திவ்யா உமையாள் ரவி அனைவரும் வந்திருக்க காவ்யாவும் அங்கிருந்து கிளம்பியிருந்தாள்.

அவசர சிகிச்சைப் பிரிவில் வீரேந்திரனைப் பரிசோதித்த மருத்துவர்கள் எந்தப் பிரச்சனையும் இல்லை என்பதை உணர்ந்து பலகீனத்திற்கான மருந்துகளை மட்டும் ட்ரிப்சில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.

“மிஸர்ஸ் வீரேந்திரன்,ஹீ இஸ் பக்..மதியத்துக்கு மேல வார்ட்க்கு மாத்திடலாம்.இரண்டு நாள் ட்ரிப்ஸ் ஏறட்டும் அப்செர்வேஷன்ல பார்த்துட்டு வீட்டுக்கு கூட்டிட்டு போங்க”,என்ற டாக்டருக்கு நன்றி தெரிவித்து விட்டு அப்படியே சேரில் அமர்ந்து விட்டாள் ஏழிசை.

தன்னைச் சுற்றி நடப்பதெதற்கும் பதிலளிக்காதவளாய் விழி மூடிக் கொண்டாள்.யார் கேட்பதற்கும் பதிலில்லை ஒரு வார்த்தை வாய் திறக்கவில்லை.

ராகவும் திவ்யாவும் அவளை விட்டு நகராமல் அசைத்தெடுக்க எதற்குமே அசைந்தாளில்லை.அவள் மனதில் என்ன ஓடுகிறது என்று புரியாதவர்களாய் அவளை பேச வைக்க வழி தெரியாமல் தடுமாறினர்.

மதியத்திற்கு மேல் வீரேந்திரன் அறைக்கு மாற்றப்பட்டிருக்க அயர்வாய் படுத்திருந்தவனைச் சுற்றி நின்று குடும்பமே கண்ணீர் மல்க நலனை விசாரித்தது.

அனைவருக்கும் பின்னால் இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்த ஏழிசையையே தேடித் தவித்தான் ஆடவன்.

அனைவருக்கும் அவனது தவிப்பு புரிய பர்வதம் ஏழிசையின் கையில் காலையிலிருந்து இறுகப் பற்றியிருந்த குழந்தையை வாங்கிக் கொண்டு அவளைக் கைப் பிடித்து அழைத்தார்.

அவனருகில் வந்து மண்டியிட்டவளுக்கு இன்னமும் அவன் முகம் பார்க்கும் துணிவு வரவேயில்லை.

“இ..சை..”,அத்தனை சோர்வாய் மெலிந்து நலிந்து போன அந்தக் குரலுக்குத் தான் அத்தனை சக்தியும், காலையிலிருந்து உடையக் காத்திருந்த இதயம் இதோ அவளது உயிரானவனைக் கண்டு சரணடைந்து விட்டது.

நான்கு மாத பிரிவு பயம் கோபம் ஆற்றாமை என அனைத்தும் அழுகையாய் கரைபுரண்டு பெருங்குரலெடுத்து கதறியிருந்தாள்.

முகத்தை கைகளுக்குள் புதைந்து உடல் குலுங்க கதறுபவளைப் பார்த்த அனைவருக்கும் கண்ணீர் அதுவாய் நிற்காமல் வழிந்தது.ராஜராஜன் பொறுக்க மாட்டாமல் வெளியே சென்று விட்டிருந்தார்.

வீரேந்திரனுக்கோ அவளை அணைத்து ஆறுதல் கூற முடியாமல் இருப்பதை நினைத்து மனம் வலித்தது.

அவர்களுக்குத் தனிமை தர நினைத்தவர்களாய் அனைவரும் சில நொடிகளில் வெளியேறியிருக்க வாய் திறந்தாள் மங்கையவள்.

“வீரா..”

“…”

“வீரா..உங்களுக்கு இந்த உரிமையை யார் கொடுத்தது?யாரைக் கேட்டு இந்த நிலைமைக்கு போனேள்?”

“….”

“உங்க இசையைப் பத்தி நினைச்சு பாத்தேளா?”

“….”

“இன்னும் கொஞ்ச நாள் நீங்க கண்ணைத் திறக்காம இருந்திருந்தா நிச்சயமா நான் செத்துப் போயிருப்பேன் வீரா..”,என்றவள் உடல் இன்னமும் நடுக்கத்தில் தான் இருந்தது.

நிறைய நிறைய பேச வேண்டும் ஆதரவாய் ஆயிரம் முத்தங்களைக் கொடுக்க வேண்டும் ஆனாலும் உடலில் திரானியில்லாமல் இருந்தவனுக்கு எப்படியாவது அவளை சமாதானப்படுத்த வேண்டும் என்ற உந்துதல்.

“இசை..”

“…”

“போ…ன்…”,என்றதும் அந்த களையிழந்த கண்களில் தான் எத்தனை ஒளி.அவளுக்குத் தெரியும் அவளோடு இருக்கும் நேரத்தில் அவனது அலைப்பேசிக்கு ஒரே ஒரு வேலை தான்.

அவனே அவளுக்காக பாடுவதாய் ஒரு பாடல் அதை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருந்த நாட்கள் மனக்கண்ணில் மின்னலாய் தோன்றி மறைந்தன.

சற்றும் தாமதியாது அந்தப் பாடலை போட்டு அவன் எதிர்பர்க்கும் வரிகளை வைத்துவிட்டு சத்தத்தை அதிகரித்திருந்தாள்.

என்னாளும் நீதான்டி என்னோட ராசாத்தி

பொன்னாட்டம் நெஞ்சோடு வச்சேனே காப்பாத்தி

எங்கே நான் போனா என்ன

எண்ணம் யாவும் இங்கேதான்

உன்பேர மெட்டுகட்டி

உள்ளம் பாடும் அங்கேதான்

என்னாச காத்தோடு போகாது

என்னாளும் என்வாக்கு பொய்க்காது

பாடல் முடியும் வரை இருவரின் விழிகளும் மற்றவரின் மீதே நிலைத்திருந்தன.வீரேந்திரன் மெதுவாய்,

“இனிமே அழாத டி மாமி..உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன்.”,என்றவனின் கையில் அழுந்த இதழ் பதித்தவளின் முகத்தில் கண்ணீரின் சுவடே இல்லாமல் போயிருந்தது.

எத்தனையோ அழைத்தும் ஷ்யாமும் ராஜுவும் தங்கள் முதலாளியை பார்க்க மறுத்து விட்டனர்.அப்படி சோர்வாய் படுத்திருப்பவனை பார்க்கும் சக்தி தங்களுக்கு இல்லை என்று தோன்றியது.

இரண்டு நாட்களும் ஏழிசை கணவனை விட்டு நகரவே இல்லை.அவனுக்கான அனைத்தையும் பார்த்து கவனித்துக் கொண்டாள்.

வீரேந்திரனும் மனைவியைத் தான் கவனித்திருந்தான்.அவளது உடையும் முகமும் எத்தனை மாறியிருக்கிறது.பழைய ஏழிசையாய் அவளை காண மனம் ஏங்கியது.

இன்று வீட்டிற்குச் செல்லலாம் என்று கூறியிருக்க கட்டிலில் அமர்ந்திருந்தவனைப் பார்த்தவாறே ஏழிசையின் பின்னால் வந்து நின்றனர் ஷ்யாமும் ராஜுவும்.

“இரண்டு பேரும் நல்லாயிருக்கீங்களா?”,என்று புன்னகையோடு கேட்டவனை கட்டிக் கொள்ள பரபரத்தது ஷ்யாமிற்கு.

வாய்க்கு வாய் மச்சானுக்காக மச்சானுக்காக என்று ஏழிசையை சமதானப்படுத்தக் கூறியவனுக்கு மனதளவில் இப்போது எதிரே இருப்பவன் தங்கையின் கணவனாய் தான் தோன்றினான்.

“இப்படி பயமுறுத்திட்டீங்களே சார்.”,என்ற ஷ்யாமிற்கு குரல் கரகரத்தது.மெதுவாய் கட்டிலை விட்டு எழுந்தவன் ஷ்யாமை பார்த்து அருகில் அழைக்க,

“சார்..”,என்றவனை தன்னோடு சேர்த்தணைத்து முதுகில் தட்டிக் கொடுக்க ஷ்யாமோ இருக்கும் இடம் மறந்து உடல் குலுங்க கண்ணீர் வடித்தான்.

ஏழிசைக்கு மனமெல்லாம் கனத்து போனது.தான் கூட அழுது தீர்த்து பாரம் குறைத்த நாட்கள் உண்டு.ஆனால் இந்த நான்கு மாதங்களும் ஷ்யாமின் உழைப்பு வெறும் முதலாளி விசுவாசத்தையும் தாண்டி தன் உடன் பிறந்தவன் போல் அல்லவா தன்னை வழி நடத்தியிருந்தான்.

அத்தனை கவலைகளையும் உள்ளுக்குள் புதைத்து அவளை சோர்ந்து விடமால் பார்த்துக் கொள்வதிலேயே கவனமாய் இருந்தவனுக்கு இந்த அணைப்பும் அழுகையும் நிச்சயம் தேவை என்று எண்ணினாள்.

சில நொடிகளில் தன்னை நிதானப்படுத்தியவன் நகர்ந்து கொள்ள ஒன்றும் பேசாமல் ராஜுவின் கரம் பிடித்து தன்னவனின் அருகில் நிறுத்தினாள் ஏழிசை.

அதே புன்னகை நிரம்பிய முகம் சிறு தயக்கம் கூட இல்லை அந்த ஆறடி ஆண்மகனை மார்போடு சேர்த்தணைத்திருந்தான் வீரேந்திரன்.

ராஜுவிற்கு இதயமே நின்று போனது போன்ற உணர்வு.தன் முதலாளி தன் தெய்வம் தன்னை கட்டிக் கொண்டு நிற்பதை அவனால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை.உறைந்து போய் நின்றவனின் தோளைத் தட்டியவளாய்,

“அழுதுடு ராஜு..மனசு லேசானா தான் மூளை இன்னும் சுறுசுறுப்பாய் வேலை செய்யும்.உங்க அண்ணையாவுக்கு யானை பலமே நீ தான்”,என்றவளின் கரங்களை தன் முகத்தில் ஏந்தி கண்ணீர் விட்டான் அந்த வளர்ந்த குழந்தை.

“அண்ணையா..அண்ணியை துடிக்க வைச்சவங்க யாரும் உயிரோட இருக்கக் கூடாது. உங்க கட்டளைக்காக காத்துருக்கோம்.பழைய அண்ணையா வா உங்களைப் பார்க்கணும்.”,என்றவனின் கண்களில் பழைய வெறி திரும்பியிருந்தது.

கோட்டையை அடைந்தவர்களை மொத்தக் குடும்பமும் வரவேற்க காத்திருந்தது.பர்வதம் ஆரத்தி கரைத்து உள்ளே அழைத்துச் செல்ல ராகவ் அண்ணணின் அருகிலேயே அமர்ந்து கொண்டான்.

“அண்ணா எவ்வளவு பயந்துட்டோம் தெரியுமா..ஏஞ்சல் ரொம்ப பாவம் அண்ணா..தாரு குட்டிக்கு தாத்தா பாட்டி தான் எல்லாமே.அண்ணிக்கு உன்னை அந்த நிலைமையில் பார்க்க சக்தியே இல்லை ணா.இன்னொரு தடவை இப்படி பண்ணாத ணா..”,என்றவன் தமையனின் கரங்களை இறுகப் பற்றிக் கொண்டான்.

வேணியும் கற்பகமும் ஓடி வந்து ஏழிசையைக் கட்டிக் கொண்டனர்.

“அம்மா…”,என்று நடுங்கும் குரலில் அழைத்தவர்களை இறுக அணைத்துக் கொண்டாள் ஏழிசை.

யாருக்கு யார் சமாதானம் கூறுவதென்றே பபுரியாமல் ஒருவரைப் பார்த்து மற்றவர்கள் தெளிந்து கொண்டிருந்தனர்.

“எனக்கு பூ கட்டி கொண்டு வரியா கற்பகம்”,என்ற ஏழிசையைப் பார்த்து முகம் மலர தோட்டத்திற்கு ஓடினாள் கற்பகம்.

“பசிக்குது வேணி..”,அவ்வளவே தான் அடுத்த நொடி சமையலறையில் நின்றிருந்தாள் வேணி.

வெறும் பார்வையாளனாய் அனைத்தும் பார்த்தவனுக்கு ஒன்று மட்டும் புரிந்தது.அவனை விட ஆயிரம் மடங்கு வலிகளைத் தாங்கியவள் அவனின் மனைவி என்பது.

ரவியும் உமையாளும் கூட கோட்டைக்குத் திரும்பியிருந்தனர்.

ஏழு மாத வயிறோடு நின்ற உமையாளை அப்போது தான் சரியாய் கவனித்தவளாய் அவளது வயிற்றை வருடிக் கொடுத்தாள் ஏழிசை.

மனைவியோடு மாடியேறியவனுக்கு மனம் கனத்திருந்தது.அதைவிட அதிகமாய் ஏழிசைக்கு.

இத்தனை மாதங்கள் கழித்து தன்னவனோடு அறைக்குள் நுழைந்தவளுக்கு அழுகையை கட்டுப்படுத்தும் வழி தெரியாமல் தவித்தாள்.

“மாமி..”

“இந்த நாளுக்காக எத்தனை நாள் ஏங்கியிருக்கேன் தெரியுமா..”

“…”

“தாரகை இத்தனை மாசமும் இழந்த நம்ம அன்பும் அரவணைப்பும் இனி ஒரு ஒரு நிமிசமும் அவளுக்கு கிடைக்கணும் வீரா.”

“…”

“அவளை கையில் தூக்கினாலே உங்க நியாபகம் தான் வரும்.இங்க வந்தாலும் ஒவ்வொரு இடத்திலும் உங்க நியாபகம்.எல்லாமே நினைவுகளா மட்டுமே வைச்சுண்டு வாழ்றது கொடுமை தெரியுமா..”

“…..”

“என் கூடவே இருங்கோ ப்ளீஸ்..”,என்றவள் அவனோடு கூடு கண்ட பறவையாய் ஒண்டிக் கிடந்தாள்.

வீரேந்திரனை ஓய்வெடுக்கக் கூறிவிட்டு குளித்து வருவதாய் கூறிச் சென்றாள் ஏழிசை. வெளியே வந்தவள் பழைய ஏழிசையாய் மாறியிருந்தாள்.

அழகிய கரும்பச்சை நிற பட்டுடுத்தி ஈரத் தலையை இரு முடி எடுத்துக் கட்டி தளரப் பின்னியிருக்க கற்பகம் கொடுத்த மல்லிச் சரத்தை சூடிக் கொண்டு குங்குமத்தை நெற்றி வகிட்டில் வைக்கும் போது உதடு துடித்தது.

தன்னெதிரில் வந்தவளைப் பார்த்தவனின் முகத்தில் அழகானதொரு புன்னகை.

“நான் போய் குழந்தையை கூட்டிண்டு வரேன்.நீங்க படுத்துருங்கோ”,என்று கூறிவிட்டு கீழேச் சென்றாள்.

வரவேற்பறையில் அமர்ந்திருந்த அனைவரும் கொலுசு சத்தத்தில் திரும்ப எதிரில் வந்தவளைப் பார்த்து மனம் கொள்ளா மகிழ்ச்சியடைந்தனர்.

ராகவ் ஓடிச்சென்று அவளைக் கட்டிக் கொண்டு அழுது தீர்த்தான்.கூடவே இருந்து அவளின் இன்னல்களைக் கண்கூட கண்டவன் ஆயிற்றே..

“ராகவா…”

“அண்ணி எப்பவும் இப்படியே இருங்க..அண்ணன் எந்தளவு முக்கியமோ அதே அளவு உங்க சந்தோஷமும் எங்களுக்கு முக்கியம்.ப்ளீஸ் அண்ணி..”

“என் உயிர் என்கிட்ட வந்துட்டுத்து ராகவா..இத்தனை நாள் இருந்த ஏழிசை வெறும் நடை பிணம்.இனி என்னைக்கும் நான் இப்படி தான் இருப்பேன்.அழாத..நீயும் போய் ஓவியாவைப் பார்த்துட்டு வா.ஆபீஸெல்லாம் கொஞ்ச நாளைக்கு வேண்டாம்.”,என்றவளைப் பார்த்து புன்னகைக்க முயன்றான்.

பர்வதத்திடமும் ராஜராஜனிடமும் ஆசீர்வாதம் வாங்கியவளை தன்னருகில் அமர்த்திக் கொண்டார் ராஜராஜன்.

“போதும் மா நீ பட்ட கஷ்டமெல்லாம்.இனி இந்த அப்பா இருக்குறவரை உன் கண்ணிலிருந்து கண்ணீரே வரக் கூடாது”

“ப்பா…”

“உன்னை இப்படி பார்க்கணும்னு நான் வேண்டாத கடவுள் இல்லை ஏழிசை.இனி எதுக்கும் கலங்கக் கூடாது.சரியா?!”

“நிச்சயமா இப்படியே இருப்பேன் பா..அழ மாட்டேன்”,என்று புன்னகைத்தவள் தன்னை நோக்கி கைகளை உதறிக் கொண்டிருந்த மகளைப் பார்த்து கையை நீட்ட பாய்ந்து அவளிடம் வந்தது குழந்தை.

“கண்ணா உன்னை விட பாவம் இவ தான்.உன் பாசமும் ஸ்பரிசமும் இல்லாம குழந்தை ஏங்கி போயிருக்கா”,என்ற பர்வதத்திற்கு குரல் நடுங்கியது.

“என்னை விட ஒரு நல்ல அம்மாவோட தான் மா அவ இத்தனை மாசமும் இருந்துருக்கா.நீங்க வருத்தப்படாதேள்.இனி அவளை விட்டு எங்கேயும் போக மாட்டேன்.”,என்றவள் குழந்தையின் கன்னத்தில் அழுந்த இதழ் பதித்தாள்.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode