8
வேணி அவசரமாய் உள்ளே சென்று சிறு துணியில் காசு முடிந்து கொள்ள பர்வதம் பூஜையறையில் இருந்து விபூதி எடுத்து வந்து ஏழிசைக்கு பூசிவிட்டார்.பெற்றோரோடு காரில் கிளம்பியவனின் முகத்தில் பயம் மண்டிக் கிடந்தது.
அத்தனை வலியிலும் தன்னவனைக் கவனித்தவள்,”ஏன் இப்படி இருக்கேள்..இன்னும் மூணு பிள்ளை பெத்துக்கணுமோ இல்லையோ”
“மாமி பத்திரமா என்கிட்ட வந்துருங்க டி ரெண்டு பேரும்..”
“பொண்ணோட பேர் என்ன வீரா?”,எனும்போதே வலியில் அவனது கையை இறுகப் பற்றினாள்.
“அதெல்லாம் நீ தான் சொல்லணும்.எனக்கு நீ எப்போ சாதாரணமா வருவ என்கிட்ட..”,என்றவனின் கண்ணில் கண்ணீர் துளிர்த்தது.
வண்டி ஓட்டுனரைக் கவனித்தவளாய் கண்ணாலேயே வேண்டாம் என்பதாய் கட்டளை சென்றது தன்னவனுக்கு.
மருத்துவமனையை அடைந்து அவளை உள்ளே அனுப்பிவிட்டு அமர்ந்தவனுக்கு அவள் பிடித்திருந்த கையெல்லாம் நடுங்கியது.
ராஜுவிற்கும் மற்ற பாதுகாவலர்களுக்கும் அண்ணையா என்ற ஒருவனைப் பார்க்க ஆச்சரியமாய் இருந்தது.எத்தனை பேர் முன் வந்தாலும் எதிர்த்து இரும்பென நிற்பவன் தன் மனைவியின் பிரசவத்திற்கு இப்படி தவிக்கிறானே என்று எண்ணியவர்களுக்கு அவர்களின் பாசமும் காதலும் யாரும் கூறாமலே புரிந்தது.
ராஜராஜன் பிள்ளைகளுக்கு அழைத்து விஷயத்தைச் சொல்ல பர்வதமோ கூப்பிய கையை இறக்கவே இல்லை.கிட்டத்தட்ட ஆறு மணி நேரம்.இருமுறை உள்ளே சென்று பார்த்து வந்தான் வீரேந்திரன்.
அவளை அப்படி ஒரு சோர்வோடு அவன் பார்த்ததாய் நினைவே இல்லை.போராடிக் களைத்திருந்தாள்.அந்த நேரத்திலும் அவனைப் பார்த்ததும் ஒளி வீசிய அந்த கண்களை விட்டு வீரேந்திரனின் பார்வை நகரவேயில்லை.
இருவரும் ஒரு வார்த்தையும் பேசிக் கொள்ளவில்லை.கைப்பிடித்த வண்ணம் அவள் விழி பார்த்தே அமர்ந்திருந்தான்.சட்டென சிறுது நேரத்தில் வலி அதிகமாக மருத்துவர்கள் அவனை வெளியே அனுப்பிவிட்டு தங்கள் வேலையைக் கவனிக்கத் தொடங்கினர்.
அடுத்த அரை மணி நேரத்தில் தன்னவளின் உதிரத்தோடு செக்க சிவந்த ரோஜா பூவாய் அவனது கரங்களில் இருந்தாள் வீரேந்திரனின் மகள்.
“இசை எப்படியிருக்கா?”
“நல்லாயிருக்காங்க சார் கொஞ்ச நேரத்துல போய் பார்க்கலாம்.”,என்றபடி குழந்தையை குளிப்பாட்ட வாங்கிச் சென்றனர்.
டெலிவரி வார்டிற்கு வெளியில் இருந்த தனியறையில் இருந்தவன் நாற்காலியில் அமர்ந்து முகத்தை கரங்களுக்குள் புதைத்துக் கொண்டான்.குழந்தையை குளிப்பாட்டி பூத்துவாலையில் சுற்றி கொண்டு வந்து அவனிடம் நீட்ட பத்திரமாய் தன் பொக்கிஷத்தை வாங்கிக் கொண்டவன் வெளியே வந்த நேரம் மொத்தக் குடும்பமும் அங்கிருந்தது.
“என் பொண்ணு மா..”,என்றவனின் குரல் கரகரத்து ஒலித்தது பர்வதத்திடம்.ராகவ் பர்வதத்தை இடித்துக் கொண்டு முன்னே வந்தான்.
“நான் தான் முதல்ல தூக்குவேன்.”
“டேய் பார்த்து பத்திரம் டா.”
“ம்மா..அப்படியே அண்ணி மாதிரியே இருக்கா மா..”,என்றவனின் குரலில் சந்தோஷம் கொப்பளித்தது.அனைவரும் சின்ன மகாராணியை சூழ்ந்து கொள்ள வீரேந்திரன் தன் மகாராணியைத் தேடிச் சென்றான்.
அவனையே எதிர்பார்த்து வாசலிலேயே பார்வையை வைத்திருந்தவள் தன்னவனைக் கண்டு புன்னகைத்தாள்.
“பொண்ணு யாரை மாதிரி இருக்கா?”
“நான் கேட்டது மாதிரியே குட்டி இசை டி..”,என்றவன் அவளது கையை எடுத்து கரங்களுக்குள் வைத்து அழுந்த இதழ் பதித்தான்.
“அப்போ அடுத்தது எனக்காக வீரா வேணும்..”,என்றவளின் குரலில் லேசாய் சிரித்தவனைப் பார்த்து தானும் புன்னகைத்தாள்.
“ஐ லவ் யூ இசை..”,என்றவனுக்கு அதற்கு மேல் வார்த்தைகள் வர மறுத்து தான் போனது.அங்கு ராஜுவும் மற்றவர்களும் மருத்துவமனையையே ஒரு வழி ஆக்கிக் கொண்டிருந்தனர்.
கண்ணில் படுபவருக்கெல்லாம் இனிப்புகளைக் கொடுத்துக் கொண்டிருந்தவர்களைப் பார்த்து புன்னகை அரும்பியது வீரேந்திரனுக்கு.
காவ்யாவும் ஈஸ்வரும் அழைத்து தங்கள் வாழ்த்துக்களைக் கூற அறைக்கு வந்த பின் ஏழிசையை பார்க்க அனைவருமாய் உள்ளே சென்றனர்.
“எப்படி இருக்க டா மருமகளே”,என்ற ராஜராஜனைப் பார்த்தவள் பர்வதத்தின் கையிலிருந்த சின்னஞ்சிறு பொக்கிஷத்தைப் பார்த்து புன்னகைத்தாள்.
“ரொம்ப படுத்திட்டா பா..”,என்றவளுக்கு கண்களின் ஓரம் ஒரு துளி நீர்.
உமையாளும் திவ்யாவும் அவளருகில் அமர்ந்து கொள்ள ரவீந்திரனும் ராகவும் சின்னவளிடமிருந்து விழியகற்றவில்லை.
“ஏஞ்சல் அப்படியே டிட்டோ உங்க செராக்ஸ் மாதிரி இருக்கா..”
“அண்ணி உடம்பை பாத்துக்கோங்க..நாங்க எல்லாம் குட்டியை பார்த்துக்குறோம்.”,என்ற தம்பிகளைப் பார்த்து ரசித்தவாறே உள்ளே வந்தான் வீரேந்திரன்.
“ஏழிசை கண்ணா உங்க இரண்டு பேரையும் பார்க்குறதுக்குள்ள இந்திரா ஒரு வழி ஆகிட்டான் டா..இவனையே அசைச்சு பார்க்க ஒரு ஆள்னா உன் பொண்ணு தான்”,என்ற பர்வதத்தைப் பார்த்து சிரித்தவள் தன்னவனை பார்க்க அவனும் அவளைதான் பார்த்திருந்தான்.
அடுத்த மூன்று தினங்களில் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டனர் ஏழிசையும் அவளது செல்ல மகளும்.அத்தை சித்தப்பா தாத்தா பாட்டி அனைத்தும் பத்தாது என வேணியும் கற்பகமும் பம்பரமாய் சுழன்றனர்.
குழந்தைக்கு பசியாற்ற மட்டுமே ஏழிசையின் வேலை.மத்த நேரமெல்லாம் மாற்றி மாற்றி மற்றவர்கள் கவனித்துக் கொள்ள வீராவிற்கோ இருவரையும் பார்ப்பதே முடியாத காரியமாய் இருந்தது.
கீழீருந்த அறையையே பர்வதம் அவர்களுக்கென தயார் செய்து கொடுத்திருக்க ஏழிசையோ வழக்கம் போல் வீராவையேத் தேடினாள்.
“என்னடி உன்னையும் என் பொண்ணையும் கண்ணுலேயே காட்ட மாட்றாங்க..”
“ம்ம் கேட்டா நான் நன்னா ரெஸ்ட் எடுக்கணுமாம்.”,என்றவள் மெதுவாய் எழுந்து அமர்ந்தாள்.
“வீரா நம்ம ரூம்க்கே போலாமா..நேக்கு இங்க தூக்கமே வரமாட்றது.”
“உன் உடம்பு தேறணும் மாமி..கொஞ்ச நாள் தான்.”
“நீங்க இல்லாம ஒண்ணும் தேறாது..இராத்திரியாவது இங்க வாங்கோ தூங்குறதுக்கு.ப்ளீஸ்..”
“நீ சொன்னா நான் வரப்போறேன்.நீ எதையும் போட்டு குழப்பிக்காத.இங்கேயே தான் டி இருக்கேன்.”
“ம்ம்..”
“மாமி..”
“ம்ம்..”
“ஏன் டி சோர்ந்து போற உடம்பு பழையபடி ஆகட்டும் எல்லாம் சரி ஆகிடும்..”
“எதோ நம்ம ரெண்டு பேரும் தள்ளி போனா மாதிரி இருக்கு வீரா.”
அவள் கூறுவதன் பொருள் புரிந்தாலும் அவளை சாதாரணமாக்க எண்ணியவனாய் இருவருக்குமான இடைவெளியை சுட்டிக் காட்டிச் சிரிக்க ஏழிசை அவனை முறைத்தாள்.
“சரி டி டென்ஷன் ஆகாத ஒரு பத்தே நாள் பொறுத்துக்கோ நாம ரூம்க்கு போயிடலாம் சரியா..”
“சரி”,என்றவளின் குரல் குழந்தையாய் ஒலித்தது.எத்தனை வயதானாலும் இவளுக்கு தன்னைத் தவிர யாரும் தேவைப்பட போவதில்லை என்று உணர்ந்தவனுக்கு புன்னகையையும் மீறிய ஏதோ ஒரு அழுத்தம் மனதில் எட்டிப் பார்த்தது.
பதினாறாவது நாள் முடிந்திருக்க ஏழிசை சற்றே உடல் தேறியிருந்தாள்.பிள்ளையின் பெயர் சூட்டு விழா கோலாகலமாக ஏற்பாடு செய்ப்பட்டிருந்தது.
கோட்டையில் மட்டுமின்றி சேதுபதி நிறுவனங்களில் பணிபுரியும் அனைவருக்கும் மதிய விருந்து சாப்பாடு தயாராகியது.
கீழிருந்த அறைக்குள் வந்தவனுக்கு உற்சாகமாய் தன்னை கண்ணாடியில் பார்த்திருந்த மனைவியைப் பார்த்து புன்னகை அரும்பியது.மகளின் விழாவிற்கான உற்சாகத்தையும் தாண்டி இன்று மாலை தான் தனதறைக்குச் செல்லப் போகிறாள் என்பதற்கான உற்சாகம் அது.
“ஓய்..”,என்றவனின் புறம் திரும்பியவள் தாய்மையின் வனப்பில் ஜொலித்தாள்.வீரேந்திரன் அவளைப் பின்னிருந்து லேசாய் அணைத்துக் கொள்ள இன்னுமாய் அவனோடு ஒன்றிக் கொண்டாள்.
“நல்லா இருந்த ஏன் மாமி ஏன் இப்படி ஆகிட்டா?”,என்றவனின் கேலியில் அவனைத் திரும்பி பார்த்தவள்,
“நீங்க உள்ளுக்குள்ளேயே வைச்சுண்டு இருக்கேள்..நேக்கு அந்த சாமர்த்தியம் இல்ல அவ்வளவு தான்..”,என்றதும் சத்தமாகவே சிரித்தான்.
தன்னவள் குழந்தையை கைகளில் ஏந்திக் கொள்ள அவர்களோடு வெளியே வந்தவனுக்கு மனம் மகிழ்ச்சியில் தழும்பியது.
தொட்டிலில் குழந்தையை படுக்க வைத்துவிட்டு இருவருமாய் மனையில் அமர சம்பிரதாயங்கள் முடிந்து குழந்தையின் பெயரை வீரேந்திரனிடம் கேட்டார் புரோகிதர்.
அவனோ எவ்வித தயக்கமுமின்றி மனைவியை நோக்கினான்.பெயர் விஷயத்தில்,குழந்தையை வலிக்க வலிக்க பெற்றவளுக்கு இல்லாத உரிமை தனக்கில்லை என்று விட்டான் ஏழிசையிடம்.தற்போது அவனுக்குமே ஆர்வம் தான் தன் மகளின் பேரைக் கேட்பதற்கு.
“தாரகை வீரேந்திர சேதுபதி”,என்று ஏழிசை கணவனின் காதிற்குள் மெதுவாய் கூற அதை குழந்தையின் காதினில் கூறியவனின் முகத்தில் நிலைத்த புன்னகை ஒன்று குடியேறியது.
வீரேந்திரன் மகளை தன் மடி விட்டு அதன்பின் நகர்த்தவே இல்லை.அதுவும் கடந்த பத்து நாளும் ஏழிசையின் வாடிய முகத்தையே பார்த்திருந்தவனுக்கு தான் குழந்தையை சற்று அதிகமாய் கொஞ்சினால் கூட அவள் வருந்துவாளோ என்று எண்ணியவனாய் அவளையே சுற்றி வந்தான்.
இன்று மனைவியின் தெளிந்த முகம் மனதை இலகுவாக்க மகளை நகர்த்தவே இல்லை.அத்தனை பேரையும் அமர்ந்த இடத்திலிருந்தே விடை கொடுத்து அனுப்பினான்.
எத்தனை அழைப்பு வந்தாலும் அப்படியே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான்.மதிய உணவு வேளை முடிந்து தனதறைக்கு வந்த மறுநொடி வீரேந்திரனை இறுக அணைத்துக் கொண்டாள்.
“பார்த்து டி..”
“அதெல்லாம் பார்த்துட்டு தான் இருக்கேன்.”,என்றவள் மகளைப் பார்த்து விட்டு தன்னவனிடம் உதடு சுழிக்க வீரேந்திரனோ சத்தமாய் சிரித்தான்.
“நான் தான் சொன்னேனே எனக்கும் அவளுக்கும் சண்டை தான் வரப் போறது.”
“ரொம்ப பண்ணாத மாமி..அவ பாவம்..”
“அப்போ நான்?!”
“நீ என் வாழ்க்கையோட ஒட்டு மொத்த புண்ணியம் டி பொண்டாட்டி..”,என்றவன் நெற்றியில் அழுந்த இதழ் பதித்தான்.
தாரகைக்கு இரண்டு மாதங்கள் முடிவடைந்திருந்தது.காலையில் இருந்தே மனதே சரியில்லாமல் பூஜையறையிலேயே இருந்தாள் ஏழிசை.
அவள் வரும் வழி தெரியாமல் குழந்தையை எடுத்துக் கொண்டு கீழே சென்றவன் பர்வதத்திடம் குழந்தையைக் கொடுத்துவிட்டு பூஜையறைக்குள் நுழைந்தான்.
“இசை..”,கணவனின் அழைப்பில் விழியைத் துடைத்தவளாய் எழுந்து நிற்க வீரேந்திரனோ பதறிப் போனான்.
“என்ன டி?ஏன் அழற?!”
“…”
“உன்னை தான கேட்குறேன்..என்னாச்சு?!”
“என்னனு தெரியலை மனசெல்லாம் படபடப்பா இருக்கு..எதோ சரியா படலை வீரா..”,என்றவளுக்கு மீண்டும் அழுகை பொங்கி வந்தது.
“இசை…”
“இல்லை என்னனு நேக்கே தெரியலை..இன்னைக்கு மட்டும் வெளியே போகாதேளேன்.”
“மாமி நிறைய வேலை இருக்கு..மீட்டிங் இருக்கு..புரிஞ்சுக்கோ டி..சாயந்திரம் சீக்கிரம் வந்துருவேன்..ப்ளீஸ்..”
“சரி பார்த்து பத்திரமா போயிட்டு வாங்கோ”,என்றவள் விபூதியை அவன் நெற்றியில் இட்டு அனுப்பினாள்.
யாரோடும் பேசாமல் இயந்திர தனமாய் செயல்பட்டவளைப் பார்த்தவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியாத நிலை.ராகவ் கூட தன்னால் முடிந்த மட்டும் சிரிக்க வைக்க முயற்சி செய்தாலும் எதுவும் வேலைக்கு ஆகவில்லை.
பர்வதமும் ராஜராஜனும் அவளைத் தங்கள் அருகிலேயே அமர்த்திக் கொண்டு ஆயிரம் சமாதானம் கூறினாலும் மனம் மட்டும் தெளிவேனாய் என்றது ஏழிசைக்கு.
தன்னவனைப் பற்றிய சிந்தனைகள் சுற்றியிருக்க ஏதோ ஒரு உந்துததில் கணவனுக்கு அழைத்தாள்.
“சொல்லு இசை..”
“எங்க இருக்கேள்..”
“ஒருத்தரை மீட் பண்றதுக்காக போயிட்டு இருக்கேன் என்ன டி ஆச்சு உனக்கு..”
“இல்ல இல்ல சும்மா தான் பண்ணிணேன் வைச்சுடுறேன்”,என்று அழைப்பைத் துண்டித்ததும் கார் நடுவழியில் நின்றிருந்தது.
“என்னாச்சு ராஜு?”
“தெரியல அண்ணையா இதோ இப்போவே பாக்குறே…”,என்றவனும் ட்ரைவரோடு சேர்ந்து இறங்கினான்.ட்ரைவர் காரை பரிசோதிக்க பின்னிருந்த பாதுகாவலர் வண்டிக்குச் சென்று ஏதோ கேட்டுக் கொண்டிருந்தான் ராஜு.
அந்நேரம் வீரேந்திரனின் கைப்பேசிக்கு அழைப்பு வர ஏற்று காதில் வைத்தவன் ஒரு நொடி அதிர்ந்து சுதாரிப்பதற்குள் முன்னே வந்த லாரி அவனது காரில் படுவேகமாய் மோதியிருந்தது.
“அண்ணையா!!!”,என்றபடி பின்னிருந்து அனைவரும் ஓடி வர லாரியின் ட்ரைவரோ கழுத்தை அறுத்துக் கொண்டு அங்கேயே சரிந்திருந்தான்.
அனைவருமாய் கவிழ்ந்திருந்த காரைத் திருப்பி கதவை உடைத்து வீரேந்திரனை வெளியில் எடுக்க தலையில் கொட்டும் இரத்தத்தோடு மயங்கியிருந்தான் அவர்களின் அண்ணையா.
அந்த இடமே களேபரமாகியிருந்தது.ராஜு நடுங்கும் கைகளால் கோட்டைக்கு அழைத்தான்.போனை எடுத்த கற்பகம் ஏழிசையிடம் கொடுக்க விஷயத்தைக் கேட்டவள் அதிர்ச்சியில் அப்படியே அமர்ந்து விட்டிருந்தாள்.
ராகவ் ஓடி வந்து அவளைப் பிடித்தவாறே ராஜு சொன்ன விஷயத்தைக் கேட்டு அதிர்ந்து போனான்.தாயையும் தந்தையும் அழைத்துக் கொண்டு அழக்கூட தோன்றாமல் அமர்ந்திருந்த அண்ணியையும் அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான்.
ரவீந்திரனும் உமையாளும் நேராக மருத்துவமனைக்கு வந்துவிட குழந்தையை உமையாள் வாங்கிக் கொண்டாள்.
சுற்றி நடக்கும் எதையும் உணரும் நிலையில் இல்லை ஏழிசை.மனம் மொத்தமும் வீரா வீரா என்று அலறிக் கொண்டிருக்க நிலை குத்திய கருவிழிகள் எங்கும் நகரவில்லை.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!