111
“நானுனைப் பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம்
நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
“நானுனைப் பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம்
நீண்ட நாள் நினைவிலே வாழுமிந்த சொந்தம்
நான் இனி நீ… நீ இனி நான் வாழ்வோம் வா கண்ணே
நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை”
பேரூந்தில் ஒலித்த பாடலோடு ஒன்றியவர்களாய் அனைவருமே அதில் லயித்திருந்த நேரம் சத்ததுடன் நின்றுவிட்டிருந்தது பேரூந்து.
அதற்கு மேல் நடந்து தான் செல்ல வேண்டும் என்று தெரியவர பயணிகள் அனைவருமாய் நடக்க ஆரம்பித்திருந்தனர்.
கல்லூரி மாணவர்களே அதிகம் என்பதால் ஆண்கள் ஒருபுறமும் பெண்கள் ஒரு புறமுமென பேச்சும் கேலியுமாய் நடந்து கொண்டிருந்தனர்.
“டேய் இந்த வயல்ல வேலைப் பார்க்குறவங்க எல்லாம் களைப்புத் தெரியாம இருக்க பாட்டுப் பாடிட்டே வேலை செய்வாங்களே அது மாதிரி யாரவது பாட்டு பாடினா நடக்குற கஷ்டம் தெரியாம இருக்கும்.. இன்னும் மூணு மைல் நடக்கணுமே..”
“யாராவது என்ன டா யாராவது நம்ம கிருஷ்ணனை விட்டா பாடுறதுக்கு ஆள் இருக்கா என்ன?கிருஷ்ணா நல்ல பாட்டு ஒண்ணு பாடேன்.”
“ம்ம் பாடலாமே.. என்ன பாட்டு வேணும்னு சொல்லு டா..”
“ம்ம் என் இனிய பொன்நிலாவே பாடேன்.. இந்த மழைகால காத்துக்கும் உன் குரலுக்கும் அப்படியே சொர்க்கமே கண்முன் வரும்..”
“தென் காற்றின் இன்பங்களே தேனாடும் ரோஜாக்களே
என்னென்ன ஜாலங்களே கண்ணோடு தோன்றும்
சிறு கண்ணீரில் ஆடும் கைசேரும் காலம்
அதை என் நெஞ்சம் தேடும் இது தானே
என் ஆசைகள் அன்பே
என் இனிய பொன் நிலாவே பொன்நிலவில் என் கனாவே
நினைவிலே புது சுகம் த ர ர ரா தர த”
“எம்புட்டு நல்லா பாடுது இந்த புள்ள..கட்டிக்கப் போற பொஞ்சாதியை பாட்டுலயே கட்டிப் போட்டுடும்..
ரொம்ப நல்லா பாடுற அப்பு…”, என்றவாறு பெரியவர் ஒருவர் அவர்போக்கில் நடக்க அவனறியாமல் விழிகள் ராதாவைத் தழுவி மீண்டது.
கல்லூரியை அடைந்திருந்த நேரம் அபிமன்யூ வாசலிலேயே நின்றிருந்தான். ராதாவைக் கண்டதும் அவளருகில் வந்தவன்,
“பஸ் ஓடலையாமே அத்தனை மைல் நடந்தேவா வந்தாய்?இதுக்குத் தான் என்னோட வண்டியில் வானு அம்மா சொன்னா.. இதெல்லாம் தேவையா?”
“இதில் என்ன இருக்கு..நீங்க இப்போ இந்த ஊருக்கு வரலைனா நான் இப்படி தான வந்துருப்பேன்.
இதில் ஒண்ணும் நேக்கு கஷ்டமில்ல.”, என்றவள் அவனைக் கடந்து சென்றுவிட்டாள்.
“என்ன ராதா..ஏன் இப்படி முகத்தில் அடிச்ச மாதிரி பேசிட்டாய்?”
“உன்னன்ட நான் இதைப்பத்தி சொல்லவேயில்லையே அதை ஏன்னு கேட்காம அவனுக்காக வருத்தப்படுறாய்?”
“நோக்குத் தோணும் போது நீயாவே என்னன்ட சொல்லிருக்கப் போறாய்.. இதில் என்ன இருக்கு ராதா..”
“என்னவோ போ கண்ணா..இவா ஏன் இங்க வந்தானு இருக்கு..நேக்குப் பிடிக்கவே இல்லை.
அத்தை எதாவது சொல்லிண்டே இருக்கா..அப்பாவும் அவா சொல்றதுக்கு எல்லாம் பரிஞ்சு பேசிண்டு வரார்.
அம்மா தான் எனக்கு ஆதரவா எதாவது பேசுறா..வர வர ஆத்துக்குப் போகவே பிடிக்கலை.”
“சரி விடு மா..இன்னும் கொஞ்ச நாள் அப்பறம் அவன் தான் படிப்பை முடிச்சுட்டு போய்ருவானே..”
“ம்ம்..”
இப்படியாய் தினமும் ஒரு காரணத்தை வைத்து அபிமன்யூ ராதாவிடம் பேச முயற்ச்சித்துக் கொண்டேயிருக்க அவளோ தன் விருப்பமின்மையை நேரடியாகவே வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள்.
ஒரு கட்டத்தில் அவனின் ஆணவம் தலை தூக்க தன்னை அவள் அவமதிப்பதாய் எண்ணியவன் எப்படியேனும் அவளை இந்த கிருஷ்ணணிடமிருந்து பிரித்து திருமணம் செய்தே ஆக வேண்டும் என்று மனதில் உறுதி பூண்டான்.
கிருஷ்ணனைத் தன் எதிரியாகவே உருவகப்படுத்திக் கொண்டான். அவன் மீது கட்டுக்கடங்கா கோபமும் பொறாமையும் எழுந்து விட்டிருந்தது.
அதை இன்னும் அதிகமாக்கும் வகையில் மூன்றாமாண்டு மாணவர்களுக்காக ஏற்பாடு செய்ப்பட்ட பிரியாவிடை அளிக்கும் விழாவில் கண்ணன் அவர்களுக்காகப் பாட்டு பாட ஒவ்வொரு மாணவர்களும் அவர்களுக்கு விருப்பமான பாடலைப் பாடச் சொல்லி கேட்டுக் கொண்டேயிருக்க சில நிமிடங்களுக்கு கிருஷ்ணணின் குரலே அந்த அரங்கத்தை ஆட்சி செய்தது.
விழா முடிந்து அவன் வெளியே வந்த நேரம் அபிமன்யூவின் வகுப்பு மாணவன் ஒருவன் அவனைச் சந்தித்து,
“கிருஷ்ணா,என் அப்பாவோட நெருங்கிய நண்பர் ஒருத்தர் பெரிய மியூசிக் டைக்டரோட வேலை பார்க்குறார்.
உன்னைப் பத்தி அவர்கிட்ட சொன்னேன்.படிப்பை முடிச்சுட்டு வந்து அவரைப் பார்க்க சொல்லிருக்கார்.
இந்தா இது அவரோட போன் நம்பர்.அடுத்த வருஷம் இதே நேரம் உன்னுடைய படிப்பை முடிச்சுட்டு அவர்கிட்ட பேசு.
ஏன் சொல்றேன்னா உன் குடும்ப சூழ்நிலை எனக்குத் தெரியும்.
அதனால படிப்பை எக்காரணம் கொண்டும் விட்டுறாத.நல்ல வேலைக்குப் போய்ட்டு அதோட சேர்த்து பாடுறதையும் விடாம பார்த்துக்கோ..
ஏதோ என்னால முடிஞ்ச நல்லதை உனக்கு பண்ணணும்னு தோணிச்சு.”
“அண்ணா இந்த உதவியை எப்பவும் மறக்க மாட்டேன்.
ஒருவேளை எனக்கு பாடுற வாய்ப்பு கிடைச்சா அதோட அத்தனை நன்றியும் உங்களைத் தான் சேரும்.
ரொம்ப ரொம்ப நன்றி ணா..”, என்றவன் உண்மையாகவே நெகிழ்ந்து போயிருந்தான்.
ராதாவிடம் விஷயத்தைக் கூறி மகிழ்ந்து போனான்.ஆனால் இதையனைத்தையும் அறிந்த அபிமன்யூவோ தனக்குள் வெதும்பிக் கொண்டிருந்தான்.
வாழ்வில் முதல் முறையாய் தான் தோற்று வருகிறோமோ என்ற எண்ணம் அவனைப் பித்தனாக்கிக் கொண்டிருந்தது.
ஒன்றுமில்லாத அந்த கண்ணணிடம் தான் தோற்றுப் போவதா என மீண்டும் மீண்டும் மனதிற்குள் கர்ஜித்துக் கொண்டான்.
எத்தனை முயற்சி செய்தும் ராதாவிடமிருந்து கிருஷ்னைப் பிரிக்க முடியவில்லை என்பதை அவனால் ஏற்றுக் கொள்வே முடியவில்லை.
இதனிடையில் அவன் படிப்பை முடித்து வேலையிலும் சேர்ந்திருக்க எத்தனை சீக்கிரம் முடியுமோ ராதாவை திருமணம் செய்வது குறித்து தன் மாமாவிடம் பேசிவிட வேண்டும் என முடிவெடுத்துக் கொண்டான்.
அவனின் மனநிலை இப்டியிருக்க அங்கு ராதாவும் கிருஷ்ணணும் இறுதியாண்டில் நுழைந்திருக்க கல்லூரிப் பேராசிரியர் ஒருவரின் மூலமாகவே முயற்சி செய்து கிருஷ்ணணுக்கு வங்கிப் பணி ஒன்று கிடைத்து விட்டிருந்தது.
ராதாவிற்கோ வார்த்தைகளில் விவரிக்க முடியாத அளவில் மனம் மகிழ்ச்சியில் திளைத்திருந்தது.
தங்கள் திருமணத்தை எதிர்ப்பதாக இருந்தால் அப்பா கூறக்கூடிய ஒரே காரணம் வசதியின்மையாகத் தான் இருக்கும்.
ஆனால் இப்போது அவனுக்கு வேலை கிடைத்துவிட்டால் நிச்சயம் எந்த எதிர்ப்பும் இருக்காது என்பதே அவளின் மகிழ்ச்சியின் முக்கியக் காரணம்.
ஒருநாள் கல்லூரியில் இருந்து சீக்கிரமே கிளம்பியவர்கள் அவர்களுக்குப் பிடித்த விநாயகர் கோவில் ஒன்று கல்லூரியின் அருகிலேயே உண்டு அங்கு சென்று வரலாம் என்று முடிவெடுத்துச் சென்றனர்.
சிறு கோவில் என்பதால் அந்தளவு கூட்டமில்லாமல் இருக்க மனமாற விநாயகரை வணங்கிவிட்டு பிரகாரத்தைச் சுற்றி வந்து அங்கிருந்த ஒரு தூண் அருகில் அமர்ந்தனர்.
“ராதா..”
“ம்ம்”
“ஏன் இப்போ எல்லாம் நீ அவ்வளவா என்னன்ட பேசுறதே இல்லை. நானா கேட்குறதுக்குத் தான் பதில் சொல்றாய்..?”
“இல்லை..அது அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை..”
“என் ராதாவைப் பத்தி நேக்குத் தெரியாதா?”
“அது வந்து.. இனியும் உன்னை பேர் சொல்லிக் கூப்பிட கூடாதில்லையா அதான்…”
“ஏன் கூப்பிட்டா என்னவாம்”,என்றவன் அவள் முகச்சிவப்பை ரசித்தவாறே அவளிடம் வம்பு செய்ய அவளோ குனிந்த தலை நிமிராமல்,
“அது..அது..”
“என்னனு சொன்னா தானே தெரியும்.. தயங்காம சொல்லு மா..”
“ஆம்படையான் பேரை எப்படி சொல்ல முடியும் அதான்..”, என்று கூறி முடிப்பதற்குள் கையெல்லாம் சில்லிட்டு போயிருக்க முகமெங்கும் குங்குமமென சிவந்துவிட்டிருந்தது.
“என் ராதாவா இது.. நிறையவே மாறிட்டா..ரொம்ப வித்தியாசமா தெரியுறா அதே நேரம்…”
அவன் நிறுத்தியவுடன் என்னவென்பதாய் தலை நிமிர்த்தி அவள் ஏறிட மென்னகையோடு மெதுவாய்,
“அதே நேரம் இன்னும் இன்னும் அழகா தெரியுறா..என் கண்ணை நகர்த்தவே முடியலைனா பார்த்துக்கோயேன்.”, என்று கூற ராதாவிற்கோ என்ன சொல்வதெனக் கூடத் தெரியவில்லை.
அவளின் தவிப்பை உணர்ந்தவனாய் அவளது கரத்தை எடுத்து தன் கரங்களுக்குள் வைத்து அழுத்திக் கொடுத்தவன்,
“ராதா இதே மாதிரி வாழ்க்கை முழுசும் சந்தோஷமா இதே காதலோட உன்னை ராணி மாதிரி பார்த்துப்பேன். மாதிரி என்ன.. இந்த கண்ணணோட மகாராணி நீ தான்.
இத்தனை நாள் இதெல்லாம் நான் உன்னன்ட பேசினது இல்ல..தேவையில்லாமல் உன் கவனத்தைக் கலைக்க வேண்டாமேனு தோணும்.
ஆனா இப்போ ஏதோ ஒரு உணர்வு..நீ எனக்கே எனக்காக என்கூடவே வரப்போற நாள் எப்போ வரும்னு ஒரு எதிர்பார்ப்பு வர ஆரம்பிச்சுடுத்து..
இப்போ இந்த நிமிஷமே இந்த கடவுள் சாட்சியா இயற்கை சாட்சியா உன்னை என் மனைவியா ஆக்கிடணும்னு தோன்ட்றது.
கந்தர்வ கல்யாணம்னு சொல்லுவாளே அது மாதிரி…மாலை தாலி கெட்டு மேளச் சத்தம் இப்படி எதுவுமே வேண்டாம்..
மனசார உன்னை அப்டியே மனைவியாய் ஏத்துக்கணும்னு தோன்றது..”
எதோ ஓர் உணர்ச்சித் தவிப்பில் மனதில் உள்ளதெல்லாம் அவளிடம் கொட்டித் தீர்த்தான் கிருஷ்ணன்.
அவனின் வார்த்தைகளைக் கேட்டவளுக்கோ இதமான மயிலிறகால் மனதை வருடுவதைப் போல இருந்தது.
தன் கிருஷ்ணணுக்காய் எதாவது செய்ய வேண்டும் என்று தோன்ற அமைதியாய் எழுந்து கொண்டவள் அவனையும் எழுந்து நிற்கச் சொல்ல மறுப்பேச்சின்றி எழுந்தவனோ என்னவென்பதாய் அவளைப் பார்த்திருந்தான்.
இரு கைகளையும் மாலைப் பிடிப்பதைப் போன்று வைத்து அவன் முன் நீட்டியவள் அவனைப் பார்க்க ஆச்சரியத்தில் அவனின் விழிகள் விரிந்தது.
“என் கண்ணணோட ஆசை எதுவாயினும் இந்த ஜென்மத்தில் நான் அதை கண்டிப்பா நிறைவேத்துவேன்.”, என்றவள் கற்பனையால் கையிலிருந்த மாலையை அவன் கழுத்தில் அணிவித்திருந்தாள்.
இதழ் விரிந்த புன்னகையோடு அவனும் அதேபோல் கைகளை உயர்த்தி அவளுக்கு மாலையை அணிவித்தான்.
இருவரின் மனமும் முகமும் சந்தோஷத்தில் நிறைந்திருக்க அவள் விரல் பிடிப்பதற்காய் தன் சிறு விரலை மடக்கி அவள் முன் நீட்ட கைகள் நடுங்க தன் விரலைக் கோர்த்தவள் தன்னவனோடு பிரகாரத்தை மூன்று முறைச் சுற்றி வந்தாள்.
விநாயகர் சந்நிதியின் முன் நின்றவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்திருக்க கற்னையால் உதித்த தாலியை தன் இரு கைகளில் ஏந்தியவாறு பெண்ணவளின் கழுத்தருகில் கொண்டு வந்த கிருஷ்ணணுக்கு ஒரு நொடி தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என உரைக்க வேகமாய் கையை கீழே இறக்கச் சென்றவனைப் பிடித்து நிறுத்தியவள் ஆமோதிப்பாய் தலையசைத்தாள்.
அவள் கண்களின் இரைஞ்லைத் தாங்க முடியாதவனாய் கழுத்தின் பின் கொண்டு சென்ற கரங்களை வைத்து மூன்று முடி போடுவதைப் போல் பாவனை செய்ய ராதாவின் கண்களோ கண்ணீரில் நிறைந்து விட்டிருந்தது.
“இராதா!!”
“இல்லை கண்ணா மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கு..அதான் இந்த கண்ணீருக்கு காரணம்.
ஊரறிய பண்ற கல்யாணத்தை விட இந்த கல்யாணம் சொர்க்கத்துலேயே நடந்த மாதிரி இருக்கு. நான் எப்படி உணரேன்னு நேக்கே தெரியலை.
இந்த நொடி இந்த பிரபஞ்சமே அழிஞ்சுட்டாலும் நான் சந்தோஷமா உயிரை விட்டுடுவேன்.”, என்றவளின் அதரங்களின் மேல் விரல் வைத்துத் தடுத்தவன் இடவலமாய் தலையசைத்தான்.
“தேவையில்லாத பேச்சு வேண்டாம்..நீ இன்னும் நிறைய வருஷம் நன்னாயிருக்கணும் நிச்சயம் இருப்பாய்.”,என்றபடி அவள் கரங்களை இறுகப் பற்றிக் கொண்டான்.
சிறு பிள்ளைகளின் விவரமறியா திருமண விளையாட்டு வாழ்வின் எதார்த்தத்தில் நடந்தேறுமா?பதில் தருவார் யாரோ!
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
3 comments
Very nice
சிறு பிள்ளைகளின் திருமணத்தை பெரிய பிள்ளைகள் ஏற்று கொள்ள வேண்டுமே.
Nitchayama nadakkum yenna sri ma is a good girl