தற்செயலாய் திரும்பி அவளைப் பார்த்த விஷாலின் விழிகளும் ஒரு நொடி வியந்து சாதாரணமாகியதை திவ்யாவும் உணர்ந்து கொண்டாள்.எதுவும் பேசாமல் அவள் போக்கில் வகுப்பை கவனிக்க அவனுமே அதன்பின் அவளைக் கண்டு கொள்ள வில்லை.

வகுப்பு முடியும் வரை பொறுத்திருந்தவள் தன் தோழியிடம் அவசரமாய்,

“ஹே யாரு இது இதுக்கு முன்னாடி பார்த்தது இல்லையே இங்க?”

“இவர் டீனோட பையனாம்.நம்ம காலேஜோட டாப் ஸ்டுடண்ட்டாம்.நெக்ஸ்ட் ஒன் இயர் இவர் தான் நமக்கு இன்சார்ஜ்.”

“ஓ..”,என்றவள் அங்கிருந்து நகர முற்பட அவனது குரல் அவளைத் தடுத்தது.

“ஹலோ மிஸ்?”

அருகில் யாரும் இல்லாததை உணர்ந்து அவனை ஏறிட்டவள் தயக்கமாய்,”திவ்யா சேதுபதி.”

“வெல் மிஸ் திவ்யா நேத்து நடந்தது நிஜமாவே எதிர்பார்க்காதது.ஐ அம் சாரி அண்ட் ஐ மீன் இட்.”

“இட்ஸ் ஓகே சார்.நேத்தே புரிஞ்சுகிட்டேன்..”,என்றவள் புன்னகைத்து நகர முற்பட “ப்ரெண்ட்ஸ்”,என்று கைக் குலுக்கியவனைப் பார்த்து சுற்றும் முற்றும் பார்வையை சுழற்றினாள்.

“ஹே ரிலாக்ஸ்..”

“..”

“எதுக்கு இவ்வளவு டென்ஷன்.கண்டிப்பா யார் முன்னாடியும் உன்னை என் ப்ரெண்ட்னு காட்டிக்க மாட்டேன்.நம்பலாம்.”,என்று கூறி புன்னகைத்தவனை கண்டு மனது உருகியது என்னவோ நிஜம்.

சிநேகமாய் கை குலுக்கியவள் ஒன்றும் கூறாமல் புன்னகையோடு அங்கிருந்து நகர்ந்து விட்டிருந்தாள்.

அதன் பின்னான ஒரு வாரமும் சாதாணமாகவே சென்றது.மற்றவர்கள் கவனத்தை ஈர்க்காத வண்ணம் திவ்யாவைப் பார்க்கும் போது ஒரு மென் சிரிப்பை உதிர்த்துச் செல்வான் விஷால்.

அவன் வகுப்பு நடத்தும் அழகே திவ்யாவை அவனை விட்டு விழியகற்ற முடியாமல் செய்தது.நல்ல உயரமும் அதற்கேற்ற பருமனமாய் எப்போதும் டக்கின் செய்யப்பட்டிருக்கும் முழுக்கை சட்டையும் அதற்கேற்ற மாதிரியான பார்மல் பேண்டும் அவனை இன்னும் அம்சமாய் காட்டியது.நேர்த்தியாக வெட்டப்பட்ட முடி திருத்தமான மீசை எப்போதுமே தாடியில்லாத க்ளீன் ஷேவ் கன்னமென அழகனாய் இருந்தான்.

அந்த ஒரு வாரமும் மாணவிகளின் இடைவெளி நேர ஹாட் டாபிக் அவனாகவே இருந்தான்.அனைத்தையும் கேட்டு உள்ளுக்குள் புகைந்தாலும் ஒன்றும் கூறாமல் அமைதியாய் கடந்துவிடுவாள்.

அன்றைய நாள் கல்லூரி முடிந்து ராகவோடு போனில் பேசிக் கொண்டிருந்தவள் இருட்டுவதைக் கூட மறந்து மைதானத்தின் பென்ஞ்சில் அமர்ந்திருந்தாள்.

தன் பின் நிழலாடுவதை உணர்ந்தவள் திரும்பி பார்க்க பேண்ட் பாக்கெட்டில் கைவிட்ட வண்ணம் நின்றிருந்தான் விஷால்.

“ஹாய்..”

“ஹலோ சார்..”

“விஷால்னு கூப்பிடலாமே..”

“அது..உங்களை எப்படி..”,என்றவளின் பார்வை சுற்றும் முற்றும் பார்க்க அதன் பொருள் உணர்ந்தவனாய் புன்னகையோடு அதே பெஞ்சில் சற்று இடைவெளி விட்டு அமர்ந்தான்.

“உங்க அண்ணாகிட்ட விஷயம் போயிடும்னு பயமா?!”

“!!!”

“அப்பா சொல்லிருக்கார் உங்க பேமிலி பத்தி..”

“ஓ..”

“திவ்யா..”

“?!”

“யாரையும் லவ் பண்றீங்களா?”,கடினப்பட்டு தான் அந்தக் கேள்வியைக் கேட்டான் எனினும் அவளிடம் எப்படியாவது பேசிவிட வேண்டும் என்ற முடிவோடு இருந்தான்.

“என்ன??அதெல்லாம் இல்லங்க..”

“அப்போ என்னை லவ் பண்றீங்களா?”

“வாட்?!”

“ஐ திங்க் ஐ அம் இன் லவ் வித் யூ..பார்த்த முதல் நாள் இருந்தே.ஆனால் உங்களை என் ஸ்டுடண்டா இங்க பார்ப்பேன்னு நினைக்கலை.இந்த ஒரு வாரமும்..அதான் இன்னும் மறைக்க வேண்டாம்னு சொல்லிட்டேன்.”

“…”

“சத்தியமா ரொம்ப நல்ல பையன் தான் மா நான்.இப்படி வருஷத்துக்கு ஒரு பொண்ணுகிட்ட எல்லாம் லவ் சொல்லிட்டு இருக்குறவன் கிடையாது.டிடாடட்லர் அண்ட் கொஞ்சம் சைட் அடிப்பேன் அவ்ளோ தான்.”,என்றவனின் பேச்சில் லேசாய் சிரித்திருந்தாள்.

“உண்மையை சொன்னா சிரிக்குறியே..இதை எப்படி எடுத்துக்குறது?”

“அது..எனக்கு கொஞ்சம் டைம் வேணும்..”

“அவ்ளோ தான..டேக் யுவர் டைம்”,எனும்போதே தன் மொபைலை எடுத்து யாருக்கோ அழைக்க தன் கைப்பேசி ஒலிப்பதைப் பார்த்தவள் அவனை ஏறிட்டாள்.

“இது என்னோட பர்சனல் நம்பர்.நீ கேட்டுருக்குற அந்த டைம்குள்ள நம்மை பத்தி தெரிஞ்சுக்கனும் இல்ல..”,என்றவனைப் பார்த்து சம்மதமாய் தலையசைத்து குனிந்து கொண்டாள்.

அதன் பின்னான ஒரு மாத காலமும் அவனோடே கழிந்தது.காலை முதல் மாலை வரை கல்லூரியில் பிறர் அறியா உரிமைப் பார்வையும் சிரிப்பாய் நகர இரவு முழுவதும் பேச்சும் குறுஞ்செய்திகளுமாய் கழிந்தது.

அவனுடைய பிறந்த நாளுக்காய் திவ்யாவை டின்னருக்கு அழைத்துச் சென்றான் விஷால்.

அவர்களுக்கு மட்டுமான பிரத்தியேக அறை புக் செய்யப்பட்டிருக்க திவ்யாவின் முகத்தில் மகிழ்ச்சியையும் மீறிய சிறு பயம் இருந்தது.

“என்னாச்சு திவி..”

“இல்லை..ஒண்ணுமில்ல..”,என்றவள் டேபிளின் மீதிருந்த அவனது கரத்தின் மேல் நடுங்கும் தன் கரங்களை வைக்க விஷால் முகமோ பிரகாசமாகிவிட்டிருந்தது.

“திவி!!”

“ஹப்பி பர்த் டே விஷு..ஐ லவ் யூ”

“பெஸ்ட் கிஃப்ட் எவர்..தேங்க் யூ டியர்”,என்றவன் எழுந்து நிற்க யோசனையாய் எழுந்தவளை தாமதிக்காது கட்டிக் கொண்டான்.

“தேங்க்ஸ் ஃபார் கம்மிங் இன் மை லைப்..”,என்றவனின் கண்கள் பளபளத்தது.

“விஷு..”

“நான் ஏற்கனவே சொல்லிருக்கேனே அம்மா கிடையாது.அப்பாவும் நானும் தான் என்னோட இத்தனை வருஷ உலகம்.

சொல்ல போனா அம்மாவை காப்பாத்தாம போயிட்டாங்களேனு தான் கைனிக் படிச்சதே.எல்லாரோடையும் பேசுவேன் ஜாலியா பழகுவேன்.ஆனால் உன்னைப் பார்த்தவுடனே வந்த ஃபீல் அது ரொம்ப வித்தியாசமா இருந்தது.

எதையும் யோசிக்காம உன்கிட்ட பேசிட்டாலும் எங்க உனக்கு என்னைப் பிடிக்காம போயிடுமோனு ஒரு பயம்.இப்போ ஐ அம் சோ ஹேப்பி திவி.”,என்றவனைப் பார்த்து புன்னகைத்தவள் அவனுக்காய் வாங்கி வைத்திருந்த மோதிரத்தை விரலில் அணிவித்து விட்டாள்.

“ஹே தேங்க் யூ ரொம்ப நல்லாயிருக்கு.”,எனும்போதே கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்த ராகவ் நேராய் விஷாலிடம் சென்றான்.

“ஹேப்பி பர்த் டே மாம்ஸ்..”,என்றவன் கட்டிக் கொள்ள விஷாலோ ஒன்றும் புரியாமல் விழித்தான்.

“தம்பி ராகவ்..”,என்று திவ்யா கூற புன்னகை பெரிதாய் விரிந்தது விஷாலுக்கு.

“தேங்க்ஸ் மச்சான்”,என்றவனை உடனே பிடித்து விட்டிருந்தது ராகவிற்கு.

“சாரி, திவி என்கிட்ட சொல்லவே இல்ல..”

“நமக்குள்ள என்ன இதெல்லாம்..எங்க அக்காவை நீங்க கண்கலங்காம பாத்துக்குறீங்களோ இல்லையோ அவ உங்களை கண்கலங்காமல் பார்த்துப்பா..”,என்று கூற சத்தமாய் சிரித்தான் விஷால்.

“மூணு மச்சானுங்க இருக்குற வீட்ல பொண்ணு எடுக்குறீங்க ரொம் தைரியம் தான்.”

“ஐயோ அதை ஏன் இப்போவே நியாபகப்படுத்துற மச்சான்.”

“இதை தான முதல்ல சொல்லணும்.நானும் ரவிய அண்ணாவும் கூட ஓகே பெரிய அண்ணா கையில் பொருள் எடுத்து வீசிட்டு தான் பேசுவாரே..”,என்றதும் அவன் அதிர்ச்சியாய் திவ்யாவை பார்க்க அவளோ தம்பியை முறைத்தாள்.

“அதெல்லாம் ஒண்ணுமில்ல இவன் சும்மா பில்டப் கொடுக்குறான்.உங்களை கண்டிப்பா எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும்.”,என்றவள் வெட்கத்தில் விழி தாழ்த்தி கொள்ள விஷாலுக்கோ இப்போதே அவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் போல் இருந்தது.

“ஓ அப்போ புட் சார்ட் கொடுத்தது அவர் தானா?”,என்ற ஏழிசையின் கேள்வியில் அதிர்ந்தவள் மௌனமாய் தலையசைத்தாள்.

“விடு திவி பார்த்துக்கலாம்”,என்று உமையாள் கூற திவ்யாவின் முகமோ இன்னும் தெளிவில்லாமல் தான் இருந்தது.

அதைப் புரிந்து கொண்டவளாய் ஏழிசை அவளுக்கு சமாதானம் கூறினாள்.

“கண்டிப்பா உன் அண்ணா காதலுக்கு எதிரி எல்லாம் கிடையாது திவ்யா.பையன் உன்னை நன்னா பாத்துக்குறவனா இருந்தா போதும்.எப்படியும் உன் படிப்பு முடியுற வரை டைம் இருக்கு இப்போவே ஏன் கவலைப்படுற..நாங்க இருக்கோம்..ம்ம்?”

“சரி அண்ணி அவர் இப்போ லண்டன்ல இருக்கார்.ஒரு வருசம் ஆச்சு நெக்ஸ்ட் இயர் தான் வருவார்.”

“ஓ..”

“அண்ணி நீங்க பேசுறீங்களா அவரோட ப்ளீஸ்..”

“நான்..நானென்ன பேச?!”

“இல்ல அண்ணி எனக்கு ஒரு மாதிரி டென்ஷனா இருக்கு.ப்ளீஸ் நீங்க இரண்டு பேரும் பேசுங்களேன்.”,என்று திவ்யா கூற ஏழிசையும் உமையாளும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

திவ்யா அதற்குள் விஷாலுக்கு அழைத்திருந்தாள்.

“ஓய் பொண்டாட்டி என்ன இந்த நேரத்துல..வீட்டுக்கு போறேன்னு சொன்னியே போகலையா?”,என்றவனின் குரலில் கலக்கமெல்லாம் பறந்து போக விஷயத்தை சுருக்கமாய் கூறி ஏழிசையிடம் போனை நீட்டினாள் திவ்யா.

“ஹலோ நமஸ்காரம்.”

“ஹாய் சிஸ்டர் எப்படியிருக்கீங்க..கங்க்ராஷுலேன்ஸ்..”

“தேங்க் யூ நன்னா இருக்கேன்.நீங்க எப்படி இருக்கேள்.”

“நல்லாயிருக்கேன்..அவ திடீர்னு உங்ககிட்ட சொல்லுவானு நினைக்கல..ரொம்ப பயம் அண்ணாவை நினைச்சு.”

“இப்போவும் ராகவ் தான் சொல்லிட்டான்.இல்லைனா அவ சொல்லிருக்க மாட்டா..நீங்க திவ்யாவை நன்னா பார்த்துப்பேள்னு புரிஞ்சா போதும் அவர் கண்டிப்பா கல்யாணத்தை நடத்தி வைப்பார்.”

“எனக்கு அம்மா கிடையாது.எங்க வீட்டுக்கு வரப் போற முதல் பொண்ணு திவ்யா.அப்பாவுக்கும் அவ பொண்ணு மாதிரி தான்.ஏற்கனவே அவருக்கு விஷயம் தெரியும் திவ்யா படிப்பை முடிச்சு வேலைக்கு போகணும்னு தான் நாங்க வெயிடிங்.”,என்றதைக் கேட்டவளுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது.

“ரொம்ப சந்தோஷம் இந்தியா வந்தா கண்டிப்பா ஆத்துக்கு வாங்கோ.”

“நிச்சயமா வரேன்..சீக்கிரமே இந்த அண்ணாக்கும் ஒரு கிப்ட் ரெடி பண்ணி வைங்க..மீ வெயிட்டிங்”,என்று அவன் கூறியதில் புன்னகை மலர்ந்திருந்தது ஏழிசைக்கு.

“அதுக்கென்ன கண்டிப்பா தயார் பண்ணிடுறேன்.”,என்றவள் திவ்யாவிடம் கொடுக்க அவள் பேசிவிட்டு உமையாளிடம் கொடுத்தாள்.

சில நொடிகள் உமையாளோடு பேசிவிட்டு திவ்யாவின் கைகளில் மீண்டும் போன் வர அவசராய் ராகவ் பிடுங்கினான்.

“மாம்ஸ்..”

“மச்சான் என்ன இவ்வளவு பெரிய வேலை பண்ணி வைச்சுருக்க”

“உங்களுக்காக இது கூட பண்ணலைனா எப்படி மாம்ஸ்.எங்க வீட்டு மேலிடம் பெரிய அண்ணா,ஆனால் இப்போ அவருக்கே மேலிடத்தில் நாம ரெக்கமெண்ட் பண்ணியாச்சு மாம்ஸ்.இனி நேரா கல்யாணம் தான்”,என்றவனை முறைக்க முயன்று வெட்கத்தில் சிரித்துவிட்டாள் ஏழிசை.

“திவி..”

“ம்ம்..”

“ஹப்பியா இருக்கு டி..”

“எனக்கும் தான் விஷு..எதிர்பார்க்கவே இல்ல.”

“சீக்கிரமே உங்க எல்லாரையும் பார்க்கணும் போல இருக்கு..”

“அண்ணி வளைகாப்புக்கு வர ட்ரை பண்ணுங்க நான் அண்ணாகிட்ட அதுகுள்ள பேசுறேன்.”

“திவி!!!”

“எல்லாம் அண்ணி இருக்குற தைரியம் தான்.வரீங்களா?”

“டேட் பிக்ஸ் பண்ணும் போது சொல்லு உடனே டிக்கெட் போடுறேன்.”

“லவ் யூ விஷு..”

“லவ் யூ பொண்டாட்டி..”,என்றவனுக்கு தன் திருமணத்தை பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.