209
“சிவ ஷக்திய தூயது பவதி ..
பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிந்த விடுமுறை சற்றும் எதிர்பாராத விதமாய் கிருஷ்ணணின் தந்தை உடல்நிலை சரியின்மை காரணமாய் இயற்கை எய்திவிட மொத்தமும் மாறிப் போனது அவனுக்கு.
படிப்பு ஒருபுறம் பாட்டு ஒருபுறம் எனில் அவனையே நம்பியிருக்கும் தாய் மறுபுறமென பருவ வயதுபிள்ளைக்கென இருக்கும் எந்த சந்தோஷமுமின்றி நிர்கதியாய் நிற்பது போன்ற ஓர் உணர்வு.
அதிலும் ராதாவை கண்டபொழுது அத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த மொத்த பாரமும் கண்ணீராய் பெருக்கெடுக்க ஆரம்பித்திருந்தது.
அவனை அழைத்துக் கொண்டு வீட்டின் பின்புறம் சென்றவள் அவன் முன் மண்டியிட்டு அமர்ந்தாள்.
“கண்ணா..”
“…”
“என்னைப் பாரு..”
“…”
“சொன்னா கேட்பியா மாட்டியா..இங்க பாரு..நாங்க எல்லாம் இருக்கோம் டா..
உன்னையும் மாமியையும் அப்படி தவிக்க விட்டுருவோமா சொல்லு..
பெருமாளுக்கு ரொம்ப பிடிச்சவாள அவர் சீக்கிரம் தன்னன்ட கூப்டுப்பார்னு பாட்டி சொல்லுவா..
மாமா பண்ண கைங்கர்யம் கொஞ்சமா..பெருமாளோட பக்கத்திலேயே நிம்மதியா இளைப்பாறுவார் டா கண்ணா..
நீயே இப்படி தளர்ந்து போய்ட்டாயானா மாமி நிலைமையை யோசிச்சுப் பாரு..
உன்னையும் மாமாவையும் தவிர உலகமே தெரியாதவா..என் கண்ணணுக்கு எந்த சூழ்நிலையும் சமாளிக்கத் தான் தெரியும்.
இப்படி ஓய்ஞ்சு போகத் தெரியாதே..”,சிறு பிள்ளைக்குச் சொல்வதைப் போல் என்னென்னவோ பேசி அவனை சமாதானப்படுத்தினாள்.
சமாதானப்படுத்தியதோடு விடாமல் அவனுக்கான அடுத்தகட்ட உதவியையும் தன் தந்தை மூலம் செய்து கொடுத்தாள்.
அவளைச் சேர்க்க இருந்த கல்லூரியிலேயே அவனுக்கும் ஒரு இடத்தை வாங்கிக் கொடுக்க நல்ல மதிப்பெண்கள் இருந்ததால் ஸ்க்காலர்ஷிப்பிலேயே படிக்கும் வாய்ப்பு கிடைத்தது கிருஷ்ணணுக்கு.
மாலை வேளைகளில் தன் தந்தை செய்து கொண்டிருந்த கோவில் பணியை தானே செய்வதாய் கேட்டு வாங்கிக் கொண்டான்.
முதல் நாள் கல்லூரிக்கு இருவரையும் ராமன் பேரூந்தில் அழைத்துச் சென்று விட்டு வந்தார்.
பலப்பல கனவுகளோடு சிறகுகளை விரிக்கத் துடிக்கும் பருவம்.
கற்பனைகளுக்குக் கூட வண்ணம் தீட்டும் வயது.இவர்கள் இருவரும் மட்டும் விதிவிலக்கல்லவே!
முகம் நிறைந்த புன்னகையோடு சிறிதும் பதட்டமின்றி கிருஷ்ணணோடு உள்ளே நடக்க ஆரம்பித்திருந்தாள் இராதா.
கல்லூரி முழுவதும் ஆணும் பெண்ணுமாய் புன்னகை முகத்தோடு அங்குமிங்கும் வலம்வர கிருஷ்ணன் முகத்தில் மட்டும் எவ்வித உணர்வும் இல்லை.
“ஏன் கண்ணா என்னவோ போல வர்ற?”
“அதெல்லாம் ஒண்ணுமில்லை ராதா.. ஏனோ இது எல்லாம் நேக்கு ஒத்து வராதோனு தோண்றது.”
“இதெல்லாம் னா எது?”
“அதான் இந்த காலேஜ்..படிப்பு இதெல்லாம்..”அதைக் கேட்டவள் அப்படியே நின்றுவிட அவளின் மனவோட்டம் அறிந்தவனாய் தலையை குனிந்தவாறே அமைதியாய் நின்றான்.
“எப்போ இருந்து இப்படி ஆனான் இந்த கிருஷ்ணன்.??!”,அவளின் கேள்வியை விட அவள் கூறிய அவனின் பெயர் அதிகமாய் பாதித்தது அவனை.
“இராதா!!”
“பேசாதே கண்ணா…நான் பார்த்த கண்ணனா நீ இப்போ இல்லை.
அவனுக்கு அவன் குறிக்கோள் தான் முக்கியமா தெரியுமே தவிர இப்படி தேவையில்லாத எதையும் யோசிக்கத் தெரியாது.
மத்தவாளோட தன் நிலைமையை ஒப்பிட்டு பாக்குற பழக்கம் அவனுக்கு அறவே கிடையாது. இப்போ மட்டும் என்ன?
இங்க பாரு கண்ணா.. ஸ்கூல் மாதிரி இந்த காலேஜூம் நம்ம அறிவை வளர்த்துக்கறதுக்கான இடம். இந்த படிப்பு நேக்கு அவசியமானு தெரியாது.
ஆனா நோக்கு இது ரொம்ப முக்கியம்.நீ இதுவரை பட்ட கஷ்டமெல்லாம் போதும் டா..
நன்னா படி நல்லதா ஒரு உத்யோகம் உனக்காக நிச்சயம் காத்திருக்கும்…தைரியமா சந்தோஷமா உள்ளே போ..
உனக்கான வசந்தகாலம் இங்க இருந்து ஆரம்பமாகுதுங்கிற நம்பிக்கையோட போ..புரிஞ்சுதா?”
தாயிடம் தஞ்சமடையும் சேயாய் அனைத்திற்கும் தலையசைப்பையே பதிலாய் அளித்தவன் புன்னகையோடு அவளுடன் வகுப்பிற்குள் சென்றான்.
அவன் பள்ளி நண்பர்கள் சிலரும் அங்கு இருக்க சற்றே சாதாரண மனநிலைக்கு மாறியிருந்தான் கிருஷ்ணன்.
முதல் வகுப்பு ஆசிரியர் வந்து அனைவரின் அறிமுகப் படலத்தையும் ஆரம்பித்து வைக்க யாருக்கு என்னத் திறமைகள் என்று கேட்டுக் கொண்டு வந்தார்.
பழைய நண்பர்களாய் சேர்ந்து கிருஷ்ணன் நன்றாகப் பாடுவான் என்று கூற அவனைப் பாடுவதற்காக அழைத்தார்.
ராதாவை ஏறிட்டவன் அவளது புன்னகை முகத்தில் எழுந்த தைரியத்தில் சென்று அனைவருக்கும் முன் ஆசிரியரோடு நின்று விழி மூடி பாட ஆரம்பித்த நொடி மொத்த வகுப்பும் மாய உலகில் கட்டுண்டதைப் போல் அவனையே பார்த்திருந்தது..
“சிவ ஷக்திய தூயது பவதி ..
சத்தியப் பிரபிவிதும் ..
நசே தேவம் தேவோனகள குசலஹச்பந்திதுமபீ ..
அகஸ்த்மாம் ..ஆராத்யாம் ..
ஹரிஹர விரிஞ்சாதி பிறவி .
ப்ரனம்தும் ஸ்தோதும் ம ..
கதமஹிர்த்த புண்யாக பிரபாவதி …ஆ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ”
“கிருஷ்ணன் தானே உன் பேர்..ரொம்ப நல்லா பாடுற..அப்பறமா எதிர்த்த பில்டிங்ல இருக்குற முதல் அறையில கோபாலன்னு ஒரு சார் இருப்பார் அவரைப் போய் பார்.. நான் சொன்னேன்னு சொல்லு..”
“சரிங்க சார்.”,என்றவன் தனதிடத்தில் அமர்ந்துவிட்டு ராதாவைப் பார்க்க அப்போதும் அதே புன்னைகை மாறாமல் அவனைப் பார்த்திருந்தாள்.
கிருஷ்ணணுக்கு என்றும் இல்லாத வண்ணம் அத்தனை புதிதாய் தோன்றினாள் அவள்.
எதோ ஒருவித நிறைவு அவள் முகத்தை பார்க்கும் போதெல்லாம்.
தன்னந்தனிமையில் இருள் நிறைந்த அடர்காட்டில் தவிக்கும் பொழுதில் எங்கிருந்தோ வரும் சிறு ஒளி எப்படிபட்ட பரவசத்தை தருமோ அப்படியான ஒன்றைத் தான் அவளின் முகம் அவனுக்கு அளித்துக் கொண்டிருந்தது.
மதிய உணவு வேளையில் வழக்கம் போல் இருவருமாய் அமர்ந்து உணவை உண்ண ஆரம்பிக்க இரண்டு மூன்று பேர் அவர்கள் அருகில் வந்து நின்றனர்.
“நீ தான் கிருஷ்ணணா?”
“ஆமா..ஏன்?”
“ம்ம் நாங்க எல்லாம் சினியர்..ஏதோ ரொம்ப நல்லா பாடுவியாமே..வா வந்து எங்களுக்குப் பாடி காட்டு..”
“!!”
“என்ன முழிக்குற பாட்டு தானே பாட சொல்றோம்..”
“சரி வரேன்..”
“ம்ம் பக்கத்து க்ளாஸ் தான் எங்களோடது சாப்பிட்டுட்டு வா..”,என்றவர்கள் சென்றுவிட ராதா அவனிடம் சிடுசிடுத்தாள்.
“சீனியர்னா பெரிய கொம்பா இருக்கு..கொஞ்சம் கூட மரியாதையே இல்ல..பாட்டும் சங்கீதமும் சரஸ்வதி..
அது எல்லாருக்கும் கிடைக்காதுனு இதுங்களுக்கெல்லாம் தெரியாது போல..”
“விடு ராதா.. நான் போய் என்னனு கேட்டுண்டு வரேன்.. அதுமட்டுமில்லாம பாட்டு பாட நேக்கு கசக்குமா..போய்ட்டு வரவா?”
“ம்ம் சரி போய்ட்டு வா..ஆனால் யாராவது மரியாதையில்லாம நடந்துண்டா ஒரு வரிக் கூட பாடாத புரியுதோண்ணோ..”
“தங்கள் உத்தரவு..”,என்றவன் வாய்மூடி தலை குனிந்து கூறிய விதத்தில் சிரித்து விட்டிருந்தாள் ராதா.
ஆனால் உண்மையில் அவன் அங்கு சென்றது மிகவும் பயனுள்ளதாகவே இருந்தது.
கல்லூரி கலை நிகழ்ச்சிகளில் இனி அவன் நிச்சயம் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறி அனுப்பி வைத்தனர்.
அது மட்டுமின்றி அவன் ஆசிரியர் கூறிய கோபாலனைச் சந்தித்த போது அவர் முறையான சங்கீதம் கற்றுத் தருபவர் எனவும் கிருஷ்ணனைப் பற்றி ஆசிரியர் கூறியதாகவும் வார இறுதிகளில் அவரிடம் இலவசமாகவே பயிற்சி எடுத்துக் கொள்ள வருமாறும் கூறி அனுப்பினார்.
ராதாவிடம் நடந்ததை எல்லாம் கூறிய பின் அவளின் மகிழ்ச்சியான முகம் இவனின் உற்சாகத்தை இரட்டிப்பாக்கியது.
முதல் நாள் கல்லூரி நல்லபடியாகவே முடிந்திருக்க இருவருமாய் பேரூந்து நிலையத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.
“நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன் கண்ணா.. எதை நினைச்சு உன்னை இங்க வர வச்சேனோ அதெல்லாம் நடந்துரும்னு தோண்றது..”
“அப்படி என்ன நினைச்ச சொல்லேன்..கேட்போம்..”
“படிப்பு முடிச்சு நோக்குனு ஒரு உத்யோகம் கிடைக்கணும்.
அதைவிட முக்கியமாய் சின்ன வயசுல நீ சொல்லிருக்கியே.. சினிமாவுல பாட்டு பாடணும்னு.. அது நடக்கணும்னு நினைச்சுண்டே இருப்பேன்.
அதே மாதிரி வந்த முதல் நாளே பார்த்தியா அத்தனை பேருக்கும் உன் குரல் எப்படி பிடிச்சுடுதுனு..
முறையா சங்கீதம் சொல்லித் தரேன்னு ஒருத்தர் சொல்றதெல்லாம் பெரிய விஷயமில்லையா..
ஆனால் உன் குரல்ல ஏதோ ஒரு வசீகரம் இருக்கு டா..நீ பாட ஆரம்பிச்சாயானா அப்படியே ஏதோ ஒரு லோகத்துக்கு எல்லாரையும் இழுத்துண்டு போய்டறது.
அந்த கடவுள் கிருஷ்ணனின் குழலோசை கேட்டு கோகுலத்து பசுக்களெல்லாம் மெய்மறந்து பால் சொறியுமாமே அந்த மாதிரியான குரல் உன்னோடது.
இப்போ எல்லாம் உன் குரலுக்காகவே உன்னை இன்னும் அதிகமா பிடிக்கறது டா கண்ணா..”,என்றவளின் குரல் உள்ளே போயிருந்தது.
அவன் விழியகற்றாமல் அவளையே பார்த்து நடக்க அவளோ குனிந்த தலை நிமிராமல் கடைக் கண்களால் அவ்வப்போது அவனை வருடிக் கொண்டிருந்தாள்.
“ரொம்ப அழகா பேச ஆரம்பிச்சுட்ட இப்போ எல்லாம்..”
மௌனமே பதிலாய் பெண்ணவளிடத்தில் ஆட்சி செய்ய அவனே தொடர்ந்தான்.
“உண்மையை சொல்லணும்னா நான் நேக்கு நினைவு தெரிஞ்ச நாளிலிருந்து பெருமாளுக்கு கைங்கரியம் பண்ணும் போதெல்லாம் நீ நன்னாயிருக்கணும்னு தான் வேண்டிப்பேன் இராதா.
எனக்காகவே அந்த பெருமாள் படைச்ச அபூர்வ தேவதை நீ. இல்லைனா எப்படி பேரிலிருந்து எல்லாமே பொருந்திப் போயிருக்கும்னு யோசிச்சுருக்கேன்.
எத்தனை காலம் ஆனாலும் உனக்கு பாதுகாப்பா உனக்காகவே வாழணும்னு தோண்ட்றது.
எத்தனை வயசானாலும் எந்த கஷ்டமும் உன்னை நெருங்க விடாம பாத்துக்கனும்னு நினைச்சுண்டே இருக்கேன்.”
“எப்படி என்னை விட்டு நீ போக முடியும்.எப்பவும் நான் உன்னோடவே தான் இருப்பேன் கண்ணா..
நீ இல்லாத ஒரு நாள் கூட வாழ்க்கையில் சாத்தியமில்லை நேக்கு..”, கண்கள் கலங்கிவிட்டிருந்தது ராதாவிற்கு.
“ராதா பச்சை குழந்தையாட்டம் என்ன இது..இந்த ஜென்மத்தில் நீ இல்லாம இந்த கிருஷ்ணன் இல்லை.
என்னைக்கும் இந்த ராதாவோட நிழலா அவளோடேயே தான் இந்த கிருஷ்ணன் இருப்பான்.
கண்ணைத் துடைச்சுக்கோ முதல்ல..”,என்றவனுக்குமே குரல் நடுங்க ஆரம்பித்திருந்தது.
மானிடர்களை அதீத அன்பிற்குள் பிணைத்து வைப்பதும் அதில் எதிர்பாரா நிகழ்வுகளை நிகழ்த்துவதும் அதன்மூலம் வாழ்வின் அர்த்தங்களைப் புரிய வைப்பதுமே இப்பிறவியில் நம்மை படைத்தவனின் முக்கிய பணியாய் இருக்கிறது.
அவன் ஆடும் ஆட்டத்தில் இந்த கண்ணணும் ராதையும் என்ன விதமான கதைமாந்தர்காளாய் இருக்கப் போகிறார்கள் என்பது அவர்களே அறிந்திறாதது.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
3 comments
ஆறு மாசம் சின்னவனை எப்படி நோக்கு கல்யாணம் பண்றது ராதேன்னு பெரியவா சண்டை போட போறாளா?
Super💕
Nice