162
“உறினட் டறினொரூஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்
மு.வ விளக்க உரை: தமக்கு பயன் உள்ள போது நட்பு செய்து பயன் இல்லாத போது நீங்கிவிடும் தகுதியில்லாதவரின் நட்பைப் பெற்றாலும் என்ன பயன், இழந்தாலும் என்ன பயன்.”
அகத்தியன் மனைவி தாயோடு தனது பாட்டி வீட்டிற்கு வந்திருந்தான். அத்தனை வருடத்து மனப்புழுக்கமும் சற்றே குறைந்தது போன்று உணர்ந்தான்.
மேகலை, நாச்சியாரை பால் காய்க்க வைத்து மூவருமாய் எடுத்துக் கொண்டனர். அங்கு போன்றே மாடியறையைத் தங்களுக்கென எடுத்திருந்தான் அகத்தியன்.
மாமியாரும் மருமகளும் வீட்டை ஓரளவு ஒதுங்க வைத்து விட்டு மதிய சமையலைக் கவனிக்க ஆரம்பித்திருக்க அகத்தியன் தனது அறையை மொத்தமாய் தயார் செய்திருந்தான்.
மாடியில் அந்த அறை மட்டுமே என்பதால் அறையிலிருந்து வெளியில் வந்தால் மொட்டை மாடி போன்ற அமைப்பு. சுவற்றில் ஒற்றை காலை வைத்தபடி அமர்ந்திருந்தவன் தூரத்தை வெறித்திருந்தான்.
மதிய உணவிற்காக கணவனை அழைக்க வந்தவள் அவனருகில் செல்ல அத்தனை இலகுவாய் இருந்தது அவன் முகம்.
“என்ன, உன்னைப் பேச வைக்க நான் பாட்டில் பாட்டிலா வாங்கி வைக்கணுமா?”
“ஏன் அப்படி பண்ணீங்க.. அதெல்லாம் தப்பு தான?”
“குடிக்குறவன் பேச்சை குடிக்காம கேட்குறது ரொம்ப கஷ்டம்..”
“!!”
“இருந்தாலும் நீ இருக்குற நிலைமைக்கு உன்னை அறியாம எல்லாத்தையும் பேச வைக்க எனக்கு வேற வழி தெரியலை.
என்னால பொறுமையா உன்னை கொஞ்சி கெஞ்சியெல்லாம் பேச வைக்க முடியாது. வரவும் வராது. நல்லதுக்கு தான பண்ணினேன் அதனால தப்பில்ல..”
“நேத்து நீங்க குடிக்கலையா?”
“உனக்கு தான் பிடிக்கலையே..”, என்றதில் உள்ளுக்குள் ஒரு வித மகிழ்ச்சி நாச்சியாரிடத்தில் இருந்தும் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாதவளாய்,
“அத்தை உங்களை சாப்பிட கூப்பிட்டாங்க..”
“ம்ம் போலாம்.. இப்போ உனக்கு சந்தோஷமா?”, என்றதில் ஆமோதிப்பாய் தலையசைத்தவள் மெலிதாய் புன்னகைத்தாள்.
“பரவால்லையே உனக்கு சிரிக்க எல்லாம் தெரியுமா?”
“நான் திரும்ப சிரிப்பேன்னு நினைக்கவே இல்ல.. உங்களால தான்.. தேங்க்ஸ்..”
“இந்த வாழ்க்கை ரொம்ப சின்னது. மத்தவங்களுக்காக நம்மளோட சிரிப்பைத் தொலைச்சுட்டா வாழறதே வேஸ்ட்..”
“நீங்க சொல்றது சரி தான். ஆனால் உங்களை மாதிரி எல்லாரும் இல்லையே..”
“ஒரு பொண்ணை மனசளவுல ரொம்ப ஈசியா நெருங்கிட முடியும். எப்போ தெரியுமா? அவ ஒரு உண்மையான அன்பை எதிர்பார்க்கும் போது.
“அந்த வயசுல அன்புன்னா என்ன, இரக்கம்னா என்ன, காதல்னா என்னனு புரிஞ்சுக்கறதே கஷ்டம். யாராவது நம்மளை உண்மையா கவனிக்குற மாதிரி இருந்தா, அதையே காதல்னு நம்பிடுவோம்.
அதுல தப்பு இல்ல. ஆனா தப்புனு புரிஞ்ச பிறகும் அதுலயே நிக்குறது தான் தப்பு. அது நமக்கு ஆபத்துனு தெரிஞ்சு தள்ளி வந்துட்டல அவ்வளவு தான்.”
“..”
“உன் வயசுல நான் கூட நிறைய சம்பாதிக்கணும்னு யார் யாரோட எல்லாமோ கூட்டு வைச்சு சுத்துனேன். ஒரு நேரத்துல கொஞ்சம் உஷாரா இல்லாம போயிருந்தேன்னா ஜெயில்ல கம்பி எண்ணி வாழ்க்கையே போயிருக்கும்.
எதோ ஒண்ணு சரியா இல்லனு அதை ஒதுக்கிட்டு வர்றதுல தான் இருக்கு நம்ம புத்திசாலித் தனம்.”
அதற்குள் கீழிருந்து மேகலையின் குரல் கேட்க இருவருமாய் கீழே சென்றனர். உணவை முடித்து எழுந்து கொள்ள எத்தனித்தவன்,
“நாம வெளியே போயிட்டு வருவோம். ரெடி ஆயிட்டு வா.”, என்றதற்கு தலையசைத்தாள் நாச்சியார்.
“காலேஜுக்கு பஸ்ஸூல எல்லாம் போகாத டி. நானே கொண்டு போய் விடுதேன். சாயிந்தரம் அவனை கூட்டிட்டு வரச் சொல்லு.”
“நீங்க ஏன் அத்தை.. பஸ்ஸில் போய்க்குறேன்.”
“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் இங்கே இருந்து ஊருக்கு போறதுக்குள்ளே கூட்டத்தில் நொந்து போயிருவ நீ. நான் இல்லைனால் பரவால்ல. நான் தான் இருக்கேனே..”, என்ற படி மேகலை பாத்திரத்தை உள்ளே எடுத்துச் சென்றிருந்தார்.
சுடிதார் மாற்றி விட்டு வந்தவள் அகத்தியனோடு வண்டியில் ஏறிக்கொள்ள திருநெல்வேலிக்கு அழைத்துச் சென்றான். அந்தப் பெரிய ஜவுளிக் கடைக்குள் நுழைந்தவனைக் கேள்வியாய் பார்த்த படி நாச்சியாரும் உள்ளே சென்றாள்.
பெண்கள் பிரிவிற்கு வந்தவன் அவளை ஏறிட அவளும் அவனைப் பார்த்த படி நின்றிருந்தாள்.
“என்ன? இங்கே இருக்குறதை நானா போட்டுக்க முடியும். போய் பிடிச்சுருக்குறதை எடுத்துக்கோ..”, என்றதில் சுடிதார்களின் மேல் பார்வையை சுழற்றினாள் நாச்சியார்.
சட்டென ஏதோ தோன்ற அவளை அழைத்த அகத்தியன் மேற்கத்திய உடைகள் பிரிவைச் சுட்டிக் காட்டிய வண்ணம்,
“ஜீன் எல்லாம் போடுவியா நீ?”
“அது..”
“அதில் எதாவது எடுத்துக்குறியா?”
“ம்ஹும்.. ஆசை ஆனா அப்பா வாங்க விட்டதில்ல.”
“சரி போய் பாரு..”, என்றதும் கண்கள் விரிய அந்தப் பக்கம் சென்றவள் ஒவ்வொன்றாய் எடுத்துப் பார்த்து சில நொடிகளில் நீல நிற ஜீன்ஸ் ஒன்றை எடுத்துக் கொண்டாள்.
அகத்தியன் அவன் போக்கில் கைப்பேசியைத் துழாவிய படி இருக்க இரண்டு மூன்று நீள டாப்ஸ்களோடு அவனருகில் வந்தவள் போலாம் என்பதாய் கூற அவள் கையிலிருப்பதை வாங்கிப் பார்த்தவன்,
“ஜீனுக்கு இதைப் போடப் போறியா?”
“ம்ம்.. ஏன் நல்லாயில்லையா?!”
“வேண்டாம்.. இங்கே வா..”, என்றவன் ஷார்ட் குர்தியில் இரண்டு மூன்றை எடுத்து அவளிடம் காட்ட அவளுக்குமே பிடித்திருந்தது. வாங்கியவற்றிற்கு பில் போட்டு வெளியே வந்தவர்கள் வீட்டிற்கு கிளம்பியிருந்தனர்.
வண்டியில் திரும்பும் வழி முழுவதும் இருவரும் பெரிதாக எதுவும் பேசவில்லை. இருந்தாலும் அந்த அமைதி முன்பைப் போல சங்கடமாக இல்லை. வார்த்தைகள் இல்லாவிட்டாலும், இருவருக்கும் இடையில் நம்பிக்கை மெதுவாக இடம்பிடித்துக் கொண்டிருந்தது.
அகத்தியன் வெளியே சென்று விடும் பொழுதுகள் எல்லாம் மேகலையோடு கழிந்தது நாச்சியாருக்கு.
“அந்த புளியைக் கரைச்சு குடு டி. நான் சாதத்தை இறக்கிட்டு வரேன்.”
“எப்படி கரைக்கணும் அத்த?”, என்றவளை முறைத்தவராய் தனது வேலையை முடித்து அவளிடம் இருந்து பாத்திரத்தை வாங்கிக் கொண்டார்.
“இப்படியா ஒரு வேலையும் தெரியாம இருப்ப?”
“அம்மாவும் பண்ண சொன்னதில்ல நானும் பண்ணதில்ல அத்த..”
“காலேஜ் விட்டு தான் நாலு மணிக்கு வந்துருவியே அப்பறம் எதாவது ஒத்தாசையா இருக்கலாம்ல?”
“காலேஜ் முடிச்சு இரண்டு மணி நேரம் வாலி பால் ப்ராக்டிஸுக்கு போயிருவேன் அத்த. விளையாடிட்டு வந்தா ரொம்ப டயர்டா இருக்கும். அப்பறம் படிச்சு சாப்பிட்டு தூங்கிருவேன்.”
“ப்ளேயரா நீ!!”
“ம்ம் டிஸ்ட்ரிக்ட் லெவல் விளையாடிருக்கேன்.”
“அதான் இப்படி குச்சியா இருக்க..”, இப்படியாய் இருவரும் கதைப் பேசிய படி வேலை நடந்தது. மறுநாள் காலை கல்லூரிக்குத் தயாரானவளின் முகத்தில் பயம் அப்பட்டமாய் தெரிந்தது.
மேகலை என்ன சமாதானம் கூறினாலும் நாச்சியாரால் இயல்பிற்கு வர முடியவில்லை. ஏதோ நினைவில் தன்னைத் தொலைத்தவளாய் கல்லூரிப் பையை எடுத்து வைத்துக் கொண்டிருந்தவளின் அருகில் வந்தான் அகத்தியன்.
“நாச்சியா..”, என்றவனின் குரலில் தூக்கி வாரிப் போட எழுந்து நின்றாள்.
“தைரியமா போய்ட்டு வா..”
“என்னால யாரையும் ஃபேஸ் பண்ண முடியும்னு தோணலைங்க..”
“எல்லாம் நம்ம கையில் தான் இருக்கு. அதெல்லாம் முடியும்.”
“…”
“எனக்கு உன்னைப் பத்தித் தெரியும் வேற யாரு என்ன சொன்னா என்ன உனக்கு? ஊர் வாய்க்கு பயந்தா யாரும் வாழவே முடியாது.”, அப்போதும் அவள் முகம் கலையிழந்தே இருக்க அவளது இடது கைப் பற்றி அருகில் இழுத்தவன் லேசாய் அணைத்துக் கொண்டான். பெண்ணிடத்தில் அப்போதும் அமைதி மட்டும் தான்.
ஓரிரு நொடிகளில் பிரித்து நிறுத்தியவன் மனைவியின் முகம் பார்க்க தயக்கத்தையும் மீறி அவனை ஏறிட்டாள். அந்த முகத்தில் தெரியும் உறுதி அந்த நொடி அவளுக்கு அதிகமாய் தேவைப்பட்டது.
“என்ன நடந்தாலும் நீங்க இப்படியே இருப்பீங்களா?”
“ம்ம்..”
“என்னால சமாளிக்க முடியாத நிலைமை வந்தா நான் உங்ககிட்ட வரலாம்ல?”
“என்கிட்ட மட்டும் தான் வரணும்.”, என்றதற்கு மெலிதாய் புன்னகைக்க முயன்றாள்.
“நேரமாவுது வா போலாம்.”, என்றவனோடு நாச்சியார் கீழே சென்ற நேரம் மேகலை வண்டிச் சாவியோடு தயாராய் வாசலில் திண்ணையில் அமர்ந்திருந்தார்.
வண்டியில் மாமியாரின் பின்னால் அமர்ந்தவள் வாசலில் நின்றிருந்த கணவனையே பார்த்திருக்க எப்போதும் போல் எவ்வித ஆர்பாட்டமும் இல்லாத முகத்தோடு நின்றிருந்தான் அகத்தியன்.
கல்லூரி வாசலில் இறங்கி நாச்சியார் உள்ளே செல்ல எத்தனிக்க அவளது கைப்பற்றி நிறுத்தினார் மேகலை.
“என்ன அத்த?”
“எந்தப் பேச்சும் உன் படிப்பை பாதிக்கக் கூடாது டி..”
“!!”
“அதாவது காதுக்கு ஏர்ற எதுவும் மண்டைக்கும் மனசுக்கும் ஏறக் கூடாதுனு சொல்றேன். சரி தானா?”, என்றதற்கு சம்மதமாய் தலையசைத்துச் சென்றாள்.
வகுப்பிற்குள் நுழைந்த போது அனைவரும் வந்திருக்கவில்லை எனினும் இருந்த சிலரது பார்வைகளும் நாச்சியாரைத் துளைத்தெடுத்தன.
தலையை நிமிர்த்தாமல் அவளது இடத்தில் சென்று அமர்ந்து கொண்டவள் யாரிடமும் எதுவும் பேசிக் கொள்ளவிலல்லை. ஐந்து நிமிடத்திற்குப் பின் அவளது அருகில் இருக்கும் தோழி வந்து விட சற்றே நிம்மதியாய் இருந்தது.
“நாச்சி எப்படி டி இருக்க?”
“நல்லாயிருக்கேன் டி..”
“நிறைய தடவை போன் பண்ணினேன் உங்கம்மா உன்ட்ட கொடுக்கவே மாட்டேன்னு சொல்லிட்டாங்க.”
“ம்ம்..”, எனும் போதே இன்னும் இரு பெண்கள் வந்து விட இவர்கள் நால்வரும் தான் அந்த பென்ஞ்சில் அமர்ந்திருப்பவர்கள்.
அதில் ஒருத்தியின் மூலம் அறிமுகமானவன் தான் நாச்சியாரின் முன்னாள் காதலன். அவள் நாச்சியரை முகம் கொடுத்துக் கூடப் பார்க்காமல் இருந்து கொள்ள மற்றொரு பெண் நாச்சியாரிடம் இயல்பாய் நலம் விசாரித்தாள்.
“என்னென்னவோ நடந்து போச்சே நாச்சி..”
“நான் உயிரோட இருப்பேன்னு கூட நினைக்கல.”
“நீ ஏன் டி உயிரை விடணும். உன்னை காதலிச்ச பாவத்துக்கு அவன் தான் உயிரை விட தயாரா இருக்கான்.”
“அருணா என்ன பேசுற? அவளுக்கு கல்யாணம் முடிஞ்சுருச்சு.”
“அதான் ஊருக்கே தெரியுமே நல்ல புளியங்கொம்பா எம்எல்ஏ இல்ல கட்டிருக்காரு. ஆனாலும் நீ இப்படிபட்டவனு நான் நினைக்கலட்டி..”
“அருணா என்ன நடந்ததுனு தெரியாம தேவையில்லாத பேச்சு பேசாத..”
“ஏன் சொல்ல மாட்ட இரண்டு நாளுக்கு முன்னாடி கூட கையறுத்து சாகப் போயிட்டான் அவன். கூட இருந்தவங்க தான் காப்பாத்தி வைச்சுருக்காங்க..”, என்றதற்கு நாச்சியாரிடம் மௌனமே நீடித்தது.
“பாத்தியா எப்படி அமுக்குனியா இருக்கானு. ஒருத்தன் சாக பார்த்தான்னு சொன்னா உனக்கும் எனக்கும் கொஞ்சமா பதறுமே அதுவாவது இருக்கா பாரு அவட்ட..”
“அவன் எனக்கு யாரோ தான் அப்பறம் நான் ஏன் பதட்டப்படனும்?”, என்றவள் கோவத்தில் தோழியை உறுத்து விழித்தாள்.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
1 comment
Ennama state level player ku confidence venamaa