489
“குறள் 811: பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை பெருகலிற் குன்றல் இனிது
மு.வ விளக்க உரை: அன்பு மிகுதியால் பருகுவார் போல் தோன்றினாலும் நற்பண்பு இல்லாதவரின் நட்பு, வளர்ந்து பெருகுவதை விடத் தேய்ந்து குறைவது நல்லது.”
உணவை முடித்து அறைக்குள் செல்லவே தயக்கமாய் இருந்தது நாச்சியாருக்கு. நடக்கும் அனைத்திலும் அகத்தியன் என்னவோ சாதாணமாகத் தான் இருக்கிறான்.
இவள் தான் குழம்பி பயந்து தவித்துப் போகிறாள். அகத்தியன் எதோ முக்கியமான தாள்களைப் பார்த்தபடி கட்டிலில் இருக்க ஒன்றும் பேசாமல் அவள்போக்கில் கட்டிலின் உள் சென்று நாச்சியார் அமர அந்த நொடியே கையிலிருந்ததை மூடி வைத்து விட்டு அவளைப் பார்த்து திரும்பி அமர்ந்திருந்தான்.
“நீங்க வேலையைப் பாருங்க..”
“இருக்கட்டும். அங்க போனப்பறம் சனி ஞாயிறு கழிச்சு காலேஜுக்கு கிளம்பு.”
“சரிங்க..”
“அடுத்த மாசத்தோட படிப்பு முடியுதுல அடுத்து என்ன பண்ண போற?”
“என்ன பண்ணட்டும்?”, என்று எதிர் கேள்வி கேட்டவளைப் பார்த்தவன் சாதாரணம் போல அவளது கையை இழுத்து தன் தொடையில் வைத்த வண்ணம் மெதுவாய் வருடினான். நாச்சியார் சட்டென தலை குனிந்து கொண்டாள்.
“எம்காம் படிக்குறியா?”
“அது.. அத்தைட்டயும் கேட்கணும்..”
“நான் என்ன சொல்றேனோ அதான் முடிவு. நீ சொல்லு படிக்குறியா?”
“ம்ம்..”
“சரி நான் விவரம் கேட்டு வைக்குறேன்.”
“சரிங்க..”
“கொஞ்சமா தண்ணியடிக்கணும் போல இருக்கு. உனக்கு பரவல்லையா?”
“!!”
“கொஞ்சமா.. இன்னைக்கு மட்டும்..”, என்றதற்கு அரைகுறையாக தலையசைத்து வைத்தாள்.
கீழிருந்து வந்தவனின் கரங்களில் இரண்டு பாட்டில்கள் இருக்க அதையும் அவனையுமாய் பார்த்தாள்.
“புரோட்டா சாப்பிட்டுருக்கல. இந்த எலுமிச்சை ஜுஸை குடி. வயித்துக்கு நல்லது.”
“இல்ல.. வே..”,என்று ஆரம்பித்தவள் அவன் பர்வையில் பேச்சை நிறுத்திவிட்டு அதை கையில் வாங்கிக் கொண்டாள்.
அவளருகில் சற்று இடைவெளி விட்டு சுவற்றில் சாய்ந்த வண்ணம் கால் நீட்டி அகத்தியன் அமர்ந்து கொள்ள சம்மணமிட்டு அமர்ந்திருந்தவள் தன் கையிலிருந்த பாட்டிலையே பார்த்திருந்தாள்.
அகத்தியன் தனது கையிலிருந்ததை ஒரு வாய் குடித்து விட்டு அவளையேப் பார்த்திருக்க ஒரு சொட்டு உள்ளுக்குள் தள்ளியவளுக்கு புளிப்பும் உப்புமாய் ஏதோ போன்று இருந்ததில் மெதுவாய் கணவனை ஏறிட்டாள்.
“நீ நினைக்குறது தான் இது.. குடி..”, என்றதில் பெரும் அதிர்ச்சியோடு அவனைப் பார்த்திருந்தாள் நாச்சியார்.
அகத்தியனோ எவ்வித உணர்வுமின்றி அவளையே பார்த்திருக்க அந்த பதட்டத்தில் ஒரே மூச்சில் அனைத்தையும் குடித்திருந்தாள் நாச்சியார்.
அதை கவனித்தவன் தன் கையிலிருந்த பாட்டிலை அருகிலிருந்தே மேசையில் வைத்து விட நாச்சியாருக்கோ தலையெல்லாம் ஒரு மாதிரியாக இருந்தது.
சில நிமிடங்களுக்கு அங்கு பெரும் அமைதி மட்டுமே நிலவ நாச்சியாரே வாய் திறந்தாள்.
“தலையெல்லாம் எப்படியோ இருக்குங்க..”
“ம்ம்..”
“ஜுஸ் இல்லையா அது?”
“ம்ஹூம்..”
“அப்பறம் ஏன் அதைக் கொடுத்தீங்க?”, அத்தனை உளறல் அவள் பேச்சில்.
“உன்னைப் பேச வைக்க தான்..”, என்றதில் கணவனை ஏறிட்டாள்.
“என்ன பேசணும்?”
“என்னைப் பத்தி பேசேன்..”
“உங்களை முதல்ல பக்கத்துல பார்த்தது, அவன்.. அவனை நீங்க அடிச்சப்ப தான்..”
“..”
“அன்னைக்கு ராத்திரியில இருந்து எனக்குத் தூக்கமே இல்ல தெரியுமா?”
“…”
“வாழ்க்கையே கொஞ்ச நாள் தான் சீக்கிரமே நான் செத்து போவ போறேன்னு நினைச்சேன்.”
“நான் என்ன பத்து கொலை பண்ணவனா?”
“ம்ஹும்.. ஆனால் நான் பண்ண அசிங்கத்தை சொல்லி காட்டி என்னை கொடுமைப்படுத்தி அது தாங்காம நானே செத்து போயிருவேன்னு நினைச்சேன்.”
“சரி தான்.. அப்பறம்?”
“கல்யாணம்.. முடிஞ்சு உங்க பக்கத்துல உட்காந்துருந்தப்ப அப்படி ஒரு உதறல். எப்போ என்ன சொல்லுவீங்களோனு ஒரே பயம். ஆனா..”
“ஆனா?”
“அன்னைக்கு நைட்டு சரி போய் தூங்குனு சொன்னீங்களே..ப்ச்.. எவ்வளவு நிம்மதி தெரியுமா?”
“எனக்கு ரொம்ப பயமா இருந்தது ஆனா யாருமே எனக்குத் துணைக்கு இல்ல அப்போ..”, என்றவள் மூக்கை உறிஞ்சிக் கொள்ள ஒன்றும் பேசாமல் அவளைத் தன் தோள் சாய்த்திருந்தான்.
“பல நாளுக்கு அப்பறம் நான் எப்போ சந்தோசமா இருந்தேன் தெரியுமா? நீங்க என்னை நம்புறதா சொன்னப்போ.. அப்படியே வந்து உங்க கையை இறுக்கி பிடிச்சுக்கணும்னு நினைச்சேன்.”
அகத்தியன் தற்போது தனது வலக்கரத்தை நீட்ட உண்மையாகவே இறுகப் பற்றிக் கொண்டாள்.
“எனக்கு என் அப்பா அம்மாவை ரொம்ப பிடிக்கும். ஆனா இப்போ அவங்க மேல கோவமா வருது. என்ன பண்ணாலும் அந்தக் கோவம் போவ மாட்டேங்கு.”
“எல்லாத்தையும் சொல்ற இதெல்லாத்துக்கும் காரணமானவன பத்தி சொல்லு?”, என்றதில் தலையைத் திருப்பி கணவனின் முகத்தைப் பார்த்தவள்,
“அவனை உண்மையா நம்புனேன். நிஜமாவே அவனை எனக்குப் பிடிச்சுருக்குனு நினைச்சேன். ஆனா அப்பறம் யோசிச்சு பார்த்தா அவன் என் பின்னாடியே வந்து, ப்ரெண்ட்ஸெல்லாம் அவனை பாவம் இப்படி உனக்காக வேலை வெட்டியை விட்டுட்டு சுத்துறானேனு சொல்லி பரிதாபப் பட்டதுல தான் காதலிக்குறதா என்னை நானே நம்ப வைச்சுட்டேன்னு புரிஞ்சுது.”
“…”
“சின்ன சின்ன விஷயங்கள் அப்பப்போ மனசை உறுத்துனாலும் காதலிக்குறவங்களைத் தப்பா நினைக்குறது தப்புனு நினைப்பேன். அவங்களை விட்டு வந்துட்டா நான் ஏமாத்துகாரினு நினைச்சேன்.”
“..”
“ஆனா சென்னை போய் அங்கே தனியா இருந்தப்போ தான் அவன் என்னைப் பத்தி கவலையே படாம இருக்குறதைப் பார்த்து தான் தப்பு புரிஞ்சுது. அந்த வீட்டுல எவ்வளவு பயமா இருந்தது தெரியுமா?
யாராவது வந்து என்னை கொன்னு போட்டுருந்தா கூட யாருக்கும் தெரிஞ்சுருக்காது. அதை விட அவன் பொறுப்பே இல்லாம கழுத்து முட்ட குடிச்சுட்டு வந்தது தான்..”, என்றவள் பேச்சை நிறுத்தி கணவனைப் பார்த்த படி,
“கல்யாணத்து அன்னைக்கு நீங்களும் குடிச்சுருந்தீங்கல? எனக்கு வாந்தி வராம இருக்கணுமேனு வேண்டிகிட்டே இருந்தேன். அந்த நாத்தம் எனக்கு பிடிக்கவே இல்ல.. வ்வே..”, என்றவள் சற்று அவன் முகத்திற்கு அருகில் வர அகத்தியன் அப்படியே அவளைப் பார்த்திருந்தான்.
“இப்போ உங்களுக்கும் அப்படி தான் இருக்கா? என் மேல ஒரே நாத்தம் அடிக்குதுல?”
“நாளையில இருந்து அடிக்காது.. அப்பறம் வேற சொல்லு”
“ஒண்ணு சொல்லுவேன் யார்ட்டேயும் சொல்லக் கூடாது..”
“ம்ம்..”
“நீங்க ரொம்ப நல்லவங்க தெரியுமா?”, என்றதில் அகத்தியனிடத்தில் சிரிப்பு. அவள் பார்த்திராத அந்த சிரித்த முகத்தைப் பார்த்து அவளும் அசட்டுத் தனமாய் புன்னகைத்து வைத்தாள்.
“எனக்கு உங்களையும் அத்தையையும் ரொம்ப பிடிச்சுருக்கு. ஆனா நீங்க ஏன் அத்தையோட ஒழுங்கா பேச மாட்டிக்கீங்க? அவங்க பாவம் வருத்தபடுவாங்கல..”
“அதான் நீ இப்போ வந்துட்டியே..”
“என்ன இருந்தாலும் அவுக பிள்ளையை தான தேடுவாங்க?”
“..”
“நீங்க உர் உர்னு பேசுனாலும் என்னை நல்லா பார்த்துகிடுறீங்க. தேங்க்ஸ்..”, என்றவள் மேலும் மேலும் எதை எதையோ பேசிய படி அப்படியே கண்ணயர்ந்திருக்க அகத்தியன் முகம் அழகிய புன்னகையில் மிளிர்ந்தது.
இதைத் தவிர அவளது மனதில் இருப்பதை எல்லாம் அவனிடம் பேச வைப்பதற்கு அவனுக்கு வழித் தெரியவில்லை. நினைத்தது போலவே இத்தனை நேரமும் அவள் மனதில் இருப்பதை கொட்டியதில் நிம்மதி கொண்டவனாய் மனைவியை ஒழுங்காக படுக்க வைத்து விட்டு விளக்கையும் அணைத்து விட்டு தனதிடத்தில் படுத்திருந்தான்.
லேசாய் அசைந்தவள் வாகாய் அவனது கழுத்து வளைவில் முகத்தை புதைத்துக் கொண்டு தூங்கிப் போனாள்.
மறுநாள் வழமை போல் அகத்தியன் முதலில் எழுந்து கொள்ள அவன் கழுத்து வளைவில் வைத்த முகத்தை சற்றும் நகர்த்தாது அப்படியே உறங்கிக் கொண்டிருந்தாள் நாச்சியார்.
லேசாய் நகர்ந்து அவள் புறம் திரும்பிப் படுத்த வண்ணம் தலைக்கடியில் கை வைத்துக் கொண்டவனாய் இடது கையால் அவளைத் தட்டி எழுப்ப முயற்சித்தான்.
சில நொடிகளுக்குப் பின் லேசாய் அசைந்தவள் அத்தனை அருகில் கணவனின் முகம் பார்த்து வேகமாய் எழ முயற்சிக்க தோளைப் பிடித்து அழுத்தினான் அகத்தியன்.
“ஏற்கனவே தலை வலிக்கும். இப்படியெல்லம் எந்திரிச்சா..”, என்றதில் இரவு நடந்தது நினைவிற்கு வர சட்டென தலையில் அடித்துக் கொண்டவளாய்,
“ஏன் அப்படி பண்ணீங்க?”
“அதான் சொன்னேனே உன்னைப் பேச வைக்குறதுக்கு தான்..”
“என்ன பேசினேன்?!”
“எல்லாமே..”
“எல்லாமேனால் என்ன அர்த்தம்?”
“நான் ரொம்ப நல்லவன்ங்கிற வரை எல்லாமே தான்..”
“அது…”
“ஷ்ஷ்.. உன் மனசில் இருக்குற எல்லாமே எனக்கு இப்போ தெரியும். இனி இந்த முட்டகண்ணில் முழிக்குறது, பயந்து பயந்து நிக்குறது நினைச்சால் கண்ணை கசக்குறது இதெல்லாம் இருக்கக் கூடாது.”
“ம்ம்..”
“என்ன?”
“வேற எதைப் பத்தியும் பேசினேனா?!”
“நான் தான் சொல்லிட்டேனே எல்லாமேனு. இனி அது எதுவும் உன் மண்டைக்குள்ளே இருக்க வேணாம். சரியா?”
“தேங்க்ஸ்..”
“போய் ரெடி ஆகு.. புது இடம் இன்னுமே நல்லாயிருக்கும் உனக்கு.”, என்றதற்கு மெலிதாய் புன்னகைத்தவள் எழுந்து அமர கட்டிலை விட்டு இறங்கும் முன் தயக்கமாய் கணவனைப் பார்த்தாள்.
“என்ன கேட்கணும்?”
“இல்ல.. நேத்து நீங்க சிரிச்சீங்க..”
“அப்படியா? எனக்கு நியாபகம் இல்லையே..”
“இல்ல கண்டிப்பாத் தெரியும் நீங்க சிரிச்சீங்க..”
“சரி.. அதுக்கு?”, என்றதற்கு என்ன கூறுவதெனப் புரியாமல் இறங்கி ஓடியவளைப் பார்த்து மீண்டுமாய் மெலிதான புன்னகை அகத்தியனிடத்தில்.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
6 comments
💞💞💞💞💞💞💞
Superb..
Nice update sis. Oh.saraku adicha, ippadi unmai ellam ulareeduvaangala?
😍😍
Enakum terilaye.. but pesa dairiyam varum thana..😁😁
அடேய் அகத்தியா 🤭🤭🤭😘😘😘
நல்ல யோசனை தான் 😏😏😏
உனக்கும் அதே மாதிரி செஞ்சா நீயும் சொல்லுவியா 😏😏😏
நாச்சியார் 😍😍😍
Very nice.
Mla parotta vaangittu vanthaana nu ? La subhum pothu sarakkummaaa..
Ennada mla ku vamtha sothanai