ஞாயிற்றுக் கிழமை அதிகாலையிலேயே கோட்டை சொந்த பந்தங்களால் நிறைந்து வழிந்தது.பத்து மணியளவில் மூகூர்த்தம் குறிக்கப்பட்டிருக்க காலையில் இருந்தே வேலைகள் பரபரப்பிற்கு குறைவில்லாமல் நடந்து கொண்டிருந்தது.

தனதருகில் உறங்குபவனையே விழியகற்றாமல் பார்த்திருந்தாள் ஏழிசை.தற்செயலாய் புரண்டு படுத்தவன் தன்னையே பார்த்திருப்பவளைக் கண்டு தூக்கம் கலைந்தான்.

“என்ன மாமி காலையிலேயே சைட் அடிச்சுட்டு இருக்க?”,என்றபடி வயிற்றைத் தடவிக் கொடுத்தான்.

“…”

“ஒரு வேளை ரிசெப்ஷன் நியாபகம் வந்துருச்சோ?”,என்றவனின் கேள்வியில் முகம் சிவிந்து விட்டிருந்தது ஏழிசைக்கு.

“உனக்கு இன்னைக்கு சீமந்தம், நீ என்ன கல்யாண பொண்ணு மாதிரி வெட்கப்பட்டுட்டு இருக்க டி..”,என்றவனின் பார்வை மொத்தம் அவளின் இதழின் மீதே நிலைத்திருந்தது.

“வீரா நேக்கு ஒரு முத்தம் வேணும்..”,என்றவளைப் பார்த்து விழி விரித்தான் வீரேந்திரன்.என்ன தான் அந்யோந்நியமான கணவன் மனைவியாய் இருவரும் இருந்தாலும் கூடல்களில் திகட்ட திகட்ட களித்திருந்தாலும் அவளாக வாய் திறந்து எதுவுமே கேட்டதில்லை இத்தனை மாதங்களில்.

ஒருவரின் கண்ணசைவு மற்றவருக்கு தேவையை உணர்த்தி விடும் பொழுது வார்த்தைகளுக்கான அவசியம் என்பது இல்லாமலேயே இருந்தது.

இன்று அவளாகவே இப்படி கேட்பது வீரேந்திரனுக்கு ஆச்சரியத்தோடு அதிகமாய் பிடித்திருந்தது.உதட்டில் ஒட்டிய புன்னகையோடு மறுப்பேச்சின்றி இதழோடு தன் இதழை சேர்த்திருந்தான்.

“இதைக் கேட்க உனக்கு இத்தனை மாசமா டி..”

“நீங்க இன்னும் கூட கேட்டதில்லை.”என்றவளுக்கு முகமெல்லாம் வெட்கம் விரவிக் கிடந்தது.

“மாமி..காலையிலேயே ஏன் என்னை சீண்டுற..”

“…”

“ரொம்ப சந்தோஷமா இருக்கியா?”

“ம்ம்..”

“என்ன விஷயம்?!”

“நேத்து பாட்டியோட பேசிண்டு இருந்தேன்..”,என்றவளுக்கு முந்தைய நாளின் நினைவுகள் வந்தது.

“எப்படியிருக்க தங்கம்..டாக்டர்கிட்ட ஒழுங்கா போறியா?”

“மாசாமாசம் கரெக்டா போயிடுவோம் பாட்டி..உங்க பேரன் இல்லைனா விடுவாரா!”

“அதைச் சொல்லு..என் பேரன் முகமெல்லாம் அவ்வளவு சந்தோஷம்.கடவுள் யாருக்கு யார் வரணும்னு சரியாதான கணக்கு போடுறார்.”

“உண்மை தான் பாட்டி எதிர்பாராம நடந்த கல்யாணம் எங்களோடது ஆனாலும் என்னை நன்னா கவனிச்சுக்குறார்.என் மேல உயிரையே வைச்சுருக்கார்.”,என்றவளின் முகத்தில் பெருமைக் கொட்டிக் கிடந்தது.

“போன தடவை உன்னைப் பார்க்க வந்தப்போ அவன் என்கிட்ட பேசினான்.”

“….”

“சின்னதில் இருந்தே அவனுக்கு என்னோட ஒட்டுதல் அதிகம்.வீட்டிற்கு முதல் பேரன் வேற கேட்கவே வேண்டாம்.எல்லாருக்கும் செல்லம் அவன்.

வளர வளர வேலை சூழல்னு எல்லாம் மாறிப்போச்சு.ஆனாலும் என் மேல பிரியம் மட்டும் எப்பவும் உண்டு.சின்ன வயசுல அவன் ரொம்ப சந்தோஷமா இருந்தா உடனே வந்து என் மடியில் படுத்துக்குவான்.எதுவும் பேச மாட்டான்.நானும் எதுவும் கேட்க மாட்டேன்.

ஆனால் அவனோட அந்த செய்கையே எனக்கு உணர்த்திடும்.கிட்டத்தட்ட எத்தனையோ வருஷத்துக்கு அப்பறம் போன தடவை நான் வந்தப்போ என் மடியில் படுத்துக்கிட்டான் என் பேரன்.”

“!!!!!”

“நீ அவன் வாழ்க்கையில் வந்தது அவனுக்கு அப்படி ஒரு சந்தோஷம்.சந்தர்ப்பத்தால பண்ணின கல்யாணமா இருந்தாலும் அவன் உன்னை அப்படி ஒரு நிமிஷம் கூட நினைக்கல.மனசார உன்னோட வாழ்க்கையை வாழணும்னு தான் நினைச்சான்.

“என்ன கண்ணு கல்யாண வாழ்க்கையைப் பத்தி எதுவும் குழப்பமா?”

“அதெல்லாம் இல்ல பாட்டி ஏன் அப்படி கேக்குறீங்க?”

“இத்தனை வருஷத்துக்கு அப்பறம் என் பேரனுக்கு என் மடி தேடுதே..”

“எப்போதும் போல சந்தோஷமா தான் இருக்கேன் அதான் வந்தேன் பாட்டி..”

“இந்திரா கண்ணு..”

“ஆமா பாட்டி..இசை ரொம்ப நல்ல பொண்ணு பாட்டி..அவசரத்தில் கட்டின தாலியானாலும் அவ அதை உணர்ந்து ஏத்துக்க முயற்சி பண்றா..எல்லாரோடவும் நல்லா பழகுறா.எல்லாத்துக்கும் மேல என்னை ரொம்பவே தேடுறா அதெல்லாம் எனக்கு பிடிச்சுருக்கு பாட்டி..”

“…”

“என் மனசுலேயும் கல்யாணம் பத்தியெல்லாம் பெருசா யோசிச்சது இல்லாததுனால அவளை அவ குணத்துக்காகவே அப்படியே ஏத்துக்க தோணுது.கடைசி வரைக்கும் அவளை சந்தோஷமா பார்த்துக்கணும்.

அவ அப்பாவை நினைச்சு வருத்தப்படுறா நிறையவே ஆனாலும் எனக்காக எல்லாம் மறைச்சு வைச்சுக்குறா.அவளுக்கு ஆறுதல் சொல்லத் தெரியல ஆனா நான் இருக்கேன்னு உணர்த்தனும்னு தோணுது பாட்டி.

என் தொழில் வழக்கம் பத்தியெல்லாம் அவ நினைக்க கூட மாட்றா..”

“இந்திரா கண்ணு..பொண்ணுங்களுக்கு வாழ்க்கையில் ஒரே விஷயம் தான்.கல்யாணம் பண்ணி தனக்கு புருஷனா வர்றவன் தன்னை பத்து சதவீகிதம் நல்லா பார்த்துக்கிட்டாலே அவங்க அவனையும் அவனைச் சார்ந்தவங்களையும் நூறு மடங்கு அக்கறையோட பர்த்துப்பாங்க.

நீ எந்த நிலைமையிலேயும் அவளை கண்கலங்காம மனசு நோகாம பார்த்துக்கோ உன்னை சுத்தி இருக்குற எல்லாத்தையும் அவளே பார்த்துப்பா தங்கம்.”

“ஐ லவ் ஹெர் பாட்டி..இது நான் செத்தாலும் மாறும்னு தோணல..”

அவர் கூறியதெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ஏழிசைக்கு விழித்திரை நீரால் மறைந்தது.

“நான் கூட நினைச்சேன் என்னடா கல்யாணம் ஆன இரண்டாவது நாளே இவ்வளவு பேசுறானேனு ஆனால் உண்மையாவே இன்னைக்கு உங்க இரண்டு பேரையும் பார்க்கும் போது ஒருத்தருக்காகவே இன்னொருத்தரை படைச்சுருக்கார்னு தோணிச்சு.

பொதுவா ஒரு வீட்டோட வயசானவங்க தான் குடும்பத்துக்கு முன்னுதாரணமா இருப்பாங்க.ஆனால் நம்ம குடும்பத்துக்கே பெரிய முன் மாதிரி நீயும் உன் புருஷனும் தான்.என்னைக்கும் இப்படியே இருக்கணும் நீங்க.”

என்று கூறிவிட்டு தன்னவனை இன்னுமாய் நெருங்கி படுத்துக் கொண்டாள் ஏழிசை.

“பார்த்து டி..”

“தேங்க்ஸ் வீரா..”

“பைத்தியம்..”

“வீரா மேல..”

“சரி தான் இப்போ என்ன எழுந்துக்க போறாமா இல்ல..நீ வேற எதோ ப்ளான்ல இருக்குற மாதிரி தெரியுது.”

ஒன்றும் கூறாமல் அமைதியாய் இருந்தவளின் விழியே ஆயிரம் பாஷைகள் கூறியது.தன்னவளின் தேவை புரிந்தாலும் வயிற்றைப் பார்த்தவனுக்குத் தயக்கத்தையும் மீறி தன்னவளை அப்படியே விட மனமில்லாமல் போனது.

சிறிது நேரத்தில் எல்லாம் விலகியவன் அவளது நலனையே சோதிக்க அவளோ அப்படியே கண்ணயர்ந்து விட்டிருந்தாள்.

ஒன்பது மணியளவில் அறைக்குள் வந்தவன் தங்க சரிசேலையில் வைரங்கள் நிறைத்திருக்க தாய்மையின் வனப்போடு அழகாய் நின்றிருந்த தன்னவளை தெவிட்ட தெவிட்ட கண்களுக்குள் நிரப்பிக் கொண்டான்.

“ஓகே தான நீ?”

“ம்ம்..”

“சாப்ட்டியா?வேணி கொண்டு வந்து கொடுத்தாளா?”

“ம்ம்..”

“ஏன்டி காலையில் இருந்து என்னை சோதிக்குற..என்னாச்சு உனக்கு?”

“தெரியல வீரா..”,என்றவள் அவனது தோள் சாய்ந்து கொண்டாள்.

அதற்குள் கதவு தட்டப்பட அவளை அமர வைத்துவிட்டு கீழே சென்றான் வீரேந்திரன்.

விஷால் தன் தந்தையோடு உள்ளே நுழைய திவ்யாவைப் பார்த்தவனின் விழி விரிந்தது.

அழகிய பச்சை வண்ண பட்டுப்புடவையில் அளவான வைர நகைகளோடு தலை நிற மல்லியும் எடுப்பான ஒப்பனையுமாய் வந்து நின்றவளை விட்டு விழி நகர்த்த முடியாமல் தவித்தான்.

“விஷால் அப்பா இங்க தான் இருக்கேன்னு நியாபகம் இருக்கட்டும்”,என்ற சேகரின் பேச்சில் தன்னைச் சரிபடுத்திக் கொண்டவன் திவ்யாவை பார்த்து புன்னகைத்தான்.

“ஹாய் அங்கிள் எப்படியிருக்கீங்க?”

“நல்லாயிருக்கேன் டா நீ எப்படியிருக்க?”

“பைன் அங்கிள் வாங்க உள்ளே போலாம்.அம்மா அப்பா உங்களைத் தான் எதிர்பார்த்துட்டு இருக்காங்க.வாங்க விஷு”,என்றவளுக்கு குரல் எழும்பவில்லை.

தாய் தந்தை அறையில் அவர்களை அமர்த்திவிட்டு அண்ணனைத் தேடிச் சென்றாள்.

“அண்ணா அவரும் அங்கிளும் வந்துட்டாங்க அம்மா அப்பா ரூமில் பேசிட்டு இருக்காங்க.”

“வரேன் திவி நீ போய் அவங்களை கவனி”,என்றவன் அடுத்த ஐந்து நிமிடத்தில் அங்கு இருந்தான்.

“வாங்க..”,என்றபடி உள்ளே நுழைந்தவனைப் பார்த்து விஷால் சிநேகமாய் சிரிக்க சேகர் கை கூப்பினார்.

அனைவரும் பொதுவாய் பேச்சைத் தொடங்க திவ்யா தான் பதட்டத்தோடு நின்றிருந்தாள்.அவளை கவனித்தவனாய்,

“திவி நீ மாப்பிள்ளைக்கு வீட்டை சுத்தி காட்டிட்டு இரு நாங்க வந்துறோம்”,என்ற அண்ணனைப் பார்த்தவளின் விழிகளில் அப்படியாய் ஒரு மகிழ்ச்சி.

“சரி ண்ணா “,என்றவள் விஷாலோடு நேராய் சென்றது ஏழிசையை காண.

“அண்ணி..”

“வா திவி”,என்றவள் திரும்ப வாசலில் இருந்த விஷாலைப் பார்த்து புன்னகை பெரிதானது.

“அண்ணா வாங்க எப்போ வந்தீங்க..எப்படியிருக்கீங்க?!”

“நல்லாயிருக்கேன் இப்போ தான் வந்தேன்..நீங்களும் ஜுனியரும் எப்படியிருக்கீங்க?”

“நல்லாயிருக்கோம் ணா..உட்காருங்க.,திவி எதுவும் சாப்பிட கொடுத்தியா?”

“ஐயோ மறந்துட்டேன் நான் போய் எடுத்துட்டு வரேன் அண்ணி..”

“அண்ணா ரொம்ப சந்தோஷம் உங்களைப் பார்த்ததுல.”

“எனக்கும் டா அதை விட இந்த வீட்டோட மேலிடம் என்னை மாப்பிள்ளைனு சொன்னதும் தான் திவி முகமே சரியாச்சு..”

“அவரை கிண்டல் பண்ணாதீங்க ணா..”

“ஐயோ இப்படியெல்லாம் போய் வெளில சொல்லிறாத டா ஏழிசை.நான் பாவம்.”

திவ்யாவும் வந்துவிட மூவருமாய் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

“ரவி இதோட மூணாவது புடவை கட்றேன் ப்ளீஸ் ரவி..”

“நான் என்ன பண்றது பேபி..கை வைச்சுட்டு சும்மா இருக்கணும்னு தான் நினைக்குறேன்..”

“நீங்க நினைச்ச வர போதும் நான் போய் அத்தைகிட்டேயே கட்டிக்குறேன் விடுங்க..”

“அதெல்லாம் முடியாது..பேபி..”

“ம்ம்..”

“நமக்கும் ஜுனியர் வேண்டாமா?”

“ரவி!!!”

“என்ன யாளு நிஜமா தான் கேட்குறேன்..உனக்கு இப்போதைக்கு வேண்டாம்னாலும் சொல்லு..ஒண்ணும் ப்ராப்ளம் இல்ல..

எனக்கு அண்ணியை பார்க்கும் போதெல்லாம் உன்னை எப்போ அப்படி பார்ப்போம்னு தோணுது..”

“….”

“ஹே சரி விடு நான் சாதாரணமா தான் கேட்டேன்.வா இந்த தடவை ஒழுங்கா கட்டி விடுவேன் ப்ராமிஸ்..”

“சீக்கிரமே நாமளும் பெத்துக்கலாம் ரவி..உன்னை மாதிரியே குட் பாயா ஒரு பேபி..”,என்றவளின் கன்னங்களை கைகளில் ஏந்திக் கொண்டான்.

“பேச்சு மாறக் கூடாது..”

“ஐய்யே போதும்..அக்கா என்னைத் தேடுவாங்க வாங்க போலாம்..”,என்றவள் வாகாய் அவன் மீது சாய்ந்து கொண்டாள்.

ராகவ் தயாராகி முடித்து ஓவியாவைப் பார்ப்பதற்காக இரண்டாம் தளம் செல்ல அவளும் சரியாய் வெளியே வந்திருந்தாள்.

“ஓ மை டார்லிங்..என்ன சர்ப்ரைஸ் இது..”,என்றவாறு அவளைப் பார்த்து உல்லாசமாய் விசிலடித்தான்.

“பர்ஸ்ட் டைம் புடவை கட்டிருக்கேன் எப்படியிருக்கு?”,என்றவளின் விழியின் எதிர்பார்ப்பு உணர்ந்தவனாய் சட்டென தன்புறம் இழுத்து சுவரோரம் மறைவாய் நிறுத்தினான்.

“ஐயோ என்ன பண்றீங்க யாரது வந்துர போறாங்க ராகவ்..”

“பரவாயில்ல இவளை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொல்லுவேன்.”

“ராகவ்…”

“சொல்லு சொல்லிடவா?”

“லவ் யூ ராகவ்..”

“பாரு டா..”

“கிண்டல் பண்ணாதீங்க..தேங்க் யூ..”

“இது எதுக்காம்?”

“என் லவ்வை அக்செப்ட் பண்ணதுக்கு இங்க என்னை கூட்டிட்டு வந்ததுக்கு எல்லாத்துக்கும்.”

“உனக்கு தேங்க்ஸ் சொல்லவே தெரியல ஓவி செல்லம்..”,என்றவனின் நெருக்கத்தில் இன்னுமாய் பதறியவள் சுதாரிக்கும் முன் இதழ் முத்தத்தைக் கொடுத்தவன் சிக்காமல் ஓடியிருந்தான்.