம்மா ஒரு சொட்டு கண்ணீர் வரல மணிக்கணக்கா எத்தனையோ பேர் என்னென்னவோ செஞ்சும் சிலையா உக்காந்துருந்தாங்க..

எல்லாம் முடிஞ்சு அவனை வீட்டுக்கு கொண்டு வந்தப்போ பித்து பிடிச்ச மாதிரி எழுந்து ஓடினாங்க…

எதிரிக்குக் கூட வரக் கூடாதுனு நினைப்போமே அந்த மாதிரியான கொடுமை தியாம்மாக்கு நடந்தது.

மகிழன் தம்பி நடக்குறது புரிஞ்சும் புரியாததுமா அரண்ட முகத்தோட நின்ன கோலம் செத்தாலும் மறக்காது எனக்கு..

இப்படி யாருமே எதிர்பார்க்காம நடந்த ஒரு இறப்பு இத்தனை வருஷமா இல்லாம அவன் ஆவியா வந்து இங்க எல்லாரையும் கொல்றானாம்.

அவனுக்கு அடுத்தவங்களை வாழ வைக்கத் தான் தெரியுமே ஒழிய கெட்டது பண்ண தெரியாது மா..

அப்படி இருக்கும் போது தன் குடும்பத்தையே அவன் அழிக்க நினைப்பானா..

ம்ம் மனுஷனோட நாக்கு நரம்பில்லாம எப்போ எப்படி பேசும்னு யாருக்கும் தெரியாது வேற என்னத்தை சொல்றது..”, என்றவர் கண்களில் வழிந்த நீரை அழுந்தத் துடைத்தவாறு ஷியாமாவிடம் விடைப் பெற்றுச் சென்றார்.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

2 comments

srichitra November 4, 2026 - 11:24 am

Very nice

Padmasubramanian November 4, 2026 - 7:00 pm

லாரி ஏத்தி கொன்னது யாரோ 🤔🤔

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode