நீ தான் ஹாஸ்ட்டல் விட்டு வர மாட்ற..என்னோட ஊர் சுத்த தான் வர மாட்டனு சொல்லுவ.இப்போ வீட்டுக்கு தான கூப்பிடுறேன்.”
“ராகவ் அது…”
“என் மேல நம்பிக்கை இல்லையா ஓவி..”
“ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க..எனக்கும் அங்க வரணும்னு ஆசையா தான் இருக்கு.யாரும் எதுவும் சொல்லிடுவாங்களோனு பயமா இருக்கு ராகவ்.அங்க வர்றவங்க எல்லாம் ரொம்ப பணக்காரங்களா இருப்பாங்க..நான்..”
“இன்னொரு தடவை இதைப் பத்தி பேசினா நான் உன்கூட பேசுறதையே நிறுத்திருவேன் ஓவி.”,என்றதும் சட்டென கண்களில் கண்ணீர் பெண்ணிடத்தில்.
“எனக்கு பயமா இருக்கு ராகவ்.நம்ம காதல் நல்ல படியா கல்யாணத்தில் முடியணுமேனு பதட்டமா இருக்கு ஒவ்வொரு நாளும்.யாரும் எதுவும் சொல்லிட்டா என்னால தாங்க முடியாது”,என்றவளைப் பார்த்து திரும்பி அமர்ந்தவன்,
“இங்க பாரு.உன் மனசுல நீ என்னைப் பத்தி என்ன நினைச்சுருக்கனு எனக்குத் தெரியல ஆனால் நான் உன்னை என் பொண்டாட்டியா தான் பார்க்குறேன்.
உன்னை யாருக்கும் விட்டுக் கொடுக்குற ஐடியா எனக்கு இல்ல.இதோட இந்த பேச்சை விடு ஓவி.”,என்றவன் எழ எத்தனிக்க வேகமாய் அவன் கரம் பிடித்துத் தடுத்தாள்.
“நான் வரேன் ராகவ்”,என்றவளைப் பார்த்தவன் வேகமாய் அவள் கன்னத்திவல் இதழ் பதித்து ஓடி விட்டிருந்தான்.
கோட்டையில் அனைத்து ஏற்பாடுகளும் தடபுடலாய் நடக்க ஆரம்பிந்திருந்தது.நாளுக்கு நாள் பொலிவுறும் தாய்மையின் அழகில் தன்னை மொத்தமாய் தொலைத்துக் கொண்டான் வீரேந்திரன்.
அவளே அவனின் அனைத்தும் என்றாகியிருக்க ஒரு நாளின் அத்தனை கோபங்களும் களைப்புகளும் அவளது கண்ணசைவில் மறந்து போகும் அவனுக்கு. ஏழிசையோ கணவனது அன்பில் உலகையே மறந்திருந்தாள்.
“நாளுக்கு நாள் நான் ரொம்ப மோசமாய்ட்டேன்.நாளைக்கு நேக்கும் உங்க பொண்ணுக்கும் சண்டை வர்றதுக்கு நீங்க தான் காரணமா இருக்கப் போறேள்.”
“பொண்ணுனு முடிவே பண்ணிட்டியா மாமி?”
“ம்ம் நீங்க தான் மந்திரம் மாதிரி சொல்லிட்டே இருந்தேளே கன்பார்ம் ஆன நாளிலிருந்து அப்போ அது பொண்ணா தான் இருக்கும்.”
“நான் சொன்னா அது கேட்டுக்குமா?”
“இல்ல ஆனா இசை கேட்பாளே..”,என்றவளை நெருங்கி நிற்க உருண்டையான வயிறு இருவருக்குமாய் இடையில் தடுத்து நின்றது.
“இப்போவே பக்கத்துல விட மாட்றா டி..”,என்றவனின் சிரிப்பு அவளையும் தொற்றிக் கொண்டது.
பங்ஷன் நேரத்துல வேலை நிறைய இருக்கும் எனக்கு வந்தவங்களை வேற பார்க்கணும்.அமைதியா ரூம்க்குள்ளேயே இரு புரியுதா..தேவையில்லாம டென்ஷன் பண்ணாத மாமி..”
“புரியுது.நீங்க விட்டாலும் இங்க யாரும் என்னை கவனிக்காம இருப்பானு நேக்கு தோணலை.உங்க அத்தை எல்லாம் வாரம் ஒரு தடவை போன்லேயே அவ்வளவு அட்வைஸ்.”,என்றவளின் முகம் புன்னகையில் நிறைந்திருந்தது.
“நீ தான் சரியான மயக்கி ஆச்சே..”,என்றவன் மயக்கும் பார்வையில் பாவை மயங்கி தான் போனாள்.
ஞாயிற்றுக்கிழமை வளைகாப்பு என்றிருக்க காவ்யா ஒரு வாரம் முன்னதாகவே ஈஸ்வரோடு வந்து விட்டிருந்தாள். ராகவ் திவ்யா அனைவருக்கும் வெள்ளியும் விடுமுறை என்பதால் அன்றே வருவதாய் கூறியிருந்தனர்.
“ஜிஷா குட்டி..”
“தொப்பை..தொப்பை..”,என்றபடி ஏழிசையின் வயிற்றைக் குழந்தை கையால் வருட காவ்யா மகளிடம்,
ஒரு நொடி தன் தாயைப் பார்த்த குழந்தை காவ்யாவின் வயிற்றையும் தொட்டு பாப்பா என்க ஏழிசையும் காவ்யாவும் சிரிக்க ஈஸ்வர் ஏழிசை அறியாமல் மனைவியைப் பார்த்து கண்சிமிட்டிச் சென்றான்.
வெள்ளியன்று அதிகாலையிலேயே ராகவ் அவனது நண்பர்களோடு அவனது காரிலேயே வந்திருக்க திவ்யா அவளுக்காக அனுப்பப்பட்ட காரில் ராகவின் தோழி மற்றும் ஓவியாவோடு வந்து இறங்கினாள்.
நண்பர்கள் அனைவருமே கோட்டையைப் பார்த்து வாய் பிளந்து நிற்க ஓவியாவிற்கோ உள்ளுக்குள் உதறல் எடுத்தது.பர்வதமும் ராஜராஜனும் அனைவரையும் வரவேற்று மாடியில் இண்டாவது தளத்தில் அவர்களுக்கு ஒதுக்கியிருக்கும் அறைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினர்.
“ஆமா டா அவன் நம்ம கூட பழகுறதை வைச்சு சாதாரணமா நினைச்சுட்டோமோ..”
“ம்ம்.அவங்க அக்கா கல்யாணத்து அப்போ நாம எல்லாம் க்ளோஸ் இல்லல..சோ வந்தது இல்ல..இங்க வீடே என்னடா இப்படி இருக்கு.அதுவும் அவங்க அம்மா அப்பாவை பார்த்தியா ஏதோ ராஜா ராணி மாதிரி இருக்காங்க”
தன்னைச் சுற்றி பேசிக் கொண்டிருந்தவர்களின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஓவியாவின் பயத்தை அதிகரித்துக் கொண்டே இருந்தது.
விருந்தாளி அறை என்று கொடுக்கப்பட்ட அறையே இப்படியெனில் என்ன சொல்வது என்ற எண்ணம் தான் அனைவருக்கும்.
குளித்து தயாராகி இருக்குமாறு கூறிவிட்டு ராகவ் கீழே செல்ல அடுத்த அரை மணி நேத்தில் நண்பர்களோடு உணவு மேசைக்கு வந்திருந்தான்.
ஏழிசையை காலையிலேயே தொந்தரவு செய்ய வேண்டாம் என அவனும் திவ்யாவும் உணவு மேசையிலேயே அவர்களுக்காக காத்திருந்தனர்.
ரவியும் உமையாளும் காவ்யா மற்றும் ஈஸ்வரோடு முதலில் வர நண்ர்களை அறிமுகப்படுத்தினான்.ஓவியாவைப் பார்த்ததும் உமையாளும் காவ்யாவும் அர்த்தமுள்ள பார்வை பார்க்க ராகவ் சிரித்து கண்சிமிட்டினன்.
அனைவரும் புது இடமென்பதால் அமைதியாய் உணவருந்த காலடிச் சத்தத்தில் ராகவும் திவ்யாவும் பாதி சாப்பாட்டில் எழுந்து ஓடிய திசையில் திரும்பியவர்கள் வீரேந்திரனைப் பார்த்ததும் எழுந்து நின்றனர்.
ஏழிசையை எதிர்பார்த்து ஓடிய இருவரும் முதலில் வந்த அண்ணனைப் பார்த்து விட்டு திருதிருவென முழித்து நிற்க நண்பர்கள் வந்திருப்பதாய் ராகவ் அறிமுகப் படுத்தினான்.
லேசாய் ஒரு தலையசைப்பைக் கொடுத்துவிட்டு பர்வதத்திடம் எதையோ பேசியபடி தனக்கான காலை உணவை முடித்தவன் வழக்கம் போல் பாதி உணவை வைத்துவிட்டு எழுந்து கொள்ள வேணி அதை மற்றொரு தட்டு கொண்டு மூடி வைத்தாள்.அவன் அங்கிருந்து நகர திவ்யா வேகமாய் அண்ணனின் பின் ஓடினாள்
“அண்ணா..”.
“சொல்லு திவி”
“சாரிண்ணா..”
“எதுக்கு?!”
“…”
“என்னாச்சு?”
“என்னைத் தப்பா எடுத்துக்க மாட்டல..உங்ககிட்ட சொல்ல பயம் அதான்..மத்தபடி மறைக்கணும்னு நினைக்கல ணா..”
ஆதரவாய் தங்கையின் தோள் பற்றியவன்,”நாளான்னைக்கு மாப்பிள்ளையே இங்க வரப் போறார்.இப்போ வந்து ஏன் இதெல்லாம் பேசிட்டு இருக்க..”
“போனில் இதைப் பத்தி பேச முடியல ணா..”
“உன் சந்தோசம் தான் எங்க எல்லாருக்கும் முக்கியம் விஷால் உன்னை நல்லா பாத்துப்பாரானு தான் என் கவலை இருந்தது.மத்தபடி நான் உன்னை ஏன் தப்பா நினைக்க போறேன்.காதல் யாருக்கு யார் மேல எப்போ வரும்னு எல்லாம் நாம சொல்ல முடியாது.
தேவையில்லாம குழப்பிக்காத.சந்தோஷமா இருக்கணும்.ம்ம்?”,என்றவனைப் பார்த்தவளுக்கு கண்ணில் நீர் கோர்த்திருந்தது.
“இந்த காசு பணமெல்லாம் ராகவுக்கு முக்கியம் கிடையாது ஓவியா.அவனுக்கு நீ தான் உயிர்.ரொம்ப அன்பு வைச்சுருக்கான்.விளையாட்டுத் தனமா இருப்பானே தவிர உன் விஷயத்துல அவன் ரொம்பவே உறுதியா இருக்கான்.
தேவையில்லாம கவலைப்படாத..நல்ல படியா படிப்பை முடிங்கோ..வேலைக்கு போங்கோ..நிறைய நிறைய காதலிங்கோ..அப்பறம் எங்க ஆத்துகாரரே உங்க ஆத்துல வந்து பேசுவார்.சந்தோஷமா இருக்கணும்.ம்ம்?”,என்றதைக் கேட்டதும் ஓவியாவின் முகம் தெளிந்து விட்டிருந்தது.
“நான் மட்டும் இல்ல ராகவுக்கும் அது புரிய போய் தான் உன்னை இங்க அழைச்சுண்டு வந்துருக்கான்.இப்போ நோக்கு தைரியம் வந்துடுத்தோன்னோ?”
“ம்ம்..”,என்ற போது ராகவ் தண்ணீரோடு அங்கு வந்தான்.ஓவியாவின் தெளிந்த முகத்தைப் பார்த்தவனுக்கு சற்றே நிம்மதியாய் இருக்க வழக்கம்போல் அண்ணியை பக்கவாட்டில் கட்டிக் கொண்டான்.
“இப்போ தெரியுதா ஏன் இவங்க பேர் ஏஞ்சல்னு?”,என்றவன் ஓவியாவிடம் கண்சிமிட்டிச் சிரித்தான்.