621
“ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை
மு.வ விளக்க உரை: பேதை பெருஞ் செல்வம் அடைந்த போது ( அவனோடு தொடர்பில்லாத) அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் வருந்துவர்.”
நாச்சியாருக்கு இன்னுமும் தன் காதால் கேட்டதை நம்ப முடியவில்லை. அவளுக்கு படிப்பு மிகவும் பிடிக்கும். படித்து முடித்து நிச்சயம் ஏதாவது வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் உறுதியாக இருந்தது.
ஆனால் விதி அவளுக்கு வைத்திருந்த பிரச்சனைகளில் படிப்பு இனி எட்டா கனி என்ற முடிவிற்கே வந்து விட்டிருந்தாள்.
அதிலும் தன் திருமணம் நடந்த நிலையும் தன்னை திருமணம் செய்து கொள்பவனும் அந்த கனவை மொத்தமாய் குழி தோண்டி புதைக்கவே வைத்திருந்தனர்.
ஆனால் இப்போது படிப்பை விட அவளுக்கு அவள் வாழ்க்கையின் முக்கியமான ஒன்றாய் தெரிந்தது அகத்தியனின் நம்பிக்கை.
தனக்கு நடந்த அத்தனை அவமானங்களும் அந்த நொடியில் காற்றோடு கரைந்து போனதைப் போன்று இருந்தது நாச்சியாருக்கு.
யாரிடமும் எதுவும் பேசாமல் தனதறைக்குச் சென்றவள் அவளது புத்தகங்களையும் சான்றிதழ்களையும் எடுத்து பைக்குள் வைத்துக் கொண்டிருந்தாள்.
மனம் சமன் படவே மறுத்தது தன்னை நம்பும் ஒருவர் இந்த உலகத்தில் இருக்கிறார் என்று நினைக்க நினைக்க மனமெல்லாம் ஒருவித அழுத்தம்.
தேவையானவற்றை எடுத்துக் கொண்டவள் அறை வாசலில் நின்ற தாயையும் தமக்கையும் அமைதியான பார்வையோடு கடந்திருந்தாள்.
இருவருமாய் மதிய உணவை முடித்து விட்டு கிளம்பத் தயாராக தந்தையை தவறியும் நிமிர்ந்து பார்க்கவில்லை நாச்சியார்.
மணமக்கள் சென்ற பின் இருந்த சொந்த பந்தங்களும் கிளம்ப முருகன் யோசனையோடு வரவேற்பறையில் அமர்ந்திருந்தார்.
“ஏங்க ஒரு மாதிரி இருக்கீங்க? யாரும் எதுவும் சொன்னாங்களா?”
“அதெல்லாம் ஒண்ணுமில்ல..”
“முகம் ஒரு மாதிரி இருக்கேங்க!!”
“எல்லாம் நல்லா தான் இருக்கு போய் வேலையை பாரு டி.”, என்றவர் எழுந்து சென்றிருந்தார்.
“இவளால எம்புட்டு பிரச்சனை மா.. இதிலே வேற அப்பாவை முகங்கொடுத்தே பார்க்கல. அந்த வருத்தமா தான் இருக்கும். ஏன் மா இவ இப்படி இருக்கா?”
“பேச்சி அவளையே தப்பு சொல்றதும் சரியா சொல்லு? என்ன இருந்தாலும் நாம அவளுக்குனு நின்னுருக்கணும்னு தோணுது.”
“அவ பண்ணிட்டு வந்த வேலைக்கு அப்பாவை மீறி நாம என்னம்மா பண்ணிருக்கணும்ங்கிற?”
“சரி விடுட்டி தலை வலி கொடையுது. நான் படுக்க போறேன்.”, என்றவர் அத்தோடு பேச்சை முடித்துக் கொண்டார்.
வீட்டிற்கு வந்ததும் எப்போதும் போல் அகத்தியன் தன்போக்கில் மாடிக்குச் சென்று விட மாமியாரைக் கவனித்தவளாய் அவரருகில் சென்றாள் நாச்சியார்.
“விருந்தெல்லாம் முடிஞ்சுதா?”
“ம்ம் ஆமா அத்தை..”
“இதென்ன பை?”
“என்னோட காலேஜ் பேக் அத்த..”, என்றவள் தயக்கமாய் அவரை ஏறிட்டாள்.
“அவனே எப்போ என்னத்த பண்ணுவானோனு இருக்கேன். இதுல நீ வேற இப்போவே இதையெல்லாம் எடுத்து வரணுமா டி?”
“அத்த.. அவங்க தான் எடுத்துட்டு வரவே சொன்னாங்க..”
“அவனா!!”
“ம்ம்..”
“என்னவோ போ இவன் என்ன நினைப்புல இருக்கான்னு ஒண்ணும் புரியலை. அப்பறம் என்னத்துக்கு காலையில உன்னை அழ வைச்சு கூட்டிப் போனான்?”
“அவங்க ஒண்ணும் சொல்லல அத்த.. நான் தான் ஏதோ பேசி..”
“இங்கே பாரு சும்மா சும்மா அழுதுட்டு இருக்காத புரியுதா. அவன் ஒரு நேரம் போல இருக்க மாட்டான்.”
“..”
“சரி போ.. போய் பையை வைச்சுட்டு கொஞ்ச நேரம் தூங்கி எந்திரி.”, என்றவருக்கு தலையசைத்து தங்களறைக்குச் சென்றாள்.
முதல் முறையாய் கணவனாகியவனின் மீது சற்று பயம் குறைந்திருப்பதைப் போன்று தோன்றியது. அவனுக்கு நன்றி சொல்ல வேண்டும் ஆனால் அத்தனை நீளமாய் பேசி விட முடியுமா என்று புரியாமல் யோசனையிலேயே அறைக்குள் வந்தவள் கதவை சாற்றி விட்டு நிமிர கட்டிலில் படுத்து விழி மூடியிருந்தான் அகத்தியன்.
மெதுவாய் நகர்ந்தவள் கட்டிலின் ஓரமாய் அமர்ந்து எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று யோசித்திருந்தாள்.
“படுக்கலையா நீ?”, என்றவனின் கேள்வியில் தலை நிமிர்த்தியவள் தயக்கமாய்,
“ரொம்ப தேங்க்ஸ்ங்க..”
“எதுக்கு காலேஜுக்கு போக சொன்னதுக்கா?”
“இல்ல..”, என்றதில் விழி திறந்தவன் அவளைப் பார்க்க தலையை குனிந்து கொண்டவளாய்,
“என்னை நம்புறதா சொன்னதுக்கு..”
“..”
“ஆனால் எனக்கு காலேஜ் போக பயமா இருக்கு..”
“ஏன்? என்ன பிரச்சனை?!”
“…”
“அவன் கண்டிப்பா உன்னைப் பார்க்க முயற்சி பண்ணுவான். கத்துவான் சண்டை போடுவான்”
!!”
“அதுக்கு பயந்து நீ இந்த நாலு சுவத்துக்குள்ளேயே ஆயுசுக்கும் இருக்கப் போறியா?!”
“..”
“என்னைப் பாரு…”, என்றதில் அவனது விழி நோக்கியவளிடம்,
“பிரச்சனையைப் பார்த்து பயந்து ஓட ஓட அது உன்னைத் துரத்திட்டே தான் இருக்கும். ஒரு தடவை எதிர்த்து நின்னுட்டனு வை. அது வந்த தடம் தெரியாம ஓடிரும். புரியுதா?”
“புரியுது..”
“கண்டதையும் போட்டு குழம்பாம இரு அதுவே பாதி பிரச்சனையைக் குறைச்சுரும்..”
“..”
“எப்போ இந்த பயம் போகும் உனக்கு?”, என்றதில் சட்டென நிமிர்ந்து அவனை ஏறிட்டவளின் கண்களின் கலவரம் அவனுக்கு மெலிதாய் புன்னகை வர வைத்திருந்தது.
“என்னை பார்த்து இப்படி பயப்படுற அளவு நான் என்ன பண்ணிட்டேன்?”
“அது..பயமும் இருக்கு ஆனால் அதை விட ஒரு மாதிரி.. என்னை நினைச்சே..”
“நீ பதினொன்னாவது படிக்கும் போது இருந்து நான் பாக்குறேன்..”, என்றதில் மீண்டுமாய் விழி விரிப்பு நாச்சியாரினிடத்தில்.
“மனுசங்களை எடை போட நல்லாவே தெரியும் எனக்கு. உங்கப்பாவை அவமானப்படுத்தனும்னு உன்னை நம்புறதா சொல்லல. உண்மையாவே நம்புறதுனால தான் இந்தக் கல்யாணம். புரியுதா?”
“ம்ம்..”
“மனசுக்குள்ளே இருக்குறதை கொட்டணும்னு தோணினால் பேசு நான் கேட்குறேன்.”
“இல்ல அதெல்லாம் ஒண்ணுமில்ல.”
“சரி அப்போ எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு சாதாரணமா இருக்கணும் பேசணும். இப்படியே எதையோ தொலைச்சா மாதிரி இருக்க கூடாது.
அப்பறம், கொஞ்சம் கொஞ்சமா எனக்கு எப்போ என்ன பண்ணனும் எடுத்து வைக்கணும்னு எல்லாம் பழகிக்க..”
அத்தனையும் கறார் குரலில் கட்டளையிடுவது போல தான் வெளிப்பட்டது அவளும் அதை அவனது கட்டளையாகவே எடுத்தும் கொண்டாள்.
என்ன இருந்தாலும் அவளது கடந்த காலத்தை ஒன்றுமே இல்லை என்று தட்டி விட்டதற்காகவே அவன் மீது பெரும் நன்றியுணர்வு வந்திருந்தது நாச்சியாருக்கு.
சில நொடிகளில் அவன் உறங்கி விட உறக்கம் வராதவளாய் சற்று நேரத்தில் எழுந்து கீழே சென்றாள்.
மேகலை மட்டுமாய் அமர்ந்து தொலைகாட்சிப் பார்த்துக் கொண்டிருக்க தயக்கமிருந்தாலும் அவர் எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.
“நீ தூங்கலையா?”
“தூக்கம் வரலை அத்த..”
“அவன்?”
“தூங்கிட்டாங்க..”
“பெத்த அம்மானு பேரு எனக்கே அவனைப் பத்தி இன்னும் ஒழுங்கா தெரியாது. அந்தளவு அழுத்தம் பிடிச்சவன். என் காலம் ஓடிப் போச்சு.
நீ தான் இனி அவனுக்கு இருக்கப் போற உறவு. பார்த்து பக்குவமா வாழ்க்கையை நடத்தணும் டி.”
“…”
“என்ன முழிக்குற?”
“இல்ல எனக்கு ஒண்ணு கேட்கணும்..”
“என்னது?”
“உங்களுக்கும் சரி அவங்களுக்கும் சரி நான் பண்ண தப்பை எப்படி அதுக்குள்ள மன்னிக்க முடியுது. ஆக வேண்டியதை பத்தி தான் பேசுறீங்க!”
“நடந்ததை மறைச்சு உன் வீட்டுல கல்யாணத்தை நடத்திருந்தா நானும் அவனும் தையதக்கானு குதிக்கலாம். எல்லாம் தெரிஞ்சு இவன் தானே கல்யாணம் பண்ணுனான். அப்போ இப்படி தான இருக்கனும்?”
“..”
“என்ன நான் சொல்றது?”
“அத்தை..”
“ம்ம்?”
“எனக்கு எதுவுமே தெரியாது நீங்க சொல்லிக் குடுங்க நான் கத்துக்குவேன். தப்பா இருந்தா திட்டுங்க கோபபடுங்க.
ஆனால் எப்பவும் இதே மாதிரி என்கூட இருப்பீங்களா?”, என்றவளைப் பார்த்து மேகலைக்கு மனம் மொத்தமாய் இளகி விட்டது.
“இப்படியே இருக்காம நானும் தான் எங்க டி போக?”
“இல்ல, நான் எதாவது சின்ன தப்பு பண்ணிட்டா எங்கம்மா மாதிரி என்னை தள்ளியெல்லாம் வைச்சுறாதீங்க..
எனக்கு யாருமே இல்லாம இருந்தா ரொம்ப பயமா இருக்கு.”, என்றதைக் கேட்டவருக்கு அவளது குடும்பத்தின் புறக்கணிப்பு அவளை வெகுவாய் பாதித்திருப்பது புரிந்தது.
“பொம்பளைக்கு என்ன டி பயம் வேண்டியது இருக்கு. எந்த நிலைமையில விட்டாலும் போராடி மேல வரணும்.”
“அதெல்லாம் எனக்கு வரும்னு தோணலை அத்த.. நீங்க என்கூட இருங்க.. நான் ஒழுங்கா எல்லாமே கத்துக்குவேன்.”
ஒரு வகையில் மேகலைக்கு நாச்சியாரை பிடித்துப் போனது. மகன் கூட தன்னிடம் இத்தனை உரிமையாய் பழகியதில்லை.
என்ன தான் சாதாரணமாய் வாழ்வதாய் காட்டிக் கொண்டாலும் கணவனை இழந்தவருக்கு மகனின் இடைவெளியும் ஆரம்ப காலத்தில் பெரும் மன வருத்தத்தைக் கொடுத்தது தான்.
நாட்போக்கில் தெளிந்து விட்டதாய் வெளியே காட்டிக் கொண்டாலும் தனிமை அவருக்கு அத்தனை உவப்பானதாய் இருக்கவில்லை.
இப்போது மருமகளாய் வந்தவள் தன்னோடு இப்படி பேசியிருப்பது மனதின் ஓரத்தில் ஒருவித நிம்மதியைக் கொடுத்தது.
“அதான் உன் புருசன் இருக்கானே போதாதா உனக்கு?”
“அவங்களைப் பார்த்தாலே எனக்கு பயமா இருக்கு அத்த..”, என்றதில் மேகலை லேசாய் சிரித்திருந்தார்.
“அவன்கிட்டேயே போய் சொல்லேன் இதை..”
“ஐயோ ம்ஹும்..”, என்றவள் வேகமாய் இடவலமாய் தலையசைத்தாள்.
“அவன் ஒரு முசுடு எப்போ எப்படியிருப்பான்னே தெரியாது. போக போக உனக்கும் பழகிரும்.”
“ம்ம்..”
“சரி வா காபி சாப்பிடுதியா?”
“எனக்கு சமைக்க தான் தெரியாது காபி எல்லாம் போடுவேன். நான் போட்டுத் தரவா?”
“என்ன கேள்வி உன் வீடு தான இது. போய் போடு போ..”, என்றவரும் அவளோடு எழுந்து சமையலறைக்குச் சென்றார்.
இருவருமாய் காபி குடித்து முடித்து அகத்தியனுக்கானதை அவளே எடுத்துக் கொண்டு மாடிக்குச் சென்றாள்.
அகத்தியனும் எழுந்து அமர்ந்திருக்க கைப்பேசியைப் பார்த்துக் கொண்டிருந்தவன் மனைவி நீட்டிய காபி டம்ளரை ஒரு பார்வை பார்த்து அவளையும் பார்த்து விட்டு கையில் வாங்கிக் கொண்டான்.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
9 comments
💞💞💞💞💞💞💞
Hand to hold is always a treasure
Superb
Semma. Mamiyaarum marumagalum sernthutaanga. Ivanga amma ku ipothaan thonutho, magaluku support panni irukanum nu.
அகத்தியா 🤗🤗🤗🤗😘😘
பேச்சி 😏😏😏 நம்பிக்கை இல்ல 🙄
நாச்சியார் 🤗 🤗🤗🤗
உன் அத்தை எல்லாம் சொல்லி குடுப்பாங்க 🤗🤗🤗
அவங்க பையனையும் சமாளிக்க கத்துக்கோ 🤗🤗🤗
Very nice.
நைஸ் அப்டேட் 🤗🤗🤗🤗
நாச்சியார் அப்பா அம்மா யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க….
மாமியார் மருமகள் bond அழகா இருக்கு 😍😍😍
அய்யோ எனக்கு அப்டியே கத்தி குதிக்கணும் போல இருக்கு🤩🤩🤩 ஹாஸ்டல்ல புள்ளைகயெல்லாம் ஒருமாதிரி பாக்குறாங்க போங்க . எனக்கு இவனை புடிச்சுருக்கே புடிச்சுருக்கே🤩😍😍😍 மேகலையையும் ரொம்ப பிடிச்சிருக்கு.. அவ அப்பா அம்மாவைவிட இவங்க அவளை நல்லாவே பாத்துப்பாங்க போலனுதான் தோன்றுது. அதுவும் அவன் அவளை நம்புறேன்னு சொன்னது, படிக்க வைக்குறதுனு எல்லாமே செம்ம க்கா 😍😍😍
Super💕
Super pa