தனது தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்தவனைக் கண்டு அத்தனை பேரும் எழுந்து நின்று காலை வணக்கத்தை தெரிவித்தனர்.

ஷ்யாம் தனது முதலாளியின் அறைக் கதவை திறந்துவிட்ட வண்ணம் அவனைப் பின் தொடர்ந்தான்.வீரேந்திரன் இருக்கையில் அமரும் வரை அமைதி காத்தவன் கடகடவென வேலைகளைப் பற்றி விவரிக்க ஆரம்பித்தான்.

“சார் லாஸ்ட் வீக் ரிப்போர்ட் எல்லாமே இதுல இருக்கு.ரவி சாரோட பேக்டரி ரிப்போர்ட்ஸ் மட்டும் இன்னும் வரல.இன்னைக்கு அனுப்பிடுறதா சொல்லிருக்கார்.அப்பறம்..”

“கொஞ்சம் மூச்சு வாங்கிக்கோயேன் ஷ்யாம்.”

“சாரி சார்.”

“பர்சனல் இஷுனு லீவ் போட்ருந்தியே..ஒண்ணும் பிரச்சனையில்லையே?!”

“குழந்தைக்கு உடம்பு சரியில்ல சார் வேற ஒண்ணுமில்ல..”

“இப்போ எப்படியிருக்கா?பணம் எதுவும் தேவைப்படுதா?”

“குணமாயிட்டா சார்..அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்..”

“சரி..டேக் கேர்”,என்றவன் பைல்களுக்குள் தன்னைப் புதைத்துக் கொள்ள எப்படியும் அரை மணி நேரத்துக்கு தன்னை அழைக்க மாட்டார் என்று எண்ணியவனாய் ஷ்யாம் தனதறைக்கு வந்தான்.

சரியாய் ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் தன் முன் வந்து நின்றவனைப் பார்த்து பெருமைபடாமல் இருக்க முடியவில்லை வீரேந்திரனால்.

“எல்லாம் சரியாக இருக்கு ஷ்யாம்.அப்பறம் மதியத்துக்கு மேல நான் சென்னை போறேன்.நாளைக்கு நைட் தான் வருவேன்.”

“சார் நான் வேணும்னா..”

“வேண்டாம், கணக்கு கூட வருவார்.நீ இங்க எல்லாத்தையும் பார்த்துக்கோ எதுவாயிந்தாலும் எனக்கு கான்டாக்ட் பண்ணு.”,என்றவனின் கம்பீரத்தை எப்போதும் போல் மனதுக்குள் ரசித்துக் கொண்டான் ஷ்யாம்.

காரில் சென்னையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தான் வீரேந்திரன்.கணபதி தனக்கு வந்த போனை எடுத்துப் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.

“தம்பி நாளைக்கு கிளம்புறதுக்கு முன்ன ஒரு ஒரு மணி நேரம் என் பொண்ணைப் போய் பார்த்துட்டு வந்துறேன்.”

“ம்ம் சரி கணக்கு.இப்படி வயசான காலத்துல தனியா ஏன் கஷ்டப்படுறீங்க.பொண்ணை உங்க கூடவே வைச்சுக்கலாம்ல?!”

“இல்ல தம்பி என் பொண்டாட்டிக்கு ஊரு சென்னை தான் அதனால இங்கேயே இருந்து பழகிட்டா.திடீர்னு அவ இறந்தப்பறம் அந்த வீடு தான் அவளுக்கு அம்மா மாதிரி இருக்குனு சொல்றா.

ரொம்ப பயந்த சுபாவம் நம்ம பக்க பழக்கமெல்லாம் அவளுக்கு அவ்வளவா தெரியாது அதுவுமில்லாம நம்ம பிரச்சனையில் அவளுக்கு எதுவும் ஆபத்து வந்துறக் கூடாதேனு இருக்கு தம்பி.

காலாகாலத்துல ஒரு கல்யாணத்தைப் பண்ணி வைச்சுட்டேன்னா நிம்மதியா இருப்பேன்..எங்க….”

“ஏன்?!”

“எனக்கு ஒரு தங்கச்சி அவளுக்கு ஒரு மகனும் மகளும்.சென்னையில் என் வீட்டுக்கு பக்கத்துலேயே தான் இருக்கா.ஒரு வகையில் என் பொண்ணுக்கு சின்னதான பாதுகாப்பு.

ஆனால் பையன் சரியான தறுதலை.இல்லாத கெட்டப் பழக்கம் இல்ல.இவ குணத்துக்கு கண்டிப்பா ஒத்து வராது.அதுவுமில்லாம என் பொண்ணை விட அவங்க எதிர்பாக்குறது அந்த வீட்டை தான்.

அதனால வர்ற நல்ல வரனை எல்லாம் எதாவது சொல்லி தட்டிக் கழிச்சுட்டே இருக்காங்க.”

“அவங்களுக்கு யார் அந்த உரிமையைக் கொடுத்தது?!”

“நன்றிக் கடன் தம்பி..நான் கஷ்டப்பட்ட காலத்துல தங்கச்சி புருசன் தான் நிறைய உதவி பண்ணிருக்கார்.அதனால முகத்தில் அடிச்சு பேச முடியல..நானும் எவ்வளவோ பொறுமையா பேசிப் பாத்துட்டேன் புரிஞ்சும் புரியாத மாதிரி இருக்காங்க.

என்னைக்கு இருந்தாலும் என் பையனுக்குத் தான் உன் பொண்ணை கொடுக்கணும்னு ஒரே பிடிவாதம்.”

“வேணும்னா நம்ம பசங்களை வைச்சு இரண்டு தட்டு தட்ட சொல்லுங்க கணக்கு..மத்தவங்களுக்கு இரக்கம் பார்த்தா நம்ம வாழ்க்கை என்னாகுறது?”

“அப்படி எதுவும் பண்ணிணா கத்தி ஆர்பாட்டம் பண்ணி என் பொண்ணு மானத்தையே வாங்கிடுவா என் தங்கச்சி..இன்னொரு வீட்டுக்கு வாழப் போற பொண்ணு எந்தக் கெட்ட பேரும் இல்லாம போகணுமேனு இருக்கு தம்பி.”

“என்னவோ சொல்றீங்க..தேவையே இல்லாம பிரச்சனையை வளர்க்குறீங்களோனு இருக்கு..பாத்துக்கோங்க.”,என்றவன் தனக்கும் அதற்கும் சம்மந்தமில்லை எனும் வண்ணம் தலையை வெளியே திருப்பிக் கொண்டான்.

இரண்டு நாட்கள் கழித்து காலையிலேயே கோட்டை முழுவதும் ஆர்பாட்டமாய் இருந்தது.திவ்யாவும் ராகவும் கல்லூரி விடுமுறைக்காக வந்திருந்தனர்.

திவ்யா மருத்துவத்தில் இறுதி வருடமும் ராகவ் பொறியியலில் இறுதி வருடமும் படித்துக் கொண்டிருந்தனர்.

உணவு மேசையின் மீது அமர்ந்து கொண்டு திவ்யா எதிரில் இருந்த ராகவிடம் கதையளந்து கொண்டிருந்தாள்.

“செம ப்யூட்டி திவி அந்த பொண்ணு..ப்ச் ஜஸ்ட் மிஸ் கல்யாணம் ஆகிடுச்சு சொல்லிட்டா..”

“அடச்சே ஏன் டா கல்யாணம் ஆகாத பொண்ணே கிடைக்காதா உனக்கு..இந்நேரத்துக்கு ஒரு பொண்ணை பிடிச்சு லவ் பண்ணி இரண்டு வருசத்தில் கல்யாணம் பண்ணிக்க போறேன் சொல்லணும் அதை விட்டுட்டு..என் தம்பினு சொல்லாத டா பப்பி ஷேமா இருக்கு எனக்கு.”

“நீயல்லவோ அக்கா..இரு நீ சொன்னதை அப்படியே அப்பா அம்மாகிட்ட சொல்றேன்.”,எனும்போதே வீரேந்திரன் அங்கு வர அவசரமாய் கீழீறங்கி நின்றாள் திவ்யா.

“எத்தனை மணிக்கு வந்தீங்க இரண்டு பேரும்.கார் கரெக்டா வந்துதா?”

“நீ சொல்லி வராம இருப்பாங்களா ணா..”,என்ற ராகவை முறைத்தவாறே திவ்யா தமையனிடம்,

“காலையில் அஞ்சு மணிக்கு வந்தோம்.நீங்க எப்படியிருக்கீங்க ணா..”

“ம்ம் நல்லாயிருக்கேன்..படிப்பெல்லாம் எப்படி போகுது இரண்டு பேருக்கும்.”

“அதெல்லாம் அதுபாட்டுக்கு போகுது ணா”,என்ற தம்பியை நிமிர்ந்து பார்த்தவன் வந்த சிரிப்பை உள்ளடக்கிய படி தங்கையை ஏறிட்டான்.

“நல்லா போகுது ணா..நெக்ஸ்ட் மந்த்ல போஸ்டிங் வந்துரும்.”

“குட்..அப்பா அம்மா எங்க இன்னும் சாப்பிட வரலை?!”

“இதோ வரோம் டா.இரண்டும் காலையில் வந்ததுல இருந்து ஒரு வழி ஆக்குறாங்க.இவங்க இல்லைனா வீடு வெறிச்சுசுனு இருக்கு வந்துட்டாங்கனா என் பீபீ ஏறுது இந்திரா..”,என்ற அன்னையைப் பார்த்தவன் சிறியவர்களை கண்டிக்கும் பார்வை பார்த்தான்.

“சாரி ணா..”

“நாங்க ஒண்ணுமே பண்ணல அம்மா சும்மா கம்ப்ளெயிண்ட் பண்றாங்க”,என்றான் ரகவ்.

நெற்றியைச் சொரிந்தவனாய் தன் உணவை முடித்துவிட்டு தனதறைக்கு கிளம்பி விட்டான் வீரேந்திரன்.

“ஷப்பாடா..வர வர அண்ணாவை பார்த்தாலே கையெல்லாம் உதறுது டா.”

“ம்ம் மா ஆனாலும் உன் மூத்த புள்ளை ரொம்ப தான் பண்றான்.”,என்ற ராகவை முதுகில் அடித்தார் பர்வதம்.

“என்ன டா வாய் நீளுது..”

“பின்ன என்ன மா..சின்ன வயசுல நான் எப்பவுமே அண்ணன் கூடவே தான் இருப்பேன்.நீ என்னை பார்த்துகிட்டதை விட அண்ணா தான் அதிகம்.ஐ அம் மிஸ்ஸிங் தட் ஓல்ட் டேஸ்”,என்ற ராகவை பாவமாய் பார்த்தனர் பெற்றவர்கள்.

“விடு தங்கம்.அவனுக்கு பொறுப்புகள் நிறைய இருக்கு.அதனாலேயே ரொம்ப ஒடுங்கிட்டான்.”,என்றார் ராஜராஜன்.

“சரி விடு ராகவ்..அண்ணாக்கு நம்ம மேல எல்லாம் அதே பாசம் அப்படியே தான் இருக்கு.என்ன வெளிக் காட்டிக்குறது இல்ல.நீ வொரி பண்ணிக்காத..”

“ம்ம்”,எனும் போதே வாசலில் கார் சத்தம் கேட்டது.

“ஹே அக்கா வந்தாச்சு..”,என்றபடி இருவரும் வாசலுக்கு ஓடினர்.

காவ்யா தனது கணவர் ஈஸ்வர் மற்றும் ஒரு வயது குழந்தை ஜிஷாவோடு வந்திருந்தாள்.ஈஸ்வரின் குடும்பம் மங்களூரில் பெரும் வணிகக் குடும்பம்.வெளிநாடுகளிலும் அவர்களின் நிறுவனங்கள் இயங்கி வர ஈஸ்வர் லண்டனில் தனது குடும்பத்தோடு இருந்து தொழிலை கவனித்துக் கொள்கிறான்.

குழந்தையின் முதல் பிறந்தநாளை கோலாகலமாய் கொண்டாடிய கையோடு முடியெடுத்து காது குத்துவதற்காக குலதெய்வ வழிபாட்டிற்கு வந்திருந்தனர்.

“ஜிஷா குட்டி…”,என்றபடி ராகவ் குழந்தையைத் தூக்கிச் சுற்ற திவ்யா சகோதரியைக் கட்டிக் கொண்டாள்.

“ஆக மொத்தம் என்னை வரவேற்கத்தான் இங்க ஆள் இல்ல”,என்று ஈஸ்வர் சோகமாய் கூற திவ்யா சிரித்த வண்ணம்,

“இதே மாதிரி உங்களையும் வெல்கம் பண்ணுவேன் மாம்ஸ்..ஆனா அக்கா என்னை கொன்னுடுவா..”,என்றவள் கண்சிமிட்ட பின்னே வந்த பர்வதம் மகளை அதட்டினார்.

“வேலைகாரங்க முன்னாடி எப்படி பேசணும்னு இல்லையா..போ உள்ளே”,என்றவர் மருமகனை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார்.

அந்த மிகப்பெரும் வரவேற்பரையில் அமர்ந்து அனைவரும் பேசிக் கொண்டிருக்க மாடிப்படிகளில் இறங்கி வருபவனைக் கண்டு அவர்களின் பேச்சு நின்றது.

நேரே ஈஸ்வரிடம் வந்தவன் சிநேகமாய் அணைத்து வரவேற்றான்.தங்கையை தலை வருடியவன் இருவரிடமும் பொதுவாய் பேசிக் கொண்டிருக்க ராகவ் கையிலிருந்த குட்டி தேவதை அழகாய் குலுங்கிச் சிரித்ததில் அனைவரின் கவனமும் அதனிடம் செல்ல அவளோ வீரேந்திரனைப் பார்த்து சிரித்துக் குதித்துக் கொண்டிருந்தாள்.

அவனிடம் வருவதற்காக தாவியவளைக் கையில் வாங்கிக் கொண்டவன் தூக்கிப் பிடித்து விளையாட்டு காட்ட மேலும் மேலும் சிரித்தாள் ஜிஷா குட்டி.

“உன் பொண்ணுக்கு எவ்வளவு கொழுப்பு பாரு..இத்தனை நேரம் கொஞ்சினது நான்.பெரிய மாமாவைப் பார்த்தவுடனே என்னை டீல்ல விட்டுடா..போ உன் பொண்ணை நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.”,என்று காவ்யாவின் காதில் கிசுகிசுத்தான் ராகவ்.

“அவ அப்படியே அப்பாவை மாதிரி பிஸினஸ் மூளை டா ராகவ்.நாளைக்கு மச்சான் மடியில் தான வைச்சு காது குத்தணும் அதான் இப்பவே ஐஸ் வைக்குறா.”,என்று ஈஸ்வர் சிரிக்க வீரேந்தர் குழந்தையின் கன்னத்தில் அழுந்த இதழ்பதித்து தங்கையிடம் கொடுத்தான்.

அதற்குள் வாசலில் இருந்து அவனது அடியாட்களில் ஒருவனான ராஜு,”அண்ணையா…”,என்று குரல் கொடுக்க இந்த கொஞ்ச நஞ்ச இலகு தன்மையும் மறைந்து அனைவருக்கும் பொதுவாய் தலையசைத்து விடைப்பெற்று சென்றான்.

பிள்ளைகள் எல்லாம் ஒன்றாய் மகிழ்ந்திருக்கும் நேரம் மூத்தவன் இப்படி இருக்கிறானே என்று வருத்தப்பட தான் முடிந்தது பெரியவர்களுக்கு.

நாட்கள் எவ்வித மாற்றமுமின்றி அதன் போக்கில் நகர்ந்து கொண்டிருக்க சொந்த வேலையாய் சென்னை செல்வதாய் கூறினார் கணபதி.

“சரி கணக்கு போயிட்டு வாங்க.நம்ம பசங்க இரண்டு பேரைக் கூப்பிட்டுக்கோங்க.”

“அதெல்லாம் எதுக்கு தம்பி நான் பஸ்ஸில் போயிட்டு வந்துருவேன்.இரண்டே நாள் தான்.”

“சரி பத்திரம்”,என்று கூறியவனுக்கு ஏனோ மனதில் ஒரு நெருடல் வந்து போனது.ஏதோ நடக்கப் போவதாய் உள்ளுணர்வு உணர்த்தியது.என்னவென்று புரியாதவனாய் அதை மறந்துவிட்டு தன் வேலைகளைக் கவனித்தான்.

மறுநாள் இரவில் நல்ல உறக்கத்தில் இருந்தவனின் கைப்பேசி அதிர கண் திறக்காமலே அழைப்பே ஏற்று காதில் வைத்தவனுக்கு கணக்குப் பிள்ளையின் பதட்டமான குரல் ஏதோ சரியில்லை என்று அடித்துச் சொன்னது.

“கணக்கு!!!”

“தம்பி என்னைச் சுத்திட்டானுங்க..அந்த ஜானோட ஆட்களானு தெரியல..”

“கணக்கு நீங்க எங்கயிருக்கீங்க..”,என்றபடி கதவைத் திறந்தவன்,

“ராஜு!!”,என்று கர்ஜித்ததில் மொத்தக் கோட்டையும் விழித்துக் கொண்டது.

“அண்ணையா!!!”

“கணக்கு எங்கனு ட்ரக் பண்ணு..”

“ஹலோ கணக்கு உங்களுக்கு ஒண்ணும் ஆகாது எங்கயிருக்கீங்கனு சொல்லுங்க?!”

“தெரியல தம்பி..கண்டிப்பா என்னை விட மாட்டானுங்க..அது கவலையில்ல..என் பொண்ணு பத்திரம் தம்பி.”

“கணக்கு நீங்க..”,அவன் முடிப்பதற்குள் கணபதியின் அலறல் சத்தம் மறுபுறம் கேட்டது.

ஆத்திரத்தில் பால்கனியின் கைப்பிடியை அழுந்தக் குத்தியவன் சட்டையை எடுத்து ஒரு தோளில் போட்டபடி யாருக்கோ முயற்சி செய்த வண்ணம் படிகளில் வேகமாய் இறங்கினான்.

தம்பி தங்கைகள் அத்தனை பேரும் பயந்து போய் ஒதுங்கி நிற்க ராஜராஜனும் பர்வதமும் அவனை நோக்கி ஓடி வந்தனர்.

“என்னாச்சு இந்திரா!!!”

“க…கணக்கை தூக்கிட்டாங்க பா..யாரும் வெளில போகக் கூடாது..நான் திரும்பி வர்ற வரை என் அனுமதி இல்லாம எதுவும் நடக்கக் கூடாது.

ரவி வீட்டைப் பார்த்துக்கோ.ஏய் வீட்டைச் சுத்தி காவலுக்கு ஆள் போடு.கேமிரா எல்லாம் சரியா இருக்கா..ராஜு வண்டியை எடு”,என்று ஒன்றன் பின் ஒன்றாய் ஆணைகளைப் பிறபித்த வண்ணம் வாசலுக்கு ஓடினான்.

“அண்ணையா நம்ம ஆளுங்க அங்க போயிட்டாங்க ஆனா..அதுகுள்ள..” “டேமிட்…”,என்று உறுமியவனிடம் பேச பயந்தவனாய் தன்னிருக்கையில் அமர்ந்து சாலையை வெறித்தான்.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode