159
“குழல் வளர்ந்து அலையானதே
“குழல் வளர்ந்து அலையானதே
இரவுகளின் நிலையானதே
விழி இரண்டு கடலானதே
எனது மனம் படகானதே
இளம் பளிங்கு நகம் சேர்த்ததே
னிலவு அதில் முகம் பார்த்ததே
இனிக்கும் தேனே …. எனக்கு தானே
பூவே இளைய பூவே..”
நாட்கள் அதன்போக்கில் நகர்ந்திருக்க முதல் வருடம் முடிந்து இரண்டாம் வருடப் படிப்பிற்குள் நுழைந்திருந்தனர் ராதாவும் கிருஷ்ணணும்.
கடவுளின் எண்ணம் எப்போது என்னவாய் இருக்கும் என்பதை யாரும் அறிந்திட முடியாது என்பதற்கேற்ப ராதாவின் தந்தையுடைய சகோதரியின் குடும்பம் வேலை மாற்றல் காரணமாக அவர்களின் தெருவிலேயே குடி வந்திருந்தனர்.
ராமனின் இளைய சகோதரி பத்மினி அவர் கணவர் கோவிந்தனோடு ஒரே மகனான அபிமன்யு.
ராதா கல்லூரிக்குத் தயாராகி வெளியே வர கூடத்தில் இவர்கள் மூவரும் அமர்ந்து ராமனிடம் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு பத்மினியின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.
“அத்தை அத்திம்பேர் எப்படி இருக்கேள்?”
“நாங்க நன்னா இருக்கோம் டீ ராதா..எவ்வளவு நாள் ஆய்டுத்து உன்னைப் பார்த்து ஸ்கூல் படிக்கும் போது பார்த்தது.
என்னமா வளர்ந்துட்டாய்.. அப்படியே மகாலட்சுமி மாதிரி இருக்காய்..”,என்றவர் அவளிடம் பேசிவிட்டு தன் சகோதரனிடம் பேச ஆரம்பிக்க அப்போது தான் அபிமன்யூவை கவனித்தாள்.
“நன்னாயிருக்கியா ராதா?”
“ம்ம் நன்னாயிருக்கேன்.. காலேஜுக்கு நாழி ஆய்டுத்து நான் வரேன்..”, என்றவள் புன்னகையோடு எழுந்து கொள்ள அதற்குள் கிருஷ்ணணும் வந்துவிட்டிருக்க அவனோடு சென்றவளை முடிந்த மட்டும் பார்த்திருந்தான் அபிமன்யூ.
“அண்ணா இவனை நம்ம ராதா படிக்குற காலேஜ்லயே சேர்க்கலாம்னு இருக்கோம். கடைசி வருஷம் இல்லையா.. முடிச்சுட்டா நல்லது..”
“அதுக்கென்ன தாராளமா சேர்த்துரலாம். அந்த காலேஜ் பிரின்சிபல் நேக்குத் தெரிஞ்சவர் தான். நாளைக்கே போய் பார்த்து பேசிடுவோம்..”
“ம்ம் சரி சாமான் எல்லாம் வந்துருக்கும். நாங்கப் போய் எடுத்து வச்சாதான் சரியா இருக்கும்.
மன்னி மதியானத்துக்கு நீங்க பண்ற வத்தக்குழம்பு பண்ணித் தரேளா? ரொம்ப நாள் ஆய்டுத்து..”
“அதுக்கென்ன பண்ணிட்டா போச்சு.. செஞ்சு நானே எடுத்துண்டு வரேன் பத்து..”
அவர்களிடம் விடைபெற்று மூவரும் வெளியே செல்ல வேதவல்லி ராமனிடம் கத்த ஆரம்பித்திருந்தார்.
“எங்கேயோ வடநாட்டுல இருந்தப்போவே உங்க அண்ணா தங்கை பாசம் தாங்க முடியாது..
இப்போ பக்கத்துத் தெருவே.. கேட்கவா வேணும்.. இனி என் நிலைமை தான் பரிதாபம்..”
“ஏன்டீ இன்னைக்கு தான் வந்திருக்கா அதுக்குள்ளேயே இப்படி புலம்புறியே!”
“ம்ம் வந்தன்னைக்கே அதிகாரமெல்லாம் எப்படி தூள் பறக்குதுனு பார்த்தேளோன்னோ..
வத்தக்குழம்பு வேணுமாம்.செஞ்சு கொண்டு கொடுத்தாலும் அது இல்லை இது அதிகம்னு எதாவது குறை தான் சொல்லப் போறா..
என்னவோ என் தலையெழுத்து.. வேற என்ன பண்றது..”
“சரி சரி புலம்பாம போய் அவா கேட்டதை செய்யுற வழியைப் பாரு..
எனக்கும் வேலைக்கு நாழியாய்டுத்து.. வரேன்.”,என்றவர் அங்கிருந்து தப்பித்தால் போதுமென கிளம்பிச் சென்றுவிட்டார்.
“பத்மினி அத்தை அத்திம்பேர் வந்துருக்கா கண்ணா.. இனி இங்கே தான் இருக்கப் போறாளாம்.. பக்கத்து தெருவில..”
“ஓ நானே கேட்கணும்னு நினைச்சேன்..காத்தால கோவிலுக்குப் போய்ட்டு வரச்சே பார்த்தேன்
அந்த ஆம் ரொம்ப நாளா பூட்டியிருந்தது இப்போ திறந்திருக்கேனு.. ஆமா அவாளுக்கு பையன் ஒருத்தன் உண்டு இல்ல?”
“ம்ம் ஆமா அபிமன்யூ.. நம்மை விட ஒரு வருஷம் பெரியவன். அநேகமா அப்பா அவனை நம்ம காலேஜ்ல தான் சேர்த்து விடுவார்..
நேக்கு சின்ன வயசுல இருந்தே அவனோட ஒத்து வராது.எல்லாம் அவன் நினைக்குறது தான் நடக்கணும். சும்மா சண்டை போட்டுண்டே இருப்பான்.”
“அது ஏதோ சின்ன வயசுல அப்படி இருந்துருப்பான்.. அதுக்காக இப்பவும் அப்படியே இருப்பானா சொல்லு..”
“நேக்கு ஒண்ணும் அவன் மாறிருப்பான்னு தோணலை. சரி விடு அவனைப் பத்தி பேசி என்ன ஆகப் போறது.”,என்றவள் பேச்சை மாற்றி வேறேதோ பேச ஆரம்பித்திருந்தாள்.
மறுநாள் கூறியதைப் போன்றே ராமன் அபிமன்யூவையும் அவனது தந்தை கோவிந்தனையும் அழைத்துக் கொண்டு வந்து கல்லூரி முதல்வரைச் சந்தித்து பேசிவிட்டு அவனை அன்றே வகுப்பிலும் சேர்த்துவிட்டு வந்தார்.
அபிமன்யூ சற்றே அழுத்தக்காரன்.அத்தனை எளிதில் யாரோடும் பழகிவிட மாட்டான்.
பள்ளியிலும் இதற்கு முன் அவன் படித்த கல்லூரியிலும் அவனுக்கென இரண்டு மூன்று பேர், நட்பு என்பதெல்லாம் கிடையாது.
அவனது புகழ் பாடவும் அவன் கூறுவதெற்கெல்லாம் ஆமாம் போடவும் தான். அதற்கு முக்கிய காரணம் அவனின் படிப்பும் பணமுமே.
எப்போதுமே முதல் மதிப்பெண் எடுப்பவன் அதுமட்டுமின்றி தன்னைச் சுற்றிய நட்புகளுக்கு அளவில்லாமல் செலவு செய்வான்.
அவன் இருக்கும் இடத்தில் அவன் தான் ராஜாவாக இருக்க வேண்டும் என்பது போன்றதொரு மனநிலை.
இப்போது முதல் நாள் வகுப்பிற்குள் நுழைந்தவனுக்கு எதுவுமே பிடித்திருக்கவில்லை.
ஏனோ தனிமைபடுத்தப்பட்டதை போன்ற உணர்வில் இருந்தான்.
அப்போது வகுப்பிற்கு வந்த ஆசிரியரிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவன் தன் முந்தைய மதிப்பெண்களையும் கூறிவிட்டு அனைவரையும் பார்க்க ஒருவித சிநேகப் புன்னகை எழுந்திருந்தது சிலரிடத்தில்.
அதன்பின் சிலர் தானாகவே வந்து அவனிடம் பேசிச் சென்றனர்.
அதன்பின் வந்த மதிய உணவு வேளையில் ராதாவைத் தேடிச் சென்றவன் அவள் வகுப்பிற்குள் நுழையும் போதே கண்ணனும் அவளுமாய் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்ததைப் பார்த்து விட ஒருவித எரிச்சல் தோன்றியிருந்தது.
ஏனோ கண்ணனை அவனுக்குப் பிடிக்கவில்லை.அதைவிட அவனிடம் சிரித்துப் பேசும் ராதையை பார்த்த போது இன்னுமாய் அவனைப் பிடிக்காமல் போனது.
நேற்று எப்படியிருக்கிறாய் என்று கேட்டதற்கு முகத்தைக் கூட ஒழுங்காய் பார்த்து பேசாமல் ஒருவரி பதில் கூறிச் சென்றவள் இன்று அவனோடு அமர்ந்து பேசிச் சிரித்தவாறு இருப்பதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அப்படியே அவளை சந்திக்காமல் தனது வகுப்பிற்குச் சென்றவன் தனியாகவே அமர்ந்து தனது உணவை உண்டு முடித்தான்.
அதன் பின்னான சில நாட்களிலேயே ராதா மற்றும் கிருஷ்ணனைப் பற்றி ஓரளவு விவரங்கள் சேகரித்திருந்தான்.
அவர்களின் நட்பின் மேல் பொறாமை கொண்டவனாய் கிருஷ்ணன் மீது மனதிற்குள் பகை வளர்க்க ஆரம்பித்திருந்தான்.
தன்னை விட வசதியில் குறைந்தவனிடம் இத்தனை அன்பாய் இருக்கும் ராதா தன்னிடம் எப்படி பேசாமல் இருக்கலாம் என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது.
எரியும் தீபத்தில் எண்ணெய் விடுவதைப் போல் அவன் வகுப்பு மாணவர்கள் இருவர் சற்று அதிகமாகவே அவர்கள் இருவரையும் பற்றி அபிமன்யூவிடம் கூறினர்.
“அட என்னப்பா நீ..முறைப் பொண்ணுனு சொல்ற..உன்னை சரியாப் பார்க்க கூட மாட்றா..
ஆனா அந்த பையனும் அவளும் தான் எப்பவும் ஒண்ணா சுத்துவாங்க தெரியுமா?
அதுவும் அந்த பையன் பாடுறதைக் கேட்குறதுக்காகவே இங்க ஒரு பெண்கள் கூட்டம் அலைமோதுது..
இருந்தாலும் அவன் அந்த பொண்ணோட மட்டும் தான் பேசுவான்..
ம்ம் சும்மா சொல்லக் கூடாது அவங்க ஜோடிப் பொருத்தம் கூட நல்லாதான் இருக்கு..
இல்லை டா?”,என்று அவன் போக்கில் பேசிக் கொண்டிருக்க அபின்யூவோ உள்ளுக்குள் எரிமலையென குமுறிக் கொண்டிருந்தான்.
ஏனோ அவனுக்கு ராதாவைப் பார்த்தவுடனே பிடித்துவிட்டிருந்தது.
அழகோடு சேர்த்து அவளும் கல்லூரிப் படிப்பெல்லாம் படிப்பதால் தன் தகுதிக்கு ஏற்ற ஒருத்தியாக அவளைக் கருதினான்.
ஆனால் அவளோ அவன் வந்ததிலிருந்து அவனைச் சரியாகப் பார்க்கக் கூடவில்லை. அதுவே அவனது தன்மானத்தைச் சீண்டியிருந்தது.
மனதிற்குள் ஏதேதோ திட்டமிட்டவன் முதல் வேலையாய் தனக்கென ஒரு இரு சக்கர வாகனம் வேண்டும் எனக்கேட்டு வாங்கி அதோடு நிறுத்தாமல் ராதாவை தினமும் தானே கல்லூரிக்கு அழைத்துச் சென்று கூட்டி வருவதாய் அவன் தாயிடம் கூறினான்.
“என்ன டா இதொண்ணும் நாம இருந்த டெல்லி கிடையாது.இங்க இதெல்லாம் எத்தனை பெரிய விஷயம் தெரியுமா?
வயசுக்கு வந்த பொண்ணை உன்னோட வண்டியில் எப்படி டா அனுப்ப முடியும்?”
“ம்மா..நீயே இப்படி சொன்னால் நேக்கு யார் உதவி பண்ணுவா?”
“உதவியா?என்ன டா உதவி??”
“ம்மா..நேக்கு ராதாவைப் பிடிச்சுருக்கு.. எப்படியும் படிப்பு முடிச்வுடனே நேக்கு வேலை கிடைச்சுரும்.அப்பறமா.”
“அப்றமா???அப்பறமா என்ன டா?”
“ம்மா இதைக் கூட புரிஞ்சுக்க மாட்டியா?அப்பறமா மாமாகிட்ட பெண் கேட்கலாம்”
“அப்பாடா என் வயித்துல பாலை வார்த்தடா…என் தங்கம்.. நானே உன்னன்ட இதைப்பத்தி பேசணும்னு நினைச்சுண்டு இருந்தேன். எனக்கு மனசுல இப்படி ஒரு நினைப்பு இருக்கு டா..
உன் அப்பாகிட்ட சொன்னா காதுலேயே வாங்கிக்க மாட்றார்.நீயும் உன் விருப்பப்படி தான் இருப்பாய்..
என் அண்ணா பொண்ணு எத்தனை அழகா இருக்கா.. அதுமட்டுமில்லாம ஒரே பொண்ணு அண்ணாவோட சம்பாத்தியம் மொத்தம் அவளுக்குத் தான் வரும்.
இப்படி எத்தனையோ யோசிச்சு வச்சுருக்கேன். எங்க உன்னன்ட கேட்டு முடியாதுனு சொல்லிருவியோனு பயந்துண்டே இருந்தேன்.
என் புள்ளையாச்சே நீ தான்..அச்சோ சந்தோஷத்துல நேக்கு கையும் ஓடலை காலும் ஓடலை. சரி இப்போ என்ன பண்ணணும் சொல்லு?”
“அவ என்னைப் பார்த்து கூட பேச மாட்றாம்மா..கொஞ்சம் பேசினாதான அவளுக்கும் என்னைப் பத்தித் தெரியும் அதனால தான் கேட்குறேன்.
நானே அவளை அழைச்சுண்டு போய்ட்டு அழைச்சுண்டு வரேன்.மாமாகிட்ட கேளேன்.”
“ம்ம் நீ சொல்றதும் சரிதான்..இதோ இப்போவே போய் பேசுறேன்..”, என்றவர் முதல் வேலையாய் தன் தமையனைச் சந்திக்கக் கிளம்பியிருந்தார்.
அப்போது தான் கல்லூரி முடிந்து ராதாவும் கிருஷ்ணணும் வந்து வாசலில் நின்றிருக்க இவளைப் பார்த்தவர் புன்னகையோடே பேச ஆரம்பித்தார்.
“ராதா ம்மா காலேஜ் போய்ட்டு வந்துட்டியா?”
“ஆமாம் அத்தை..இவனைத் தெரியற்தா..நம்ம கிருஷ்ணன்.”
“ம்ம்..ஓ அந்த பட்டாச்சாரி புள்ளை தான?உன் அப்பா போய் சேர்ந்துட்டாரே?
இப்போ போஜனத்துக்கு என்ன பண்றேள் நீயும் உன் அம்மாவும்?”
அவரின் இந்த கேள்வி கிருஷ்ணனை வெகுவாய் பாதித்திருந்தது.
ராதாவுமே இதை சற்றும் எதிர் பார்த்திருக்கவில்லை.சட்டென வாடிவிட்ட அவனது முகத்தைப் பார்த்தவளுக்கு தன் அத்தை மேல் சொல்லிலடங்கா கோபம் வந்தது.
“அத்தை ஏன் இப்படி பேசுறேள்.அவன் எவ்வளவு பொறுப்பானவன் தெரியுமா?
தன் படிப்பையும் பார்த்துண்டு கோவில் கைங்கர்யமும் செஞ்சுண்டு அவன் அம்மாவையும் பார்த்துக்குறான்.
அவனைப் போய் இப்படி கஷ்டப்படுத்துறேளே!”, எனும்போதே ராமன் அங்கு வர அப்படியே பேச்சை மாற்றியிருந்தார் பத்மினி.
“அண்ணா இது கிருஷ்ணன் தானே என்னமா வளர்ந்துட்டான்..”
“ம்ம் ஆமா பத்து..தங்கமான புள்ளை..நேக்கு புள்ளை இல்லாத குறையை அவன் தீர்த்துட்டான் தெரியுமா.
இந்த சின்ன வயசுலேயே அத்தனை பொறுப்பும் பக்குவமும்.
பெருமாளோட அனுக்கிரகம் இருக்குற பிள்ளை.வாடா கண்ணா டிபன் சாப்ட்டு போயேன்.”
“வேண்டாம் மாமா..நாழியாய்டுத்துனா அம்மா தேடுவா..
நான் வரேன்..வரேன் ராதா..”,என்று சோர்வாய் நகர்ந்தவனைப் பார்த்தவளுக்கு மனம் வலித்தது.
தன் கண்ணனை இப்படி ஏளனப்படுத்திய அத்தையை அப்போதே பிடிக்காமல் போயிருந்தது அவளுக்கு.அந்த கடுப்புடனே உள்ளே சென்றவள் அவர் பேசுவதைக் கேட்டு மேலும் கடுப்பானவளாய்,
“ப்பா..நான் வண்டியிலெல்லாம் போக மாட்டேன்.. பஸ்லயே போய்ட்டு வந்துப்பேன்.”
“ஏன் டா கிருஷ்ணா.. அபிமன்யூ வோட போய்டு வந்தா நோக்கும் கொஞ்சம் வசதியா இருக்குமோண்ணோ..”
“ஏன் ணா அவ தான் வேண்டாம்னு சொல்றாளே..விட்டுடுங்கோ.. நம்ம கண்ணணோட பஸ்லேயே போகட்டும்”,என்று வேதவல்லியும் மகளுக்கு ஆதரவாய் பேசிவிட அந்த பேச்சு அப்படியே முடிக்கப் பட்டிருந்தது.
பத்மினி கிளம்பியவுடன் ராமனுக்கு துணைவியிடம் சரியாய் அர்ச்சனை நடந்தது.
“அவ தான் மூளையில்லாம வந்து கேட்குறாள் னா..நீங்களும் போனு சொல்றேளே எதாவது இருக்கா உங்க ரெண்டு பேருக்கும்.
வயசுப் பொண்ணை வண்டியில் ஒரு பையனோடப் போக சொல்றேளே!”
“ஏன் டி இப்படி கத்துறாய்.. அபிமன்யூ யாரு என் சொந்த தங்கைப் புள்ள..
அவனோட அனுப்புறதுக்கு ஏன் இத்தனை பிரச்சனை பண்ற..நம்ம கண்ணன் மாதிரி தான அவனும்.. நம்ம கிருஷ்ணாக்கு வசதியா இருக்குமேனு சொன்னேன்.”
“ம்ம் உங்க தங்கை புள்ளையை நீங்க தான் மெச்சிக்கணும்..நம்ம கண்ணணோட கால் தூசுக்கு வர மாட்டான்.
எப்போ பார்த்தாலும் ஏதோ சிடு சிடுனு முகத்தை வச்சுண்டு வம்பு பேசிண்டு அலையுவான்.
இன்னொரு தடவை இப்படி எதாவது பேச்சு வந்தது நான் சும்மா இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்.”,என்றவர் உள்ளே செல்ல கண்ணனைப் பற்றிய அவரின் வார்த்தைகள் ராதாவிற்கு இதமளிப்பதாய் இருந்தன.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
2 comments
Very nice
Nice👍