“நீங்க விரும்பியே தோற்த்து போறேள்..”,என்றவளின் குரலில் அளவு கடந்த பெருமிதமும் காதலும்.
“அப்படியெல்லாம் இல்லையே இந்த அண்ணையா ஏன் டி தோற்த்து போணும்?”,என்றவனின் குரலில் குறும்பு தெரிந்தது.
“அதையே நான் நானும் கேட்குறேன்.ஏன் என்கிட்ட மொத்தமா வேற ஒருத்தரா இருக்கேள்.இத்தனை நாளில் ஒரு துளி ஈகோவோ கோபமோ இருந்ததில்லை.”
“பொண்டாட்டிகிட்ட ஈகோ பார்த்து எந்த கோட்டையை நான் பிடிக்கணும்ங்கிற?”
“அப்படியில்ல ஆண்களுக்கு சில விஷயங்கள் சொல்லிக் கொடுக்காமேயே மனசில் பதிஞ்சு போயிடும்.இந்த சமூக கட்டுபாடுகள்னால.அதனால கேட்டேன்.என் அப்பா நல்லவர் தான் லவ் மேரேஜ் தான் ஆனாலும் அம்மாவுக்கு சில கட்டுப்பாடுகள் உண்டு.
விளையாட்டா எதாவது பேசும் போது கூட சட்டுனு தப்பா புரிஞ்சுண்டு கோபப்பட்டுருவார்.அம்மா கொஞ்சம் பார்த்து கவனமா வார்த்தைகளை கையாளுறதை நானே பார்த்துருக்கேன்.
ஆனால் அவாளுக்கு காதலுக்கும் அன்புக்கும் குறைவில்லாம தான் இருந்தது.நான் சொல்ற விஷயம் இதெல்லாம் தாண்டி அடிப்படையிலேயே இரத்தத்தில் கலந்ததுனு தோணும்.”
“ம்ம் இருக்கலாம்.இது மாதிரி நம்ம கல்யாணம் நடந்த இரண்டு நாள்ல நானும் நிறைய யோசிச்சுருக்கேன்.ஆனால் நீ எல்லா கஷ்டத்தையும் தாண்டி உன்னை மீட்டெடடுத்த வேகம்,என் பொண்டாட்டிங்ககிற ஒரே விஷயத்துக்காக.
நான் உன்னை நல்லா பார்த்துப்பேன்னு பாதுகாப்பா உணர்ந்ததுனால.என் மேல இருந்த நம்பிக்கைனால.எதிர்பாராத எத்தனையோ விஷயங்கள் உனக்கு இங்க உரிமையினால் கிடைச்சாலும் உனக்குத் தேவைப்பட்டது நான் மட்டும் தான்.
அன்பா இரண்டு வார்த்தையும் அரவணைப்பா என்னோட தோளும்.வேற எதுவும் உன் கருத்தில் பதிஞ்ச மாதிரியே தெரியல.
இயல்பிலேயே நீ பொறுப்பானவளா இருந்தாலும் பொண்டாட்டினு நீ பண்ண விஷயங்கள் எல்லாம் தான் புருஷனா என் கடமையை எனக்கு அதிகமா உணர்த்துச்சு.
தாம்பத்தியம்ங்கிறது கூட நம்ம விஷயத்தில் சீக்கிரமா நடந்த ஒண்ணு தான் ஆனால் அந்த உரிமையை எனக்கு கொடுத்ததும் உன்னோட அன்பு தான் இசை.
உன்னோட வாழ ஆரம்பிச்ச அப்பறம் எனக்கு புரிஞ்சது ஒரு விஷயம் தான் ஒரு மனைவி அடிப்படையா அவளோட கணவன்கிட்ட எதிர்பார்க்குறது கொஞ்சம் மரியாதையும் பாதுகாப்பும் அளவுகடந்த நம்பிக்கையும் காதலும் தான்.
இதுல ஆம்பளைத் திமிரெல்லாம் கொண்டு வந்து வாழ்க்கையை அழிச்சகணும்னு நினைக்குற முட்டாளா இந்த வீரேந்திரன் கண்டிப்பா இருக்க மாட்டான் மாமி.
என் வாழ்க்கை தராசில் ஒரு பக்கம் நீ இருந்தா இதை ஈடுகட்ட என் வாழ்க்கையையே உன்கிட்ட கொடுத்துருவேன்.என் இசையை விட என்னால கூட என்னை சந்தோஷமா பார்த்துக்க முடியாது தெரியுமா?”,என்றவனை தன் மார்போடு சாய்த்தணைத்துக் கொண்டாள்.
“she heals him..she heals him completely…huhhhhh”,என்று பைத்தியமாய் கர்ஜித்த ஜான் அந்த அறையையே அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தான்.
“ஜான்…”
“எதுவும் பேசாத..அந்த வீரேந்திரனோட மனைவி அவளை நான் விட்டிருக்கக் கூடாது.பணத்தை முதல்ல அடைய நினைச்சு அவளை விட்டுட்டேன்.எவ்வளவு பெரிய தப்பு..
அந்த வீரேந்திரனோட முழு பலமா நிக்குறா அவ.அவனை சாவோட விளிம்பில் இருந்து கூட்டிட்டு வந்துருக்கா.பழைய வீரேந்திர சேதுபதியா மாத்தியிருக்கா.அவனை அழிக்க நினைச்ச நான் அவனோட ஆணிவேரா இப்போ இருக்குற அவளை அழிச்சுருக்கணும்.அவன் ஜெயிக்குறதை என்னால ஏத்துக்க முடியாது.அதை விட என் தம்பியை கொன்னதை ஏத்துக்கவே முடியாது.”,என்றவன் முழு பாட்டில் மதுவையும் வாயில் கவிழ்த்திருந்தான்.
“நான் முட்டாளாவே இருந்துட்டு போறேன்.கெட் அவுட்..”,என்றவனின் கர்ஜனையில் அறையை விட்டு வெளியேறியிருந்தான் ஜாக்.
என்ன செய்ய வேண்டும் எப்போது எப்படி என ஆயிரம் யோசனைகள் தலையைக் குடைந்து கொண்டிருக்க மதுவின் தாக்கத்தால் அப்படியே கண்ணயர்ந்திருந்தான் ஜான்.
யாரோ கன்னத்தில் தட்டும் உணர்வில் தலையை அழுந்தப் பிடித்த வண்ணம் கண்களைத் திறக்க முயன்றான்.பார்வை மங்கலாய் இருக்க தலையை உலுக்கிக் கொண்டு பார்வையை சீராக்க முயற்சித்தவனுக்கு எதிரில் சில உருவங்கள் நிழலாடியது.
கடினப்பட்டு கண்களைத் திறந்தவனின் முன்னால் கம்பீரமாய் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தான் வீரேந்திர சேதுபதி.
ஜான் தனது துப்பாக்கியை அவசரமாய் தேட ராஜு அதை தன் கைகளில் வைத்துச் சுழற்றினான்.
“வெல்கம் பேக் வீரேந்திரன்..”,என்றபடி சாய்வாய் சோபாவில் அமர்ந்து அசட்டுச் சிரிப்பை உதிர்த்தான் ஜான்.
ஜானின் ஆட்கள் இருபதுக்கும் மேற்பட்டோர் காவலுக்கு இருந்தனர்.ஆனால் தற்போது அவன் முன் வீரேந்திரனோடு சேர்த்து நான்கே பேர் தான் இருந்தனர்.
அத்தனை பேரையும் அடித்துப் போட்டு உள் நுழைவதெல்லாம் சாதாரண விஷயம் இல்லையே.எத்தனை சாதாரணமாய் பார்வையை வீரேந்திரன் மீது வைத்திருந்தாலும் உள்ளுக்குள் சற்று பயம் எழுந்திருந்தது.
“அப்பறம் ஹவ் இஸ் யுவர் வைஃப்..”,என்ற அடுத்த நொடி ராஜு அவன் வாயைக் கிழித்திருந்தான்.
இரத்தத்தை துப்பியவனின் கண்கள் ராஜுவை கொலைவெறியோடு பார்த்திருந்தது.
வீரேந்திரன் மெதுவாய் தன் இடத்தில் இருந்து எழுந்து சட்டையை இழுத்து விட்டு கொண்டு அவனை நெருங்கினான்.
“என் வைஃப் ரொம்ப நல்லாயிருக்கா அண்ட் அவளுக்காக ஒரு கிப்ட் கூட கேட்டுருக்கா என்கிட்ட..அதுக்காக தான் இங்க வந்தது.”
“….”
“அக்சுவலா உன்னை அவ்வளவு பெரிய ஆளா நினைக்கல..அதனால தான் கொஞ்சம் கவனக்குறைவா இருந்துட்டேன்.
என்னை காலி பண்ணணும்னு நினைச்சதோட நீ நிறுத்திருக்கணும் ஜான்.குறைஞ்சபட்சம் உயிரோடயாவது இருந்துருப்ப..
உனக்குத் தண்டனை கிடைக்கணும்னு மட்டும் தான் இத்தனை வருசமும் என் மனசில் இருந்தது.ஆனால்..”,என்றவன் அதற்கு மேல் பேசுவதற்குள் அவன் மார்பில் ஓங்கி மிதித்திருந்தான்.
“என் கோட்டைக்குள்ள நுழையுற தைரியம் உனக்கு வந்திருக்க கூடாது.அதை விட என் மனைவி மேல உன் பார்வை விழுந்துருக்கவே கூடாது.”,என்றவன் சற்றும் யோசிக்காமல் அருகிலிருந்த மது பாட்டிலை எடுத்து ஜானின் தலையில் உடைத்திருந்தான்.
கோபத்தில் அனல் தெறிக்கும் கண்களோடு தன்னெதிரில் நிற்பவனைப் பார்த்த ஜானுக்கு மூளை வேலை செய்ய மறுத்திருந்தது.
“மிஸர்ஸ் வீரேந்திரனுக்கான கிப்ட் என்ன தெரியுமா உன்னோட உயிர்.”,என்றவன் இடுப்பிலிருந்த கத்தியை எடுத்து ஜானின் கழுத்தில் அறுத்திருந்தான்.
ராஜுவின் முகத்தில் அப்படியாய் ஒரு திருப்தி.கையில் கத்தியோடு ருத்ரமாய் நின்றிருந்தவனைப் பார்த்தவனுக்கு ஏழிசையின் சவால் கண்முன் தோன்றி மறைந்தது
“வீரேந்தின் உன் முன்னாடி வந்து நிக்குற அன்னைக்கு அவரைத் தோற்கடிச்சுட்டு வந்து என் மேல கை வை”,ஜானைப் பார்த்து கூறியவளின் குரலின் திடம் இப்போது மெய் சிலிர்க்க வைத்திருந்தது.
இரவு தாமதமாய் கிளம்பி வெளியே சென்றவனுக்காக தனது பால்கனியிலேயே காத்திருந்தாள் ஏழிசை.இன்றோடு பிரச்சனைகள் அனைத்தும் முடிந்தது என்ற தீர்க்கமான நம்பிக்கையோடு ஊஞ்சலில் அமர்ந்திருந்தவளுக்கு வெகு நாளைக்குப் பிறகு தானாகவே உதடுகள் பாடலை முணுமுணுத்தது.
“பெண்ணுக்கு பேராசை வேரொன்றும் இல்லை சொன்னதை செய்தாலே நிகர் இன்னும் இல்லை
நீ உறுதியானவன் என் உரிமையானவன் பசி ருசியாய் பகல் இரவை பகிர்ந்து கொள்ளும் தலைவன்”
எப்போதும் போல் அறை வாசலில் கைகட்டி அவளது வரிகளை உள்வாங்கிக் கொண்டிருந்தான் வீரேந்திரன்.வாழ்வில் சில விஷயங்களை கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.தன் வாழ்வின் அப்படியான ஒருத்தியே ஏழிசை என்று மனம் கூச்சலிட்டது.
“வந்துட்டேளா..”,என்றவளின் குரலில் சிந்தனை கலைந்தவன் ஆமோதிப்பாய் தலையசைத்த வண்ணம் ஒன்றும் கூறாமல் குளியலறைக்குள் நுழைந்தான்.
அந்த நேரத்திலும் அவனுக்காக சுடச்சுட காபியோடு அமர்ந்திருந்தாள் அவனின் அன்பு மனைவி.
“நாளைக்கு அம்மாவை ஜோசியரை வர வைக்க சொல்றேன்.திவ்யா கல்யாணத்துக்கு தேதி குறிச்சு அதுக்கு முந்தின நாள் உமையாளோட வளைகாப்பை வைச்சுக்க முடியுறதானு கேட்கலாம்.என்ன சொல்றேள்?”
“நான் போன காரியத்தை பத்தி எதுவும் கேட்க மாட்டியா?”
“எல்லாம் நல்லபடியா முடிஞ்சுரும்னு தெரியும்.”,என்றவள் அவனைப் பார்த்து புன்னகைக்க,
“என் மேல ஆனாலும் கண்மூடித்தனமா நம்பிக்கை வைக்குற நீ..”
“நீங்க தான் அப்படி பழக்கப்படுத்தி வைச்சுருக்கேள்.நான் கேட்டு கிடைக்காத விஷயம் உங்களாண்ட இருக்கா?”,என்றவளின் பெருமிதம் முகத்தில் பிரதிபலித்தது.
“வாயாடி மாமி..”,அதற்கும் புன்னகையே அவளிடத்தில்.
“தாரு பிறந்தது உன் உடம்பு சரியாகணும்னு உங்க இரண்டு பேரு மேலேயுமே கவனமா இருந்துட்டேன் மாமி.அதில் தான் போன தடவை மிஸ் ஆகிடுச்சு.”
“நாங்க..முக்கியமா நான் எப்பவும் உங்களோட பலமா தான் இருக்கணும்.என்னைக்கும் பலகீனமா ஆகக் கூடாது.புரிஞ்சுதோன்னோ?”
“ம்ம் மாமி..”
“மறுநாள் காலையிலேயே ஜோசியர் கோட்டைக்கு வந்திருந்தார்.பத்து நாட்களில் வரும் முகூர்த்தத்தை குறித்தனர்.அதற்கு முந்தைய நாள் உமையாளின் வளைகாப்பு என்று முடிவானது.
விஷால் இந்தியா திரும்பியிருக்க திவ்யா ஒரு வாரம் முன்பாகவே மைசூருக்கு வந்திருந்தாள்.வேலை சுழற்றி அடித்தது அனைவருக்கும்.
ஆண்கள் அலுவலகத்தில் தங்களைத் தொலைத்துவிட பெண்களுக்கோ உணவு உடை சீர்வரிசை என வேலைகள் பிடித்து ஆட்டியது.
வளைகாப்பிற்கு சொந்த பந்தங்களால் கோட்டை நிறைந்திருக்க முகம் கொள்ளா பூரிப்போடு நாளின் நாயகியாய் உமையாள் ஜொலித்தாள்.
அடுத்த நாள் அந்த பிரம்மாண்டமான திருமண மண்டபம் கோலாகலமாய் குதுகலித்தது.மணமகனாய் கம்பீரமாய் விஷால் அமர்ந்திருக்க அழகிய பதுமையாய் திவ்யா அவனருகில் வந்து அமர்ந்தாள்.
ஏழிசையும் வீரேந்திரனும் அவர்களுக்கு பின்னால் நிற்க நாத்தனார் முடிச்சிட முகம் நிறைத்த புன்னகையோடு நின்றிருந்தாள் ஏழிசை.
மொத்தக் குடும்பமும் அவர்களைச் சூழ்ந்து நிற்க குறித்த நேரத்தில் மங்கல நாண் அணிவித்து தன் காதலியை மனைவியாக்கிக் கொண்டான் விஷால்.
“வாழ்த்துக்கள் டாக்டரம்மா..”
“கன்ங்க்ராட்ஸ் டு யூ டூ புருஷா”,என்றவளின் புன்னகையில் தன்னைத் தொலைத்து போனான் விஷால்.
கல்யாண ஆட்ட பாட்டங்கள் முடிந்து வீடே வெறிச்சோடியிருக்க,உமையாளும் பிரசவத்திற்காக தாய் வீடு சென்றிருந்தாள்.வழக்கம் போல் உணவு மேசையில் அண்ணன் அண்ணியோடு கதையளந்து கொண்டிருந்தான் ராகவ்.
வீரேந்திரன் அமைதியாய் உணவருந்த அருகில் பரிமாறிக் கொண்டிருந்த அண்ணியை செய்கைக் காட்டி ஏதோ சமிஞ்சை செய்தான்.ஏழிசை மறுப்பாய் தலையசைத்து குனிந்து கொள்ள ராகவோ காலில் விழுவதாக கண்காட்டிக் கொண்டிருந்தான்.
“என்ன ராகவ்?”
“அ…ஒண்ணுமில்ல ணா..”,என்றவன் தட்டுக்குள் முகம் புதைக்காத குறையாய் குனிந்து கொண்டான்.
“என்ன விஷயம் இசை?”
“போச்சு அண்ணி உளறிடுவாங்களே..”,என்றவனின் எண்ணம் பொய்க்காமல் ஏழிசை வாய் திறந்தாள்.
“அது..ராகவோட ப்ரெண்ட்..நம்ம ஆத்துக்கு கூட வந்தாளே ஓவியா.அவளுக்கு படிப்பு முடிய போறது அதான் நம்ம கம்பெனிலேயே வேலைக்கு ஏற்பாடு பண்ணலாமானு கேட்குறான்.”
வீரேந்திரன் மனைவியை முறைக்க ராகவோ எழுந்து ஓடுவதற்கு தயாராக இருந்தான்.
“எந்த கம்பனில?”
“ராகவ் கவனிச்சுக்குற சில்க் யூனிட்லேயே”,என்றவள் அவனது பார்வையில் வாயை மூடிக் கொண்டாள்.
“முதல்ல பரீட்சையை ஒழுங்கா முடிக்க சொல்லு அப்பறம் ரெசியூம் அனுப்பட்டும் நம்ம ஹெட் ஆபிஸில் வேலை பார்க்கட்டும்.”,என்றபடி வீரேந்திரன் எழுந்து செல்ல ராகவை ஏகத்துக்கும் முறைத்தாள் ஏழிசை.
“ஏன் ராகவா என்னை மாட்டி விடுற..”
“அண்ணி இதெல்லாம் அந்த கடவுளுக்கே அடுக்காது.உங்களுக்கு அண்ணனைப் பார்த்து பயமா இதை நான் நம்பணும்?”
“ஓவியாவை உன் ப்ரெண்ட்னு சொல்றது தப்பு தானே அதுவுமில்லாம இதுக்கெல்லாம் அவர் என்ன சொல்லுவாரோனு..அதான் பயம் வந்துடுத்து.”
“உங்ககிட்ட சொன்ன அடுத்த செகண்ட் அண்ணாக்கு விஷயம் போயிடும்னு இந்த குடும்பத்துக்கே தெரியும்.”,என்றவன் சிரிக்க அவனை செல்லமாய் அடித்துச் சென்றாள்.
“இந்தாங்கோ டீ..”
“அவன் காதலுக்கு நீ ஏன் தூது போயிட்டு இருக்க?”,என்றபடி சட்டையை மாட்டிக் கொண்டிருந்தான் வீரேந்திரன்.
“பாவம் ராக..”
“அவனை பாவம் பார்க்குறது நீ மட்டுமா தான் இருப்ப..சரியான ப்ராடு வேலை எல்லாம் பார்த்துட்டு இருக்கான்.”
“விடுங்கோ சின்ன பசங்க..கண்டிப்பா அவனோட லிமிட் மீற மாட்டான்.”
“என் வளர்ப்பு கூட தப்பாகும்..இப்போ அவன் மொத்தமும் உன் பொறுப்பில் இருக்கான் என்னைக்கும் தப்பு பண்ண ணாட்டான் டி மாமி.”,என்றவன் தன்னவளை தன்னோடு சேர்த்தணைத்துக் கொண்டான்.
ஆறு வருடங்களுக்குப் பிறகு,
கோட்டையே இளையவனின் திருமணத்திற்காக களை கட்டியிருந்தது.
காவியாவும் ஈஸ்வரும் தங்கள் மகள் மகனுடன் வரவேற்பறையில் அமர்ந்திருக்க ரவியும் உமையாளும் தங்கள் இரு மகன்களோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
திவ்யா தனது மேடிட்ட வயிரோடு விஷாலின் கரம் பிடித்து தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தாள்.
ராஜராஜனும் பர்வத வர்த்தினியும் தங்கள் பிள்ளைகளையும் பேரப் பிள்ளைகளையும் பார்த்து பார்த்து பூரித்துப் போவதையே முழு நேர வேலையாகக் கொண்டிருந்தனர்.
“தாரும்மா எங்க இருக்க?”,என்றபடி வீரேந்திரன் தன் இரண்டு வயது மகனோடு மாடியிலிருந்து கீழிறங்கி வந்தான்.
“சித்தா அப்பா கூப்பிடுறாங்க!”,என்ற ஆறு வயது தாரகை கொலுசு சிணுங்க ராகவிடமிருந்து பிரிந்து ஓடினாள்.
“அப்பா..”
“எங்க டா போன சாப்பிட வேண்டாமா?”
“ஓவி சித்தி கூட பேசிட்டு இருந்தேன் போன்ல..நான் சித்தா கூடவே சாப்பிட்டேன்.”,என்றவள் அப்படியே குட்டி ஏழிசையாகவே இருந்தாள்.
உருவம் குணம் அனைத்தும் மனைவியின் மறு உருவமாய் இருந்தாள்.மகளைக் கொஞ்சியவாறே வரவேற்பறைக்கு வர ரவி எழுந்து ராணாவை கையில் வாங்கிக் கொண்டான்.
“அண்ணா அண்ணி எங்கே காணும்?”
“இப்போ வந்துடுவா ரவி..லேட்டா எழுந்தா அதான்.நான் கூட்டிட்டு வரேன் நீ இவனைப் பார்த்துக்கோ”,என்றபடி தனதறைக்கு வந்தவனுக்கு முதுகு காட்டி நின்று புடவையைக் கட்டிக் கொண்டிருந்தாள் அவனின் இசை.
“மாமி போலாமா?”
“ம்ம் போலாம்”,என்று முன் திரும்பியவளின் முகம் ஏகத்திற்கும் சிவந்து இருந்தது.மேடிட்ட அவளது வயிற்றை வருடியவாறே அவளின் கன்னச் சிவப்பை கண்களுக்குள் நிரப்பிக் கொண்டான்.
“இப்போ யோசிச்சு என்ன ப்ரோயோஜனம் மாமி..நான் சொன்னேன் நீ தான் கேட்கல..”,என்றவனின் குறும்பு சிரிப்பு இன்னுமாய் வெட்க மூட்டியது.
“நீங்களே கிண்டல் பண்றேளே..”
“ஓய் மாமி..இது நம்ம குழந்தை நம்ம விருப்பம் யாரு என்ன சொல்றது.நம்ம சந்தோஷத்துக்காக என் இசைக்காக என்னோட அளவு கடந்த காதலுக்கு சாட்சியா இருக்கு டி இந்த புள்ளை.”
“..”
“மாமி கொள்ளை அழகா இருக்க தெரியுமா!”,என்றவனின் விரல் அவளது மூக்குத்தியை வருடியது.
“பொய் சொல்றேள்..உடம்பெல்லாம் ஏறிடுத்து..கழுத்தெல்லாம் என்னவோ போல இருக்கு.முதல் இரண்டும் இப்படியெல்லாம் இல்லை.இந்த குட்டி உள்ளேயே ரொம்ப வாலு போல இருக்கு.”
“இன்னும் கொஞ்ச நாள் தான்.புள்ளையை பெத்து உடம்பு தேறி வா,உன்னை பழைய இசையா மாத்த வேண்டியது என் பொறுப்பு டி..”,என்றவன் கன்னம் வருடி கொஞ்சி கெஞ்சி அவளை சமாதானப்படுத்தி கீழே அழைத்துச் சென்றான்.
படிகளில் வரும் போதே அத்தனை வாண்டுகளும் அவளைச் சுற்றிக் கொண்டன.
“ம்மா..”
“பெரியம்மா..”
“அத்தை…”,அத்தனை நண்டு சிண்டுகளும் அவளது காலைக் கட்டிக் கொள்ள இருவரும் புன்னகையாய் வந்து நாற்காலியில் அமர்ந்தனர்.
“ஏஞ்சல்..”,என்றபடி பின்னிருந்து அவள் கழுத்தைக் கட்டிக் கொண்ட ராகவை முறைத்தான் வீரேந்திரன்.
“உனக்கு தான் டா கல்யாணம்..”
“இருந்துட்டு போட்டும்..நேத்து பொறந்த இதுங்க எல்லாம் உரிமை கொண்டாடும் போது எல்லாத்துக்கும் சீனியர் நான் தான்..”,என்றவனைப் பார்த்து அனைவரும் சிரித்தனர்.
வீரேந்தினுக்கு மனம் கொள்ளா மகிழ்ச்சி தான் தினம் தினமும்.அவள் விரும்பிய வாழ்க்கையை அப்படியே வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.வீட்டில் அத்தனை பேருக்கும் ஏழிசை வேண்டும்.
ரவியின் மகன்களுக்கு பெற்றவர்கள் வேலைக்குச் சென்று விட மொத்தமும் பெரியம்மா தான்.
ராஜராஜனுக்கும் பர்வதத்திற்கும் இசை என்பவள் அவர்கள் வாழ்வின் மிகப் பெரும் வரம்.காவ்யா திவ்யா பத்தாது ஈஸ்வர் விஷாலும் வாரம் இரு முறையாவது அவளிடம் நலம் விசாரிக்க அழைத்துப் பேசி விடுவார்கள்.வீரேந்திரனின் மனம் மொத்தமும் இசை என்பவள் அரியணையில் அமர்ந்து ஆட்சி செய்யும் மகாராணி.
அனைவரும் பேசிச் சிரித்திருக்க வேணி அனைவருக்குமாய் பழச்சாறு கொண்டு வர அவளது மூன்று வயது மகன் வாசலில் தனது தந்தை ராஜூவைத் தேடி ஓடினான்.
திருமணம் கொண்டாட்டமாய் நடந்து முடிந்திருக்க விருந்தினர்களை அனுப்பிவிட்டு மற்ற வேலைகளை கவனித்து முடித்து தனதறைக்கு வந்த வீரேந்திரனின் முகம் புன்னகையில் மலர்ந்தது.
பால்கனில் மெத்தை விரித்திருக்க நடுவில் கால் நீட்டி அமர்ந்திருந்த ஏழிசையின் மடியில் வீட்டின் அத்தனை கடைக் குட்டிகளும் படுத்து கதைக் கேட்டுக் கொண்டிருந்தன.
“ப்பா நீயும் வா கதை கேட்கலாம்”,என்ற தாரகையை தன் மடியில் அமர்த்திக் கொண்டவனைப் பார்த்து புன்னகைத்தவளாய் கதையை தொடர்ந்தாள்.
சிறிது நேரத்தில் அவரவர் அம்மாக்கள் வந்து பிள்ளைகளை அழைத்துச் செல்ல மனைவியை அப்படியே அமர்த்திவிட்டு தன் பிள்ளைகளை உறங்க வைத்து ஏழிசையின் அருகில் வந்தான் வீரேந்திரன்.
“மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கு வீரா..”
“வீடே நிறைஞ்சு இருக்கு டி..எல்லாம் உன்னையே தான் சுத்தி வராங்க..என்னை கண்டுக்க தான் ஆள் இல்ல”,என்றவனின் குற்றச்சாட்டில் சிரித்தாள்.
“சிரிக்காத இப்படியே போச்சுனா உன்னை யாருக்கும் கொடுக்காம எங்கேயாவது தூக்கிட்டு போய் வைச்சுப்பேன்.”