அலுவலகத்திற்கு வந்த தன்னிடம் வேலை நிமித்தமாய் அனைத்தையும் பேசிவிட்டு கிளம்பாமல் தயக்கமாய் நின்ற ஷ்யாமை கேள்வியாய் பார்த்தான் வீரேந்திரன்.

“என்ன ஷ்யாம்?”

“சார் அது வந்து..”

“எதுவும் பிரச்சனையா?”

“அதெல்லாம் இல்ல சார்..அது..”

“எதுவாயிருந்தாலும் சொல்லு ஏன் இவ்ளோ யோசிக்குற..”,என்ற கேள்வியில் தைரியம் வரப் பெற்றவனாய் ஒரு நிமிடம் என்றவாறு தனதறைக்குச் சென்று ஒரு கவரோடு வந்து நின்றான் ஷ்யாம்.

“மேம்காக என் வைஃப் கொடுத்துவிட்டாங்க சார்..”

“?!!!”

“இல்ல இந்த நேரத்துல வாமிட்டிங் எல்லாம் இருக்குமாம்.இது மாதுளை சாறு ரொம்ப நல்லதுனு சொல்லி கொடுக்க சொன்னா..சாரி சார்..”,என்றவனைப் பார்த்து புன்னகையாய் கையை நீட்ட சற்றும் ஆச்சரியம் அகலாது அதை வீரேந்திரனிடம் கொடுத்தான்.

“இதுக்கு ஏன் இவ்வளவு யோசிக்குற ஷ்யாம்.இதை வாங்காம போனா தான் உன் தங்கச்சி சண்டைக்கு வருவாள்.”,என்று புன்னகைத்து விட்டு தன் வேலையைக் கவனிக்க ஷ்யாமிற்கோ கண்கள் கலங்கி விட்டிருந்தது.

வீரேந்திரனிடம் தனக்கு தனி இடம் உண்டு என்பதை அவன் அறிந்திருந்தாலும் காலையில் மனைவி இதைக் கொடுக்கச் சொன்னபோது அதிகப் பிரசங்கி தனமாகவே தோன்றியது.

இப்போது வீரேந்திரனின் பேச்சில் அப்படியான ஒரு மகிழ்ச்சி அடைந்து விட்டிருந்தான்.

மாலை வீட்டிற்கு கிளம்பிவனின் முன் அதே தயக்க முகத்தோடு வந்து நின்றான் ராஜு.

கைப்பேசியில் கவனத்தைப் பதித்தவாறு வந்த வீரேந்திரன் காரில் அமர்ந்து விட கார் கிளம்பாமல் இருக்கவே என்னவென்பதாய் ராஜுவைப் பார்த்தான்.

“அண்ணையா..அது..”

“என்ன ராஜு?”

“இதெல்லாம் நம்ம பசங்க ஊரிலிருந்து கொடுத்து விட்டுருக்காங்க அண்ணிக்காக..”,என்றவன் அருகிலிருந்த ஆட்டோவைக் கண்காட்ட அதில் கூடை நிறைய பழங்கள் இருந்தது.

“என்ன டா இதெல்லாம்?”

“மன்னிச்சுருங்க அண்ணையா எதோ எங்களால முடியுறது..நான் இப்போவே திருப்பி அனுப்பிடுறேன்..”

“ராஜு அப்படி கேட்கல..ஏன் தேவையில்லாத செலவுனு சொன்னேன்.நீ வீட்டுக்கு அனுப்பிடு.”,என்றவனின் மனம் அத்தனை நிறைவாய் இருந்தது.

தன் வாரிசை வரவேற்க இத்தனைப் பேர் இருக்கிறார்களே அனைத்திற்கும் காரணமானவளை அந்த நொடியே மனம் நாடியது.

வழக்கம் போல் கார் சத்தம் கேட்டதும் வாசலுக்கு வந்தவள் கை நிறைய வேலையாட்கள் கொண்டு வந்த பொருட்களைப் பார்த்து விழி விரித்தாள்.

அங்கு அமர்ந்து பேசிக் கொண்டிருந்த சிறியவர்களும் பெற்றோரும் கூட வந்துவிட அனைவரின் விழிகளிலும் ஆச்சரியம் குறையாமல் இருந்தது.

கடைசி கூடையை வைத்த வண்ணம் அவளைப் பார்த்து புன்னகைத்த ராஜு,

“அண்ணி எல்லாம் எங்க ஊரில் இருந்து கொடுத்திருக்காங்க உங்களுக்காக..உடம்பை பாத்துக்கோங்க”,என்றபடி அவன் செல்ல வீரேந்திரன் தன்னவைளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

“இந்திரா என்னப்பா இது?!”

“அதான் சொன்னானே மா..அவங்க அண்ணிக்காகவாம் கெமிக்கல்ஸ் இல்லாத இயற்கை உரம் போட்டு விளைவிச்சதாம்.”

“நல்ல பசங்க..அதுக்காக இப்படியா கூடை கூடையா கொடுத்து அனுப்புவாங்க..”,என்றவர் புன்னகைத்துச் சென்று விட்டார்.

“அண்ணி நான் பேசாம பத்து மாசமும் இங்கேயே இருக்கலாம்னு இருக்கேன்.உங்க பேரைச் சொல்லி செம கட்டு கட்டலாம் போலேயே”,என்றபடி ராகவ் ஒரு ஆப்பிளை எடுத்துக் கொண்டு ஓடினான்.

இரவு உணவை முடித்து அறைக்குள் வந்தவன் தன் பையிலிருந்நு ஷ்யாம் கொடுத்ததை அவளிடம் கொடுத்தான்.

“இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்!”என்று ஆச்சரியமாய் பார்த்தவளை தன்னருகில் அமர்த்தியவன்,

“ஷ்யாமோட வைஃப் கொடுத்தாங்களாம்”,என்றவனின் குரலிலும் பார்வையிலும் அத்தனை காதல் கொட்டிக் கிடந்தது.

“!!!”

“எல்லாரும் எதாவது கொடுக்குறாங்க உனக்கு.நான் இன்னும் ஒண்ணுமே தரலையே என் இசைக்கு என்ன வேணும்?”

“நாளைக்கு கொஞ்ச நேரம் நம்ம தோட்டத்துல நடந்துண்டு வரலாமா?உங்களோட அங்க போணும்னு ரொம்ப நாள் ஆசை.”,என்றவளைப் பார்த்தவனின் பார்வையில் அவன் மீது சாய்ந்து கொண்டாள்.

“இனி தினமும் காலையில் வாக்கிங் போலாம்.”,என்றவனை விழி மட்டும் உயர்த்திப் பார்த்தாள் ஏழிசை.

“மாமி..”

“ம்ம்..”

“உன்னை எல்லாருக்கும் பிடிக்குது.எல்லாரும் உன்னை கவனிச்சுக்குறாங்க.ஆனால் எனக்கு மட்டும் தான் நீ சொந்தம்.மத்தவங்க எல்லாம் அப்பறம் தான்.நம்ம புள்ளையையும் சேர்த்து தான் சொல்றேன்.”,என்றவனைப் பார்த்து சிரித்தாள்.

“சிரிக்காத டி..நிஜமா தான் சொல்றேன்.நான் உன்னை நல்லாதான பாத்துக்குறேன்.ஏன் எல்லாரும் உன்னை கவனிக்குறாங்க..”

“ஏன்னா நான் வீராவோட ஆத்துக்காரி அதனால தான்.”,என்றவள் அவனைக் கட்டிக் கொண்டள்.

“அதெல்லாம் இல்ல..இதுக்காக தான் அன்னைக்கே சொன்னேன் ஏன் எல்லாருக்காகவும் யோசிக்குறனு.”

“வீரா..”

“…”

“இந்த உலகமே என் பின்னாடி இருந்தாலும் நேக்கு என்னோட வீரா மட்டும் தான் ஒவ்வொரு நிமிசமும் வேணும்.”

“…”

“காத்தால இருந்து வீராவை ரொம்ப மிஸ் பண்ணோம் நானும் குட்டியும்.அவர் என்னடா னா குழந்தை மாதிரி முகத்தைத் தூக்கி வைச்சுண்டு இருக்கார்.”

“மிஸ்ட் யூ டூ இசை..”,என்றவன் இன்னுமாய் தன்னோடு சேர்த்தணைத்துக் கொண்டான்.

காலை சீக்கிரமே எழுந்தவன் ஏழிசையை அழைத்துக் கொண்டு தோட்டத்தில் நடக்க ஆரம்பித்தான்.

“ஒரு இரண்டு நிமிஷம் நடந்தா போதும் இசை.மாசம் ஆகட்டும் அப்பறம் நிறைய நடக்கலாம்.”

“ம்ம் சரி..இங்க உட்காரலாமா?”,என்றபடி அங்கிருந்த கல் பெஞ்சில் அவனோடு அமர்ந்தாள்.

“உங்ககிட்ட சொல்ல மறந்துட்டேன்.நேத்து திவ்யா ஒரு விஷயம் சொன்னா..”,என்றவள் விஷாலைப் பற்றி கூற வீரேந்திரனோ அவளை முறைத்தான்.

“காதலிக்குறது உங்க தங்கச்சி என்னை ஏன் முறைக்குறேள்?”

“எல்லாம் நீ கொடுக்குற இடம் தான்..கொஞ்சமும் பயம் இல்லாம போச்சு..”

“இதென்ன நல்ல கதையா இருக்கு.அவா இரண்டு வருஷமா லவ் பண்றாளாம்.நான் வந்தே இரண்டு மாசம் தான் ஆறது.”

“இருக்கட்டும் நானே பேசிக்குறேன் அவகிட்ட..”

“ரவியும் காதல் கல்யாணம் தானே?அப்பறம் ஏன் திவ்யா விஷயத்தில் கோபப்படுறேள்!”

“கோபமெல்லாம் இல்ல மாமி..ஒரு அண்ணனா இருக்குற பயம் தான்.அவ சின்ன பொண்ணு..”

“ம்ம் எல்லாம் அவா வாழ்க்கையை தேர்ந்தெடுக்குற அளவு பெரிய பொண்ணு தான்.அந்த அண்ணாவும் பேசினவரை நல்ல மாதிரி தான் தெரியுறது.”

“ஊரு மொத்தம் உனக்கு அண்ணனா?!”

“ஐயோ ஆரம்பிக்காதேள்..”,என்றவள் சத்தமாய் சிரித்திருந்தாள்.

“என்னவோ எல்லாரும் என்னை ரொம்ப படுத்துறீங்க.நான் அந்த பையனைப் பத்தி விசாரிக்கச் சொல்றேன்.”

“என்ன அந்த பையன்?மாப்பிள்ளையைப் பத்தினு சொல்லுங்கோ..”

“??”

“சும்மா சும்மா முறைக்காதேள்.அவா அப்பாவுக்கு விஷயம் தெரியுமாம்.திவி படிப்புகாக தான் காத்துண்டு இருக்கா போல.ஒரே பையன் அவரும் டாக்டர் அப்போ திவ்யாவோட வேலையைப் பத்தியும் புரிஞ்சுப்பாரோனோ?”

“ம்..”

“ஆமா இதெல்லாம் நிஜமாவே உங்களுக்குத் தெரியாதா?!”

“அவங்க பாதுகாப்பு தான் என் பிரதானமே தவிர அவங்களோட ப்ரைவசியை துருவ மாட்டேன் மாமி..”,என்றவனின் முகம் இன்னமும் யோசனையாய் இருந்தது.

“அவ உங்க தங்கச்சி..அப்படியெல்லாம் தப்பா யாரையும் தேர்ந்தெடுக்க மாட்டா..சந்தோஷமா விசாரிச்சு பார்த்துட்டு அப்பா அம்மாகிட்ட பேசுங்கோ..”

“சரிங்க எஜமானியம்மா”,என்றவன் மென்னகைக்க இப்போது அவனை முறைப்பது ஏழிசையின் முறையானது.

நாட்கள் அதன்போக்கில் மகிழ்ச்சியாய் நகர்ந்தது வீரேந்திரனுக்கும் ஏழிசைக்கும்.பர்வதம் ஆத்மார்த்தமாய் ஏழிசையை மகளாகவே பார்த்துக் கொண்டார்.

வீரேந்திரன் வேலைக்கு சென்றிருக்கும் நேரத்தில் எந்நேரமும் அவளுடன் யாராவது ஒருவர் இருந்து கொண்டே இருந்தனர்.

ஆறாவது மாதம் தொடங்கியிருக்க சற்றே உடல் எடை கூடி மேடிட்ட வயிறோடு இன்னும் அழகாய் இருந்தாள்.வீரேந்திரனுக்கோ மொத்த நேரமும் மனைவியின் அருகில் தான்.காலையில் அவளோடு நடை பயின்று வந்தால் அவளுக்காக குளிக்கத் தண்ணீர் முதற்கொண்டு அவனே எடுத்து வைத்து விடுவான்.

ஏழிசைக்கு மகிழ்ச்சியாய் இருந்தாலும் சில நேரங்களில் சங்கடமாய் இருக்கும்.எத்தனை பெரிய உயரத்தில் இருப்பவன் இதெல்லாம் செய்கிறானே என்று பதட்டப்படுவாள்.

அவனுக்கோ எதைப் பற்றிய கவலையும் இல்லை.அவனது இசைக்கு அத்தனையையும் அவனே செய்ய வேண்டும் என்பதை தாண்டி எதையும் யோசிப்பதாய் இல்லை.

இதற்கிடையில் விஷாலைப் பற்றி விசாரித்திருக்க வீரேந்திரனுக்குமே திருப்தியாய் இருந்தது.ஏழிசை மசக்கையினால் சற்றே சிரமப்பட பொறுமையாய் தாய் தந்தையிடம் பேசலாம் என்று காத்திருந்தான்.

அன்றும் காலை வழக்கம் போல் தங்களறையிலேயே உணவை முடித்துவிட்டு கீழே செல்ல தயாரானாள் ஏழிசை.

“இசை விஷால் பத்தி அம்மா அப்பாகிட்ட பேசலாம் இன்னைக்கு.”

“சரி ணா..அப்போ சீக்கிரமே கல்யாணம் வரபோகுது நம்ம ஆத்துல..”

“இப்போதைக்கு நிச்சயம் பண்ணிக்கலாம்..டெலிவரிக்கு அப்பறமா கல்யாணத்தை வைச்சுப்போம்.உனக்கும் உடம்பு தேறி வரட்டும்.இந்த ஏன்னா மட்டும் இன்னொரு தடவை சொன்னனு வை..”,என்றவன் கடுப்பாய் கூறியதில் சிரித்தவள் அவனோடு கீழே சென்றாள்.

“ப்பா..”

“வா இந்திரா..ஆபீஸ் கிளம்பிட்டியா?”

“ம்ம்..ஒரு விஷயத்தைப் பத்தி பேசணும்னு தான் வந்தேன்”,என்றவன் ஏழிசை நாற்காலியில் அமரும் வரை அவள் கைப்பிடித்து அமர்த்தி விட்டு தந்தையையும் தாயையும் நோக்கினான்.

“சொல்லு கண்ணா என்ன விஷயம்?”

“நம்ம திவ்யா கல்யாணத்தைப் பத்தி தான் மா..”,என்றவன் அனைத்தையும் பெற்றோரிடம் கூறிவிட்டு அமைதி காத்தான்.

“நீ பார்த்து விசாரிச்சா சரி தான் இந்திரா..உன்னை விட நாங்க என்ன நல்லது பண்ணிட போறோம்.”

“என்ன ப்பா..”

“அம்மா சொல்றது சரி தான்.நீ விசாரிச்சுட்டல அது போதும்.நீ சொல்றதை வச்சு எனக்கும் திருப்தியா தான் இருக்கு இந்திரா.”

“சரி ப்பா..அப்போ நான் அடுத்து என்னனு பாக்குறேன்.”

“அப்பறம் கண்ணா ஏழிசைக்கு வளைகாப்பு போடணுமே..ஏழுல பண்ணலாமா இல்லை ஒன்பதாவது மாசம் பண்ணுவோமா?”

“ஏழுலேயே பண்ணலாம் மா..என்ன இசை?”

“நீங்க எப்போ சொல்றேளோ அப்போவே பண்ணலாம்..என்ட்ட ஏன் கேட்குறேள்..அம்மா சொல்றது தான்.”,என்றாள் மெதுவாய்.

“சரி கண்ணா அப்போ ஜோசியரை வர சொல்லி நாள் பார்க்குறேன்.”

“ம்ம் அதுக்கே கூட விஷாலையும் அவங்க அப்பாவையும் கூப்பிடலாம் மா..நாமளும் நேரில் பார்த்து பேசின மாதிரி இருக்கும்.”

“சரி இந்திரா..”,என்றதும் மனைவியோடு வெளியே வந்தவன் வளைகாப்பைப் பற்றி ஏழிசையிடம் கேட்டான்.

“அடுத்த மாசமே பண்ணிடலாம் மாமி..உன்னை கை நிறைய வளையலோட பாக்கணும்னு ஆசையா இருக்கு.குழந்தைக்கும் அது நல்லதுல.”

“நீங்க சொல்லும் போதே புரிஞ்சுண்டேன் அதான் எதுவும் சொல்லலை.”,என்றவளைப் பார்த்து புன்னகைத்தவன் வேலைக்குக் கிளம்பிச் சென்றான்.

வழக்கம் போல் மதிய உணவு வேளையில் திவ்யா ஏழிசைக்கு அழைக்க அவள் விஷயத்தைக் கூறினாள்.

“அண்ணி???அண்ணாக்கு விஷயம் தெரியுமா?!”

“ம்ம் நீ என்கிட்ட சொன்ன அன்னைக்கே அவர்ட்ட சொல்லிட்டேன்.ஏன் திவி?”

“இல்ல போன மாசம் உங்களைப் பார்க்கணும்னு வந்தப்போ கூட அண்ணா எதுவுமே கேட்கலையே..என் மேல கோபமா அண்ணி!”

“கோபமெல்லாம் ஒண்ணுமில்ல.நீ போஸ்டிங் விஷயத்துல பிசி இதைப்பத்தி பேச வேண்டாம்னு நினைச்சுருப்பார்.உன் கல்யாணத்தை நினைச்சு எங்களுக்கு சந்தோஷம் தான்.வளைகாப்புக்கு அவரையும் அவங்க அப்பாவையும் அழைக்குறதா சொல்லிருக்கார் திவி.”

“அண்ணி!!”

“ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுற..அண்ணா எல்லாம் பார்த்துப்பார் நீ ஹேப்பியா இரு.விஷால் அண்ணாகிட்டேயும் சொல்லு.”

“தேங்க்ஸ் அண்ணி லவ் யூ..”,என்றவளுக்கு உற்சாகம் தாளவில்லை.உடனே விஷாலுக்கு அழைத்திருந்தாள்.

அரைத் தூக்கத்தில் இருந்தவன் அழைப்பை ஏற்று காதில் வைக்க,

“விஷு”,என்ற அழைப்பில் பதறி எழுந்து அமர்ந்தான்.

“திவி..என்னடி எதுவும் ப்ராப்ளம் இல்லையே?”

“ஐயோ சாரி நேரத்தைப் பார்க்காம கால் பண்ணிட்டேன்.ஐ அம் சோ ஹேப்பி விஷு..”,என்றவள் விஷயத்தை அவனிடம் கூறினாள்.

“ராகவ் சரியா தான் சொன்னான் மேலிடத்துக்கே மேலிடம்னு..”,என்றதைக் கேட்டவளுமே சிரித்தாள்.

“எப்போ நெக்ஸ்ட் மன்த் ஆகும்னு இருக்கு விஷு.இரண்டு வருசம் ஆகப் போகுது உங்களைப் பார்த்து.”

“பேபி..”

“ம்ம்..”

“நானும் என் செல்லத்தை ரொம்பவே மிஸ் பண்றேன்.டேட் கேட்டு சொல்லு நான் டிக்கெட் புக் பண்றேன்.”

“ம்ம் சரி விஷு..அங்கிள்கிட்டேயும் விஷயத்தை சொல்லிடுங்க..”

“இப்போவே அதை தான் பண்ண போறேன்.”,என்றவன் முத்தங்களை வாரி இழைத்துக் கொண்டிருந்தான்.