எத்தனை முயன்றும் யார் இதை செய்தார்கள் என்பதைக் கண்டுபிடிக்க முடிவில்லை.சந்தேகத்திற்கு உரியவர்களை விசாரித்தால் வீரேந்திரன் என்ற பெயரைக் கேட்டே பின் வாங்கினர்.ஓய்ந்து அமர்ந்தவன் காலை எட்டு மணியளவில்  ராஜுவிடம்,

“கணக்கு..”

“போஸ்ட்மார்ட்டம் முடிஞ்சுருக்கும் அண்ணையா இப்போ போனா சரியா இருக்கும்..”

“அவர் வீட்டுக்கு?!”

“சொல்லியாச்சு அண்ணையா..”

“அரசு மருத்துவமனையின் பிணவறைப் பகுதிக்குச் சென்றவனின் கண்களில் பட்டாள் அவள்.மெலிந்த தேகம் ஐந்தரை அடிக்கும் மேல் ஒளியிழந்த கண்களோடு எங்கோ வெறித்த வண்ணம் மரத்தில் சாய்ந்து நின்றிருந்தாள்.

அவளருகில் ஒப்பாரி வைத்த வண்ணம் ஒரு பெரியவளும் அவளைப் பிடித்தபடி இன்னொரு பெண்ணும் நின்றிருந்தனர்.

நேராய் உள்ளேச் சென்றவனுக்கு கணபதியை அந்த நிலையில் பார்க்கத் துணிவில்லாமல் போயிருந்தது.மனம் மொத்தமாய் பாரம் அழுத்தியது.தன் இரத்த சொந்தம் ஒருவரை இழந்த பதபதைப்பு அவன் மனதில்.

அத்தனையையும் உள்ளுக்குள் கட்டுப்படுத்தியவனாய் அவரை வெளியில் கொண்டு வர கண் சாடை காட்டிய வண்ணம் முன்னே சென்றான்.

அத்தனை நேரம் சிந்தனையைத் தொலைத்தவளாய் நின்றிருந்தவள் தந்தையின் உடலைப் பார்த்துவிட்டு கதறித் துடித்தாள்.

சுற்றமும் சூழலும் மறந்து அவள் துடிப்பதைப் பார்த்தவர்களுக்கு மனது வலித்தது.ஒரு கட்டத்தில் அப்படியே மயங்கி விட கைத்தாங்கலாய் அழைத்து வந்து அம்புலன்ஸில் அமர்த்தினர்.

அவரது வீட்டிற்கு வந்து அத்தனை காரியமும் முடியும் வரை அங்கேயே நின்றிருந்தான் வீரேந்திரன்.அப்போது தற்செயலாய் அவனது கண்ணில் பட்டான் ஒருவன்.

அந்த சூழ்நிலைக்கான வருத்தமோ கவலையோ எதுவுமின்றி யாரையோ வெறித்திருந்தான்.அவன் பார்வைச் சென்ற திசையில் அமர்ந்திருந்தாள் கணபதியின் மகள்.

ஒரு ஆணாய் அந்த ஆடவனின் பார்வையின் அர்த்தத்தை உணர்ந்தவனுக்கு ஆத்திரமாய் வந்தது.அவள் மீது ஒரு கண் வைத்திருக்குமாறு ராஜுவிடம் கூறினான்.

இடுகாட்டில் இருந்து ஹோட்டல் அறைக்குச் சென்றவன் குளித்துத் தயாராகி வந்து கட்டிலில் விழுந்தான்.அவன் தரப்பில் இழந்த முதல் உயிர்.

எத்தனை கவனமாய் இருப்பேன்.எப்படி தவறு நடந்தது என கோடி முறைத் தனக்குத் தானே கேட்டுக் கொண்டான்.பதில் தான் தெரியவில்லை.

எத்தனை நேரம் அப்படியே இருந்தானோ அமர்ந்தபடியே உறங்கி விட்டிருந்தான்.கதவு தட்டும் ஓசையில் விழித்தவன் உள்ளே வருமாறு குரல் கொடுக்க ராஜு தான் நின்றிருந்தான்.

“யாருனு தெரிஞ்சுதா…”

“…”

“என்ன?!”

“அவனுங்க கணக்கோட தங்கச்சியும் புருசனும் சேர்ந்து ஏற்பாடு பண்ண ஆளுங்க அண்ணையா..”

“வாட்???”

“நாலு பேரையும் மடக்கிட்டோம்.நம்மகிட்ட தான் இருக்கானுங்க..பொய் சொல்லல..பணம் டிரான்ஸ்வர் பண்ண விவரமும் எடுத்துட்டோம் அண்ணையா..”

இப்படி ஒரு கோணத்தை அவன் யோசித்தே இருக்கவில்லை.துரோகம்..எத்தனை எளிதாய் ஒரு உயிரைக் குடித்துவிட்டது.தலையை அழுந்தக்கோதி எழுந்தவன்,

“அவர் வீட்டுக்குப் போய் அந்த பொண்ணை நம்ம கூட கூட்டிகிட்டு போயிடலாம் ராஜு..அவரோட தங்கை பண்ண விஷயத்தை இப்போதைக்கு ஹோல்ட் பண்ணு..

அந்த பொண்ணை நம்ம இடத்துக்கு கூட்டிட்டு போன அப்பறம் இவங்களை என்ன பண்றதுனு பார்க்கலாம்..பீஈ முடிச்சுருக்கானு சொல்லிருக்காரு.எங்கேயோ வேலை கூட பாக்குறா..நம்ம பேக்ட்ரிலேயே வேலைக்கு ஏற்பாடு பண்ணு.

கணக்கோட கடைசி விருப்பம் அவர் பொண்ணோட பாதுகாப்பு தான்.அதை நான் தான் நிறைவேத்தணும்.”,என்றவன் தயாராகச் சென்றான்.

அடுத்த அரை மணி நேத்தில் கிளம்பி கணபதியின் வீட்டு வாசலில் நின்றிருந்தான் வீரேந்திரன்.அவனது ஆட்கள் ஐந்து பேர் அவனைச் சுற்றி நிற்க கம்பீரமாய் உள்ளே நடந்தவன் அங்கு கேட்ட குரலில் அப்படியே நின்றான்.

“எங்க அண்ணன் தான் போயிட்டாரே..இப்படியே அழுது என்ன ஆகப் போகு சொல்லு கண்ணு..ஆக வேண்டியதை பார்க்கணுமா இல்லையா..”

“நான் எங்கேயும் வரலை அத்தை.கொஞ்சம் நிம்மதியா அழ கூட விட மாட்டேளா”

“நீ அழுதா மட்டும் உன் அப்பா வந்துர போறாரா..சும்மா சொன்னதையே சொல்லாம எழுந்து வா..”,என்றபடி அவள் கைப் பிடித்து தூக்க எத்தனித்தவர் காலடி ஓசையில் பேச்சை நிறுத்தினார்.

அவனைக் கண்டு கணபதியின் தங்கை கணவரும் மகளும் அவனெதிரில் வந்து நின்றனர்.

“வாங்க..எங்க அண்ணன் உங்ககிட்ட தான் வேலை பார்த்தாராமே..ராசாவாட்டம் இருக்கீங்களே..பணம் எதாவது செட்டில் பண்ண வந்துருக்கீங்களா?!”

ராஜு கொண்டு வந்து போட்ட சேரில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தவனை அப்போது தான் பார்த்தாள் கணபதியின் மகள்.

ஆறடி உயரம் கோதுமை நிறம் கட்டுமஸ்தான உடல்வாகு ட்ரிம் செய்யப்பட்ட தாடி அடர்ந்த நேர்த்தியான கேசம்.வயதை எடுத்துக்காட்டும் வகையில் அங்கங்கே லேசான வெள்ளை முடி.அனைத்திற்கும் மேல் கூர்மையான அந்த பார்வையும் கம்பீரமான தோரணைமாய் இருந்தவனைப் பார்த்து கலவரத்தோடு நின்றாள்.

“அதெல்லாம் அவர் பொண்ணுகிட்ட பேசிக்கிறோம்.நீங்க கிளம்புங்க.”

“இதென்ன அநியாயமா இருக்கு.எங்க வீட்டு புள்ளையை உங்ககிட்ட எப்படி தனியா விட்டுட்டு போவோம்.எதுவாயிருந்தாலும் எங்ககிட்டேயே சொல்லுங்க.”

“உங்ககிட்ட பேச ஒண்ணும் இல்ல..அவரோட பொண்ணு பாதுகாப்புக்கு இனி நான் தான் பொறுப்பு.அவங்களை என்னோட அழைச்சுட்டு போக போறேன்.”

“என்னங்க இவரு என்னென்னவோ பேசுறாரு நீங்களும் கேட்டுகிட்டு சும்மா நிக்குறீங்க?”

“என்ன யா..”,என்று ஆரம்பித்தவரின் கையை மடக்கிப் பிடித்திருந்தான் ராஜு.

“என்ன சார் இது வயசு பொண்ணை எப்படி உங்களோட அனுப்ப முடியும்.”

“நான் இவ்வளவு பொறுமையா பேசுறதே கணபதிங்கிற ஒரு மனுசனுக்காக தான்.பொறுமையை சோதிச்சு பாக்குறீங்க..அப்பறம் நடக்குற எதுக்கும் நான் பொறுப்பு இல்ல.”

“என்ன கேட்க ஆளில்லனு மிரட்டுறீங்களோ?அனுப்ப முடியாதுங்க என்ன பண்ணுவீங்க?”

“அந்த பொண்ணு மேஜர் அவங்க பேசட்டும்..நீங்க எதுக்கு இப்போ கத்திட்டு இருக்கீங்க?”

“அதானே அப்போ அவ சொன்னா போயிடுவீங்கல..ஏய் நீயே சொல்லு அந்த ஆளோட போறியா?”,என்றார் கணபதியின் மச்சான்.

ஏற்கனவே சுயபச்சாதபத்தில் இருந்தவளுக்கு நடப்பதெல்லாம் சேர்ந்து மேலும் திகிலூட்ட என்ன செய்வதென தெரியாமல் திருதிருவென விழித்து நின்றாள்.

“உன்னை தான்டி மாமா கேட்குறாரு பதில் சொல்லு..”,என்றபடி அவளது தோளில் அடித்தாள் கணபதியின் தங்கை.

வேகமாய் இல்லை என்பதாய் தலையசைத்தாள் சிறியவள்.வீரேந்திரனோ நெற்றியைத் தடவிய படி நின்றிருந்தான்.

“நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்”,என்றவன் இழுத்துப் பிடித்த பொறுமையோடு கணபதியின் மகளைப் பார்த்தான்.

அதற்கும் விழித்தவளைக் கண்டு தலையில் அடித்துக் கொள்ளலாம் போல் இருந்தது.

“ராஜு..”,என்று பல்லைக் கடித்தவனைப் புரிந்து கொண்டவனாய் அவளைத் தவிர மற்றவர்களைப் பிடித்து வெளியே நிறுத்தினான்.

“இங்க பாருங்க..உங்க அப்பா என்னோட நலம் விரும்பி.அவருக்கு உங்க பாதுகாப்பு பத்தின பயம் ரொம்பவே அதிகம்.உங்களை இங்கே தனியா விடுற சூழ்நிலை இல்ல.புரிஞ்சுகோங்க..எந்த பிரச்சனையும் வேண்டாம்.”

“அது..வேண்டாம் நான் இங்கேயே இருக்கேன்..”

“ஏன்?!”

“எங்கப்பாவை கொன்னது உங்க எதிரிங்க தானே..”

“அப்படினு யார் சொன்னது?”

“அத்தையும் மாமாவும்..”

“சரி அப்படியே இருந்தாலும் நீங்க வர்றதுக்கு என்ன பிரச்சனை?”

“நேக்கு பயமாயிருக்கு..”,நிஜமாகவே தலையில் அடித்துக் கொண்டான் வீரேந்திரன்.

“உங்க..காட்..இங்க பாரு உன் நிலைமை எத்தனை கஷ்டம்னு எனக்கு புரியுது ஆனால் அதெல்லாம் நினைச்சு புலம்புறதுக்கு இப்போ நேரம் இல்ல.இங்க உனக்கு ஆபத்து இருக்கு.நான் சொல்றது எதாவது உன் மண்டைக்கு ஏறுதா..”,எனும்போதே வெளியே பெருஞ்சத்தம் கேட்டது.

அவளது அத்தையும் மாமாவும் தெருவையே நிற்க வைத்து நாடகமாடிக் கொண்டிருந்தனர்.இதெல்லாம் தேவையில்லாததோ என்று தோன்ற கிளம்பி வெளியே செல்ல எத்தனித்தவனின் மீது மாடிப் படியிலிருந்து இறங்கி வந்தவன் விழுந்தான்.

அப்படி ஒரு சாராய வாடை அவன் மீது.வீரேந்திரனின் அடியாளில் ஒருவன் வந்து அவனை இழுத்து தள்ள பிடிமானமின்றி அப்படியே கீழே விழுந்திருந்தான்.

“ஏன் டி யாரு இவன் அவனோட உள்ளேயிருந்து வர்ற..பயம் விட்டுப் போச்சா..எவனோட சுத்தினாலும் நான் தான் டி உன்னை கல்யாணம் பண்ணுவேன்.

இடஞ்சலா இருந்ததே உன் அப்பன் மட்டும் தான்.அந்த ஆளும் இப்போ இல்ல.இனி எப்படி தப்பிக்குறனு பாக்குறேன்..”,என்றவன் அவன் போக்கில் உளறிக் கொண்டிருக்க அவன் கன்னத்திலேயே ஓங்கி அறைந்திந்தான் வீரேந்திரன்.

“ஐயோ ஐயோ என் மகனை அடிச்சே கொல்ல பார்க்குறானே..நீயெல்லாம் நல்லாயிருப்பியா..இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்க ஆளே இல்லையா..”,என்று கத்திக் கொண்டிருந்தாள்.

ஏற்கனவே அக்கம் பக்கத்தினர் போலீஸுக்குத் தகவல் சொல்லியிருக்க அங்கு வந்த இன்ஸ்பெக்டர் இவனை எதிர்பாராதவராய் தயங்கி நின்றார்.

அதற்குள் கணபதியின் தங்கையும் கணவரும் நடந்ததையெல்லாம் ஒப்பித்தனர்.

நிலைமையைப் புரிந்து கொண்டவராய் வீரேந்திரனை தனியே அழைத்தவர்,

“சார்..தயவு செஞ்சு கிளம்புங்க..அந்த பொம்பளை வேற ஊரைக் கூட்டி வைச்சுருக்கு.”

“இன்ஸ்பெக்டர் அந்த பொண்ணோட அப்பா கொடூரமா கொல்லப்பட்டுருக்கார்.அவளுக்கும் பாதுகாப்பு இல்ல.அந்த பொண்ணு எதையும் யோசிக்குற நிலைமையில் இல்ல.நீங்க என்னோட அவளை அனுப்பி மட்டும் வைங்க..இவங்களை நான் பர்த்துக்குறேன்.”

“சார் பப்ளிக் நிறைய இருக்காங்க..இன்னும் பிரச்சனை பெருசாச்சுனா ப்ரஸ் மீடியானு உள்ளே வந்துருவாங்க..உங்க நேம் அடிபட வேண்டாம் சார் புரிஞ்சுக்கோங்க..”,என்றவர் விட்டாய் காலில் விழுந்துவிடுவார் போல் இருந்தது.

அவர் கூறியதிலும் நியாயம் இருப்பதால் என்ன செய்வதென புரியாமல் திணறியவன் இரு நொடிகளில் தெளிவாகி எழுந்து நின்றான்.

“ஒரு 15 மினிட்ஸ் டைம் கொடுங்க இன்ஸ்பெக்டர்.”,என்றவன் ராஜுவை அழைத்து ஏதோ கூற விழியகல அங்கிருந்து ஓடினான்.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

error: Content is protected !!
Focus Mode