594
“பொய்படும் ஒள்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்
மு.வ விளக்க உரை: ஒழுக்க நெறி அறியத பேதை ஒருச் செயலை மேற்கொண்டால் (அந்த செயல் முடிவுபெறாமல்) பொய்படும், அன்றியும் அவன் குற்றவாளியாகித் தளை பூணுவான்.”
அகத்தியன் கூறியதை நினைத்து படபடத்த மனதை அடக்கியவளாய் அவனோடு கீழே வந்த நேரம் மேகலையின் உறவினர்கள் இரண்டு மூன்று பேர் வந்திருக்க அவர்களின் வணக்கத்திற்கு லேசாய் தலையசைத்த வண்ணம் அகத்தியன் உணவு மேசையில் அமர்ந்தான்.
நாச்சியார் அமைதியாய் அவனருகில் நிற்க அமர்ந்திருந்தவன் தலையைத் திருப்பி அவளைப் பார்த்ததில் தானாகவே தட்டை எடுத்து அவன் முன் வைத்தாள்.
“நீயும் உட்காரு நாச்சி.. இரண்டு பேரும் சேர்ந்து தான் சாப்பிடணும்.”, என்றதில் கணவனைப் பார்த்து நின்றவளுக்கு நாற்காலியைப் பின்னிழுத்துக் கொடுத்தான் அகத்தியன்.
“அகத்தியா மறுவீடு போகணும்..”
“சரி சாப்பிட்டு போறோம்.”, என்றதே மேகலைக்கு பெரும் நிம்மதியாய் இருக்க வேறு பேச்சை வளர்க்காது இருவருக்குமாய் உணவை பரிமாறினார்.
நாச்சியார் பல யோசனைகளோடு உணவை பெயருக்கு கொரித்துக் கொண்டிருக்க அகத்தியன் உணவை முடித்து கைப்பேசியை துழாவிக் கொண்டிருந்தான்.
சிந்தையில் சுற்றம் பதியாமல் இருந்தவளை மேகலையின் குரல் நடப்பிற்குக் கொண்டு வந்திருந்தது.
“அவன் சாப்பிட்டு முடிச்சாச்சு பாரு. என்ன யோசனை உனக்கு?”
“விடு ஏன் அவசரப் படுத்துத. அவ சாப்பிடட்டும் நீ போய் வேலையைப் பாரு.”
தனக்காகவா காத்திருக்கிறான் என்று எண்ணியவளாய் வேகமாய் உணவை முடித்து அவனை ஏறிட எழுந்து சென்றிருந்தான்.
இருவருமாய் அறைக்கு வர அகத்தியன் கண்ணாடி முன் நின்று தலை வாரிய படியே கண்ணாடி வழி மனைவியைக் கவனித்தான்.
தலைக்கு குளித்து உலரவிட்ட முடி அதை சரிசெய்து கொள்ளும் எண்ணம் கூட இருப்பதாய் தெரியவில்லை. முகத்தில் ஒப்புக்கும் ஒப்பனையில்லை. சிறிய வட்ட வடிவ பொட்டு நெற்றி வகிட்டில் குங்குமம். கழுத்தில் மஞ்சள் கயிறும் அவளது சிறு தங்கச் செயினும்.
புதுப் பெண்ணுக்கான எந்த அடையாளமும் இல்லை. தாய் வீட்டிற்கு செல்வதற்கான சந்தோஷமும் இல்லை.
“நின்னுகிட்டே இருந்தா உங்க அப்பா வீட்டுக்கு போக வேணாமா?”
“நான்.. நான் ரெடியா தான் இருக்கேன். போலாம்..”
“இப்படியே வா?!”, என்றதில் தன்னை ஒரு முறை சரி பார்த்தவளாய் கேள்வியாய் கணவனை ஏறிட்டாள்.
“இப்படி வெறுங் கழுத்தா போய் நின்னா என்னை எப்படி மதிப்பாங்க?”
“அது..”
“அதெல்லாம் நான் உனக்காக போட்ட நகைங்க. இரண்டு செயினையாவது போட்டுட்டு வா.”, என்றதில் மீண்டும் அதிர்ந்து கணவனைப் பார்த்து நின்றிருந்தாள் நாச்சியார்.
உண்மையில் அவளுக்கு தாய் தந்தை கொடுத்த நகைகளைப் போடுவதற்கு விருப்பமில்லை. என்னவோ இத்தனை நாள் இருந்த குற்றவுணர்வெல்லாம் இந்தத் திருமணத்திற்குப் பிறகு சுய கௌரவப் பிரச்சனையாகத் தெரிந்தது.
அவளைப் பொறுத்த வரை இந்தத் திருமணம் என்பது அவள் மீண்டும் யாரோடாவது ஓடி விடாமல் இருக்கவும் குடும்ப கௌரவத்தைத் தூக்கி நிறுத்துவதற்கும் செய்யப்பட்ட ஒன்று.
அதாவது அவள் மீதான நம்பிக்கையின்மையின் முடிவு தான் இந்தத் திருமணம். அந்தக் கோவம் நாச்சியாருக்கு அதிகமாகவே இருந்தது.
அழுது கரைந்து மன்னிப்பை வேண்டினாலும் உடனே மன்னிக்க முடியாத தவறு தான் இருப்பினும் அவளுக்கான ஒரு வாய்ப்பைக் கொடுத்திருக்கலாமே என்று எண்ணி எண்ணி மருகிக் கொண்டிருக்கிறாள்.
எனக்காக நீங்கள் செய்த எதுவுமே எனக்கு வேண்டாம் என்று கத்தி அரற்ற வேண்டும் போல் மனம் பாடாய் படுகிறது. ஆனால் அவள் குரலைக் கேட்பதற்குத் தான் ஆளில்லை என்ற நிலை.
ஆனால் இப்போது சாதாரணம் போல் கணவன் கூறிய செய்தி அவளுக்கு அதிர்ச்சியாய் இருந்தது. திருமணத்திற்காக நகை கூட போட முடியாத அளவா என் மீதான கோபம் பெரிதாய் போனது தந்தைக்கு என்று நினைத்தாள்.
கண்கள் அதுவாய் கலங்கத் தொடங்க அதை கவனித்தவனாய் அவளது எதிரில் சற்று இடைவெளி விட்டு நின்ற வண்ணம் பின்புறம் இரு கைகளையும் கட்டிக் கொண்டான் அகத்தியன்.
“உங்கப்பா தரேன்னு தான் சொன்னாங்க. எனக்கு தான் வாங்க விருப்பமில்ல. என் பொண்டாட்டிக்கு என்ன வேணுமோ நானே போட்டுகிடுறேன்னு சொல்லிட்டேன்.”
“!!!”
“உனக்கு அங்கன போகப் பிடிக்கலைனு புரியுது. ஆனால் எதுக்கு உன் உரிமையை விட்டுக் கொடுக்குற? என்னைக்கும் அது உன் பிறந்த வீடு. அதை யாரும் மாத்த முடியாது. ஆயிரம் மனஸ்தாபம் இருந்தாலும் அது நாலு சுவத்துக்குள்ளே இருக்கணும்.
உங்க அப்பா பண்ணத் தப்பையே நீயும் பண்ணாத. போ போய் ரெடியாகி வா.”, என்றதில் முகத்தைக் கைகளுக்குள் புதைத்து அப்படியே தரையில் அமர்ந்து அழ ஆரம்பித்திருந்தாள் நாச்சியார்.
ஒற்றைக் கால் மடக்கி அமர்ந்தவனாய் சில நொடிகள் அவளையே அவன் பார்த்திருக்க நிலையுணர்ந்து அழுகையை அடக்கிக் கொண்டவள் வேகமாய் கண்களைத் துடைத்துக் கொண்டு அவனை அடிப் பார்வை பார்த்தாள்.
“கண்ணைத் தொட முதல்ல..”
“..”
“நீ அனுபவிக்குற கஷ்டமும் வலியும் தான் உன்னை இன்னும் வலிமையாக்கும். தெரியாம பண்ற தப்பெல்லாம் தான் வாழ்க்கையை உனக்கு புரிய வைக்கும்.”
“!!”
“அழுகை அந்த நேரத்துக்கு ஒரு ஆறுதலா வேணா இருக்கலாம் ஆனால் எதுக்குமே அது தீர்வு கிடையாது. புரியுதா?”
“..”
“பேசினால் பதில் சொல்லணும்னு சொல்லிருக்கேன்..”
“உங்களுக்கும் என் மேல சந்தேகம் இருக்குல?”, என்றவளை ஒரு ஆழ் பார்வை பார்த்திருந்தான் அகத்தியன்.
“இல்ல மறுபடியும் நான்..”
“ஒரு தடவை செத்து பொழச்சு வந்தவனுக்கு தான் வாழ்க்கையோட அருமை நிறைய புரியும். நீயும் இப்போ அந்த நிலைமையில் தான் இருக்க. அதனால திரும்பவும் சுடும்னு தெரிஞ்சே நெருப்புல போய் கை வைக்க மாட்டனு எனக்கு நம்பிக்கை இருக்கு.”
“நான் அங்கே போனதை தவிர..”
“!!”
“நான்.. அது.. எப்படி போனேனோ அப்படியே தான்..”, என்றவள் மீண்டுமாய் குலுங்கி அழ ஆரம்பித்திருந்தாள்.
அவளின் அத்தனை அழுகைக்கும் அகத்தியனிடத்தில் பெரிதாய் எந்த பதட்டமும் இரக்கமும் இருந்ததாய் தெரியவில்லை. சாதாரணம் போல் அவளைப் பார்த்திருந்தான்.
“உன் காலேஜ் பக்கத்துலே அடிக்கடி உன்னையும் அவனையும் நான் பார்த்துருக்ககேன்.”, என்றதில் அவளின் விழிகளில் அசூகையும் பயமும் அப்பட்டமாய் தெரிந்தது.
“அவன் நோக்கம் என்னவா இருந்திருந்தாலும் உன் கண்ணியம் யாருக்கும் புரியுற மாதிரி தான் இருந்துருக்கு எல்லா தடவையும்.”
“!!!”
“தெரிஞ்சே பாழங்கிணத்துல குதிச்சா தான் தப்பு. நடந்த எல்லாத்தையும் மறக்க முயற்சி பண்ணு. அது தான் நமக்கு நல்லது.”, என்றவன் எழுந்து நின்று சட்டையை இழுத்து விட நேரமாவதை உணர்ந்து நாச்சியாரும் முகத்தைத் துடைத்துக் கொண்டு கிளம்பத் தயாரானாள்.
கீழே வந்த மருமகளின் அழுது வீங்கிய முகத்தைப் பார்த்த மேகலைக்கு மனம் பாடாய் பட்டது. இருவருமாய் கிளம்பி வெளியே சென்ற பின் அகத்தியனின் பெரியம்மாவிடம் மனது கேட்காமல் புலம்பினார்.
“அந்த பிள்ளை மூஞ்சியைப் பார்த்தீங்களாக்கா.. நல்லா அழுதுருக்கு. வம்படியா போய் கல்யாணத்தைப் பண்ணி இப்போ இப்படி அழ விட்டு கிடக்கானே!!”
“உன் புள்ளை குணத்துக்கு எவ வந்தாலுமே பிரச்சனை தான் வரும். இதுல இவ பிரச்சனையோட மொத்தமா வந்து நிக்கா! அப்பறம் வேற என்னத்தை எதிர் பார்க்க முடியும்?”
“யக்கா!!”
“உண்மையை சொல்லுதேன் மேகலை. ஒரு வகையில் இதுவும் நல்லது தான். அப்போ தான் அவளுக்கும் கொஞ்சம் பயமிருக்கும். இல்லைனால் எப்போ என்னத்த பண்ணுவாளோனு நீ தான் வயித்துல புளியைக் கரைச்சுட்டு உட்காந்துருக்கணும்.”, என்றவரின் பேச்சு ஏனோ மேகலைக்குப் பிடிக்கவில்லை.
காலையில் தன் முன் கண்ணீரோடு நின்றிருந்த அவளைப் பற்றி அப்படியெல்லாம் நினைக்கத் தோன்றவில்லை. ஆனாலும் இந்தப் பெயரும் பேச்சுக்களும் அவளது வாழ்க்கை முழுவதுக்குமாய் தொடரும் என்று நினைத்த போது பெருமூச்சு எழுந்தது அவரிடத்தில்.
அங்கு நாச்சியாரின் வீட்டில் மொத்த குடும்பமும் புதுமணத் தம்பதிகளுக்காக காத்திருந்தது. வள்ளிக்கு இரவெல்லாம் பொட்டு உறக்கமில்லை.
அழுதழுது அறைக்குள் சென்ற மகளின் முகமே கண்முன் காட்சியாய் ஓடிக் கொண்டிருந்தது. மனப் பக்குவத்தோடு சென்றாலே அந்த நேரத்து பயம் என்பது அவள் வயதுக்கு அதிகமாகத் தான் இருந்திருக்கும்.
குறைந்த பட்சம் மருமகனாவது தன்மையானவனாய் இருந்திருந்தால் தைரியம் வந்திருக்கும். எந்த நிலையிலும் அகத்தியனை நல்ல விதமாய் நினைக்க முடியவில்லை அவருக்கு.
தன்னுடைய சிந்தனைகளில் உழன்ற படி வேலையைக் கவனித்தவருக்கு கணவரின் வரவேற்புச் சத்தம் கேட்க அவசரமாய் அடுப்பை அணைத்து விட்டு வரவேற்ப்பறைக்கு ஓடினார்.
கண்கள் வீங்கி ஒப்புக்கும் யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் நின்ற மகளைப் பார்த்தவருக்கு மனபாரம் கூடிப் போனது. அகத்தியன் தன் போக்கில் நாற்காலியில் அமர்ந்து கால் மேல் கால் போட்டுக் கொள்ள நாச்சியார் அமைதியாய் அவனருகில் நின்றிருந்தாள்.
பிறர் கண் உறுத்தாமல் வள்ளி இருவரையும் வரவேற்று மகளைத் தன்னோடு அழைப்பதற்காக அவளது கரத்தைப் பற்ற ஒரு நொடி உடல் இறுகியவள் பின் தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்க்க நினைத்தவளாய் தாயோடு உள்ளே சென்றிருந்தாள்.
“நாச்சி.. நல்லாயிருக்கல?”
“..”
“உன் புருசன் உன்கிட்ட..”
“தேவையில்லாத பேச்சு வேண்டாம் மா..”, என்றவளை வள்ளி ஆற்றாமையோடு பார்க்க பேச்சியம்மாளோ,
“உனக்கு இதெல்லாம் தேவையா மா.. இந்த பெரிய மனுசிக்கு தெரியாதாக்கும் எதை எப்படி சமாளிக்கணும்னு..”
“வாய்க்கு வந்ததெல்லாம் பேசாத பேச்சி.. நல்லாயில்ல சொல்லிட்டேன்.”
“பாத்தியா மா தாலி கழுத்துக்கு வந்தவுடனே உம்மவ பெரிய மனுசியாயிட்டா. போன வாரம் வர பம்மிக்கிட்டு இருந்ததென்ன இப்போ பேசுத பேச்சென்ன?!
“ஆமா போன வாரம் அப்படி அழுது கரைஞ்சு அடங்கியிருந்தாவாவது உங்கப்பாக்கு எம்மேல இரக்கம் வரும்னு நினைச்சேன்.
ஆனா அவுகளுக்கு தான் என்னை விட கௌவரவமும் மானமும் பெருசுனு தெரிஞ்சு போச்சே.. அப்போ இனி எனக்காக நான் தானே பேசணும்.”
“ஏன் பேச மாட்ட கொன்னு போடாம ஊர் மெச்ச கல்யாணம் பண்ணி வைச்சுருக்காங்கல. நீ பேசுவ டி..”
“பேசாம கொன்னு போட்டுருக்கலாம். உங்க மேல எல்லாம் வைச்சுருந்த நம்பிக்கையோடேயே போய் சேர்ந்துருப்பேன்.”, என்றவளுக்கு எத்தனை முயன்றும் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
“நாச்சி ஏன் டி இப்படியெல்லாம் பேசுத?”
“என் நிலைமை உனக்கும் புரியலை மா.. நெருப்புல கிடக்குற மாதிரி இருக்கு. எல்லார் முன்னாடியும் கூனிக் குறுகி நிக்குறேன். எனக்கே என்னை நினைச்சு அருவறுப்பா இருக்குமா..”, என்றவள் யாரோ வரும் அரவம் கேட்டு வேகமாய் கண்களைத் துடைத்துக் கொண்டு மீண்டுமாய் அகத்தியனின் அருகில் சென்று நின்று கொண்டாள்.
“ஏன் நிக்குற உட்காரு.”, என்றவன் சோபாவில் தனது அருகில் இடத்தைக் கைகாட்ட ஒன்றும் கூறாமல் அமைதியாய் அமர்ந்து கொண்டாள்.
“உன் பொருள் எல்லாம் அங்கே வந்துருச்சா?”, என்றதில் தலை நிமிர்த்தி தந்தையை ஒரு பார்வை பார்த்தவள் தாயைத் திரும்பி பார்த்து வைத்தாள்.
“சரி நீ போய் பார்த்து எடுத்துட்டு வா. முக்கியமா காலேஜ் சம்மந்தப்பட்டது எல்லாம்..”, என்றதில் பட்டென கணவனைத் திரும்பிப் பார்த்திருந்தாள் நாச்சியார்.
“மாப்பிள்ள.. அது..”
“எது?”
“காலேஜுக்கெல்லாம் எதுக்கு.. வீட்டிலேயே..”
“அவ இப்போ உங்க மவ இல்ல. என் பொண்டாட்டி. என் பொண்டாட்டி மேல எனக்கு நிறையவே நம்பிக்கை இருக்கு. அதெல்லாம் அவ படிப்பா. போ போய் எடுத்துட்டு வா.”, என்றதில் முருகனின் தலை குனிந்து கொள்ள நாச்சியாருக்கு அகத்தியனிடமிருந்து விழியகற்றுவது பெரும் சிரமமாய் இருந்தது.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
8 comments
Ithemathiri daily 2ud potta super sri ma
இவனை புரிஞ்சிக்கறது கொஞ்சம் கஷ்டம் தான் போல 🤗🤗
அகத்தியா 🤗🤗😍😍😍😍
Superb update 👏. Agathiyan ivala one side love panni irupaano?;
Very nice.
அகத்தியன் சூப்பர் 💖💖💖 அப்பா அம்மான்னு யாருக்கும் இல்லாத நம்பிக்கை அவ மேல அவன் வச்சிருக்கான் ❣️
இந்த மாப்பிள்ளையை விட நல்ல மாப்பிள்ளை உங்களுக்கு கிடைச்சிடுவானா வல்லி…. 😒
பேச்சி கல்யாணம் தான் முடிஞ்சிடுச்சுல்ல இனி உங்க வேலையை பார்க்க வேண்டியது தானே சும்மா அவளை குத்தி காட்டிட்டே இருக்குறிங்க… 😤
நல்லவன் தான் நல்லவன் தான்.. இவன் நல்லவன் தான் 🤩🤩🤩🤩🤩
Super💕 super agathiya
Agathiyan semma character