581
“ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையிற் பேதையார் இல் மு.வ விளக்க உரை: நூல்களை ஓதியும், அவற்றின் பொருளை உணர்ந்தும், பிறர்க்கு எடுத்துச் சொல்லியும் தான் அவற்றின் நெறியில் அடங்கி ஒழுகாதப் பேதைப் போல் வேறு பேதையர் இல்லை.”
நாச்சியாருக்கு அகத்தியனின் செயலும் குரலும் பார்வையும் அத்தனை பயத்தைக் கொடுத்திருந்தது. தன் வாழ்க்கை இன்னும் சில மாதங்கள் தான் அவனது கோபத்தை எதிர் கொள்ள முடியாது, தாய் வீட்டிற்கும் வர முடியாது தன்னைத் தானே அழித்துக் கொள்ள வேண்டியது தான் என்று எண்ணிய போது கண்கள் அதுவாய் கண்ணீரை ஊகுத்தது.
விருந்தினர்கள் யாரும் பெரிதாய் அவளிடம் எந்த பேச்சு வார்த்தையும் வைத்துக் கொள்ளவில்லை. அப்படியே பேசினாலும் கடந்த காலத்தைப் பற்றி கிளறி மனதை புண்படுத்தினார்களே அன்றி அவள் தேடிய ஆறுதல் என்ற ஒன்று இப்போது வரையிலும் அவளுக்கு கிடைக்கவே இல்லை.
எத்தனை பயந்தாலும் எத்தனை பரிதவித்தாலும் நாம் எதிர் கொள்ளத் தயாராகாத நாளும் பொழுதும் வந்து தானே தீர வேண்டும். நாச்சியாருக்கும் அப்படி தான் அவள் வரவே வேண்டாம் என்று எண்ணிய திருமண நாள் வந்து விட்டிருந்தது.
கோவிலில் பட்டு வேட்டி சட்டையில் அகத்தியன் அமர்ந்திருக்க பட்டுச் சேலையும் கழுத்து நிறைத்த நகைகளுமாய் வந்தமர்ந்தாள் நாச்சியார். அருகில் அமர்ந்தவளை அவன் ஒரு நொடி தலைத் திருப்பி பார்க்க அவளோ குனிந்த தலை நிமிரவே இல்லை.
ஐயர் மந்திரங்கள் கூறி தாலியை அகத்தியனின் கையில் கொடுக்க அனைவரையும் ஒரு முறை பார்த்தவன் நாச்சியாரின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு அவளைத் தன் சரிபாதி ஆக்கியிருந்தான்.
நாச்சியாரோ தனது கண்களை இறுக மூடித் திறந்திருந்தாள். பெண்ணாய் பிறந்து செல்லமாய் வளர்ந்து அனுபவித்த அனைத்தையும் தன் ஒரு தவறு ஒரு நொடியில் மாற்றி வாழ்க்கையையே அழித்து விட்டதே என்பது தான் அவளின் அந்த நேரத்து எண்ணமாய் இருந்தது.
இப்போது சுற்றியிருப்பவர்கள் யாரையுமே பார்ப்பதற்கு கூட அவளுக்குப் பிடிக்கவில்லை. அவளது பெற்றோரையும் சேர்த்து. நான் செய்தது தவறு தான், மா பாவம் தான் ஆனாலும் அதற்காக அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டு ஏதோ கொத்தடிமையை யாருக்கோ எழுதிக் கொடுப்பது போல் செய்து வைக்கப்பட்ட இந்த திருமணத்தை அறவே வெறுத்தாள்.
அதோடு அதை செய்து வைத்த பெற்றோரின் மேல் சொல்லிலடங்கா வருத்தமும் கோபமும் தலைத் தூக்கியது. அத்தனை நேரமும் அழுது கரைந்தவள் அந்த நொடி முதல் மொத்தமாய் இறுகிப் போனாள்.
சம்பிரதாயம் என யார் என்ன கூறுகிறார்களோ அதைச் செய்தாள். அதைத் தவிர்த்து தவறியும் யாரையும் நிமிர்ந்து பார்க்கவில்லை. வள்ளிக்கு மகளின் மாறுதல் நன்றாகவே புரிய அவருக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது.
எங்கே மகள் எதுவும் தவறான முடிவை எடுத்து விடப் போகிறாளோ என அடி வயிறு கலங்கியது. மேகலை எவ்வித உணர்வும் இன்றி அமைதியாய் நின்றிருந்தார். ஒரு வகையில் மகனுக்கு திருமணம் முடிந்தது நிம்மதியைக் கொடுத்தாலும் மருமகளின் கடந்த காலம் அவருக்குமே உவப்பானதாக இல்லை.
அந்த அதிருப்தி அவரின் மனதில் இருந்து கொண்டு தான் இருந்தது. திருமணம் முடித்து மணமக்கள் நாச்சியாரின் வீட்டிற்கு அழைத்து வரப்பட அகத்தியன் உள்ளே நுழைந்து அவன் போக்கில் மாலையை அங்கிருந்த சோபாவில் போட்டு விட்டு கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டான்.
நாச்சியாரும் அமைதியாய் அவனருகில் அமர்ந்து கொள்ள பால் பழம் கொடுத்து மணமக்களை உபசரித்து முடித்ததும் அகத்தியன் முருகனிடம்,
“அவ்வளவு தானா? நாங்க கிளம்பட்டுமா?”
“மருமகனே அது.. சாங்கியமெல்லாம்..”
“ஏன் எங்கே வீட்டுல இடமில்லையா?”, என்றதில் முருகனும் வள்ளியும் ஒருவருக்கொருவர் பார்த்து நிற்க அவனோ தனது மாலையோடு மனைவியின் மாலையையும் கையில் எடுத்துக் கொண்டான்.
“என்ன வாரியா? இல்ல அப்பறம் நான் வரவா?”, என்று மொட்டையாய் அவனது கட்டைக் குரலில் கேட்டதில் தூக்கி வாரி போட வேகமாய் எழுந்து நின்றிருந்தாள் நாச்சியார்.
“வாரோம். சாயிந்திரம் நேரா மண்டபத்துக்கு வந்துருவோம்.”
“மருமகனே அவளுக்கு சேலை எல்லாம் இங்கன தான் இருக்கு.”
“அவ பொருள் எல்லாத்தையுமே கொடுத்து விட்டுருங்க. எப்படியும் அங்கே தானே வரணும்.”, என்றதில் வள்ளி வாயை மூடிக் கொண்டார்.
இருவருமாய் நடந்தே பின் தெருவில் இருக்கும் வீட்டிற்குச் செல்ல முருகன் பெரிய மகளையும் மருமகனையும் அவர்களோடு அனுப்பி வைத்தார்.
மேகலை தனது சொந்தத்தில் அக்கா மற்றும் மச்சினர் மனைவியோடு பேசிக் கொண்டிருக்க திடீரென வந்து நின்ற மகனைப் பார்த்து அதிர்ந்தவராய் ஆரத்தி எடுக்க ஏற்பாடு செய்து உள்ளே அழைத்து வந்தார்.
அகத்தியன் மாடிக்குச் சென்று விட நாச்சியாருக்கு என்ன செய்வதென தெரியவில்லை. பேருக்கு இரண்டு பெண்கள் சில நொடிகள் அளோடு பேசி விட்டு உள்ளே சென்று விட நாச்சியாருக்கு கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது.
மேகலைக்கு வருத்தங்கள் இருந்தாலும் தன் மருமகளாய் வந்து விட்டவளை மற்றவர்கள் முன் விட்டுத் தர மனமில்லாதவராய் அவளை அழைத்து தனது அறையில் அமர்த்தி விட்டுச் சென்றார்.
மிகப் பெரும் மனப் போராட்டம் ஆனால் அதை சமாளிக்கும் வயதும் பக்குவமும் தான் இல்லை பெண்ணவளுக்கு. உணவும் தூக்கமும் இல்லாமல் பல நாட்கள் கடந்ததும் இன்று அதீத மன பாரமுமாய் சேர்ந்து அவளை வெகுவாய் சோர்வாக்கியிருந்தன.
கட்டிலில் படுத்தவள் ஓரமாய் காலைச் சுருக்கி படுத்து விட்டிருந்தாள். கண்களும் உடம்பும் தூக்கத்திற்காக கெஞ்சியதில் சற்றே விழி மூடியவளுக்கு சில நிமிடங்களில் எல்லாம் தேவையற்ற கனவுகள் வர உடல் தூக்கி போட எழுந்தமர்ந்தாள்.
சுற்றத்தை உணர்ந்து கொண்டவள் மறுபுறம் திரும்ப நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்த வண்ணம் அகத்தியன் அவளையேப் பார்த்த படி அமர்ந்திருந்தான்.
அவனைப் பார்த்து இன்னுமாய் பதறியவளாய் காலைத் தொங்க போட்டவாறு புடவையை சரி செய்து கொண்டு எழுந்து கொள்ள முயற்சித்தாள் நாச்சியார்.
“மேல ரூமுக்கு போய் படுக்கியா?”, அவனது குரலில் சாதாரண கேள்வி கூட மிரட்டலாகவே வந்தது.
“இல்ல இல்ல வேணாம்ங்க..”
“என் மூஞ்சியைப் பார்த்துருக்கியா நீ?”, என்றதில் அத்தனை நேரம் குனிந்திருந்தவள் பட்டென நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
“ம்ம்.. எப்போ பேசுனாலும் இப்படி மூஞ்சியைப் பார்த்து பதில் சொல்லணும்.”
“உள்ளுக்குள்ளே ஆத்தரமா இருக்கா?”
“!!”
“எல்லாருமா சேர்ந்து உன்னை இங்கே தள்ளிட்டாகளேனு கிடந்து தவிக்குற. இல்ல?”
“இல்லங்க..”, என்றவளுக்கு பயத்தில் கண்ணெல்லாம் கலங்கி விட்டிருந்தது.
“இருக்கணும். அந்த நினைப்பெல்லாம் இருந்தா தான் நம்மை நசுக்குனவங்க எல்லார் முன்னாடியும் வாழ்ந்து காட்டணும்ங்கிற வெறி உள்ளுக்குள்ளே வரும்.”
“!!!”
“கண்டதையும் போட்டு குழம்பாம தூங்கு. சாயிந்திரத்துக்கு தெம்பு வேண்டாம்?”, என்றவன் எழுந்து தனது சட்டையை இழுத்து விட்ட படி வெளியே சென்று கதவை சாற்றி விட்டிருந்தான்.
இரண்டு நிமிட பேச்சிற்கே வியர்த்து வழிந்து போனது நாச்சியாருக்கு. அந்த குரலும் அதட்டும் தோரணையும் முறைத்த பார்வையும் அவளுக்கு பரிட்சையமே இல்லாத ஒன்றாக இருக்க பதில் கூறக் கூட குரல் வருவேனாவென்றது.
மதிய உணவும் அறைக்கே வந்திருக்க மற்ற எண்ணங்கள் பின்தங்கி கணவனின் மீதான பயமே மனதை மொத்தமாய் நிறைத்திருந்தது.
மூன்று மணிக்கு மேல் அவளது அம்மாவும் அக்காவும் அவளைத் தயார் செய்ய வந்திருக்க அமைதியாய் அவர்கள் கூறுவதை செய்து கொண்டிருந்தாள் நாச்சியார்.
“நாச்சி பார்த்து நடந்துகிடணும்ட்டி..”
“..”
“உன் புருசனை புரிஞ்சுக்கவே முடியலை. பட்டு பட்டுனு பேசிப்புடுறாரு.”
“..”
“இதெல்லாம் இவளுக்குத் தேவையா? ஒழுங்கா இருந்துருந்தா எனக்கு நடத்தின மாதிரி அப்பா ஊர் மெச்ச கல்யாணம் பண்ணி வைச்சுருக்க மாட்டாரு?”
“இப்பவும் நான் ஒழுங்கா ஒழுக்கமா தான் இருக்கேன்.”
!!!!”
“அதான் நீங்க சொன்ன கல்யாணத்தை பண்ணியாச்சுல. இன்னுமும் அதையே சொல்லி காட்டிகிட்டே இருப்பீகளோ?”
“…”
“ஆமா நான் தப்பு பண்ணேன். ஆனா அது தப்புனு தெரிஞ்ச பிறவு அதை விட்டு தள்ளி வந்துட்டேன் தான? சும்மா அதையே பேசிக் கிடக்காதீக. உங்களை எல்லாம் மாதிரி நான் உத்தமி இல்ல தான். என்ன பண்ணனும் அதுக்கு?”
“நாச்சி?!!”
“உன் பிள்ளை தானம்மா நானும். உன் புருசன்ல இருந்து வர்றவ போறவ அத்தனை பேரும் அந்த பேச்சு பேசுறாவ. கொஞ்சம் கூட என் நிலைமையை நீ யோசிக்கலைல?”
“இல்ல டி அது..”
“போதும். நான் பண்ண தப்புக்கு தண்டனையா அந்தப் பேச்செல்லாம் கேட்டும் கேட்காமயும் இருந்து கிடுதேன். இனி யாரும் என்னால தலை குனிய வேணாம். உனக்கு ஒரே மவ தான்னு நினைச்சுக்கோ.”, என்றவள் கதவைத் திறந்து கொண்டு வெளியே சென்றிருந்தாள்.
“எம்புட்டு ஏத்தம் இருக்கு பாரும்மா.. பண்றதெல்லாம் பண்ணிட்டு வாயை பார்த்தியா?”
“சும்மா இரு பேச்சி.. அவ போக்கே சரியில்ல காலையில இருந்து. எதாவது ஒண்ணு கிடக்க ஒண்ணு பண்ணிபுடுவாளோனு இருக்குட்டி..”
“நீ வேற எதையாவது யோசிச்சு வைக்காத மா.. அதெல்லாம் ஒண்ணும் ஆகாது வா..”
அதன் பின் வள்ளிக்கு முழு நேர வேலையும் சிறிய மகளை கவனிப்பதாய் மட்டுமே இருந்தது.
மேடையில் கணவனின் அருகில் நின்றவளுக்கு ஏதோ வித்தியாசமாய் வாசனை அடிக்க அவ்வப்போது அக்கம் பக்கம் பார்த்த படி அசௌரிகயமாய் நின்றவளைக் கவனித்தவனாய் அகத்தியன்,
“ரொம்ப நாத்தம் அடிக்கோ?. இந்தப் பயலுக தான் சொல்ல சொல்ல கேட்காம ஊத்தி கொடுத்துட்டானுவ.”, என்றவனின் பேச்சில் இன்னுமாய் வந்த வாடையில் லேசாய் மூக்கைத் தடவி மறுபுறம் திரும்பிக் கொண்டாள்.
யாரையோ அழைத்தவன் சிறிது பாக்கை வாயில் போட்டுக் கொள்ள அதன் பின் கட்சிக் கூட்டத்திற்கே மண்டபம் நிறைந்து விட எந்த பேச்சிற்கும் வழியில்லாமல் போயிருந்தது.
அத்தனை வெள்ளைச் சட்டைகளைப் பார்த்து நாச்சியாருக்கு உள்ளுக்குள் உதறல் தான். எம்எல்ஏ என்றாலும் வந்திருந்த கூட்டம் அசாதாரணமானதாய் இருந்தது.
இத்தனை குறைந்த நாளில் இவ்வளவு பேர் வந்திருப்பதே அவனது செல்வாக்கையும் மக்கள் வட்டத்தையும் எடுத்துக் காட்டியது.
திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி என மூன்று மாவட்ட கட்சி ஆட்களோடு அவனது கட்சியின் எம் பி ஒருவரும் அந்த ஊரில் இருந்ததால் அவருமே வந்தது பெரும் பேசு பொருளாக்கப் பட்டது.
முருகனுக்கே அகத்தியனின் உயரம் இப்போது தான் தெளிவாய் புரிந்தது என்பது அவரது முக பாவனைகளிலேயே தெரிந்தது.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
6 comments
நல்ல அறிவுரை
கொஞ்சம் பொறுமையா சொன்னா என்னவாம் இவனுக்கு 😏😏
இப்போதான் தெரியுதோ வள்ளி 🙄🙄🙄
நாச்சியார் 🤗🤗🤗🤗
Eagerly waiting for next ud ma
அடக் குடிகாரப் பயலே.. உன்னைய என்னனுடா செல்றது? அவளே அஞ்சியிருக்கா.. இப்படி அதட்டி உருட்டி குடிச்சுனு பயமுறுத்துறானே.. இவனைப் பார்த்து நல்லவன்னு சொல்லவா கெட்டவன்னு சொல்றதா
Nice
Super💕
அவளுக்கு அறிவுரை சொன்னதெல்லாம் சரி தான் வரவேற்புக்கு குடிச்சுட்டு வந்து நிக்கிறவனை என்ன சொல்றது 🤷♀️